Skip to content
Home » பிரியமானவளின் நேசன் 7

பிரியமானவளின் நேசன் 7

நேசன் 7

எழில் கொஞ்சும் இயற்கை பேரழகு மிகுந்த குவிரம். விடியலுக்கு ஆயத்தமாகும் மஞ்சள் வண்ணப் பூஞ்சோலையாய் வானம் திறந்திருக்க மென்காற்றில் மிதந்து வரும் வெண்முகில்கள் அதற்கு அழகு சேர்த்தன.


பரந்து விரிந்த உயர்ந்த பர்வதங்களின் அரவணைப்பில் பச்சைப் பதுக்கைகள் இளங்காற்றில் ஒன்றுடன் ஒன்று உரசி மெட்டு இசைத்து வைகறைப் பனியை இதமாய் ஊடுருவ செய்தன.

பர்வத ராணியின் பின்னலிட்ட வெண் குழல் வெண் அமுதமாய் ஆர்ப்பரித்து அருவியாய் பொழிய அது வழிந்து நீரோடையாகப் பதுக்கைகளின் ஊடேப் பாய்ந்தோடி அடவியின் செழுமையைப் பறைசாற்றின.


நிறமில்லா அமுதத்தில் வகுலிகளும் ஏனைய நீர் உயிரிகளும் ஞாயிறின் வரவை துள்ளிக் கொண்டாடி வரவேற்றன. அட்டைப்பூச்சிகளும் ஊறும் எறும்பினங்களும் தங்கள் பணிக்குச் சுறுசுறுப்பாக கிளம்பின.


வண்ண முகைகளின் வாசத்திற்கு தேனீனங்களும் வண்டுகளும் போட்டியிட்டு ரீங்காரமிட அவைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று சின்னஞ்சிறு பட்சிகளும் அமுத கானம் இசைத்தன.

புள்ளினங்கள் காதல் கொண்டு ஜோடிக்களாக பறந்துச் செல்ல அஃறிணை உயிரினங்களோ தங்கள் குட்டிகளுடன் சோம்பல் முறித்துக் கொஞ்சி விளையாடின.


இரவின் இருளை அகற்றிப் பிரகாசமாக தண்ணொளி வீசி மேதினியெங்கும் வானவில்லின் வண்ணமாய் பரிணமித்து உதயமானான் வெய்யோன்.


அந்த காலை நேரத்தில் அக்கானகத்தில் வந்து நின்றது சிறுவர்களை ஏற்றி வந்த வாகனம்.


அருவியின் ஆராவாரத்துடன் சிறுவர்களின் ஆராவாரமும் இணைந்து இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அந்த ஒற்றையடிப் பாதையில் வரிசையாக சிறுவர்கள் வந்து மரத்தின் அடியில் தங்கள் உடைமைகளை வைத்துவிட்டு நீரோடையில் நீந்தி விளையாடினர்.


நீரோடையின் மறுபக்கம் பாறைகளும் புதர்ச்செடிகளும் மண்டிக்கிடந்தன. அந்த பக்கம் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதை மீறி சிலர் பாறையின் மீதேறி அமர்ந்தும் வண்ண மலர்களைப் பறித்தும் விளையாடினர்.


அவர்களில் அண்ணன் தம்பி இருவரும் பாறைகளைக் கடந்து புதர்களின் அருகில் மலர்ந்திருந்த வித்தியாசமான மலரைக் கண்டு அதனைப் பறித்திட நெருங்கிய வேளையில் ஏதோ அரவம் கேட்கவே திரும்பினர்.

அங்கு ஒரு அஃறிணையானது இவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. ஆர்வத்துடன் அதனைப் பார்த்தவர்கள் காட்சி மாறிய வேளை அதிர்ந்தனர்.


அதன் கண்கள் நெருப்பின் ஜூவாலையோடு செவிகளிரண்டும் செங்குத்தாக வான் நோக்கி கூம்பிக்கொண்டு கோரமான பற்களுடன் கூரிய நகங்களையும் கொண்டு ஒரு உறுமலுடன் முன்னங்கால் மேல் நோக்கி எழப் பாய்ந்து இவர்களை நோக்கி வந்தது.


பயந்து போன இருவரும் பாறையின் மேலேற முயற்சிச் செய்ய பதற்றம் கொண்டுத் தடுமாறி தம்பி புதர்களின் மேல் விழ அதுவோ நெருங்கியிருந்தது அவர்களை.

