அத்தியாயம்-16
மோகன் சாரிடம் தன் காதலை பகிர்ந்ததும் ஏனோ சந்தோஷமாக இருந்தது. ஆனால் சந்தியாவை பற்றி வார்த்தை விட்டிருக்க கூடாதோயென்று நொடிக்கொரு முறை நினைத்தாள்.
இருபது நிமிடம் கழித்து ப்ரியாவே ‘மோகன் சார் சந்தோஷிடமோ இந்தரிடமோ சொல்லவா போறார். அவருக்கு அவங்களை யாருனே தெரியாது. இந்தர் ஆபிஸ் பக்கமா வந்து பேசலை. ஹாஸ்டல் பக்கம் தான் வர்றான். அதனால சமாளிச்சிடலாம்.’ என்று வேலைகளில் முழ்கினாள்.
மோகனும் இயல்பாக பணியில் தீவிரமாக, மற்ற எண்ணங்கள் மறக்கடிக்கப்பட்டது.
வேலைகளில் மதிய உணவு நேரம் என்று மதுவதி உலுக்க, சில்வர் டிபன் பாக்ஸை எடுத்தாள். காலையில் சாப்பிட்ட குட்டி ஹாட்பாக்ஸ் இரண்டடுக்கு. மேலே பூரி இருக்க அவசரமாக சாப்பிட்டாள்
கீழே டிபன் பாக்ஸில் அடித்தளம் இன்னும் கணமாக இருக்க, உணவை பார்த்தாள். காய்கறி சாதம் கலந்து கொடுத்துவிட்டதாக தெரிந்தது.
இரண்டு டிபன் பாக்ஸையும் எடுத்து வந்து மோகன் மதுவதி அருகே அமர்ந்தாள்.
மோகனுக்கு மதியமும் பூரியா? என்பது போல மருமகளை பார்த்திட, காய்கறி சாதமென்றதும் ஸ்பூனால் சுவைக்க, மதுவதியோ “அட மோகன் சார் நீங்களும் வெஜிடேபிள் ப்ரிஞ்ச், ப்ரியாவும் வெஜிடேபிள் ப்ரிஞ்ச்” என்றதும் மோகன் சாரின் உணவை கவனித்தாள்.
இரண்டும் ஒரேவகையாக தோன்ற மதுவதியோ, “சார் உங்க புது பிரெண்டுக்கு மட்டும் கொண்டு வந்திங்களா?” என்று கேட்டாள்.
“சேசே” என்றது போல தலையாட்டி மறுக்க முயல, இன்னொரு ஊழியரோ, “அட டிபன் பாக்ஸ் பார்த்தாலே தெரியலையா? அதுவும் நம்ம மோகன் சார் டிபன் பாக்ஸ். ஏதாவது விஷேஷம்னா கேசரி எல்லாம் இதுல தானே கொண்டாருவார்.” என்று கூறவும் ப்ரியாவோ திகைத்திருந்தாள்.
“சார் உங்களுக்கு இந்த மாசம் தானே வெட்டிங் அனிவர்சனி? இன்னிக்கா சார்?” என்று தேதியை கண்டார்கள்.
எப்பொழுதும் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கும் தருணம் காதலர் தினத்திற்கு இரண்டு நாள் முன்பு திருமண நாள் என்பதால் இவருமே காதலரை போல இந்தர் வாங்கிய உடையை அணிந்து வருவார்.
“மோகன் சார் உங்க வீட்டு டிபன் பாக்ஸ் ப்ரியாவிடம் இருக்கு.
ஓ… நீங்க ரிலேட்டிவா? அதான் மோகன் சார் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து ப்ரியாவை பார்த்து பேசறார்.” என்றதும் மோகனோ லேசாக சிரித்து மழுப்பினார்.
ப்ரியாவோ இரண்டு உணவும் ஒரே மாதிரி இருந்ததும், மோகன் சாருக்கு இந்த மாதம் வெட்டிங் அனிவெர்சரினா? இவர்.. இவர்… இந்திரஜித்தின் தந்தையா?’ என்று நாவறண்டது.
முகசாடையை அவள் அதன் பின்னே ஒப்பிட்டால், மோகன் சார் பேசும் போது நெருங்கிய மனிதாராய் தெரிந்தாரே காரணம் இது தானா? என்றவளுக்குள் மனம் பூகம்பத்திற்குள் சிக்கியது போல இருந்தது.
இந்திரஜித்தை விரும்பியதையும், சந்தியா தான் பழி சுமத்தியதையும் அவள் வாயாலே கூறினாளே?!
மற்றவர்கள் பார்க்க அசடாக சிரித்துவிட்டு இருந்த உணவை ஒன்றும் பாதியுமா விழுங்கி தன்னிருப்பிடம் வந்து விட்டாள்.
தலையில் கைவைத்து “இப்ப என்ன பண்ணறது. இப்படி சென்னை வந்து இந்தரையும், இந்தரோட அப்பாவையும் சந்திப்பேன்னு கனவுலையும் நினைக்கலை. ஆனா எல்லாம் எனக்குன்னு அமைஞ்சிடுச்சே’ என்ற பாவத்தில் இருந்தாள்.
மோகனோ இந்திரஜித் தந்தை என்றது அறிந்துக் கொண்டாளோ என்றதும் எப்படியும் மாலை வீட்டுக்கு அழைத்து அங்கே சர்பிரைஸ் கொடுக்க எண்ணியவருக்கு விதியே டிபன் பாக்ஸ் ரூபத்தில் அவருக்கே சர்பிரைஸை நிகழ்த்திவிட்டது.
மெதுவாக மாலையில் பேசிப் பார்ப்போமென்று பணிகளுக்கு இடையே ப்ரியாவை நோட்டமிட்டார்.
ப்ரியதர்ஷினியோ கல்லை முழுங்கியவளாக வேலையில் இருக்க கண்டவர், மனைவியிடம் ஒரே ஆபிஸ்ல நானும் மருமகளும் இருக்கோம் என்று சொல்லிருந்தால் இந்த குட்டி ஹாட்பாக்ஸ் மகனுக்கு தந்திருக்க மாட்டாள். அதோடு அதே உணவாக ப்ரிஞ்ச் கட்டி கொடுத்திருக்க மாட்டாள்.
வேறு வேறு ப்ரிஞ்ச் என்று கூட வாதாட முடியாது. இரண்டிலும் தனித்துவமாக மக்காச்சோளம் சற்று உதிர்த்து பட்டாணி போல கலந்திருந்தாள். சித்ராவுக்கு மக்காச்சோளம் சேர்த்து செய்வது பிடிக்கும்.
பல வண்ணங்கள் கேரட் ஆரேஞ்சு , பட்டாணி பச்சை, உருளை வெள்ளை, அதனால் மஞ்சளாக மக்காசோளம் சேர்ப்பார் கேட்டால் வித்தியாசமாம். இன்று அந்த ஒற்றுமை தான் வித்தியாசப்படுத்த முடியாது திண்டாட வைத்தது.
மாலை பிரேக் டைம் டீ குடிக்க கூட எழுந்து வராது மாமனாரிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தாள்.
அக்கணம் மோகன் முடிவெடைத்தார். எப்படியும் மைந்தனின் பார்வைக்கு கொண்டு சென்றாக வேண்டியது தன் கடமை என்று.
மாலையில் புறப்படும் நேரம், ப்ரியா வெளிவர, “மருமகளே கோபம் வேண்டாம். மாமா என்ன சொல்ல வர்றேன்னா” என்று ஆரம்பிக்கும் நேரம், “இங்க வந்தப்பவே நான் யாருனு தெரியும் தானே?” என்று முனுக்கென்று கண்ணீரை சிந்தினாள்.
“தெரியும் ப்ரியா. ஆனா இந்தரிடம் இப்பவரை நீ என் கூட தான் ஆபிஸ்ல வேலை பார்ப்பதை சொல்லலை. உன் மனசுல இந்தர் இருக்கான்னானு தெரிந்துட்டு அவனிடம் சொல்லணும்னு தான் காத்திருந்தேன். எந்த தடங்கலும் செய்யாம வீட்டுக்கு வாம்மா. இந்தரிடம் நாம பேசணும்.” என்றார்.
ப்ரியா மறுப்பாய் தலையசைக்க, “இங்கப் பாரும்மா நீ அவனை விரும்பறதை நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். அவனுக்கு போட்டு காட்டி விளக்கினா முதல் வேலையா வுமன்ஸ் ஹாஸ்டல் வாசல்ல வந்து நிற்பான்.
இரவு நேரம் அங்கேயே சுத்திட்டு இருந்தா… அவன் வயசுக்கு நல்லாதான் இருக்கும். லாட் ஆப் கேர்ள்ஸ் வந்து போறயிடும்.” என்றதும் ப்ரியா முனுக்கென்று சிரித்து விட்டாள்.
“அவ்ளோ தான்டா வாழ்க்கை. ஒரு செகண்ட்ல கண்ணீர். அடுத்த செகண்ட் சிரிப்பு. துன்பம் இன்பம் கலந்து தான் கிடைக்கும். என்னோட வா இந்தரிடம் பேசலாம்” என்றதும் ப்ரியா தயங்கினாள்.
வேண்டாம் என்று கூறாது யோசித்தாள். எப்படியும் இந்தரை விரும்பியது தெரியும் சந்தியா பற்றி மோகன் சார் சொல்லலாம். அதற்கு நேரில் சென்று தானாக இந்தரிடம் பேசுவதே நல்லது என்று மாமனார் பைக்கில் அமர்ந்தாள்.
“அந்த கம்பியை புடிச்சிக்கோம்மா. அத்தையையே வச்சி ஓட்டுவேன். அதனால பயப்பட வேண்டாம்.” என்று கூறி, வீட்டு பக்கம் வண்டியை விட்டார்.
ப்ரியாவுக்குள் இந்தரிடம் என்னென்ன பேசவேண்டுமென்ற திட்டங்களை தீட்டினாள்.
அவனை விரும்புவதை கூறிவிட்டதால் அதை மறுக்க முடியாது. ஆனால் தன்னை மறக்க கூறவேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“மோகன் சார் நான் உங்களோட வர்றதாலயும், நான் இந்தரை விரும்பறதா சொன்னதாலையும் இந்தர் காதலை ஏற்றுக்கிட்டேன்னு அர்த்தமில்லை. எனக்கும் இந்தருக்கும் கல்யாணம் நடக்காது.” என்றதும் மோகனோ ‘எதுவென்றாலும் மகன் முன் பேசட்டும். மகன் முன் அவன் முகம் பார்த்து காதலை மறுப்பாளா?’ என்ற எண்ண தோன்றியது.
“அது உங்க முடிவும்மா. ஒரே ஒரு ரெக்வஸ்ட் ஆபிஸ் தாண்டி வந்தாச்சு. இந்த சாரை கட் பண்ணும்மா. முடிஞ்சா மோகன்னு கூப்பிடு. இல்லையா மாமானு சொல்லு.” என்றதும் “அங்கிள் இரண்டும் கூப்பிட முடியாது” என்று கொட்டு வைத்தாள்.
மோகனோ “அது சரி அங்கிளாவது வருதே” என்று நேர்மறையாகவே எடுத்து கொள்ள, ப்ரியதர்ஷினிக்கு இந்தரை கூடுதலாக பிடித்தது.
என்ன தான் பானுமதி துரைசிங்கம் அத்தை மாமா என்று அன்பை பொழிந்தாலும் அது வேறு. இது நட்பு ரீதியான பந்தமாய் வித்தியாசமாய் தெரிந்தது.
மாம்பலம் வந்ததும், “இந்த பக்கம் தானேம்மா ஹாஸ்டல்” என்றார். “ஆமா அங்கிள்” என்றாள்.
மோகன் அந்த பாதையில் சென்றதும் அச்சோ இங்க இந்தர் நிற்பாரே? என்று பதட்டமாக, அவள் எண்ணத்தை பொய்யாக்காமல் பைக்கை நிறுத்தி அதன் மேல் அமர்ந்து போனில் தலையை விட்டு முழ்கியிருந்தான்.
இடது கையால் கழுத்து வலியோடு நிமிர, தந்தை பைக் தந்தையின் பின்னால் தர்ஷினி என்றதும் பைக்கிலிருந்து இறங்கி நின்றான்.
“அப்பா” என்று தந்தையையும் தன்னவளையும் காண, மோகனோ “வீட்டுக்கு வாடா உட்கார்ந்து பேசுவோம்” என்று கூறிவிட்டு பைக்கில் சென்றார்.
“தர்..தர்ஷி… அப்பா பைக்ல… வீட்டுக்கு போறா” என்று அதிர்ச்சியும் ஆனந்தமாய் தந்தை பைக்கை பின் தொடர்ந்தான்.
ப்ரியாவோ தனக்கு பின்னால் மெதுவாக தன்னையே சாப்பிட்டு ஏப்பமிடும் விதமாக தொடர்பவனை கண்டு முகம் திருப்பி முன்னால் பார்வையிட்டாள்.
தன்னை பாராது முன்னால் பார்வை பதித்தவளை கண்டு, வண்டியை முறுக்கி தந்தையை ஓவர்டேக் செய்து முன்னால் செல்ல, “அவசரத்தை பார்த்தியாம்மா” என்று பேசியபடி அவரின் மிதவேகத்தோடு வீடு வந்தடைந்தார்.
“அம்மா… முதல்ல வெளியே வந்து பாரு. அப்பா யாரை கூட்டிட்டு வந்திருக்கார்னு.” என்று இழுத்து வர, துணி மடிக்க விடறியாடா. எப்பப்பாரு அப்பாவும் மகனும் இம்சை பிடிச்சதுங்களா இருக்கே.” என்று கூறி வர “தர்ஷினி ப்ரியதர்ஷினி. உன் லவ்வர்… என் மருமகடா” என்று சித்ரா கேட்க, “ஆமா ஆமா உன் மருமகளே தான்” என்று அறிமுகப்படுத்தினான்.
“உங்கப்பா கூட்டிட்டு வர்றார்” என்று கூறி “வாம்மா ப்ரியா” என்று வரவேற்க, இந்தரிடம் பதிந்த பார்வை சித்ராவிடம் திருப்பினாள்.
“வணக்கம் ஆன்ட்டி” என்றவள் மோகனை தான் கண்டாள்.
“நீங்க எப்படிங்க ப்ரியாவை கூட்டிட்டு வர்றிங்க? உங்களுக்கு ப்ரியாவை தெரியுமா?” என்று கேட்டு ப்ரியாவை கைப்பிடித்து அழைத்து வர, இந்தர் பார்வை பெண்ணவளை தாண்டி வேறெங்கும் செல்லவில்லை.
“என் ஆபிஸ்ல புதுசா ஜாயின்ட் ஆனது ப்ரியதர்ஷினி தான். சரி கொஞ்ச நாள் கழிச்சு உங்களிடம் சொல்வோம். அதுவரை ப்ரியா மனசுல நல்ல இடமா பிடிக்கலாம்னு பழகினேன்.
இன்னிக்கு இந்தரை பத்தி கேட்டுடுவோம்னு முடிவுல இருந்தேன். கேட்டேன். கூடவே உன்னோட ப்ரிஞ்சு சாதத்தால மாட்டிக்கிட்டேன்.
மதியம் இரண்டு பேரும் சாப்பிட்டுட்டே பேசுவோம். இன்னிக்கு சாப்பாட்டை வச்சி ப்ரியாவிடம் மாட்டிட்டேன். நம்ம வடிவேலன் டிபன் பாக்ஸை வச்சி என்னோடதுனு ப்ரியாவிடம் போட்டுக் கொடுத்துட்டார்.
வேற வழியில்லாம தெரிந்தப் பொண்ணுனு அவங்களிடம் சொல்லியாச்சு. அதே போல ப்ரியாவிடம் இந்திரஜித் அப்பா மோகன் என்று அறிமுகமாகிட்டேன்.
இந்தர் உன்னிடம் பேச தான் அழைச்சிட்டு வந்தது.” என்று கூற, சித்ராவோ ஒரு பக்கம் தட்டில் முறுக்கு லட்டு, என்று கொடுக்க “டீயா காபியாம்மா?” என்று கேட்டார்.
“காபி ஆன்ட்டி” என்று உரைத்தாள்.
இந்தரோ அப்பா பக்கம் அமர்ந்தவன், அவளை தான் இமைக்காது பார்த்தான்.
மோகனோ “முதல்ல நீங்க தனியா பேசுங்கம்மா. நீ அவனை பற்றி பேசியதை அவனிடமே சொல்லற. இந்தமுறை நழுவமுடியாது.
ரெகார்ட் பண்ணியதை அவனிடம் கொடுப்பேன். அப்பறம் எப்படியும் உன் பின்னால வருவான். நீயா பேசி தெளிவாகி வாங்க. மாடில பேசணும்னாலும் பேசுங்க
இல்லை அவன் ரூமுக்கு போய் பேசினாலும் ஓகே” என்று கூற, இந்தர் எழுந்து அவனது அறைக்குள் சென்றான்.
“சாருக்கு நீ அவன் ரூம்ல காலடியெடுத்து வைத்து பேசணும்னு ஆசைப்போல. பேசிட்டு வாம்மா” என்று மோகன் கூற, “காபி” என்று சித்ராவும் நீட்ட அதனை வாங்கி இந்தரின் அறைக்குள் நுழைந்தாள்.
சித்ராவோ ‘ப்ரியாவை எப்ப, எப்படி சந்திச்சிங்க? என்ன பேசினா? பழகறதுக்கு எப்படி தெரியறா? இங்க வந்த காரணம் என்ன? அவ இந்தரை விரும்பறாளா? உங்களிடம் என்ன சொல்லிருக்கா?’ என்று கேட்க மோகன் கூற தயாரானார்.
