Skip to content
Home » நீயென் காதலாயிரு-17

நீயென் காதலாயிரு-17

அத்தியாயம்-17

    ப்ரியா மறுப்பாய் தலையசைத்து “இங்க பாருங்க உங்களுக்கு நான் லவ் பண்ணணும். அவ்ளோ தானே. நான் உங்களை லவ் பண்ணறேன். பட் என் மேல பழியை தூக்கி போட்டது யாருனு எதுக்கு சொல்லணும். முடிஞ்சிப் போனதை விட்டு தள்ளுங்க” என்றாள்.

    இந்தரோ “ஏய்… நீ என்ன நினைச்சிட்டு இருக்க?
நீ திருடலைனு முதல்லயே ஆதரவா வந்து நின்றேன். அப்ப நீ என் பிரெண்ட்டோட அத்தை பொண்ணு மட்டும் தான். அதுக்கே என் மனசு கிடந்து தவிச்சது.

இப்ப நீ என் லவ்வர். நாளைய பின்ன எனக்கு மனைவி. எனக்கு காலேஜ்ல கிடைச்ச ஒரே பிரெண்ட் சந்தோஷ். அவன் வீட்டுக்கு அடிக்கடி போவேன் வருவேன். அப்ப எல்லாம் என் மனைவியை பழியோட அங்க நிறுத்த முடியுமா? முதல்ல யாருனு சொல்லு” என்று மிரட்டும் விதமாய் அதிகாரம் செய்தான்.

   தன்னவள் தன்னை விரும்புகின்றாளென்ற தைரியம், அவனுக்கு ப்ரியாவை அதிகாரம் செய்யும் துணிவை கொடுத்திருக்க வேண்டும்.

  ப்ரியாவோ இதென்ன பிரச்சனை அதிகரிக்குமோ என்று அச்சப்பட்டு, “இங்க பாருங்க நான் விரும்பறேன்னு தான் சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லவேயில்லை. எனக்கு கல்யாணம் பண்ணற ஐடியா இல்லை. அதோட சந்தோஷ் வீட்டுக்கு இனி நான் போகப்போறதும் இல்லை.

   நான் உங்கப்பாவிடமும் இதை தான் சொன்னேன். அவர் தான் என் பையனிடம் சொல்லுன்னு கூட்டிட்டு வந்துட்டார். இந்தாங்க உங்க டிபன் பாக்ஸ்.” என்று மடமடவென கைப்பையிலிருந்து எடுத்து வைத்து ஓடப்பார்த்தாள்.

    “கல்யாணம் மட்டும் பண்ணாம புள்ளையை பெத்துக்கலாமா?” என்றதும் சடன் பிரேக்கிட்டு நின்றாள்.

   கோபமாய் திரும்பி, “என்ன திமிரா?” என்று கேட்டாள்.

   “எனக்கு இல்லை உனக்கு தான் திமிரு. நான் விரும்பறேன் நீயும் விரும்பற. எங்க வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. அப்படியிருக்க என்ன தான் பிரச்சனை. கல்யாணம் பண்ண மாட்டன்னு துள்ளற. நான் ஒன்னும் சந்தோஷ் இல்லை கையை கட்டி வேடிக்கை பார்க்க” என்று அவனும் கோபமாகவே பேசினான்.

   இந்திரஜித் வீடு, இந்திரஜித் அறை, இதில் காதலிக்கின்றேன் திருமணம் செய்ய மாட்டேன் என்றவளின் பேச்சை கேட்டு கோபத்தில் துள்ளி குதித்தான். யாரோ பழிப்போட, தன் காதல் ஒன்று சேர்வதற்கு தடையாகுமா?
   சாலை என்றாலே ப்ரியாவோடு நேரில் பேச சென்றிடும் ஆள். கடையிலும் பேச சென்று வம்பளந்து வாதம் செய்தவன். தன் வீட்டில் குரல் உயர்த்துவது ஆச்சரியமில்லை.

ஆனால் ப்ரியதர்ஷினிக்கோ இதுவரை மென்னகையாக வலம் வந்தவனின் தோற்றம் கண்ணில் கோபம் கொப்பளிக்க பேச, எச்சிலை விழுங்கி, “இது சரிவராது நான் புறப்படறேன். இங்க வந்ததே தப்பு” என்று மீண்டும் அடியெடுத்து வைக்க, “அவளது கரத்தை பற்றி தன்பக்கம் திருப்பி உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டு முடித்தான்.
 
   இந்திரஜித்தின் தாய் தந்தை வெளியேயிருக்க, பேச மட்டும் தானே என்று வந்தவளுக்கு இந்த அதிரடி முத்தம் இதயத்தை வேலை நிறுத்தம் செய்ய வைத்திருக்க வேண்டும்.  தலையை அங்கும் இங்கும் திருப்ப, இந்தரின் இரு கைகளும் கன்னத்தை பிடித்து அசையாது பார்த்துக் கொண்டவனால், இவளது முயற்சி துவண்டதே தவிர, தலை இம்மியும் அசையாது இதழும் அவனிடமிருந்து விடுபடவில்லை.
   தன் மென் கரத்தால் இந்தரின் நெஞ்சில் கைவைத்து தள்ள முயன்றாள்.

   ஆறடியில் வளர்ந்தவனுக்கு தேகமும் இரும்பு தூணால் செய்தது   போல இருக்க, ஒரடியும் அவனை தன்னிடமிருந்து பிரித்து நகர்த்த முடியவில்லை.
  
   ப்ரியதர்ஷினியோ கைகளை துழாவி அங்கிருந்த பேனா, கடிகாரம் தட்டிவிட்டு டிபன் பாக்ஸையும் தட்டிவிட, தொடர்ந்து பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டு மோகன் சித்ரா அவ்வறைக்கு வந்தார்கள்.

  “இந்தர்” என்ற தந்தை குரலில் தான் ப்ரியாவை விடுவித்தான்.

   ப்ரியா அழுதவாறு அவனிடமிருந்து விடுபட்டு, சித்ரா பக்கம் ஓடிவந்து கட்டிக்கொண்டாள். கண்ணீர் அருவியாக பொழிய தாய் சித்ராவுக்கே சங்கடமானது. இதே கண்ணீர் இல்லாமல் வெட்கம் கொண்டு ப்ரியா இருந்தால் கேலியோடு கடந்திருப்பார்கள்.

மோகன் சித்ரா ஒன்றும் இது தவறு அது தவறென்று இந்தரை ப்ரியாவை குற்றம் சுமத்தி பேசி அசிங்கப்படுத்தும் ரகம் அல்ல.

  ‘என்னடா அவசரம். முத்தத்துக்கு நேரம் காலம் பார்த்து சொல்ல மாட்டோமா?’ என்று கேலி கிண்டலாய் முடித்து சிரித்து பிரைவேஸி தந்து விலகியிருப்பார்கள்.
  
  ப்ரியா கண்ணீரோடு நிற்கின்றாள், இந்திரஜித் கோபத்தோடு கையை கட்டி அவளை முறைத்தான்.

  “என்னை நம்பி நம்ம வீட்டுக்கு வந்த மருமகளை, உன்னை நம்பி உன் அறைக்கு அனுப்பினா, என்ன இந்தர் பண்ணிருக்க, முதல்ல மருமகளிடம் மன்னிப்பு கேளு” என்றார்.

   இந்திரஜித்தோ பிடிவாதமாய் “அவ மேல யாரு பழி சுமத்தினானு கேட்டா சொல்ல மாட்டேங்குற. இதுல காதலிக்கறேன் ஆனா கல்யாணம் பண்ண மாட்டேன்னு பேசறா. அப்பா இன்னிக்கு இவ சொல்லிட்டு தான் வெளியே போகணும். நான் எதுக்கும் சாரி கேட்க மாட்டேன். அவ எனக்குரியவள். கிஸ் பண்ணினா தப்பில்லை” என்று ப்ரியதர்ஷினி போனை எடுத்து தன் பேண்ட் பேக்கட்டில் போட்டுக்கொண்டான்.

   ப்ரியா அழுதவாறு மோகனை காண, “டேய் மொபைலை மருமககிட்ட கொடு.” என்றார்.

    இந்திரஜித் தந்தை சொல் கேட்காமல் மறுத்தபடி தலையாட்ட, “இந்தர் கொடு” என்று அதட்டினார்.
 
  தந்தை மோகனுக்கு இந்த அதட்டல் எல்லாம் என்றாவது தான் எட்டிப் பார்க்கும். மற்றபடி நகைச்சுவையாக பேசும் காதல் மன்னன் அவர்.
   தந்தை அதட்டவும் எடுத்து கொடுத்தான். பதிலுக்கு மோகன் தன் போனில் ரெக்கார்ட் செய்தவையை எடுத்து ஆடியோ ஒலிக்க போட்டார்.

  ப்ரியா காதலிப்பதாக கூறவும், லேசாக இந்தர் கோபம் மட்டுப்பட்டது. அவளது செவ்விதழை நோட்டமிட்டான். லேசாய் சிவந்து அவனது உதட்டு முத்தத்தால் வீக்கம் கொண்டிருந்தது.
 