அதன் கோர பற்களை மிக அருகில் கண்டவன் “அண்ணாஆஆஆ” என்று அலறினான். தம்பியை வேகமாக இழுத்து தனக்குப் பின் நிறுத்தியவன்

“ப்போய்டு ப்போ ச்சூ ச்சூ”

என்று விரட்ட அதுவோ இன்னும் கோரமாய் பற்களைக் காண்பித்தபடி அண்ணனவன் மேல் பாய்ந்து கடித்து தன் வெறியைத் தணிக்க போராடியது.


“ஆஆஆ வேண்டாம்” என்று கதறியதை அஃறிணையானதோ கேட்டிடவில்லை. இருவரும் அலறினார்கள். முகத்தை குறிவைத்துக் கடிக்க வரவே அதனைத் தடுக்க கைகளால் முகத்தை மறைக்கக் கைகளை நன்றாக பதம் பார்த்தது அதன் கோரப்பற்கள்.

வலியினால் துடித்தவன் எழுந்து ஓட முயற்சித்து புதரிலேயே விழுந்தான். அவனது கால்களோ புதரின் கொடியில் சிக்கிக்கொண்டன. தம்பியானவன் உதவி செய்ய நினைத்தும் பயம் நகர விடவில்லை அவனை.

அங்கங்கே கடித்து குதறிய அஃறிணையானது இன்னும் வெறி அடங்காது வேறிடம் சென்று கத்தியது. அந்த அஃறிணை விசுவாசத்திற்கு பெயர் போன ஞமலி.

கடிவாங்கியவனோ வலியில் துடித்துக் கதறினான். அண்ணனாக ருத்ராவும் தம்பியாக நேசனும்.


சடாரென்று விழிகளை மலர்த்திய நேசன் மனத்திரையில் கண்ட கலைந்த கனாவிலிருந்து எழுந்தான் படுக்கையிலிருந்து.
வதனமெங்கும் நீர் பூத்திருக்க நெஞ்சம் ஏறி இறங்க இதயத்தின் ஓசை தாறுமாறாக ஒலித்தது.

கடிகாரம் மணி 6 என்று பொம்மைக்குயில் கூவியது. படுக்கையை விட்டு எழுந்தவன் சாளரக்கதவுகளைத் திறந்துக் காற்றை ஆழ்ந்து சுவாசித்து தன்னை ஆசுவாசப்படுத்தியப் பின் குளியலறைச் சென்று தூவாலைக்குழாயின் கீழ் நின்றவன் முழுவதுமாக நனைந்து மனதை சமன்படுத்தினான்.


இரண்டு மாதங்கள் முழுதாக கடந்திருந்தது. இருப்பினும் அவ்வப்போது வரும் இந்தக் கனவு மட்டும் நின்றபாடில்லை. ருத்ராவிடம் கூட சில மாற்றங்கள் வந்திருந்தன.

பூங்காவிற்கு மட்டும் ஓரிரு முறை அழைத்துச் சென்றிருக்க இன்றும் பூங்காவிற்கு போகும் நாள்.


இரண்டு மாதத்திற்கு முன் நனியினி வந்து போன அன்று இரவு ருத்ரன் உறங்காமல் பயங்கரமாக அலறினான். உடல் முழுவதும் பயத்தில் நடுங்கியது. அறையில் இருந்தப் பொருட்களை வீசி எறிந்தான்.

என்ன செய்வது என்று யோசித்த பிரியவாகினி நனியினிக்கு அழைப்பு விடுத்து வரச் சொல்லியிருந்தாள்.


“ஹேய் ருத்ரன்.. நனி வந்துருக்கேன். என்ன ஆச்சு? எதுவும் பிரச்சினையா? என்கிட்ட சொல்லுங்க நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேனாம்”

என்றவளாய் நனியினி ருத்ரனின் அருகில் அமர்ந்து அவனின் கைகளைப் பிடித்து அழுத்தம் கொடுத்தாள்.


“அது… ஆ…து…”


“ஓகே ஓகே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இந்தச் சாக்லேட் சாப்பிடுங்க. நான் அத போக சொல்லிரேன் ஓகேவா?”

என்றவளாய் எழுந்து “ஹேய் கோ கோ” என்று சொல்லி

“அது போயிருச்சு நீங்க சாக்லேட் சாப்பிடுங்க”

என்றவளாய் அவனின் தோளில் ஆதுரமாக தட்டிக் கொடுத்து பேசினாள்.. அவளின் தோளிலேயேச் சாய்ந்து அப்படியே உறங்கியிருந்தான் ருத்ர நேசன்.


“என்னடி அதுக்குள்ள தூங்கிட்டாரு நாங்க இவ்வளவு நேரம் என்னலாம் பண்ணி பாத்தோம் தெரியுமா?”


“மெலடோனின் ஹார்மோனை தூண்டி விடும் டார்க்சாக்லேட் சாப்பிட்டார்லா அதான் தூங்கிட்டாரு. இப்ப தூங்கட்டும். நான் காலையில் வந்து பாக்ரேன். அவரோட மெடிக்கல் பைல் கொடு நான் செக் பண்ரேன்”

என்றவளாய் மருத்துவக் கோப்புகளை வாங்கிக் கொண்டு கிளம்பியிருந்தாள்.


மெலடோனின் என்பது மூளையின் பினியல் சுரப்பியால் உருவாகும் தூக்கத்திற்கான ஹார்மோன் ஆகும். இது பகலில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் சுரக்கும். அதனால் தான் இரவுகளில் வழக்கமாக உறக்கம் தழுவுகிறது.


அலர்விழியிடம் சிறு தலையசைப்புடன் தனதறைக்குள் வந்து படுத்துக்கொண்டாள் பிரியவாகினி.


மறுநாள் காலையே வந்திருந்தாள் நனியினி. ருத்ரா பொழிலன் அலர்விழியோடு தான் படுத்திருந்தான். அவனை தனியே விட வேண்டாம் என்று சொல்லியிருந்தாள் நனியினி.


“மார்னிங் டியர்”


“மார்னிங் நனி. டீ எடுத்துட்டு வரேன். உட்கார்”

என்று மெத்திருக்கையில் அமரச் சொன்னவள் தேநீர் கலந்து எடுத்து வந்தாள். இருவரும் அருந்தியபடிப் பேசினார்கள்.


“நனி அவருக்கு நாய்க்கடிச்ச இன்ஸிடண்ட் வரும்னு நினைக்கிறேன். இவ்வளவு நாள் உள்ள இருந்தவர் இப்ப நேத்து அந்த குரைக்கிற சவுண்ட் கேக்கவும் தான் ரொம்ப பயந்து போய் இருகார். அதனால் தான் அவர் ரூம்லயே இருக்க வச்சிருக்கார்”


“எஸ். பட் இப்படியே விட்டா அது இன்னும் அவருக்கு பாதிப்பு தான். முதலிலேயே இதை கவனித்து சரி பண்ணிருக்கலாம். பராவல இனி நான் பாத்துகிறேன்”

என்றவளாய் தினமும் காலையில் வருபவள் மாலை வரை ருத்ராவோடு அன்புடன் பேசி அவனின் நம்பிக்கையை பெற்றாள்.

நனியினி சொல்வதை ஓரளவுக் கேட்டு அதை செய்யவும் ஆரம்பித்திருந்தான். அவனின் எண்ணங்களை ஒருநிலைப்படுத்த அவனுக்கென தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவனைச் செய்ய வைத்தாள்.

ருத்ராக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீதும் கணக்கு மீதும் ஆர்வமுண்டு. பத்து நாட்கள் முடிந்திருந்த வேளையில் நனியினி அவள் வரைந்துப் பார்க்க இவன் நான் வரைகிறேன் என்று வரைந்துப் பழக ஆரம்பித்திருந்தான்.


சின்னச்சின்ன விளையாட்டுகள் நிறையப் பேச்சுகள் என்று பொழுதுகள் ஓடின. சில நேரங்களில் சிறு உடற்பயிற்சிகளும் பயிற்றுக் கொடுத்தாள் நனியினி.

அவன் பயம் கொள்ளும் நேரங்களில் மனதை வேறுப் பக்கம் திசைத்திருப்பி பயத்தை குறைத்திட முனைந்தாள்.
மறுநாள் நேசனின் வீட்டு வாசலில் நின்றிருந்த சாஷாவைப் பார்த்து பயந்து மெத்திருக்கையின் பின் ஒளிந்துக் கொண்டான்.


“ருத்ரா இங்கு வாங்க. பாருங்க இவங்களும் என்னோட ப்ரெண்ட் தான். என் ப்ரெண்ட் உங்களுக்கும் ப்ரெண்ட் தான். ஷேக்கன் பண்ணுடா பட்டுகுட்டி”

என்று ருத்ராவிடம் ஆரம்பித்து சாஷாவிடம் முடித்தாள் நனியினி.
மெல்ல விழிகளைத் திறந்து பார்த்திட சாஷா தன் முன்னங்காலை அவனிடம் நீட்டிக் கொண்டு இருந்தாள்.


“க..க..டிக்கும்”


“நோ வே என் ப்ரெண்ட் எப்படி உங்களை கடிப்பா? நீங்க பழகாமலே இப்படி சொல்றீங்க”

என்று முகவாட்டமாய் பதிலளிக்க

“சரி நான் கை கொடுக்கிறேன் நீ சிரி”

என்றவன் சாஷாவுடன் முதன் முதலாக நட்பு கைகளை கோர்த்து கொண்டான். அந்நேரத்தில் அங்கு வந்த நேசன் இந்தக் காட்சிகளைக் கண்டு


“வாட் த ஹெல் இஸ் ஹாப்பனிங் ஹியர்? யார் இந்த ஸ்டுப்பிட் டாக்’க வீட்டில் அலோவ் பண்ணது? ஹேய் யூ கெட் அவுட்”

என்று சாஷாவைப் பார்த்து கத்திக்கொண்டே வர சாஷா அவனின் அருகில் ஓடிப்போய் அவனுக்குக் கை கொடுக்க செல்ல நேசன் பயந்து விழாத குறையாக ஓடினான்.


“ஏண்டா வந்ததும் வராததுமா கத்துர்ர? அவங்க ட்ரீட்மெண்ட் தான் கொடுக்றாங்க. நீயும் அவளுக்கு கை கொடு பாரு எவ்வளவு நேரம் கை நீட்டிட்டு நிக்றா”

என்று அலர்விழி சொல்ல கடுகடுத்த முகத்துடன் முனுமுனுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டான்.


ருத்ரா அருகில் சாஷாவை அமர வைக்க அவனுக்கோ அமர்ந்திருக்க முடியாத அவஸ்தையாக இருந்தது. சகஜமாக்கும் பொருட்டு விளையாடலாம் என்று சொல்லி அனைவரும் வட்டமாக அமர்ந்து இருக்க பந்தினை வைத்து விளையாடினர். சாஷாவும் அவர்களோடு இணைந்து விளையாட அதனை ஆச்சரியம் மற்றும் பயம் கலந்த உணர்வுக் கலவைகளோடு பார்த்திருந்தான் ருத்ரா.


அறைக்கு வந்த பிரியவாகினி


“வேலை எல்லாம் எப்படிங்க போச்சு? டிராவல் ஓகேவா? ஏதாவது வேணுமா?”


“ம்ம்ம் வேணும்”


“என்ன வேணும் சொல்லுங்க. நான் ரெடி பண்ரேன் சாப்பிட்டு படுங்க”


“நீதான் வேணும்” என்றவன் அவளை இறுக அணைத்திருந்தான்.


“ஏங்க விடுங்க. கீழே எல்லாரும் இருக்காங்க”


“சோ வாட்? உன் மேல் ரொம்ப கோவமா தான் வந்தேன். உன்னைப் பார்த்ததும்..”


“பறந்து போயிருச்சா”

என்றவளை மெல்ல மெல்ல பிரியனுக்குள் பிரியமாய் பிரியமானவளை தொலைந்திட வைத்தான்.


மேலும் ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அன்றைய தினத்தில் பூங்காவிற்கு அழைத்துச் சென்றனர் ருத்ராவை.

அவன் வெளியே வந்து எட்டு வருடங்கள் ஆகியிருக்க ஒவ்வொரு முறையும் மழலையாய் அனைத்தையும் வாய்பிளந்து ரசித்த வண்ணம் நடந்திருந்தான்.


நாட்கள் கடந்து மாதங்கள் செல்ல இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் பூங்காவிற்கு போகும் போது நேசனும் பிரியவாகினியும் பூங்காவின் ஒரு இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நனியினி ருத்ராவோடு சாஷாவையும் அழைத்து வர அலைபேசியில் பேசியபடியே முன்னே நடந்திருந்தாள். எதிர்பாராத விதமாக ருத்ரா ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க ஓட சாலையருகே வந்திருந்தான். எதிரே வந்த வண்டிகளைக் கவனித்திராதவன் முன்னேறி செல்ல நொடி நேரத்தில் சாஷா அவன் மீது பாய்ந்திட ருத்ரன் பயத்துடன் கீழே விழ அருகே வந்திருந்த வண்டியோ சாஷாவை அடித்து போட்டுச் சென்றது.

அவளின் கண்களில் கண்ணீரும் ருத்ராவைப் பார்த்த படி விழி மூடிய நிகழ்வும் ருத்ராவை நடப்புக்கு வரச் செய்ய எழுந்து கத்தினான் சாஷா என்று.


பிரியமானவள் வருவாள்…

4 thoughts on “பிரியமானவளின் நேசன் 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *