Skip to content
Home » நீயென் காதலாயிரு-7

நீயென் காதலாயிரு-7

அத்தியாயம்-7 

       இந்திரஜித் முகம் எப்பொழுதும் மலர்ந்த முகமாக இருக்கும். சில நாட்களாக முகம் புன்முறுவலை மறந்திருந்தது.   

சரியாக சொல்ல போனால் ப்ரியாதர்ஷினியை கண்ட நாள் முதல், காதல் அரும்பிய நாளிலிருந்து இப்படி தான் திரிக்கின்றான். 

அவசர அவசரமாய் கிளம்பிய மகனிடம் மோகன் மெதுவாக பைக் சாவியை எடுத்து கொடுக்க அதனை பெற்று தன் கால்சட்டை பாக்கெட்டில் திணித்தான்.

   “சாப்பிடாம ஸாக்ஸ் போட்டுட்ட இந்தர்” என்று சித்ரா வந்தார்.

  “பசிக்கலைம்மா” என்று பதில் தந்தான்.

   “பசிக்காட்டியும் இரண்டு தோசையை உள்ள தள்ளுறது” என்று மோகன் மைந்தனை ஏறிட்டு கூற, “எனக்கு அவசரமா போகணும்” என்றான்.

   “அப்படியென்னடா அவசரம்?” என்று மோகன் கேட்டதும் ஷூ லேஸை இறுக கட்டி முடித்து, “ஆபிஸ்ல க்ளைன்ட் மீட்டிங். மார்னிங்கே என்னோட வேலையை மீட்டிங்ல டிஸ்பிளே பண்ணி விளக்கணும். ஆல்ரெடி எல்லாம் போல்டர்ல பேக்கப் ரெடி பண்ணிட்டேன்‌. நான் போய் ப்ரஜக்டர்ல  எக்ஸ்பிளைன் பண்ணணும். எப்பவும் போற டைம் என்றால் டென்ஷனாகும். அதனால குயிக்கா போறேன். இந்த பிராஜெக்ட் மட்டும் நான் கரெக்டா டீமிடம் புரிய வச்சிட்டா என்னோட சேலரி மாறும். அதோட பதவியுயர்வு கிடைக்கும்” என்று பேசியவன் முதுகுப்பையை எடுத்தான்.

   “அதுக்கு எதுக்குடா சோர்வா இருக்க? சந்தோஷமா கிளம்பலாமே” என்று மோகன் கேட்டதும், தந்தையை பார்த்து வெளியேற முயன்றான்.

   “பதில் சொல்லிட்டு போடா. என்ன பிரச்சனை உனக்கு. நீ விரும்பற பொண்ணு பத்தி டீடெய்ல் கிடைக்கலை அவ்ளோ தானே? அதுக்கு அப்பா அம்மா என்ன செய்தோம். எங்களிடம் முன்ன மாதிரி பேசாம நறுக்கு தெரித்து பேசற,” என்று கேட்டார்.

   மகனின் மௌவுனம் அவரை வதைத்தது. அதனால் இன்று அலுவலகம் கிளம்புபவனிடம் நிறுத்தி வினா தொடுத்தார்.

   “ஆபிஸ் கிளம்பறப்ப குவஸ்டின் கேட்காதிங்க. ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். இதுல உங்க கேள்வி துளைகள் வேற. என்னை கொஞ்ச நாளா தனியா விடுங்க” என்று எரிந்து விழுந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றான்.

   மோகனோ சித்ராவை தீர்க்கமாய் பார்த்துவிட்டு அவரும் இடத்தை காலிசெய்தார். நேரத்திற்கு பணிக்கு செல்வது மைந்தன் இந்திரஜித் மட்டுமில்லையே இவரும் ஒரு அலுவலகத்தில் கணக்கெழுதும் பணியில் இருக்கின்றாரே.

   சித்ரா தான் அப்பாவிற்கும் மகனுக்கும் நடுவே பாவப்பட்ட ஜீவனாய் நின்றிருந்தார்.

     தந்தையிடம் முகத்திருப்பலை  காட்டிவிட்டு இந்திரஜித்திற்கு மனம் கேட்கவில்லை.
   பைக் கண்ணாடியில் தன் முகத்தை கண்டவனுக்கு, தந்தையிடம் பேசிய அதே முகபாவணை தெரிய? தன் முகம் உற்றென்று இருப்பதை அறிந்து அவனையே அவன் கடிந்தான்.

   எதிர்பாரா விதமாக கோடம்பாக்கம் தாண்டி மாம்பலம் செல்லும் நேரம் ஒரு கார் அதிவேகமாக வந்திட, மழையில் தேங்கிய தண்ணீர் மேலே அடித்து சென்றது.

   இந்திரஜித் அப்படியொன்றும் கெட்டவார்த்தை பேசமாட்டான். ஆனால் அக்கணம் கண்மண் தெரியாமல் ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை சரளமாக வந்து விழுந்தது.

   போவோர் வருவோர் தன்னையே பார்த்து கடந்து செல்லவும், வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

    அலுவலக மீட்டிங்கிற்கு இப்படி சேரும் சகதியுமாக செல்ல இயலாது. அதனால் தண்ணீர் பாட்டிலால் கைக்குட்டையை வைத்து துடைத்தான். கால் சட்டை ஒரளவு கருப்பு வண்ணமென்பதால் லேசான ஈரத்தை தவிர்த்து சேறு காணாமல் துடைத்திருக்க, சட்டை சாண்டில் நிறம் கறை படிந்த துடைத்த பொழுதும் அப்படியே சுவடு பதிந்திருந்தது.

     ‘தந்தையிடம் முகம் திருப்பி வந்ததற்கு கடவுள் கொடுக்கும் தண்டனை’ என்று மனசாட்சி கேலி செய்தது.

    தற்போது இதை பற்றி ஆராயும் எண்ணத்தை ஒதுக்கி வைத்து மின்னல் வேகத்தில் சிந்தித்தான்.

  வீட்டிற்கு சென்று உடை மாற்ற நிச்சயம் கால் மணி நேரம் பிடிக்கும். அதற்கு பக்கத்தில் புது சட்டை அளவு சொல்லி வாங்கிடலாம். எப்படியும் மடமடவென வாங்கிடும் ஆள் தான் இந்திரஜித். காலை நேரமென்பதால்  ஐந்து நிமிடத்தில் டிஸ்பிளேவில் இருக்கும் உடையை வாங்கி பில் போட ஐந்து நிமிடம் ஆகலாம்.     இந்திரஜித் வாங்கிய சட்டை தேவையற்றதாக ஒதுக்க மாட்டான். எப்படியும் அலுவலகத்திற்கு போட்டு கொள்ள உதவுமென கடையை தேடினான்.

    இந்திரஜித்திற்கு நன்றாக தெரியும். மாம்பலத்தில் பெரிய பெரிய கடையில் நுழைந்து வெளிவரவே பத்து பதினைந்து நிமிடம் தாண்டி எடுத்துக் கொள்ளும். அதனால் நின்றிருந்த இடத்திலிருந்து நாலாப்பக்கம் விழிகளை உருட்டினான்.

  ஒரு துணி கடையின் முன் தான் அணிந்திருக்கும் பேண்டிற்கு தோதாக சட்டையை அணிந்த பொம்மை மனிதன் இருக்க, அந்த கடைக்குள் நுழைந்தான்.

     “என்ன சார் வேண்டும்?” என்று ஆண் குரல் பில் போடும் இடத்தில் கேட்க, ”மீடியம் சைஸ் ஷர்ட் சார். அதோ அந்த மாடல் பொம்மை போட்டிருக்கறது.” என்று சுட்டிக்காட்டினான்.

   “தங்கச்சி கஷ்டமருக்கு இந்த மாடல் டிரஸ் எடுத்து காட்டு” என்று அந்த மனிதன் எடுத்துரைக்க, “ஓ..ஓகே ச..சார்” என்றது சாட்சாத் திணறி தத்தளித்தவள் ப்ரியதர்ஷினி என்று தனியாக கூற வேண்டியதில்லை.

   ப்ரியதர்ஷினியை கண்டவனோ உடலுக்கு உயிர் வந்தது போல,  முகமெங்கும் மலர்ச்சியோடு உதடு விரிந்து மென்னகைத்தான்.

   இத்தனை நாள் பிணமாக நடமாடினாய் என்று கூறினால் தகும். அப்படியிருந்தவன் அவளருகே வந்து “தர்ஷினி” என்று வரவும், “ப்ரியா அவருக்கு மீடியம் சைஸ் ஷர்ட், இதோ இந்த யெல்லோ கலர் மாடல்மா. எடுத்து காட்டு முதல் கஸ்டமர்.” என்று குறிப்பிட்டு கூறவும் இந்திரஜித் நிதானித்தான்.

    ‘இந்த இடம் ப்ரியதர்ஷினியின் பணியிடம். ஏதேனும் பெர்சனல் பேசிடாதே என்று தெளிவடைந்து அவள் பின் தொடர்ந்தான். 

   கைகளை பிசைந்து மனதில் இந்திரஜித்தை அர்ச்சித்து உடையை எடுத்து காட்டினாள்.

   கடை உரிமையாளர் மறுபக்கம் திரும்பியிருக்க, “தயவு செய்து டிரஸ் வாங்கிட்டு கிளம்புங்க. ஏதாவது கேட்டு என் உசுரை வாங்காதிங்க.” என்று அவன் செவிக்கு எட்டும் விதமாக மெதுவாய் முனங்கினாள்.

  “தர்ஷூ ஏன் பழியை சுமந்துட்டு இங்க வந்துட்ட?” என்றான்.

  “ஆரம்பிக்காதனு சொன்னேன். இது நான் வேலை செய்யற இடம். தயவு செய்து கிளம்பு” என்று ஷர்ட் எடுத்து போட்டாள்.

  அவள் எடுத்து போட்ட ஆடையை பார்த்து, “இத்தனை நாள் உன்னை தேடிட்டு இருந்தேன். நீ எங்கன்னு உன் அம்மாவிடம் சந்தோஷ், சந்தியா மூலமா கேட்டு பார்த்தேன். 

  பச் உங்க அம்மா எதுவும் மூச்சு விடலை. உங்கக்காவிடம் நானும் சந்தோஷும் அவங்க வீட்டுக்கு போய் கேட்டோம். சென்னையில இருப்பதா சொன்னாங்க. எத்தனை கடையில ப்ரியா என்ற டிரஸ் டிசைனரை தேடி ஏறியிறங்கியிருக்கேன் தெரியுமா?

    நீ இங்க பக்கத்துலயே இருந்திருக்க. அதுவும் சேல்ஸ் கேர்ளா” என்று அவளை ஆராய்ந்தவன் கண்கள் கலங்கியது.

     “பச் அதுக்கென்ன. இதான் என் நிலைமை” என்று முகம் திருப்பினாள்.

   “என்ன ப்ரியா வேற டிரஸ் எடுத்துகாட்டு.” என்ற குரலில் அதே பிராண்டில் வெவ்வேறு கலரை எடுத்து காட்டினாள்.

   இந்திரஜித் ஒவ்வொன்றாய் மெதுவாக புரட்டி அவளை அடிக்கடி தழுவும் பார்வையை பார்த்து வைக்க ப்ரியதர்ஷினி தவித்து நின்றாள்.

  இதில் இந்திரஜித் போன் வேறு அலறியது.
  சந்தடி சாக்கில் போன் அழைப்பை ஏற்று, காதில் வைத்து நிதானமாக பேசினான்.

  மறுபக்கம் பணியிடத்தில் வேலை செய்யும் தோழன் ஒருவனோ “எங்கடா இருக்க மீட்டிங் கால் மணி நேரத்துல ஆரம்பிக்க போகுது. இன்னமும் ஆளைக்காணோம்.” என்றதும் இந்திரஜித்தோ, “மச்சி மச்சி எனக்கு ஆக்சிடெண்ட்டா. அதனால உடனே வரமுடியாது. என் கம்பியூட்டர்ல மீட்டிங்கு தேவையான எல்லாம் தயாராயிருக்கு. கொஞ்சம் எனக்கு பதிலா நீயே மீட்டிங் அட்டன் பண்ணுடா. மேனேஜரிடம் எனக்கு ஆக்சிடெண்ட் என்று சொல்லிடு. நானே போன் பண்ணறதா இனபார்ம் பண்ணிடுடா. பாஸ்வோர்ட் இப்ப செண்ட் பண்ணறேன்” என்று பொய்களை அள்ளி வீசி பேச விடாமல் உரைத்தான்.

   ப்ரியதர்ஷினி பொய் பேசுபவனை வாய்பிளந்து உற்று நோக்கினாள்.

  “என்னம்மா கஸ்டமருக்கு எடுத்து போடு” என்று கடை உரிமையாளர் வந்து பேசவும், போனை மூடி “நான் அப்பறம் பேசறேன் வை டா” என்று துண்டித்து இந்த மாடல்ல மீடியம் சைஸ் ஒன்னு, லார்ஜ் சைஸ்ல ஒன்னு பில் போடுங்க ப்ரியா” என்றான்.

  “ப்ரியானு கூப்பிடாத” என்று பற்கடித்து பேச, “தர்ஷும்மா எனக்கும் ப்ரியா வேண்டாம். தர்ஷவே நல்லாயிருகாகு.

  உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னிக்கு மட்டும் மீட்டிங் அட்டன் பண்ணி, பிராஜக்ட் எக்ஸ்பிளைன் பண்ணினா சம்பள உயர்வு கிடைக்கும். ஏன் வெளிநாட்டுக்கு போக கூட வாய்ப்புண்டு. ஆனா அதை தூக்கி போட்டுட்டு இங்க உன்னிடம் பேசிட்டு இருக்கேன். பிகாஸ்…” என்று இடைவெளியிட்டு அவளை உற்று நோக்கினான். 

  அவன் துண்டித்து பேசிய வார்த்தை தொக்கி நிற்க, ப்ரியதர்ஷினியோ பில் போட அவன் பின்னால் தொடர்ந்தாள். ‘என்ன பிகாஸ்’ என்னனு சொல்லிட்டு போகலை என்று தவித்தாள்.

     “என்ன சார் சேரு சட்டையில பட்டுடுச்சா.” என்று லேசான ஈரத்தை வைத்து கேட்டார் கடை முதலாளி.

  “ஆமா சார்” என்று பில் போடும் இடத்தில் நின்றான் இந்திரஜித்.

   “எங்க சார் கார் பைக்ல வர்றவங்க சல்சல்னு போறாங்க. தண்ணி தேங்கியிருந்தா அடுத்தவங்க மேல படும்னு யோசிக்க மாட்டேங்கறாங்க.” என்று பில் போட்டு பணத்தை தேய்க்கும் மெஷினில் இந்தரின் கார்டை தேய்த்தார்.

   “முதல்ல நான் கூட கார் காரனை திட்டிட்டேன் சார். ஆன இப்ப கடவுளா பார்க்கறேன். எனக்கு தேவையானதை கண் முன்ன காட்டிட்டார். எல்லா புகழும் இறைவனுக்கே” என்று கூற ”மாஷா அல்லா” என்று கடைக்காரர் கூறி கார்டை திருப்பி தந்து விட, இரண்டடி நடந்து சென்றவன் கடை உரிமையாளர் பார்க்கவில்லையென்றதும் ப்ரியதர்ஷினியிடம் ஒரு கள்ளச்சிரிப்பில் விடைப்பெறுதலை விழியம்புகளால் துளைத்து சென்றான்.

   இந்திரஜித்திற்கு இன்றைய நாள் கடுகடுப்பாய் ஆரம்பித்தாலும், அவன் மனதை கொள்ளையடித்தவளை விதி தரிசிக்க வைத்த நிறைவோடு இருந்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக நாயகி திரிந்தாள்.

     ப்ரியதர்ஷினிக்கு ஏன் தான் இத்தனை பெரிய சென்னை மாநகரத்துல இவன் கண்ணுல நான் அகப்பட்டேனோ, இவன் பார்வையும் பேச்சும் ஒன்னும் சரியில்லை.
   இன்னிக்கே வேறயிடத்துல வேலை தேடி ஓடிடலாமா?! என்றவள் மனம் கெக்கரித்தது.

நீ ஒன்னும் பணக்காரியில்லை. மிடில் கிளாஸ் பொண்ணு. உன்னால் முன்ன இருந்த இடத்துலயிருந்து சட்டுனு இங்க வந்து என்ன வேலையென்றாலும் பார்க்க முயன்றதற்கு முக்கிய காரணம் பழியை விட்டு விலகி வந்தது மட்டுமல்ல, எந்த இடத்திலும் கௌரவம் குறையாது அதேகணம் தன் மானத்தோடு வாழும் உழைப்பை நம்பிதான்.

   உழைப்பு என்றால் இந்த வேலை அவளது படிப்புக்கு குறைவு. ஆனால் தேவைக்கு எது கிடைக்கின்றதோ அந்த வேலையை செய்யும் கட்டாயத்தின் விளிம்பில் நிற்கின்றாய் என்றது மனம்.

    உண்மை தான் சொந்த வீடு என்பதாலும் ஓரளவு வீட்டை சுற்றி காய்கறி பழங்களென்று தினசரிக்கு ஏதோ தயாராகிடும். முன்பு வேலை பார்த்த இடம் கணக்கெழுதும் பணி. சம்பளம் 12,000 கிடைத்திருந்தது. ஆனால் பழியை சுமந்து, வலியை தாங்கி வாழ அவ்விடம் ஏற்காமல் சென்னைக்கு 6,000 சம்பளத்திற்கு சேல்ஸ் கேர்ளாக மாறிவிட்டாள். அது மாமாவின் சிபாரிசால் கிடைத்த படி.

   சொல்லப்போனால் இங்கே கிடைத்த பணிக்கு தக்க பொருந்திக் கொண்டாள். மற்ற எந்தவொரு எண்ணத்திற்குள்ளும் சிக்கி ஆழியில் புதையவில்லை.

    அது பாசமென்னும் பள்ளத்தாக்காக இருந்தாலும் சரி. அன்பென்ற வழியில் சந்தோஷத்திடம் பழகுவதும் கூட விட்டொழித்தாள். இதில் புதிதாக இந்திரஜித் பார்வையும் பேச்சும் சிரிப்பும் தினுசாக தாக்கியது. அவன் உச்சரித்த ‘பிகாஸ்…’ என்ற வார்த்தைக்கு பிறகு ‘பிகாஸ் ஐ லவ் யூ’ என்ற வார்த்தை கோர்த்திடுமோயென்று அஞ்சினாள்.

   -தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
 
  

1 thought on “நீயென் காதலாயிரு-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *