அத்தியாயம்-4
காலையில் எழுந்து ஆத்விக் அறையை பார்க்க ஆவலாய் சென்றாள். ஆனால் அவன் ஒரு ஆண்மகன். தான் எப்படி? என்று தவிர்த்து கிச்சனில் சமைக்க உருட்டினாள்.
நேற்றே பருப்பும் கொண்டைக் கடலையும் இருக்க கொண்டைக்கடலை ஊறப்போட்டு இருந்தாள். அதனால் பருப்பு குழம்பு வைத்து, நேற்றைய ரசமும், கொண்டைக்கடலை பொரியலும் செய்து வைத்தாள். ரவாதோசையே மீண்டும் ஊற வைத்து தேங்காய் சட்னியே திரும்ப வைத்தாள். வீட்டில் அவை தான் இருந்தது.
நீண்ட நாளாக எதுவும் வாங்கவில்லையென்று புரிந்தது.
குக்கரின் சத்தத்தில் பாவனா முறுக்கிட, அவளை தூக்கி கொண்டு வெளிவந்தான்.
“சத்தம் கேட்டுடுச்சா. அச்சோ நான் உங்களுக்கு டிபன் கட்ட தான் எழுந்தேன். குழந்தை எழுந்தா எதுவும் செய்ய முடியாது” என்று கூறினாள்.
“இட்ஸ் ஓகே மணி செவன்தேர்டி இதுக்கு மேல தூங்க முடியாது ஆபிஸ் கிளம்பணும். அப்பறம் அது வந்து…” என்று தயங்கினான்.
“தயங்காம பேசுங்க. என்னோட பெர்சனல்ல நீங்க வராததால், உங்களோட பெர்சனல்ல நான் வரமாட்டேன். அதை தவிர பொதுவா பேசலாம். முக்கியமா பாவனா பத்தி எதுனாலும் உடனே சொல்லுங்க” என்றாள்.
“இல்லை எதாவது இன்பார்ம் பண்ணணும்னா என்னிடம் உங்க நம்பர் இல்லை.” என்று தயங்கினான்.
“உங்களுக்கு நம்பரை செண்ட் பண்ணிட்டேன். பிறகு சேவ் பண்ணிக்கோங்க” என்று போனை எடுத்து ஒரு ரிங்கை கொடுத்துவிட்டு டீயை சூடுப்படுத்த சென்றாள்.
‘யஷ்தவி’ என்று பதிவு செய்து விட்டு குளிக்க சென்றான். குழந்தையை ஒரு கையால் தூக்கி கொண்டே சூடுபடுத்திய டீயை ஆத்விக் அறையில் வைத்தாள்.
அடுத்து ஆற்றி வைத்த பாலை புகட்டினாள்.
சாப்பிட உணவு மேஜையில் வந்தவனிடம் “இதுவரை பவுடர் பால் தான் கலந்தேன். இங்க மளிகைக் கடை எல்லாம் எங்கயிருக்கு?” என்று கேட்டாள்.
“இங்கிருந்து மெயிண்கேட் தாண்டி வலது பக்கம் டிபார்ட்மெண்ட் கடை இருக்கு. பக்கத்துலயே காய்கறி எல்லாமே கிடைக்கும். ஹோட்டல், மற்ற கடை தான் தூரமா இருக்கும். நீங்களே ஒரு முறை போனா தெரிஞ்சிடும். பாவனாவை கூட்டிட்டு எப்படி போவிங்க?” என்று கேட்டான்.
“பழகிப்பேன்” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து கொண்டாள்.
ஆத்விக் பாவனாவை கொஞ்சியபடி வாக்கரில் வைத்து விட்டு ஷூ மாற்றி சென்றான்.
அங்கு ஒருத்தி இருப்பதை அவன் அறிந்தாலும் விடைப்பெற கூறுவதற்கு தயக்கம் இருந்தது. என்னவொரு ஆறுதல் அதனை யஷ்தவியும் ஆசைப்படவில்லை.
ஆத்விக் சென்றதும் வீட்டு வேலையை முடித்து குழந்தையை குளிப்பாட்டி, ஜவ்வாது வாசனையும் கண்மை பொட்டும் என்று பாவனாவை கையில் தூக்கி கொண்டு சென்றாள்.
டிபார்ட்மெண்ட் கடை என்பதால் அனைத்தும் வாங்கி டோர் டெவிவெரி கொடுத்து விட்டு வந்தாள். காய்கறி பழங்கள் மட்டும் கையிலே தூக்கி சுமந்தவளாக நடந்தாள்.
வீட்டுக்கு வர மதியம் ஆனது. பதினொன்றுக்கு சென்று பனிரெண்டு முப்பது ஆகவும் பாவனாவுக்கு பருப்பை பிசைந்து நெய் ஊற்றி ஊட்டினாள்.
மாலை சித்ரா கால் பண்ணி பேசினார். இடம் பிடித்ததா? பாவனா தனியாக சமாளிக்க முடிகிறதா? மாப்பிள்ளை பேசினாரா? என்று நிறைய கேள்விகள் கேட்டார்.
அனைத்திற்கும் ‘ம்ம்’ என்ற பதிலை கொடுத்து நின்றாள்.
இரண்டு தினம் கழித்து வருவதாக கூறி வைத்தனர். பாவனாவிடம் விளையாடியபடி “அம்மா சொல்லு அம்மா சொல்லு. அம்மா.” என்று கொஞ்சிக் கொண்டிருக்க, ஆத்விக் கதவை திறந்து வந்தான். வெளிகதவை அவன் வரும் நேரமென வெறுமென சாற்றியிருந்தாள்.
முகமலம்பி உடைமாற்றி வந்தவன் பாவனாவை தூக்கி கொண்டான். சட்டென பறித்த நிலையில் யஷ்தவி தவித்தாள்.
ஆனால் இதே நிலை தொடர்ந்தது. என்ன மூன்று நாட்களுக்கு பின் யஷ்தவி அறைக்குள் பாவனாவை அரவணைத்து கொண்டாள்.
இம்முறை தனியாக தூங்க ஆத்விக் தவித்து விட்டான். அவனின் நினைவுகள் சந்தனா கூறிய கடைசி மகிழ்ச்சியான செய்தியிலேயே நிலைத்தது.
‘ஆத்விக் நான் கன்சீவா இருக்கேன்.’ என்ற ஒன்று அவனை இன்பக்கடலில் ஆழ்த்தியது. ஆனால் அடுத்த இரண்டு வாரத்தில் கொரனா டெஸ்ட் எடுக்க வந்த அரசாங்க பணியாட்களால் இருவரும் சென்று தான் மட்டும் தனியாக திரும்பி வருவோமென கனவிலும் நினைக்கவில்லை அவன்.
அந்த நோய் வேடிக்கை காட்டி விட்டு சென்றிடுமென எண்ணினான். ஆனால் உலகத்தையே உலக்கியது தன்னையும் உலுக்கி எடுத்துவிட்டு சென்றது.
மற்றவர்களின் பார்வைக்கு மனைவியை இழந்தவன் மட்டுமே. அவனுக்கு மட்டும் தெரியும் தன்னவளோடு தன் குழந்தையும் இறந்து விட்டதென.
பாவனாவை பார்க்கும் பொழுது மகளை மீட்டி கொண்டு வந்த உணர்வோடு தன் வெறுமையான பக்கங்களுக்கு இதமான கவிதையாய் இருந்தாள்.
என்ன இந்த யஷ்தவியை மணந்தது தான் பிடிக்காமல் நடந்தது. ஆனால் அவள் இல்லாமலும் குழந்தையை வளர்ப்பது கடினமோ என்று மனதில் உதிக்காமல் இல்லை. என்ன தான் கேர்டேக்கரை வைத்தாலும் இந்த நிம்மதி உணர முடியாது.
நல்லவேளை அப்பாவை போல தன்னிடம் வாழ ஆசைக் கொள்ளவில்லை. அவளுக்கும் அவள் கணவனை மறந்து வாழ மனமில்லை. அதனால் நல்ல நண்பர்களாய் வாழ்வை தொடர்ந்து கடத்த வேண்டும்.
இவன் இவ்வாறு எண்ண அங்கு இவர்களை பெற்றவர்களோ ரயில் வந்து கொண்டிருந்தனர்.
இப்படி தனிதனி அறையில் இருப்பதை அறிந்தால் மணமுடித்த நிம்மதியை தரமட்டமாக உடைப்பதாக ஆகாதா?
அடுத்த நாள் காலையில் வந்திறங்கியவர்களை கண்டு அதிர்ச்சியாய் வரவேற்றாள் யஷ்தவி.
“என்னம்மா சமைச்சிட்டு இருக்கியா?” என்று அன்பாளன் கேட்க “ஆமா அங்கிள்” என்று அடுப்படியை நோக்கி ஓடினாள்.
வேகமாக வந்து சொம்பில் தண்ணீரை எடுத்து கொடுத்து பருக கொடுத்தாள்.
தாய் தந்தையரிடமும் தண்ணீரை கொடுக்க, “மாப்பிள்ளை எங்க?” என்றதும் கூற தயங்கினாள்.
யஷ்தவியை தவிக்க விடாமல் அவனே தலையை துவட்டி ஐயர்ன் செய்த சட்டையோடு வந்தான்.
“வாங்க” என்று பொதுவாய் அழைத்து விட்டு யஷ்தவியை பார்த்தான்.
“டீ அங்க இருக்குங்க.” என்று மரியாதை நிமித்தமாய் அவள் பதில் தர, சித்ராவோ ஆனந்தமாய் அந்த சாதாரண பேச்சிலேயே மகிழ்ந்தார்.
அன்பாளன் கூட சற்றே நிம்மதி அடைந்தார். பாலகுமாரோ வாக்கனை பார்த்து “பரவாயில்லையே குழந்தையை இதுல போட்டுட்டு சமைப்பியா மா” என்று கேட்டார்.
யஷ்தவியிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக காபி கொண்டு வந்து மூவருக்கும் நீட்டினாள்.
உன்னோட சுடிதார் புடவை நைட்டி எல்லாம் கொண்டு வந்தாச்சு. தேவைப்பட்டா புதுசு வாங்க அப்பா நெல் வித்த பணம் எடுத்து வந்துட்டார். உனக்கு தேவையானதை வாங்க.” என்று சித்ரா கூற, யஷ்தவியோ சேலை நுனியை இடையில் சொறுகி டிபனை எடுத்து வந்து உணவு மேஜையில் வைத்து சாப்பிட தயார் செய்தாள்.
அதற்குள் பாலகுமார் குளித்து வர, சித்ரா மகளின் முகத்தினில் ஏதேனும் தென்படுகின்றதா என்று படிக்க ஆவலாய் இருந்தார். உண்மை பொய்யை முகம் காட்டி விடுமல்லவா. அகத்தின்அழகு முகத்தில் தெரியுமே. மகள் வாழும் முறையை அறிய தவித்தார்.
யஷ்தவியோ ஒரு சின்ன அசைவில் கூட தனது இன்பம் துன்பம் என்று எதையும் காட்டாமல் சரிவிகிதத்தில் சமார்த்தியமாய் இருந்தாள்.
ஆத்விக் அவசரமாய் கிளம்பி சாப்பிட ஆரம்பித்தான். ஷூ மாற்றி பாவனாவை முத்தமிட்டு “வர்றேன்ங்க” என்று மாமனார் மாமியாரிடம் கூறிவிட்டு “போயிட்டு வர்றேன்பா” என்று அன்பாளனிடம் கூறியபடி ஓடிவிட்டான்.
தனியாக இனி சமாளிப்பது யஷ்தவியின் சாமர்த்தியம்.
“எங்க மேல கோபமா யஷ்தவி?” என்று கேட்டார் சித்ரா.
“இல்லை மா. எனக்கு யாரு மேலயும் கோபமில்லை.” என்று முடித்து கொண்டாள்.
“வருணோட அக்கா செண்பா வந்தா. உனக்கு கல்யாணம் பண்ணிட்டேன் சொன்னதும் போயிட்டா.” என்றதும் யஷ்தவி செய்கை அப்படியே இரண்டு நொடி ஸ்தம்பித்தது. பிறகு தன்னை சமன்படுத்திக் கொண்டு “என்னோட கல்யாணபுடவையும் அதுக்குள்ள வருண் கட்டின தாலியும் இருக்கு. அதை அவங்களிடம் கொடுத்திடுங்க.” என்று சலனமின்றி கூறினாள்.
வரதட்சனையாக எத்தனையோ பொய் பேசி வாங்கியவள். தன் மீது அபாண்டமாக பழி கூறி வருணிடம் சண்டைக்கு தீ ஊற்றியவள்.
வருண் இறந்தப்பின் நாதியற்று இருப்பது யஷ்தவி அறிந்ததே. இனி தன்னிடம் என்ன சொல்லி ஒப்பேத்தி காசு பிடுங்குவாள். வருண் அணிந்தவை இருக்கும் வரை வந்து செல்ல வாய்ப்புண்டு என்று அதனை கொடுக்க கூறிவிட்டாள்.
அன்பாளனோ யஷ்தவி அறையில் உறங்கவும் துணியெடுக்க திணறி ஆத்விக் அறையிலேயே விழித்து நின்றாள். பிறகே தாய் கொண்டு வந்த உடையை கண்டு சுடிதாரை எடுத்து அவனின் குளியலறைக்குள் புகுந்தாள்.
ஆத்விக் இல்லாத நேரம் அவனின் அறையை பயன்படுத்தினால் அவன் வேறு என்ன செய்வானோ என்று பயந்தாள். ஆனாலும் அன்பாளன் அங்கிருக்க தனக்கு கொடுக்கப்பட்ட இடத்திற்கும் செல்ல இயலாது. அப்படி உடையெடுக்க சென்றால் தாங்கள் தனி தனி அறையில் இருப்பதை காட்டி கொடுத்தது போல ஆகிடும். ஆத்விக் அவனாக அப்படி தான் இருப்போம் என்று கூறுவது வேறு. தான் ஏதேனும் செய்து அண்டி இருக்கும் அவனுக்கு தொந்தரவோ தந்தை மகனுக்கு சண்டையோ மூட்டவிரும்பாது தவிர்த்தாள்.
ஆனால் அவளுக்கு கொடுக்கப்பட்ட அறையை யோசித்தாளே தவிர ஹாலிலும் ஆத்விக் அறையிலும் இருந்த சந்தனா புகைப்படத்தை அவள் கண்டுக்கொள்ளவில்லை.
மாலை அன்பாளனே வந்து, “ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. நீ என் பையனுக்காக யோசித்தது. ஆமா மா. புரியலையா. எங்க உனக்கு அவன் தனியா கொடுத்த அறைக்கு வந்தா நீங்க தனிதனியா இருப்பது எங்களுக்கு தெரிந்திடும்னு யோசித்த. ஆனா பாரு ஹால்ல இருந்த ஆத்விக்-சந்தனா போட்டோவை இன்னமும் எடுக்காம நீ பாட்டுக்கு இருப்பதிலேயே உங்க டீலிங் வாழ்க்கை எங்களுக்கு புரியுது.
அவன் நிச்சயம் எடுத்து தூர எறிய மாட்டான். நீயும் எடுக்க மாட்ட. ஆனா சந்தனா போட்டோ இனி இங்க இருந்தா அது தப்புமா” என்று அகற்றினார்.
மறுக்க வாயெடுக்க முடியாது யஷ்தவி இருந்தாள். சித்ரா பாலகுமாரும் வந்ததிலிருந்து உருத்திய புகைப்படத்தை எடுத்ததும் நிம்மதியானார்கள்.
ஆத்விக் மாலை வந்ததும் எப்பொழுதும் கதவை திறந்ததும் காணும் சந்தனாவும் அவனும் சேர்ந்த புகைப்படம் இல்லாமல் யஷ்தவி அவனோடு இருக்கும் புகைப்படம் இருக்க ஆக்ரோஷமாய் கத்தினான்.
-கிறுக்கல்கள் தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
nice!!!