இந்தரின் அறைக்குள் காபி கப்போடு வந்த ப்ரியாவை நொடிப்பொழுதில் காபி கப்பை வாங்கி மேஜையில் வைத்து, அவளை கட்டிப்பிடித்து முகத்தை நிமிர்த்தி முத்தங்களை வழங்க, ப்ரியாவோ கை நடுங்க “இல்லை” என்று அதிர, அவளது கையில் சூடான காபி கொட்டியது.
“ஸ்ஆ அம்மா” என்றதும் அந்த காபி மக்கை வாங்கி மேஜையில் வைத்த இந்தரோ, “கண்டதும் நினைச்சி பயந்துட்டு வந்தா இப்படி தான். பாயும் புலி மட்டும் கண்ணுக்கு தெரியும்.” என்று பேச தன் மனதில் நினைத்தவையை யூகித்து பேசியவனை கண்டு மெச்சுதல் அடைந்தாள்.
“நான் ஒன்னும் தப்பா நினைக்கலை. காபி சூடாயிருந்தது.” என்றதும், “காபிக்கு பதிலா பால் எடுத்துட்டு வந்ததா கனவெல்லாம் கண்டுட்டு பச்ச பொய் சொல்லாத.” என்றவன் “உட்காரு” என்று மெத்தையை சுட்டிக்காட்டினான். இதென்ன கையில் காபி கப் மெத்தையில் அமரு என்றதெல்லாம் திரைப்படத்தில் மணமுடித்த தம்பதிகள் செய்கையே. அதோடு முடிச்சிட்டு பார்த்தாள்.
ப்ரியா அமராமல் இந்தரை ஏறிட, “மேடம் உங்க எண்ணம் தறிக்கெட்டு போகுது. மாடிக்கே போகலாமா இல்லை இங்கயே பேசலாமா?” என்றதும் ப்ரியா நடப்பை அறிந்தவளாக வாய் திறந்தாள்.
“நான் உங்களை விரும்பறேன்” என்றுரைத்துவிட்டு அவனை ஏறிட்டாள்.
“ஓல்ட் நியூஸ்” என்று தாடையை தேய்த்தான்.
“நீ சந்திரா கல்யாணத்துல என்னை அவாய்ட் பண்ணிட்டு போயிட்டு, ஒளிஞ்சு ஒளிஞ்சு ரசிச்சு பார்த்தியே அப்பவே உனக்கு என்னை பிடிக்கும்னு தெரியும். அப்பறம் நான் பானுமதி ஆன்ட்டியிடம் நீ திருடலைனு சொன்னதும் என்னை கண்ணீர் வழிய பார்த்தியே அப்பவே பிற்காலத்துல என்னையே நினைப்ப, கூடுதலா ரொம்ப பிடிச்சிடும்னு தெரியும்.
இங்க வந்ததும் என்னை பார்த்து ஒரு ஆச்சரியம் கலந்த திகைப்பு, அதோட அச்சோ இவனை சந்திச்சிட்டோம்.இது காதலா மாறுமா? என்று பரிதவிப்பா அப்பவே குழம்பினப்பவே நீ காதலிச்சிடுவனு தெரியும்.
நான் வழிய வந்து பேசியும் ரெஸ்பான்ஸ் பண்ணி நடந்த,என் டிபன் பாக்ஸை இப்பவரை தரலை. என் காதலை உனக்கு தேவைப்படுதுனும் தெரியும். நீ என்னை விரும்ப ஆரம்பிச்சு அதை மறைச்சி உன்னையே நீ ஏமாத்திட்டு இருப்பதும் தெரியும்.
இப்ப எனக்கு தெரிய வேண்டியது. உன் மேல யார் திருட்டு பழி போட்டதுன்ற விஷயம் தான்.” என்று கைகட்டி கேட்டதும் ப்ரியாவுக்கு ‘இவன் என்ன காதலித்தால் போதுமென்று எண்ணத்தில் இருப்பானென்று நினைத்தாள். தன் பழியை களையும் முடிவோடு தான் இருக்கின்றான்
என் காதலை விட என் மீது மற்றவர் போட்ட பழியை களைவதில் முனைப்பாய் இருக்கின்றான் என்று பிரம்பிபப்பாய் பார்த்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
அருமை அருமை அருமை
Prathilipi ல ஓபன் ஆகல
இங்க ezhthukkal பெரிய வடிவில் ஒன்றுடன் ஒன்று கலந்து உள்ளது எப்படியோ படித்து விட்டேன்
அருமையான பதிவு