Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-1

பிரம்மனின் கிறுக்கல்கள்-1

 ஹாய் ஃபிரண்ட்ஸ் வணக்கம். 

   பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தது. புக் வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன். 

    உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல் அத்தியாயம் இதோ. 👇

   அத்தியாயம் -1

    யஷ்தவி கற்சிலை போல இறுகி மணமேடையில் அமர்ந்திருந்தாள். ஆத்விக் ஐயர் கூறிய மந்திரத்தை சிவனேனென திரும்ப கூறிக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் தான் வார்த்தையை உதிர்த்தது. ஆனால் நினைவுகள் எங்கேங்கோ அலைப் பாய்ந்தது.

     மாங்கல்யத்தை அணிவியுங்கள் என்று கூறி ஐயர் எடுத்து கொடுத்து ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’ என்ற வார்த்தையை மொழிந்த அடுத்த நொடி நாதஸ்வர சப்தம் கேட்டது.

    அதில் எல்லாம் கவனத்தில் பதியாமல் மாங்கல்யம் ஏந்தி ஆத்விக் அமர்ந்திருக்க, யஷ்தவியும் அதே மாங்கல்யம் கண்டு விதிர்த்து இமைக்காது பார்த்தாள். ஆத்விக் யஷ்தவி இருவரும் ஒரே நேர்க்கோட்டில் அந்த திருமண மேடையிலிருந்து எழுந்திடலாமா என்று ஒத்த சிந்தனையோடு பார்வையில் தழுவிய நேரம் வீல்லென்ற மழலை குரல் நாதஸ்வர ஓசையை தாண்டி இருவரின் காதிலும் சென்றடைய, அந்த மழலை குரல் வந்த திக்கில் இருவரின் பார்வையும் நிலைத்தது. பத்து மாத குழந்தை பாவனா டீத்தரை கீழே தழுவ விட அழுதிருந்தாள். யஷ்தவி தாயார் சித்ரா எடுத்து கொடுத்ததும் மீண்டும் அதனை பல்லில் கடித்து அமைதியாகி விட்டாள்.
   
      ‘வேற வழியில்லை’ என்று யஷ்தவியும், ஆத்விக்கோ ‘அவளுக்காக’ என்றும் எண்ணி அமைதியாக மாறிட ஆத்விக் யஷ்தவியின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு தாலி அணிவித்தான்.

        பெரும்பாலும் மணப்பெண்ணின் இமைகளிலிருந்து விழிநீர் சிந்துவதை மணமேடை கண்டிருக்கலாம். ஆனால் ஆணின் இமையில் விழிநீர்படலம் கோர்த்து முத்தாய் கன்னத்தில் சிந்த முடிச்சிட்ட மாங்கல்யத்தை விடுத்து கண்ணீரை துடைத்தான்.

       அவன் மட்டுமில்லை அங்கு மணமேடையில் குழுமியிருந்த சிலரின் கண்களும் கலங்கி தான் இருந்தது.

    யஷ்தவிக்கும் அழுகை முட்டிக் கொண்டு வரவேண்டியது ஆனால் அவளின் அழுகை என்றோ வற்றிப் போயிருந்து எனலாம்.

     அந்த சின்ன மண்டபத்தில் வந்திருந்த கொஞ்ச ஆட்களும்   புகைப்படம் எடுத்து கொண்டு கூட்டம் கலைய துவங்கியது.

      “சரி சரி சம்பிரதாயம் நிறை வேத்திட்டு வீட்டுக்கு கிளம்பலாம்.” என்று ஆத்விக் அப்பா அன்பாளன் கூற ஆத்விக் அந்த மழலையை நோக்கி அடியெடுத்து வைக்க, அவனை முந்திக் கொண்டு யஷ்தவி குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

   ஆத்விக்கோ குழந்தையை தூக்க வந்த கைகளை பெரும்பாடுபட்டு இறக்கிக் கொண்டான்.

     “யஷ்தவி குழந்தை எங்களோட கொஞ்ச நேரம் இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட போங்க” என்று யஷ்தவியின் தாய் சித்ரா கூற  பாலகுமாரும் ஆமோதிப்பாய் ஆத்விக்கை கண்டு “ஆமா தம்பி நீங்க சாப்பிட்டு சென்னைக்கு வேற போகணும்னு சொன்னிங்க” என்றதும் “ஆமா சார் போகணும்” என்றான்.

     “இன்னும் என்ன சார் மாமானு கூப்பிடு டா” என்று கடிந்தார் அன்பாளன்.

      “சட்டுனு மாத்த முடியாது அப்பா. முயற்சிப் பண்ணறேன்” என்றவனது பதிலில் யஷ்தவி காதில் விழுந்தது. அதில் பெரும்பாலும் நிம்மதியே உணர்ந்தாள்.

      குழந்தையை சித்ரா வாங்கிக் கொண்டதால் யஷ்தவி ஆத்விக் அருகே நிற்க ஆத்விக்கோ அவள் வந்ததும் சேர்ந்து நடையிட்டனர்.

      படிகளில் இருவரும் ஒரே சேர பாதம் வைத்தாலும் மனதால் இணைவது மிக கடினமோ என்று அந்த இறுக்கமான சூழ்நிலை சொல்லாமல் இல்லை. 

    இலையில் எது வைத்தாலும் வேண்டாமென்று மறுத்து யஷ்தவி நிற்க, அவள் தந்தை பாலகுமாரோ இப்படி ஏதேனும் செய்வாளென பின்னாடியே வந்தவர் மகள் சாப்பிடுவதில் கொஞ்சமாய் குழந்தைக்கு வைப்பது போல சிறு ஸ்பூனால் இலையில் வைத்தார்.

     “முன்ன தான் சாப்பிட மறுப்ப,  குழந்தைக்காக இனி நீயும் நல்லா இருந்தா தானே மா வளர்க்க முடியும்” என்றதும் யஷ்தவி தெளிந்தவளாய் சாப்பிட்டாள்.

      ஆத்விக்கோ எதுவும் பேசாது நடப்பதை காணாததை போன்று இருந்தான்.

     சாப்பிட்டு கீழே வந்தப் பொழுது, வந்திருந்த கொஞ்ச உறவுகளும் சென்று விட மண்டபமே காலியாக இருந்தது.

   ஆத்விக் வேகநடையிட்டு அக்குழந்தை தூக்க வந்தான்.

      யஷ்தவி சேலைத்தடுக்க மெதுவாக வந்தாள். ஆத்விக் கையில் குழந்தை சமர்த்தாய் இருந்தது. கொஞ்ச நேரத்தில் அன்பாளன் குழந்தையை கொஞ்ச நேரம் எங்களோட இருக்கட்டும் என்று வாங்கி கொண்டார்.

   அன்பாளன் வீடு வந்ததும் யஷ்தவியை விளக்கேற்ற கூற, அவளின் கைகள் நடுங்க ஆரம்பித்தது.

      பால் பழம் என்பதை எல்லாம் ஆத்விக் தவிர்த்து விட்டான். அவனாலும் அதையெல்லாம் சம்பிரதாயத்திற்காக கூட செய்ய இயலாது. மாங்கல்யம் கட்டுவதற்கே மனதில் எத்தனை வலியோடு போராடினான்.

     தனதறைக்குள் வந்தவன் அவனின் உடைகளில் சிலதை எடுத்து கொண்டு கதவை தாழிட்டு மெத்தையில் விழுந்தான்.

      ஒருவாரமாய் உறக்கமின்றி திருமணத்தை மறுத்தாலும் புத்தி யோசித்து யோசித்து தூக்கத்தை இழுந்திருந்தது.

     பாவனாவின் சிரிப்பும் அழுகையும் மட்டும் மாறி மாறி அவனின் மனதை புரட்டி எடுக்காமல் போனால் நிச்சயம் இந்த திருமணத்தை அவன் ஏற்றிருக்க மாட்டான்.

       இவனை போலவே இரண்டு தெரு தள்ளி மற்றொரு வீட்டில் யஷ்தவியும் துணிமணியை எடுத்து வைத்தாள். ஒரே ஊர் பக்கத்து பக்கத்து தெரு என்பதால் யஷ்தவி உடனடியாக இங்கு வந்து விட்டாள்.
    ஊருக்கு செல்வதால் உடனடியாக அவளும் தன் வீட்டுக்கு வரவேண்டிய கட்டாயமானது.
    “யஷ்தவி… குழந்தையை வச்சிட்டு லக்கேஜ் அதிகமா எடுத்துக்காதே. நானும் அப்பாவும் நாலு நாள் கழிச்சு வர்றப்ப எடுத்துட்டு வர்றோம். இப்ப நாலு நாளுக்கு மட்டும் மாத்து துணிமணி எடுத்துட்டு போமா” என்றதும் யஷ்தவியோ காதில் வாங்காமல் கூடுதலாகவே வைத்தாள்.

   முக்கியமாக அவளின் கிரிடிட் கார்டை எடுத்து கொண்டாள். அவளின் உண்டியலை எடுத்து உடைக்கவும் சில்லரைகளும் நோட்டுமாக அதிலிருந்து பணம் வெளிவந்தது.

      “அப்பாவிடம் கேட்டா பணம் தரப்போறார். உண்டியல் எதுக்குடி உடைக்கிற?” என்று சித்ரா கேட்டதும், “மாப்பிள்ளைக்கு வரதட்சனை கொடுத்து கொடுத்தே அப்பா பணம் கரைஞ்சிருக்கும்மா. இதுல இப்ப நான் வேற எதுக்காகவும் அப்பாவை தொல்ல பண்ண கூடாதுல.” என்றாள்.

     “ஏன்டி தொல்லைனு பேசற. ஏதோ ஒரு வார்த்தை தொல்லைனு அந்த மனுஷன் தெரியாம சொல்லிட்டார். அதுக்கு முகத்தை தூக்கி வச்சிக்கிட்டியே. உன் நல்லதுக்கு தானே அப்பா பேசிட்டார்” என்று சித்ரா எடுத்துரைத்தார்.

     “மா… உங்களுக்கு வேண்டும்னா இந்த கல்யாணம் என் நல்லதுக்குனு தோணலாம். எனக்கு எந்த கல்யாணமும் நல்லதுக்குயில்லை.” என்று எடுத்து வைத்த துணிமணியில் குழந்தைக்கென வாங்கியதையும் எடுத்து வைத்தாள்.

     பாவனா சிணுங்கி கொண்டேயிருக்க யஷ்தவி உடை மாற்றி தட்டி கொடுத்தவள் பருப்பு சாதத்தை குழைத்து ஊட்டினாள்.

     மனம் நிறைவாக பாவனாவின் முகமலம்பி வாயை துடைத்தாள்.

      யஷ்தவி பாவனாவிடம் கொஞ்சி கொண்டும் விளையாடிக் கொண்டுமிருக்க, சித்ராவும் பாலகுமாரும் அவர்களின் உறவை விசித்தரமாய் தான் பார்த்து வைத்தனர்.

    மாலை எழு நாற்பதைந்துக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் செல்ல வேண்டும்.

        நெல்லையின் நடுநாயகத்தில் வீடு இருப்பதால் சட்டென கிளம்ப வசதியாய் இருந்தது.

    பாவனாவை கையில் தூக்கியபடி ஹாண்ட்பேக் எடுத்து வந்தாள். பாலகுமாரோ மகளின் லக்கேஜை எடுத்து வந்தார்.

      ஆத்விக் தனது பேக்பேக்கை மாட்டியபடி வந்தவன் போனில் யாரிடமோ “நாளுக்கு காலையில வந்துடுவேன் இன்பா. வந்ததும் சொல்லறேன்” என்று பேசியபடி தனது நம்பரை தேடி அங்கு வந்தான்.

    அன்பாளனோ கூடவே வந்தவர், “ஆத்விக் அந்த பொண்ணு என்னை நம்பி தான் கட்டி வச்சிருக்கார் பாலகுமார். முதல்ல எப்படியோ… இனி நீ தான் பா அவளுக்கு எல்லாம். குழந்தைகாக தான் இந்த திருமணம் இல்லைனு சொல்லலை. அதுக்காக உன் வாழ்க்கையை யோசிக்காம விட்டுடாதே” என்றார்.

     “அப்பா… அட்வைஸ் என்று எதையும் பேசிடாதிங்க. போனமுறை சாபமிட்டு அனுப்பினிங்க. இப்ப மட்டும் என்ன?
 
     அந்த பொண்ணு என்னோட பெயின் கெஸ்டா கூடயிருக்க போறா அவ்ளோ தான். நீங்களா ஏதோ இரண்டு பேருக்கு மாலை மாற்றி திருமணம் என்று முடிவு பண்ணியதால கணவன் மனைவி ஆகிட முடியாது.” என்று சூடாக அன்பாளன் முன்பு கொடுத்த அதே வார்த்தை திருப்பி கொடுத்தான்.
  
       அன்பாளனுக்கு கலக்கமாய் போனது. இந்த யஷ்தவி பெண்ணை எப்படி நடத்துவானோ என்று.

    சித்ரா பாலகுமாரோ மகளின் வாழ்க்கை செழிக்க திருச்சந்தூர் முருகனை வேண்டி பாரத்தோடு அனுப்பினார்கள். இருவரின் பெற்றோர்கள் தான் கவலை கொண்டனர் தவிர புதுமண தம்பதிகள் இருவரும் திருமணம் ஆனால் என்ன ஆகாவிட்டால் என்ன? எங்களுக்கு பாவனா போதும் என்று இந்த விஷயத்தில் மட்டும் ஒத்த சிந்தனையோடு இருந்தனர்

        பாவனா யஷ்தவியோடு விளையாடி கொண்டிருக்க அவர்களின் இருக்கையில் ஆத்விக் பட்டும் படாமலும் தள்ளி அமர்ந்திருந்தான். சாதாரண பயணிகள் கூட பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள். ஆனால் காலையில் திருமணம் முடித்த தம்பதிகள் என்று சூடம் அடித்து கூறினாலும் நம்பயியலாத வகையில் யாரோ எவரோ என்பதாக அமர்ந்திருந்தனர்.

      இருவரின் பயணமும் சென்னையை நோக்கி ஆரம்பித்தது.
  அவர்களின் வாழ்க்கை பயணம் சென்னையில் ஆரம்பிக்குமா என்பது காலமே அறியும்.
    
-கிறுக்கல் தொடரும்.

     

     ஆத்விக்-யஷ்தவி உள்ளத்து உணர்வு கதையே இந்த பிரம்மனின் கிறுக்கல்கள். 

வாசிக்கின்ற எனது நட்புகள் கருத்தும் பகிர்ந்தால் மகிழ்ச்சி.

1 thought on “பிரம்மனின் கிறுக்கல்கள்-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *