Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-2

பிரம்மனின் கிறுக்கல்கள்-2

அத்தியாயம்-2

       இரயில் பயணமென்பதே அலாதி தான். அதுவும் தடக்தடக்கென தாலட்டும் ஓசையில் தன்னை மறந்தவர்கள் ஏராளம்.

   தன்னை மறந்தவர்களால் தான் அன்பை வைத்த நெஞ்சங்களை மறக்க இயலாது நினைக்க வைக்கும்.
   
    அப்படி தான் ஆத்விக் மனம் தன் அன்பு மனைவி சஞ்சனாவை எண்ணியது.

      ஆம் முதல் மனைவி. அப்படி தான் இப்பொழுது மாறிவிட்டது. இரண்டாவதாய் யஷ்தவி வந்து நின்று விட்டாளே.

    சஞ்சனாவை எண்ணி எண்ணியே இமை மூடியவனின் விழிக்குள் அவனை கொஞ்சலாய் கெஞ்சலாய், சீண்டலாய் காமத்தோடும் காதலோடும் நேசத்தோடும் வலம் வந்தவளின் வாழ்க்கையை நினைவுப்படுத்தி இதம் உணரும் நேரம், அவன் தோளை தீண்டினாள் யஷ்தவி.

    இமையை திறந்து பார்க்க, “நான் ரெஸ்ட் ரூம் போகணும். பாவனா தூங்கிட்டு இருக்கா. உருண்டு அசைந்தா கீழே விழுந்துடுவா. கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்க” என்றாள்.

      பெர்த் சீட் என்பதால் அருகே அமர்ந்துக் கொண்டான். அவன் பேசவில்லை என்றாலும் பார்த்துக் கொள்வானென சென்றாள்.

      சில வினாடியிலேயே வந்தவள் “தேங்க்ஸ்” என்று குழந்தையை அரவணைத்து படுத்து கொண்டாள்.

    ஆத்விக்கோ அமைதியாக மிடில் பெர்தில் படுத்து கொண்டான்.

       பாவனா இடையில் எழுந்துக்கொள்ள ஹாண்ட் பேக்கில் இருந்த பாலை கொடுக்கவும் குழந்தை சமத்தாய் குடித்து விட்டு உறங்கினாள். கூடவே யஷ்தவி ஹாண்ட்பேக்கில் வைத்தவள் ஆத்விக்கை காண அவனும் குழந்தை உறங்குவதை ஊர்ஜிதப்படுத்தி கொண்டு உறங்கினான்.

     அதிகாலை தாம்பரம் வரும் போது பாவனா விழித்து யஷ்தவி விளையாடுவதை கண்ட ஆத்விக் கண்ணை கசக்கி எழுந்து, பேக்கில் இருந்த மௌத்வாஷை எடுத்து கொப்பளித்து முகமலம்பி வந்தான்.

       எக்மோர் வந்து இறங்கும் நேரம் யஷ்தவி குழந்தையை தூக்கி கொண்டு லக்கேஜை எடுக்க முயன்றாள்.
 
     வரும் போது அப்பா கொண்டு வந்த லக்கேஜ். தற்போது எடுக்க சிரமத்தோடு எடுக்க, அவளுக்கு உறுதுணையாக ஆத்விக்கே அதனை எடுத்து கொண்டான்.

       அமைதியாக ஆத்விக்கை பின் தொடர்ந்தாள். ஓலோ புக் செய்து அதில் ஏறியமர்ந்தனர்.

      ஆட்டோ லோகேஷன் பார்த்து அது பாட்டிற்கு செல்ல போன் எடுத்தான்.

     “ரீச்சிடு சென்னை” என்று நண்பன் ஒருவனுக்கு அனுப்பினான்.

      ஆட்டோ ஒரு அப்பார்ட்மெண்டில் நுழைந்தது.
     பணம் கொடுத்து யஷ்தவி லக்கேஜை எடுக்க சென்றவன் அதனை விடுத்து குழந்தையை வாங்கிக் கொண்டான்.

    யஷ்தவியோ குழந்தையை வாங்கவும் வேறு வழியின்றி தனது லக்கேஜை எடுத்து பின் தொடர்ந்தாள்.

     12 B அப்பார்ட்மெண்டில் சாவி போட்டு திறக்க, அங்கே ஹாலில் யஷ்தவியை வரவேற்றது ஆத்விக் மற்றும் சஞ்சனாவின் திருமணப் புகைப்படமே.

    யஷ்தவிக்கு அதிர்வோ அலட்டலோ எதுவுமில்லை. ஆத்விக்கோ குழந்தையை அழைத்து சென்று “பாவனா குட்டி நம்ம வீட்டுக்கு வந்தாச்சு.” என்று மூக்கோடு மூக்கை தேய்த்தான்.

       யஷ்தவி கையில் லக்கேஜை வைத்து கொண்டு நிற்கவும், தொண்டையை செருமியவன் “இந்த வீடு இரண்டு படுக்கையறை கொண்டது. இது எங்களோடது. அது உங்க ரூம்.” என்று சுட்டிக் காட்டினான்.

    “குழந்தையை கொடுத்திங்கன்னா  குளிப்பாட்டி கொடுத்திடுவேன். டிராவல் பண்ணி வந்த அலைச்சல் இருக்கும்” என்று கேட்க, “குழந்தையை கொடுக்க மனமேயில்லாது நீட்டினான்.

      அதற்குள் நேரம் பார்த்தவன் அலுவலகம் செல்ல தனதறையிலிருந்த குளியலறைக்குள் புகுந்தான்.

      கிச்சனில் வெந்நீர் வைத்து உலாவி விட்டு குளிக்க வைத்தாள்.

    சற்று சிணுங்கினாலும் சமத்தாய் குளித்து விட்டாள் பாவனா. கவுன் போட்டு விட்டு வெளிவர ஆத்விக் குழந்தையை தூக்கி வாசம் நுகர்ந்து “நான் ஆபிஸ் போயிட்டு வந்துடறேன் டா பாவனா குட்டி” என்று பையை எடுத்து கொண்டு ஓடினான்.

      செரலாக் ஊட்டி விட்டு குழந்தை பதினென்று மணிக்கு உறங்கவும், வீட்டை ஆராய்ந்தாள்.

       வாழ்க்கை என்பது எத்தகைய விசித்திரம். யாரோ ஒருவனின் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பது.

      முதலில் ஹாலும் கிச்சனும் சீர்ப்படுத்தி விட்டு தனதறையாக ஆத்விக் சுட்டிக்காட்டிய இடத்தையும் சுத்தப்படுத்தினாள்.

      அதன் பின் குளித்து விட்டு மதியம் சாப்பிட சாதம் வடித்தாள். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது நினைவு வந்தது.

     ஆத்விக் ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஏன் அவனுமே காலை உணவை மறந்திருந்தான்.

     ரசமும் ப்ரிட்ஜிலிருந்த ஊறுகாயும் வைத்து சாப்பிட்டவள் குழந்தைக்கும் ரச சாதமும், கொடுத்து விளையாடி பிறகு வாழைப்பழத்தை மசித்து கொடுத்தாள்.

     மீண்டும் மூன்று மணியளவில் உறங்க செய்த பாவனாவை தனதறையில் கிடத்தி சுற்றிலும் தலையணையை வைத்து விட்டு ஆத்விக் அறையை சுத்தப்படுத்தினாள்.

     பீரோ முழுவதும் சந்தனா உடையும் சுவரெங்கும் சந்தானா ஆத்விக் புகைப்படமும் காட்சியளிக்க, புகைப்படத்தை துடைத்து முடித்தாள்.

       அந்த கணம் சந்தனா யஷ்தவி சந்திப்பே நினைக்காமல் இருக்க முடியவில்லை.

      கொரானா நோயாளிகள் பிரிவில் கொரானா ரிசல்ட் எடுக்க வந்துவிட்டு காத்திருக்க ஆரம்பித்த நாட்கள்.

2021 வருடமது.

        சந்தனா மாஸ்க் போட்டுவிட்டு சோர்வாய் அமர்ந்திருந்த நேரம். தனக்கும் கொரானா டெஸ்ட் எடுத்துவிட்டு காத்திருக்க, சந்தனா கைகளை நிமிடத்திற்கு ஒருமுறை பிடித்து “கூல் மா. டென்ஷன் ஆகாதே.” என்று ஆத்விக் கூறிய போது கண்டது.

     அந்த நேரம் ஆத்விகை மணக்க போகின்றாய் என்றால் ‘பைத்தியமா நீ அவர் கல்யாணம் ஆனவர். நானும் கல்யாணம் ஆனவள்’ என்று விசித்திரமாய் நோக்கியிருப்பாள்.

   இன்றோ அப்படி தான் ஆகிவிட்டது. சந்தனாவிற்கு கொரானா பாஸிடிவ் என்றதும் தனியாக அழைத்து சென்றதும் அழுதபடி சென்றாள்.

      ஆனால் இப்படி ஆத்விக்கை அழவைத்து ஒரேடியாய் சென்றிடுவாளென அறிந்திருக்க மாட்டாள். 

      ஆத்விக் சந்தனா வாழ்க்கை தன் வாழ்வில் இடைப்புகுந்து பாதிக்குமென கனவிலும் எண்ணியதில்லை. ஆனால் அது தான் நடந்தது.

     சந்தனாவின் உடையை யஷ்தவி அழகாய் மடித்து வைத்து மெத்தையை சுத்தப்படுத்தி வீட்டை பெருக்கி துடைத்து விட்டாள்.

      இரவு என்ன செய்ய என்று ஒவ்வொரு பாத்திரடப்பாவாக திறந்து திறந்து பார்த்தாள். ரவை பச்சரிசி சிறிதளவு இருந்தது.  இரவென்றதால் பச்சரிசி ரவை ஊறவைத்து ரவா தோசை வார்க்க முடிவெடுத்தவளாக அதற்கு தேவையானதை எடுத்து தனியாக வைத்து கொண்டாள்.

    பாவனா தற்போது தான் தத்தி தத்தி நடைபயில யஷ்தவி காலருகே வந்து நின்றாள்.

     “செல்லக்குட்டி அம்மாவை தேடி வந்துட்டிங்களா.” என்று கொஞ்சியபடி தூக்கினாள்.

     பாவனாவை தூக்கியப் பின் நேரம் போனதே தெரியவில்லை. அழைப்பு மணி மெல்லிசையாய் கேட்கும் வரை.

    அதன்பின்னே கதவை திறந்து விட்டு நகர்ந்தாள். “பாவனா குட்டி இங்க பாருங்க” என்று ஒரு வாக்கரை வாங்கி வந்திருந்தான் ஆத்விக். நாளை வாங்கலாமென எண்ணியது அதற்குள் ஆத்விக் வாங்கி வந்ததில் ஆச்சரியம்.

   குழந்தையை அதில் அமர வைக்க, அது மகிழ்ச்சியை பறைச்சாற்றி அதில் உள்ள வண்ண வண்ண பீட்ஸை கண்டு தொட்டு விளையாடியது.

    பச்சரிசி ரவையை ஊறவைத்து வெளிவர, “ஏன் இப்படி பிகேவ் பண்ணற. நான் உன்னை என் பிரெண்டா ட்ரீட் பண்ண பார்த்தேன். ஆனா நீ எங்கப்பாவோட சீப் பேச்சை கேட்டு என் மனைவியா வாழ ஆசைப்படற” என்றான் கோபமாக.

      அறையை சுட்டிக்காட்டி அவன் பேசவும் புரியாதவளா? யஷ்தவியும் திருமணமானவள் தானே.

     “நான் உங்க ரூமை க்ளீன் பண்ணியதற்கு ஒரே காரணம் பாவனா அங்க விளையாடுவா. எல்லா இடமும் சுத்தமா இருக்கணும். குழந்தை வளர வளர ஒட்டு பிறக்கும்னு சொல்வாங்க. அதாவது கண்டதையும் வாயில வைக்கும். உங்க ரூம் அப்படியே இருந்தா பாவனாவுக்கு நல்லதில்லைனு நினைத்து பண்ணியது.

   உங்கப்பா பேச்சை கேட்டு நான் எதுவும் பண்ணலை. தாலிகட்டறதுக்கு முன்னவே எனக்கு பாவனாவை தாங்கனு கேட்டதால தான் திருமணத்துக்கு சம்மதிச்சேன். மற்றபடி உங்களோட மறுவாழ்வு வாழவோ, இல்லை உங்களுக்கு மறுமணம் இனிக்கவோ என்ற எண்ணங்களை சுமந்து இல்லை.” என்றாள்.

    அவள் பேசிவிட்டு சென்றதும் தன் முட்டாள் தனம் புரிய தலைகுனிந்து அறைக்குள் சென்றான்.

       அவளாக எண்ணாத விஷயம் இவனாக போட்டு குழப்பி பேசியது தவறு தானே.

    வாக்கரில் குழந்தையை பார்த்து வந்தவன் மெதுவாக “ஐ அம் ரியலி சாரி. நீங்க முதல்லயே தெளிவா சொன்னிங்க. நான் தான் அப்பாவோட போதனையோனு தவறுதலா நினைச்சிட்டேன்.

   எங்கப்பானு இல்லை. உங்க வீட்லையும் பேசியிருப்பாங்கனு தான்.” என்று இழுத்தான்.

     “நான் ரவா தோசைக்கு ஊற வைத்திருக்கேன். சாப்பிடறிங்களா? இல்லை வெளியே சாப்பிட போறிங்களா?” என்றாள்.

      “சாப்பிடறேன்.. சுடுங்க.” என்றான் மொட்டையாக. அதன் பின்னே  காலையில மதியம் என்ன சாப்பிட்டு இருப்பா? நானே காலை டிபன் மறந்து இங்கிருந்து ஓடிட்டேன். மதியம் பிரெண்ட் சாப்பிட கூப்பிட்டதும் தான் பசியே நினைவு வந்தது. இவ என்ன சாப்பிட்டாளோ? என்று “நீங்க சாப்பிட்டிங்களா. சாரி மதியம் குழந்தையை வச்சிட்டு இங்க ஹோட்டலும் பக்கத்துல இல்லையே”

    “ரசம் வச்சி சாதம் ஆக்கி சாப்பிட்டேன் ஊறுகாய் இருந்தது. நானே நாளையில இருந்து எனக்கு மளிகை சாமான் வாங்கிக்கறேன்னு சொல்ல வந்தேன். பட் நான் சமைக்கிறது நீங்க சாப்பிடுவேன்னு சொன்னா மளிகை நீங்க வாங்கிடுங்க. நான் சமைச்சி கொடுப்பதால அதுக்கு சம்பளமா சாப்பிட்டுக்கிறேன்.” என்று கூறி ரவாதோசையை இஞ்சி தேங்காய் சட்னியை நீட்டினாள்.

     அதனை வாங்கி கொண்டு “மச் பெட்டர். எனக்கும் வெளியே தினமும் சாப்பிடுவது கஷ்டம் தான். டீல் ஓகே” என்றான்.

      இரவு நேரமாக குழந்தை பாவனா ஆத்விக் அறையிலேயே இருக்க எப்படி வாங்குவதென விழித்தாள்.

     ஏனென்றால் குழந்தை பாவனா  அவளுடையது இல்லையே.

-கிறுக்கல்கள் தொடரும்.

-பிரவீணா தங்கராஜ் 

 

1 thought on “பிரம்மனின் கிறுக்கல்கள்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *