6. பூங்குழலியின் திகில்
தாழைப் புதரின் மறைவில் பூங்குழலி மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மந்திரவாதியும், நந்தினியும் மெல்லிய குரலில் பேசிய போதிலும், அவர்களுடைய பேச்சு பெரும்பாலும் அவள் காதில் விழுந்தது.
இளவரசரைக் கடல் கொண்டது என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று நந்தினி கூறியதற்கு மந்திரவாதி “ராணி! என் பேச்சில் உங்களுக்கு எப்போதுமே நம்பிக்கையிருப்பதில்லை. எதனால் இப்போது அவநம்பிக்கைப் படுகிறீர்கள்?” என்று கேட்டான்.
“இளவரசரின் ஜாதக பலத்தைப் பற்றி நீ கேட்டதில்லையா? சற்று முன்னால்கூடக் குழகர் கோவில் பட்டர் அதைப் பற்றிச் சொன்னார்.”
“பைத்தியக்காரத்தனம். கிரஹங்கள், நட்சத்திரங்களின் சக்தியைக் காட்டிலும் என்னுடைய மந்திரசக்தி வலியது. அமைதி குடி கொண்டிருந்த கடலில் நான் மந்திரம் ஜபித்துச் சுழற்காற்றை வருவித்தேன் என்பது தங்களுக்குத் தெரியுமா? முதலில் அந்தக் காஞ்சிநகர் ஒற்றனும் அதை நம்பவில்லை. பிற்பாடு கடலில் முழுகி உயிரை விடும்போது, கட்டாயம் நம்பியிருப்பான்!”
“அவன் கடலில் மூழ்கி இறந்ததை நீ பார்த்தாயா?”
“நான் பார்க்காவிட்டால் என்ன? அவன் இருந்த கப்பல் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்தேன்.”
“தீப்பிடித்த கப்பலிலிருந்து அவனைத் தப்புவிக்க இளவரசர் கடலில் குதித்துப் போனாராமே?”
“போனவர் திரும்பி வந்தாரா?”
“திரும்பிப் பல்லவனுடைய கப்பலுக்கு வரவில்லை…”
“பின்னே என்ன? இரண்டு பகைவர்களும் ஒரே நாளில் பலியாவதற்காகவே வந்தியத்தேவனை உயிரோடு விட்டுவிட்டு வந்தேன்.”
“நீ என்னதான் சொன்னாலும், என் மனம் நம்பவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் உயிரோடிருப்பதாக என் மனத்திற்குள் ஏதோ சொல்லுகிறது. பூங்குழலியை உனக்குத் தெரியுமா?”
“நன்றாய்த் தெரியும். இலங்கையில் அவள் எங்களுக்குத் தொல்லையாயிருந்தாள். அவளும் சுழற்காற்றில் போயிருக்கலாம்.”
“அதுதான் இல்லை. சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு படகு தூரத்தில் வந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ராக்கம்மாள் பார்த்தாளாம். திடீரென்று அது மறைந்து விட்டதாம். படகில் இரண்டு மூன்று பேர் இருந்ததாகத் தோன்றியதாம்.”
“அப்படியானால் தாங்கள் கிழவரை அழைத்து கொண்டு உடனே நடையைக் கட்டுங்கள். நான் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.”
“நாங்கள் இருந்தால் என்ன?”
“கிழவர் இருந்தால் இளவரசருக்கு இராஜ மரியாதைகள் செய்து அழைத்துக்கொண்டு போகப் பார்ப்பார், காரியமெல்லாம் கெட்டுப் போகும்.”
“மந்திரவாதி! நானும்தான் கேட்கிறேன். அவர்கள் இறக்க வேண்டிய அவசியம் என்ன? மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டிவிட எல்லாரும் சம்மதித்து விட்டால்…”
“அம்மணி! பெண்புத்தியைக் காட்டிவிட வேண்டாம். காஞ்சி ஒற்றனுக்கு நம் இரகசியம் எல்லாம் தெரியும். அவன் இளவரசரிடமும், சொல்லியிருப்பான். பொழுது விடிவதற்குள் நீங்கள் புறப்பட்டுச் சொல்லுங்கள். ராக்கம்மா! பூங்குழலி அவர்களை அழைத்து வந்தால் காட்டில் எங்கே வைத்திருப்பாள்?”
“மறைந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. அதுதான் அவளுடைய அந்தரங்க வாசஸ்தலம். காஞ்சி ஒற்றனை அதிலேதான் ஒரு பகல் முழுவதும் மறைத்து வைத்திருந்தாள். பிறகு அதை நான் கண்டுபிடித்தேன்.”
“நல்லது; அந்த மறைந்த மண்டபம் இருக்குமிடம் எனக்கும் தெரியும். அங்கே போய்க் காத்திருக்கிறேன். ராணி! சக்கரவர்த்தி எப்படியிருக்கிறார்? ஏதாவது செய்தி உண்டா?”
“எந்தச் சக்கரவர்த்தியைப் பற்றிக் கேட்கிறாய்?”
“நோயாளி சுந்தர சோழனைச் ‘சக்கரவர்த்தி’ என்று இந்த வாய் ஒரு நாளும் சொல்லாது. நமது சக்கரவர்த்தியைப் பற்றித் தான் கேட்கிறேன்.”
“சௌக்கியமாயிருப்பதாகப் பத்து நாளைக்கு முன்பு செய்தி கிடைத்தது. ஆகா! எத்தனை நாள் ஆயிற்றுப் பார்த்து…?”
“சரி,சரி! சீக்கிரம் புறப்படுங்கள். அந்த முட்டாள் பல்லவன் என்ன செய்யப் போகிறானாம்.”
“அவனையும் தஞ்சைக்கு அழைத்துப் போகிறோம்.”
“அவனிடம் ஜாக்கிரதையாயிருங்கள்.”
“அவனைப் பற்றிக் கவலையில்லை. நான் காலால் இட்டதை அவன் தலையால் செய்யக் காத்திருக்கிறான்!”
“இருந்தாலும், ஜாக்கிரதையாயிருப்பது நல்லது. காஞ்சி ஒற்றன் வந்தியத்தேவனிடம் தாங்கள் கொஞ்சம் ஏமாந்து போனீர்கள் அல்லவா?”
“அது உண்மைதான்; அதனாலேயே அவனை உயிரோடு மறுபடியும் பார்க்க விரும்புகிறேன்.”
“அந்த ஆசையை அடியோடு விட்டுவிடுங்கள், ராணி!”
இவ்வாறு பேசிக்கொண்டே, அவர்கள் அங்கிருந்து நகரத் தொடங்கினார்கள் என்று தெரிந்தது. பூங்குழலி தன்னை அவர்கள் பார்க்காத வண்ணம் இன்னும் நன்றாய்ப் புதரில் மறைந்து கொண்டாள். நல்ல வேளையாக, அவள் இருந்த பக்கம் அவர்கள் வரவில்லை. வேறு திசையாகச் சென்று விட்டார்கள்.
பூங்குழலி தற்செயலாக ஒட்டுக்கேட்ட விஷயங்கள் அவளுக்குப் பெருந்திகிலை உண்டு பண்ணிவிட்டன. பொன்னியின் செல்வரை எத்தனைவித அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிய போது அவளுடைய கைகால்கள் நடுங்கின; கண்கள் இருண்டன; தொண்டை வறண்டது; உள்ளம் குழம்பியது. தான் விட்டுவிட்டு வந்த படகை உடனே போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலியதாக முன் நின்றது; படகை விட்டு வந்த திசையை நோக்கி விரைந்து சென்றாள்.
இளவரசர் கொடிய விஷ சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். அவரைச் சிறைப்படுத்திப் போவதற்குப் பழுவேட்டரையர் காத்திருந்தார். அவரைக் கொன்று விடுவதற்குக் கொலையாளிகள் காத்திருந்தனர். அவர்களுக்குத் துணையாக இந்தப் பெண்ணுருக் கொண்ட மோகினிப் பிசாசு இருந்தது. பார்த்திபேந்திரனும் அவளுடைய மாய வலையில் விழுந்து விட்டான். இளவரசரைத் தான் அழைத்துச் சென்று பத்திரமாய் வைத்திருக்கலாம் என்று எண்ணிய மறைந்த மண்டபம் கூட இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இவ்வளவு அபாயங்களிலிருந்தும் இளவரசரைப் பாதுகாக்கும் பொறுப்புத் தன் தலையில் சுமந்திருப்பதாகப் பூங்குழலி உணர்ந்தாள். ஆகையினாலேயே அவளுடைய மூளை குழம்பிற்று. இதுகாறும் அவளுடைய வாழ்நாளில் என்றுமில்லாத ஓர் அநுபவம் நேர்ந்தது. அதாவது காட்டில் வழி தவறி விட்டோ மோ என்ற பீதி உண்டாயிற்று.
‘சுற்றிச் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்து கொண்டிருக்கிறோமோ’ என்ற எண்ணம் தோன்றியது. அப்படிச் சுற்றிவரும்போது இளவரசரின் எதிரிகள் யாரேனும் எதிர்ப்பட்டு விட்டால் என்ன செய்வது? அவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது? எப்படி அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்வது?…
‘இல்லை, இல்லை! சரியான வழியிலேதான் வந்திருக்கிறோம். இதோ கால்வாய் தெரிகிறது. படகை விட்டு வந்த இடம் அதோ அந்த மூலையில் இருக்கிறது.’ பூங்குழலி அவ்விடத்தை நோக்கிப் பாய்ந்து ஓடினாள். அவளுடைய நெஞ்சு அடித்துக் கொள்ளாமல் நின்று விட்டது. ஏனெனில், அவள் விட்டிருந்த இடத்தில் படகைக் காணவில்லை! ‘ஐயோ! படகு எங்கே போயிருக்கும்?’
‘ஒருவேளை தான் இல்லாத சமயத்தில் பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கேயே வந்திருப்பார்களோ? வந்து இளவரசரையும் வந்தியத்தேவனையும் சிறைப்படுத்திக் கொண்டு போயிருப்பார்களோ? அப்படி நடந்திருந்தால் கூடப் பாதகமில்லை. அதை விடப் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்திருக்குமோ? வந்தியத்தேவன் இளவரசரைத் தூக்கிக் கொண்டு மறைந்த மண்டபத்தைத் தேடிப் போயிருப்பானோ? அப்படியானால் அங்கே கொலைஞர்கள் காத்திருப்பார்களே? அடடா! என்ன தவறு செய்து விட்டோ ம்?…’
அந்த மறைந்த மண்டபத்துக்கு உடனே போய்ப் பார்க்க வேண்டுமென்ற பரபரப்பு பூங்குழலியின் மனத்தில் குடி கொண்டது. காட்டு வழியில் ஓட்டம் பிடித்து ஓடினாள். மறுபடியும் அந்தப் பழைய சந்தேகம்: ‘வழி தவறி விட்டோ மோ என்ற சந்தேகம். சுற்றிச் சுற்றி வருகிறோமோ என்ற மயக்கம்.’
‘அது என்ன? ஐயோ! அது என்ன? ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறதே? யாரோ நம்மைத் தொடர்ந்து வருவது போலிருக்கிறதே? யாராயிருக்கும்? எதற்காக இருக்கும்? ஒரு வேளை அந்தப் பயங்கர மந்திரவாதி தானா? அப்படியானால் ஏன் பயப்படவேண்டும்? இடுப்பில் செருகியுள்ள கத்தியை எடுத்துக்கொண்டால் போயிற்று! யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக ஓட வேண்டும்?…’
‘இல்லை, இல்லை! ஓட வேண்டியதுதான். இச்சமயம் யாருடனும் சண்டை பிடிக்கும் சமயம் அன்று. கையில் வலிவு இல்லை; கத்தியும் குறி தவறிப் போகும். உயிரை எப்பாடு பட்டாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமக்கு இத்தருணம் ஏதேனும் நேர்ந்தால் இளவரசருடைய கதியாதாகும்? முன்னமே அந்த வந்தியத்தேவன் எச்சரித்தானே? உயிரைப் பத்திரமாய்க் காப்பாற்றிக் கொண்டு வருவதாகச் சொன்னோமே? அதை நிறைவேற்ற வேண்டியதுதான்?’
பூங்குழலி மேலும் மேலும் நெருக்கமான காட்டில் புகுந்து ஓடினாள். ஆனால் துரத்தி வந்தவன் மேலும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். பூங்குழலி போன வழியில் மரங்களிலிருந்த பட்சிகள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடின. வளைகளிலிருந்து நரிகள் கிளம்பி ஓடின. தூங்கிய காட்டுப் பன்றிகள் விழித்தெழுந்து விழுந்தடித்து ஓடின. மான் ஒன்று விர்ரென்று பாய்ந்து வந்து அவள் மேலேயே இடித்துப் புடைத்துக்கொண்டு ஓடியது. இவ்வளவுக்கும் மத்தியில் பின்னால் தொடர்ந்து வந்தவன் விட்டபாடாக இல்லை. அவனுடைய காலடிச் சத்தமும் அவன் ஓடியதால் பெருமூச்சு விடும் சத்தமும் கேட்டுக் கொண்டேயிருந்தன. பூங்குழலி ஓடிஓடிச் சலித்துப் போனாள். அந்தச் சலிப்பு அளவில்லாத கோபமாக மாறியது. வருகிறவன் யாராயிருந்தாலும் அவனை ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தாள்.
7. காட்டில் எழுந்த கீதம்
பூங்குழலி கோபத்துடன் ஓடுவதை நிறுத்தித் திரும்பி நின்ற அதே சமயத்தில், இருள் சூழ்ந்த அக்காட்டகத்தே, ஓர் இனிய கீதம் எழுந்தது.
“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!”
அந்தக் குரல் சேந்தன் அமுதனுடைய குரல் என்பதைப் பூங்குழலி உடனே அறிந்துகொண்டாள். கலகலவென்று சிரித்தாள். காலடிச் சத்தம் வந்த திசை வேறு என்பதைக்கூட அச்சமயம் அவள் மறந்து போனாள்.
“அத்தான்! நீதானா?”
“ஆமாம்! பூங்குழலி!”
“எங்கே இருக்கிறாய்? இப்படி வா!”
“இதோ வந்துவிட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.
“நன்றாய் என்னைப் பயமுறுத்தி விட்டாய்! எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?”
“பூங்குழலி! உன்னைப் பார்ப்பதற்காகவும், உன் இனிய கானத்தைக் கேட்பதற்காகவும் தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்! தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய்? எங்கே, ஒரு கீதம் பாடு கேட்கலாம்!!”
“பாடுவதற்கு நல்ல இடம்; அதைவிட நல்ல சந்தர்ப்பம்!”
“நீ பாடாவிட்டால் நானே இன்னொரு பாட்டுப் பாடுகிறேன். இந்தக் காட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகங்களையெல்லாம் விழித்தெழுந்து ஓடச் செய்கிறேன், பார்!”
“பித்தா! பிறைசூடி பெருமானே அருளாளா!”
“போதும், அத்தான்! கொஞ்சம் பாட்டை நிறுத்து!”
“அப்படியானால் நீ பாடுகிறாயா?” இவ்விதம் இரைந்து கேட்டுவிட்டுச் சேந்தன் அமுதன் உடனே மெல்லிய குரலில், “பூங்குழலி! உன்னைத் தொடர்ந்து இன்னொருவன் வந்து கொண்டிருந்தான். உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய சம்பாஷணை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா?” என்றான்.
பிறகு மீண்டும், உரத்த குரலில், “என்ன சொல்லுகிறாய்! நீ பாடுகிறாயா? நான் பாடட்டுமா? சிவபெருமான் சுடுகாட்டில் ஆடினார்; நீ வெறுங் காட்டில் பாடக்கூடாதா?” என்று இரைந்தான்.
“இதோ பாடுகிறேன்; கோபித்துக் கொள்ளாதே!” என்று சொல்லிவிட்டுப் பூங்குழலி பின்வருமாறு பாடினாள்:
“பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்!
அறக்கண் எனத்தகும் அடிகள் ஆரூரரை
மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும்
உறக்க மில்லாமையும் உணர்த்த வல்லீர்களே!”
இவ்விதம் பாடிவிட்டு மெல்லிய குரலில், “அமுதா! நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.
“பூங்குழலி! கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து படகு வருவதைப் பார்த்தேன். நீயாக இருக்கலாம் என்று உத்தேசமாக எண்ணி இங்கே உன்னைத் தேடி வந்தேன். அதே சமயத்தில் பழுவூர் ஆட்கள் சிலரும் இந்தப் பக்கம் வந்தார்கள். படகில் உன்னைக் காணவில்லை. ஆனால் என் நண்பன் வல்லவரையனையும் இளவரசரையும் பார்த்தேன். வல்லவரையனிடம் பழுவூர் ஆட்கள் வருவது பற்றிக் கூறினேன். பிறகு இளவரசரை நாங்கள் இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம்.”
“ஐயோ! என்ன தவறு செய்துவிட்டீர்கள்! படகு என்ன ஆயிற்று!”
“படகை யாராவது பார்த்தால் சந்தேகம் ஏற்படும் என்று ஓடை நீரில் கவிழ்த்து விட்டோம்! ஏன் பூங்குழலி! பாட்டை ஏன் நிறுத்திவிட்டாய்! மிச்சத்தையும் பாடு!” என்று பிற்பகுதியை உரத்த குரலில் கூறினான் சேந்தன் அமுதன்.
“மறந்துவிட்டது அமுதா இந்தக் கோடிக்கரைக் குழகரைப் பற்றி ஒரு பாடல் உண்டே! உனக்கு அது நினைவிருக்கிறதா?- நினைவிருந்தால் பாடு!”
“ஓ! நினைவிருக்கிறது!” என்று சேந்தன் அமுதன் இரைந்து சொல்லிவிட்டுப் பாடினான்:
“கடிதாய்க் காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதானயலே இருந்தால் குற்றமாமோ?
கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே!”
பாட்டு முடிந்தவுடனே பூங்குழலி, “அத்தான்! என்னைத் தொடர்ந்து வந்தவன் போய்விட்டானா? பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறானா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
“நாம் இங்கே நின்ற பிறகு காலடி சத்தம் கேட்கவில்லை. அவன் இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ மறைந்து நிற்க வேண்டும். அவன் யார் என்று உனக்குத் தெரியுமா?”
பூங்குழலி இரைந்து, “தெரியாமல் என்ன? நன்றாய்த் தெரியும். கோடிக்கரை ஆந்தைகளைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பதுதானே? இதோ கேள்!
காடேன் மிகவால் இது காரிகை யஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற
வேடித் தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக் குழகா விடங்கோயில் கொண்டாயே!
பார்த்தாயா! அமுதா! சுந்தரமூர்த்தியின் காலத்தில் ஆந்தைகளும் கூகைகளும் இன்று போலவே இக்காட்டில் கத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது இக்காட்டில் மனிதர்கள் கூட ஆந்தைபோலச் சத்தமிடுகிறார்கள். சற்றுமுன் அத்தகைய குரல் ஒன்று கேட்டேன். அந்தத் தீய சழக்கர் யாராயிருக்கும் என்று உனக்கு ஏதாவது தெரியுமா?” இப்படி உரத்த குரலிலேயே பூங்குழலி கேட்டாள். கேட்டுவிட்டு, “எனக்கு அம்மாதிரி கத்த வருகிறதா என்று பார்க்கிறேன். ஆந்தைக் குரல் மாதிரி இருக்கிறதா, கேட்டுச் சொல்லு!” என்றாள்.
பின்னர், ஆந்தை மாதிரியே மூன்று தடவை குரல் கொடுத்தாள். “அப்படியே ஆந்தைக் குரல் மாதிரியே இருக்கிறது! தேனினும் இனிய குரலில் தெய்வீகக் கீதங்களைப் பாடுவாயே? இதை எங்கே கற்றுக் கொண்டாய்?” என்று அமுதன் கேட்டான்.
“மந்திரவாதி ஒருவனிடம் கற்றுக்கொண்டேன். மந்திரம் பலிப்பதற்கு இப்படி ஆந்தை போலக் கத்தத் தெரிந்திருக்க வேண்டுமா!”
“உனக்கு மந்திரவித்தைகூடத் தெரியுமா, என்ன?”
“ஏதோ கொஞ்சம் தெரியும். என்னுடைய மந்திரசக்தியைப் பரீட்சித்துப் பார்க்கிறாயா?”
“எப்படிப் பரீட்சிக்கிறது?”
“இப்பொழுது நாம் பேசுவதையெல்லாம் நமக்குப் பக்கத்தில் ஒருவன் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். நீ வேண்டுமானால் தேடிப் பார்!”
இவ்விதம் பூங்குழலி கூறி வாய் மூடுவதற்குள்ளே காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்டது. மந்திரவாதி ரவிதாஸன் மறைவிலிருந்து வெளியே வந்தான். “ஹா ஹா ஹா!” என்று சிரித்துக் கொண்டே வந்தான்.
“பெண்ணே! அப்படியா சமாசாரம்? உனக்குத் தந்திரம் தான் தெரியும் என்று நினைத்தேன்; மந்திரம்கூடத் தெரியுமா?” என்று கேட்டான்.
“அட பாதகா! நீதானா?”
“பெண்ணே! நான் யார், என்று உனக்குத் தெரியுமா?”
“இலங்கையில் இளவரசரைக் கொல்லப் பார்த்தவன் நீ! அது உன்னால் முடியவில்லை. ஆகையால் நடுக்கடலில் மந்திரம் போட்டுச் சுழற்காற்றை வரவழைத்து இளவரசரையும் அவருடைய சிநேகிதனையும் முழ்க அடித்து விட்டாய்!”
“அவர்கள் மூழ்கியது உனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்? நீ பார்த்தாயா?”
“இரண்டு பேருடைய உடல்களும் கரையில் வந்து ஒதுங்கின. பூதத் தீவிலே குழி தோண்டி அவர்களைப் புதைத்து விட்டு வந்தேன். துரோகி! உன் மந்திரத்தில் இடி விழ!”
“பெண்ணே! என்னை ஏமாற்றப் பார்க்காதே! என்னுடைய மந்திரத்திற்குப் பதில் மந்திரம் போட்டு நீ அவர்களை உயிர் பிழைக்கச் செய்யவில்லையா?”
“ஐயோ! அது எப்படி உனக்குத் தெரிந்தது?”
“இந்த ரவிதாஸனுக்குப் புறக் கண்ணைத் தவிர அகக் கண்ணும் உண்டு. நூறு காத தூரத்தில் நடப்பதையும் என்னுடைய மந்திரசக்தியினால் தெரிந்து கொள்வேன்.”
“அப்படியானால் என்னை எதற்காகக் கேட்கிறாய்?”
“உன்னைப் பரிசோதிப்பதற்காகக் கேட்கிறேன்! அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் இங்கேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவேன்!” என்றான் ரவிதாஸன்.
அவனுடைய புறக்கண்கள் அச்சமயம் நெருப்புத் தணல்களைப் போல் அனல்வீசி ஜொலித்தன.
“என்ன? உண்மையைச் சொல்கிறாயா, மாட்டாயா! ஓம் ஹ்ரீம் ஹ்ராம் வஷ்ட்!- இதோ என் மந்திரத்தின் சக்தியைக் காட்டப் போகிறேன்.”
பூங்குழலி பயத்தினால் நடுநடுங்கிச் சேந்தன் அமுதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவனிடம் மெல்லிய குரலில், “நான் இப்போது ஓடப் போகிறேன். நீ அவனைத் தடுத்து நிறுத்தப் பார்!” என்றாள்.
மந்திரவாதியைப் பார்த்து உரத்த குரலில், “என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் இருக்குமிடத்தைக் காட்டி விடுகிறேன்!” என்று கூறினாள்.
“என்னுடன் வா! காட்டுகிறேன்!” என்று சொல்லி விட்டுப் பாழடைந்த மண்டபத்துக்கு நேர்மாறான திசையை நோக்கி நடந்தாள்.
மந்திரவாதி அவளைப் பின் தொடரப் பார்த்தான். சேந்தன் அமுதன் பின்னாலிருந்து அவனைப் பிடித்து நிறுத்த முயன்றான்.
பூங்குழலி ஓடத் தொடங்கினாள். மந்திரவாதி சேந்தன் அமுதனை ஒரே தள்ளாகத் தலைகுப்புறத் தள்ளிவிட்டுப் பூங்குழலியைத் தொடர்ந்து ஓடினான்.
பூங்குழலி மானைப்போல் விரைந்து பாய்ந்து ஓடினாள். மந்திரவாதி மானைத் துரத்தும் வேடனைப்போல் அவளைப் பிடிக்க ஓடினான். ஆனால் அவளைப் பிடிப்பது எளிதில் முடிகிற காரியமாயில்லை.
மந்திரவாதி அவளைத் துரத்துவதை விட்டு நின்று விடலாமா என்று எண்ணியபோது பூங்குழலியும் களைத்துப் போனவளைப் போல் நின்றாள். மந்திரவாதி மறுபடியும் அவளைத் துரத்தினான். இருவருக்கும் பின்னால் சேந்தன் அமுதனும் தட்டுத் தடுமாறி விழுந்தடித்து ஓடிவந்து கொண்டிருந்தான். ஓடும்போது மறைந்த மண்டபத்துக்குப் போய் அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்யலாமா என்று அவன் அடிக்கடி நினைத்தான். அதே சமயத்தில் பூங்குழலியை மந்திரவாதியிடம் தனியாக விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனம் வரவில்லை.
பூங்குழலி ஒரு மேட்டின் மீது ஏறி நின்றாள். அங்கே சற்றுக் காத்திருந்ததோடு அல்லாமல், திரும்பிப் பார்த்து மந்திரவாதியைக் கைதட்டி அழைத்தாள். மந்திரவாதி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் அருகில் போய் நின்றான். அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவள் கன்னத்தில் நாலு அறை கொடுக்க வேண்டும் என்று அவன் எண்ணிய சமயத்தில் பூங்குழலி, “அதோ பார் என் காதலர்களை!” என்றாள்.
அவள் சுட்டிக்காட்டிய திசையை மந்திரவாதி பார்த்தான். முன்னொரு தடவை வந்தியத்தேவன் கண்ட காட்சியை அவனும் கண்டான். சதுப்பு நிலத்தில் ஆங்காங்கு தீப் பிழம்புகள் குப் குப் என்று தோன்றுவதும் கப் கப் என்று மறைவதுமாயிருந்தன. ரவிதாஸனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தின் காரணம் என்னவென்று தெரியுமென்றாலும் அச்சமயம் அவனுக்கு ரோமம் சிலிர்த்தது.
“மந்திரவாதி! உனக்கு மந்திரம் தெரியுமென்றால், இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளை ஓட்டுவதற்கு ஒரு மந்திரம் போடு பார்க்கலாம்! இவை என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கின்றன!” என்றாள்.
ரவிதாஸனுக்கு அளவில்லாத கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
“பெண்ணே! என்னை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாயா!” என்று கர்ஜித்தான்.
“உன்னை எதற்காக நான் ஏமாற்ற வேண்டும்?”
“இளவரசரும் வல்லவரையனும் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி நீ என்னை இழுத்து அடிக்க வில்லையா?”
“அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நான் சொன்னதை நீ நம்பவில்லை. வேறு என்ன செய்யட்டும்?”
“இளவரசர் இறந்தது உண்மைதானா? ஆணையிட்டுச் சொல்வாயா?”
“ஆணை எதற்கு! அதோ ஆகாசத்தைப் பார்!”
ரவிதாஸன் வானத்தை நோக்கினான். வால் நட்சத்திரம் தெரிந்தது.
“வால் நட்சத்திரம் தோன்றினால் அரச குலத்தில் மரணம் என்று உனக்குத் தெரியாதா? அப்படியே நடந்துவிட்டது!” என்றாள் பூங்குழலி.
“பெண்ணே! அப்படியானால் உன் கையில் உள்ள கெண்டியை இப்படிக் கொடு; அதில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா உன்னோடு ஓடி வந்ததில் எனக்குத் தாகம் எடுத்து விட்டது!…?”
பூங்குழலி திடீரென்று மறுபடி ஓட்டம் பிடித்தாள். மேட்டிலிருந்து தாவிக் குதித்து இறங்கிக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் தோன்றி மறைந்த சதுப்பு நிலப்பரப்பை நோக்கி ஓடினாள். ரவிதாஸன் ஆத்திரத்தினால் அறிவை இழந்தான். பூங்குழலியைப் பிடித்து அவளுடைய கழுத்தை நெறித்துக் கொன்று விடவேண்டும் என்று வெறியை அடைந்தான். தலைகால் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.
சிறிது தூரம் ஓடிய பிறகு பூங்குழலி சட்டென்று கொஞ்சம் குனிந்து நாலைந்தடி ஒரு புறமாக நகர்ந்து கொண்டாள். அதிக வேகமாக அவளைத் துரத்தி வந்த ரவிதாஸனால் அவள் நின்ற இடத்தில் நிற்க முடியவில்லை. அவளுக்கு அப்பால் சில அடிதூரம் வரையில் சென்று நின்றான். திரும்பி அவளைப் பிடிப்பதற்காகப் பாயப் பார்த்தான்; ஆனால் முடியவில்லை. கால்களுக்குத் திடீரென்று என்ன நேர்ந்து விட்டது? அவை ஏன் இப்பொழுது நகரவில்லை? அவை ஏன் சில்லிட்டிருக்கின்றன?
இது என்ன? உள்ளங்காலிலிருந்து சில்லிப்பு மேலே மேலே வந்து கொண்டிருக்கிறதே? இல்லை, இல்லை! கால்கள் அல்லவா கீழே கீழே போய்க் கொண்டிருக்கின்றன! ரவிதாஸன் குனிந்து பார்த்தான். ஆம், அவனுடைய கால்கள் கீழே புதை சேற்றில் அமிழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். ஒவ்வொரு அணுவாக, ஒவ்வொரு அங்குலமாக, அவன் கால்கள் கீழே சேற்றில் மெதுவாகப் புதைந்து கொண்டிருந்தன.
ரவிதாஸன் தன்னுடைய அபாய நிலையை உணர்ந்தான் சேற்றிலிருந்து வெளிவர முயன்றான். கால்களை உதறி எடுக்கப் பிரயத்தனம் செய்தான். அவனுடைய பிரயத்தனம் பலன் தரவில்லை.
கீழே சேற்றுக்கடியில் ஏதோ ஒரு பூதம் இருந்து அவனைப் பற்றி இழுப்பது போலத் தோன்றியது. பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.
“மந்திரவாதி! என்ன விழிக்கிறாய்? பூதத்தின் வாயில் அகப்பட்டுக் கொண்டாயா? மந்திரம் போட்டுப் பார்ப்பது தானே?” என்றாள்.
மந்திரவாதி ஒரு பக்கம் பீதியினாலும் மறுபக்கம் கோபத்தினாலும் நடு நடுங்கினான்.
“அடி பாவி! உன் வேலையா இது?” என்று கையை நெறித்தான்.
“என் கழுத்தைப் பிடித்து நெறிக்க வேண்டுமென்று நீ ஆசைப்பட்டாயல்லவா? அதற்குப் பதிலாக கையை நெறித்துக் கொள்!” என்றாள்.
ரவிதாஸன் கோபத்தை அடக்கிக்கொண்டு, “பெண்ணே! சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை நான் ஒன்றும் செய்யவில்லை, சற்றுக் கைகொடுத்து என்னைக் கரையிலே தூக்கிவிடு!” என்றான்.
பூங்குழலி ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்தாள். “உன்னைக் கரையேற்றிவிட என்னால் ஆகாது! உன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பேய் பிசாசுகளையெல்லாம் கூப்பிடு!” என்றாள்.
ரவிதாஸன் இதற்குள் தொடை வரையில் சேற்றில் புதைந்து போயிருந்தான். அவன் முகத்தைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. அவனுடைய கண்கள் கொள்ளிக் கட்டைகள் போலச் சிவப்புத் தணல் ஒளியை வீசின.
கைகளை நீட்டிப் புதை சேற்றுக்கு அப்பால் இருந்த கரையைப் பற்றினான். அங்கே நீண்டு வளர்ந்திருந்த கோரைப் புற்களின் அடிப்பகுதியைப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் சேற்றில் இருந்து வெளிவரப் பிரயத்தனம் செய்தான். ஆனால் புதைந்திருந்த கால்களை அசைக்கவும் முடியவில்லை.
“பெண்ணே, உனக்குப் புண்ணியம் உண்டு! என்னைக் காப்பாற்று!” என்று ஓலமிட்டான்.
இதற்குள்ளே அங்கே சேந்தன் அமுதன் வந்து சேர்ந்தான். ரவிதாஸனுடைய நிலைமை இன்னதென்பதை அவன் ஒரு நொடியில் அறிந்து கொண்டான். அவனுடைய கண்களில் இரக்கத்தின் அறிகுறி புலப்பட்டது.
பூங்குழலி அவனைப் பார்த்து, “வா, போகலாம்!” என்றாள்.
“ஐயோ! இவனை இப்படியே விட்டுவிட்டா போகிறது!”
“ஏன் சேற்றில் இவன் முழுவதும் புதைகிற வரையில் இருந்து பார்க்க வேண்டுமென்கிறாயா!”
“இல்லை, இல்லை! இவனை இப்படியே விட்டுவிட்டுப் போனால் வாழ்நாளெல்லாம் கனவு காணுவேன். இவனைக் கரையேற்றி விட்டுப் போகலாம்.”
“அத்தான்! இவன் என்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல நினைத்தான்.”
“அவனுடைய பாவத்துக்குக் கடவுள் அவனைத் தண்டிப்பார். நாம் காப்பாற்றிவிட்டுப் போகலாம்.”
“அப்படியானால் உனது மேல் துண்டைக் கொடு” என்றாள் பூங்குழலி.
அமுதன் தன் மேல் துண்டைக் கொடுத்தான். அதன் ஒரு முனையைப் புதைசேற்றுக் குழிக்கு அருகில் இருந்த ஒரு புதரின் அடிப்பகுதியில் பூங்குழலி கட்டினாள். இன்னொரு முனையை ரவிதாஸனிடம் கொடுத்தாள்.
“மந்திரவாதி! இதோ பார்! இந்தத் துண்டின் முனையைப் பிடித்துக் கொண்டிரு! அதிகம் பலங் கொண்டு இழுத்தால் புதர் வேரோடு வந்துவிடும். ஆகையால் மெல்ல பிடித்துக் கொண்டிரு. நீயாகக் கரையேற முயலாதே! பொழுது விடிந்ததும் யாராவது இந்தப் பக்கம் வருவார்கள். அவர்கள் உன்னைக் கரையேற்றுவார்கள்!’ என்றாள்.
“ஐயோ! இரவெல்லாம் இப்படியே கழிக்க வேண்டுமா? என்னால் முடியாது அதைக்காட்டிலும் என்னைக் கொன்று விட்டுப் போய் விடு!”
பூங்குழலி அவன் கூக்குரலைப் பொருட்படுத்த வில்லை. சேந்தன் அமுதனைக் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்ப ஓடத் தொடங்கினாள். அவர்கள் மேட்டின் மேல் ஏறி அப்பால் காட்டில் இறங்கும் வரையில் மந்திரவாதியின் ஓலக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.
அந்தக் குரல் மறைந்த பிறகு, “அத்தான்; நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய்! நீ எப்படி இங்கு வந்தாய்? எதற்காக?” என்று பூங்குழலி கேட்டாள்.
“பாதாளச் சிறை அனுபவத்துக்குப் பிறகு தஞ்சாவூரில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி பழுவூர் வீரர்களும், ஒற்றர்களும் வந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆகையால் பழையாறைக்குப் போனேன். குந்தவை தேவி என்னை இவ்விடம் அனுப்பினார். இளவரசருக்கு அபாயம் அதிகமாயிருப்பதாகவும், ஆகையால் அவரை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு சேர்த்து விட்டு வரும்படியும் வந்தியத்தேவனிடம் சொல்லும்படி கூறினார். எனக்கும் உன்னைப் பார்த்து உன் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசையாயிருந்தது…”
“பாட்டுக் கேட்பதற்கு நல்ல சமயம் பார்த்தாய்! இளையபிராட்டி கூறியது உண்மைதான். இளவரசருக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் இப்படி அப்படியல்ல. பகைவர்களின் சூழ்ச்சிகளோடு குளிர் காய்ச்சல் வந்து விட்டது.”
“ஆமாம், நானுந்தான் பார்த்தேன். நாங்கள் இரண்டு பேருமாக அவரைத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம். அதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனோம். பூங்குழலி! நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புத்த பிக்ஷுக்கள் வைத்திய சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். இளவரசரைக் குணப்படுத்தி விடுவார்கள்.”
“நாகைப்பட்டினத்துக்கு எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது?”
“கால்வாய் வழியாகத்தான்!”
“கால்வாய் வழியாக எப்படிப் போவது? படகைத் தொலைத்து விட்டீர்களே?”
“படகு தண்ணீரில் முழுகித்தானே இருக்கிறது? திரும்ப எடுத்து விட்டால் போகிறது!”
“அப்படியானால் இன்று இராத்திரியே கிளம்பிவிட வேண்டியதுதான். அந்தச் சிறிய படகில் நாம் எல்லோரும் போக முடியாதே!”
“வேண்டியதில்லை, பூங்குழலி! அதெல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோ ம். வல்லவரையன் இங்கிருந்து நேரே பழையாறைக்குப் போவான். நானும் நீயும் இளவரசரைப் படகில் ஏற்றி நாகைப்பட்டினம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது.”
பூங்குழலிக்குப் புல்லரித்தது. மீண்டும் இளவரசருடன் பிரயாணம்! கால்வாயில், படகில் நாகைப்பட்டினம் வரையில்! வழியில் அபாயம் ஒன்றும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.
இருவரும் மறைந்த மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தை நெருங்கியதும் சேந்தன் அமுதன் பலமாகக் கையைத் தட்டினான்.
“யார் அங்கே?” என்று வந்தியத்தேவனுடைய கடுமையான குரல் கேட்டது.
“நான்தான் சேந்தன்!”
“இன்னும் யார்?”
“என் மாமன் மகள்!”
வந்தியத்தேவன் மண்டபத்தின் வாசலில் வந்து எட்டிப் பார்த்தான்.
“வேறு யாரும் இல்லையே?”
“இல்லை, ஏன் சந்தேகம்?”
“மெல்லப் பேசுங்கள்; இளவரசர் தூங்குகிறார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இங்கே யாரோ ஒருவன் வந்தான். நீதானாக்கும் என்று நினைத்து வெளியில் வந்தேன். நீ இல்லை. மந்திரவாதியைப் போல் தோன்றியது.”
“அப்புறம்?”
“அச்சமயம் உன் பாட்டின் குரல் கிளம்பியது. பாடுவதற்கு நல்ல நேரம் பார்த்தாய் என்று எண்ணிக் கொண்டேன். நல்ல வேளையாக அதை மந்திரவாதியும் கேட்டுவிட்டுத் திரும்பிப் போனான். அவனை நீங்கள் பார்த்தீர்கள்?”
“பார்த்தோம்.”
“அவனை என்ன செய்தீர்கள்?”
“நான் ஒன்றும் செய்யவில்லை. இவள் தான் அவனைப் புதைசேற்றுக் குழியில் இடுப்புவரையில் இறக்கி நிறுத்திவிட்டு வந்திருக்கிறாள்!”
“இவளுடைய குரல் கூடக் கொஞ்சம் கேட்டதே!”
“ஆம், பூங்குழலியும் ஒரு பாட்டுப் பாடினாள்.”
“அதைக் கேட்டதும் இளவசருக்குக் சுய உணர்வு வந்தது போலத் தோன்றியது. ‘யார் பாடுகிறது?’ என்று கேட்டார். ‘ஓடக்காரப் பெண்’ என்றேன். பாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார்.”
பூங்குழலிக்கு மீண்டும் மெய்சிலிர்த்தது.
“இவள் பாட்டு மட்டுந்தானா பாடினாள்? ஆந்தை போலவும் கத்தினாளே!”
“அதுவும் என் காதில் விழுந்தது. காட்டில் ஏதோ அதிசயம் நடைபெறுகிறதென்று நினைத்துக் கொண்டேன். நீங்கள் – அத்தானும், மாமன் மகளும் – வசந்தோத்ஸவம் கொண்டாடுகிறீர்களோ என்று நினைத்தேன்…”
“இது என்ன வீண் பேச்சு?” என்றாள் பூங்குழலி.
“வேறு என்ன செய்வது? இரவை எப்படியேனும் கழித்தாக வேண்டும்!” என்றான் வந்தியத்தேவன்.
“இல்லை; பொழுது விடிந்து இங்கே இருந்தால் தப்பிப் பிழைக்க முடியாது. இராத்திரியே புறப்பட்டாக வேண்டும்.”
அச்சமயம் எங்கேயோ வெகு தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின. அந்த ஊளைச் சப்தத்துக்கு இடையில் ஆந்தைக் குரல் ஒன்றும் கேட்டது.
சேந்தன் அமுதன் நடுங்கினான். அவன் மனக் கண்ணின் முன்னால் மந்திரவாதி சேற்றில் புதைந்திருப்பதும், அவனைச் சுற்றி நரிகள் ஊளையிட்டுக் கொண்டு நெருங்கி நெருங்கி வருவதும், மந்திரவாதி ஆந்தையைப்போல் கத்தி நரிகளை விரட்டப் பார்ப்பதும் தென்பட்டன.
வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டார்கள். பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.
கால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் உதயமாகியிருந்தது. கரையில் இளவரசரை ஒரு மரத்தின் பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் பக்கத்தில் இருக்கச் செய்து விட்டு வந்தியத்தேவனும், சேந்தன் அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை மிகப் பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு வந்தார்கள்.
இளவரசர் கண் விழித்தார். மிக மெல்லிய குரலில் “தாகமாயிருக்கிறது!” என்றார்.
பக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலி கெண்டியிலிருந்த பாலை அவருடைய வாயில் ஊற்றினாள்.
சிறிதளவு பால் அருந்திய பிறகு இளவரசர், “பூங்குழலி, நீ தானா? சொர்க்க லோகத்தில் யாரோ ஒரு தேவ கன்னிகை என் வாயில் அமுதத்தை ஊற்றுவது போலத் தோன்றியது” என்றார்.
8. “ஐயோ! பிசாசு!”
கற்பக விருட்சம் பூங்குழலியின் மீது வர்ண மலர்களைச் சொரிந்தது. தேவலோகத்துக் கின்னரி வாத்தியங்கள் இன்ப கீதங்களைப் பொழிந்தன. ஏன்? பூங்குழலியின் மேனி நரம்புகளே யாழின் நரம்புகளாகித் தெய்வ கானம் இசைத்தன. இளவரசரின் கனிவு செறிந்த மொழிகள் அவளுக்கு அத்தகைய போதையை அளித்தன.
“இளவரசே! நான் தேவலோக கன்னிகை அல்ல; ஏழை ஓடக்காரப் பெண். தாங்கள் அருந்தியதும் தேவலோகத்து அமுதம் அல்ல. குழகர் கோயிலில் கிடைத்த பாலமுதம்!” என்றாள்.
“நீ தேவலோக கன்னிகையில்லையென்றால், நான் நம்பி விடுவேனோ? வருணனின் திருப்புதல்வி அல்லவா நீ? சமுத்திரகுமாரி! எத்தனை தடவை எனக்கு நீ உயிர் அளித்திருக்கிறாய்? உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?” என்றார் இளவரசர்.
“ஐயா! இன்னும் ஒரு பகலும், ஒரு இரவும் தங்களுடன் இருக்க இந்த ஏழையை அனுமதிக்க வேண்டும்” என்றாள் பூங்குழலி.
“அது எப்படி முடியும்? உடனே நான் பழையாறைக்குப் புறப்பட வேண்டுமே” என்றார் இளவரசர்.
“இல்லை, தங்களை நாகைப்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும்படி செய்தி வந்திருக்கிறது.”
“யாரிடமிருந்து?”
“இளைய பிராட்டியிடமிருந்துதான்!”
“அது யார் அங்கே, இன்னொருவன்? வந்தியத்தேவனுடன் படகை இழுத்து வருகிறவன்?”
“என் அத்தான் சேந்தன் அமுதன். இளையபிராட்டி அவனிடந்தான் செய்தி அனுப்பியிருக்கிறார். தங்களை நாகைப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹாரத்திற்கு அழைத்துச் செல்லும்படி.”
“ஆஹா! என் தமக்கையின் மனம் மாறி விட்டதா? எனக்கு முடிசூட்டும் ஆசை அகன்று விட்டதா? வெகு காலமாக எனக்குப் புத்த சங்கத்தில் சேரவேண்டும் என்ற ஆசை உண்டு. புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷு ஆவேன். தூர தூர தேசங்களுக்கு யாத்திரை செய்வேன்; சாவகம் – கடாரம் – மாயிருடிங்கம் – மாபப்பாளம் – சீனம்! ஆஹா என்னுடைய பாக்கியமே பாக்கியம்; பூங்குழலி! வா, போகலாம்!” என்று கூறி இளவரசர் எழுந்து நின்றார்.
அவருக்கு இன்னும் முழுநினைவு வரவில்லை, சுரவேகத்திலேயே பேசுகிறார் என்று பூங்குழலி சந்தேகித்தாள்.
அதே சமயத்தில் தூரத்தில் ஓலமிடும் குரல் ஒன்று கேட்டது.
இளவரசர் திடுக்கிட்டு நின்று, “பூங்குழலி! அது என்ன?” என்றார்.
“ஆந்தை கத்துகிறது ஐயா!” என்றாள்.
“இல்லை! அது மனிதக் குரல்! ஏதோ பெரும் அபாயத்தில் சிக்கியவனின் அபயக்குரல்! அவனைக் காப்பாற்றிவிட்டுப் போகலாம். புத்த சங்கத்தில் சேருவதற்கு முன்னால் ஒரு புண்ணிய காரியம் செய்யலாம்!” என்று இவ்விதம் கூறிவிட்டு இளவரசர் பாய்ந்து ஓட முயன்றார். அந்த முயற்சியில் திடீரென்று கீழே விழுந்தார். பூங்குழலி அவரைத் தாங்கிக் கொண்டாள்.
படகைக் கரை சேர்ந்தவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள். மீண்டும் உணர்ச்சியை இழந்துவிட்ட இளவரசரை அவர்கள் மெதுவாகத் தூக்கிக் கொண்டு போய்ப் படகில் பத்திரமாய்ச் சேர்த்துப் படுக்க வைத்தார்கள்.
கால்வாயில் படகு போக ஆரம்பித்தது. இளவரசரைத் தவிர்த்து, மற்ற மூவரும் இட நெருக்கடியுடன் அதில் உட்கார்ந்திருந்தார்கள்.
வந்தியத்தேவன், “பூங்குழலி! நாலுபேரை இந்தப் படகு தாங்குவது கடினம். எப்படியும் நான் உங்களிடம் விடை பெற்றுக் கொள்ள வேண்டியவன். இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். இளவரசரைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு அதிகம் நான் சொல்ல வேண்டியதில்லை!” என்று சொன்னான்.
அவனுடைய குரல் தழுதழுத்தது. நிலாக் கிரணம் அவன் முகத்தில் விழுந்தபோது கண்களில் முத்துத் துளிகள் ஒளிவீசித் திகழ்ந்தன.
“கோடிக்கரைக் காடு தாண்டிய பிறகு இறங்கிச் செல்லலாமே? என் குதிரையையும் அங்கேதான் நிறுத்தி வைத்திருக்கிறேன். அடையாளம் நினைவிருக்கிறதல்லவா?” என்றான் சேந்தன் அமுதன்.
“வேண்டாம். நான் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். குழகர் கோயில் பிராகாரதில் சற்று நேரம் படுத்துத் தூங்கிவிட்டுப் பொழுது விடிவதற்குள் எழுந்து புறப்படுகிறேன். இல்லாவிடில் நாளைக்குப் பிரயாணம் செய்ய முடியாது! வழியில் எவ்வளவு தடங்கல்களோ!” என்றான் வந்தியத்தேவன்.
பூங்குழலி அத்தனை நேரமும் தன் மடியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பொட்டணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இந்தா! குழகர் கோயில் பிரசாதம். இதை சாப்பிட்டு விட்டுத் தூங்கு!” என்றாள்.
“நீங்களும் ஒன்றும் சாப்பிடவில்லையே, உங்களுக்கு வேண்டாமா?”
“கோடிக்கரையிலிருந்து காத தூரம் கால்வாயில் போய் விட்டால் எத்தனையோ கிராமங்கள். நானாவது சேந்தனாவது போய் உணவு சம்பாதித்துக் கொண்டு வருவோம். உன் விஷயம் அப்படியல்ல. நீ ஒருவர் கண்ணிலும் படாமல் பழையாறை போய்ச் சேர வேண்டும் அல்லவா?”
“படகில் இளவரசர் இருக்கிறார் என்பதை நீங்களும் மறந்து விடக்கூடாது.”
“இந்தப் படகில் இருப்பவர் இளவரசர் என்று யார் நம்புவார்கள்? அதைப்பற்றிக் கவலைப்படாதே! எங்கள் பொறுப்பு. இந்த ஓட்டைப் படகை யாரும் கவனிக்க மாட்டார்கள்.”
“சரி, அப்படியானால் இங்கேயே நான் இறங்கிக் கொள்கிறேன்.”
அச்சமயம் மறுபடியும் அந்த ஓலக்குரல் கேட்டது. “ஆ! அது என்ன?” என்று இளவரசர் கேட்டுவிட்டு மறுபடியும் உணர்வை இழந்தார்.
பூங்குழலி எழுந்து நின்றாள்.
“முடியாது; என்னால் முடியாது, இளவரசருக்குத் தெரிந்தால் என்னை மன்னிக்க மாட்டார். இன்னும் கொஞ்ச நேரம் படகில் இரு. அந்த மந்திரவாதியைச் சேற்றிலிருந்து எடுத்து விட்டுவிட்டு வருகிறேன். இங்கிருந்து அந்த இடம் கிட்டத்தான் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே படகிலிருந்து கால்வாயின் கரையில் குதித்தாள்.
“அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன். அந்தப் பாதகனிடம் உன்னைத் தனியாக விடமாட்டேன்” என்றான் சேந்தன் அமுதன்.
“இல்லை, அமுதா! நீ படகில் இரு! இளவரசரைப் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். நான் பூங்குழலியுடன் போய் வருகிறேன். எனக்கும் அந்த மந்திரவாதியைப் பார்க்க வேண்டிய காரியம் இருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் பூங்குழலியைப் பின் தொடர்ந்து வேகமாக ஓடினான் வந்தியத்தேவன்.
பூங்குழலியின் மனக்கண் முன்னால் மந்திரவாதி மார்பளவு சேற்றில் புதைந்திருக்க, அவனைச் சுற்றி நரிகள் நின்று அவனைப் பிடுங்கித் தின்னப் பார்க்கும் பயங்கரக் காட்சி தோன்றிக் கொண்டிருந்தது. அதற்கிடையே இளவரசர் அவளைப் பார்த்து “பெண்ணே நீ கொலை பாதகி!” என்று குற்றம் சாட்டும் காட்சியும் தோன்றியது! இந்தக் காட்சிகள் அவளுடைய கால்களுக்கு மிக்க விரைவைக் கொடுத்தன. மந்திரவாதியை அமிழ்த்திய சேற்றுப் பள்ளத்தை அதி விரைவில் நெருங்கினாள். அங்கே மந்திரவாதியைக் காணாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தாள்.
பின் தொடர்ந்து வந்த வந்தியத்தேவன், அவள் பக்கம் நெருங்கியதும் அவள் தயங்கி நிற்பதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
“வேறு ஒரு சேற்றுப் பள்ளமாயிருக்கலாம். கோடிக்கரையில் எத்தனையோ பள்ளங்கள் உண்டு அல்லவா? நீ மறந்து போயிருப்பாய்!” என்றான்.
புதரில் ஒரு முனை கட்டியிருந்த சேந்தன் அமுதனின் மேல் துண்டைப் பூங்குழலி சுட்டிக் காட்டினாள். பாவம்! அவளால் பேச முடியவில்லை.
“சேற்றில் அமிழ்ந்திருப்பான் என்று நினைக்கிறாயா? இல்லை, இல்லை! ரவிதாஸனை அப்படியெல்லாம் கொன்று விட முடியுமா? அவனுக்கு நூறு உயிர் ஆயிற்றே? தப்பிப் போயிருப்பான்!” என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் புதரில் கட்டப்பட்டிருந்த துண்டை அவிழ்த்து எடுத்துக் கொண்டான். பூங்குழலிக்கு ஆறுதலாக அவ்விதம் சொன்னானே தவிர, அவன் மனத்திற்குள், ‘ரவிதாஸன் மாண்டு தான் போயிருப்பான்; அவனுக்கு இந்தக் கோர மரணம் வேண்டியதுதான்!’ என்ற எண்ணமும் தோன்றியது.
இருவரும் அங்கே மேலும் நிற்பதில் பயனில்லை என்பதை ஒருங்கே உணர்ந்தார்கள். மீண்டும் கால்வாயை நோக்கி நடந்தார்கள்.
கால்வாயின் கரைகளை அங்கே இருபுறமும் மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு நின்று இரு உருவங்கள் எட்டிப் பார்த்தது தெரிந்தது. அவற்றில் ஒன்று ஆண் உருவம்; இன்னொன்று பெண் உருவம்.
“அதோ!” என்று பூங்குழலி சுட்டிக் காட்டினாள்.”
“ஆமாம்; அவர்கள் யார் என்று தெரிகிறதா?”
“மந்திரவாதி ஒருவன்! இன்னொருத்தி என் அண்ணன் மனைவி எனக்கு முன்னால் அவள் வந்து மந்திரவாதியை விடுவித்திருக்கிறாள்.”
“நல்லதாய்ப் போயிற்று.”
“நல்லது ஒன்றுமில்லை. கால்வாயில் படகு வருவதை அவர்கள் உற்றுப் பார்க்கிறார்களே?”
அச்சமயம் இரண்டு உருவங்களில் ஒன்று திரும்பி இவர்கள் வரும் திசையைப் பார்த்தது. உடனே இரண்டு உருவங்களும் புதர்களும் அடியில் மறைந்து விட்டன. “ஐயோ! அவர்கள் நம்மையும் பார்த்து விட்டார்கள்!”
“பேசாமல் என்னுடன் வா! நான் ஒரு யுக்தி செய்கிறேன். நான் என்ன சொன்னாலும் ஆச்சரியப்படாதே! என்னை ஒட்டியே பேசு!” என்றான் வந்தியத்தேவன்.
இருவரும் மேற்கூறிய உருவங்கள் நின்ற இடத்துக்குச் சமீபமாகப் போனார்கள். அந்த இடத்தைக் கடந்து சிறிது அப்பால் சென்று கால்வாயின் ஓரமாக உட்கார்ந்து கொண்டார்கள். பின்னால் புதரில் மறைந்திருந்தவர்களுக்குத் தங்கள் பேச்சு நன்றாய்க் கேட்கும் என்று வந்தியத்தேவன் நிச்சயப்படுத்திக் கொண்டான்.
“பூங்குழலி! இதோ பார்! ஏன் கவலைப்படுகிறாய்? மந்திரவாதி செத்து ஒழிந்து போனான். போனதே க்ஷேமம்” என்றான் வந்தியத்தேவன்.
“ஐயோ! என்ன பயங்கரமான சாவு!” என்றாள் பூங்குழலி.
“கொலை செய்தது செய்துவிட்டு, இது என்ன பரிதாபம்?”
“ஐயோ! நானா கொலை செய்தேன்?”
“பின்னே அவன் சேற்றில் விழச் செய்தது யார்? நீ தானே? திடீரென்று அப்புறம் உனக்குப் பச்சாத்தாபம் வந்துவிட்டது. தப்புவிக்கலாம் என்று வந்தாய்! அதற்குள் அவனை சேறு விழுங்கிவிட்டது. தப்புவிக்கத்தான் வந்தாயோ, அல்லது செத்துப் போய் விட்டானா என்று பார்ப்பதற்குத்தான் வந்தாயோ. யார் கண்டது?”
“உன்னை யார் என்னைத் தொடர்ந்து வரச் சொன்னது?”
“வந்ததினால்தானே நீ செய்த கொலையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது? அடி கொலை பாதகி!”
“நானா கொலை பாதகி!”
“ஆம், நீ கொலை பாதகிதான்! நான் மட்டும் யோக்கியன் என்று சொல்கிறேனா? அதுவும் இல்லை. நான் இளவரசரைக் கடலில் முழுக அடித்துக் கொன்றேன். நீ மந்திரவாதியைச் சேற்றில் அமுக்கிக் கொன்றாய். அதற்கும் இதற்கும் சரியாகப் போய் விட்டது. நான் செய்த கொலையைப் பற்றி நீ வெளியில் சொல்லாமலிருந்தால், நீ செய்த கொலையைப் பற்றி நானும் யாரிடத்திலும் சொல்லவில்லை!”
“இளவரசரைக் கொன்றவன் நீதானா? சற்றுமுன் அவரைப் பார்க்கவேயில்லை என்று சொன்னாயே?”
“வேண்டுமென்றுதான் அப்படிச் சொன்னேன். இனிமேல் அப்படி உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நான் கூறியதை ஒப்புக் கொள்வாயா, மாட்டாயா?”
“மாட்டேன் என்று மறுத்தால்?”
“உடனே நந்தினி தேவியிடம் போய் நீ மந்திரவாதியைச் சேற்றில் அமுக்கிக் கொன்றதைக் கூறுவேன். நான் செய்த கொலைக்குச் சாட்சியம் இல்லை; உன் கொலைக்குச் சாட்சியம் உண்டு…”
“நந்தினி என்னை என்ன செய்துவிடுவாள்?”
“வேறொன்றும் செய்யமாட்டாள். உன்னைப் பூமியில் கழுத்து வரையில் புதைத்து யானையின் காலினால் இடறும்படி செய்வாள்!”
“ஐயோ! என்ன பயங்கரம்!”
“வேண்டாம் என்றால், நான் கூறுகிறபடி செய்வதாக ஒப்புக்கொள்.”
“என்ன செய்ய வேண்டும்?”
“அதோ உன் அத்தான் கொண்டு வருகிறானே, அந்தப் படகில் ஏறிக்கொள். இரண்டு பேரும் நேரே இலங்கைக்குப் போய்விட வேண்டும். அங்கே போய் உன் இளவரசரை நினைத்து அழுதுகொண்டிரு!”
“எதற்காக நான் இலங்கை போகவேண்டும்? இங்கேயே இருந்தால் உனக்கு என்ன?”
“ஆ! நீ போய் பழுவேட்டரையரிடம் என்னை பற்றிச் சொல்லிவிட்டால்! அவருக்கு என்ன இருந்தாலும் இளவரசர் பேரில் அபிமானம் உண்டு. என்னைப் பழி வாங்கப் பார்ப்பார்; எனக்கு இந்த உலகில் இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது.”
“அட பாவி! இளவரசரை நீ ஏன் கொன்றாய்! அதையாவது சொல்லிவிடு!”
“சொன்னால் என்ன? நன்றாகச் சொல்லுகிறேன். இளவரசரும் அவருடைய தமக்கையும் சேர்ந்து, ஆதித்த கரிகாலரின் இராஜ்யத்தைப் பறிப்பதற்குச் சதி செய்தார்கள். ஆதித்த கரிகாலர் என்னுடைய எஜமானர். அவருடைய விரோதி என்னுடைய விரோதி. அதனால்தான் இளவரசரைக் கொன்றேன். தெரிந்ததா?”
“இந்த மகாபாவத்துக்கு நீ தண்டனை அநுபவிப்பாய்.”
“அதைப்பற்றி நீ கவலைப்படாதே! நான் சொன்னபடி நீ செய்யப்போகிறாயா, இல்லையா?”
“செய்யாவிட்டால் வேறு வழி என்ன? அதோ படகு வருகிறது, போய் ஏறிக் கொள்கிறேன்.”
“இதோ பார்! நன்றாய்க் கேட்டுக் கொள். படகில் ஏறியதும் நேரே கடலை நோக்கிச் செல்ல வேண்டும். கோடிக்கரைப் பக்கம் திரும்பினாயோ, உன் கதி அதோ கதிதான்! இங்கேயே இருந்து நான் உங்கள் படகைப் பார்த்துக் கொண்டிருப்பேன். படகு கடலை அடைந்த பிறகுதான் இங்கிருந்து நகருவேன்.”
“சரி சரி! இங்கேயே இரு! உன்னை நூறு நரிகள் பிடுங்கித் தின்னட்டும்!” வந்தியத்தேவன் செய்த சமிக்ஞையைப் பார்த்து விட்டுப் பூங்குழலி அங்கிருந்து விரைந்து போய்ப் படகில் ஏறிக் கொண்டாள். படகு மேலே சென்றது. வந்தியத்தேவன் அவளிடம் கூறியபடி அங்கேயே உட்கார்ந்திருந்தான். அரை நாழிகை சென்றது. படகு கால்வாயில் வெகு தூரம் வரை சென்று மறைந்தது.
திடீரென்று வந்தியத்தேவனுக்குப் பின்னால் ‘ஹா ஹா ஹா’ என்ற ஒரு பயங்கரச் சிரிப்பு கேட்டது. வந்தியத்தேவன் திடுக்கிட்டவன் போலப் பாசாங்கு செய்து, சட்டென்று எழுந்து நின்று பார்த்தான்.
மந்திரவாதி புதர்களுக்கு மத்தியில் எழுந்து நின்று பேய் சிரிப்பது போலப் பயங்கரமாய்ச் சிரித்தான்.
“ஐயோ! பிசாசு” என்று அலறிக்கொண்டு வந்தியத்தேவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
9. ஓடத்தில் மூவர்
பொழுது புலர்ந்தது, கருநிற அழகியான இரவெனும் தேவி உலக நாயகனை விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்ல நேர்ந்தது. நாயகனைத் தழுவியிருந்த அவளுடைய கரங்கள் இலேசாகக் கழன்று விழுந்தன. வாழ்க்கையிலே கடைசி முத்தம் கொடுப்பவளைப் போல் கொடுத்து விட்டு இரவெனும் தேவி இன்னும் தயங்கி நின்றாள். “மாலையில் மறுபடியும் சந்திப்போம். நாலு ஜாம நேரந்தானே இந்தப் பிரிவு? சந்தோஷமாகப் போய்வா!” என்றது உலகம். இரவு தயங்கித் தயங்கி உலகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்றது.
உள்ளத்திலே அன்பில்லாத கள்ளக் காதலனைப் போல் இரவு பிரிந்து சென்றதும் உலகம் மகிழ்ச்சியினால் சிலிர்த்தது. “ஆகா; விடுதலை!” என்று ஆயிரமாயிரம் பறவை இனங்கள் பாடிக் களித்தன. மரங்களிலும், செடிகளிலும் மொட்டுக்கள் வெடித்து மலர்ந்தன. எங்கிருந்தோ வண்டுகள் மந்தை மந்தையாக வந்து இதழ் விரிந்த மலர்களைச் சூழ்ந்து கொண்டு இன்னிசை பாடிக் களித்தன. விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள தட்டாரப் பூச்சிகள் நாலா பக்கங்களிலும் ஆனந்தக் கூத்தாடின.
கீழ்வானத்தில் பொன்னிறம் கண்டது. வானச் சுடர்கள் ஒவ்வொன்றாக ஒளி மங்கி மறைந்தன. இதுவரையில் வானவீதியில் பவனி வந்து கொண்டிருந்த பிறைச் சந்திரன் “நிற்கட்டுமா? போகட்டுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
ஓடையில் படகு மெள்ள மெள்ளச் சென்று கொண்டிருந்தது. பட்சிகளின் கோஷ்டி கானத்தோடு துடுப்பு தண்ணீரைத் தள்ளும் சலசல சப்தமும் பூங்குழலியின் செவிகளில் விழுந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். ஒரு கிளையில் வெடித்த இரண்டு அழகிய நீலநிற மொட்டுக்கள் ஒருங்கே மலர்ந்தது போல் அவளுடைய கண்ணிமைகள் திறந்தன. எதிரே இளவரசரின் பொன்முகம் தோன்றியது. இன்னும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கந்தானா? அல்லது சுரவேகத்தில் இன்னமும் உணர்ச்சியற்றிருக்கிறாரா? தெரியவில்லை. எனினும் அவருடைய திருமுகம் எவ்வளவு பிரகாசமாயிருக்கிறது!
அப்பால் சேந்தன் அமுதன் துடுப்புத் தள்ளிக் கொண்டிருந்தான்.
“பூங்குழலி! ஏன் அதற்குள் விழித்துக் கொண்டாய்? இன்னும் சற்று நேரம் தூங்குவதுதானே?” என்றான்.
பூங்குழலி புன்னகை பூத்தாள். முகத்திலிருந்த இதழ்களிலே மட்டும் அவள் புன்னகை செய்யவில்லை. அவளுடைய திருமேனி முழுதும் குறுநகை பூத்தது.
காட்டிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவள் பூங்குழலி. ஆயினும் பட்சிகளின் கானமும், வண்டுகளின் கீதமும் இவ்வளவு இனிமையாக அவளுடைய செவிகளில் என்றைக்கும் தொனித்ததில்லை.
“அத்தான்! உதய ராகத்தில் ஒரு பாட்டுப்பாடு!” என்றாள் பூங்குழலி.
“நீ இருக்குமிடத்தில் நான் வாயைத் திறப்பேனா? நீ தான் பாடு!” என்றான் சேந்தன் அமுதன்.
“இராத்திரி இருளடர்ந்த காட்டில் பாடினாயே?”
“காரிய நிமித்தமாகப் பாடினேன். இப்போது நீ பாடு!”
“எனக்கும் பாட வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் இளவரசருக்குத் தொந்தரவாயிருக்குமல்லவா?”
“எனக்குத் தொந்தரவு ஒன்றுமில்லை. இரண்டு பேரும் சேர்ந்து பாடுங்கள்!” என்றார் அருள்மொழிவர்மர்.
பூங்குழலி வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டாள்.
“படகு எங்கே போகிறது?” என்று இளவரசர் கேட்டார்.
“நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்திற்கு” என்றாள் பூங்குழலி.
“அப்படியானால் இராத்திரி நான் கண்டது கேட்டதெல்லாம் கனவல்லவா? உண்மைதானா?”
“ஆம், ஐயா! இதோ இவர்தான் தங்கள் தமக்கையாரிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்.”
“இளையபிராட்டி கூறியதையெல்லாம் விவரமாகச் சொல்லு, அமுதா! என்னைப் புத்த சங்கத்தில் சேர்ந்து விடும்படிதானே என் தமக்கை சொல்லி அனுப்பினார்?”
இதற்கு என்ன விடை சொல்வதென்று அமுதன் தயங்கிய போது, குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. பூங்குழலியும் சேந்தன் அமுதனும் திடுக்கிட்டார்கள்.
இளவரசரின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை.
“என் நண்பன் எங்கே? வாணர் குலத்து வீரன்?” என்று இளவரசர் கேட்டார். கேட்டுவிட்டுக் கண்கள் மூடிக் கொண்டார்.
சிறிது நேரத்துக்குள் குதிரைமீது வந்தியத்தேவன் தோன்றினான். படகு நின்றது, வந்தியத்தேவன் குதிரைமீதிருந்து இறங்கி வந்தான்.
“ஒன்றும் விசேஷமில்லை. நீங்கள் பத்திரமாயிருக்கிறீர்களா என்று பார்த்துவிட்டுப் போக வந்தேன். இனி அபாயம் ஒன்றுமில்லை” என்றான் வந்தியத்தேவன்.
“மந்திரவாதி?” என்று பூங்குழலி கேட்டாள்.
“இந்தப் படகில் இளவரசர் இருக்கிறார் என்ற சந்தேகமே அவனுக்கில்லை. நான் கூறியதை அவன் அப்படியே நம்பி விட்டான்!”
“அவனைப் பார்த்தாயா?”
“பார்த்தேன், ஆனால் அவனுடைய பிசாசைப் பார்த்ததாகப் பயந்து பாசாங்கு செய்தேன்.”
“உன்னைப் போல பொய் சொல்லக் கூடியவனை நான் பார்த்ததேயில்லை.”
“பொய் என்று சொல்லாதே! கற்பனா சக்தி என்று சொல்லு. இளவரசர் எப்படியிருக்கிறார்?”
“நடுநடுவே விழித்துக்கொண்டு இரண்டு வார்த்தை சொல்கிறார்; அப்புறம் நினைவு இழந்து விடுகிறார்.”
“இந்தச் சுரமே அப்படித்தான்.”
“எத்தனை நாளைக்கு இருக்கும்?”
“சில சமயம் ஒரு மாதம்கூட இருக்கும். சூடாமணி விஹாரத்தில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள். பிக்ஷுக்கள் வைத்தியம் செய்தால், இரண்டு வாரத்தில் குணப்படுத்தி விடுவார்கள். ஜாக்கிரதை, பூங்குழலி! உன்னை நம்பித்தான் இளவரசரை ஒப்படைத்து விட்டுப் போகிறேன். உன் அத்தான் எங்கேயாவது கோவில் கோபுரத்தைக் கண்டால், தேவாரம் பாடிக்கொண்டு சுவாமி தரிசனத்துக்குப் போய் விடுவான்!”
சேந்தன்அமுதன், “உன்னோடு பழகிய பிறகு அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். சிவ கைங்கரியம் செய்யும் ஆசைகூட எனக்குக் குறைந்துவிட்டது!” என்றான்.
“என்னால் குறைந்துவிட்டதா? அல்லது இந்தப் பெண்ணினாலா? உண்மையைச் சொல்!”
சேந்தன் அமுதன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் “குதிரையை நான் சொன்ன இடத்தில் கண்டுபிடித்தாயா?” என்று கேட்டான்.
“குதிரை என்னைக் கண்டுபிடித்தது. இது நான் உன்னிடம் தஞ்சையில் விட்டு வந்த குதிரை அல்லவா?”
“ஆமாம்.”
“இருட்டில் இது அடர்ந்த காட்டுக்குள்ளே என்னைப் பார்த்துவிட்டுக் கனைத்தது. அராபியர்களிடம் நான் அகப்பட்டுக் கொண்டதில் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன், அமுதா! குதிரைகளை வெறுங்காலோடு ஓடச்செய்வது பாவம். குளம்புக்கு அடியில் இரும்புக் கவசம் அடித்து ஓட்டவேண்டும். முதன் முதலில் நான் பார்க்கும் கொல்லுப்பட்டறையில் இதன் குளம்புக்குக் கவசம் அடிக்கச் சொல்லப்போகிறேன். சரி, சரி! அதையெல்லாம் பற்றிப் பேச நேரமில்லை. மறுபடியும் உங்களையும் இளவரசரையும் பார்ப்பேனோ என்னமோ, தெரியாது. இளவரசர் மறுபடி விழித்தால் நான் பழையாறைக்குப் போகிறேன் என்று சொல்லுங்கள். அங்கிருந்து விரைவில் செய்தி அனுப்புவதாகவும் சொல்லுங்கள். அப்போதுதான் நிம்மதியாக இருப்பார்.”
வந்தியத்தேவன் குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு போனான். விரைவில் இவர்களுடைய பார்வையிலிருந்து அவன் மறைந்தான்.
இருபுறமும் தாழம் புதர்கள் அடர்ந்திருந்த ஓடைக் காலின் வழியாகப் படகு போய்க் கொண்டிருந்தது. பொன்னிறத் தாழம்பூக்களும், தந்த வர்ண வெண் தாழம்பூக்களும் இருபக்கமும் செறிந்து கிடந்தன. அவற்றின் நறுமணம் போதையை உண்டாக்கிற்று. சில இடங்களில் ஓடைக் கரையில் புன்னை மரங்கள் வளர்ந்திருந்தன. சில இடங்களில் கடம்ப மரங்களும் இருந்தன. முத்துநிறப் புன்னை மலர்களும், குங்கும வர்ணக் கடம்ப மலர்களும் ஓடைக் கரைகளில் சொரிந்து கிடந்தன.
பூலோகத்திலிருந்து புண்ணியசாலிகள் சொர்க்கத்திற்குப் போகும் பாதை ஒன்று இருந்தால், அது இப்படித்தான் இருக்கும் என்று பூங்குழலிக்குத் தோன்றியது.
இடையிடையே கிராமம் தென்பட்ட இடத்தில் சேந்தன் அமுதன் சென்று இளவரசருக்குப் பாலும், பூங்குழலிக்கு உணவும் வாங்கிக் கொண்டு வந்தான்.
இளவரசர் கண்விழித்த போதெல்லாம் பூங்குழலி சற்று விலகி நின்றாள். நேருக்கு நேர் அவரைப் பார்க்க முடியாமல் அங்குமிங்கும் பார்த்தாள். அவர் உணர்விழந்திருந்த நேரங்களில் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சேந்தனுடன் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டுமிருந்தாள். சில சமயம் இரண்டு பேரும் சேர்ந்து பாடிக் களித்தார்கள்.
சேந்தன் அமுதன் உணவு தேடிக் கிராமங்களுக்குச் சென்ற சமயங்களில் பூங்குழலி இளவரசரின் நெற்றியைத் தடவிக் கொடுத்தும், தலையைக் கோதிவிட்டும் பணிவிடை செய்தாள். அப்போதெல்லாம் அவள் உள்ளம் பொங்கி, உடல் சிலிர்த்து, பரவச நிலையிலிருந்தாள். இம்மாதிரி அவள் எத்தனை எத்தனையோ பூர்வ ஜன்மங்களில் அவருக்குப் பணிவிடை செய்தது போன்ற உணர்வு தோன்றியது. உருவமில்லாத ஆயிரமாயிரம் நினைவுகள் இறகுகளைச் சடசடவென்று அடித்துக் கொண்டு அவளுடைய உள்ளத்தில் கும்பல் கும்பலாகப் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தன.
ஒரு பகலும் ஓர் இரவும் அவர்கள் அந்த ஓடைக்கால் வழியாகப் படகில் சென்றார்கள். பூங்குழலியும், சேந்தனும் முறை போட்டுக்கொண்டு அவ்வப்போது சிறிது நேரம் கண்ணயர்ந்தார்கள். கண்ணயர்ந்த நேரத்தில் உருவந் தெரியாத இன்பக் கனவுகள் பலவற்றைப் பூங்குழலி கண்டாள்.
மறுநாள் சூரியோதய நேரத்தில் உலகமே பொன்னிறமாக ஜொலித்த வேளையில், படகு நாகைப்பட்டினத்தை அடைந்தது. நாகைப்பட்டினத்தின் அருகில் அந்த ஓடையிலிருந்து ஒரு கிளை பிரிந்து சூடாமணி விஹாரத்திற்கே நேராகச் சென்றது. அந்தக் கிளை வழியில் படகைக் கொண்டு போனார்கள். புத்த விஹாரத்தின் பின்புறத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
அச்சமயம் அந்தப் புகழ்பெற்ற சூடாமணி விஹாரத்தில் ஏதோ குழப்பம் நேர்ந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. விஹாரத்தின் வாசலில் ஜனக்கூட்டத்தின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. பிக்ஷுக்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
படகிலிருந்து மூவரும் கரையில் இறங்கினார்கள். சேந்தன் அமுதன் தான் விஹாரத்துக்குச் சென்று, குழப்பத்தின் காரணம் என்னவென்று தெரிந்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனான்.
10. சூடாமணி விஹாரம்
பூம்புகார் என்னும் காவிரிப் பட்டினத்தைக் கடல் கொள்ளை கொண்டு போய்விட்டது அல்லவா? அதற்குப் பிறகு சோழ வளநாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினம் என்ற அந்தஸ்தை நாகைப்பட்டினம் நாளடைவில் அடைந்தது. பொன்னி நதி பாய்ந்த இயற்கை வளம் செறிந்திருந்த சோழ நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொள்ள எத்தனையோ அயல்நாட்டார் ஆவல் கொண்டிருந்தனர். பெரிய பெரிய மரக்கலங்களிலே வர்த்தகப் பண்டங்கள் வந்து இறங்கியபடி இருந்தன. முத்தும், மணியும், வைரமும், வாசனைத் திரவியங்களும் கப்பல்களில் வந்து இறங்கியதோடு அரபு நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்காக வந்து இறங்கின.
ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனாரின் காலத்தில் நாகைப்பட்டினம் சிறந்த மணிமாட நகரமாயிருந்தது. அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூரர்,
“காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே!”
என்று வர்ணித்தார். கடல் நாகைக் காரோணத்தில் மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம் ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார் என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா? மற்ற ஊர்களிலே போலப் பொன்னும், மணியும், ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு, நாகைப்பட்டினத்திலே ஓர் உயர்ந்த சாதிக் குதிரையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
“நம்பிதாமும் அந்நாட் போய்நாகைக் காரோணம்பாடி
அம்பொன்மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா”
ஆகியவை பெற்றுக்கொண்டு திருவாரூர் திரும்பிச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது.
நாகைப்பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய அரபு நாட்டுக் குதிரைகளைப் பார்த்ததும் நாயனாருக்கும் குதிரை ஏறிச் சவாரி செய்யவேண்டும் என்று தோன்றி விட்டது போலும்!
நாகைப்பட்டினத்தைப் பற்றிப் புராணம் வர்ணிப்பது ஒருபுறமிருக்க, சரித்திர பூர்வமான கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அந்நகரைப் பற்றிச் சொல்லியிருக்கின்றன.
“பல கோவில்களும், சத்திரங்களும், நீர் நிலைகளும், சோலைகளும், மாட மாளிகைகளும் நிறைந்த வீதிகளையுடைய நாகைப்பட்டினம்” என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் அந்நகரை வர்ணிக்கின்றன.
அதே ஆனைமங்கலச் செப்பேடுகள், அந்நாளில் நாகைப்பட்டினத்தில் புகழ்பெற்று விளங்கிய சூடாமணி விஹாரம் என்னும் பௌத்த ஆலயத்தைப் பற்றியும், அதன் வரலாற்றையும் கூறுகின்றன.
மலாய் நாடு என்று இந்நாளில் நாம் குறிப்பிடும் தீபகற்பம் அக்காலத்தில் ஸ்ரீ விஜய நாடு என்னும் பெயரால் பிரசித்தி பெற்றிருந்தது. அந்த நாட்டில் ஒரு முக்கிய நகரம் கடாரம். அந்த மாநகரைத் தலைநகராக வைத்துக்கொண்டு நாலா திசையிலும் பரவியிருந்த மாபெரும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை நெடுங்காலம் ஆண்டு வந்தவர்கள் சைலேந்திர வம்சத்தார். அந்த வம்சத்தில் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் என்னும் மன்னன் மிகவும் கீர்த்தி பெற்று விளங்கினான். அவ்வரசன் “இராஜ தந்திரங்களில் நிபுணன்; ஞானத்தில் ஸுரகுருவான பிரகஸ்பதியை ஒத்தவன்; அறிவாளிகளான தாமரை மலர்களுக்குச் சூரியன் போன்றவன்; இரவலருக்குக் கற்பகத் தருவாய் விளங்கினான்” என்று ஆணை மங்கலச் செப்பேடுகள் வியந்து புகழ்ந்து கூறுகின்றன.
அத்தகைய பேரரசனின் மகன் மாறவிஜயோத்துங்க வர்மன் என்பவன் தன் தந்தையின் திருநாமம் நின்று நிலவும் படியாக “மேரு மலையை யொத்த சூடாமணி விஹாரத்தை நாகைப்பட்டினத்தில் கட்டினான்” என்று அச்செப்பேடுகள் கூறுகின்றன.
கடாரத்து அரசனாகிய மற விஜயோத்துங்கன் நாகைப்பட்டினத்துக்கு வந்து புத்த விஹாரத்தைக் கட்டுவானேன் என்று வாசகர்கள் கேட்கலாம். சோழ வளநாட்டுடன் நீடித்த வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த அயல் நாடுகளில் ஒன்று ஸ்ரீ விஜய நாடு. அந்நாட்டுப் பிரஜைகள் பலர் நாகைப்பட்டினத்துக்கு வந்து நிரந்தரமாகவே குடியேறி இருந்தனர். வேறு பலர் அடிக்கடி வந்து திரும்பினர். கடாரத்து அரசனும், அவனுடைய குடிகளும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் புத்தரை வழிபடுவதற்கு வசதியாயிருக்கட்டும் என்று தான் அம்மன்னன் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தைக் கட்டினான். புத்த மதத்தின் தாயகம் பாரத தேசமாயிற்றே என்ற காரணமும் அவன் மனத்தில் இருந்திருக்கலாம். தமிழகத்து மன்னர்கள் எக்காலத்திலும் சமய சமரசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், ஆகையால் அவர்கள் நாகைப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் கட்டுவதற்கு அநுமதி கொடுத்தார்கள். அநுமதி கொடுத்தது மட்டுமா? அவ்வப்போது அந்தப் புத்தர் கோயிலுக்கு நிவந்தங்களும், இறையிலி நிலங்களும் அளித்து உதவினார்கள். (இந்தக் கதை நடந்த காலத்திற்குப் பிற்காலத்தில் இராஜ ராஜ சோழன் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்கு ஆனைமங்கலம் கிராமத்தையும் அதைச் சார்ந்த பல ஊர்களையும் முற்றூட்டாக அதாவது எந்தவிதமான வரியும் விதிக்கப்படாத இறையிலி நிலமாகத் தானம் அளித்தான்; இந்த நில தானத்தை இராஜராஜனுடைய குமாரன், சரித்திரப் புகழ் பெற்ற இராஜேந்திர சோழன் – செப்பேடுகளில் எழுதுவித்து உறுதிப்படுத்தினான். இவை தாம் ஆனைமங்கலச் செப்பேடுகள் என்று கூறப்படுகின்றன. மொத்தம் இருபத்தொரு செப்பேட்டு இதழ்கள். ஒவ்வொன்றும் 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் உள்ளனவாய் ஒரு பெரிய செப்பு வளையத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இச்செப்பேடுகள் சமீப காலத்தில் கப்பல் ஏறிக் கடல் கடந்து ஐரோப்பாவில் ஹாலந்து தேசத்தில் உள்ள லெயிடன் என்னும் நகரத்தின் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையினால் இச்செப்பேடுகளை ‘லெயிடன் சாஸனம்’ என்றும் சில சரித்திர ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவதுண்டு.)
விஜயாலய சோழரின் காலத்திலிருந்து சோழ மன்னர்கள் சிவபக்தியில் திளைத்தவர்களாயிருந்தனர். ஆதித்த சோழரும், பராந்தக சோழரும், கண்டராதித்தரும் சைவப் பற்று மிக்கவர்கள். பற்பல சிவலாயத் திருப்பணிகள் செய்வித்தார்கள். எனினும் அவர்கள் பிற மதங்களைத் துவேஷிக்கவில்லை. தங்கள் இராஜ்யத்தில் வாழும் பிரஜைகள் எந்தெந்த மத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களையும் அவர்களுடைய மதங்களையும் நடுநிலைமை தவறாமல் பராமரித்தார்கள். சுந்தர சோழ சக்கரவர்த்தி தமது முன்னோர்களைக் காட்டிலும் சில படிகள் முன் சென்றார். புத்தப் பள்ளிகளுக்கு விசேஷச் சலுகைகள் அளித்தார். இதனால் சோழ சாம்ராஜ்யத்தில் அச்சமயம் வாழ்ந்திருந்த பௌத்தர்கள் அனைவரும் மிக்க உற்சாகம் கொண்டிருந்தார்கள். இலங்கையில் அருள்மொழிவர்மர் இடிந்து போன புத்த விஹாரங்களைப் புதுப்பிக்கும்படி ஏற்பாடு செய்தது அவர்களுடைய உற்சாகத்தை மேலும் அதிகமாக்கியிருந்தது.
அப்படியெல்லாமிருக்க, இன்று அந்தப் பெயர் பெற்ற சூடாமணி விஹாரத்தில் நேர்ந்த குழப்பத்துக்குக் காரணம் என்ன? பிக்ஷுக்கள் நிலை கொள்ளாமல் அங்குமிங்கும் பரபரப்பாக ஏன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? சூடாமணி விஹாரத்தின் வாசற்புரத்தில் என்ன அவ்வளவு இரைச்சலும் கூச்சலும்? – நல்லது நாமும் சேந்தன் அமுதனைப் பின்பற்றிச் சென்று பார்ப்போம்.
சேந்தன் அமுதனும், மற்ற இருவரும் கால்வாயின் வழியாகப் படகைச் செலுத்திக் கொண்டு சூடாமணி விஹாரத்தின் உட்பகுதிக்கே வந்து விட்டதாகச் சொன்னோம். அங்கே ஒருவரையும் காணாமையால் சேந்தன் அமுதன் தட்டுத்தடுமாறி வழி தேடிக்கொண்டு, விஹாரத்தின் வாசற்பக்கம் போய்ச் சேர்ந்தான். அங்கேதான் பொதுமக்கள் வந்து வழிபடுவதற்குரிய புத்தர் பெருமானின் சைத்யம் என்னும் கோயில் இருந்தது. பக்தர்கள் பலர் அந்தக் காலை நேரத்தில் தாமரை மலர்களும் செண்பகப் பூக்களும், மற்ற பூஜைத் திரவியங்களும் நிறைந்த தட்டுக்களை ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் வந்த காரியத்தை அவர்கள் மறந்து விட்டதாகத் தோன்றியது. சைத்யத்தில் ஏறுவதற்குரிய படிகளில் புத்த பிக்ஷுக்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கிக் கீழே நின்றவன் ஒருவன் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைச் சேந்தன் அமுதன் கண்டான். பிக்ஷுக்கள் சிலருடைய கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதையும் பார்த்தான். கீழே நின்ற பக்தர்களில் பலர் வழக்கப்படி “சாது! சாது!” என்று கோஷிப்பதற்குப் பதிலாக, “ஆஹா!”, “அடாடா!” “ஐயோ!” என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பதையும் கவனித்தான்.
அருகில் நெருங்கிச் சென்று சிறிது நேரம் கேட்ட பின்னர் விஷயம் இன்னதென்று தெரிந்தது. பிக்ஷுக்களிடம் பேசிக் கொண்டிருந்தவன் பார்த்திபேந்திரனுடைய கப்பலிலே இருந்த மாலுமிகளில் ஒருவன். கப்பல் முதல் நாள் இரவு நாகைப்பட்டினத்துக்கு வந்துவிட்டது. மாலுமிகள் கரையில் இறங்கியதுமே இளவரசரைக் கடல் கொண்டு விட்டது என்ற செய்தியைச் சிலரிடம் சொல்ல, அது நகரமெல்லாம் பரவி விட்டது. அச்செய்தி உண்மைதானா என்று அறிய அதிகாலையில் அம்மாலுமிகளில் ஒருவனைச் சூடாமணி விஹாரத்தின் பிரதம பிக்ஷு அழைத்து வரச் செய்தார். அவன் தான் அறிந்ததை அறிந்தபடி கூறினான், “சுழற்காற்று அடித்த போது இளவரசர் கடலிலே குதித்தவர் திரும்பி வரவேயில்லை” என்று துயரக் குரலிலே சொன்னான்.
அப்போது அக்கூட்டத்திலே விம்மி அழும் குரல்கள் பல எழுந்தன. பிரதம பிக்ஷுவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகித் தாரை தாரையாக வழிந்தது. அவர் குனிந்த தலை நிமிராமல் படிகளில் ஏறிச் சென்று சைத்தியத்தைத் தாண்டி விஹாரத்துக்குள் பிரவேசித்தார். மற்ற பிக்ஷுக்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். சேந்தன் அமுதனும் அவர்களோடு வந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை.
பிரதம பிக்ஷு மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார்:- “புத்த பகவானின் கருணை இப்படியா இருந்தது? பற்பல மனக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தேனே? சக்கரவர்த்தியைப் பார்க்கச் சமீபத்திலே தஞ்சாவூருக்குப் போயிருந்தேன் பாருங்கள்! அச்சமயம் இலங்கையில் அருள்மொழிவர்மரின் அற்புதச் செயல்களைப்பற்றிக் கூறினேன். அதையெல்லாம் இளைய பிராட்டி குந்தவை தேவியும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு என்னைத் தனியாக வரவழைத்து இந்த விஹாரத்தையொட்டி ஆதுரசாலை ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று அதற்குத் தேவையான நிபந்தங்கள் அளிப்பதாகவும் கூறினார். அது மட்டுமா? ‘ஆச்சாரியாரே! நாட்டில் பலவாறு பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை இளவரசர் சூடாமணி விஹாரத்தில் சில நாள் விருந்தாளியாக இருக்கும்படி நேரும். அவரை வைத்துப் பாதுகாக்க முடியுமா?’ என்று குந்தவை பிராட்டி கேட்டார். ‘தேவி! அத்தகைய பேறு எங்களுக்குக் கிடைத்தால் கண்ணை இமை காப்பதுபோல் வைத்துப் பாதுகாப்போம்’ என்று கூறினேன். என்ன பயன்! இளவரசரா கடலில் முழுகினார்? இந்த நாட்டிலுள்ள நல்லவர்களின் மனோரதமெல்லாம் முழுகிவிட்டது! சோழ சாம்ராஜ்யமே முழுகிவிட்டது. சமுத்திர ராஜன் இவ்வளவு பெருங்கொடுமையைச் செய்ய எப்படித் துணிந்தான்? அக்கொடியவனைக் கேட்பார் இல்லையா?”
மற்ற பிக்ஷுக்கள் அனைவரும் மௌனமாகக் கண்ணீர் பெருக்கினார்கள். தலைமைப் பிக்ஷு பேசி நிறுத்தியதும் சிறிது நேரம் அங்கே மௌனம் குடி கொண்டிருந்தது. சேந்தன் அமுதன் அதுதான் சமயம் என்று புத்த பிக்ஷுக்களிடையே புகுந்து ஆச்சாரியரை அணுக யத்தனித்தான்.
உடனே அவனைப் பலர் தடுத்தார்கள். “இவன் யார்? இங்கே எப்படி வந்தான்?” என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள்.
“ஐயா அடியேன் பெயர் சேந்தன் அமுதன்! தஞ்சையைச் சேர்ந்தவன். உங்கள் தலைவரிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்!” என்றான்.
“சொல், சொல்!” என்றார்கள் பலர்.
அவனுடைய தயக்கத்தைப் பார்த்துவிட்டு ஆச்சாரியர், “இவர்களுக்குத் தெரியக்கூடாத ரகசியம் ஒன்றுமில்லை; சொல்” என்றார்.
“ஐயா! நோயாளி ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன்!”
“அது யார் நோயாளி? என்ன நோய்? எங்கே விட்டிருக்கிறாய்?”
“விஹாரத்தில் நடுமுற்றத்தில் விட்டிருக்கிறேன்….”
“எப்படி அங்கே வந்தாய்?”
“கால்வாய் வழியாக, நோயாளியைப் படகில் கொண்டு வந்தேன். நடுக்கும் குளிர்க்காய்ச்சல் – தாங்கள் உடனே….”
“பகவானே! நடுக்கும் சுரம் தொற்றும் நோய் ஆயிற்றே! இங்கே ஏன் அந்த நோயாளியை அழைத்து வந்தாய்? அதிலும் நல்ல சமயம் பார்த்து…”
“ஆச்சாரிய! அசோக சக்கரவர்த்தி புத்த மதத்தினர் என்று இதுகாறும் நினைத்திருந்தேன். இப்போது இல்லை என்று தெரிகிறது…”
“அது ஏன் அப்படிக் கூறுகிறாய்?”
“அசோக ஸ்தம்பம் ஒன்றை நான் காஞ்சிக்கு அருகில் பார்த்தேன். அதில் நோயாளிக்குச் சிகிச்சை செய்வதை முதன்மையான தர்மமாகச் சொல்லியிருக்கிறது. நீங்களோ இப்படி விரட்டி அடிக்கிறீர்கள்!” என்றான் அமுதன்.
ஆச்சாரிய பிக்ஷு மற்றவர்களைப் பார்த்து “கொஞ்சம் பொறுங்கள்; நான் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு, “வா! அப்பனே” என்று அமுதனை அழைத்துக் கொண்டு சென்றார்.
விஹாரத்தின் நடு முற்றத்தில் கால்வாய்க்கு அருகில் ஒரு யுவனும், யுவதியும் இருப்பதைப் பார்த்துப் பிக்ஷு திடுக்கிட்டார். “இது என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? இந்த விஹாரத்துக்குள் ஸ்திரீகளே வரக்கூடாதே! பிக்ஷுணிகளுக்குக் கூட வேறு தனி மடம் அல்லவா கட்டியிருக்கிறது?”
அருகில் போய் அந்த இளைஞர் யார் என்பதை உற்றுப் பார்த்ததும், பிக்ஷு திகைத்துப் போனார் என்று சொன்னால் போதாது! வியப்பினாலும் களிப்பினாலும் அவரால் சிறிது நேரம் பேச முடியவில்லை.
சந்தேக நிவர்த்திக்காக, “இளவரசர் அருள்மொழிவர்மர் தானா?” என்று சேந்தன் அமுதனைக் கேட்டார்.
இது இளவரசர் காதில் விழுந்தது. “இல்லை, ஆச்சாரியரே இல்லை. நான் இளவரசனுமில்லை ஒன்றுமில்லை. இந்தப் பெண்ணும் இந்த பிள்ளையுமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறார்கள். நான் ஒரு ஓடக்காரன். சற்றுமுன் இந்தப் பெண்ணைப் பார்த்து, ‘பெண்ணே! என்னை மணம் புரிந்து கொள்வாயா? இருவரும் படகில் ஏறித் தூரதேசங்களுக்குப் போகலாம்’ என்றேன். இவள் ஏதேதோ பிதற்றினாள். நான் உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவனாம்! ஏழை வலைஞர் குலப் பெண்ணாகிய இவள் என்னை மணந்து கொள்ள மாட்டாளாம். நான் சுகமாயிருந்தால் இவளுக்குப் போதுமாம். வருங்காலத்தில் என்னுடைய மகத்தான வெற்றிகளைக் கேட்டு இவள் மகிழப் போகிறாளாம். எப்படியிருக்கிறது கதை? உண்மையில் எனக்குச் சித்தப்பிரமையா? இவளுக்கா?”
சேந்தன்அமுதன் ஆச்சாரிய பிக்ஷுவின் காதோடு ஏதோ கூறினாள். அதற்கு முன்னாலேயே இளவரசர், சுரவேகத்தினால் நினைவிழந்த நிலையில் பேசுகிறார் என்பதை பிக்ஷு உணர்ந்திருந்தார். குந்தவை தேவி தம்மிடம் இளவரசருக்கு அடைக்கலம் தரும்படி கேட்டிருந்ததும், அவருக்கு நினைவு வந்தது.
மற்ற பிக்ஷுக்களைப் பார்த்து அவர், “இந்தப் பிள்ளைக்கு விஷ சுரம்தான் வந்திருக்கிறது. இவனை வெளியில் அனுப்பினால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வந்துவிடும். இலங்கையில் எத்தனையோ ஆயிரம் பேர் சுரத்தினால் இறந்து போனார்கள். ஆகையால் இந்த இளைஞனை என் அறைக்கு அழைத்துப் போய், நானே பணிவிடையும் செய்யப்போகிறேன், இடையில் சுர வேகத்தினால் இவன் ஏதாவது பிதற்றினால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்!” என்றார்.
உடனே தலைமைப் பிக்ஷு இளவரசர் அருகிலே நெருங்கி ஒரு கையினால் அவரை அணைத்துத் தூக்கினார். சேந்தன் அமுதன் இன்னொரு பக்கத்தில் இளவரசரைப் பிடித்துக் கொண்டு உதவினான். எல்லாரும் படிகளில் ஏறிச் சென்றார்கள்.
‘இதோ, இன்னும் சில விநாடி நேரத்தில் படிக்கட்டு முழுவதும் ஏறிவிடுவார்கள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பார்கள். பிறகு கதவு சாத்தியாகிவிடும். சாத்தினால் சாத்தியதுதான். அப்புறம் அவரைப் பார்க்க முடியாது.’
பூங்குழலி எதிர்பார்த்தபடியே நடந்தது. மாடிப்படி ஏறியதும் கதவு திறந்தது. சேந்தன் அமுதனை மட்டும் வெளியில் நிறுத்தித் தலைமைப் பிக்ஷு ஏதோ கூறினார். பிறகு திறந்த கதவு வழியாக எல்லாரும் பிரவேசித்தார்கள்.
கதவு படார் என்று சாத்திக்கொண்டது. அது பூங்குழலியின் இதயமாகிய கதவையே அடைப்பது போலிருந்தது.
“இனி இந்தப் பிறவியில் இளவரசரைப் பார்க்கலாம் என்ற நிச்சயமில்லை. அடுத்த ஜன்மத்திலாவது அத்தகைய பாக்கியம் தனக்குக் கிடைக்குமா?” இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே இளவரசர் மறைவதைப் பார்த்துக்கொண்டு நின்றாள் பூங்குழலி.
கல்கி