Skip to content
Home » பிரியமானவளின் நேசன் 10

பிரியமானவளின் நேசன் 10

நேசன் 10

Thank you for reading this post, don't forget to subscribe!

பிரியவாகினி தான் வடிவமைத்தக் காணொளியை தனது அலுவலக அறையில் ஒளிபரப்ப அனைவரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நேசனும் ருத்ராவின் கைகளை கோர்த்து அமர்ந்து இருந்தான்.


பசுமையைப் பூசி செழிப்பான அழகை வெளிப்படுத்தும் அடர்ந்த அடவியின் எத்திசையும் மரங்களும் செடிக்கொடிகளும் நீரோடைகளும் இருக்க அதன் ஒவ்வொரு பகுதியிலும் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு மற்றும் ஐந்தறிவு உயிரினங்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்திருந்தது.

வானிலிருந்து பார்க்க வனமகள் வெட்கங்கொண்டு தலைக் குனிந்து தன் பச்சைக் கூந்தலை தெரியும் படி பரவ விட்டிருப்பதாகத் தான் தோன்றும்.

பரந்து விரிந்தப் பச்சைக் கூந்தலுக்குச் செழிப்பைத் தர வெண் அமுதமாக பாயும் அருவிகளின் தவ புதல்வி ஆறுகளின் ஓரத்தில் தாகத்தைத் தணிக்க நீர் அருந்த நிற்கும் அஃறிணை இனங்கள்.

ஆற்றினை ஒட்டியுள்ள மரங்களின் மீது வாழும் பட்சிகளோ தங்கள் குஞ்சுகளுக்குப் பறக்கக் கத்துக் கொடுத்துக் கொண்டிருந்தன.

பச்சை நிறப் பொன்வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரம் இசைத்து வலம் வந்தன வனத்தை.


உப்பிட்டவரின் உன்னத நண்பன், மாறாப்பற்றுள்ள மன்னன், விசுவாசத்திற்கு பெயர் போன விசுவாசத்தின் வேந்தன்கள், நாலு கால் ஜீவனின் இனக் கூட்டத்தில் இருக்கும் ஞமலிகள் மனிதனைப் போன்றே தங்களுக்குள் பெயர் சூட்டி அழைக்கின்றன.

பிறந்தச் சில நாட்களேயான குட்டி மற்றும் மூத்த ஞாளிகளைத் தங்களது வசிப்பிடத்திலே விட்டுவிட்டு இளம் இரத்தங்கள் மட்டும் வேட்டையாடச் செல்கின்றன.

நன்றியுள்ள நாயகன்கள் தங்கள் இரையை இலக்குச் செய்து வேட்டையாடுவது இல்லை, மாறாக ஓடியே வேட்டையாடும் திறன் கொண்டது. வேட்டையாட முன்னேச் செல்லும் ஞமலிகளின் நாயகனை ராக்ஸி என்று பெயரிட்டு அழைக்கின்றன.

முதல் நாள் வேட்டைக்கான நேரம் தொடங்கியது.


நீரோடை அருகில் சிங்காரா மானினங்கள் நீர் அருந்தி விட்டு சமதளப் புல்வெளியில் இளைப்பாறுவதைக் காண்கின்றன ராக்ஸி அண்ட் கோ.

சிவப்பும் அல்லாத பழுப்பும் அல்லாத இரண்டும் கலந்த வண்ணத்தில் இருக்கும் சிறுநவ்விகளின் தோலானது மிகவும் மெல்லியத் தன்மையை உடையது.


முதலில் சிங்காராக்களின் கவனத்தைக் கலைத்து அவைகள் தப்பிச் செல்லும் போது ஒன்றை மட்டும் குறி வைத்துச் சுற்றி வளைத்து வேட்டையாடுவதே ராக்ஸி அண்ட் கோ-வின் திட்டம்.

இவர்களின் வேட்டைக்கான வெற்றிக்கு முக்கியக் காரணம் ஒற்றுமை, திட்டமிடல், செயல்திறன். மேலும் ஞமலிகளின் தனிப்பட்ட குணாதிசயங்களும் இதற்குக் காரணமாகும்.

ஞமலிகளின் நாசி துவாரத்தில் வோமரோனாசல் எனப்படும் பகுதியும் மில்லியன் எண்ணிக்கையில் ஆல்ஃபாக்டரி ரெசப்டர்ஸூம் இருப்பதால் முகரும் நுண் சக்தி அதிகமாக இருக்கும். இதனால் இரையை எளிதில் கண்டுப்பிடிக்க முடியும்.


வேகமாக ஓடும் போது இரத்த அணுக்கள் தேவையான சக்திக்கு ஏற்ப ஆக்ஸிஜனை வழங்குவதால் தசைப்பிடிப்பும் ஏற்படாது. அதனால் ராக்ஸி அண்ட் கோ வேகத்தை குறைக்காமல் சிங்காராக்களின் வேகத்திற்கு ஈடுக் கொடுத்து ஓடி வேட்டையாடும்.

பொதுவாக இந்த சிறுநவ்விகள் 9 மீட்டர் நீளத்தை தாண்டியும் 3 மீட்டர் உயரமாக குதித்தும் தொடர்ந்து ஓடக் கூடிய வல்லமைக் கொண்டவை.


ஒரு சிறு ஆண் மானைக் குறி வைத்து ராக்ஸி முன்னேறிச் செல்ல அதனை பின்தொடர்ந்து வலது, இடது, இரையின் முன் பக்கம் என்று படர்ந்து சுற்றி வளைத்து எங்கும் தப்பிச்செல்ல முடியாத தாக்குதல் சூழல் நிலைக்குக் கொண்டு வந்து அதன் கழுத்தைக் கடித்து வேட்டையாடுவதே திட்டம்.

ஒரு இரையையே அனைத்து ஞமலிகளும் பின் தொடர்ந்து வேட்டையாடுகின்றன. நீண்ட தூரம் ஓடியும் இரை பிடிபடாமல் ஓட அடவியின் அரிமாக்களின் எல்லைக்குள் வந்துவிட்டதை மிக தாமதமாக உணருகின்றன ஞமலிகள்.


கேட்டிருந்த சலசலப்புச் சத்தத்தில் அரிமா வந்து எட்டி பார்த்திட ராக்ஸி உடனடியாக தன் ஓட்டத்தை நிறுத்திப் பின்வாங்கி நிற்கிறது. அதனைத் தொடர்ந்த ஏனைய ஞாளிகளும் நிற்கின்றன. இந்த நிமிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிங்காரா தப்பியோடியிருந்தது.

இரை தவறவிட்ட ஏமாற்றத்துடன் ஞாளிகள் சோர்வுடன் திரும்ப அங்கு அடிப்பட்ட நிலையில் மூக்குக்கொம்பன் நிற்பதை ராக்ஸிப் பார்க்கிறது.

ஐந்தடுக்குகளைக் கொண்ட தடித்தத் தோலும் பெரிய உருவமும் கொண்ட கொந்தளமதை அரிமாக்களின் பற்களே ஊடுருவிடாது. ஞமலிகள் எம்மாத்திரம்?

இருப்பினும் பசி…

முயற்சி செய்து தான் பாரேன் என்று உந்த ராக்ஸி மூக்குக்கொம்பனை உரசிப்பார்த்திட அருகில் செல்ல தனதுக் கொம்பால் காயப்படுத்தப் பார்த்தது ‘கொந்தளமது’ கொந்தளித்து.

உயிர் பயத்தில் மீண்டும் ஏமாற்றத்துடனும் பசியுடனும் தாகம் தீர்க்க நீரருந்த நீரோடைப்பக்கம் வந்த ஞமலிகளுக்கு இன்ப அதிர்ச்சி. துரத்தி வந்த சிறுமானை அரிமாவின் வருகையில் தவறவிட்டு ஏமாற்றமடைந்த அதே சிறுமான் தன் கூட்டத்தில் இணைய வழித் தெரியாது நீரோடையில் நீரருந்தி நிற்க மறுபடியும் ஆரம்பமாகியது ஞமலிகளின் வேட்டை.

சிறுமானோ அச்சத்தில் துள்ளிக்குதித்து ஓடத் துரத்தியது ராக்ஸி அண்ட் கோ. பிடிப்பட்ட மானின் கந்தரத்தைக் கவ்விய ஞமலிகள் அதன் துடிப்பை நிறுத்த முயற்சித்தன. உழைப்பின் பரிசுக் கிடைத்தது.

ஆனால்…


இந்த வேட்டையாடலை மரத்தின் மேல் நின்று பார்த்த மந்திக் கூட்டம் கூச்சலிட்டது ஆபத்து பின்னே வருகிறதென. அதனை உணராத ஞமலிகள் சிங்காரவை உண்ண ஆரம்பித்தன.


இரையை வேட்டையாடுவதுடன் முடிந்துவிடவில்லை வேட்டை. வேட்டையாடியதைத் திருடுவதற்கே திருடர்கள் உண்டு.


உறுமலின் சத்தத்தில் திரும்பிய ஞமலிகள் அதிர்ந்துப் போய் உயிரற்ற மானைக் காப்பாற்ற எண்ணி அதனை இழுத்துக் கொண்டு செல்ல, உறுமலுக்கு சொந்தக்காரனான தூய்மை பணிக்கு பெயர் போனவன், சந்தர்ப்பவாத திருடன் ‘என்புதின்றி’ இரையைப் பறித்துக் கொண்டான்.

தாக்க வந்த ராக்ஸியின் நண்பனுக்கு காயத்தைப் பரிசளித்தான்.


கிட்டத்தட்ட உயிர்க் கொடுத்து பலபேரின் உழைப்பின் பயனாய் கிட்டிய அருவிருந்து நூலிழையில் பறிக்கப்பட்டுப் பட்டினியுடனே இருப்பிடம் சென்றன ஞமலிகள்.

தங்கள் கூட்டத்தினரைக் கண்டதும் ஆர்வமுடனும் பசியுடனும் ஓடி வந்த முதிய ஞாளிகளும் இளம் ஞமலிகளும் ஏமாற்றமடைந்தன.

சின்னஞ்சிறு ஞமலிகள் தாய் ஞமலியிடம் பாலமுதை உறிஞ்ச பசியில் இருந்த தாய் ஞமலியின் விழிகள் கண்ணீரை நிறைத்தன.


அருகில் இருக்கும் நீரோடையில் நீரருந்தி மறுநாள் காலையில் மீண்டும் வேட்டைக்கான பயணத்தைத் தொடங்குகின்றன ராக்ஸி அண்ட் கோ. இம்முறை பசியின் தீவிரத்தில் முன்பை விட வேகமாகச் செயல்பட்டு ஒரு பெண் சிங்காரா மானை வீழ்த்திய ஞமலிகள் அதை அவசரமாக உண்ணத் தொடங்கின.

ஏனெனில் மறுவாய்ப்புக்கு இங்கு இடமே இல்லை. ஆரம்பிக்கும் முன்னரே வேட்டையோட முடிவு எழுதப்பட்டிருக்கும்.


திறமையான வேட்டைகாரன் பிறப்பதில்லை உருவாக்கப்படனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் தன்னை உருவாக்கிக்கனும்.


முதலில் இரையின் வயிற்றுப்பகுதியையும் மார்புப்பகுதியையும் கடித்து உண்கின்றன. ஏனெனில் அதிலிருந்து வரும் குருதி வாடை ஏனைய வேட்டை விருந்தினரை வரவேற்க காரணமாக அமைந்து விடும்.


திருப்தியுடன் உண்டு முடித்த ஞமலிகள் மீதியிருந்த எலும்புகளையும் கால்கள் மற்றும் எச்சங்களையும் தனது வாயில் பிடித்துக்கொண்டு மீண்டும் ஓட்டம் பிடித்து தங்கள் இருப்பிடம் வந்து சேர்ப்பித்தன.


தாய் ஞமலி குட்டிகளுக்கென்று தான் உண்டதைக் கொஞ்சம் உமிழ்ந்து வெளியேற்றி அதைக் குட்டிகளுக்கு ஊட்டுகின்றன. ஒவ்வொரு நாளும் இது தொடரும்.


சில ஞமலிகள் திடீரென தண்ணீரைக் கண்டு பயந்து ஓடி என்ன செய்வதென்றே அறியாது அருகே வரும் ஞமலிகளை சினத்துடன் கையாள்கின்றன. இப்படியான வேளைகளில் மூத்த ஞமலிகள் இவற்றை ஒதுக்கி வைத்து இடம் மாறுகின்றன.

அவைகளோ சில நாட்கள் ஊனின்றி உறக்கமின்றி உமிர்நீரை வெளியேற்றி உயிரையும் விடுகின்றன.


வசந்த காலத்தில் வசந்தமாக இருக்கும் விபினம் வெயில் காலத்திலோ வெம்மையுடன் நீரின்றி வறட்சியாக மாறி அஃறிணைகளுக்கு பெறும் பஞ்சத்தை தருவிக்கிறது.


நாட்கள் செல்லச்செல்ல ஒரு பஞ்ச காலத்தில் நீருக்காக அலைந்துத் திரிந்து வந்த ஞமலிகள் எல்லையைக் கடந்து வேறு இனங்கள் வாழும் பகுதியை ஒட்டியுள்ள இடத்திற்கு வந்துச் சேர்ந்திருந்தன. அங்கு தங்களைப் போலால்லாது இரண்டு கால்களில் நடக்கும் ஜீவனைப் பார்த்த ஞமலிகள் எச்சரிக்கை உணர்வுடன் பதுங்கிக் கொள்கின்றன.

ஞமலிகள் அறியாது அவர்களை வேவு பார்த்த மனிதனோ அவர்களின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்தான்.


எச்சரிக்கை உணர்வில் இருந்த ஞமலிகள் இரவில் உறங்கும் முன் சில ஞமலிகளைக் காவலுக்கு வைத்து வேலை மாற்றம் செய்துக் கொண்டன. அதையெல்லாம் கவனித்த மனிதன் தன் சுய இலாபத்திற்கு அவர்களைத் தங்களோடு வைத்துக் கொள்ள ஆசைக் கொண்டான்.

தங்களுக்கு இருக்கும் இருப்பிடம் சார்ந்தப் பிரச்சினைகள், பாதுகாப்புப் பிரச்சினைகள், உணவுப் பிரச்சினைகளிலிருந்து தங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்பிய ஒரு சார் ஞமலிகள் அவனிட்ட சிறு உணவுக்காய் நன்றியுடன் மனிதனோடும்,

எந்தச் சூழலிலும் தங்களுக்கு வனமே வசிப்பிடம் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும், வேட்டையாடி உண்பதே உணவு என்று நம்பிய ஒரு சார் ஞமலிகள் எச்சரிக்கை உணர்வுடன் சுந்தர வனத்தையும் தஞ்சமடைந்திருந்தன.


சுயநலம் பிடித்த மனிதனோ பாதுகாப்பிற்கு காவல் ஞமலிகளாகவும்,

தங்கள் மேய்ச்சல் பிராணிகளுக்கு மேய்ப்பு ஞமலிகளாகவும்,

தங்களதுத் தேவைக்கு சிறு உயிரினங்களை வேட்டையாட வேட்டை ஞமலிகளாகவும்,

தங்கள் பொதிச்சுமைகளை இழுத்து செல்லும் இழு ஞமலிகளாகவும்,

வழியறியாதோர் மற்றும் விழியற்றோருக்கு வழிக் காட்டும் வழிகாட்டு ஞமலிகளாகவும் அவைகளைப் பழக்கப்படுத்தினான்.

நன்றியுள்ள ஞமலிகளோ அவன் உணவு தருகிறான் இருப்பிடம் தருகிறான் இனி உயிரை பணயம் வைத்து வேட்டையாட வேண்டாமென்று என்று எண்ணி அவன் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தன.

வயதில் மூத்தோர் மற்றும் சிறுவர்களோ தங்களது துணைக்கு இணையாக சில ஞமலிகளைச் செல்ல பிராணியாகவும் பழக்கப்படுத்தினர்.


நாட்கள் செல்லச்செல்ல ஞமலிகளுக்கு ஏற்படும் மூளையழற்சி நோயின் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஞமலிகள் மனிதனுக்கு பிரச்சினையாக இருக்கவே வெறுக்க ஆரம்பித்தான் ஞமலிகளை.

துன்புறுத்தி உணவு கொடுக்காமல் அலைக்கழித்தான். அதன் பின்னான விஞ்ஞான வளர்ச்சியில் நோய்த்தொற்றிற்கான தடுப்பு மருந்து கண்டுப் பிடிக்கப்பட்டு ஓரளவு பிரச்சினையின் தீவிரத்தில் இருந்து ஞமலிகளுக்கு உதவினான்.

இருப்பினும் பயம் கொண்ட சிலர் தொற்று அல்லாத ஞமலிகளையும் வீட்டு வெளியேற்றம் செய்ய உதவிகளற்றுப் போன ஞமலிகள் குப்பைகளிலும் இரக்கம் கொண்டு யாரேனும் தரும் உணவிலும் காலத்தைக் கழித்தன.

மறுபடியும் நிர்கதியான சூழல்.

மேலும் வேறொரு ரூபத்தில் சிறுவர்கள் வாயிலாக பிரச்சினைகளைச் சந்தித்தன ஞமலிகள்.

காணும் இடமெங்கும் ஞமலிகளை கல்லால் அடித்து துன்புறுத்துவதும், அதன் வாலில் ஓலைகளைக் கட்டி விட்டு அதன் ஒலியில் பயம் கொள்ள வைத்து ஓட விடுவதும், வெடிப் பட்டாசுகளை மேலே தூக்கி எறிவதும், கயிற்றில் கட்டிப்போட்டு உணவிடாமல் கத்த வைப்பதும் என்று பலக் குடைச்சல்களை கொடுத்தனர் சிறுவர்கள் விளையாட்டுப் போக்கில்.

விளைவு எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கக் கற்றுக் கொண்டன ஞமலிகள். தாக்க எவரேனும் முற்பட்டால் எதிர்தாக்குதல் செய்து தன்னைக் காத்து கொள்ள வேண்டும் என்று புரிந்துக் கொண்டன. அதோடு தங்கள் உயர அளவில் இருக்கும் சிறுவர்கள் மீது வெறுப்புற்றன ஞமலிகள்.


வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் ஞமலிகளுக்கும் வேறு விதப் பிரச்சினை காத்திருந்தது.

பரந்து விரிந்த சுந்தர வனத்தில் இயற்கை காற்றைச் சுவாசித்துத் தடையின்றி எங்கும் தாராளமாக சுற்றி வளைய வந்த ஞமலிகள் நான்கு சுவர்களுக்குள்ளும் கூண்டிலும் இருந்து மன அழுத்ததிற்கு ஆளாகி மனபிறழ்வு அடைந்துத் தாக்கின.


தற்போது உள்ள உணவுப்பழக்கங்கள் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்று பாதுகாப்பற்ற இருப்பிடம் எல்லாம் சேர்ந்து ஞமலிகளை அடிக்கடி மூளையழற்சி நோயில் தள்ளியது.


ஞமலிகள் தாங்கள் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்க்கொள்ளும் போது தங்கள் கோவத்தை எதிர்ப்பைக் கடித்து வெளிப்படுத்துகின்றன.

மனிதனுக்கு கோவம் வந்தால் வார்த்தைகளைக் கடித்துத் துப்புவது போல ஞமலிகளும் தங்கள் கோவத்தை தங்கள் இயல்பிலேயே வெளிப்படுத்துகின்றன.


எந்த ஒரு உயிரினங்களும் அவைகள் வாழும் சூழலே அதன் நன்னடத்தையை நிர்ணயிக்கிறது. மோசமான சூழலில் வளரும் ஞமலிகளும் மோசமான நடத்தையை வெளிப்படுத்துகின்றன.


மனிதர்களுக்கும் ஞமலிகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுப்பதைத்தான் திருப்பித்தரும். உணவு, உறைவிடம், உயிர் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்த மனிதனிடம் இவை மூன்றுமே கிடைக்கவில்லை என்பதே ஞமலிகளின் தலையெழுத்தாகி விட்டது.

இந்த பிரபஞ்சம் மனிதனுக்கானது மட்டும் அல்ல அனைத்து உயிர்களுக்குமானது.

இதுதான் ஞமலிகளின் வாழ்க்கையா?

இந்த வாழ்க்கை முறையை மாற்றி அவர்களுக்கும் வாழ தகுதிக் கிடைக்குமா?

என்ற கேள்விகளுடன் காணொளி முடிந்திருந்தது.


கனத்த நிசப்தத்துடன் அனைவருமே எழுந்து பிரியவாகினியைத் தட்டிக் கொடுத்தபடி வெளியேறினர். நேசனின் விழிகளிலோ நீர்.


பிரியமானவள் வருவாள்…

3 thoughts on “பிரியமானவளின் நேசன் 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *