Skip to content
Home » பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 36-40 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 36-40 அத்தியாயங்கள்

36. இருளில் ஓர் உருவம்


     சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சிறுவன் கொடுத்த வாளை நந்தினி வாங்கிக் கொண்டாள். அதை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள். பின்னர் அச்சிறுவனையும் தூக்கி எடுத்து அவனையும் சேர்த்து மார்புடன் அணைத்துத் தழுவிக் கொண்டாள். அவளுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது.

     மற்றவர்கள் சற்று நேரம் வரை இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள். ரவிதாஸன் முதலில் திகைப்பு நீங்கப்பெற்றுக் கூறினான்.

     “தேவி! சக்கரவர்த்தி நம்முடைய கோரிக்கையை நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளாமல் தங்களிடம் வாளைக் கொடுத்து விட்டார். மறுபடியும் விளக்கமாகச் சொல்லி…”

     நந்தினி அவனைத் தடுத்து நிறுத்தினாள்; தழுதழுத்த குரலில் கூறினாள். “இல்லை, ஐயா இல்லை! சக்கரவர்த்தி நன்றாய்ப் புரிந்து கொண்டுதான் வாளை என்னிடம் கொடுத்தார். என் கண்ணீரைப் பார்த்து நீங்கள் கலங்க வேண்டாம். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் படுகொலைக்குப் பழி வாங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை நினைத்துக் களிப்பு மிகுதியினால் கண்ணீர் விடுகிறேன்!”

     “தேவி! யோசித்துப் பாருங்கள்! நாங்கள், இத்தனை பேர் ஆபத்துதவிப் படையினர் உயிரோடிருக்கும்போது…” என்று சோமன் சாம்பவன் தொடங்கியதை நந்தினி தடுத்து நிறுத்தினாள்.

     “யோசிக்க வேண்டியதே இல்லை, அந்தப் பொறுப்பு என்னுடையதுதான். உங்களுக்கும் வேலையில்லாமற் போகவில்லை. உங்களில் பாதி பேர் சக்கரவர்த்தியைப் பத்திரமாகப் பஞ்ச பாண்டவர் மலைக்குக் கொண்டு போய்ச் சேருங்கள். மற்றவர்கள் கடம்பூருக்கு வாருங்கள். சம்புவரையன் மாளிகைக்குள் வரக்கூடியவர்கள் வாருங்கள் மற்றவர்கள் வெளியில் சித்தமாகக் காத்திருங்கள். வேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளுடன் காத்திருங்கள். காரியம் வெற்றிகரமாக முடிந்த பின் கூடுமானால் எல்லாரும் உயிருடன் தப்பித்துச் செல்ல வேண்டும் அல்லவா?” என்றாள் நந்தினி.

     ரவிதாஸன் முன் வந்து, “அம்மணி! ஒரு விஷயம் சொல்ல மறந்து போய்விட்டது; அதைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்” என்றான்.

     “சொல்லுங்கள், ஐயா! சீக்கிரம் சொல்லுங்கள்! பழுவேட்டரையர் கொள்ளிடக்கரையில் நடக்கும் காலாமுகர்களின் மகா சங்கத்துக்குப் போயிருக்கிறார். அவர் திரும்பி வந்து விடுவதற்குள்ளே நான் அரண்மனை போய்ச் சேரவேண்டும்!” என்றாள் நந்தினி.

     “நமது முதற் பகைவன் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையன் மாளிகைக்கு வந்து சேருவான் என்று சொன்னீர்கள் அல்லவா? அது அவ்வளவு நிச்சயமில்லை” என்றான்.

     “எந்தக் காரணத்தைக் கொண்டு அவ்விதம் சொல்கிறீர்?”

     “தகுந்த காரணத்தைக் கொண்டுதான் சொல்கிறேன் கடம்பூர் மாளிகைக்கு எக்காரணத்தைக் கொண்டும் வரவேண்டாம் என்று ஆதித்த கரிகாலனுக்கு ஓலை போகிறது. பழையாறை இளைய பிராட்டியும், முதன் மந்திரி அநிருத்தரும் அவ்விதம் செய்தி அனுப்பியிருக்கிறார்கள்…”

     “அந்த விவரம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தீர்?”

     “தெரிந்திருந்தும் அவன் கடம்பூருக்கு வருவான் என்று எதிர்பார்க்கிறீர்களா?”

     “ஆம்; அவசியம் எதிர்பார்க்கிறேன். ஆதித்த கரிகாலருடைய இயல்பு அந்தப் பழையாறைப் பெண் பாம்புக்குத் தெரியாது; அன்பில் பிரம்மராட்சதனுக்கும் தெரியாது; மாய மந்திர வித்தைகளில் தேர்ந்த உமக்குங்கூடத் தெரியவில்லை. எந்தக் காரியத்தையாவது செய்யவேண்டாம் என்று யாரேனும் தடுத்தால், அதைத்தான் ஆதித்த கரிகாலர் கட்டாயமாகச் செய்வார். அது எனக்குத் தெரியும்; நிச்சயமாகத் தெரியும். ஆதித்த கரிகாலர் அருள்மொழிவர்மனைப் போன்ற எடுப்பார் கைப்பிள்ளை அல்ல. மதுராந்தகனைப் போன்ற பயங்கொள்ளிப் பேதை அல்ல. கடம்பூருக்கு வரவேண்டாமென்று தமக்கையும் முதன் மந்திரியும் செய்தி அனுப்பியிருப்பதனாலேயே கட்டாயம் ஆதித்த கரிகாலர் கடம்பூருக்கு வந்து சேருவார்!” என்றாள் நந்தினி.

     “தேவி! அதையும் தாங்கள் பூரணமாக நம்பியிருக்க வேண்டாம். அவர்கள் அனுப்பிய செய்தி காஞ்சிக்குப் போய்ச் சேராது!” என்றான் ரவிதாஸன்.

     “என்ன சொல்கிறீர், ஐயா! சற்று விளக்கமாகச் சொல்லும்!” என்றாள் நந்தினி. அவளுடைய குரலில் இப்போது பரபரப்புத் தொனித்தது.

     “தேவி! ஆதித்த கரிகாலனுக்குச் செய்தி யார் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது என்பதும் தங்களுக்குத் தெரியுமா?” என்று ரவிதாஸன் கேட்டான்.

     “நிச்சயமாகத் தெரியாது; ஆனால் ஊகிக்க முடியும்.”

     “நல்லது! ஊகிக்க வேண்டிய அவசியமில்லை. அவனை நாங்கள் பிடித்துக்கொண்டே வந்திருக்கிறோம். சக்கரவர்த்தி மழைக்கு ஒதுங்கியிருந்த மண்டபத்தில் அவனும் இருந்தான். நம்முடைய இரகசியங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியும். அவனை மேலே உயிருடன் போக விடுவது நமக்கு நாமே சர்வ நாசத்தைத் தேடிக் கொள்வதாகும். இடும்பன்காரி! எங்கே அந்த ஒற்றனை இங்கே அழைத்துக் கொண்டு வா!” என்றான் ரவிதாஸன்.

     இடும்பன்காரி பள்ளிப்படைக் கோவிலை நோக்கிப் போனான். அவனுடன் இன்னும் இரண்டு பேரும் போனார்கள். நந்தினி அந்தத் திசையை உற்று நோக்கத் தொடங்கினாள். இத்தனை நேரமும் கடுகடுவென்று இருந்த அவளுடைய முகத்தில் இப்போது மறுபடியும் மோகனப் புன்னகை தவழ்ந்தது.

     இடும்பன்காரியும், இன்னும் இரண்டு பேரும் வந்தியத்தேவனை நெருங்கினார்கள். அலுத்துச் சலித்துப் போய் அரைத் தூக்கமாக உட்கார்ந்திருந்த அந்த வீரன் மீது திடீரென்று பாய்ந்தார்கள். வந்தியத்தேவன் அவர்களோடு மல்யுத்தம் செய்யலாமா என்று ஒரு கணம் உத்தேசித்தான். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். என்னதான் செய்கிறார்களோ பார்க்கலாம் என்று சும்மா இருந்தான். ஒரு பெரிய கயிற்றினால் அவனுடைய கைகளைச் சேர்த்து உடம்போடு கட்டினார்கள். பிறகு அவனுடைய இரு தோள்களையும் இரண்டு பேர் பிடித்து நடத்தி அழைத்துக் கொண்டு வந்து நந்தினியின் முன்னால் நிறுத்தினார்கள்.

     வந்தியத்தேவன் நந்தினியைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். நந்தினியின் முகத்தில் எவ்வித மாறுதலும் இப்போது தெரியவில்லை; அமைதி குடிகொண்டிருந்தது.

     “ஐயா! மறுபடியும்…” என்று ஆரம்பித்தாள்.

     “ஆம், தேவி, மறுபடியும் வந்துவிட்டேன்! ஆனால் நானாக வரவில்லை!” என்று சொல்லிச் சுற்றிலுமுள்ளவர்களை நோக்கினான்.

     நந்தினியின் அருகில் இருந்த சிறுவன், “அம்மா! இவன்தான் என்னை இருட்டில் பிசாசு விழுங்காமல் காப்பாற்றியவன். இவனை ஏன் கட்டிப் போட்டிருக்கிறது?” என்று கேட்டான்.

     வந்தியத்தேவன் சிறுவனைப் பார்த்து “குழந்தை! சும்மா இரு! பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே பேசக்கூடாது. பேசினால் உன்னைப் புலி விழுங்கிவிடும்!” என்றான்.

     “புலியை நான் விழுங்கிவிடுவேன்!” என்றான் சிறுவன்.

     “மீனால் புலியை விழுங்கமுடியுமா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

     அவனைச் சுற்றிலும் இருந்தவர்களின் கண்டங்களிலிருந்து ஒரு பயங்கரமான உறுமல் சத்தம் வெளிவந்தது. அது வந்தியத்தேவனைக் கூட ஒரு கணம் மெய்சிலிக்கச் செய்தது.

     ரவிதாஸன் உரத்த குரலில் “தேவி கேட்டீர்களா? இவனை இனி உயிருடன் தப்பிச் செல்ல விட முடியாது. முன் இரண்டு தடவைகளில் தங்கள் விருப்பத்துக்காக இவனை உயிருடன் தப்பிச் செல்ல விட்டோ ம். இனிமேல் அப்படி இவனை விட முடியாது” என்றான்.

     வந்தியத்தேவன், “மந்திரவாதி! இது என்ன இப்படிப் பெரிய பொய்யாகச் சொல்லுகிறாய்? நீயா என்னை உயிருடன் விட்டாய்? நான் அல்லவா உன்னைத் தப்பிப் போகவிட்டேன்? தேவி! இந்த மந்திரவாதியைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்துச் சொல்லுங்கள்! இவன் உண்மையில் ரவிதாஸன்தானா? அல்லது ரவிதாஸனுடைய பிசாசா!” என்று கேட்டான்.

     ரவிதாஸன் பயங்கரமாகச் சிரித்தான். “ஆம்! நான் பிசாசுதான்! உன்னுடைய இரத்தத்தை இன்று குடிக்கப் போகிறேன்,” என்றான்.

     மீண்டும் அங்கிருந்தவர்களின் தொண்டைகளிலிருந்து பயங்கர உறுமல் குரல் வெளியாயிற்று.

     இதற்குள் சிறுவன், “அம்மா! இவனிடம் ஒரு நல்ல குதிரை இருக்கிறது. அதை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்கள்!” என்றான்.

     “குழந்தை! நீ என்னுடன் வந்துவிடு! உன்னை என் குதிரையின் மேல் ஏற்றி அழைத்துக்கொண்டு போகிறேன்” என்றான் வந்தியத்தேவன்.

     ரவிதாஸன் வந்தியத்தேவனை நோக்கிக் கோரமாக விழித்து “அடே! வாயை மூடிக்கொண்டிரு!” என்று சொல்லி விட்டு, நந்தினியைப் பார்த்து, “தேவி! சீக்கிரம் கட்டளையிடுங்கள்!” என்றான்.

     நந்தினி நிதானமாக, “இவர் எப்படி இங்கு வந்தார்? எப்போது வந்தார்?” என்று கேட்டாள்.

     “சக்கரவர்த்தி மழைக்கு ஒதுங்கியிருந்த மண்டபத்திலிருந்து அவரை இந்த ஒற்றன் எடுத்துக் கொண்டு ஓடிவிடப் பார்த்தான். நல்ல சமயத்தில் போய் நாங்கள் தடுத்துப் பிடித்துக்கொண்டோ ம். ஒரு கணம் தாமதித்திருந்தால் விபரீதமாகப் போயிருக்கும்” என்றான் ரவிதாஸன்.

     “ஐயா! இவர்கள் சொல்வது உண்மையா?” என்று நந்தினி கேட்டாள்.

     “தங்களைச் சேர்ந்தவர்கள் உண்மை சொல்லக்கூடியவர்களா என்பது தங்களுக்குத்தானே தெரியும்? எனக்கு எப்படித் தெரியும் தேவி?” என்றான் வந்தியத்தேவன்.

     நந்தினியின் முகத்தில் தோன்றிய புன்னகை மின்னலைப் போல் மறைந்தது. அவள் ரவிதாஸனைப் பார்த்து, “ஐயா! நீங்கள் எல்லாரும் சற்று அப்பால் சென்றிருங்கள் நான் இவரிடம் சில விஷயங்கள் தனியாகக் கேட்டு அறிய வேண்டும்” என்றாள்.

     “தேவி! நேரம் ஆகிறது, அபாயம் நெருங்குகிறது. இந்த வேளையில்…” என்று ரவிதாஸன் கூறுவதற்குள், நந்தினி கடுமையான குரலில், “சற்றுமுன் நாம் செய்துகொண்ட நிபந்தனையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மறுவார்த்தை சொல்லாமல் உடனே அகன்று செல்லுங்கள். சக்கரவர்த்தியையும் அப்பால் அழைத்துப் போங்கள்!” என்று கூறி, சிறுவனுடைய காதில் “குமாரா! சற்று அவர்களுடன் நகர்ந்து போ! உனக்கு இவரிடமிருந்து குதிரை வாங்கித்தருகிறேன்” என்றாள்.

     ரவிதாஸன் முதலியவர்கள் பின்னர் மறு வார்த்தை பேசாமல் அந்தச் சிறுவனையும் அழைத்துக்கொண்டு அவசரமாக அப்பால் போனார்கள். நந்தினி, வந்தியத்தேவனை இலேசான தீவர்த்தி வெளிச்சத்தில் ஊடுருவிப் பார்த்து, “ஐயா! உமக்கும் எனக்கும் ஏதோ ஒரு துவந்தம் இருப்பதாகக் தோன்றுகிறது” என்றாள்.

     “அம்மணி! அந்தத் துவந்தம் மிகப் பொல்லாததாயிருக்கிறது; மிகக் கெட்டியாகவும் இருக்கிறது. என் உடம்பையும் கைகளையும் சேர்த்து இறுக்கிக் கட்டியிருக்கிறது!” என்றான் வந்தியத்தேவன்.

     “உம்முடைய விளையாட்டுப் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்று இங்கு வந்தீரா! தற்செயலாக வந்தீரா?”

     “வேண்டுமென்று வரவில்லை! தற்செயலாகவும் வரவில்லை. தங்களுடைய ஆட்கள்தான் பலவந்தமாக என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள். இல்லாவிடில், இத்தனை நேரம் கொள்ளிடக்கரையை அடைந்திருப்பேன்.”

     “என்னைப் பார்க்கும்படி நேர்ந்ததில் உமக்கு அவ்வளவு கஷ்டம் என்று தெரிகிறது. என்னைப் பிரிந்து போவதற்கு அவ்வளவு ஆவல் என்றும் தெரிகிறது.”

     “தங்களைப் பார்க்க நேர்ந்ததில் எனக்குக் கஷ்டம் இல்லை, தவிர தங்களைப் பிரிந்து போவதற்குத்தான் உண்மையில் வருத்தமாயிருக்கிறது. தாங்கள் மட்டும் அநுமதி கொடுங்கள்; ஒரு பக்கத்தில் அந்தக் கிழட்டுப் பழுவேட்டரையரிடமும் இன்னொரு பக்கத்தில் இந்தப் பயங்கர மந்திரவாதிகளிடமும் அகப்பட்டுக் கொண்டு தாங்கள் திண்டாடுகிறீர்கள். ஒரு வார்த்தை சொல்லுங்கள். இவர்களிடமிருந்தெல்லாம் தங்களை விடுதலை செய்து அழைத்துப் போகிறேன்…”

     “எங்கே அழைத்துப் போவீர்கள்?”

     “இலங்கைத் தீவின் காடுகளின் அநாதையைப் போல் அலைந்து கொண்டிருக்கும் தங்கள் அன்னையிடம் அழைத்துப் போய் விடுகிறேன்” என்றான் வந்தியத்தேவன்.

     நந்தினி ஏமாற்றம் தொனிக்க ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.

     “நானும் அப்படி அநாதையாக அலைய வேண்டும் என்று விரும்புகிறீரா? ஒரு வேளை அத்தகைய காலம் வந்தாலும் வரலாம். அப்போது அன்னையிடம் அழைத்துப் போக, உம்முடைய உதவியை அவசியம் நாடுவேன். அதற்கு முன்னால், என்னுடைய எண்ணம் நிறைவேற வேண்டும். அது நிறைவேறுவதற்கு உதவி செய்வீரா?” என்று கேட்டாள்.

     “அம்மணி! தங்கள் மனதிற்கொண்ட எண்ணம் என்னவென்று தெரிந்தால் அதற்கு உதவி செய்வதைப் பற்றி நான் சொல்ல முடியும்?” என்றான் வந்தியத்தேவன்.

     “உண்மையான பிரியம் உள்ளவர்கள் இப்படிச் சொல்லமாட்டார்கள். எண்ணம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளாமலே அதை நிறைவேற்றுவதற்கு உதவி செய்ய முன் வருவார்கள்.”

     “பிரியமுள்ளவர்கள் சமயத்தில் எச்சரிக்கை செய்து ஆபத்திலிருந்து காப்பாற்ற முயல்வார்கள் அம்மணி. தங்களை இந்தக் கிராதகர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து, பெரிய அபாயத்தில் சிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய காரியத்துக்கு உங்களை உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்…”

     “நீர் கூறுவது தவறு! நான்தான் இவர்களை என்னுடைய காரியத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன்! இதை நீர் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளும்.”

     “ஒரு சிறு குழந்தையை எந்தக் காட்டிலிருந்தோ பிடித்துக் கொண்டு வந்து தங்களை ஏமாற்றுகிறார்கள்….”

     “குழந்தை எதற்காக என்று உமக்குத் தெரியுமா?”

     “பாண்டியன் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துப் பட்டம் கட்டுவதற்காக…” என்றான்.

     “மறுபடியும் தவறாகச் சொல்கிறீர். பாண்டியன் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க மட்டும் அல்ல; துங்கபத்திரையிலிருந்து இலங்கை வரையில் பரந்து கிடக்கும் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் அமர்த்தி முடி சூட்டுவதற்காக!”

     “அம்மம்மா! யாருடைய உதவியைக் கொண்டு இந்த மகத்தான காரியத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்? இதோ சுற்றிலும் நிற்கிறார்களே – இந்த நரிக்கூட்டத்தின் உதவியைக் கொண்டா? சோழ சாம்ராஜ்யத்தின் இருபது லட்சம் வீராதி வீரர்கள் கொண்ட மாபெருஞ்சேனையை, பகலில் வளைகளில் ஒளிந்திருந்து, இரவு நேரத்தில் வெளிப்பட்டு வரும் இந்தப் பத்து இருபது நரிகளின் துணை கொண்டு வென்று விடுவீர்களா?”

     “நான் இவர்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. இதோ என் கையில் உள்ள வாளை நம்பியிருக்கிறேன். இதன் உதவியினால் என் மனத்தில் கொண்ட எண்ணத்தை நிறைவேற்றுவேன்.”

     “அம்மணி! அந்த வாளைத் தாங்கள் ஒருநாளும் உபயோகப்படுத்தப் போவதில்லை. அதற்கு வேண்டிய பலம் தங்கள் கையிலும் இல்லை; தங்கள் நெஞ்சிலும் இல்லை!”

     “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

     “ஏதோ என் மனத்தில் தோன்றியதைக் கூறினேன்.”

     “நீர் சொல்வது முற்றும் தவறு என்று இந்த இடத்திலேயே என்னால் நிரூபித்துக் காட்ட முடியும்!”

     “அப்படியானால் நான் பாக்கியசாலிதான். தங்கள் திருக்கரத்தினால் வெட்டுப்பட்டுச் சாவதற்குக் கொடுத்து வைக்க வேண்டாமா?” என்று கூறி வந்தியத்தேவன் வெட்டுப்படுவதற்கு ஆயத்தமாவது போல் கழுத்தை வளைத்துத் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

     “என் திருக்கரத்தினால் வெட்டுப் படுவதற்குத்தானா ஆசைப்படுகிறீர்? கிரீடம் சூட்டப்படுவதற்கு விரும்பவில்லையா?” என்றாள் நந்தினி.

     வந்தியத்தேவன் நிமிர்ந்து பார்த்து, “தாங்கள் வசமுள்ள கிரீடத்தை எத்தனை பேருக்குத்தான் சூட்டுவீர்கள்?” என்று வினவினான்.

     “அது என்னுடைய இஷ்டம். முடிவாக யாருக்குச் சூட்ட வேண்டுமென்று பிரியப்படுகிறேனோ, அவருடைய சிரசில் சூட்டுவேன்.”

     “அப்படியானால் இந்தச் சிறுபிள்ளையின் கதி என்ன ஆவது?

     “அவனுக்கு முடிசூட்டுவதும், சூட்டாததும் என் இஷ்டந்தானே?”

     “தேவி, தங்களுக்கு யாருக்கு இஷ்டமோ அவருக்கு முடிசூட்டுங்கள். எனக்கு வேண்டியதில்லை.”

     “ஏன்?”

     “என்னுடைய சிரசிலுள்ள சுருட்டை மயிரின் அழகைப் பற்றிப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். கிரீடம் வைத்துக் கொண்டு அந்த அழகைக் கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.”

     “உமது வேடிக்கைப் பேச்சை நீர் விடமாட்டீர். நல்லது ஐயா! பொன்னியின் செல்வன் கடலில் விழுந்து இறந்த செய்தியைக் கேட்டதும் இளையபிராட்டி என்ன செய்தாள்? ரொம்ப துக்கப்பட்டாளா?” என்று நந்தினி திடீரென்று பேச்சை மாற்றிக் கேட்டாள்.

     வந்தியத்தேவன் சிறிது திகைத்துவிட்டு, “பின்னே துக்கமில்லாமல் இருக்குமா? ஸ்திரீகள் எல்லாருமே இதயமற்றவர்களாக இருப்பார்களா?” என்றான்.

     “அந்தக் கொடும்பாளூர் பெண் ஓடையில் விழுந்து உயிரை விடப் பார்த்தாளாமே? அது உண்மையா? அவளை யார் எடுத்துக் காப்பாற்றினார்கள்?” என்று கேட்டாள்.

     உடனே வானதிக்கு நேர்ந்த ஆபத்தைக் குறித்து வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வந்தது. அவளுடைய கதி என்ன ஆயிற்றோ என்ற நினைவில் மூழ்கி வந்தியத்தேவன் கேள்விக்குப் பதில் சொல்லாமலிருந்தான்.

     நந்தினி குரலைக் கடுமைப் படுத்திக்கொண்டு, “சரி; அதையெல்லாம் பற்றி நீர் ஒன்றும் சொல்லமாட்டீர் எனக்குத் தெரியும். ஆதித்த கரிகாலர் கடம்பூர் மாளிகைக்கு வராதபடி நீர் தடுக்கப் போகிறீரா?” என்று கேட்டாள்.

     “தடுப்பதற்குப் பிரயத்தனம் செய்வேன்” என்றான் வந்தியத்தேவன்.

     “உம்மால் அது முடியாது என்று நான் சொல்லுகிறேன்.”

     “என்னால் முடியும் என்று நானும் சொல்லவில்லை. தேவி! பிரயத்தனம் செய்வேன் என்று தான் சொன்னேன். இளவரசர் ஒன்று செய்ய நினைத்துவிட்டால், அதை மாற்றுவது எளிதன்று!”

     “ஆதித்த கரிகாலரின் இயல்பை நீர் நன்றாய் அறிந்து கொண்டிருக்கிறீர்.”

     “என்னைவிட அதிகமாகத் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள்.”

     “நல்லது; நான் எவ்வளவுதான் சொன்னாலும் நீர் என் கட்சியில் சேரமாட்டீர். என் எதிரியின் கட்சியில்தான் இருப்பீர். அப்படித்தானே?”

     “அம்மணி! தங்கள் எதிரி யார்?”

     “என் எதிரி யார்? பழையாறை இளவரசிதான்! வேறு யார்?”

     “அது தங்கள் மனோ கற்பனை, தேவி! தங்களுக்கு ஓர் உண்மையை முக்கியமான உண்மையை, தெரிவிக்க விரும்புகிறேன்…”

     “போதும், போதும்! நீர் உண்மை என்று சொல்ல ஆரம்பித்தால் அது வடிகட்டின கோட்டைப் பொய்யாயிருக்கும். எனக்குத் தெரியாதா? உமது உண்மையை நீரே வைத்துக் கொள்ளும்!” என்று நந்தினி குரோதத்துடன் கூறிவிட்டுக் கையைத் தட்டினாள். ரவிதாஸன் முதலியவர்கள் உடனே நெருங்கி வர ஆரம்பித்தார்கள். வந்தியத்தேவன் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தான் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தான். இந்த ராட்சஸி என்னைக் கொன்று விடும்படி தான் இவர்களுக்குக் கட்டளையிடப் போகிறாள். கடவுளே! எத்தகைய சாவு! போர்க்களத்தில் எதிரிகளுடன் போராடி வீர மரணம் அடையக் கூடாதா? இப்படியா என் தலையில் எழுதியிருந்தது?

     ரவிதாஸன் கோஷ்டியார் அருகில் வந்து சூழ்ந்து கொண்டார்கள். இரையை நெருங்கிய ஓநாய்க் கூட்டம் உறுமுவது போல் அவர்கள் உறுமிக் கொண்டிருந்தார்கள்.

     “ராணி! தாங்கள் என்னதான் சொன்னாலும் இவன் வழிக்கு வரமாட்டான் என்று எனக்குத் தெரியும். தாங்கள் உடனே புறப்படுங்கள். இவனை நாங்கள் இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் பலி கொடுத்து விட்டுக் கிளம்புகிறோம்” என்றான் ரவிதாஸன்.

     “மந்திரவாதி! ஜாக்கிரதை! என்னுடைய விருப்பம் அதுவன்று. இவரை உங்களில் யாரும் எதுவும் செய்யக்கூடாது. இவரை எவனாது தொட்டால் அவனை நானே இந்தக் கத்தியினால் வெட்டிக் கொன்று பழி வாங்குவேன்!” என்று நந்தினி கர்ஜித்தாள்.

     ரவிதாஸன் முதலியோர் திகைத்து நின்றார்கள்.

     “இவரால் எனக்கு இன்னும் பல காரியம் ஆகவேண்டியிருக்கிறது. தெரிகிறதா? நான் இதோ புறப்படுகிறேன்; நீங்களும் புறப்படுங்கள். இவர் அவருக்கு விருப்பமான வழியில் போகட்டும். யாரும் இவரைத் தடை செய்ய வேண்டாம்!” என்றாள் நந்தினி.

     ரவிதாஸன், “தேவி! ஒரு விண்ணப்பம்! தங்கள் சித்தப்படி செய்யக் காத்திருக்கிறோம். ஆனால் இவனிடம் குதிரை இருக்கிறது. இவனை முதலில் போக விடுவது நல்லதா? கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள்!” என்றான்.

     “நல்லது; இவரை அந்தப் பள்ளிப்படைக் கோவில் தூணுடன் சேர்த்துக் கட்டிவிடுங்கள். கட்டை அவிழ்த்துக் கொண்டு புறப்பட இவருக்குச் சிறிது நேரம் ஆகும். அதற்குள் இந்தப் பள்ளிப்படைக் காட்டை நீங்கள் தாண்டிப் போய் விடலாம்” என்றாள்.

     வந்தியத்தேவன் பள்ளிப்படைத் தூணுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தான். சற்றுத் தூரத்தில் அவன் குதிரை ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. நந்தினி பல்லக்கில் ஏறிக் கொண்டு போய் விட்டாள். சிம்மாசனத்தை இரண்டு ஆட்கள் தூக்கிச் சென்றார்கள். ரவிதாஸன் கோஷ்டியார் சிறுவனை அழைத்துக் கொண்டு விரைந்து போய் விட்டார்கள். அவர்களுடன் சென்ற தீவர்த்தியின் வெளிச்சமும் சிறிது சிறிதாக மங்கி மறைந்து விட்டது. வந்தியத்தேவனைச் சுற்றிலும் கன்னங்கரிய காரிருள் சூழ்ந்தது.

     சிறிது நேரத்துக்கு முன்னால் அங்குப் பார்த்த காட்சிகள், நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் கனவோ எனத் தோன்றியது. இருட்டில் ராட்சத வௌவால்கள் சடபடவென்று தங்கள் அகன்ற சிறகுகளை அடித்துக் கொண்டன. ஊமைக் கோட்டான்கள் உறுமின. நரிகள் அகோரமான குரலில் முறைவைத்து ஊளையிட்டன. ஊளையிட்டுக்கொண்டே அவை நெருங்கி வருவதுபோல் வந்தியத்தேவனுக்கு உணர்ச்சி ஏற்பட்டது. காட்டில் இனந் தெரியாத உருவங்கள் பல நடமாடின.

     கடம்பூர் மாளிகையில் அவன் கண்ட கனவு நினைக்கு வந்தது. ஆயிரம் நரிகள் வந்து தன்னைச் சூழ்ந்து கொண்டு பிடுங்கித் தின்னப் போவதாக எண்ணி நடுங்கினான். அவசர அவசரமாகக் கட்டுக்களை அவிழ்த்துக் கொள்ளப் பார்த்தான். இலேசில் அக்கட்டுக்கள் அவிழ்கிற விதமாகத் தெரியவில்லை.

     வெளிச்சம் இருந்தால் கட்டுக்களை அவிழ்ப்பது சிறிது சுலபமாயிருக்கும். ஆனால் வெளிச்சம் என்று அறிகுறியே அங்கு இல்லை. மின்னல் வெளிச்சமும் இல்லை; மின்மினி வெளிச்சங்கூட இல்லை. வானத்தில் ஒரு வேளை மேகங்கள் அகன்று நட்சத்திரங்கள் தோன்றியிருந்தாலும் அவற்றின் வெளிச்சம் அந்தக் காட்டுக்குள் நுழைய இடமில்லை.

     ஆகா! அது என்ன சத்தம்? காட்டில் எத்தனையோ ஜந்துக்கள் நடமாடும்; அதில் என்ன அதிசயம்? இல்லை; இது மனிதனுடைய காலடிச் சத்தம் மாதிரி இருக்கிறதே! குதிரை இலேசாகக் கனைத்தது. கால்களை மாற்றி மாற்றி வைத்து அவஸ்தைப்பட்டது. ஒரு வேளை புலி, கிலி வருகிறதா என்ன? வந்தியத்தேவன் கட்டை அவிழ்க்க அவசரப்பட்டான்; பயனில்லை.

     அதோ ஒரு உருவம். அந்தக் காரிருளில் ஒரு கரிய நிழல் போன்ற உருவம். மனித உருவமா? அல்லது… வேறு என்னவாயிருக்க முடியும்? அது நெருங்கி நெருங்கி வந்தது. வந்தியத்தேவன் தன்னுடைய மனோதைரியம் முழுவதையும் சேகரித்துக் கொண்டான். தன்னுடைய தேகத்தின் பலம் முழுவதையும் காலில் சேர்த்துக் கொண்டான். ஓங்கி ஒரு உதை விட்டான்! “வீல்” என்ற சத்தமிட்டுக் கொண்டு அந்த உருவம் பின்னால் தாவிச் சென்றது. சிறிது தூரம் பின்னால் சென்றதும் “டணார்” என்று ஒரு சத்தம். பள்ளிப்படைச் சுவரில் அது மோதிக்கொண்டது போலும்!

     பின்னர் அங்கேயே அந்த உருவம் சிறிது நேரம் நின்றது. பள்ளிப்படைச் சுவரில் சாய்ந்து கொண்டு நிற்பதாகத் தோன்றியது. இருட்டில் விவரம் தெரியாவிட்டாலும் அந்த உருவம் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போல் வந்தியத்தேவனுக்கு உணர்ச்சி ஏற்பட்டது.

     கட்டுக்களை அவிழ்த்துக் கொள்வதற்கு மேலும் அவசரமாக அவன் முயன்றான். அந்த மந்திரவாதிப் பிசாசுகள் இவ்வளவு பலமாக முடிச்சுக்களைப் போட்டுவிட்டன! ஆகட்டும்; மறு தடவை அந்த ரவிதாஸனைப் பார்க்கும்போது சொல்லிக் கொடுக்கலாம்! அந்த உருவம் இடம் விட்டுப் பெயர்ந்தது. பள்ளிப்படைக்குள்ளே போவது போலத் தோன்றியது. சிறிது நேரத்துக்கெல்லாம் பள்ளிப்படைக் கோவிலுக்குள் கூழாங்கற்கள் மோதுவது போன்ற ‘டண்’, ‘டண்’ சத்தம் சில முறை கேட்டது.

     கோவில் வாசலில் வெளிச்சம். அதோ அந்த உருவம் கையில் ஒரு சுளுந்தைப் பிடித்துக் கொண்டு கோவிலுக்கு வெளியே வருகிறது. தன்னை நோக்கி வருகிறது. அது ஒரு காளாமுக வீர சைவனின் உருவம். நீண்ட தாடியும், சடைமுடியும், மண்டை ஓட்டு மாலையும் அணிந்த பயங்கரமான உருவம். வந்தியத்தேவன் அருகில் வந்து வெளிச்சத்தை தூக்கிப் பிடித்து அவனை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றது.

37. வேஷம் வெளிப்பட்டது


     பயங்கரத் தோற்றம் கொண்டிருந்த அந்தக் காளாமுக சைவரை அந்த நேரத்தில் அந்த இடத்தில் பார்க்கும் வந்தியத்தேவன் ஒரு கணம் திகிலடைந்தான். பிறகு அவனுக்கு இயற்கையான துணிச்சல் திகிலை விரட்டியடித்தது. “இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே? எங்கே?” என்று சிந்தித்தான். ஆம், ஆம்; அரிச்சந்திர நதிக்கரையில் மரத்தடியில் படுத்திருந்த போது இரண்டு பேர் வந்து உற்றுப் பார்த்துவிட்டுப் போகவில்லையா? அவர்களில் ஒருவன் இவன்! அவ்வளவுதானா? ஒரு தடவை மட்டும் பார்த்த முகமா இது? அந்தக் கூரிய பார்வையுள்ள கண்களை வேறு எங்கேயும் பார்த்ததில்லையா?

     இதற்குள் காளாமுக சைவன் அவனை உற்றுப் பார்த்து விட்டு, “ஹா! ஹா! ஹா!” என்று சிரித்தான். அந்தக் குரல் அடிக்கடி கேட்ட குரல்போல் இருக்கிறதே?

     “அட சே! நீ தானா? உனக்காகவா இந்த நள்ளிரவில் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன்?” என்று காளாமுக சைவன் கூறியபோது, அவன் வேண்டுமென்று சிறிது குரலை மாற்றிக் கொண்டு பேசியதாகத் தோன்றியது.

     “பின்னே, யாருக்காக வந்தாய்?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

     “இளவரசரைத் தேடிக் கொண்டு வந்தேன்!” என்றான் காளாமுகன்.

     “எந்த இளவரசரை?”

     “உனக்கென்ன அதைப்பற்றி? நீ ஏன் கேட்கிறாய்?”

     “நானும் ஒரு இளவரசன்தான்; அதனால் தான் கேட்டேன்.”

     “இளவரசனுடைய முக லட்சணத்தைப் பார்…!”

     “என் முகலட்சணத்துக்கு என்ன ஐயா, குறைவு? உம்மைப் போல் தாடி மீசையும், சடைமுடியும், எலும்பு மாலையும் அணிந்தால் என் முகம் இலட்சணமாகி விடுமா?”

     “அணிந்து பாரேன்! அப்போது தெரியும்.”

     “தாடி மீசையும் ஜடைமுடியும் எத்தனைநாளில் வளரும்?”

     “அது என்ன பிரமாதம்? ஒரு நாளில் வளர்ந்து விடும். வேண்டுமென்றால் ஒரு நாழிகையில் கூட…”

     “அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைத்தேன்…”

     “என்ன நினைத்தாய்?”

     “ஒன்றுமில்லை. என்னைக் கட்டியிருக்கும் கட்டுக்களை அவிழ்த்துவிடு. நானும் உங்கள் கோஷ்டியில் சேர்ந்து விடுகிறேன்.”

     “போதும் போதும்! உன்னைப் போன்ற ஒற்றர்கள் இன்னும் யாரோ எங்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் எங்கள் மகாசங்கம் இன்று அப்படி முடிந்தது.”

     “எப்படி முடிந்தது?”

     “மகா சங்கத்துக்கு இளவரசர் வரப்போகிறார்; அவர் சிம்மாசனம் ஏறியதும், எங்கள் மகாகுருவை இராஜ குருவாக ஏற்றுக் கொள்வதாய் வாக்களிக்கப் போகிறார் என்று காத்திருந்தோம்! இளவரசர் வரவேயில்லை.”

     “என்னைக் கட்டு அவிழ்த்துவிடு; இளவரசர் ஏன் வரவில்லையென்று நான் தெரியப்படுத்துகிறேன்.”

     “எந்த இளவரசர்?”

     “வேறு யார்? கண்டராதித்தரின் குமாரர் மதுராந்தகர் தான்!”

     “நான் ஊகித்தது சரி!”

     “என்ன ஊகித்தாய்?”

     “நீ ஒற்றன் என்று ஊகித்ததைத்தான் சொல்கிறேன்.”

     “எதைக் கொண்டு ஊகித்தாய்?”

     “இளவரசரைத் தேடிக்கொண்டு வந்தபோது, இந்தக் காட்டுக்குள்ளிருந்து சிலர் வெளியேறுவதைப் பார்த்தேன். அவர்கள் இன்னார் என்று எனக்குத் தெரியும். நீ ஒற்றன் என்று சந்தேகித்துத்தான் அவர்கள் உன்னைக் கட்டிப் போட்டிருக்க வேண்டும். ஆனால் உன்னை உயிரோடு ஏன் விட்டுவிட்டுப் போனார்கள் என்றுதான் தெரியவில்லை.”

     “அதை நான் சொல்லுகிறேன்; என்னைக் கட்டு அவிழ்த்து விடு!”

     “நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். உன்னைக் கட்டு அவிழ்த்து விடவும் முடியாது. நான் சொல்கிறபடி செய்கிறதாக ஒப்புக் கொண்டால்…”

     “நீ சொல்கிறபடி என்ன செய்ய வேண்டும்?”

     “உனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவதில்லையென்று ஒப்புக் கொண்டு நூற்றெட்டுத் தோப்புக்கரணம் போட வேண்டும்!”

     “அப்படியா சமாசாரம்?” என்றான் வந்தியத்தேவன்.

     இந்தப் பேச்சு நடந்து கொண்டிருந்த போதெல்லாம் அவனுடைய கைகள் சும்மா இருக்கவில்லை. மெள்ள மெள்ள கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டேயிருந்தன.

     “நூற்றெட்டுத் தோப்புக் கரணம் போட வேண்டும்” என்று காலாமுகன் கூறியபோது எல்லாக் கட்டுக்களும் அவிழ்ந்து விட்டன.

     பாய்ந்தான் வந்தியத்தேவன், அவனைக் கீழே தள்ளினான். காலாமுகன் கையில் ஏந்தியிருந்த சுளுந்து பக்கத்தில் விழுந்தது; ஆனால் அடியோடு அணைந்து விடாமல் சிறிது வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.

     கீழே விழுந்த காலாமுகன் மார்பின்மீது வந்தியத்தேவன் ஏறி உட்கார்ந்து கொண்டு அவன் முக தாடியைப் பிடித்துக் குலுக்கினான். தாடி வந்தியத்தேவனுடைய கையோடு வந்து விட்டது. அதே சமயத்தில் காலாமுகன் வந்தியத்தேவனை உதறித் தள்ளிவிட்டு எழுந்து நின்றான்.

     தரையில் கிடந்த அணைந்து போகும் தறுவாயிலிருந்த சுளுந்தை வந்தியத்தேவன் எடுத்துத் தூக்கிப் பிடித்தான். தாடியும் சடையும் இழந்த காலாமுகனுடைய முகம் சாக்ஷாத் வீரவைஷ்ணவ ஆழ்வார்க்கடியானுடைய முகமாகக் காட்சி அளித்தது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

     “வைஷ்ணவரே! சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடக்கூடாது என்று எனக்குச் சொன்னீரே? நீர் மட்டும் என்ன செய்தீராம்?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

     “உன்னைப்போல் நான் அபாயத்தில் அகப்பட்டுக் கொள்ளவில்லையே, அப்பனே! நான் மட்டும் இப்போது வந்திராவிட்டால்…”

     “நீர்தான் என் கட்டுக்களை அவிழ்த்து விட்டதாக எண்ணமா?”

     “நீயே கட்டு அவிழ்த்துக் கொண்டிருந்தாலும் இந்த காட்டிலிருந்து என் உதவியில்லாமல் வெளியே போகமுடியாது. நரிகளுக்கு இரையாக வேண்டியதுதான்.”

     “நரிகள் கிடக்கட்டும். இங்கே சற்றுமுன் வந்து கூடியிருந்த மந்திரவாதி நரிகளை நீர் பார்த்திருந்தால்… அந்த நரிகளிடமிருந்து நான் தப்பியதுதான் பெரிய காரியம்!”

     “அந்த மந்திரவாதிகளை எனக்கும் தெரியும். மந்திரவாதிகள் மட்டுந்தான் வந்திருந்தார்களா? இன்னும் யாராவது வந்திருந்தார்களா?”

     “சிறிய மீன் ஒன்று வந்திருந்தது. புலியை விழுங்க ஆசைப்படும் அதிசயமான மீன் அது!”

     “ஆகா! சொல்! சொல்! யார் யார் வந்திருந்தார்கள். என்னென்ன நடந்தது? விவரமாகச் சொல்!”

     “நீர் எதற்காக இந்த வேஷம் தரித்தீர்? சாயங்காலம் எங்கே போயிருந்தீர்? போயிருந்த இடத்தில் என்ன நடந்தது?- அதையெல்லாம் சொன்னால் இங்கே நடந்ததை நான் சொல்கிறேன்!”

     “நான் சொல்வதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. இன்று முன்னிரவில் கொள்ளிடக்கரையில் காலாமுகர் மகாசங்கம் கூடும் என்று தெரிந்தது. அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத்தான் இந்த வேஷம் போட்டுக் கொண்டு போனேன். பார்த்துவிட்டுக் கொள்ளிடக்கரைத் தோணித்துறையில் உன்னை வந்து சந்திக்கலாம் என்று எண்ணினேன். மகாசங்கமும் கூடிற்று; பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். காலாமுகர்களின் பெரிய குருவும் வந்திருந்தார். ஆனால் முக்கியமாக யார் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ, அவர் வரவேயில்லை!”

     “இளவரசர் மதுராந்தகரைத்தானே எதிர்பார்த்தார்கள்?”

     “ஆம்; அது எப்படி உனக்குத் தெரிந்தது?”

     “மதுராந்தகர் தஞ்சை சிம்மாசனத்தில் ஏறினால் இராஜ்ய பாரம் அழகாகத்தான் நடைபெறும்!”

     “ஏன் அவ்விதம் சொல்கிறாய்?”

     “ஒரு முரட்டுக் குதிரையை அடக்கி ஆள அவரால் முடியவில்லையே? பழுவேட்டரையர் போன்ற சிற்றரசர்களையும், கலக மூட்டும் காலாமுக சைவர்களையும், சண்டைக்கார வீர வைஷ்ணவர்களையும் அவரால் எப்படி அடக்கி ஆள முடியும்?”

     ஆழ்வார்க்கடியான், நகைத்துவிட்டு, “நீ வரும் வழியில் மதுராந்தகரைப் பார்த்தாயா? அவருக்கு என்ன நேர்ந்தது தெரியுமா?” என்று கேட்டான்.

     வந்தியத்தேவன் தான் மதுராந்தகரைத் தொடர்ந்து வந்ததையும், திடீரென்று தீவர்த்தியைக் கண்டு அவருடைய குதிரை தறிகெட்டு ஓடியதையும், தான் அவரைச் சிறிது தூரம் தேடிப் போனதையும், கடைசியில் களத்துமேட்டில் குதிரையை மட்டும் பார்த்ததையும் கூறினான்.

     பிறகு, “ஐயோ! பாவம்! குதிரை அவரை எங்கே தள்ளிற்றோ, என்னவோ? அவருடைய உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் நேர்ந்திருக்கலாம். அதனால்தான் அவர் உங்கள் மகாசங்கத்துக்கு வரவில்லை; நாம் மறுபடியும் போய் அவரைத் தேடிப் பார்க்கலாமா?” என்று கேட்டான்.

     “அழகுதான்! அதைப்பற்றி நமக்கு என்ன? நம்முடைய வேலையை நாம் பார்க்கலாம் வா! புறப்படு உடனே! பொழுது விடிவதற்குள் நாம் கொள்ளிட நதியின் தோணித்துறையில் இருக்க வேண்டும்” என்றான் ஆழ்வார்க்கடியான்.

     “மதுராந்தகர் வாய்க்காலிலோ, வயல் வரப்பிலோ விழுந்து செத்துக் கிடந்தாரானால்?.. அப்போதுகூட நமக்கு என்ன கவலை என்று சொல்வீரா?”

     “அப்படியெல்லாம் நேர்ந்திராது. அநிருத்தர் அதற்கு முன் ஜாக்கிரதை ஏற்பாடு செய்திருப்பார்.”

     “முதன் மந்திரி அநிருத்தரா? அவருக்கு என்ன இதைப் பற்றித் தெரியும்?”

     “ஆகா! அது என்ன அப்படிக் கேட்கிறாய்? அன்பில் அநிருத்தருக்குத் தெரியாமல் இந்த இராஜ்யத்தில் எந்த இடத்திலும் எதுவுமே நடக்க முடியாது.”

     “ஓகோ! கடம்பூர் மாளிகையில் நடந்த சதிக்கூட்டத்தைப் பற்றிய விஷயமும் அவருக்குத் தெரியுமா?”

     “ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள். வீர நாராயணபுரத்துத் திருவிழாவின் போது பழுவூர் ராணியின் பல்லக்குப் போனதை நாம் இருவர் ஒரு மரத்தடியில் நின்று பார்த்தோம் அல்லவா!”

     “ஆம்; பல்லக்கின் திரை விலகியதும் நீர் அடைந்த பரபரப்பு இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. ‘பழுவூர் ராணியிடம் ஒரு ஓலை கொடுக்க முடியுமா’ என்று நீர் என்னைக் கேட்டீர்?”

     “நீ அதற்குச் ‘சீச்சீ! அது என்ன வேலை’ என்றாய். நான் ஏதோ? காதல் ஓலை கொடுக்க விரும்பியதாகவே எண்ணினாய். ‘சதிகாரர்களின் பேச்சை நம்பி மோசம் போகவேண்டாம்’ என்று மதுராந்தகருக்கு எச்சரிக்கை செய்யவே நான் விரும்பினேன், முதன் மந்திரியின் கட்டளைப்படி!”

     “பல்லக்கில் இருந்தது மதுராந்தகர் என்று உமக்குத் தெரியுமா?”

     “முதலில் சந்தேகித்தேன் திரைவிலகியதும் அந்த இரகசியம் தெரிந்தது. நீ நல்ல அழுத்தக்காரன். நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் நீ பல்லக்கில் இருந்தது பழுவூர் ராணி அல்ல மதுராந்தகர் என்று சொல்ல மறுத்து விட்டாய் அல்லவா?”

     “நீர் மாத்திரம் அழுத்தக்காரர் இல்லையா? இன்று சாயங்காலம் நீர் எங்கே போகப் போகிறீர் என்று கூடச்சொல்ல மறுத்து விட்டீரே.”

     “சொன்னால் நீ அதிலும் தலையிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருப்பாய். இப்போதே எவ்வளவு சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டாய், பார்! இனிமேலாவது…”

     “காலாமுகர் கூட்டத்தைப் பற்றியும் மதுராந்தகர் அங்கே போக உத்தேசித்திருப்பது பற்றியும், முதன் மந்திரிக்குத் தெரியுமா?”

     “தெரியாமலா என்னை அனுப்பினார்? அதே சமயத்தில் மதுராந்தகர் அங்கே போய்ச் சேராதிருப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். யாரோ தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான் என்று சொன்னாயே, அவனும் அநிருத்தரின் ஆளாகத்தான் இருந்திருப்பான். வேண்டுமென்றே குதிரையை மிரட்டித் தறிகெட்டு ஓடும்படி செய்திருப்பான். தரையில் விழுந்த இளவரசரை யாராவது எடுத்துக் காப்பாற்றியிருப்பார்கள். இத்தனை நேரம் அநேகமாக அவர் ரதத்திலோ, பல்லக்கிலோ ஏறித் தஞ்சையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார். வா! நாமும் நம் வழியே போகலாம்.”

     “வைஷ்ணவரே! நான் வர முடியாது.”

     “இது என்ன, நீ ஒப்புக்கொண்ட காரியம் என்ன ஆயிற்று? காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலர் புறப்பட்டு விட்டதாகக் கேள்விப்படுகிறேன். நாம் உடனே வாயுவேக மனோவேகமாகப் போனால்தான்….”

     “ஆதித்த கரிகாலரிடம் கொடுக்க வேண்டிய ஓலையை நீரே கொடுத்துவிடலாமே? அவர் மதுராந்தகரைப் போல் ஸ்திரீ வேஷத்திலும் வர மாட்டார்; இரவில் ஒளிந்தும் பிரயாணம் செய்ய மாட்டார்…”

     “நீ என்ன செய்யப்போகிறாய்?”

     “உண்மையில் நான் மதுராந்தகரைப் பின் தொடர்ந்து இன்று சாயங்காலம் புறப்படவில்லை. வேறொருவரைத் தொடர்ந்து போக ஆரம்பித்ததில் மதுராந்தகரை வழியில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.”

     “நான் ஒரு ஜோசியம் சொல்லுகிறேன். நீ தொடர்ந்து போக ஆரம்பித்தது ஒரு பெண்மணியாக இருக்கும்.”

     “நீர் பொல்லாத வைஷ்ணவர்! ஒரு நாள் உம்முடைய மண்டையை உடைத்துவிட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறேன்.”

     “இது உன்னால் முடியாத காரியம். ஏற்கெனவே என் மண்டையை ஒரு காளாமுகனுக்கு அடகு வைத்திருக்கிறேன். அது போனால் போகட்டும், நீ குடந்தையிலிருந்து யாரைத் தொடர்ந்து புறப்பட்டாய்? அந்தப் பெண் யார்?”

     “கொடும்பாளூர் இளவரசி குடந்தை சோதிடர் வீட்டுக்கு வந்திருந்தாள். பல்லக்கில் ஏறிக்கொண்டு தனியாகப் புறப்பட்டுப் போனாள். உண்மையில் அந்தச் சித்தப் பிரமை கொண்ட பெண்ணைத் தொடர்ந்து நான் கிளம்பவில்லை. அவளுடைய பல்லக்கு நான் போக வேண்டிய பாதையில் கொஞ்சதூரம் போயிற்று. திடீரென்று அந்தப் பல்லக்கைச் சில மனிதர்கள் வந்து தாக்கினார்கள். கூடப்போன தாதிப் பெண்ணை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு வானதியை மட்டும் கொண்டு போனார்கள். வைஷ்ணவரே! அந்தப் பெண்ணின் கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளாமல் உம்மோடு வர எனக்கு இஷ்டமில்லை.”

     “அந்தப் பெண்ணைப் பற்றி உனக்கு என்ன அவ்வளவு கவலை?”

     “அது என்ன அப்படிச் சொல்கிறீர்? ஈழத்துப் பட்டமகாவீரர் சிறிய வேளாரின் புதல்வியல்லவா? பழையாறை இளைய பிராட்டியின் மனத்திற்குகந்த தோழியல்லவா? இன்னும், பொன்னியின் செல்வருக்கு வானதி தேவியை மணம் செய்விக்கப் போவதாகவும் ஒரு பிரஸ்தாபம் இருந்ததல்லவா?”

     “அப்பனே! பொன்னியின் செல்வர்தான் கடலில் முழுகி இறந்துவிட்டாரே? அவருடைய திருமணத்தைப் பற்றி இப்போது என்ன கவலை?”

     “அவர் இறந்து விட்டார் என்பது என்ன நிச்சயம்? ஊகந்தானே?”

     “அப்படியானால் அவர் உயிரோடிருக்கலாம் என்று நீ நினைக்கிறாயா?”

     “வைஷ்ணவரே! என்னுடைய வாயைப் பிடுங்கி ஏதேனும் இரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்பது உங்கள் உத்தேசமாயிருந்தால், அதை மறந்துவிடும்!”

     “சரி! சரி! நீ பெரிய அழுத்தக்காரன் என்பது எனக்குத் தெரியும் ஆனால் வானதி தேவியைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். இளைய பிராட்டிக்கு அவள் பேரில் உயிர் என்பதுதான் உனக்கு நன்றாகத் தெரியுமே?”

     “அதனாலேதான் நானும் கவலைப்படுகிறேன். வானதி தேவிக்கு இந்த ஆபத்து வந்தது இளைய பிராட்டிக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்லவா?”

     “இன்றைக்குத் தெரியாவிட்டால் நாளைக்குத் தெரிந்து விடுகிறது.”

     “நாளைக்குத் தெரிந்து என்ன பயன்? காலாமுகர்கள் அந்தக் கன்னிப் பெண்ணை இன்றிரவு பலி கொடுத்து விட்டால்….”

     “வானதியைக் காலாமுகர்கள் தாக்கிப் பிடித்துக் கொண்டு போனதாகவா சொல்லுகிறாய்?” அப்படித்தான் எனக்குத் தோன்றியது. வானதியின் தோழியும் அப்படித்தான் என்னிடம் கூறினாள்.”

     “அது உண்மையானால், நீ கொஞ்சம் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை. கொடும்பாளூர் வம்சத்தார் காளாமுகத்தைச் சேர்ந்தவர்கள். வானதி தேவி கொடும்பாளூர்ப் பெண் என்று தெரிந்தால், அவளுக்குக் காலாமுகர்கள் இராஜோபசாரம் செய்வார்கள்!”

     “ஓகோ! இது எனக்குத் தெரியாமல் போயிற்றே?”

     “ஆகையால்தான் காலாமுகர்கள் மதுராந்தகத் தேவருக்கு எதிராக இருக்கிறார்கள்…”

     “இந்த மண்டை ஓட்டுச் சாமியார்கள் எதிராக இருந்தால், என்ன வந்துவிடப் போகிறது?

     “உனக்குத் தெரியாது. இந்த நாட்டின் மிகப் பெரிய குடும்பங்கள் காலாமுகத்தைச் சேர்ந்தவை. சைன்யத்திலும் அத்தகைய பலர் இருக்கிறார்கள் அதனாலேயே பழுவேட்டரையர் இன்றைக்கு இந்த ஏற்பாடு செய்திருந்தார். மதுராந்தகருக்குக் காலாமுகர்களின் ஆதரவைத் தேட முயன்றார். அது ஒரு குதிரை செய்த கோளாறினால் பலிக்காமற் போயிற்று. நீ புறப்பட்டு, என்னுடன் வருகிறாயா அல்லது நான் கிளம்பட்டுமா?”

     வந்தியத்தேவன் வேண்டா வெறுப்பாக எழுந்து குதிரையையும் கையில் பிடித்துக்கொண்டான். அடர்ந்த காடுகளின் ஊடே ஆள் நுழையக்கூடிய வழியைக் கண்டுபிடித்து அவர்கள் வெளியே வந்தார்கள்.

     “அதோ பார்!” என்று ஆழ்வார்க்கடியான் வானத்தைச் சுட்டிக் காட்டினான்.

     முன் எப்போதையும் விடத் தூமகேதுவின் வால் நீண்டு வானத்தின் ஒரு பாதி முழுவதிலும் வியாபித்திருப்பதை வந்தியத்தேவன் பார்த்தான். குளிர்ந்த வாடைக்காற்று வீசிற்று. வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. தூரத்தில் கிராமத்து நாய் ஒன்று தீனமான சோகக் குரலில் அழுதது.

38. வானதிக்கு நேர்ந்தது


     சூரியன் மறைந்து நாலுதிக்கிலும் இருள் சூழ்ந்து வந்த நேரத்தில், வானதி குடந்தை – திருவாரூர் சாலையில் பல்லக்கில் போய் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளம் குழம்பியிருந்தது. நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போக வேண்டும் என்றும், அங்கே காய்ச்சல் வந்து படுத்திருக்கும் இளவரசருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்றும் அவள் மனம் துடித்தது. ஆனால் அது எப்படி சாத்தியமாகும்? புத்த பிக்ஷுக்களின் விஹாரத்துக்குள் தன்னை அனுமதிப்பார்களா, அங்கே இளவரசரைத் தான் பார்க்க இயலுமா, பார்த்தாலும் பணிவிடை செய்ய முடியுமா – என்பதை யெல்லாம் எண்ணியபோது ஒரே மலைப்பாயிருந்தது. நாகைப்பட்டினத்துக்குத் தனியாகப் பிரயாணம் செய்ய வேண்டியிருப்பதை எண்ணிய போது அதைரியம் உண்டாயிற்று. அதைரியத்தைப் போக்கி மனதில் உறுதி உண்டுபண்ணிக் கொள்ள முயன்றாள். உலகில் பெரிய காரியம் எதுதான் எளிதில் சாத்தியமாகும்? ஒவ்வொருவர் எடுத்த காரியத்தைச் சாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அந்த ஓடக்காரப் பெண் கடலில் தனியாகப் படகு செலுத்திக்கொண்டு போக எவ்வளவு நெஞ்சுத் துணிவு உள்ளவளாயிருக்க வேண்டும்? புயலிலும், மழையிலும் மலை போன்ற அலைகளுக்கு மத்தியில் படகு விட்டுக் கொண்டு போய் இளவரசரைக் காப்பாற்றியதற்கு எவ்வளவு நெஞ்சுத் துணிவு அவளுக்கு இருக்க வேண்டும்? தான் இந்த சிறிய பிரயாணத்தைக் குறித்துப் பயப்படுவது எவ்வளவு பேதமை? சூடாமணி விஹாரத்துக்குள் உடனே போக முடியாவிட்டால் பாதகமில்லை. அக்கம் பக்கத்தில் இருந்து இளவரசரைப் பற்றிய செய்தி தெரிந்து கொண்டிருந்தாலும் போதும். இளவரசரைப் பார்க்க முடியாவிட்டாலும் பாதகமில்லை; அந்த ஓடக்காரப் பெண்ணையாவது பார்க்க முடிந்தால் போதும். ஆம், அதுதான் சரி, அவளை எப்படியாவது தெரிந்து கொண்டால், அவள் மூலமாக இளவரசரைப் பார்க்க முடிந்தாலும் முடியலாம். அவரிடம் தனக்குள்ள அன்பு ஏதோ ஒரு பிரயோஜனத்தை காட்டிவிட வேண்டும். அதற்குப் பிறகு இந்த உயிரை விட்டாலும் விட்டுவிட்டலாம். அல்லது புத்த சங்கத்தில் சேர்ந்து பிக்ஷுணி ஆனாலும் ஆகிவிடலாம்…

     மறுநாள் எந்த நேரத்துக்கு நாகைப்பட்டினம் போய்ச் சேரலாம் என்று பல்லக்குச் சுமப்பவர்களை விசாரிப்பதற்காக வானதி பல்லக்கின் திரையை விலக்கி வெளியில் பார்த்தாள். சாலை ஓரத்தில் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களுக்குப் பின்னால் சில உருவங்கள் மறைந்து நிற்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. இன்னும் சிறிது கவனமாக உற்றுப் பார்த்தாள். மறைந்து நின்றவர்கள் வீர சைவ காலாமுகர்கள் என்று தெரிந்தது. இதைக் குறித்து வானதிக்குச் சிறிதும் கவலை உண்டாகவில்லை. அவள் கொடும்பாளூர் அரண்மனையில் வளர்ந்த காலத்தில் அடிக்கடி காலாமுகர்கள் அங்கே வருவதுண்டு. அவளுடைய பெரிய தந்தையிடம் பேசி, தங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுப் போவதுண்டு. காலாமுகர்களின் பெரிய குருவே ஒரு சமயம் கொடும்பாளூர் வந்திருக்கிறார். அவருக்கு உபசாரங்கள், பூஜைகள் எல்லாம் நடந்தன. அவளுடைய பெரிய தகப்பனார் பூதி விக்கிரம கேசரி பல திருக்கோயில்களில் காலாமுகர்களுக்கு அன்னம் படைப்பதற்கென்று நிவந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார். ஆகையால் காலாமுகர்கள் தனக்குக் கெடுதல் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒருவேளை உதவி செய்தாலும் செய்வார்கள். இன்றைக்கு அவர்களுடைய மகாசங்கம் கூடுகிறதென்பதும் வானதிக்குத் தெரிந்திருந்தது. ஆகையால் அன்று பழையாறையிலிருந்து குடந்தைக்கு வந்தபோது கூடச் சாலையில் காலாமுகர் கூட்டங்களை அவள் பார்க்கும்படி நேர்ந்தது. ஆனாலும், இவர்கள் எதற்காக மரத்தின் பின்னால் ஒளிந்து நிற்கிறார்கள்? தன்னை ஒருவேளை வேறு யாரோ என்று அவர்கள் எண்ணிக் கொண்டு ஏதாவது தீங்கு செய்யலாம் அல்லவா?…

     இப்படி அவள் எண்ணிக் கொண்டிருந்தபோதே, மறைந்திருந்தவர்கள் திடு திடு வென்று ஓடி வந்தார்கள். பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்போதும் அவள் பயப்படவில்லை. தான் யார் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க எண்ணினாள். எப்படி அதைச் சொல்வது என்று யோசிப்பதற்குள், பல்லக்குடன் வந்த பணிப்பெண்ணை இரண்டு பேர் பிடித்து மரத்தோடு கட்டுவதைப் பார்த்தாள். உடனே அவளையறியாமல் பீதியுடன் கூடிய கூச்சல் ஒன்று அவள் வாயிலிருந்து வந்தது. பல்லக்கைச் சூழ்ந்திருந்த காலாமுகர்களில் ஒருவன் ஒரு திரிசூலத்தை எடுத்து அவள் முகத்துக்கு நேரே காட்டி, “பெண்ணே, கூச்சல் போடாதே! கூச்சல் போடாதிருந்தால், உன்னை ஒன்றும் செய்யமாட்டோ ம். இல்லாவிட்டால் இந்தச் சூலத்தினால் குத்திக்கொன்று விடுவோம்” என்றான்.

     வானதிக்குச் சிறிது தைரியம் வந்தது கம்பீரமாகப் பேச எண்ணிக்கொண்டு, “நான் யார் தெரியுமா? கொடும்பாளூர் வேளார் மகள், என்னைத் தொட்டீர்களானால் நீங்கள் நிர்மூலமாவீர்கள்” என்றாள். அவளுடைய மனத்தில் தைரியம் இருந்ததே தவிர, பேசும்போது குரல் நடுங்கிற்று.

     அதைக் கேட்ட காலாமுகன் “எல்லாம் எங்களுக்குத் தெரியும். தெரிந்துதான் உனக்காகக் காத்திருந்தோம் சற்று நேரம் சத்தமிடாமலிரு! இல்லாவிட்டால்….” என்று மறுபடியும் திரிசூலத்தை எடுத்து நீட்டினான்.

     அதே சமயத்தில் சாட்டையினால் ‘சுளீர்’ ‘சுளீர்’ என்று அடிக்கும் சத்தமும், ‘ஐயோ’ என்ற குரலும் கேட்டது. அப்படி அடிபட்டு அலறியவர்கள் சிவிகை தூக்குவோர் என்பதை வானதி அறிந்தாள். அவர்களைச் சில காலாமுகர்கள் சாட்டையினால் அடித்திருக்க வேண்டும்! அதைப்பற்றி வானதி ஆத்திரப்பட்டுப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கிவிட எண்ணினாள். அதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஏனெனில் சிவிகை தூக்கிகள் பல்லக்கைச் சுமந்து கொண்டு ஓடத் தொடங்கினார்கள். காலாமுகர்களும் பல்லக்கைச் சூழ்ந்த வண்ணம் ஓடிவந்தார்கள். ஓடும்போது அவர்கள் பயங்கரமாகக் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடினார்கள். ஆகையால் வானதி தான் கூச்சல் போடுவதில் பயனில்லை என்பதை உணர்ந்தாள். ஓடும் பல்லக்கிலிருந்து கீழே குதிப்பதும் இயலாத காரியம். அப்படிக் குதித்தாலும் இந்தப் பயங்கர மனிதர்களுக்கு மத்தியில் தானே குதிக்க வேண்டும்? இவர்கள் எங்கேதான் தன்னைக்கொண்டு போகிறார்கள், எதற்காகக் கொண்டு போகிறார்கள் பார்க்கலாம் என்ற எண்ணமும் இடை இடையே தோன்றியது.

     சுமார் அரை நாழிகை நேரம் ஓடியபிறகு மரங்களின் மறைவிலிருந்து ஒரு பழைய துர்க்கைக் கோயிலுக்கு அருகில் வந்து நின்றார்கள். இதற்குள் நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. ஒருவன் கோயிலுக்குள் சென்று அங்கே எரிந்து கொண்டிருந்த தீபத்தை எடுத்துக் கொண்டு வந்து வானதியின் முகத்துக்கு எதிரே காட்டினான், காலாமுகர்களில் ஒருவன் வானதியை உற்றுப்பார்த்து “பெண்ணே! நாங்கள் கேட்கும் விவரத்தைச் சொல்லி விடு! உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம். அல்லது நீ எங்கே போக விரும்புகிறாயோ, அங்கே கொண்டு போய்ப் பத்திரமாய்ச் சேர்த்து விடுகிறோம்” என்றான்.

     வானதியின் மனத்தில் இதுவரை தோன்றாத சந்தேகம் உதித்தது. “எனக்கு என்ன விவரம் தெரியும்? என்னை என்ன கேட்கப் போகிறீர்கள்?” என்றாள்.

     “பெண்ணே! நீ யாரோ ஒருவரை அந்தரங்கமாகச் சந்திப்பதற்கே இப்படித் தனியாகப் பிரயாணம் தொடங்கினாய் அல்லவா? அவர் யார்? யாரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டாய்?”

     வானதியின் சந்தேகம் உறுதிப்பட்டது. ஒரு கண நேரத்தில் அவளுடைய உள்ளத்தில் ஒரு பெரிய மாறுதல் உண்டாயிற்று. ஒரு சிறிய சத்தத்தைக் கேட்டாலும் பயந்து மிரண்டு கொண்டிருந்த பெண்மான் உலகில் எதற்கும் அஞ்சாத பெண் சிங்கமாக மாறியது.

     “நான் யாரைச் சந்திக்கப் புறப்பட்டால் உங்களுக்கு என்ன? நீங்கள் யார் அதைப் பற்றிக் கேட்பதற்கு? சொல்ல முடியாது!” என்றாள் வானதி.

     காலாமுகன் சிரித்தான். “அதை நீ சொல்ல வேண்டாம்; எங்களுக்கே தெரியும். இளவரசன் அருள்மொழிவர்மனைச் சந்திப்பதற்குத்தான் நீ புறப்பட்டாய்! அவன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்று சொல்லி விடு. உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிறோம்” என்றான்.

     “நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என்னிடமிருந்து எந்த விவரமும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது” என்று வானதி அழுத்தம் திருத்தமாய்க் கூறினாள்.

     “உன்னை என்ன வேணுமானாலும் செய்து கொள்ளலாம் என்றா சொல்கிறாய்? நாங்கள் செய்யப் போவதும் என்ன வென்று அறிந்தால் இப்படிச் சொல்லத் துணியமாட்டாய்!”

     “என்ன செய்யப்போகிறீர்கள்? அதையும் சொல்லிப் பார்த்து விடுங்கள்!”

     “முதலில் உன் அழகான பூப் போன்ற கரங்களில் ஒன்றை இந்தத் தீவர்த்திப் பிழம்பில் வைத்துக் கொளுத்துவோம். பிறகு இன்னொரு கையையும் கொளுத்துவோம். பின்னர், உன் கரிய கூந்தலில் தீவர்த்தியைக் காட்டி எரிப்போம்…”

     “நன்றாகச் செய்து கொள்ளுங்கள். இதோ என் கை! தீவர்த்தியை அருகில் கொண்டு வாருங்கள்!” என்றாள் வானதி.

     இராஜ்யத்தில் நடந்து வந்த சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் வானதிக்குத் தெரிந்துதானிருந்தன.

     ‘இந்தத் துஷ்டர்கள், சதிகாரர்களின் ஆட்களாயிருக்க வேண்டும். இளவரசர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கப் பார்க்கிறார்கள். அவருக்குக் கெடுதி செய்யும் நோக்கத்துடனே தான் இருக்க வேண்டும். இளவரசருக்காக, அவருடைய பாதுகாப்புக்காக நான் இத்தகைய கொடூரங்களை அனுபவிக்கும்படி நேர்ந்தால், அதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது?’ இவ்வாறு எண்ணினாள், கொடும்பாளூர் இளவரசி வானதி. அந்த எண்ணந்தான் அவளுக்கு அத்தகைய மனோதைரியத்தை அளித்தது.

     “பெண்ணே! யோசித்துச் சொல்! வீண் பிடிவாதம் வேண்டாம். பிறகு வருத்தப்படுவாய்! உன் ஆயுள் உள்ள வரையில் கண் தெரியாத குரூபியாயிருப்பாய்!” என்றான் காலாமுகன்.

     “என்னை நீங்கள் அணு அணுவாகக் கொளுத்துங்கள்; என் சதையைத் துண்டு துண்டாக வெட்டுங்கள். ஆனாலும் என்னிடமிருந்து ஒரு விவரமும் அறிய மாட்டீர்கள்?” என்றாள்.

     “அப்படியானால் எங்களுடைய காரியத்தைப் பார்க்க வேண்டியதுதான்! சீடா! கொண்டுவா அந்தத் தீவர்த்தியை இங்கே!” என்றான் காளாமுகன்.

     அச்சமயம் வானதியின் கவனம் சற்றுத் தூரத்தில் சென்றது. யானைகள், குதிரைகள், காலாட்படைகள், பல்லக்குகள் முதலியன அடங்கிய நீண்ட ஊர்வலம் ஒன்று அவர்கள் இருந்த இடத்தை நெருங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். தெய்வத்தின் அருளால் தனக்கு ஏதோ எதிர்பாராத உதவி வருகிறது என்று எண்ணினாள்.

     “ஜாக்கிரதை! அதோ பாருங்கள்!” என்று சுட்டிக் காட்டினாள். காளாமுகன் மறுபடியும் சிரித்தான்.

     “வருகிறது யார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

     “முதன்மந்திரி அநிருத்தர் மாதிரி இருக்கிறது. நான் இப்போது கூச்சல் போட்டால் அவர்களுக்குக் காது கேட்கும். ஜாக்கிரதை! என்னை விட்டுவிட்டு ஓடிப்போய் விடுங்கள்! இல்லாவிட்டால்…” என்றாள் வானதி.

     “ஆம், பெண்ணே! வருகிறவர் முதன் மந்திரி அன்பில் அநிருத்தர்தான். அவருடைய கட்டளையின் பேரில்தான் உன்னை நாங்கள் பிடித்துக்கொண்டு வந்தோம்” என்றான் காலாமுகன்.

     இப்போது வானதியை மறுபடியும் திகில் பற்றிக் கொண்டது. அவளை அறியாமல் பீதி நிறைந்த கூச்சல் அவள் தொண்டையிலிருந்து வந்தது. இதை அடக்கிக் கொள்வதற்காகத் தன்னுடைய வாயைத் தானே பொத்திக்கொள்ள முயன்றாள்.

39. கஜேந்திர மோட்சம்


     இத்தனை நேரமும் வானதி சிவிகையிலேயே இருந்தாள். சிவிகையை இப்போது இறக்கிப் பூமியில் வைத்தார்கள். வானதி பல்லக்கிலிருந்து வெளியே வந்து நின்றாள். நெருங்கி வந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள். காலாமுகர்களும் அதே திசையைப் பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தார்கள். தண்ணீர் ததும்பிய கழனிகளில் தவளைகள் இட்ட சத்தமும், வாடைக்காற்றில் மரக்கிளைகள் அசைந்த சத்தமும் மட்டுமே கேட்டன.

     ஓடித் தப்பிக்கலாம் என்ற எண்ணமே வானதிக்குத் தோன்றவில்லை. அது இயலாத காரியமென்று அவளுக்குத் தெரிந்திருந்தது. இந்தக் காலாமுகர்களிடமிருந்து ஏதேனும் யுக்தி செய்து தப்பினாலும் தப்பலாம், அன்பில் அநிருத்தரிடமிருந்து தப்புவது கனவிலும் நினைக்க முடியாத காரியம். அவருடைய அறிவாற்றலும், இராஜ தந்திரமும், சூழ்ச்சித் திறனும் உலகப் பிரசித்தமானது. அதோடு சக்கரவர்த்தியிடம் அவர் மிகச் செல்வாக்கு உடையவர் என்பதும் உலகம் அறிந்தது. பழையாறையிலிருந்து அரண்மனைப் பெண்டிர் சோழ சாம்ராஜ்யத்தின் மற்ற அதிகாரிகளையும், சிற்றரசர்களையும் பற்றி வம்பு பேசுவார்கள், ஆனால் அநிருத்தரைப் பற்றி எதுவுமே பேச மாட்டார்கள். அந்தப்புரத்தின் உள் அறைகளிலே மிகமிக அந்தரங்கமாகப் பேசினாலும் அவருடைய காதுக்கு எட்டிவிடும் என்று பயப்படுவார்கள். சக்கரவர்த்தி வேறு எதைப் பொறுத்தாலும் தன் அந்தரங்கப் பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரிய முதன் மந்திரியைப்பற்றி யாரும் அவதூறு பேசுவதைப் பொறுக்க மாட்டார் என்று அனைவரும் அறிந்திருந்தார்கள்.

     இவையெல்லாம் வானதிக்கும் தெரிந்திருந்தன. இளவரசி குந்தவையும் அவரிடம் பெரும் மதிப்பு வைத்திருந்ததை அவள் அறிந்திருந்தாள். ஆகையால் அவரிடமிருந்து தனக்கு உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாள். இந்தக் காலாமுகர்கள் வேறுவிதமாகச் சொன்னதும் அவளுடைய மனோதிடம் குலைந்தது. அவர் எதற்காக இந்த அனாதைப் பெண்ணைக் கைப்பற்றச் சொல்லியிருக்க வேண்டும்? ஒருவேளை இவர்கள் பொய் சொல்லுகிறார்களோ என்னமோ! வருவது ஒருவேளை பழுவேட்டரையர்களாக இருக்கலாம். அல்லது மதுராந்தகரும் அவருடைய பரிவாரங்களாகவும் இருக்கலாம்… யாராயிருந்தாலும் ஒன்று நிச்சயம், இளவரசரைப் பற்றித் தனக்குத் தெரிந்த செய்தியை எவரிடமும் சொல்லக் கூடாது. அதனால் தனக்கு என்ன நேர்ந்தாலும் சரிதான்! தன் உயிரே போவதாயிருந்தாலும் சரிதான்!… இதைப் பற்றி எண்ணியதும் வானதி குலைந்த மனோதிடத்தை மீண்டும் பெற்றாள். வரட்டும் யாராயிருந்தாலும் வரட்டும். நான் கொடும்பாளூர் வேளிர் வீர பரம்பரையில் வந்தவள் என்பதை நிலை நாட்டுகிறேன். குந்தவைப் பிராட்டியின் அந்தரங்கத் தோழி என்பதையும் காட்டிக் கொடுக்கிறேன்.

     ஊர்வலத்தில் ஒரு பல்லக்கு மட்டும் பிரிந்து முன்னால் வந்தது. மற்ற யானை, குதிரை பரிவாரங்கள் எல்லாம் சற்று பின்னால் நின்றன. முன்னால் வந்த பல்லக்கு வானதியின் அருகில் வந்ததும் பூமியில் இறக்கப்பட்டது. அதனுள்ளிலிருந்து முதன் மந்திரி அநிருத்தர் வெளியே வந்து நின்றார்.

     அவர் சமிக்ஞை காட்டவே, சிவிகை சுமந்தவர்களும் காலாமுகர்களும் அப்பால் நகர்ந்து சென்றார்கள். அநிருத்தர் வானதியை மேலும் கீழும் உற்றுப் பார்த்து, “இது என்ன விந்தை! நான் காண்பது கனவு அல்லவே? என் முன்னால் நிற்பது கொடும்பாளூர் இளவரசிதானே! ஈழத்துப் போரில் வீரசொர்க்கம் எய்திய பராந்தகன் சிறிய வேளாரின் செல்வப் புதல்வி வானதிதானே?” என்று கேட்டார்.

     “ஆம், ஐயா! நான் காண்பதும் கனவு அல்லவே? என் முன்னால் நிற்பது சோழ சாம்ராஜ்ய மக்களின் பயபக்தி மரியாதைக்குரிய அன்பில் அநிருத்தப் பிரம்மராயர்தானே? சக்கரவர்த்தியின் அந்தரங்க அபிமானத்தைப் பெற்ற முதன் மந்திரியார்தானே?” என்றாள் வானதி.

     “தாயே! நான் யார் என்பதை நீ அறிந்திருப்பது பற்றி சந்தோஷப்படுகிறேன். இதனால், என்னுடைய வேலை எளிதாகும். உனக்கும் அதிகக் கஷ்டம் கொடுக்க வேண்டி ஏற்படாது.”

     “ஆகா! அதைப்பற்றித் தங்களுக்குக் கவலை வேண்டாம். தங்களைப் போன்ற அமைச்சர் திலகத்தினால் எனக்குக் கஷ்டம் நேர்ந்தால் அதை நான் பொருட்படுத்த மாட்டேன். அதைக் கஷ்டமாகவே கருதமாட்டேன்.”

     “உன்வார்த்தைகள் மேலும் எனக்குத் திருப்தி அளிக்கின்றன. உன்னை அதிகமாகக் கஷ்டப்படுத்தும் உத்தேசமும் எனக்கு இல்லை. இரண்டொரு கேள்விகள் உன்னிடம் கேட்கப் போகிறேன். அவற்றுக்கு மறுமொழி சொல்லிவிட்டால் போதும் பிறகு…”

     “ஐயா! நீங்கள் என்னைக் கேள்வி கேட்பதற்கு முன்னால் நான் கேட்பதற்குச் சில கேள்விகள் இருக்கின்றன….”

     “கேள், அம்மா! தயக்கமில்லாமல் கேள். நான் உன் தந்தையை யொத்தவன். உன்னை என் மகளாகவே கருதுகிறேன். சில நாளைக்கு முன்பு உன் பெரிய தகப்பனார் சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரியை மாதோட்டத்தில் சந்தித்தேன். உன்னை என்னுடைய மகளைப் போல் பாவித்துக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அப்படியே வாக்களித்தேன்…”

     “வந்தனம் என் தந்தையே! குழந்தைப் பிராயத்தில் தகப்பனை இழந்த எனக்குத் தந்தையாயிருப்பதாக முன்னொரு தடவை சக்கரவர்த்தி வாக்களித்தார்; இப்போது தாங்கள் ஒரு தந்தை தோன்றியிருக்கிறீர்கள். இனி எனக்கு என்ன குறை?”

     “நீ என்னிடம் கேட்க விரும்பியதைச் சீக்கிரம் கேள், அம்மா! வானம் கருத்து இருள் சூழ்கிறது. மழை வரும்போலத் தோன்றுகிறது.”

     “தந்தையே! சாலையோடு பல்லக்கில் பிரயாணம் செய்து கொண்டிருந்த தங்கள் அருமை மகளை இந்தக் காலாமுகர்களை விட்டு வழிமறித்து, இவ்விடம் பலவந்தமாகக் கொண்டு சேர்க்கும்படி செய்தது தாங்கள் தானா? இந்த அபலைப் பெண்ணின் கையைத் தீவர்த்திப் பிழம்பில் காட்டி எரிக்கும்படி சொன்னதும் தாங்கள் தானா? இந்தப் பயங்கரமான மனிதர்கள் அவ்வாறு தங்கள்மீது குற்றம் சாட்டினார்கள். நான் அதை நம்பவில்லை….”

     “குழந்தாய்! இவர்கள் கூறியது உண்மையே, நான்தான் இவர்களுக்கு அவ்விதம் கட்டளையிட்டேன். அது குற்றமாயிருந்தால் அதற்குப் பொறுப்பாளி நானே….”

     “மூன்று உலகமும் புகழ்பெற்ற சோழநாட்டு முதன் மந்திரியே! தங்கள் பேச்சு எனக்கு வியப்பளிக்கிறது. ‘குற்றமாயிருந்தால்’ என்றீர்களே! தாங்கள் சகல தர்ம சாஸ்திரங்களையும், நீதி சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர். சோழ சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்களையெல்லாம் நடத்தி வைக்கும் பொறுப்பு வாய்ந்தவர்; நீதிக்கு மாறாகச் சக்கரவர்த்தியே காரியம் செய்தாலும், அதைக் கண்டித்து நியாயமாக நடக்கச் செய்யும் உரிமை வாய்ந்தவர். ஒரு காரியம் குற்றமா இல்லையா என்பது தங்களுக்குத் தெரியாவிட்டால், வேறு யாருக்குத் தெரியும்? சாலையோடு பிரயாணம் செய்யும் அபலைப் பெண் ஒருத்தியைப் பலவந்தமாக வழிமறித்து தனி இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதும், அந்தப் பெண்ணைச் சித்திரவதை செய்வதாகப் பயமுறுத்துவதும் குற்றமா, இல்லையா? என்று தங்களுக்குத் தெரியாமற் போனால் வேறு யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள்? சுந்தரசோழ சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் வழிப் பிரயாணத்தில் எவ்விதப் பயமும் கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தேன். அதிலும் பெண்களைத் துன்புறுத்தும் துஷ்டர்களுக்குக் கடும் தண்டனை உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அது குற்றமா, இல்லையா என்றே தங்களுக்குச் சந்தேகம் தோன்றியிருப்பது மிக வியப்பான காரியம் அல்லவா?”

     முதன் மந்திரி அநிருத்தர் திணறிப்போனார். இடையில் குறுக்கிட்டுப் பேச அவர் இரண்டு தடவை முயன்றும் பயன்படவில்லை. இப்போது அவர் குரலைக் கடுமைப்படுத்திக் கொண்டு, “பெண்ணே! கொஞ்சம், பொறு! உன் பேச்சுத் திறமை முழுவதையும் காட்டிவிடாதே! ‘குற்றமா, இல்லையா?’ என்று நான் சந்தேகப்படுவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. அது நான் கேட்கும் கேள்விக்கு நீ சொல்லும் விடையைப் பொறுத்திருக்கிறது. முக்கியமான இராஜாங்க இரகசியம் ஒன்றை அறிந்த பெண் ஒருத்தி நாகைப்பட்டினம் சாலையில் போவதாக நான் கேள்விப்பட்டேன். அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தும்படி என் மனிதர்களுக்குக் கட்டளையிட்டேன். அவர்கள் என்னுடைய கட்டளையை நிறைவேற்றுவதாக எண்ணிக் கொண்டு செய்திருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தவறு செய்திருக்கலாம். இராஜாங்க சதி வேலையில் ஈடுபட்ட பெண்ணுக்குப் பதிலாகக் குடந்தை ஜோதிடரிடம் ஜோதிடம் கேட்டுவிட்டுத் திரும்பிய உன்னைக் கைப்பற்றியிருக்கக் கூடும். மகளே! நீ சொல், குடந்தையிலிருந்து பழையாறைக்குத் திரும்புவது தான் உன் நோக்கமா? சிவிகை தூக்கிகள் தவறாக உன்னை நாகைப்பட்டினம் சாலையில் கொண்டு போனார்களா? இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்த ஒருவனை அந்தரங்கமாகப் பார்க்கும் நோக்கத்துடன் நீ நாகைப்பட்டினத்துக்குப் புறப்படவில்லை?… இல்லையென்று நீ சொல்லி நிரூபித்தாயானால் இவர்கள் செய்தது குற்றமாகும்; அதில் எனக்கும் பங்கு உண்டுதான்! என்ன சொல்கிறாய், பெண்ணே? இன்னும் தெளிவாகவே கேட்டு விடுகிறேன். இளவரசன் அருள்மொழிவர்மனை இரகசியமாகச் சந்திப்பதற்காக நீ நாகைப்பட்டினத்துக்குப் புறப்படவில்லையே?…”

     இளவரசி இப்போது கதிகலங்கிப் போனாள். முதன் மந்திரி அநிருத்தரை எரித்துவிடலாமா என்று அவளுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனால் ஆத்திரத்தை வெளியில் காட்டுவதில் பயனில்லை என்று உணர்ந்தாள். கள்ளங்கபடம் அறியாதிருந்த அந்தச் சாதுப் பெண்ணுக்கு அப்போது எங்கிருந்தோ ஆழ்ந்து சிந்திக்கும் சக்தியும், சூழ்ச்சித் திறனும் ஏற்பட்டிருந்தன. ஆகையால், முதன் மந்திரியின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “ஐயா! இது என்ன வார்த்தை? இளவரசர் அருள்மொழிவர்மரையா இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்தார் என்று சொல்கிறீர்கள்? சக்கரவர்த்தியின் அருமைக் குமாரரைப் பற்றி நீர் இவ்விதம் பேசுவது குற்றம் அல்லவா? சோழ குலத்துக்கு எதிரான சதி அல்லவா? ஆகா! இதைப்பற்றி நான் உடனே குந்தவைப் பிராட்டியிடம் சொல்லியாக வேண்டும்!” என்றாள்.

     “பேஷாகச் சொல், தாயே! என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டால், பிறகு ஒரு கணங்கூட இங்கே தாமதிக்க வேண்டிய அவசியமில்லை. நானே உன்னை இளைய பிராட்டியிடம் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்…”

     “தங்களுடைய கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால்?…”

     “சொல்லாவிட்டால் என்பதே கிடையாது, தாயே! இந்தக் கிழவனிடமிருந்து அவ்வளவு சுலபமாகத் தப்ப முடியாது, என் கேள்விக்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்” என்றார் அமைச்சர்.

     “ஐயா! சர்வ வல்லமை படைத்த முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரே! ஒரு சக்தியும் இல்லாத இந்த ஏழை அபலைப் பெண்ணிடமிருந்து தாங்கள் இளவரசரைப்பற்றி எதுவும் அறிய முடியாது. இந்த யமகிங்கரர்கள் சற்றுமுன் பயமுறுத்தியது போல் என் கையைத் தீயிலிட்டு எரித்த போதிலும், நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.”

     “கொடும்பாளூர் வீர வேளிர் குலத்துதித்த கோமகளே! உன்னுடைய மன உறுதியைக் கண்டு மெச்சுகிறேன். ஆனால் இளவரசரைப் பற்றி ஒரு விவரமும் சொல்ல மாட்டேன் என்று நீ கூறினாயே, அது அவ்வளவு சரியன்று. ஏற்கெனவே, சில விவரங்கள் நீ சொல்லி விட்டாய். இன்னும் ஒரு விவரத்தையும் சொல்லிவிட்டால், அதிக நஷ்டம் ஒன்றும் நேர்ந்து விடாது. என் வேலையும் எளிதாய்ப் போய் விடும்…”

     வானதி மறுபடியும் திடுக்குற்றாள், ‘வாய் தவறி ஏதாவது சொல்லி விட்டோ மோ’ என்று நினைத்தபோது அவளுடைய நெஞ்சை யாரோ இறுக்கிப் பிடிப்பது போலிருந்தது உடம்பெல்லாம் பதறியது. ‘இல்லை, நான் ஒன்றும் சொல்லி விடவில்லை; இந்தக் கிழவர் என்னை ஏமாற்றப் பார்க்கிறார்’ என்று எண்ணிச் சிறிது தைரியம் அடைந்தாள். “ஐயா! வேதம் சொல்லும் உம்முடைய வாயிலிருந்து பொய் வரலாமா? சுந்தரசோழரின் முதல் அமைச்சர் இல்லாததைக் கற்பித்துச் சொல்லலாமா? நான் இளவரசரைப் பற்றி எதுவும் கூறவில்லையே? நான் ஏதோ கூறியதாகச் சொல்கிறீரே?” என்றாள்.

     “யோசித்துப் பார், தாயே! நன்றாக எண்ணிப்பார்! ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசாமலேயே, அதைப் பற்றிய விவரத்தைத் தெரிவிக்க முடியாது என்று நீ கருதினால், அது பெரிய தவறு. நீ சொல்லாமற் சொன்ன விவரத்தைக் குறிப்பிடுகிறேன்; கேள்! இளவரசர் அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக உலகமெல்லாம் பேச்சாக இருக்கிறது. குடிமக்கள், அதிகாரிகள் அனைவரும் சோகக்கடலில் ஆழ்ந்திருக்கிறார்கள். உனக்கும் அந்தச் செய்தி தெரியும். அப்படியிருக்கும்போது, நீ இளவரசரைப் பற்றி ஒரு விவரமும் சொல்லமாட்டேன் என்று கூறினாய். அதிலிருந்து வெளியாவது என்ன? இளவரசர் இறக்கவில்லையென்பது உனக்குத் தெரியும் என்று ஏற்படுகிறது. அவரைப் பார்ப்பதற்கு நீ நாகைப்பட்டினம் போகிறாய் என்று நான் சொன்னதையும் நீ மறுக்கவில்லை. ‘இறந்துபோன இளவரசரை நான் எப்படிப் பார்க்க முடியும்?’ என்று நீ திருப்பிக் கேட்கவில்லை. ‘நாகைப்பட்டினம் போகவில்லை, வேறு இடத்துக்குப் போகிறேன்’ என்றும் நீ சொல்லவில்லை. ஆகையால் நாகைப்பட்டினத்தில் இளவரசர் உயிரோடு இருக்கிறார் என்பதையும், அவரைப் பார்க்கப் போகிறாய் என்பதையும், ஒப்புக்கொண்டு விட்டாய். மிச்சம் நீ சொல்ல வேண்டிய விவரங்கள் இரண்டே இரண்டுதான்! நாகைப்பட்டினத்தில் இளவரசர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்; அந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரிந்தது என்றும் கூற வேண்டும். இந்த இரண்டு விவரங்களையும் நீ கூறிவிட்டால், அப்புறம் ஒருகணங்கூட இங்கே தாமதித்து இந்தக் கிழவனோடு பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உனக்கு எங்கே போக விருப்பமோ அங்கே போகலாம்.”

     வானதியின் உள்ளம் இப்போது அடியோடு கலங்கிப் போய் விட்டது. முதன் மந்திரி கூறியது உண்மை என்றும், தன்னுடைய அறியாமையினால் இளவரசரைக் காட்டிக்கொடுத்து விட்டதாகவும் உணர்ந்தாள். தான் செய்துவிட்ட குற்றத்துக்குப் பிராயச்சித்தம் உண்டா? கிடையவே கிடையாது! உயிரை விடுவதைக் தவிர வேறு ஒன்றுமில்லை.

     “ஐயா! தாங்கள் என் பெரிய தந்தையின் ஆப்த நண்பர் என்று சொன்னீர்கள். என்னைத் தங்கள் மகள் என்றும் உரிமை கொண்டாடினீர்கள். தங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நான் நாகைப்பட்டினம் போகவும் விரும்பவில்லை; பழையாறைக்குப் போகவும் விரும்பவில்லை….”

     “கொடும்பாளூருக்குப் போக விரும்புகிறாயாக்கும், அது நியாயந்தான். அங்கேயே உன்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்.”

     “இல்லை, ஐயா! கொடும்பாளூர் போகவும் நான் விரும்பவில்லை…. இந்த உலகத்தைவிட்டு மறு உலகத்துக்குப் போக விரும்புகிறேன். தங்களுடைய ஆட்களிடம் சொல்லி அதோ தெரியும் பலி பீடத்தில் என்னைப் பலி கொடுத்துவிடச் சொல்லுங்கள்! நான் தயாராக இருக்கிறேன்!” என்று சொன்னாள்.

     “தாயே! உன்னுடைய விருப்பம் எதுவோ அதை நிறைவேற்றி வைப்பதாகச் சொன்னேன். ஆகையால் மறு உலகத்துக்குத்தான் நீ போகவேண்டுமென்றால் அங்கேயே அனுப்பி வைக்கிறேன். ஆனால் அதற்கு முன்னால் என்னுடைய கேள்விகளுக்கு விடை சொல்லியாக வேண்டும்!”

     “ஐயா! என்னை வீணில் துன்புறுத்த வேண்டாம். நான் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லப் போவதில்லை. என்னைத் தங்கள் மகளாகக் கருதுவதாய்ச் சற்றுமுன் தாங்கள் சொன்னது உண்மையாயிருந்தால்…”

     “மகளே! அதில் யாதொரு சந்தேகமுமில்லை. உன்னை நான் பெற்ற மகளாகவே கருதுகிறேன். உன் குடும்பத்தார் எனக்கு எவ்வளவு வேண்டியவர்கள் என்பது ஒருவேளை உனக்குத் தெரிந்திராது! உன் பெரிய தந்தையும், நானும் நாற்பது ஆண்டுகளாகத் தோழர்கள். ஆனால் இராஜாங்க காரியங்களில் சிநேகிதம், உறவு என்றெல்லாம் பார்ப்பதற்கில்லை. பெற்ற தந்தை என்றும் பார்க்க முடியாது. அருமைக் குமாரி என்றும் பார்க்க முடியாது. ஏன்? சக்கரவர்த்தியின் காரியத்தையே பார்! தமது சொந்த குமாரன் இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்தபடியால், அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடவில்லையா?”

     “ஐயா! பொன்னியின் செல்வரைப் பற்றியா இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்? அவர் இராஜாங்கத்துக்கு விரோதமாக என்ன சதி செய்தார்?”

     “ஓகோ! உனக்கு அது தெரியாது போலிருக்கிறது. இலங்கைக்குப் போர் செய்யப் போவதாகச் சொல்லி விட்டுப் பொன்னியின் செல்வர் போனார். அங்கே நமது வீரப் படைகள் இலங்கைப் படைகளை முறியடித்தன. அந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டு இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக்கொள்ளப் பார்த்தார். இது இராஜாங்கத்துக்கு விரோதமான சதியல்லவா? இதை அறிந்ததும் சக்கரவர்த்தி தமது திருக்குமாரரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்குக் கட்டளை அனுப்பினார். இளவரசர் அக்கட்டளையை மீறிக் கடலில் வேண்டுமென்று குதித்துத்தான் இறந்து விட்டதாகப் பொய்ச் செய்தியைப்பரப்பச் செய்தார். பிறகு கரையேறி எங்கேயோ ஒளிந்து, மறைந்திருக்கிறார். இந்த விவரங்கள் உனக்குத் தெரியாதபடியால் அவர் இருக்குமிடத்தை நீ சொல்ல மறுத்தாய் போலும். அப்படிப்பட்ட இராஜாங்க விரோதியை நீ மறைத்து வைக்க முயன்றால், அதுவும் பெரிய குற்றமாகும் ஆகையால், சொல்லிவிடு அம்மா!” என்றார் முதன் மந்திரி.

     வானதி இதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் இப்போது பொங்கிப் பீறிக்கொண்டு வெளிவந்தது. பொன்னியின் செல்வரைக் குறித்து முதன் மந்திரி கூறிய தூஷணைகளை எல்லாம் அவளால் பொறுக்க முடியவில்லை. அந்தச் சாதுப் பெண் வீராவேசமே உருவெடுத்தவள் போலாகிக் கூறினாள்:-

     “ஐயா! தாங்கள் கூறியது ஒன்றும் உண்மையில்லை. இளவரசர் மீது வீண் அபாண்டம் கூறினீர்கள். இலங்கையில் நமது படைகள் சோர்வடைந்திருந்த காலத்தில் இளவரசர் அங்கே சென்றதினாலேயே உற்சாகங்கொண்டு போராடினார்கள். பொன்னியின் செல்வர்தான் இலங்கையில் நம் வெற்றிக்குக் காரணமானவர் என்பது உலகமறிந்த உண்மை. அவருடைய வீரத்தையும், மற்ற குணாதிசயங்களையும் பார்த்து இலங்கை மக்கள் அவர் மீது அன்பு கொண்டார்கள். போரில் புறமுதுகிட்டோ டி ஒளிந்து கொண்ட தங்கள் அரசனுக்குப் பதிலாக இளவரசரைத் தங்கள் அரசனாக்கிக் கொள்ள விரும்பினார்கள். புத்த குருமார்கள் இலங்கைச் சிம்மாசனத்தைப் பொன்னியின் செல்வருக்கு அளித்தார்கள். பொன்னியின் செல்வர் சிம்மாசனம் தமக்கு வேண்டாம் என்று மறுதளித்தார். அத்தகைய நேர்மையானவரைக் குறித்துத் தாங்கள் இவ்வளவு அவதூறு சொல்லியிருக்கிறீர்கள். இளவரசர் தந்தையின் கட்டளை என்று அறிந்ததும் தாமே சிறைப்பட்டு நேரே தஞ்சைக்குப் புறப்பட்டு வந்தார். அவர் கடலில் வேண்டுமென்று குதிக்கவில்லை. தம் அருமை சிநேகிதரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே குதித்தார். சக்கரவர்த்திக்கு விரோதமாக அவர் சதி செய்யவும் இல்லை. இந்த அபாண்டங்களையெல்லாம் கேட்க என் செவிகள் என்ன துர்பாக்கியம் செய்தனவோ தெரியவில்லை!…”

     அநிருத்தர் இலேசாகச் சிரித்துக்கொண்டே, “பெண்ணே! அருள்மொழிவர்மருக்காக நீ இவ்வளவு ஆத்திரமாகப் பரிந்து பேசுவதைக் கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா? நீங்கள் இருவரும் காதலர்கள் என்று நினைப்பார்கள்!” என்றார்.

     “ஐயா! தாங்கள் இப்போது கூறியதில் பாதி மட்டும் உண்மை. நான் அவருக்கு என் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பது மெய்தான். இதைத் தங்களிடமிருந்து நான் மறைக்க விரும்பவில்லை. ஆனால் அவர் இந்த அநாதைப் பெண்ணுக்குத் தன் உள்ளத்தில் இடங்கொடுத்திருப்பதற்கு நியாயம் இல்லை. வானத்தில் ஜொலிக்கும் சந்திரன் மீது அன்றில் பறவை காதல் கொள்ளலாம். ஆனால் சந்திரனுக்கு அன்றில் பறவை ஒன்று இருப்பதே தெரிந்திராது.”

     “ஆஹா! என் அருமைச் சிநேகிதரின் மகள் இவ்வளவு சிறந்த கவிதாரசிகை என்பது இதுவரை எனக்குத் தெரியாமற் போயிற்று. இளைய பிராட்டி குந்தவையின் அந்தரங்கத் தோழி அல்லவா நீ” என்றார் முதன் மந்திரி.

     “போதும் போதும்! தங்கள் புகழ்ச்சியைக் கேட்க நான் விரும்பவில்லை. ஒன்று என்னை என் வழியே போவதற்கு விடுங்கள். இல்லாவிடில் உங்கள் ஆட்களை அழைத்துக் கட்டளையிடுங்கள்.”

     “பெண்ணே! கொஞ்சம் பொறு! பொன்னியின் செல்வரைப் பற்றி உனக்கு எவ்வளவோ விவரங்கள் தெரிந்திருக்கின்றன. ஆகையால் அவர் இப்போது இருக்குமிடமும் உனக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதை மட்டும் சொல்லிவிடு. உன்னை உடனே உன் பெரிய தந்தையிடம் அனுப்பி வைக்கிறேன். அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார். இத்தனை நேரம் மதுரைக்கு வந்திருப்பார்….”

     “ஐயா! தங்களைப் போன்ற வஞ்சம் நிறைந்த மனிதருடன் சிநேகமாயிருப்பவர், என்னுடைய பெரிய தந்தை அல்ல. எனக்கு உற்றார் உறவினர் யாருமில்லை. இளவரசரைப் பற்றி எல்லாரும் அறிந்திருப்பதையே நான் சொன்னேன். வேறு எதுவும் என்னிடமிருந்து தாங்கள் தெரிந்துகொள்ள முடியாது. வீண் தாமதம் செய்ய வேண்டாம்…”

     “தாமதம் செய்யக்கூடாதுதான். பலமாக மழை வரும் போலிருக்கிறது…”

     “மழை மட்டுந்தானா வரும்? தங்களைப் போன்றவர்கள் உள்ள இடத்தில் இடி, மின்னல், பிரளயம் எல்லாம் வரும்!”

     வானதியின் கூற்றை ஆமோதிப்பது போல் அச்சமயம் ஒரு நெடிய மின்னல் வானத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரையில் பாய்ந்தோடி ஜொலித்துவிட்டு மறைந்தது. மின்னல் மறைந்து இருள் சூழ்ந்ததும் அண்டகடாகங்கள் அதிரும்படியான பேரிடி ஒன்று இடித்தது.

     “பெண்ணே! இளவரசன் அருள்மொழிவர்மன் எங்கே இருக்கிறான் என்று சொல்லமாட்டாயா?”

     “சொல்லமாட்டேன்!”

     “நான் ஊகித்தது ஊர்ஜிதமாகிறது. இளவரசன் மறைந்திருக்கும் இடத்துக்கு நீ ஏதோ இரகசியச் செய்தி கொண்டு போவதற்காகப் புறப்பட்டாய், இது உண்மையா, இல்லையா?”

     “ஐயா! வீண் வேலை, தங்கள் கேள்வி எதற்கும் இனி நான் மறுமொழி சொல்ல முடியாது.”

     “அப்படியானால், இராஜாங்கத்துக்கு துரோகமாகச் சதி செய்பவர்களுக்கு அளிக்கவேண்டிய கடுந் தண்டனையை உனக்கும் அளிக்க வேண்டியதுதான் வேறு வழி இல்லை.”

     “தண்டனையை ஏற்பதற்குக் காத்திருக்கிறேன், ஐயா! பலிபீடத்தில் என் தலையை வைக்கவேண்டும் என்றால் அப்படியே செய்கிறேன்.”

     “சேச்சே! நீ கொடும்பாளூர் வேளிர்மகள்! உனக்கு அவ்வளவு அற்பமான தண்டனை கொடுக்கலாமா? அதோ பார் அந்த யானையை!”

     வானதி, அவர் காட்டிய திசையைப் பார்த்தாள் கன்னங்கரிய குன்றினைப் போல் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. கருங்கல்லினால் செய்த கரிய மை பூசப்பட்ட உருவத்தைப் போல் அது தோன்றியது. அதன் கருமையை நன்கு எடுத்துக் காட்டிக்கொண்டு இரண்டு வெள்ளைத் தந்தங்கள் நீண்டு வளைந்து திகழ்ந்தன.

     “பெண்ணே! கஜேந்திர மோட்சம் என்று கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? யானையின் அபயக்குரல் கேட்டுத் திருமால் ஓடி வந்து முதலையைக் கொன்று கஜேந்திரனை மோக்ஷத்துக்கு அனுப்பினார். அதற்குப் பதிலாக இந்தக் கஜேந்திரன் எத்தனை எத்தனையோ பேரை அந்தத் திருமால் வாசம் செய்யும் மோட்ச உலகத்துக்கு அனுப்பியிருக்கிறது. நீ இந்த உலகத்தைவிட்டு மறு உலகத்துக்குப் போக வேண்டும் என்று சொன்னாய் அல்லவா? உன் விருப்பத்தை இந்த யானை கண்மூடித் திறக்கும் நேரத்தில் நிறைவேற்றி வைக்கும். அது தன் துதிக்கையினால் உன்னைச் சுற்றி எடுத்து வீசி எறிந்தால் நீ நேரே மோட்ச உலகத்திலேயே போய் விழுவாய்!”

     இவ்விதம் கூறிவிட்டு முதன் மந்திரி அநிருத்தர் சிரித்தார். அந்தச் சிரிப்பு வானதிக்கு ரோமஞ்சனத்தை உண்டாக்கிற்று. இந்த மந்திரி, மனிதர் அல்ல, மனித உருக்கொண்ட அரக்கன் என்று எண்ணினாள்.

     “கோமகளே! முடிவாகக் கேட்கிறேன், பொன்னியின் செல்வன் இருக்குமிடத்தைச் சொல்கிறாயா? அல்லது இந்தக் கஜேந்திரனுடைய துதிக்கை வழியாக மோட்சத்துக்குப் போகிறாயா?” என்ற வார்த்தைகளைக் கேட்டதும், வானதி மீண்டும் மனோதிடம் பெற்றாள்.

     “ஐயா! கஜேந்திரனை என்னிடம் வரச் சொல்கிறீர்களா? அல்லது நானே கஜேந்திரனிடம் போகட்டுமா?” என்று கம்பீரமாகக் கேட்டாள்.

     அநிருத்தர் கையினால் சமிக்ஞை செய்தார். அத்துடன் அவர் வானதிக்கு விளங்காத பாஷையில் ஏதோ சொன்னார். யானை பூமி அதிரும்படி நடந்து வந்தது. வானதியின் அருகில் வந்தது. தன்னுடைய நீண்ட துதிக்கையினால் வானதியின் மலரினும் மிருதுவான தேகத்தைச் சுற்றி வளைத்தது. அவளைப் பூமியிலிருந்து தூக்கியது.

     அந்தச் சில கணநேரத்தில் வானதியின் உள்ளத்தில் பற்பல எண்ணங்கள் அலை அலையாகப் பாய்ந்து மறைந்தன. தான் அச்சமயம் அவ்வளவு தைரியத்துடன் இருப்பதை நினைத்து அவளுக்கே வியப்பாயிருந்தது. இளையபிராட்டி குந்தவை தேவி என்னைப் பயங்கொள்ளி என்றும், கோழை என்றும் அடிக்கடி சொல்லுவாரே? அவர் இச்சமயம் இங்கிருந்து என்னுடைய தைரியத்தைப் பார்த்திருந்தால் எத்தனை ஆச்சரியப்படுவார்? அவருக்கு என்றாவது ஒருநாள் இச்சம்பவத்தைப் பற்றித் தெரியாமலிராது; பொன்னியின் செல்வருக்காக நான் தீரத்துடன் உயிரை விட்டது பற்றி அறிந்து கொள்வார். அதை இளவரசரிடமும் சொல்லியே தீருவார். அப்போது இளவரசர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? அந்த ஓடக்காரப் பெண்ணைக் காட்டிலும் கொடும்பாளூர் வேளார் மகள் தைரியசாலி என்று அப்போதாவது அறிந்து கொள்வார் அல்லவா?

     யானையின் துதிக்கை மெள்ள மெள்ள மேலே எழுந்தது. அத்துடன் வானதியும் மேலே ஏறினாள். ‘ஆம், ஆம்! அந்தப் பிரம்மராட்சதர் கூறியது உண்மைதான். இந்தக் கஜேந்திரன் என்னை நேரே மோட்சத்திற்கே அனுப்பிவிடப் போகிறது! அடுத்த கணம் என்னை வீசி எறிய போகிறது! எத்தனை தூரத்தில் போய் விழுவேனோ தெரியவில்லை ஆனால் விழும் போது எனக்குப் பிரக்ஞை இராது. அதற்குள் உயிர் போய்விடும்!’

     வானதி இப்போது யானையின் மத்தகத்துக்கு மேலேயே போய் விட்டாள். கண்களை மூடிக் கொண்டாள். யானை தன் துதிக்கையைச் சுழற்றியது. வானதியை விசிறி எறிவதற்குச் சித்தமாயிற்று. அந்தச் சமயத்தில் கடவுள் அருளால் வானதி தன் சுய நினைவு இழந்து விட்டாள்.

40. ஆனைமங்கலம்


     நம் கதாநாயகிகளில் ஒருத்தியான வானதி அடிக்கடி நினைவு இழக்கும் வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா? இந்த ஒரு தடவை மட்டும் நேயர்கள் அதைப் பொறுக்கும்படி வேண்டுகிறோம். ஏனெனில், அவளுடைய நோய் நீங்கும் காலம் நெருங்கி விட்டது.

     வானதிக்கு நினைவு சிறிது வந்தபோது முதலில் அவள் ஊசலாடுவது போலத் தோன்றியது. பின்னர் அவள் தான் வானவெளியில் பிரயாணம் செய்து கொண்டிருப்பதாக எண்ணினாள். “ரிம் ரிம்”, “ஜிம் ஜிம்” என்று மழைத்தூறலின் சத்தம் கேட்டது. குளிர்ந்த காற்று “குப் குப்” என்று உடம்பின்மீது வீசிற்று. அதனால் தேகம் சிலிர்த்தது. சரி சரி, மேக மண்டலங்களின் வழியாக வானுலகிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று எண்ணினாள். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது, இடையிடையே மின்னல் வெளிச்சம் பளிச்சிட்டு மறைந்தது.

     முதன் மந்திரி கடைசியாகக் கஜேந்திர மோட்சத்தைப் பற்றிக் கூறியதும், யானை அதன் துதிக்கையினால் தன்னைச் சுற்றி வளைத்துத் தூக்கியதும் இலேசாக நினைவு வந்தன. முதன் மந்திரி அநிருத்தர் கூறியபடியே நடந்து விட்டது. ‘மண்ணுலகில் என் ஆயுள் முடிந்து இப்போது மோட்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். மோட்ச உலகில் தேவர்களையும், தேவிகளையும் பார்ப்பேன்.’

     ‘ஆனால் எல்லாத் தேவர்களிலும் என் மனத்துக்குகந்த தெய்வமாகிய அவரை அங்கே நான் பார்க்க முடியாது. மனத்துக்கு இன்பமில்லாத அத்தகைய மோட்ச உலகத்துக்குப் போவதில் என்ன பயன்?’

     அடடே! இது என்ன ஊசலாட்டம்! உடம்பை இப்படித் தூக்கித் தூக்கிப் போடுகிறதே! ஆனால் தலைவைத்திருக்கும் இடம் மெத்தென்று சுகமாயிருக்கிறது. தாயின் மடியைப் போல் இருக்கிறது. ஏன்! தாயைக் காட்டிலும் என்னிடம் பிரியம் வாய்ந்த இளைய பிராட்டியின் மடியைப் போலவும் இருக்கிறது!… ஆ! குந்தவைதேவி இப்போது பழையாறையில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ? என்னைப் பற்றி செய்தி அவருக்கு இதற்குள் எட்டியிருக்குமோ?

     ‘மோட்ச உலகத்துக்கு வானவெளியில் மேக மண்டலங்களின் வழியாகப் பிரயாணம் செய்வது சரிதான். ஆனால் என்ன வாகனத்தில் பிரயாணம் செய்கிறேன்? சொர்க்கலோகத்துப் புஷ்பக விமானமா இது? அல்லது தேவேந்திரனுடைய ஐராவதம் என்ற யானையா? அப்பா! யானை என்றாலே சிறிது பயமாகத்தானிருக்கிறது! யானையும் அதன் துவண்டு, வளையும் துதிக்கையும்! – அப்படித் துவளும் துதிக்கையில் தான் எவ்வளவு பலம் அதற்கு?- போனது போயிற்று! இனி அதைப் பற்றிப் பயம் என்ன? கவலை என்ன?’

     ‘ஆனால் தலை வைத்திருக்கும் இடம் அவ்வளவு பட்டுப்போல் மிருதுவாயிருக்கும் காரணம் யாது? சுற்றிலும் இருளாயிருப்பதால் ஒன்றும் தெரியவில்லை. கையினால் துளாவிப் பார்க்கலாம். உண்மையில், பட்டுத் திரைச் சீலை மாதிரிதான் தோன்றுகிறது. கொஞ்சம் ஈரமாயும் இருக்கிறது.’

     ‘ஆகா! இது என்ன? என் கன்னங்களை யார் தொடுகிறது? மல்லிகைப் பூவைப் போன்ற மிருதுவான கரம் அல்லவா தொடுகிறது?’

     “வானதி! வானதி!”

     “அக்கா! நீங்கள் தானா?”

     “நான்தான். வேறு யார்?”

     “நீங்கள் கூட என்னுடன் மோட்ச உலகத்துக்கு வருகிறீர்களா?”

     “மோட்ச உலகத்துக்குப் போக அதற்குள் உனக்கு என்னடி அவசரம்? இந்த உலகம் அதற்குள்ளே வெறுத்துப் போய் விட்டதா?”

     “பின்னே, நாம் எங்கே போகிறோம்?”

     “என்னடி அதுகூட மறந்து போய்விட்டதா? ஆனை மங்கலத்துக்குப் போகிறோம் என்று தெரியாதா?”

     “என்ன ஊர்? இன்னொருதடவை சொல்லுங்கள்!”

     “சரியாய்ப் போச்சு! ஆனைமங்கலத்துக்குப் போகிறோம்! ஆனையின் முதுகில் ஏறிக்கொண்டு போகிறோம்!”

     “ஐயோ! யானையா?”

     “அடி பைத்தியமே! உன் உடம்பு ஏனடி நடுங்குகிறது! யானை என்ற பெயரைக் கேட்டாலே பயப்படத் தொடங்கிவிட்டாயா?”

     “அக்கா! சற்று முன்தூங்கிப் போய்விட்டேனா?”

     “ஆமாம், ஆமாம்! யானையின் மேல் அம்பாரியில் பிரயாணம் செய்கிற சொகுசில் ஆனந்தமாய்த் தூங்கி விட்டாய்!”

     “ஆனந்தம் ஒன்றுமில்லை, அக்கா! பயங்கரமான கனவுகள் கண்டேன்!”

     “அப்படித்தான் தோன்றியது! ஏதேதோ பிதற்றினாய்!”

     “என்ன அக்கா பிதற்றினேன்!”

     “காலாமுகர் என்றாய்! பலி என்றாய்! கஜேந்திர மோட்சம் என்றாய்! யானைத் துதிக்கை என்றாய்! அப்புறம் முதன் மந்திரி அநிருத்தரைப் “பாவி, பழிகாரன்” என்று திட்டினாய். அந்தப் பிரம்மராயருக்கு நன்றாய் வேண்டும்! நீ தூக்கத்தில் அவரைப் பற்றித் திட்டியதையெல்லாம் அவர் கேட்டிருந்தால், பல நாள் தூங்கவே மாட்டார்!”

     “அதெல்லாம் நடந்தது நிஜமாகக் கனவுதானா, அக்கா!”

     “நிஜமாகக் கனவா? பொய்யாகக் கனவா? எனக்கு என்ன தெரியும்? நீ என்ன சொப்பனம் கண்டாய் என்பதே எனக்குத் தெரியாது.”

     “காலாமுகர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு போனார்கள். முதன் மந்திரி என்னிடம் இளவரசரைப்பற்றி இரகசியத்தைக் கேட்டார். நான் சொல்ல மறுத்துவிட்டேன். உடனே யானையை அழைத்து என்னைத் தூக்கி எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார். அப்போது நான் கொஞ்சங் கூடக் கலங்காமல் தைரியமாக இருந்தேன். அக்கா! அப்போது உங்கள் ஞாபகமும் வந்தது. நீங்கள் அங்கே இல்லையே, என்னுடைய தைரியத்தைப் பார்ப்பதற்கு என்று.”

     “போகட்டும்; சொப்பனத்திலாவது அவ்வளவு தைரியமாக நடந்து கொண்டாயே? அதன் பொருட்டுச் சந்தோஷம்!”

     வானதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, “என்னால் நம்பமுடியவில்லை!” என்றாள்.

     “உன்னால் என்னத்தை நம்ப முடியவில்லையடி?”

     “நான் கண்டதெல்லாம் கனவு என்று நம்பமுடியவில்லை.”

     “சில சமயம் சொப்பனங்கள் அப்படித்தான் இருக்கும். நிஜமாக நடந்தது போலவே தோன்றும். நான்கூட அப்படிப்பட்ட சொப்பனங்கள் பலமுறை கண்டிருக்கிறேன்.”

     “அப்படி என்ன சொப்பனம் கண்டிருக்கிறீர்கள்? சொல்லுங்களேன்?”

     “ஏன்? என் தம்பிகூடத்தான் அடிக்கடி என் கனவில் வருகிறான். இலங்கைக்கு அவன் போய் எத்தனை மாதம் ஆயிற்று? ஆனால் இரவில் கண்ணை மூடினால் அவன் தத்ரூபமாக என் முன்னால் வந்து நிற்கிறான்…”

     “நீங்கள் அதிர்ஷ்டசாலி, அக்கா!”

     “என் அதிர்ஷ்டத்தை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். அவன் கடலில் குதித்த செய்தி வந்ததிலிருந்து என் மனம் எப்படித் துடித்துக் கொண்டிருக்கிறது என்று உனக்குத் தெரியாது.”

     “அப்படியானால் அதுவும் ஒரு பயங்கர சொப்பனம் அல்லவா? அவர் கடலில் முழுகியது மட்டும் நிஜமான செய்திதானா!”

     “அதுவும் ஒரு துர்ச் சொப்பனமாயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே? அது மட்டும் நிஜந்தானடி வானதி! இளவரசன் கடலில் குதித்ததை நேரில் பார்த்தவர் வந்து சொன்னாரே! அதை நம்பாமல் என்ன செய்வது?”

     “வாணர்குல வீரரைத்தானே சொல்கிறீர்கள்? அவரே இளவரசரைப்பற்றி வேறு ஏதோ சொல்லவில்லையா? ஓடக்காரப் பெண்ணைப் பற்றியும் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் ஏதோ சொல்லவில்லையா?”

     “இதெல்லாம் உன் சொப்பனமாயிருக்க வேண்டும். ஆம், ஓடக்காரி பூங்குழலியைப் பற்றியும், நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் நீ தூக்கத்தில் பிதற்றினாய்! புத்த பிக்ஷுணி ஆகப் போவதாகக் கூட உளறினாய்! அதற்குள் உனக்கு என்னடி இந்த உலக வாழ்க்கையின் மீது அவ்வளவு வெறுப்பு? எதற்காக நீ புத்த பிக்ஷுணி ஆகவேண்டும்?”

     “அக்கா! என் மனது உங்களுக்குத் தெரியாதா? அவரைக் கடல் கொண்டுவிட்டது என்று கேட்ட பிறகு, எனக்கு இந்த உலகில் என்ன வாழ்வு வைத்திருக்கிறது! சொப்பனத்தில் கண்டபடியே யானை என்னைத் துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்றிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது!”

     “அடி பாவி! நீயும் போய் விட்டால் என் கதி என்னடி ஆகிறது?”

     “உங்கள் விஷயம் வேறு, அக்கா! நீங்கள்…”

     “ஆமாம், ஆமாம்! அருள்மொழியிடம் என்னைக் காட்டிலும் உனக்கு அதிக ஆசை! இல்லையா?”

     “அக்கா! அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை. தங்களைப் போல் நான் மனோதைரியம் உள்ளவள் அல்ல. அவர் இறந்து விட்ட பிறகு….”

     “சீச்சீ! என்ன வார்த்தை சொல்லுகிறாய்? அவன் இறந்தான் என்று ஏன் சொல்ல வேண்டும்? உனக்கு நிச்சயமாய்த் தெரியுமா? பழுவேட்டரையர்களும், பழுவூர் ராணியும், பேதை மதுராந்தகனும் அப்படிச் சொல்லிக் கொம்மாளம் அடிப்பார்கள். நீயும், நானும், அப்படி ஏன் சொல்ல வேண்டும்? அல்லது ஏன் நினைக்கத்தான் வேண்டும்?”

     “பின்னே, என்ன சொல்கிறீர்கள்? அவர் சுழிக் காற்றில் கடலிலே குதித்தபிறகு… வேறு என்ன ஆகியிருக்க முடியும்? பிழைத்திருந்தால் இத்தனை நாள் வந்திருக்க மாட்டாரா?”

     “அடி பைத்தியமே! கடலில் குதித்தால், அவனைக் கடல் கொண்டு விட்டது என்று அர்த்தமா?”

     “கரை ஏறியிருந்தால் இத்தனை நாள் தெரியாமலா இருக்கும்?”

     “என் தகப்பனாரின் கதை உனக்கு தெரியுமா? அவர் இளம்பிராயத்தில் பல மாத காலம் இருக்குமிடமே தெரியாமலிருந்தது. தேடிப்பிடித்துக் கொண்டு வந்து இளவரசுப் பட்டம் கட்டினார்கள். என் பாட்டனார் அரிஞ்சய சோழர் தக்கோலம் யுத்தத்திற்குப் பிறகு அடியோடு மறைந்து விட்டார். பல வருஷங்களுக்குப் பிறகுதான் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நான் சொல்லுகிறேன் கேள், வானதி! காவேரித்தாய் ஒரு சமயம் என் தம்பியைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள். அது மாதிரியே சமுத்திர ராஜனும் பொன்னியின் செல்வனைக் கரை சேர்த்திருப்பார். நமது கடற்கரைக்கும் இலங்கைத் தீவுக்கும் மத்தியில் எத்தனையோ சிறிய சிறிய தீவுகள் இருக்கின்றன. அத்தீவுகளில் ஒன்றில் அருள்மொழி ஒதுங்கியிருக்கக் கூடும் அல்லவா? அவனைத் தேடும் வேலையை நன்றாகச் செய்யும்படி தூண்டுவதற்காகவே நான் இந்தப் பிரயாணம் புறப்பட்டேன், உன்னையும் அழைத்துக்கொண்டு, உனக்கு இதெல்லாம் ஞாபகமே இல்லை போலிருக்கிறது. உன் பேரில் தப்பு இல்லை. இளவரசரைப் பற்றிய செய்தி வந்ததிலிருந்து உன் புத்தியே பேதலித்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் தெளிவாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய்!”

     வானதி சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு, “அக்கா! நாம் எந்த ஊருக்குப் போகிறோம் என்று சொன்னீர்கள்?” என்றாள்.

     “ஆனைமங்கலத்துக்கு”

     “அது எங்கே இருக்கிறது?”

     “நாகைப்பட்டினத்துக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் இருக்கிறது. நீ ஏதோ சொப்பனம் கண்டு உளறினாயே, அந்தச் சூடாமணி விஹாரத்துக்கும் ஆனைமங்கலத்துக்கும் கொஞ்ச தூரந்தான். நீ புத்த பிக்ஷுணியாவதாயிருந்தால் கூட, அதற்கும் சௌகரியமாகவேயிருக்கும். ஆனால் நீ மணிமேகலையாவதற்கு அவசரப்பட வேண்டாம். பொன்னியின் செல்வனைப் பற்றித் திடமான செய்தி கிடைத்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம்!” என்று குந்தவை கூறி விட்டு இலேசாகச் சிரித்தாள்.

     “அக்கா! இது என்ன நீங்கள் சிரிக்கிறீர்கள்! சிரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது? இளவரசர் பிழைத்திருப்பார் என்று உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா?”

     “நம்பிக்கை இல்லாவிட்டால், நான் இப்படி இருப்பேனா வானதி! நான் பார்த்து வைத்திருக்கும் ஜோசியங்கள் எல்லாம் பொய்யாகப் போவதில்லை. என் தம்பியின் கையில் உள்ள சங்கு சக்கர ரேகைகளும் பொய்யாகப் போவதில்லை. இது வரையில் எல்லாம் சரியாகத்தான் நடந்து வருகிறது.”

     “என்ன சரியாக நடந்து வருகிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே?” என்றாள் வானதி.

     “உனக்கு ஏன் தெரியப் போகிறது? நீ தான் சித்தப் பிரமை பிடித்து அலைகிறாயே? அருள்மொழிக்கு இளம் வயதில் பல கண்டங்கள் நேரும் என்று சொன்னார்கள். அதன்படி நேர்ந்து வந்திருக்கின்றன. பின்னே மற்றவையும் நடந்து தானே ஆக வேண்டும்?”

     “மற்றவை என்றால்?”

     “எத்தனையோ தடவை நான் சொல்லியாகிவிட்டது. நீயும் கேட்டிருக்கிறாய், மறுபடி எதற்காகச் சொல்லச் சொல்லுகிறாய்? பேசாமல் தூங்கு! பொழுது விடிந்து பார்த்துக் கொள்ளலாம்.”

     வானதி மீண்டும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, “இராத்திரியெல்லாம் யானை மீது பிரயாணம் செய்யப் போகிறோமா அக்கா! எதற்காக?” என்று கேட்டாள்.

     “அதுகூடவா உனக்கு ஞாபகம் இல்லை? பகலில் நாம் பிரயாணம் செய்தால் வழியில் உள்ள ஊர்களிலெல்லாம் ஜனங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். “பொன்னியின் செல்வன் எங்கே?” “சோழ நாட்டின் தவப்புதல்வன் எங்கே?” என்று கேட்பார்கள். பழுவேட்டரையர் மீது குற்றம் சுமத்துவார்கள். பழுவூர் இளைய ராணியைச் சபிப்பார்கள். சக்கரவர்த்தியைக் கூட நிந்தித்தாலும் நிந்திப்பார்கள். அதையெல்லாம் நாம் எதற்காகக் காதினால் கேட்க வேண்டும்? நான்தான் ஜனங்களை அப்படியெல்லாம் தூண்டி விட்டதாகப் பழுவேட்டரையர்கள் சொன்னாலும் சொல்லுவார்கள்! எதற்காக இந்த வம்பு என்றுதான் இராத்திரியில் புறப்பட்டேன். இதையெல்லாம் பழையாறையிலிருந்து புறப்படும்போதே உனக்குச் சொன்னேன்; மறுபடியும் கேட்கிறாய். நல்ல சித்தப்பிரமை பிடித்து உன்னை ஆட்டுகிறது! சூடாமணி விஹாரத்துப் புத்த பிக்ஷுக்களிடம் சொல்லித்தான் உன் சித்தப்பிரமையைப் போக்க வழி தேட வேண்டும்! போனால் போகட்டும்; நீ இப்போது தூங்கு! எனக்கும் தூக்கம் வருகிறது இந்த ஆடும் குன்றின் மீது உட்கார்ந்தபடியேதான் இன்று இரவு நாம் தூங்கியாக வேண்டும்” என்றாள் இளையபிராட்டி.

     வானதி இனி ஒன்றும் பேசக்கூடாது என்று தீர்மானித்து மௌனமானாள். அவளுடைய உள்ளம் ஒரே குழப்பமாயிருந்தது. அன்று நடந்ததையெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள். எல்லாம் உண்மையாக நிகழ்ந்த சம்பவங்களாகவே தோன்றின. ‘எனக்குச் சித்தப் பிரமை ஒன்றுமில்லை; அக்காதான் என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறாள்’ என்று சில சமயம் எண்ணினாள். யானை தன்னைத் துதிக்கையினால் சுற்றித் தூக்கிய பிறகு என்ன நடந்தது என்பதை எண்ணி எண்ணிப் பார்த்தாள். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. என்னதான் நடந்திருக்கும்? தன் உயிருக்கே ஆபத்தான அந்த வேளைக்கு அக்கா சரியாக அங்கே வந்து தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அக்காவைப் பார்த்ததும், முதன் மந்திரி நடுநடுங்கிப் போயிருக்க வேண்டும். ஆயினும் யானைத் துதிக்கையின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமா?… ஒரு வேளை இவ்வாறு இருக்குமோ?..தன்னைத் துதிக்கையால் கட்டித்தூக்கிய யானைதானா இது? மேலே அம்பாரி இருந்தது. அந்த இருட்டிலும் சிறிது தெரிந்தது. இளையபிராட்டி அந்த அம்பாரியிலேயே இருந்திருக்கலாம். யானை துதிக்கையினால் தூக்கித் தன்னைத் தூர எறிவதற்குப் பதிலாக மேலே அம்பாரியில் விட்டிருக்கக் கூடும். அந்த மாதிரி செய்ய யானைகள் பழக்கப்பட்டிருப்பதை வானதி பலமுறை பார்த்ததுண்டு. முதன் மந்திரியும், இளையபிராட்டியும் சேர்ந்து இம்மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ? எதற்காக? நான் தனியாகப் பிரயாணம் செய்வதைத் தடுக்கும் பொருட்டுத்தான். என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காகவும் இளைய பிராட்டி இம்மாதிரி செய்திருக்கலாம். பொம்மை முதலையை என் அருகிலே விட்டு ஒரு சமயம் சோதனை செய்யவில்லையா?.. எப்படியாவது இருக்கட்டும்; நான் இன்று தனி வழியே புறப்பட்டது பெருந்தவறு. இப்போது அக்காவின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பது எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது. அக்காவின் வார்த்தைகள் எவ்வளவு தைரியமும் உற்சாகமும் அளிக்கின்றன! பொன்னியின் செல்வன் எங்கேயோ பத்திரமாகயிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை இந்தப் பிரயாணத்தின் முடிவில் அவரைச் சந்திப்போமா?.. இவ்வாறு எண்ணியபோது வானதியின் உள்ளத்தில் அளவில்லாத கிளர்ச்சி ஏற்பட்டது. மனச்சோர்வுக்கு நேர்மாறான உற்சாக இயல்பு இப்போது அவளை ஆட்கொண்டது.

     யானை கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. யானைமேல் அம்பாரி ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னும் பின்னும் காவற்படைகள் போய்க்கொண்டிருந்தன. மழை சிறு தூறலாயிற்று, பிறகு தூறலும் நின்றது. வானத்தில் மேகக் கூட்டங்கள் சிதறிக் கலைந்தன. நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன.

     வானதி யானையின் அம்பாரிக் கூரை வழியாக மேலே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தாள். வானவெளியில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களுக்கும், பூலோகத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்க முடியுமா என்று அதிசயப்பட்டாள். பொன்னியின் செல்வர் உதித்த நட்சத்திரத்துக்கும், தான் பிறந்த நட்சத்திரத்துக்கும் உள்ள பொருத்தத்தை பற்றி ஜோதிடர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மையிருக்குமா? தன் வயிற்றில் பிறக்கும் மகன் மூன்று உலகத்தையும் ஆளப் போகிறான் என்று ஜோதிடர்களுடன் சேர்ந்து அக்காவும் சொல்வது உண்மையாகுமா? வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதோ உற்பாதத்துக்கு அறிகுறி என்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களே, அது எவ்வளவு தூரம் நிஜமாயிருக்கும்?

     அப்படி என்ன உற்பாதம் நடக்கும்? பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா? அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா? அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும்!…

     இம்மாதிரியெல்லாம் வெகு நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்த பிறகு வானதி இலேசாகக் கண்ணயர்ந்தாள். அவள் கண்விழித்துப் பார்த்தபோது, பொழுது புலர்ந்திருந்தது. புள்ளினங்கள் உதய கீதம் பாடின. இளைய பிராட்டியும் விழித்துக் கொண்டிருந்தாள். அம்பாரியின் பட்டுத் திரையை விலக்கிகொண்டு வெளியே பார்த்து, “இதோ ஆனைமங்கலம் வந்து விட்டோ ம். சோழ மாளிகையின் வாசலுக்கே வந்து விட்டோ ம்” என்றாள்.

     இரு இளவரசிகளும் யானை மீதிருந்து இறங்கினார்கள். மாளிகைக்குள்ளே பிரவேசித்தார்கள். அங்கே ஆயத்தமாயிருந்த அரண்மனைத் தாதிமார்கள் இளவரசிகள் இருவரையும் மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். கடைசியில், மாளிகையின் கீழ்ப்புறத்துக்கு வந்து, அங்கிருந்த அலங்கார முன்றின் முகப்பில் நின்றபடி கடலுடன் கலந்த கால்வாயைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

     “அக்கா! இளவரசரைத் தேடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னீர்களே? என்ன செய்திருக்கிறீர்கள்?” என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

     “ஆமாடி வானதி! தேடுவதற்கு ஏற்பாடு ஆரம்பமாகி விட்டது. அதோபார், ஒரு படகு வருகிறது! அதில் வருகிறவர்கள் ஒருவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள்!” என்றாள் குந்தவை.

     வானதி திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தூரத்தில் மரக்கிளைகளின் இடைவெளியில் ஒரு சிறிய படகு வருவது தெரிந்தது. அதில் இருவர் இருந்தார்கள்.

     “அக்கா! அந்தப் படகில் வருவது யார்?” என்று வானதி கேட்டாள்.

     “படகு தள்ளுகிறவன் சேந்தன் அமுதன். தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையிலிருந்து நாம் அன்றொரு நாள் விடுதலை செய்தோமே, அவன். உட்கார்ந்திருப்பவள் பூங்குழலி!”

     வானதிக்கு உடம்பு சிலிர்த்தது. “அக்கா! நான் அந்தப் பெண்ணைப் பார்க்க விரும்பவில்லை, உள்ளே போகிறேன்!” என்றாள்.

     “என்னடி அவளைக் கண்டு அவ்வளவு பயம்! உன்னை அவள் விழுங்கி விடுவாளா, என்ன? நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பயப்படாமல் சும்மா இரு!” என்றாள் குந்தவை. படகு நெருங்கி வந்து கொண்டிருந்தது.

     யானைத் துதிக்கையில் அகப்பட்ட வானதி எப்படி உயிர் பிழைத்தாள்? இதைக் குறித்து, அவள் இரண்டாவதாகச் செய்த ஊகந்தான் சரியானது. யானை துதிக்கையைச் சுழற்றி அவளைத் தூர எறியவில்லை. மேலே தூக்கி அம்பாரியின் அருகில் இலேசாக வைத்தது. அங்கே திரை மறைவில் ஆயத்தமாயிருந்த குந்தவை அவளை வாரி அணைத்து மடியில் போட்டுக் கொண்டாள்.

     பிறகு முதன் மந்திரியும் பல்லக்கில் ஏறினார். “தேவி போய் வரட்டுமா? உன் பிரயாணம் இனிதாயிருக்கட்டும். அதன் முடிவும் இனிதாயிருக்கட்டும்!” என்று சொன்னார்.

     “ஐயா! தங்கள் உதவிக்கு மிக்க நன்றி!” என்றாள் இளைய பிராட்டி.

     “கொடும்பாளூர்ச் கோமகளைக் கோழை என்றாயே? அவளைப்போல் நெஞ்சழுத்தக்காரப் பெண்ணை நான் பார்த்ததேயில்லை.”

     “முன்னேயெல்லாம் அவள் கோழையாகத் தானிருந்தாள். கொஞ்ச நாளாகத்தான் அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்கிறது” என்றாள் குந்தவை.

     “எல்லாம் உன்னுடைய பயிற்சிதான். அந்தப் பெண் என்னைப் பயங்கர ராட்சதன் என்று எண்ணியிருப்பாள்; போனால் போகட்டும். என்னைப் பற்றி எவ்வளவோ பேர் எத்தனையோ விதமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். நான் அதற்காகவெல்லாம் கவலைப்படுவதில்லை போய் வாருங்கள், அம்மா!”

     இவ்விதம் முதன் மந்திரி கூறியதும், அவருடைய பல்லக்கும் நாலு வீரர்களும் மட்டும் மேற்குத் திசையில் செல்ல, யானை, குதிரை பரிவாரங்கள் எல்லாம் கிழக்கு நோக்கிச் சென்றன.

     முதன் மந்திரி பல்லக்குப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் மழை பிடித்துக் கொண்டது. மழையைப் பொருட்படுத்தாமல் சிவிகை தூக்கிய ஆட்களும், சிவிகையைக் காத்த வீரர்களும் சென்று கொண்டிருந்தார்கள். மழை குறைந்து தூறல் நிற்கும் சமயத்தில் திடீரென்று பல்லக்கு நின்றது.

     “ஏன் நிற்கிறீர்கள்?” என்று முதன் மந்திரி கேட்டார்.

     “சுவாமி, அந்த மரத்தடியில் யாரோ கிடப்பது போலத் தெரிந்தது!” என்றான் முன்னால் சென்ற காவலர்களில் ஒருவன்.

     முதன் மந்திரி அவன் சுட்டிக்காட்டிய திசையை உற்றுப் பார்த்தார். பளிச்சென்று ஒரு மின்னல் மின்னியது.

     “ஆமாம், யாரோ கிடக்கிறதாகத்தான் தெரிகிறது, இறங்கிப் பார்க்கிறேன்” என்றான் முதன் மந்திரி.

     சிவிகையிலிருந்து இறங்கி அருகில் சென்றபோது மரத்தடியில் கிடந்த மனிதன் முனகும் சத்தம் கேட்டது.

     “யார் இங்கே!” என்றார் அநிருத்தர்.

     அதற்குப்பதிலாக, “முதன் மந்திரி போலிருக்கிறதே!” என்ற தீனமான குரல் கேட்டது.

     “ஆம்;” கேட்டது முதன் மந்திரிதான்!

     “இங்கே கிடப்பது யார்?”

     “ஐயா! தெரியவில்லையா? நான்தான் மதுராந்தகன்!”

     “இளவரசே! இது என்ன கோலம்? இங்கே எப்படி வந்தீர்கள்? என்ன நேர்ந்தது?” என்று பரபரப்புடன் கேட்டுக் கொண்டே முதன் மந்திரி மதுராந்தகரைத் தூக்கி நிறுத்த முயன்றார்.

கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *