பார்வை போதுமடி பெண்ணே
Thank you for reading this post, don't forget to subscribe!
காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து.
நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த வாழ்த்து எல்லாம் அசட்டுதனமாய் தோன்றியது.
வருடத்திற்கு ஒருமுறை தேரை குளிப்பாட்டி சாமியை வைத்து ஊர்த்திருவிழாவில் வீதிவீதியாய் வலம் வரும் போது அந்த தேரை தோட்டு கும்பிட கூட அத்தனை பேர் தள்ளுமுள்ளில் சிக்கி தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்வார்கள். ஆனால் விழா முடிந்ததும் அந்த தேர் தூசி படிந்து ஒட்டடை அடைந்து கிடக்க கோவிலில் அதை கேட்பாரற்று கிடக்கும். அது போல தான் இந்த மகளிர் தின வாழ்த்தும்.
ஒரு நாளில் ஆஹா ஒஹோ என்று பெண்ணின் பெருமையையும் புனிதத்தையும் பேசி கிழித்து பார்வார்ட் செய்து பீற்றி கொள்ளலாம். மற்ற நாட்களில் பாதுகாப்புக்கும் பஞ்சம். பெண் என்றால் இழிவு.
அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும். தந்தை ஆண்வாரிசு இல்லையென்று கூறும் போதெல்லாம், குழந்தை என்றாலே வாரிசு தானே. இதில் ஆண் என்ன பெண் என்ன? என்று கேட்க வேண்டும் போலிருக்கும்.
இதோ இப்பொழுது கூட அவர் நண்பரிடம் போனில் உரையாற்றும் நேரம் உனக்கென்னப்பா ஆண் வாரிசு இருக்கு. எனக்கு அப்படியா? பொட்டை கழுதையா போச்சே’ என்று தான் பேசினார்.
வீட்டிலிருக்கும் தந்தைக்கே இப்படியென்றால் வெளியுலகம்.
தாய் ரேகாவும் தந்தையிடம் பேச வாயெடுத்தால் “சும்மாயிரு தாரிகா. அப்பா மனசு கஷ்டப்படும். அப்பறம் நான் ஒழுங்கா வளர்க்கலையென்று குறை சொல்வார்.” என்று அடக்கிவிடுவார்.
அதனாலே பெரிதாய் பேசி வாதம் செய்ய யோசித்து அவ்விடம் விட்டு அகன்றிடுவாள் தாரிகா.
சுவர் கடிகாரம் மணி எட்டென்று ஒலியடித்து கூறவும் தனது அலுவலகத்திற்கு செல்ல தோள்பையை மாட்டி கிளம்பினாள்.
பேருந்து வர தாமதமானது தாரிகா இரண்டு மூன்று முறை கைகடிகாரத்தை பார்த்து பேருந்தை தவறவிட்டோமோ என்று கவனித்தாள். சரியான நேரம் தான் ஆனாலும் பேருந்து வரவில்லை.
பேருந்து வராதது ஒரு எரிச்சலென்றால், அங்கே குப்குப்பென்று ரயில் வண்டி போல புகையை விடும் ஆண் மகனை கண்டு கூடுதல் எரிச்சல் உண்டானது.
இத்தனை பேர் இருக்க எப்படி புகைக்கின்றான். இதே ஆண்மகனாக இருந்தால் தயக்கம் உடைத்து ‘ஹலோ பாஸ்… பப்ளிக் பிளேஸ்ல ஸ்மோக் பண்ணறிங்க அறிவில்லை’ என்று முழுக்கை சட்டையை மடித்து கெத்தாக கூறியிருப்பாள்.
கேவலம் பெண்ணாக போனதால் எதிர்த்து கேட்க கூட நாதியில்லையே என்ற கவலை தாக்கியது.
அப்படியே கேட்டாலும் ‘பொம்பளை பிள்ளை சும்மாயிரும்மா. அவனிடம் எதற்கு வம்பெ’ன தன்னை தான் உலகம் அடக்கும்.
புகையை அவன் வெளியே இழுத்துவிட தாரிகாவும் உள்ளுக்குள் புகையை சுவாசிக்கும் நிர்பந்தமானது. இரண்டு மூன்று முறை இருமல் வந்தது. கட்டுப்படுத்தி கைக்குட்டையால் இரும்பி மற்றவரை நோக்கினாள்.
தன்னை போல இரண்டு பேர் இதே போல பரிதவிப்பது கண்டாள். அந்த புகைப்பபிடிப்பவன் லேசாய் திரும்பிவிட்டு சட்டென திரும்பி கொண்டான்.
இதே அவன் அப்பா அம்மா முன் புகைப்பிடிப்பானா? அவன் தாய் தந்தையர் வயதில் எத்தனை பேர் கடந்து செல்கின்றார்கள். துளியும் பயமென்று உள்ளதா?
ஆண்வர்க்கம் சம்பாரிக்க ஆரம்பித்தாலே இது போன்றதொரு பழக்கம் அவர்களுக்கு சாதாரணமாக போனது.
இப்படி உருப்படாமல் போகும் ஜென்மங்களை, பெற்றோர் ஏன் தான் வாரிசு வாரிசு என்று தலையில் தூக்கி கொண்டாடுகின்றார்கள்.
பெண் பிள்ளைகள் என்ன தான் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தும் அவள் அடுத்த வீட்டு பெண்ணாக மாறிவிடுகின்றாள்.
இதே கவலை வாட்ட, தன்னருகே ஒரு கர்ப்பவதி நிற்கவும் புன்னகைத்தாள்.
இம்முறை சிகரேட் புகையை கர்ப்பவதி சுவாசிக்கவும் நேர்ந்தது. தாரிகாவுக்கு கோபத்தின் அளவு அதிகரித்தது.
தன் கோபத்தின் அளவை ஒன்று திரட்டி விழியில் நிரப்பி திரும்பினாள்.
அக்கணம் சிகரேட் ஊதியவன் திரும்ப அவனின் இழிச்செயல் பார்வையால் உணர்த்தி வெறுப்பை உமிழுந்தாள்.
“சாரி சாரி சிஸ்டர்.” என்று காலில் போட்டு மிதித்தான் அவன்.
அக்கணம் உணர்ந்தால் தாரிகா. இது போன்றதை கேட்க ஆண் என்ற தகுதி(?) வேண்டியதில்லை. பெண்ணின் பார்வைக்கு இந்த உலகம் அடிபணியுமென்று.
வந்த வருத்தங்கள் களைந்து போக அலுவலகத்தில் தன் நேரத்தை இனிமையாய் செலவிட்டாள்.
வீட்டுக்கு வந்த நேரம், வீடு தேடி வந்து பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்யும் ஆள் ஒருவர் வந்தார்.
தந்தை அவரிடம் சிலதிற்கு பதில் அளிக்க கூறி தாரிகாவை நாடினார்.
அந்த நேரம் தங்களுக்கு பின் வாரிசாக எந்த பெயரை ஹோல்டராக போட என்று கேட்க, “எங்கப்பாவுக்கு குழந்தைகளே இல்லை சார்.
ஐ மீன் வாரிசு இல்லை சார். அப்படி தானே அப்பா?” என்று காலையில் கூறியதற்கு பதில் தந்து பார்வையை வீசினாள்.
“நாங்க எல்லாம் கழுதைகள் சார்.” என்று விட்டேற்றி பதில் தந்து கடந்தாள்.
தாரிகாவின் தந்தை சங்கர், மகளின் பேச்சில் ஸ்தம்பித்து போனார்.
அதோடு தற்போது கூனிகுறுகி போனார் அடுத்தவர் முன்னிலையில்.
காலையில் இதே போன்று கூறினாலும் துளியும் மனம் குத்தவில்லை. இன்று மகள் கேட்டு வீசிய பார்வை அவரின் வாரிசு என்ற எண்ணத்தில் ‘ஆண்கள் மட்டும்’ என்ற எண்ணத்தை கொன்றது. வாரிசு என்றாலே குழந்தைகள் தான். அதில் ஆண் என்ன பெண் என்ன. தற்போது இருக்கும் நல்ல மனிதர்களால் சுவீகாரம் எடுக்கும் குழந்தைகள் கூட வாரிசு தான்.
-சுபம்.
பிரவீணா தங்கராஜ்.
என் வீட்டுல இதுக்கு அப்படியே நேர் எதிர் தான் மா இரண்டு பசங்க நா 1பெண் , அதுனால என்ன என் அப்பா பையன் மாதிரி தான் வளர்த்தாரு சொல்ல போனா என்ன தன்னிச்சையாக செயல்படுற மாதிரி தான் வளர்த்துருக்காரு எங்கேயும் எதுக்கும் பொண்ணு விட்டது இல்ல அவனுங்க இரண்டு பேருக்கும் எதுவோ அது தான் உனக்கும் சொல்லுவாரு அப்படி தான் நடந்துகிட்டாரு 🥰❤️
Unmaithan akka! Ponnungala eppavum adutha v2kunu nernthu vitutanga! Aana ippo konja konjama antha state maaritu varuthu