அத்தியாயம்-19
சந்தோஷ் தன் வீட்டிற்கு வந்து தாய் தந்தையை ஒன்றாக நிற்க வைத்து, இருவரின் முன் இந்தர் அனுப்பிய ஆடியோவை போட்டு காட்டினான்.
“போதுமா… போதுமானு கேட்டேன். கொஞ்சம் அவ சொல்லறதை கேளுங்கனு தலைப்பாடா சொன்னேன். என் பேச்சை மதிக்கலை.
அட்லீஸ்ட் நிச்சயத்துக்கு அத்தையிடம் பார்மாலிடிஸுக்காவது சொல்லுங்கன்னு சொன்னா, அதையும் சொல்லாம திடுதிப்னு பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கணும்னு நிச்சயம் வச்சிட்டிங்க.
இப்ப கேளுங்க நல்லா கேளுங்க. உங்க அருமை மகள் சந்தியா தான் ப்ரியா மேல பழிசுமத்தியிருக்கா. காரணம் கேட்டிங்களா? நீங்க இரண்டு பேரும் சந்தியாவை விட ப்ரியாவை தலை மேல தூக்கி வைக்கிறதா நினைச்சி இப்படி செய்திருக்கா.” என்று கூறிவிட்டு சோபாவில் அமர்ந்தான்.
பானுமதிக்கு மகன் ப்ரியாவை விரும்பி தாங்கள் அதனை அழித்துவிட்டோமோ என்ற பயம் வாட்டியது. ஆனால் ப்ரியா இந்தர் விரும்பியது ஆடியோவில் தெரியவும் கொஞ்சம் நிம்மதி.
இந்தர் வந்த காரணம், ப்ரியதர்ஷினிக்கும் சந்தோஷிற்கும் உள்ள பழக்கம், நட்பு மட்டுமே என்று விவரிக்க, தற்போது சந்தியா மீது கோபம் திரும்பியது.
நல்ல வேளை சந்தியா கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டாள் இல்லையேல் தனி பஞ்சாயத்து இப்பொழுதே களைக்கட்டியிருக்கும்.
தற்போது நிதானம் வந்தது. அதோடு விலாசினியையும் மகன் கையோடு அழைத்து வந்து காட்டவும் பானுமதிக்கு கையை பிசைந்து மகளை எண்ணி வருந்தினார்.
”ப்ரியா உன் பிரெண்ட் இந்தரை விரும்பறாளாடா?” என்று தணிவாய் கேட்க சந்தோஷோ கோபம் கொப்பளிக்க, “சந்தியா பண்ணியதுக்கு என்ன சொல்லறிங்க?” என்றதும் பானுமதி ஊமையானார்.
”நான் என்னடா செய்ய, அப்பா இல்லாத பொண்ணு. இந்த வீட்டு மருமகளா வரப்போறானு ப்ரியா மேல கூடுதலா பாசம் வச்சேன். அவளுமே உன்னிடமும் இந்த வீட்லையும் ரொம்ப பாசம் வச்சா. பாசத்துக்கு பதிலா பாசம் காமிச்சது தப்பா?” என்று நொடித்து கொண்டார்.
“தப்பில்லைம்மா ஆனா அதே பாசம் எல்லா நேரத்திலும் இல்லையே. யமுனா மதினிக்கு தேவைக்கு ப்ரியா நம்ம நகையை எடுத்திருப்பானு நீயா முடிவு கட்டிட்டியே, பாசத்துக்கு மோசம் காட்டிட்ட.
ப்ரியா நிச்சயமா, சந்தியா செய்ததுக்கு காயப்பட்டுயிருக்க மாட்டா. நீங்க, அப்பா, சேர்ந்து அந்த நேரம் பழிப்போட்டு பேசியது தான் அவ நம்மளை விட்டு ஒதுங்க காரணம். உங்களை சொல்லி என்ன பிரயோஜனம்.
நான் கூட வேடிக்கை பார்த்துட்டேன்.” என்று புலம்பினான்.
“விலா கிளம்பு உன்னை உங்க வீட்ல விட்டுடறேன்.” என்று தன்னவளை எழுப்பினான். அவளை அழைத்து செல்லும் போது, அவளை நிறுத்தி அன்னை தந்தையிடம் திரும்பி, “சந்தியாவை கண்டிப்பிங்களோ செல்லம் கொஞ்சுவிங்கேளோ எனக்கு தெரியாது. இந்த வீட்டுக்கு விலாசினி மருமகளா வரப்போறா, சந்தியா ஏதாவது தகிடுதனம் செய்து ப்ரியா மாதிரி இவளை நடத்த ட்ரை பண்ணினா, நான் இந்த வீட்லயிருக்க மாட்டேன். எனக்கு விலாசினி முக்கியம். அவ இந்த வீட்ல மருமகளா வந்தா, மரியாதையும் அன்பும் கண்டிப்பா இருக்கணும். உங்க பொண்ணிடம் சொல்லிடுங்க” என்று விலாசினியை இழுத்து சென்றான்.
பைக்கில் கோபத்தோடு முறுக்கினான்.
சந்தோஷ் பேசியதை அமைதியாக கேட்டவள், இருசக்கர வாகனத்தில் தோளை தீண்டி, அவன் முதுகில் தலை சாய்ந்து கொண்டாள்.
விலாசினி வீடு வந்ததும் “சாரி விலா. உன்னை சந்தேகப்பட்டுட்டேன். வீட்லயே குற்றவாளியை வச்சிட்டு நீயா அத்தையானு தப்பா நினைச்சிட்டேன்.” என்று தங்கையை எண்ணி திரும்ப துவண்டுவிட்டான்.
விலசினியோ “காபி குடிச்சிட்டு போங்க.” என்று அவன் கையை பிடித்து அழைத்தாள்.
அவனிருந்த மனநிலைக்கு முகம் வாடி வந்தான்.
கற்பகம் மாப்பிள்ளை வந்துள்ளான் என்று வரவேற்க, சற்று சன்னமான சிரிப்பை கடமைக்கு உதிர்த்தான்.
கற்பகத்திடம் வேண்டுகோளாக “அத்தை நிச்சயத்துக்கு ஏதோ அம்மா அப்பா சொன்னாங்க என்று கவிதா அத்தைக்கு சொல்லாம இருந்திங்க. அட்லீஸ்ட் இப்பவாது பொண்ணு எடுத்து பொண்ணு கொடுப்பதை சொல்லி நிச்சயம் முடிஞ்சதை சொல்லுங்க.
அப்பா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று கூறவும் கற்பகம் தயங்கினர்.
அவர்கள் தயக்கம் கண்டவனோ “ஏன் அத்தை கவிதா அத்தைக்கிட்ட சொல்ல மாட்டிங்க. ப்ரியா நகை எடுக்கலை அத்தை. அதை அவளுக்கு பிடிக்காதவங்க செய்த வேலை.” என்றான்.
“சந்தோஷ் தப்பா எடுத்துக்காத. நான் ஏற்கனவே கவிதாவிடம் நிச்சயம் நடப்பதை சொல்லி கூப்பிட்டேன்.
கவிதா போன்லயே விலாசினிக்கு வாழ்த்தினா, அதோட வர முடியாது மன்னிச்சிட சொன்னா. நான் வேற என்ன செய்ய முடியும். பூவும் பொட்டும் இல்லாததால, எப்பவும் ஒதுங்கி பழகினவ. பானுமதி எதுக்காகவோ உறவை தள்ளிடலாம். எந்த பிரச்சனையில்லாம நான் தங்கச்சி மாதிரி நினைச்சவளை கை கழுவ முடியுமா?
என்னயிருந்தாலும் தனியா ப்ரியாவை தைரியமான பொண்ணா வளர்த்தவ. ப்ரியா சுட்டி மாப்பிள்ளை. அவயெல்லாம் திருடணும்னு கூட நினைக்க மாட்டா. என்ன கல்யாணத்தப்ப உங்க பிரெண்ட் இந்தர் அவளை விழுங்கற மாதிரி பார்த்தார். அதை அவ கவனிச்சாளா இல்லையானு தான் கோபமிருந்தது.” என்றதும் சந்தோஷிற்கு நிம்மதி வந்திருக்க வேண்டும். ஆனால் அவனோ ‘அச்சோ நீங்களே இப்படி யோசித்து நிச்சயம் நடந்ததை சொல்லிருக்கிங்க. நான் அப்பா அம்மா சத்தியம் வாங்கிடவும் ப்ரியாவுக்கு சொல்லாம விட்டேன்” என்று உடைந்து கலங்கினான்.
விலாசினியோ தன் அன்னையை காபி போட கூறி அனுப்பிவிட்டு, சந்தோஷிடம் “ப்ரியா உங்களை தவறா நினைக்க மாட்டாங்க. அவளுக்கு இங்க கலந்துக்க முடியலையேனு வருத்தம் இருக்கும். மத்தபடி அவ யாரையும் தப்பா நினைக்க மாட்டா. அவ குணம் அப்படி” என்று உயர்த்தி பேசவும், விலாசினி கையை பிடித்து முகத்தில் வைத்து கொண்டான்.
சிறிது நேரம் கழியவும் காபி வர, பருகினான்.
“நான் கிளம்பறேன் அத்தை” என்றவன் விலாசினியிடம் கையை விடுவித்துக் நகர்ந்தான்.
விலாசினிக்கு இப்பொழுதே சந்தியா என்றால் பிடிக்காமல் போனது.
இப்படியா ஒருத்தி பழிப்போட்டு தன்னை முன்னிருத்த துடிப்பது. உரிமை வேண்டுமென்றால் மனம் விட்டு அத்தையிடம் பேசியிருக்கலாம்.
பானுமதி அத்தையிடமே ‘என்னம்மா ப்ரியா ப்ரியானு சொல்லற. நான் செய்யறேன்” என்று முந்திக்கொண்டு வந்து நின்று இருக்கலாம். அதைவிட்டு பழிசுமத்தி விரட்டுவதா? திருமணம் ஆனப்பின் சந்தியாவோடு எட்டி நின்று பழக வேண்டுமென இப்பொழுதே முடிவெடுத்து கொண்டாள் விலாசினி.
அன்று மாலை சந்தியா வீட்டுக்கு வந்த அடுத்த நிமிடம், பானுமதியின் பார்வைக்கு பொசுங்காமல் நின்றாள்.
“அம்மா என் பிரெண்ட்ஸ் கிட்ட என்னோட நிச்சயம் சொன்னேன். எல்லாரும் கங்கிராட்ஸ் பண்ணினாங்க. அதோட இப்ப தான் அக்காவுக்கு முடிஞ்சிருக்கு அதுக்குள்ள பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கறிங்க. கல்யாணத்துக்கு பணம் நகை சேர்த்தாச்சா? பையன் கண்ணனானு ஏகப்பட்ட குவெஸ்டின். இதுல ட்ரீட் கேட்டிருக்காங்க. அம்மா…. நாளை மறுநாள் சனி இல்ல ஞாயிறு ‘ஐனாஸ்’ போயிட்டு படம் பார்த்துட்டே லஞ்ச் முடிக்க பிளான். அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிட்டு செலவுக்கு பணம் வேண்டும் அம்மா.” என்றதும் அறையிலிருந்து கேட்டு வெளிவந்தார் துரைசிங்கம்.
“பணமா பணம் மரத்துல காய்க்குதா? நீ பண்ணின வேலைக்கு உன்னை பட்டினி போடணும். லஞ்ச் ஹோட்டலுக்கு போவீங்களோ ஹோட்டலு. ப்ரியாவை துரத்திட்டு என்னடி பேசற?” என்று கர்ஜித்தார்.
கடந்த மூன்று நான்கு மாதத்திற்கு மேலாக ப்ரியா பேச்சின்றி நிம்மதியாக இருந்த சந்தியாவோ, “இப்ப எதுக்கு அந்த திருடி பத்தி பேசறிங்க.” என்றதும் கன்னம் தாங்கி சோபாவில் விழுந்தாள்.
”யாருடி திருடி? ப்ரியாவா? நீயா? எங்களுக்கு எல்லாம் தெரிந்துடுச்சு.
நாங்க ப்ரியா மேல அன்பாயிருக்கவும், அது பொறுக்காம பழியை சுமத்தி வச்சிருக்க பாவி மகளே. அவ என்னடி தப்பு பண்ணினா? ஏதோ அப்பா இல்லாமல் வளர்ந்தவ, சந்தோஷக்கும் பிடிக்கும் நல்ல பொண்ணு லட்சணமானவனு குணவதினு தானே பழகியது.
இப்படி உனக்கு பிடிக்கலைனு ப்ரியாவை என் வாயால விரட்டி மனசு காயப்படுத்த வச்சிட்டியேடி” என்று முதுகில் சாத்தினார்கள்.
தன் குட்டு யாரால் வெளியாகியிருக்கும் என் அறிந்திடாவிட்டாலும், அன்னையை உதறி தள்ளினாள்.
“ஆமா நான் தான் நகையை அவ பெட்டில போட்டேன். அவளே நான் பார்க்க தான் சூட்கேஸ் நம்பரை திறந்து மூடினா.
அப்ப எல்லாம் இப்படி பழிதூக்கி போட்டு, அவளை விரட்ட நினைக்கலை.
நீ தான் மா, என்னை தப்பு பண்ண வச்சி.
எதுக்கெடுத்தாலும் ப்ரியா… ப்ரியா… ப்ரியா… இந்த பெயரே எனக்கு பிடிக்கலை. மோஸ்ட் பாப்புலர் நேம் ப்ரியா தான்.
நம்ம வீட்ல ஐந்து நாள் காலேஜ் போயிட்டு வந்து நிம்மதியா இரண்டு நாள் வாழ விடறியா? எப்ப பாரு ப்ரியா எல்லாம் காலையில் எழுந்துப்பா… அவ அது செய்யறா… அவ இது செய்யறானு, அவ ஸ்டேடஸ் பார்த்துட்டே என்னை இம்சை பண்ணற.
அவ செடி வளர்க்கறா, பூ பூத்திருக்கு, க்விலிங் ஹீரிங் பண்ணறா, முறுக்கு சான்ட்வெச் செய்திருக்கா, ஹேர் ஸ்டெயில் வித்தியாசமா செய்யறா எப்ப பாரு அவ புராணம் பாடறிங்க.
இந்த வீட்ல இரண்டு பொண்ணுங்க இருக்கோம். சந்திரா பத்தி ஏதாவது பேசிட்டே இருக்கிங்க… கிடையவே கிடையாது. ப்ரியா மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியறா.
இதுல நானும் ப்ரியாவும் தான் அக்கா கல்யாணத்துக்கு டிரஸ் பண்ணிட்டு உங்க முன்ன நின்றோம். அவ மட்டும் எது போட்டாலும் அழகு. நான் பக்கத்துல தானே இருந்தேன், உங்க கண்ணுக்கு, நான் அவுட்ஆப் போக்கஸ்ல தெரிந்தேனா?
‘கண்ணு சந்தனம் கொண்டு போய் வையு, வந்தவங்களை வான்னு கூப்பிடு, மொய் பணம் வாங்குற இடத்துல நில்லு.’
சந்திரா பக்கத்துல நான் தானே நிற்கணும். கூடபிறந்த தங்கச்சி நானா? அவளா?
ப்ரியாவை ஏன் அனுப்பறிங்க. இந்த வீட்டு மருமகளா அப்பவே அவளுக்கு சாவி தூக்கி கொடுத்துட்டு என்னை மூலையில தூக்கியெறிந்துட்டிங்க.
இப்பவே இப்படின்னா? நாளைக்கு சந்தோஷ் அண்ணாவை கட்டிக்கிட்டு வந்து நிற்பா. நான் தனியா என் ரூமுக்குள்ளயே குமறிட்டு கிடக்கணும். அதான் அந்த நேரம் சான்ஸ் கிடைச்சது. திருட்டு பழி போடணும்னு அவ சூட்கேஸ்ல வைக்கலை. ஆனா அவ மேல நல்ல அபிப்ராயம் குறையும், என்னயிருந்தாலும் நம்ம மக தான் பெஸ்ட்டுனு நீங்க சொல்லணும்னு நினைச்சேன். சொல்ல வச்சேன். மத்தபடி அவளை அடியோட வெறுக்கறேன்” என்று மூக்குறிந்து தேம்பியவளை துரைசிங்கம் புழுவை போல பார்வையிட்டார்.
“நீ எனக்கு தான் பொறந்தியா?” என்ற ஒற்றை வார்த்தையை வீசியவர் அதிருப்தியாக நிற்க, “இதே கேள்வி தான் அப்பா எனக்கும். நான் உங்க பொண்ணு தானே? சந்திரா கல்யாணம் அப்ப வரவேற்பு இடத்துல, அண்ணா எங்கன்னு என்னிடம் கேட்காம அவகிட்ட கேட்கறிங்க. அவ அண்ணனை கல்யாணம் செய்யலையே. ஏதோ அவனோட ஒட்டி உரசிட்டு ஜாலியா ஊர் சுத்தினா” என்றதும் வாசலில் அம்மா அப்பா தங்கை பேசுவதை செருப்பு வைக்கும் இடத்தில் இருந்த சிமெண்ட் பலகையில் கையூன்றி, அதில் சாய்ந்து கேட்டுக் கொண்டிருந்தவன் விலுக்கென ஹாலுக்கு வந்தான்.
“ஏய்.. என்ன பேசற? ஒட்டி உரசிட்டா? பல்லை தட்டி கொடுத்திடுவேன். அவ என் பிரெண்ட். எப்பவும் பிரெண்ட்.
இப்படி புத்தியில்லாம பேசற உனக்கு என் பிரெண்டஷிப் பத்தி என்ன தெரியும்.
அவ திருடலைனு எனக்கு அன்னைக்கே தெரியும். அந்த நேரம் சுமூகமா போகட்டும்னு பேசாம அமைதியா இருந்தேன். இப்படி ஒரு தங்கை கேவலமா இருப்பானு நான் நினைக்கலை.
ஆனா ஒன்னு நீ கெட்டது பண்ணினாலும், என் பிரெண்ட் ப்ரியாவுக்கு நல்லது தான் நடக்கும்.
சென்னையில இந்தர் அவளை திரும்ப பார்த்திருக்கான். இங்க விட்டு போன அவன் காதலை அங்க அவளிடம் மீட்டிடுவான்.
அவனுக்கு ப்ரியதர்ஷினியை பிடிச்சிருக்கு. கல்யாண மண்டபத்திலயே அவ திருடலைனு ஆணித்தரமா அவளுக்காக நின்றவன். இனி வர்ற காலத்துல ப்ரியாவை ராணி மாதிரி பார்த்துப்பான்.
நல்ல வேளை உன்னை மாதிரி சூனியக்காரி அந்த வீட்ல யாருமில்லை. அதோட யோசிக்காம பழகினவங்க மேல பழிசுமத்துறதும் செய்ய மாட்டாங்க. ஏன்னா சித்ரா ஆன்ட்டி மோகன் அங்கிள் எல்லாம் தங்கமான குணம்.” என்றவன் தனதறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டான்.
மகளை திட்ட வந்த பானுமதி துரைசிங்கம் இருவரும், தங்கள் மீதும் தவறிருக்க, இடிந்து போய் அமர்ந்து விட்டார்கள்.
ப்ரியா மீது பழி போட்டதும், கல்யாண மண்டபத்திலிருந்து அவள் செல்ல வேடிக்கை பார்த்தார்கள்.
கறிவிருந்துக்கும் வரமாட்டார்களென்று கவலைப்படவில்லையே. போதாதற்கு அவசர அவசரமாக பெண் எடுத்து பெண் கொடுக்க முடிவு செய்து, சந்திரா திருமணம் முடிந்த இந்த இடைப்பட்ட நான்கு மாதத்தில் வைத்துவிட்டார்.
நிச்சயத்துக்கு வந்தவர்கள் கூட ‘என்ன பானுமதி அக்கா, பெரிய பொண்ணு கல்யாணமாகி ஓய்ந்து போயிருப்பிங்க, இரண்டாவது பொண்ணு கல்யாணம் முடிச்சி பையனுக்கு ப்ரியாவை கட்டி வைக்க பார்ப்பிங்கனு நினைச்சேன். இப்படி பொசுகாகுனு விலாசினியை நிற்க வச்சிட்டிங்க.’ என்று கேட்காதவர்கள் இல்லையே.
இப்பொழுது எந்த முகம் வைத்து அந்த சிறுப்பெண் முன்நிற்போமென கவலையில் ஆழ்ந்தார்கள்.
-தொடரும்.
– பிரவீணா தங்கராஜ்
Super😍😍
Super sis nice epi 👌👍😍 endha Sandhya ku appo kooda thimiru kiraiyala pa🙄 yedhu eppdiyo evalala Priya ku nalladhu dhan nadandhiruku😘🥰
Super..super.,sis..nice moving….
அருமையான பதிவு
Super