Skip to content
Home » புண்ணியக் கணக்கு

புண்ணியக் கணக்கு

புண்ணியக் கணக்கு

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.   (௭௰௨ – 72) 

அதிகாரம்- அன்புடைமை.


அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ
பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்  (௭௰௨)
— சாலமன் பாப்பையா


முக்கூட்டு சாலையில் பேருந்தை விட்டு நான் இறங்கிய போது, கூடவே நெற்றியில்
குங்குமத்துடன் மிடுக்கும் வசதியுமான தோற்றத்தில் வயதான பெண்மணியும் இறங்கினாள்.
சூரியன் உச்சியில் இருந்தது. குடையைப் பிரித்து தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு சாலையின்
இடதுபுறம் திரும்பி ஊரை நோக்கி நடக்க தொடங்கினேன். அந்த அம்மாளும், வேர்த்து வழியும்
முகத்தை புடவைத் தலைப்பால் துடைத்தப்படி, இடதுபுறம் திரும்பி என்னுடனே சேர்ந்து நடக்கத்
தொடங்கினாள். வயதானவள் மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் நடக்க, குடையும் சொகுசென
உறுத்தவே குடையை அம்மாளுக்கும் சேர்த்துப் பிடித்து நடந்தேன். தலைக்கு மேல் நிழல் வரவே
நிமிர்ந்து என்னைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள். நடந்து கொண்டிருந்தவளுக்கு கால்
தடுக்கி தடுமாறவே சட்டென்று அவளைப் பிடித்துக் கொண்டேன்.


“என்னம்மா தலை சுத்துதா?” என்று கேட்டவாறே அவர்களை புஜத்தில் பிடித்து மரத்தடியில்
மெல்ல அமர வைத்து குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்தேன். செருப்பு அறுந்து போகவே என்
தாலியிலிருந்து ஊக்கெடுத்து அதில் குத்தி சரி செய்து தந்தேன்.


“போன வாரம் தான் வாங்கினது” என்று செருப்பை சரியாக மாட்டிக் கொண்டு நடக்கத்
தொடங்கினாள்.
அவள் சகஜமாக பேசவே நானும் இயல்பாக கேட்டேன். “இந்த வேகாத வெய்யிலில் எங்கம்மா
போறீங்க?”
“என் மூத்த மகன் பள்ளிக்கூடத்துல வாத்தியாரா இருக்கான். அவனைத் தான் பாக்கனும்னு
கிளம்பினேன்”
“வெயில் தாழ கிளம்பிருக்கலாம்ல”
“கிளம்பிருக்கலாம் தான்” என்று என்னைப் பார்த்துப் புன்னகைத்தவள் “இப்ப சாப்பாட்டுக்கு
மணியடிப்பாங்கல்ல. அதான்” என்று இழுத்தாள்.


“ஏம்மா வீட்டுக்கு போய் பாக்க கூடாதா?” என்று கேட்ட எனக்கு கேள்வியின் பின்புலம்
புரியாமலில்லை.
“அப்படின்னு இல்ல” என்று மருமகளை விட்டுக் கொடுக்காமல் சமாளித்தவள் “வீட்டுக்கு இன்னும்
தூரம் நடக்கணும். போற வழியிலேயே அவனை பார்த்துட்டேனா இப்படியே பஸ் ஏறிடுவேன்”
என்றாள்.

2
அடுத்த வீட்டு விஷயம் எனக்கெதுக்கு என்று அமைதியாக நடந்தேன். அந்த அமைதி அவள்
அமைதியை உடைக்கவே மெல்ல பேசிக் கொண்டே வந்தாள். “பேரப் பிள்ளைங்க இஸ்கூலுக்கு
போயிருக்கும். மருமக மட்டும் தான் இருப்பா. வீட்டு வேலை முடிச்சிட்டு சித்த கண் அசர்ற நேரம்.
இப்போ போய் அவளை எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு தான் இப்படியே மவனை பாத்துட்டு
திரும்பிடறது” என்று விளக்கமளித்தாள்.


மனதிற்குள் என் அண்ணி வந்து போனாள். மாதாமாதம் அண்ணன் வீட்டு வாசலில் போய் நிற்கும்
அம்மாவின் நினைவு மனதில் கனத்தைக் கூட்ட அது கண்களில் கண்ணீராக கசிந்து விடுமோ
என்று அஞ்சி மூக்கை உறிஞ்சி, தலையை இருபுறமும் அசைத்து, நினைவை உதறினேன்.
“புரியுதும்மா. அப்படியே நீங்க போயிட்டாலும் வாங்கன்னு வாய் நெறைய கூப்பிட்ற
போறாங்களா என்ன?”என்றேன் பரிவுடன்.


“அதுவும் உண்மை தான்” என்று உடனே ஒப்புக் கொண்டவள் “ஆனாலும் வீட்டுக்கு வந்த
மருமகளை சொல்லி என்ன புரவோஜனம்? ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு நாமளே அடுத்த
வீட்டுப் பொண்ணை தப்பா பேசிடக் கூடாது. நாம பெத்த புள்ளைய சொல்லணும்” என்றாள்
கசந்த குரலில்.
“பெண்டாட்டி அப்படி அமைஞ்சா அதுக்கு அண்ணன் என்ன செய்யும்?” என்று கேட்டேன் என்
அண்ணன் நினைவில்.


“அண்ணிய ஏன்மா சொல்லணும்? நாம, நம்ம வீட்டாளுங்களோட, நம்ம புருஷனை சேர்த்து
புடிக்கிற மாதிரி, ஆம்பிளைங்களும் பெத்தவங்களையும் கூடப் பிறந்தவங்களையும் சேர்த்துப்
புடிக்கனும்னு நெனச்சா யார் என்ன பண்ண முடியும்?”
வாழ்க்கைப் பாடம் படித்திருப்பவளின் அனுபவம், மருமகள்களைப் பற்றிய என் பொது புத்தியை
யோசிக்க வைத்தது. இந்த அம்மாள் சொல்வது உண்மை தானே! உக்கார்றவன் ஒழுங்கா
உக்காந்த சிரைக்கறவன் சரியா சிரைப்பான் என்னும் பழமொழி சரி தானே! கல்யாணம் செய்து
கொண்டு அடுத்த வீட்டுக்குப் போகும் பெண்கள், அங்கே இருந்து கொண்டு தங்கள் வீட்டினருக்கு
செய்ய வேண்டியதை செய்யும் போது, ஆண்கள் மட்டும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய
தன்னுடைய கடமையை செய்யாமல், ஆட மாட்டாதவன் மேடை கோணல்னு சொன்னா மாதிரி,
கட்டிய மனைவியை ஏன் பழி சுமத்துகிறார்கள்? பெண்ணுக்குப் பெண்ணாக நாமும் அடுத்த
வீட்டிலிருந்து வந்த பெண்ணைத் தானே குறை சொல்கிறோம்? மருமகள் என்பவள் மணமுடித்து
வந்த மறுநாளே குடும்பத்தைப் பிரித்து விடுபவலாகவே தானே இந்த சமூகம்
கட்டமைத்திருக்கிறது.


என் எண்ணங்களை ஊகித்தவளைப் போல “என் மகன் கோடு போட்டா மருமக ரோடு போட
மாட்டாளா?” என்று என்னை கேட்டாள் அந்த அம்மாள். “அவனுக்கு கருவாட்டு கத்தரிக்காய்
கொளம்புன்னா உசுரு. இன்னைக்குக் கூட எங்க வீட்ல கருவாட்டுக் குழம்பு தான். கொழம்பு
சட்டியில சோத்தைப் போட்டு பிரட்டிக் குடுத்தா ஆசை ஆசையா உம்பான். மனசு கெடந்து
அடிச்சிக்கத் தான் செய்யுது. கொண்டாந்தா பாத்திரத்தை வாங்கி மோந்து பாத்துட்டு நம்ம
கையிலய திரும்ப கொடுத்துருவான். ஒரு வாய் எடுத்து தின்னா மனசு ஆறும். அவன் கையை
ஆறாவது பிடிசிக்கினு இருக்காங்களா என்ன? ஊஹூம். சாப்பிட மாட்டான்”

3
அவளை நான் பரிவுடன் பார்ப்பதைக் கண்டு விட்டு “அவுங்க சொந்தகார பொண்ணு அங்க தான்
வேலை பாக்குது” என்று விளக்கம் சொன்னாள்.
“அது சரி தான்” என்று புன்னகைத்தவள் “இப்போ ரொம்ப அர்ஜண்டா உங்க மகனை எதுக்குப்
பாக்கப் போறீங்க?” என்று உச்சி வெயில் வானத்தை அண்ணாந்து பார்த்தவாறே கேட்டேன்.
“அர்ஜண்டெல்லாம் இல்ல. மாசாமாசம் வர்றது தான்” என்றாள் அம்மாள் தினம் தான் கிழக்கில்
சூரியன் உதிக்கும் என்ற இயல்பான தொனியில்.


“மாசாமாசம் இந்நேரம் தான் வருவீங்களா? கூட்டிக்கிட்டு வர்றதுக்கு யாரும் ஆளில்லையா?
“என் புருஷனுக்கும் மத்த பிள்ளைங்களுக்கும் நான் இவனைப் பாக்க வர்றதே பிடிக்காது”
“அப்புறம் ஏன்மா வரீங்க?”
“மாசாமாசம் ஐநூறு ரூபாய் தருவான். அவனையும் ஒரு எட்டு பாத்தா மாதிரி ஆச்சு”
‘இந்த ஐநூறை வாங்கவா இந்த வேகாத வெய்யில்ல வரீங்க”
“இதைத் தான் என் சின்ன மவனும் கேட்டு சண்டை போடறான்” என்றவள் நீண்ட ஒரு
பெருமூச்சிற்குப் பிறகு “இந்த வாத்தியாரு என் மூத்த மகன். இவன ஒருத்தனைத் தான் காடுகரை
எல்லாம் அடமானம் போட்டு காலேசுக்கு அனுப்பி படிக்க வெச்சோம். அப்புறம் ரெண்டு
பொண்ணுங்க. பொண்ணுங்களும் கவுர்மென்ட் மாப்பிள்ளையை கண்ணாலம் முடிச்சி வீடு
வாசல்னு நல்லாத் தான் இருக்காங்க. வரும் போதெல்லாம் ஏதாவது குடுத்துட்டு தான் போவாங்க.
ஒன்னும் கொறையில்லம்மா. கடசிப்பயலை ரொம்ப படிக்க வைக்க முடியலை. ஆனாலும் அவனா
தட்டு தடுமாறி யார் கைய காலைப் பிடிச்சி கவுர்மென்ட் பஸ்ல கண்டேட்டரா ஓடறான்” என்றாள்
நிறைவாக.


“அப்புறம் எதுக்கும்மா யார் பேச்சையும் கேக்காம இம்மாம் கஷ்டப்பட்டு இவரு குடுக்குற ஐநூறு
ரூபாயை வாங்கணும்? ஒருவேளை படிக்க வெச்சதுக்கு ஜீவனாம்சமா வாங்கறீங்களா?” என்று
துடுக்குத்தனமாக சொல்லி விட்டு அவள் திகைத்து நிற்பதைப் பார்த்து விட்டு “சாரிம்மா” என்றேன்
ஆத்மார்த்தமாக.
பட்டென்று ஒரு பெரிய மனுஷியை பார்த்து இப்படி கேட்டு விட்டேனே என்று பதறிய என்னை
கையில் மெல்ல தட்டி ஆசுவாசப்படுத்தினாள் அந்த அம்மாள். “பரவால்லம்மா. நீ மட்டுமா
கேக்கறே? எங்க வீட்டு சனங்க மட்டுமில்ல. சொந்த பந்தமே கேக்குது. அவ்வளவு ஏன் என்
மவனும் அப்படித் தான் நெனச்சிட்டு இருக்கான்” என்று துக்கத்தில் தொண்டையடைக்க
சொன்னாள்.


அவளுடைய வேதனையைப் பார்க்க சகிக்கவில்லை எனக்கு. வீட்டுப் படியேற விடாத மருமகளை
கூட குறைத்துப் பேசாத அந்த உத்தம தாய்க்கென்று ஏதேனும் காரணம் இருக்கும். அதனால்
மெல்ல கேட்டேன். ”ஏதாவது காரணமில்லாம இருக்காதும்மா. எனக்கு புரியுது” என்றேன்.
சற்று நேரம் அமைதியாக நடந்து விட்டு பின் மெல்ல சொன்னாள். “வீட்டுக்கு மூத்தவனா
தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணியிருக்கணும். தம்பியை படிக்க வெச்சிருக்கணும்.
இதெல்லாம் கடமை. செய்யாட்டி குத்தமில்ல. ஆனா பெத்தவங்களை பாத்துக்காட்டி அது ஏழேழு

4
ஜென்ம பாவம். அந்த பாவத்தை காசிக்கு போய் கங்கையில முழுகி எழுந்தாலும் கழுவ முடியாது.
எம் மவன் வாத்தியாரா எத்தனை சொத்து சுகம் சம்பாரிச்சாலும் பெத்தவங்களைப் பாத்துக்கற
புண்ணியத்தை சேக்காம விட்டுட்டானே. அவனோட பாவ கணக்கை அவன் புள்ளைங்கள்ட்ட
விதி நேர் செஞ்சிட்டா என்ன பண்றது? அவனும் அவன் அவன் குடும்பமும் காலாகாலத்துக்கும்
நல்லாயிருக்கனும்னு மனசு அடிச்சிக்கும். இதெல்லாம் அம்மாம் படிப்பு படிச்சவனுக்குப் புரியாதா?
தெரியும். இருந்தாலும் என்னவோ போதாத காலம் அவன் கண்ணை மறச்சிசிருச்சு. ஒரு நாள்
அவனுக்கும் புத்தி தெளியும். அதுவரை நாம கஷ்டம் பாக்காம வந்து இந்த பணத்தை அவன்
கையாள வாங்கிட்டா அவனுக்கு புண்ணியக் கணக்காகுமேன்னு தான் மலையோ வெய்யிலோ
கொஞ்சம் சிரமம் பாராம வந்துடறது” என்றவள் பள்ளிக்குள் நுழைந்தாள்.
அன்னிக்கு உதிரத்தை பாலாக ஊட்டியவள் இன்னைக்கு புண்ணியத்தை ஊட்டுகிறாள். என்
தாயின் கணக்கும் இது தானோ!
மாமியார் வாங்கி வர சொன்ன சாமான்கள் கையில் கனக்க, இந்த தாய் மனதில் கனக்க நான்
மேலே நடந்தேன்.

-முற்றும்.

-ஷியாமளா கோபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!