   போனில் ரெக்கார்ட் கேட்டபடி கையை கட்டி கீழே விழுந்த பொருட்களை அவளை பார்த்தபடி எடுத்து வைத்தான்.

    அதனதன் இடத்தில் வைக்கும் கணம் யார் காரணமென்ற பேச்சு ஆடியோ போக, நெற்றி சுருக்கி, ஆடியோவை கூர்மையாக கவனித்தான்.

  சந்தியா என்றதும் பற்கடிக்கும் சத்தம் கேட்டது.
 
   “தேவையில்லாம விலாசினியையும் அவங்க அம்மாவையும் சந்தேகப்பட்டேன். ஊமைக் கொட்டானாட்டும் இருந்துட்டு என்ன வேலை பண்ணிருக்கா. சின்ன பொண்ணாச்சேனு நினைச்சேன். எனக்கு இவ மேல சந்தேகமே வரலை.

   இப்பவே சந்தோஷிற்கு சொல்லறேன்.” என்று அவனது அலைப்பேசியிலிருந்து சந்தோஷ் எண்ணிற்கு போட எடுத்தான்.

   அவசரமாய் ப்ரியா சென்று தடுத்து “ப்ளிஸ் இந்தர். ஏற்கனவே அப்பா இல்லாத பொண்ணுன்னு அத்தை மாமா என் மேல இரக்கம் காட்டி பாசமா இருப்பதையே தப்பா புரிஞ்சிட்டு, என்னவோ அந்த வீட்ல எனக்கு தான் மதிப்பு மரியாதைனு கோபமா சுத்தறா. திருட்டு பழியை அவ தான் போட்டான்னு விஷயம் தெரிந்தா, மாமா-அத்தை அவளை அடிச்சி திட்டுவாங்க. என் மேல கூடுதலா சந்தியாவுக்கு கோபம் தான் அதிகரிக்கும்.

   ஏற்கனவே எப்பவும் சொந்த தங்கச்சியை கூட்டிட்டு போகாம என்னை பைக்ல சுத்தறதாகவும், எனக்கு டிரஸ் வாங்கி நான் செலக்ட் பண்ணினேன் என்று விளையாட்டுக்கு சீன் போட்டதை என்னவோ அண்ணனுக்கு தன் மேல பாசமில்லைனு கவலைப்படறா.

    ஒவ்வொன்னும் அத்தை என்னிடம் ஷேர் பண்ண என்ன செய்ய சொல்ல அவளுக்கு கூடுதலா கோபமும் பிடிவாதமும் தான் மிஞ்சும்.” என்றதும் இந்தரோ நிதானமாக கேட்டுவிட்டு “அப்ப காலம் முழுக்க நீ பழிசுமக்கணுமா?” என்று கேட்டான்.

    தரையில் டேபிளிற்கு கீழே தொப்பென்று அமர்ந்து அழுதவள், “அந்த பழி போட்டதால தானே நான் இங்க வந்திருக்கேன். இந்த இடைப்பட்ட நாள்ல, இங்க சென்னைக்கு வந்தப்ப நானும் அழுதிருக்கேன். ஏன் தினம் தினம் பழிசுமக்கறது வலியை தந்தது.

   ஆனா என்னைக்கு உன்னை சந்திச்சேனோ அப்பயிருந்து நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்.
 
   அதுவும் ரீசன்ட் டேஸ்ல நான் எந்தளவு சந்தோஷமாயிருக்கேன்னு என் முகமே சொல்லும். மோகன் அங்கிள் நீங்க காலையில கூட சொன்னிங்க தானே.” என்றதும் இந்தரோ நிதானமடைந்தான்.

    அமர்ந்த நிலையில் இருந்தவாறு “உனக்கென்ன கல்யாணம் பண்ணணுமா அம்மாவிடம் திட்டுவாங்கி, அடிவாங்கியாவது உங்களை கல்யாணம் பண்ணிக்கறேன். ஆனா சந்தோஷ் வேண்டுமின்னா இங்க வரட்டும் நாம அங்க போக வேண்டாம். ப்ளிஸ்” என்று அழவும், இந்திரஜித் மண்டியிட்டு அவள் கன்னம் ஏந்தி, தன் முகமருகே கொண்டு வந்து விடுபட்ட இதழ் முத்தத்தை மென்முத்தமாக பதித்தான்.

    மோகனும் சித்ராவும் சத்தமின்றி வெளியேற, இந்திரஜித் மெதுவாய் தேனிதழில் சுவைத்தான்.

   ப்ரியதர்ஷினி முன்பு போல திமிரவில்லை. அதே கணம் தள்ளிவிடவோ, விடுபடவோ முயற்சிக்கவில்லை. கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் மேலெழுப்பி அவன் முதுகை அணைத்தாள்.

   சிறிது நேரம் அங்கே நிசப்தம் ஆட்கொள்ள, இந்தரே விடுவித்தான்.

    இருவரும் டேபிள் மேஜையை ஓட்டி முதுகை சாய்த்தார்கள்.
  அவளது கையை பிடித்து, ஒவ்வொரு விரலாய் தொட்டு தடவியபடி, “இங்க காபி கப்போட வந்தப்ப முத்தத்தை நினைச்சி பார்த்த, அது தானா நடந்திட்டேன்.‌

‌    உன் மனசுல நினைப்பதை இந்த இந்தர் செய்வான்.
அதனால சந்தோஷ் வீட்டுக்கு போகலை. சந்தோஷிடம் ஷேர் பண்ணலை. ஆனாலும் உண்மை ஒரு நாள் அதுவா தெரிய வரும்.” என்றவன் ப்ரியா லேசாய் போலி கோபம் கொள்ளும் நேரம், “எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கேட்டான்.

   “அக்கா குழந்தை உண்டாகியிருக்கா, அடுத்து நிறைய செலவு வரும். ஏற்கனவே ஐந்து சவரன் போடலைனு யமுனாவை அவங்க மாமனார் திட்டறார்னு சொன்னா. அதுக்கு இப்ப தான் வீட்டை அடமானம் வச்சி பணம் வாங்கி ஐந்து சவரன் கொடுத்துட்டு வந்தாங்க அம்மா.
   முதல்லயே இதை செய்திருக்கலாம். அம்மா தான் வீட்டை அடமானம் வைக்கணுமானு யோசிப்பாங்க. அதான் வேற முறையில மகளிர் சுயவுதவி குழுல கடன் கேட்கலாம்னு இருந்தேன். பட் அதுக்குள்ள தவறா புரிஞ்சுக்கிட்டாங்க.
  
    பழி வந்த கொஞ்ச நாள்லயே யமுனா வீட்லயும் குடைச்சலா, அதனால அம்மா வீட்டை அடமானம் வச்சி கொடுத்திட முடிவெடுத்து அதை சரியா செய்துட்டாங்க. இனி கடனை அடைக்கறது மட்டும் தான் என் வேலை. அதுக்குள்ள அக்காவுக்கு பேறுகாலம் முடியும்னு நினைச்சேன்.

   இப்படி நடுவுல நாம சந்திப்போம், நமக்குள்ள காதல் வளரும்னு நினைக்கலை.” என்றவள் அதன் பின் மோகன் அங்கிள் சித்ரா ஆன்ட்டியை தேடினாள்.
  “மோகன் சா.. ஆங்.. அச்சோ.. இங்க நீ முதல்ல கிஸ் பண்ணினப்ப அவங்க வந்தாங்க தானே. இரண்டாவது முறைசெய்தப்ப இருந்தாங்க. இப்ப… அச்சோ” என்று தள்ளிவிட்டு எழுந்தாள்.

   “கடவுளே ஏன்டா இப்படி செய்த? நான் முதல்ல வெளியே போறேன்” என்று நாலட்டு நடந்தாள்.
  தனியாக இந்தர் தாய் தந்தையரான மோகன் சித்ராவை காணவும் சங்கடமாக, “நீயும் வா.” என்றாள் சங்கடமாய்.

  அவள் தோளில் கையை போட்டு, “பயப்படாம வா” என்று இயல்பாக்க முயன்றான்.

  இங்கு மைந்தன் மருமகளை முத்தமிட்டதும், அவர்களை காணாதது போல வெளிவந்த மோகன் சித்ரா ஹாலுக்கு வந்து, தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

   “இல்லைங்க இது சரிவராது.” என்று சித்ரா குரல் கேட்க ப்ரியதர்ஷினிக்கு பயமே கூடியது.

     “அதுக்கும் முன்ன முகூர்த்தம் கிடையாது சித்ரா.” என்ற மோகனின் குரலில், “அப்பா கல்யாண டேட் பார்த்திங்களா இல்லையா?” என்று சர்வசாதாரணமாக வந்து தர்ஷினியையும் அமர வைத்து கூடவே ஒட்டிக்கொண்டான்.
 
    தர்ஷினி தான் மிகவும் பயந்து தவித்தாள். அங்கே திருட்டுபழி இங்கே ஒழுக்கம் கெட்டவளென்ற பழி வந்து விடுமோயென்ற பயம். திருட்டை கூட தாங்கிக்கொள்வாள் இந்த பழி வந்துவிட்டால்?

  அந்த பயம் சித்ரா வாய் திறக்கும் வரை இருந்தது.

     “உங்கம்மா அவசரத்துக்கும் உன் அவசரத்துக்கும் இங்க முகூர்த்த நாள் இல்லை ராஜா. அதனால காத்திருந்து தான் கைப்பிடிக்கணும்.

   முதல்ல அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்கணும். இப்ப இருக்கற சிட்டுவேஷன்ல என்ன முடிவெடுக்கறாங்கன்னு தெரியாது.

   என்ன பேசினாலும் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிடலாம். ஆனா அவங்க சௌவுகரியம் தான் எப்படின்னு கேட்டு அவகாசம் தரணும். அதுவரை முத்தத்தோட நிறுத்திக்கோட.” என்று மைந்தனிடம் கூறவும் அங்கு நெளிந்தது என்னவோ ப்ரியா தான்.

     சித்ரா ப்ரியாவின் கையை பிடித்து, “ஏதாவது வம்பு செய்தா சொல்லு இனிமே கண்டிக்கறேன். இப்ப செய்த காரியத்துக்கு கண்டிச்சா ஆறுதல் தேறுதல்னு கதை விடுவான்.

    பதிலை பாக்கெட்லயே வச்சிட்டு இருப்பான் கிரிமினல்.

    அவன் செயலால் திடீருனு பதட்டம் வந்த, உன்னை கண்டுக்கவே மாட்டான்.” என்று பையன் தான் தவறுக்கான காரணம் என்று கூறிவிட்டு ப்ரியாவை பேச வைக்க முயன்றார்.

    “ஆன்ட்டி அம்மா ஒத்துக்க மாட்டாங்க. அதுவும் சந்தோஷ் பிரெண்ட் என்றால் இந்தரை மறுக்கலாம்.

   உங்களை போல எங்க அம்மா இருக்க மாட்டாங்க. அவங்க ஒரு கூட்டுக்குள்ளயே வாழறவங்க. ஐ மீன் விடோனா நல்லதுல பங்கெடுத்துக்க கூடாதுனு தள்ளி நின்றுப்பாங்க. கல்யாணமாகி குழந்தைவுண்டாக லேட்டானா ஏதோ யார் காரணம் என்ன காரணம் என்று மெடிக்கல் சம்மந்தப்பா யோசிக்க மாட்டாங்க. பெத்த பொண்ணை தான் திட்டுவாங்க.
   இப்பவும் காதல் கல்யாணம்னு போய் கேட்டா, என்னவோ நான் தான் வேண்டுமின்ன காதலிச்சதா பேசுவாங்க. பொண்ணுங்க குனிந்த தலை நிமிராம இருந்தா எவனும் காதலிக்க மாட்டாங்க என்று ரொம்ப ஓல்ட் தாட்ஸ் நிறைய இருக்கு.” என்று தன் அன்னை கவிதாவை பற்றி எடுத்துரைக்க, “அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் கவலையை விடு.” என்று கூறவும் ஓரளவு இந்தர் வீட்டில் அவர்கள் திருமணத்தை எதிர்பார்ப்பது அப்பட்டமாய் தெரிந்தது.

   ஒரே பையன் அவன் காதல் திருமணத்தை இவர்கள் ஆதரித்து கோலாகலமாக நடத்தலாம். ஆனால் இப்பொழுது தான் யமுனா திருமணத்தை நடத்தி முடித்து வரதட்சனையெல்லாம் அள்ளி கொடுத்து நிம்மதியானார்.

  இதில் மாமன் மகள் சந்திரா திருமணத்தில் ஏற்பட்ட பழியால் துவண்டுவிட்டார்.

   பழியோட பேசிவிட்டு சென்றதால் இனி உறவுகளை எட்டி நிறுத்தி கொண்டாலும் கவிதா அடுத்து மகளுக்கு பேறுகாலம் முடிய, ப்ரியாவின் காதலை ஏற்பார்களாயென்ற ஐயம் துளிர்த்தது.
  
   -தொடரும்
-பிரவீணா தங்கராஜ்

2 thoughts on “நீயென் காதலாயிரு-17”

  1. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நல்ல அப்பா நல்ல அம்மா நல்ல மகன் இந்தர் மொத்தத்தில் நல்ல family அவளுக்கு கிடைத்து உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *