Skip to content
Home » புத்தாண்டு சபதம்

புத்தாண்டு சபதம்

புத்தாண்டு சபதம்

    புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர்.

    நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும் மனனம் செய்யுமளவிற்கு காதை தீய வைத்துவிடுகின்றனர்.

   நியூ இயர் என்றால் ஆர்வமாக வரவேற்க திவ்யாவுக்கும் ஆசைதான். ஆனால் ரவீஷ்?
  
    எத்தனை முறை சொன்னாலும் ரவீஷ் ஆங்கில புத்தாண்டு அன்று நண்பர்களோடு மது அருந்திவிட்டு வருவது திவ்யாவுக்கு ஏற்க முடியாத கவலையை தரும்.

     இந்த நியூஇயர் என்றாலே எரிச்சலாய் உணருவாள்.

தமிழ் வருடப்பிறப்புக்கு கூட இத்தனை ஆர்ப்பாட்டம் இருக்காது. ஆனால் ஆங்கில வருடத்திற்கு, நம்மை அடிமையாய் ஆண்டு சென்ற மொழியினத்திற்கு, அத்தனை வரவேற்பும் வாழ்த்தும் கொண்டாட்டமும். அதனால் இன்று அவன் கிளம்பி அலுவலகம் செல்லும் நேரம் திட்டு கிடைத்தாலும் பரவாயில்லையென்று தொண்டையை செருமிக் கொண்டு பேச துவங்கினாள்.

    “ரவீஷ் நியூஇயர் என்று எப்பவும் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற. தயவு செய்து இந்த முறை அப்படி பண்ணாதே. ரொம்ப கஷ்டமாயிருக்கு.

    நீ மிட்நைட்ல வீட்டுக்கு வந்து சேரும் வரை நெஞ்செல்லாம் பக்குபக்குனு இருக்கு. குடிச்சிட்டு பைக்ல வர்றது அவ்வளவா நல்லதில்லை.

    உனக்கே தெரியும் ஆரியன் வளர்ந்து வர்ற பையன். உன்னால அவனுக்கும் குடிப்பழக்கம் தப்பில்லைனு மனதுல பதிஞ்சிடப்போகுது.

     அப்படியில்லைனா அவனுக்கு அப்பாவே குடிக்கறார் அவர் சொல்லறதை நாம கேட்கணுமா? அவரே தப்பு பண்ணறார் என்று ஆரியன் அவனும் தப்பு செய்ய ஆரம்பிக்கலாம். ஆரியன் பத்து வயசு என்பதால இந்த குடிப்பழக்கம் சிகரேட் பற்றி தானா டிவி மூலமா தவறுனு தெரியும். அப்படியிருக்க நீ அதை செய்யறதை பார்த்து மனசளவில் பாதிப்பு உண்டாகும்.

   இத்தனை நாள் உனக்காக உன் சந்தோஷத்துக்காக இருந்த. இந்த முறையாவது நல்லநாள் அதுவுமா குடிக்காம முதல் நாளை ஆரியனோட டைம் ஸ்பெண்ட் பண்ணு. ப்ளிஸ்… அவன் கேக் கட் பண்ணலாமா? யோசனையா என்னை கேட்கறான்.

    நீ தள்ளாடி வர்றப்ப எனக்கு எங்கிருந்து சந்தோஷம் கிடைக்கும். ப்ளிஸ் ரவீஷ் உன் பிரெண்ட்ஸ் கூட நியூஇயர் செலிபிரேட் பண்ணறதை கொஞ்சம் தவிர்த்து வீட்டுக்காக பாரு” என்று கூறி தவிப்பாய் ரவீஷை கண்டாள்.

    ரவீஷோ “பேசி முடிச்சிட்டியா… வாங்க போங்கனு சொல்லிட்டு இருந்த உன்னை ரவீஷ்னு கூப்பிட சொன்னேன் ஏன் தெரியுமா. நாம பிரெண்டா பேசி பழகி என்னை புரிந்துப்ப என்றதால தான். சோஷியல் ட்ரிங் பண்ணற என்னை குடிக்காரன் ரேஞ்சுக்கு அட்வைஸ் பண்ணற. எல்லாம் எனக்கு தெரியும்.” என்று கோபமாய் திவ்யா கையிலிருந்த சாவி கொத்தை பிடுங்கி கிளம்பினான்.

    ஆரியன் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் பள்ளி வாகனத்தில் புறப்பட்டிருக்க, திவ்யாவுக்கு ரவீஷ் பேச்சு கவலையை தந்தது.

    ”சோஷியல் ட்ரிங்’ என்றவொன்று நியூஇயர் என்றாலே முதலிடம் பிடிக்க, அதுவும் பெரிதாய் ஆண்கள் அதெல்லாம் இருந்தால் தான் வருடமே சுதந்திரமாய் விடிவது போன்ற போதையாக எண்ணுவதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

     எப்படியும் இரவு வர தாமதமாகும். தனக்கும் மகன் ஆரியனுக்கும் தோசை போதுமென்று மாவாட்ட பொழுதை கழித்தாள்.

    திவ்யா கூறியது போல தான் ரவீஷ் அலுவலகம் வந்ததும் இரவு நேரம் மது கேளிக்கைக்கு யார் யார் வருகின்றார் என உடன்படிக்கை போட்டு முடித்தார்கள். மதியமே அலுவலகத்தின் பாதியாட்கள் வருவதாக தெரிவித்தனர்.

   ரவீஷும் வருவதாக தான் தலையாட்டியிருந்தான். அந்த நேரம் உடனடியாக அந்த செய்தி தீயாய் பரவியது.

    ரவீஷின் அலுவலகத்தில் ஷிப்டில் பணிப்புரியும் ஜார்ஜ் விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்ந்ததை அறிய முடிந்தது.

   அலுவலகத்தின் பக்கத்திலேயே ஜார்ஜ் வீடு அதுவுமில்லாமல் விபத்து நிகழ்ந்திருக்கும் போல அதனால் அலுவலகதிலிருந்து பதினைந்து நிமிட பயணத்தினுள் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூறவும் ஒரே அலுவலகம் டீம் மெம்பரில் அவனும் ஒருவன் என்று பெண்களும் ஆண்களும் பார்க்க கிளம்பினார்கள்.

    இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் என்று பேசியபடி புறப்பட்டிருந்தார்கள்.

    மருத்துவமனை வந்து சேரும் நேரம் ஜார்ஜ் நேற்று குடிப்போதையில் வண்டியோட்டி தற்போது இந்தநிலை என்று அறிய நேர்ந்தது.

   ரவீஷிற்கோ, மருத்துவமனை நுழைந்து ஜார்ஜ் இருக்கும் இடம் வந்து சேர, ஜார்ஜின் தாய் தந்தை ஆறுமாதம் முன் காதலிப்பதாக அறிமுகப்படுத்திய பெண் என்று மூவரும் அந்த மருத்துவ கட்டிடம் அதிர அழுதனர்.

   ரவீஷோ “ஜார்ஜிக்கு ஒன்னுமில்லை தானே. ஏன் இப்படி அழுவறாங்க” என்று கேட்க, “ரவீஷ் ஜார்ஜ் இனிமே படுத்தபடுக்கையா தான் இருப்பானாம். அவனால எழுந்து நடமாட முடியாதாம்.” என்று கிசுகிசுத்து கூடவந்த ஆனந்த் கூறவும், ரவீஷிற்கு பகீரென்றது.

    அதன் பின் ஜார்ஜை பார்த்து திரும்பியது எல்லாம் அதிர்ச்சியிலேயே நடந்தது.

    இரண்டு பெண்களில் ஒருவள் “அவன் பாட்டுக்கு குடிச்சிட்டு ஜாலியா ஊர்சுத்திட்டு ஆக்சிடெண்ட் ஆகி படுத்தபடுக்கையா இருக்கான். இப்ப காலம் முழுக்க பார்த்துக்கறது யாரு? அந்த பொண்ணு நிலை?” என்றாள் ஒருவள்.
  
    “ஆமா.. நாளைக்கு நியூஇயர்… நம்ம ஆபிஸ்லயே எத்தனை பேர் பார்ட்டி பண்ணறாங்க. எத்தனை குடும்பம் சிதையுதோ. யாருக்கோனு பார்க்கறப்ப உச்சு கொட்ட முடியும். நமக்குனு வந்தா தான் இந்த தீவிரம் புரியும்” என்று மற்றொருத்தி பேசவும் ரவீஷோ திரும்பி பார்த்தான். அந்த இடத்தில் திவ்யா ஆரியன் கண்ணுக்கு தெரிந்தார்கள்.
  
   ரவீஷூக்கு இதயம் உறைந்து விட்டது. கூடவந்த மற்ற நண்பர்கள் ஜார்ஜின் உடல்நிலையை பற்றி விவாதித்து வந்தார்கள்.
  
    ஒருவன் அந்த எஸ்தர் இனி மணக்க மாட்டாளென்று கதை திரித்தான்.

    இனி ஜார்ஜ் வீட்டாட்களுக்கு எவ்வாறு வருவாய் அமையும் என்று கேள்விப்பிறக்க வயதான அவன் தந்தை தான் குடும்பத்தை தாங்க வேண்டும் என்று பேசினார்கள்.

    இதெல்லாம் விட காலத்திற்கும் அவன் படுத்தப்படுக்கையில் யார் அவனுக்கு சேவகம் செய்து பார்ப்பார்கள் என்ற பெரிய வினா மூன்றாமானவன் கேட்டதும் அலுவலகம் வந்து அந்த பேச்சு பத்தாய் சென்றது.

    படுத்தபடுக்கையா? இதற்கு இறந்தே போயிருக்கலாம். பாவம் அப்பா அம்மா வயதானவர்கள். இவனோட ஆக்டிவிட்டிஸ் இப்போ அவங்களையும் பாதிக்குது.
   அந்த பொண்ணு பாவம்பா.. லாஸ்ட்டைம் ஜார்ஜ் அறிமுகப்படுத்தினப்ப அவ்ளோ ஹாப்பியா இருந்தா இப்ப அழுது வடிஞ்சி இருக்கு.

   நல்ல வேளை அந்த எஸ்தர் கல்யாணம் பண்ணிக்கலை. போன மாசத்துல கல்யாணம் பண்ணிக்க இருந்தான். சப்போஸ் கல்யாணம் குழந்தைனு இருந்தா அதுவேற சுமையாகியிருக்கும் என்று பல பேச்சை கேட்க ரவீஷிற்கு மனம் தாளவில்லை.

      நேரம் மாலையானதும் சிலர் நியூஇயர் செலிபிரேஷனுக்கு அழைக்க ரவீஷ் கிளம்பியிருந்தான்.

   ஆனால் ‘சோஷியல் ட்ரிங்’கில் கலந்துக்கொள்ள அல்ல.

   மகன் ஆரியனோடு netflix  slumberland படத்தை பார்த்து மகிழ.

     திவ்யாவோ தன் கண்ணையே நம்பாத ஆச்சரியத்தில் ரவீஷை ஏறிட, அவனோ “என்ன?” என்று கேட்க “ஒன்னுமில்லை” என்று மகிழ்ந்தாள்.
   
   ஆரியனோடு படத்தை காணவும் திவ்யா எட்டி எட்டி பார்க்க, ரவீஷோ மகனை படத்தை காண கூறிவிட்டு கிச்சன் வந்து பக்கோடாவை எடுத்து சாப்பிட்டு “எதுக்கு என்னையே அடிக்கடி நோட்டமிடுற?” என்று கேட்டான்.

   “இல்லை… நாளைக்கு நியூஇயர்… நீங்க வீட்டுக்கு வந்துட்டிங்க… எப்பவும் மணி ஒன்று இல்லை இரண்டுக்கு வருவிங்க… அதுவும் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு…” என்று இப்பொழுதும் குடித்திருப்பானோ என்று விழிநிமிர்த்தி பார்த்துவிட்டு சடாரென குனிந்து கொண்டாள்.

    அவள் தாடையை நிமிர்த்தி இதழை வருடி மெதுவாய் முத்தமிட்டு “ஸ்மெல் வரலை தானே” என்று கேட்டான்.

    “இ… இல்லை.” என்று கண்களை உருட்டி ஆரியன் இருக்க பயந்து கூறினாள்.

    “நான் டிரிங்க்ஸ் பண்ணலை. ஆக்சுவலி இனி நியூஇயருக்கு உன்னோட ஆரியனோட இருப்பேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது சபதம் எடுப்பாங்க… இது புத்தாண்டு சபதம். இனி ட்ரிங்ஸ் பண்ண மாட்டேன். அது சோஷியல் ட்ரிங்க்ஸ் என்று லைட்டா கூட எடுக்க மாட்டேன் போதுமா.” என்று மூக்கை பிடித்து ஆட்டினான்.

   திவ்யாவுக்கு சொல்லயியலாத உவகை கரைப்புரண்டது. “நிஜமா.” என்று கண்கள் பிரகாசமாக கேட்டாள்.

   “நிஜமா.” என்றவன் தலையில் முட்டிவிட்டு மகனை தேடி சென்றான்.

    திவ்யா சந்தோஷத்தில் மகிழ்ந்து சமையலில் பூமுகமாய் வேலைப் பார்க்க, ரவீஷின் மனமோ எஸ்தர் போன்றதொரு கலங்கிய முகத்தை திவ்யாவுக்கு ஏற்படுத்தமாட்டேன் என்று பெருமூசசோடு மகன் அருகே அமர்ந்தான்.

     அவன் தலையை வருடி “நான் வாழணும்… என்னை மட்டுமே உலகமா சுற்றி இருக்கற ஜீவன்களுக்காக… இந்த குடியால என் வாழ்வும் என்னை சுற்றி உள்ளவங்க வாழ்வும்
அழியக்கூடாது. மனுஷனுக்கு இறப்பு அதுவா வரணும். இந்த அல்ப சந்தோஷத்துக்கு வாழ்க்கையே இழக்க கூடாது’ என்று தெளிந்தவனாய் நாளைய புத்தாண்டை வரவேற்க தயாரானான் ரவீஷ்.

-சுபம்.
பிரவீணா தங்கராஜ்.

கற்பனை கதை… எப்பவும் நியூஇயர்னா இந்த கருமம் தானே பலரோட வாழ்க்கையை இருளாக்குது. 

1 thought on “புத்தாண்டு சபதம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *