36. “ஞாபகம் இருக்கிறதா?”
லதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நிற்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள்.
அப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது.
தோட்டத்தில் சிறிது தூரம் வரையில் பெரிய பெரிய அடி மரங்களும் அவற்றைச் சுற்றிக் கொண்டிருந்த கொடிகளும் தெரிந்தன. அப்பால் ஒரே இருட் பிழம்பாயிருந்தது.
இருளைக் கீறிக் கொண்டு, கொடிகளை விலக்கிக் கொண்டு, மரம் ஒன்றின் பின்னாலிருந்து மந்திரவாதி வெளியே வந்தான்.
நந்தினி தன்னுடைய புஷ்ப மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் அழகிய முகத்தில் இப்போது அமைதி குடிகொண்டிருந்தது.
மந்திரவாதி லதா மண்டபத்துக்குள் நுழைந்தான். தங்க விளக்கின் சுடர் ஒளி அவன் முகத்டின் மீது விழுந்தது.
ஏற்கனவே பார்த்த முகமாயிருக்கிறதே! யார் இவன்? ஆம்? திருப்புறம்பயம் பள்ளிப்படையினருகில் நள்ளிரவில் கூடியிருந்த மனிதர்களில் ஒருவன் இவன். பையிலிருந்து பொன் நாணயங்களைக் கலகலவென்று கொட்டியவன். “ஆழ்வார்க்கடியானைக் கண்ட இடத்தில் உடனே கொன்றுவிடுங்கள்!” என்று மற்றவர்களுக்குக் கூறிய ரவிதாஸன் தான் இவன்.
வரும்போதே அவன் முகத்தில் கோபம் கொதித்தது. மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக் கனல் வீசின.
மஞ்சத்தின் எதிரில் கிடந்த பலகையில் உட்கார்ந்துகொண்டு நந்தினியை உற்றுப் பார்த்துக் கொண்டு “ஹும் ஹ்ரீம் ஹ்ராம், பகவதி! சக்தி! சண்டிகேசுவரி!…” என்று சில மந்திரங்களைச் சொன்னான்.
“போதும்! நிறுத்து! தாதிப் பெண் வாசற்படியில் உட்கார்ந்தபடி தூங்கித் தொலைத்துவிட்டாள் போலிருக்கிறது! சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல்! அவர் கோட்டைக்குள் வந்து விட்டார்!” என்றாள் நந்தினி.
“அடி பாதகி!’ என்று ரவிதாஸன் கூறியது, நாகப் பாம்பு சீறுவது போலத் தொனித்தது.
“யாரைச் சொன்னாய்?” என்று நந்தினி சாந்தமாகவே கேட்டாள்.
“நன்றி கெட்ட நந்தினியைத் தான்! பழுவூர் இளைய ராணியைத்தான்! உன்னைத்தான்!” என்று ரவிதாஸன் தன் ஒரு கை விரலால் அவளைச் சுட்டிக் காட்டினான்.
நந்தினி மௌனமாயிருந்தாள்.
“பெண்ணே! நினைவில் வைத்திருக்க வேண்டிய சில சம்பவங்களை நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறது. அவற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்” என்றான் ரவிதாஸன்.
“பழைய கதை இப்போது எதற்கு” என்றாள் நந்தினி.
“இப்போது எதற்கு என்றா கேட்கிறாய்? சொல்கிறேன்; ஞாபகப்படுத்திவிட்டுப் பிற்பாடு சொல்கிறேன்” என்றான் ரவிதாஸன்.
அவனைத் தடுப்பதில் பயனில்லை யென்று கருதியவளைப் போல் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“ராணி! கேள்! மூன்று வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் நடுநிசியில் வைகை நதிக் கரையில் உள்ள மயானத்தில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சாஸ்திரப்படி புரோகிதர்களைக் கொண்டு அந்திமக் கிரியை ஒன்றும் அங்கு நடக்கவில்லை. காட்டில் காய்ந்து கிடந்த கட்டைகளையும் குச்சிகளையும் இலைச் சருகுகளையும் கொண்டு வந்து அச்சிதையை அடுக்கினார்கள். மரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஓர் உடலைக் கொண்டுவந்து அந்தச் சிதையில் இட்டார்கள். பிறகு தீ மூட்டினார்கள். காட்டுக் கட்டைகளில் தீ நன்றாகப் பிடித்துக் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது காட்டு நிழலிலிருந்து உன்னைச் சிலர் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். உன் காலையும் கையையும் கட்டிப் போட்டிருந்தது. உன் வாயில் துணி அடைத்திருந்தது. இன்று அழகாகப் பூ வைத்துக் கொண்டை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அந்தக் கூந்தல் விரிந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. உன்னை அம் மனிதர்கள் ஜுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த சிதையில் உயிரோடு போட்டுக் கொளுத்தி விட எண்ணியிருந்தார்கள். ‘இன்னும் கொஞ்சம் தீ நன்றாக எரியட்டும்!’ என்று அவர்களின் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித் தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக்கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடிந்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அதுவரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய். உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் ‘இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா!” என்றான். ‘பழைய கதையாகத்தான் இருக்கும்; தூக்கிச் சிதையில் போடு!” என்றான் இன்னொருவன். ‘இல்லையடா! தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம்! வாயிலிருந்து துணியை எடு!’ என்றான் மற்றொருவன். அவனே அவர்களுக்குத் தலைவன் ஆனபடியால் உன் வாயிலிருந்து துணியை எடுத்தார்கள். நீ அப்போது என்ன சொன்னாய் என்பது நினைவிருக்கிறதா, பெண்ணே!” என்று ரவிதாஸன் கேட்டுவிட்டு நிறுத்தினான்.
நந்தினி மறுமொழி சொல்லவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. நெஞ்சில் குடிகொண்டிருந்த அருவருப்பையும் பீதியையும் அதே சமயத்தில் பயங்கர சங்கல்பத்தின் உறுதியையும் அவள் முக மண்டலம் காட்டியது. அவளுடைய கரிய கண்களிலிருந்து இரு கண்ணீர் துளிகளும் ததும்பி நின்றன.
“பெண்ணே! பேசமாட்டேன் என்கிறாய்! வேண்டாம். அதையும் நானே சொல்லிவிடுகிறேன். அந்த மனிதர்களைப் போலவே நீயும் பழி வாங்கும் விரதம் பூணப் போவதாகச் சொன்னாய். பழி வாங்குவதற்கு அவர்களைக் காட்டிலும் உனக்கே அதிகக் காரணம் உண்டு என்று சத்தியம் செய்தாய். உன்னுடைய அழகையும் மதியையும் அதற்கே பயன்படுத்துவதாகக் கூறினாய். அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி புரிவதாகவும் சொன்னாய். சபதத்தை நிறைவேற்றியதும் நீயே உன் உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் ஆணையிட்டுச் சொன்னாய். உன்னை மற்றவர்கள் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். நம்பி, உன்னைத் தீயில் போட்டு விடாமல் தடுத்தேன். உன் உயிரைத் தப்புவித்தேன். இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று ரவிதாஸன் கூறி நிறுத்தினான்.
நந்தினி சற்றுத் திரும்பி அவனைப் பார்த்து, “ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறாயே? என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியது போல் எழுதி வைத்திருக்கிறதே?” என்றாள்.
“பின்னர் ஒரு நாள் நாம் எல்லோரும் அகண்ட காவேரிக் கரையோரமாகக் காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தோம். திடீரென்று பின்னால் குதிரை வீரர்கள் வரும் சத்தம் கேட்டது. அவர்கள் போகும் வரையில் நாம் ஒவ்வொருவரும் தனித் தனியாகக் காட்டில் ஒளிந்து கொள்ளத் தீர்மானித்தோம். ஆனால் நீ மட்டும் அத் தீர்மானத்தை மீறி வழியிலேயே நின்றாய். அந்த வீரர்கள் உன்னைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய தலைவனாகிய பழுவேட்டரையன் உன்னைக் கண்டு மயங்கி உன் மோக வலையில் விழுந்தான். அவனை நீ மணந்தாய். என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் நான் ஏமாந்துவிட்டதாக என்னை இடித்துக் கூறினார்கள். நான் உன்னை விடவில்லை. எப்படியோ ஒரு நாள் உன்னைத் தனியே பிடித்துக் கொண்டேன். துரோகியாகிய உன்னைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட எண்ணினேன். மறுபடியும் நீ உயிர்ப் பிச்சைக் கேட்டாய். நம்முடைய சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வந்திருப்பதாகக் கூறினாய். இந்த அரண்மனையில் இருந்தபடியே எங்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்வதாகச் சத்தியம் செய்தாய். இதெல்லாம் உண்மையா இல்லையா?” என்று கேட்டுவிட்டு நிறுத்தினான் ரவிதாஸன்.
“இதெல்லாம் உண்மைதான்; யார் இல்லை என்றார்கள்? எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய்? இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு!” என்றாள் நந்தினி.
“இல்லை, பெண்ணே! உனக்கு ஞாபகம் இல்லை. எல்லாவற்றையும் நீ மறந்துவிட்டாய்! பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்துவிட்டாய்! அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி; தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ! உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும்?”
“சீச்சீ! இந்த மஞ்சமும் மெத்தையும் ஆடை ஆபரணமும் யாருக்கு வேண்டும்? இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர் வாழ்கிறேன்? இல்லவே இல்லை!”
“அல்லது வழியில் போகிற வாலிபனுடைய சௌந்தரிய வதனத்தைக் கண்டு மயங்கிவிட்டாய் போலும்! புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழி வாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா!”
நந்தினி சிறிது துணுக்கம் அடைந்தாள். அதை உடனே சமாளித்துக்கொண்டு “பொய்! முழுப் பொய்!” என்றாள்.
“அது பொய்யானால், நான் இன்று வரப்போவதாக முன்னதாகச் சொல்லி அனுப்பியிருந்தும் வழக்கமான இடத்துக்கு உன் தாதிப் பெண்ணை ஏன் அனுப்பி வைக்கவில்லை?”
“அனுப்பி வைத்துத்தான் இருந்தேன். உனக்கு வைத்திருந்த ஏணியில் இன்னொருவன் ஏறி வந்துவிட்டான். அந்த மூடப்பெண் அவனை நீதான் என்று எண்ணி அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். அது என்னுடைய குற்றமா?”
“யாருடைய குற்றமாயிருந்தால் என்ன? இன்னும் ஒரு கணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது. அந்த வாலிபனைத் தேடி வந்த கோட்டைக் காவலர் என்னைப் பிடித்துக் கொள்ள இருந்தார்கள். இந்த அரண்மனைக்குப் பக்கத்துக் காட்டிலுள்ள குளத்தில் மூச்சுத் திணறும் வரையில் முழுகியிருந்து, அவர்கள் போன பிறகு தப்பித்து வந்தேன். சொட்டச் சொட்ட நனைந்து வந்தேன்…”
“உனக்கு அது வேண்டியதுதான். என்னைச் சந்தேகித்த பாவத்தை அந்த முழுக்கினால் கழுவிக் கொண்டாய்!”
“பெண்ணே! சத்தியமாகச் சொல்! அந்த வாலிபனுடைய அழகில் நீ மதிமயங்கி விடவில்லையா?”
“சீச்சீ! இது என்ன வார்த்தை! ஆண்பிள்ளைகளின் அழகைப் பற்றி யாராவது பேசுவார்களா? இந்த வெட்கங்கெட்ட சோழ நாட்டிலேதான் ‘அரசன் அழகன்’ என்று கொண்டாடுவார்கள். ஆண்பிள்ளைகளுக்கு அழகு உடம்பிலுள்ள போர்த் தழும்புகள் அல்லவா?”
“நன்றாகச் சொன்னாய். இதை நீ உண்மையாகச் சொல்லும் பட்சத்தில், அந்த வாலிப வழிப்போக்கன் இங்கு எதற்காக வந்தான்?”
“முன்னமே சொன்னேனே, நீதான் என்று எண்ணி வாசுகி அவனை அழைத்துக் கொண்டு வந்தாள் என்று.”
“என்னிடம்கூட நீ கொடுக்காத உன் முத்திரை மோதிரத்தை அவனிடம் ஏன் கொடுத்தாய்?”
“அவனை இவ்விடம் தருவித்துப் பேசுவதற்காகவே கொடுத்தேன். இப்போது அம் மோதிரத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டுவிடப் போகிறேன்…”
“எதற்காக அவனைத் தருவித்தாய்? அவனிடம், இவ்வளவு நேரம் என்ன சல்லாபம் செய்து கொண்டிருந்தாய்?”
“ஒரு முக்கியமான லாபத்தைக் கருதியே அவனுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவனால் பெரிய அனுகூலம் ஏற்படும்.”
“அடி பாதகி! கடைசியில் உன் பெண் புத்தியைக் காட்டி விட்டாயா? யாரோ முன்பின் தெரியாத வாலிபனிடம் நமது இரகசியத்தை…”
“வீணில் ஏன் பதறுகிறாய்? நான் ஒன்றும் அவனிடம் சொல்லிவிடவில்லை. அவனிடமிருந்துதான் இரகசியத்தைக் கிரஹித்டுக் கொண்டேன்.”
“என்ன கிரஹித்துக் கொண்டாய்?”
“இவன் காஞ்சியிலிருந்து பழையாறைக்கு ஓலை கொண்டு போகிறான். பழையாறையிலுள்ள பெண் புலிக்குக் கொண்டு போகிறான். அதை என்னிடம் காட்டினான். அவள் கொடுக்கும் மறு ஓலையை என்னிடம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீ வந்துவிட்டாய்.”
“ஓலையுமாயிற்று; எழுத்தாணியும் ஆயிற்று. இதனாலெல்லாம் நமக்கு என்ன உபயோகம்?”
“உன்னுடைய அறிவின் ஓட்டம் அவ்வளவுதான்! புலிக்குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஆண் புலிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் புலியினாலும் குலம் வளரும் என்பதை மறந்துவிட்டீர்கள். அது மட்டுமல்ல; தற்போது இந்தச் சோழ ராஜ்யத்தை ஆளுவது யார் என்று எண்ணியிருக்கிறாய்? பலமிழந்து செயலிழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் கிழவனா? காஞ்சியிலும் இலங்கையிலும் உள்ள இளவரசர்களா?…”
“இல்லை? உன்னை ராணியாகப் பெறும் பாக்கியம் பெற்ற தனாதிகாரி பழுவேட்டரையர்தான். இது உலகம் அறிந்ததாயிற்றே!”
“அதுவும் தவறு! உலகம் அப்படி எண்ணுகிறது; இந்தக் கிழவரும் அப்படி எண்ணியே ஏமாந்து போகிறார். நீயும் அந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறாய். உண்மையில் பழையாறையில் உள்ள பெண் புலிக்குட்டிதான் இந்த ராஜ்யத்தை ஆளுகிறது. அரண்மனைக்குள் இருந்தபடி அந்த கர்வக்காரி சூத்திரக் கயிற்றை இழுத்து எல்லாரையும் ஆட்டி வைக்கப் பார்க்கிறாள்! அவளுடைய கொட்டத்தை நான் அடக்குவேன். அதற்காகவே இந்த வாலிபனை உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறேன்.
ரவிதாஸனுடைய முகத்தில் வியப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிகுறிகள் தென்பட்டன.
“நீ பெரிய கைகாரிதான்; சந்தேகம் இல்லை! ஆனால் இதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம்? உன்னை எப்படி நம்புவது” என்றான்.
“அந்த வாலிபனை உன்னிடமே ஒப்புவிக்கிறேன். நீயே அவனைச் சுரங்க வழியில் கோட்டைக்கு வெளியே அழைத்துக் கொண்டு போ! கண்ணைக் கட்டி அழைத்துக் கொண்டு போ! பழையாறைக்கு அருகில் சென்று காத்திரு! குந்தவை கொடுக்கும் மறு ஓலையுடன் இங்கே அவனை மீண்டும் அழைத்துக் கொண்டு வா! அவன் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் உன்னை ஏமாற்றப் பார்த்தாலும் உடனே கொன்றுவிடு” என்றாள் நந்தினி.
“வேண்டாம்! வேண்டாம்! நீயும் அவனும் எப்படியாவது போங்கள்! அவனைச் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் கோட்டைக்குள் இப்போது தேடுகிறார்கள்; வெளியிலும் சீக்கிரத்தில் தேடப் போகிறார்கள். அவனோடு சேர்ந்து போனால் எனக்கும் ஆபத்து வரும். நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லு!”
“வந்த காரியம் என்னவென்று நீ இன்னமும் தெரிவிக்கவில்லையே…”
“காஞ்சிக்கும் இலங்கைக்கும் ஆட்கள் போக ஏற்பாடாகிவிட்டது. இலங்கைக்கு போகிறவர்கள் பாடு ரொம்பவும் கஷ்டம். அங்கே வெகு சாமார்த்தியமாக நடந்து கொள்ளவேண்டும்…”
“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இன்னும் பொன் வேண்டுமா? உங்களுடைய பொன்னாசைக்கு எல்லையே கிடையாதா?”
“பொன் எங்களுடைய சொந்த உபயோகத்துக்கு அல்ல; எடுத்த காரியத்தை முடிப்பதற்காகத்தான். பின் எதற்காக உன்னை இங்கு விட்டு வைத்திருக்கிறோம்? இலங்கைக்குப் போகிறவர்களுக்குச் சோழ நாட்டுப் பொன் நாணயத்தினால் பயன் இல்லை; இலங்கைப் பொன் இருந்தால் நல்லது…”
“இதை சொல்வதற்கு ஏன் இத்தனை நேரம்? நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்” என்று நந்தினி கூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். “இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக்கொண்டு போ! அவர் வரும் நேரமாகிவிட்டது!” என்றாள்.
ரவிதாஸன் பையை வாங்கிக் கொண்டு புறப்பட்ட போது, “கொஞ்சம் பொறு! அந்த வாலிபனைக் கோட்டைக்கு வெளியிலாவது கொண்டுபோய் விட்டுவிடு! அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும்! சுரங்க வழியை அவனுக்குக் காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை!” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று, இருண்ட மாளிகைப் பக்கம் பார்த்தாள்.
அங்கே ஒன்றும் தெரியவில்லை. விரல்களினால் சமிக்ஞை செய்தாள், இலேசாகக் கையைத் தட்டினாள்; ஒன்றிலும் பலன் இல்லை.
அவளும் ரவிதாஸனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். அந்தப் பிரம்மாண்டமான இருள் மாளிகையில் அங்கிருந்து பிரவேசிக்கும் வாசலை நெருங்கினார்கள்.
ஆனால் வந்தியத்தேவனைக் காணவில்லை! சுற்றும் முற்றும் நாலாபுறத்திலும் அவனைக் காணவில்லை.
37. சிம்மங்கள் மோதின!
பழுவூர்ச் சகோதரர்கள் மீது தஞ்சைபுரிவாசிகள் தனிப்பட்ட அபிமானம் வைத்திருந்தார்கள். அந்தப் பழைய நகருக்குப் புதிய பெருமையும் செல்வாக்கும் அளித்தவர்கள் பழுவேட்டரையர்கள் அல்லவா?
யானை, குதிரை, ஒட்டகைகளுடன் பவனி என்றால், எந்த நாளிலும் ஜனங்களுக்கு வேடிக்கை பார்ப்பதில் குதூகலந்தான். அதிலும் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் தஞ்சையைவிட்டு வெளியே போனாலும் சரி, வெளியே போயிருந்து கோட்டைக்குள் பிரவேசித்தாலும் சரி, வீதியின் இரு புறங்களிலும் ஜனங்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்ப்பார்கள்; ஜயகோஷம் செய்வார்கள்; வாழ்த்துக் கூறுவார்கள்; பூமாரியும், பொரி மழையும் பொழிவார்கள்.
சாதாரணமாகப் பெரிய சகோதரர் வெளியில் போய்விட்டு வந்தால் இளையவர் கோட்டை வாசலில் வந்து நின்று வரவேற்று அழைத்துச் செல்வார்.
அண்ணனும் தம்பியும் ஒருவரையொருவர் கண்டதும் தழுவிக் கொள்ளும் காட்சி நீலகிரியும் பொதிகை மலையும் ஆலிங்கனம் செய்து கொள்வது போலிருக்கும்.
இருவரும் இரண்டு யானைகள் மீதோ அல்லது குதிரைகளின் மீதோ ஏறிக்கொண்டு அருகருகே சென்றார்களானால், அந்தக் காட்சியைப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்.
பழுவூர்ச் சகோதரர்களைச் சிலர் இரணியனுக்கும் இரண்யாட்சனுக்கும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இன்னும் சிலர் ‘சுந்தோப சுந்தர்கள்’ என்பார்கள். இராமரையும் பரதரையும் ஒத்த அருமைச் சகோதரர்கள் என்றும், வீமனையும் அருச்சுனையும் ஒத்த வீரச் சகோதரர்கள் என்றும் கூறுவோரும் உண்டு.
ஆனால் இன்றைக்குப் பெரிய பழுவேட்டரையர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்தபோது அவருடன் வந்த பரிவாரங்கள் வழக்கமான முழக்கங்களைச் செய்தபோதிலும் வீதிகளில் குதூகல ஆரவாரம் இல்லை. ஜனக் கூட்டமும் அதிகமில்லை. சின்னப் பழுவேட்டரையர் கோட்டை வாசலுக்கு அண்ணனை வரவேற்பதற்காக வந்து காத்திருக்கவும் இல்லை.
ஆனால் தனாதிகாரி இதைப் பொருட்படுத்தாமல் நேரே தம்பியின் மாளிகையை நோக்கிச் சென்றார். ஏதோ ஒரு முக்கியமான காரியத்தில் இளையவன் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். ஒரு வேளை சக்கரவர்த்தியின் உடல்நிலை ரொம்பக் கேவலமாகி விட்டதோ, அல்லது…அல்லது, ‘பெரிய காரியம்’ தான் நடந்து விட்டதோ என்ற ஐயம் உண்டாயிற்று. ஆகையால், வழக்கத்தை விடத் துரிதமாகவே அவருடைய பரிவார ஊர்வலம் சென்று கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரின் மாளிகையை அடைந்தது.
மாளிகை வாசலுக்குத் தமையனை வரவேற்க வந்த தளபதியின் முகத்தில் பரபரப்பும் கவலையும் காணப்பட்டன. தமையனுக்கு வணக்கம் செலுத்திப் பிறகு மார்புறத் தழுவிக் கொண்டார். இருவரும் மாளிகைக்குள் சென்றார்கள். நேரே அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள்.
இருவரும் தனிப்பட்டதும், “தம்பி! காலாந்தகா! என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்? ஏதாவது விசேஷம் உண்டா? சக்கரவர்த்தி சுகமா?” என்று தமையனார் கேட்டார்.
சின்னப் பழுவேட்டரையராகிய காலாந்தக கண்டர், “சக்கரவர்த்தி எப்போதும்போல் இருக்கிறார். அவரது சுகத்தில் அபிவிருத்தியும் இல்லை; சீர்கேடும் இல்லை!” என்றார்.
“பின் ஏன் வாட்டம் அடைந்திருக்கிறது உன் முகம்? ஏன் கோட்டை வாசலுக்கு வரவில்லை? ஊரும் ஒரு மாதிரி சலசலப்புக் குறைந்திருக்கிறதே!” என்று பெரியவர் கேட்டார்.
“அண்ணா! ஒரு சிறு சம்பவம் நடந்திருக்கிறது. பிரமாதம் ஒன்றும் இல்லை. அதைப் பற்றிப் பிற்பாடு சொல்கிறேன். தாங்கள் போன காரியங்களெல்லாம் எப்படி?” என்று காலாந்தக கண்டர் கேட்டார்.
“நான் சென்றிருந்த காரியம் பூரண வெற்றிதான். அழைத்திருந்தவர்கள் அவ்வளவு பேரும் கடம்பூருக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் ஒருமுகமாக உன் மருமகன் மதுராந்தகனே அடுத்த பட்டத்துக்கு உரியவன் என்று ஒப்புக் கொண்டார்கள். ஜயகோஷத்துடன் ஆமோதித்தார்கள். நியாயத்துக்குக் கட்டுப்படவில்லையென்றால் கத்தி எடுத்துப் போர் செய்து உரிமையை நிலைநாட்டவும் அவ்வளவு பேரும் சித்தமாயிருக்கிறார்கள். கொல்லி மழவனும், வணங்காமுடி முனையரையனும் கூட ஒப்புக் கொண்டார்கள் என்றால் நம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்குத் தடை என்ன? சம்புவரையர் தம் கோட்டை, கொத்தளம், படை, செல்வம் எல்லாவற்றையும் ஈடுபடுத்தச் சித்தமாயிருக்கிறார். அவருடைய மகன் கந்தன்மாறன் மிகத் தீவிரமாயிருக்கிறான். நடு நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் பற்றிக் கவலையேயில்லை. சோழ தேசந்தான் எப்போதும் நம் கையில் இருக்கிறது. வேறு என்ன யோசனை? திருக்கோவலூர் மலையமான், பல்லவன் பார்த்திபேந்திரன், கொடும்பாளூர் வேளாண் இந்த மூன்று பேருந்தான் ஒரு வேளை எதிர்க்கக்கூடும். அவர்களில் கொடும்பாளூரான் இங்கில்லை; இலங்கையில் இருக்கிறான். மற்ற இருவராலும் என்ன புரட்டிவிட முடியும்? கூடிய சீக்கிரத்தில் சக்கரவர்த்தியிடம் சொல்லி உடனே முடிவு செய்துவிட வேண்டியதுதான்!” என்றார் பெரிய பழுவேட்டரையர்.
“தலைவர்களைப் பற்றித் தாங்கள் சொல்வதெல்லாம் சரி; ஜனங்கள்? ஜனங்கள் ஆட்சேபித்தால்?” என்று கேட்டார் காலாந்தகக் கண்டர்.
“ஆகா! ஜனங்களை யார் கேட்கப் போகிறார்கள்? ஜனங்களைக் கேட்டுக் கொண்டா இராஜ்ய காரியங்கள் நடக்கின்றன? ஜனங்கள் ஆட்சேபிக்கத் துணிந்தால், மறுபடியும் அவர்கள் இம்மாதிரி காரியங்களில் பிரவேசிக்காதபடி செய்துவிட வேண்டும். அப்படி ஒன்று நேரும் என நான் நினைக்கவில்லை. சக்கரவர்த்தியின் விருப்பம் என்றால் பேசாமல் அடங்கி விடுவார்கள். மேலும், அருள்மொழிவர்மன் நல்லவேளையாக இலங்கையில் இருக்கிறான். அவன் இருந்தாலும் ஒருவேளை ஜனங்கள் தங்கள் குருட்டு அபிமானத்தைக் காட்ட முயல்வார்கள். ஆதித்த கரிகாலன்மீது ஜனங்கள் அவ்வளவு பிரேமை கொண்டிருக்கவில்லை. மதுராந்தகன் மீது அவர்களுடைய அபிமானத்தைத் திருப்புவது சுலபம். ‘சிவபக்தன்’, ‘உத்தம குணம் படைத்தவன்’ என்று ஏற்கனவே பெயர் வாங்கியிருக்கிறான். சுந்தர சோழரின் புதல்வர்கள் இருவரைக் காட்டிலும் உன் மருமகனுடைய முகத்தில் களை அதிகம் என்பதுதான் உனக்குத் தெரியுமே? ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று கருதும் முட்டாள் ஜனங்கள் ‘மதுராந்தக சக்கரவர்த்தி வாழ்க’ என்று கோஷிக்காவிட்டால்தான் ஆச்சரியமாயிருக்கும். எப்படியிருந்தாலும் நான் ஒருவன் இருக்கும்போது உனக்கு என்ன கவலை….?”
“ஆனால் வேளக்காரப் படை இருக்கிறதே! அவர்களை எப்படிச் சமாளிப்பது?”
“வேளக்காரப் படையார் சுந்தர சோழருக்குத்தான் உயிர் பலி விரதம் எடுத்தவர்களே தவிர, அவருடைய பிள்ளைகளுக்கு அல்லவே? அப்படி அவர்கள் குறுக்கிட்டாலும் உன்னுடைய கோட்டைக் காவல் படை எங்கே போயிற்று? ஒரு நாழிகைப் பொழுதில் அவ்வளவு பேரையும் பிடித்துப் பாதாளச் சிறையில் தள்ள வேண்டியதுதானே?”
“அண்ணா! முக்கியமான எதிர்ப்பு பழையாறையிலிருந்து தான் வரும். அந்தக் கிழவியும் குமரியும் சேர்ந்து என்ன சூழ்ச்சி செய்வார்களோ, தெரியாது. அதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்…”
“தம்பி! காலாந்தகா! போயும் போயும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கா என்னைப் பயப்படச் சொல்கிறாய்? அவர்களுடைய தந்திர மந்திரங்களுக்கெல்லாம் மாற்று என்னிடம் இருக்கிறது. கவலைப்படாதே!”
“இரண்டு பிள்ளைகளையும் தஞ்சைக்கு வரும்படி அழைப்பு அனுப்பவேண்டும் என்று சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்…”
“ஆதித்த கரிகாலன் வரமாட்டான். ஒருவேளை அருள்மொழி தந்தை கட்டளைப்படி புறப்பட்டு வருவான். வந்தால், அவனைத் தடுக்க வேண்டியது தான்! மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிச் சிம்மாசனத்தில் சகல அதிகாரங்களுடன் ஏற்றிய பிறகுதான் அவர்கள் இருவரும் வந்தால் வரலாம். அதற்கு முன் வரக் கூடாது. இதை என்னிடம் விட்டுவிடு! மற்றபடி நீ என்னவோ சிறிய விசேஷம் இங்கே நடந்ததாகச் சொன்னாயே, அது என்ன?”
“காஞ்சியிலிருந்து வாலிபன் ஒருவன் வந்தான். சக்கரவர்த்திக்கு ஒரு ஓலையும் குந்தவைக்கு ஒரு ஓலையும் கொண்டு வந்தான்…”
“அவனை என்ன செய்தாய்? ஓலைகளைப் பிடுங்கிக் கொண்டு அவனைச் சிறைப்படுத்தியிருக்கிறாய் அல்லவா?”
“இல்லை, அண்ணா! கடம்பூரில் தங்களைப் பார்த்ததாகவும், சக்கரவர்த்தியிடம் நேரில் கொடுக்கச் சொன்னதாகவும் கூறினான். அது உண்மையா?”
“ஆகா! வெறும் பொய்! கடம்பூரில் அழையாத வாலிபன் ஒருவன் – கந்தன்மாறனின் சிநேகிதன் என்று சொல்லிக்கொண்டு வந்திருந்தான். ஆனால் ஓலை கொண்டு வந்திருப்பதாக என்னிடம் சொல்லவே இல்லையே! அவன் முகத்தைப் பார்த்ததுமே சந்தேகித்தேன். அவனிடம் நீ ஏமாந்து போய்விட்டாயா, என்ன?”
“ஆம், அண்ணா! ஏமாந்துதான் போய்விட்டேன். தங்கள் பெயரைச் சொன்னதால் ஏமாந்தேன்!”
“அட மூடா! ஏமாந்து என்ன செய்தாய்? ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட்டாயா? அதைப் பார்க்கக்கூட இல்லையா?”
“பார்த்தேன். அதில் ஒன்றுமில்லை. காஞ்சி பொன் மாளிகைக்கு வரும்படி எழுதியிருந்தது. ஓலையைக் கொடுத்துவிட்டு அந்த வாலிபன் ஏதோ, ‘அபாயம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தான்…”
“பிறகாவது, சந்தேகித்துச் சிறைப்படுத்தவில்லையா?”
“சந்தேகித்தேன்; ஆனால் சிறைப்படுத்தவில்லை!”
“பின்னே, என்ன செய்தாய்?”
“ஊர் பார்க்கவேண்டும் என்றான். பார்த்துவிட்டு வரட்டும் என்று இரண்டு ஆளையும் பின்னோடு அனுப்பினேன். அவர்களை ஏமாற்றி விட்டு மறைந்துவிட்டான். அவனைத் தேடுவதற்குத்தான் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் கோட்டை வாசலுக்குக்கூட வரவில்லை; நகர மக்களுக்கும் எச்சரிக்கை செய்திருக்கிறேன்…”
“அட சீ! நீயும் ஒரு மனிதனா? மீசை முளைக்காத ஒரு சிறு பிள்ளையிடமா ஏமாந்து போனாய்? உனக்குக் காலாந்தக கண்டன் என்று பெயர் வைத்தேனே, என் முட்டாள்தனத்தை நொந்து கொள்ளவேண்டும். உன்னைக் கோட்டைத் தளபதியாக்கினேனே? எனக்கு இது வேண்டியதுதான்? என் பெயரைச் சொல்லி ஒரு தறுதலைப் பயல் உன்னை ஏமாற்றிவிட்டான் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாயில்லையா?”
“வெறுமனே உங்கள் பெயரைச் சொன்னதோடு இல்லை. உங்கள் முத்திரை மோதிரத்தையும் காட்டினான். அதை அவனுக்கு நீங்கள் கொடுத்தீர்களா?”
“இல்லவே இல்லை! அப்படியெல்லாம் ஏமாந்துவிட நான் உன்னைப் போல் ஏமாளியா?”
“அவனிடம் முத்திரை மோதிரம் இருந்தது உண்மை. என்னிடம் காட்டினான். கோட்டை வாசல் காவலர்களிடமும் காட்டிவிட்டுத்தான் உள்ளே புகுந்தான். நீங்கள் கொடுத்திராவிட்டால், இன்னம் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் அதை அவன் பெற்றிருக்கமுடியும்.”
“யாரைச் சொல்கிறாய்?”
“தங்களால் ஊகிக்க முடியவில்லையா? இளையராணியைத் தான் சொல்கிறேன்…”
“சீச்சீ! ஜாக்கிரதை! நாக்கை அறுத்துவிடுவேன்!”
“நாக்கை அறுத்தாலும் அறுங்கள்; தலையைக் கொய்தாலும் கொய்யுங்கள். வெகு நாளாய்ச் சொல்ல விரும்பியதை இப்போது சொல்லிவிடுகிறேன். விஷ நாகத்தை அழகாயிருக்கிறது என்று எண்ணி வீட்டில் வைத்து வளர்க்கிறீர்கள். அது ஒரு நாள் கடிக்கத்தான் போகிறது. நம் எல்லாரையும் நாசம் செய்யப் போகிறது! வேண்டாம்! அவளைத் துரத்திவிட்டு மறு காரியம் பாருங்கள்!”
“காலாந்தக கண்டா! வெகு நாளாக உனக்குச் சொல்ல எண்ணியிருந்த ஒரு விஷயத்தை நானும் உனக்கு இன்று சொல்லுகிறேன். வேறு எந்தக் காரியத்தைப் பற்றி வேண்டுமானாலும் உன் அபிப்பிராயத்தை நீ தாராளமாய்ச் சொல்லாம். என் காரியம் பிடிக்காவிட்டால் தைரியமாகக் கண்டித்துப் பேசலாம். ஆனால் நான் கைப்பிடித்து மணந்து கொண்டவளைப் பற்றிக் குறைவாக இனி எப்போதேனும் ஒரு வார்த்தை சொன்னாலும் சரி; உன்னை வளர்த்த அதே கையினால் உன்னைக் கொன்றுவிடுவேன். உனக்குக் கத்தி பிடிக்கச் சொல்லிக் கொடுத்த நான், உன் கத்தியைப் பிடுங்கியே உன்னை வெட்டிக் கொல்லுவேன்! ஜாக்கிரதை!”
அந்த இரு சகோதரர்களும் அப்போது போட்டுக் கொண்ட ஆத்திரச் சொற்போர் சிங்கமும் சிங்கமும் மோதிப் பயங்கரமான சண்டை பிடிப்பது போலவே இருந்தது. அவர்களுடைய குரலும் சிம்ம கர்ஜனையைப் போலவே முழங்கிற்று. அவர்கள் பேசியது அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்தில்தான் என்றாலும், வெளியில் காத்திருந்தவர்களுக்கெல்லாம் அவர்களுடைய குரல், விவரம் இன்னதென்று தெரியாமல் இடி முழக்கம் போல் கேட்டது. அனைவரும் ‘என்ன விபரீதமோ’ என்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
38. நந்தினியின் ஊடல்
பெரிய பழுவேட்டரையர் கடைசியாகத் தமது மாளிகைக்குத் திரும்பிய போது நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது. வீதிப் புழுதியை வாரி அடித்துக் கொண்டு சுழன்று சுழன்று அடித்த மேலக் காற்றைக் காட்டிலும் அவருடைய உள்ளத்தில் அடித்த புயல் அதிகப் புழுதியைக் கிளப்பியது. அருமைச் சகோதரனை அவ்வளவு தூரம் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது பற்றிச் சிறிது பச்சாதாபப் பட்டார். அவர்மீது தம்பி வைத்திருந்த அபிமானத்துக்கு அளவேயில்லை. அந்த அபிமானத்தின் காரணமாகத்தான் ஏதோ சொல்லிவிட்டான். இருந்தாலும் சந்தேகக்காரன். எதற்காக அநாவசியமாய் நந்தினியைப் பற்றிக் குறைகூற வேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான் போலும். தான் செய்த தவறுக்குப் பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது சாதாரண மக்களின் இயற்கை. ஆனால் இவன் எதற்காக அந்த இழிவான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்? கைவசம் சிக்கியிருந்த அந்த மோசக்காரத் திருட்டு வாலிபனை விட்டுவிட்டு, அதற்காக ஒரு பெண்ணின் பேரில், அதுவும் மதனியின் பேரில் குற்றம் சொல்வது இவனுடைய வீரத்துக்கும் ஆண்மைக்கும் அழகாகுமா? போனால் போகட்டும்! அதற்காகத்தான் அவன் வருந்தி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு விட்டானே? மேலும் அதைப்பற்றி நாம் எதற்காக நினைக்க வேண்டும்?
இருந்தாலும், அவன் கூறியதில் அணுவளவேனும் உண்மை இருக்கக் கூடுமோ? ஒருவேளை இந்த முதிய பிராயத்தில் நமக்குப் பெண் பித்துதான் பிடித்திருக்குமோ? எங்கேயோ காட்டிலிருந்து பிடித்து வந்த ஒரு பெண்ணுக்காக, கூடப் பிறந்த சகோதரனை, நூறு போர்க்களங்களில், நமக்குப் பக்கபலமாயிருந்து போரிட்டவனை, பலமுறை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நமக்கு வந்த அபாயத்தைத் தடுத்துக் காத்தவனையல்லவா கடிந்து கொள்ள வேண்டியிருந்தது? அப்படி என்ன அவள் உயர்த்தி? அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது. அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் சில சமயம் சந்தேகத்துக்கு இடமாகத் தான் இருக்கின்றன. சீச்சீ! தம்பியின் வார்த்தை நம் உள்ளத்திலும் இத்தகைய குழப்பத்தை உண்டாக்கிவிட்டதே! என்ன அநியாயம்? அவள் எப்படி நம்மிடம் உயிக்குயிரான அன்பு வைத்திருக்கிறாள்? எவ்வளவு மட்டு மரியாதையுடன் நடந்து கொள்ளுகிறாள்? நம்முடைய காரியங்களில் எல்லாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறாள்? சில சமயம் நமக்கு யோசனைகள் கூடச் சொல்லி உதவுகிறாளே? இந்த அறுபது வயதுக்கு மேலான கிழவனைத் துணிந்து மணந்து கொண்டாளே, அதைப் பார்க்க வேண்டாமா? தேவலோக மாதரும் பார்த்துப் பொறாமைப்படும்படியான அந்தச் சுந்தரிக்குச் சுயம்வரம் வைத்தால், சொர்க்கத்திலிருந்து தேவேந்திரன் கூட ஓடி வருவானே? இந்த உலகத்து மணிமுடி வேந்தர் யார்தான் அவளை மணந்துகொள்ள ஆசைப்பட மாட்டார்கள்? ஆ! இந்தச் சுந்தர சோழன் கண்ணில் அவள் அகப்பட்டிருந்தால் போதுமே? அப்படிப் பட்டவளைப்பற்றி எந்த விதத்திலும் ஐயப்படுவது எவ்வளவு மடமை? இளம் பெண்ணை மணந்து கொண்ட கிழவர்கள், இல்லாத சந்தேகங்கள் எல்லாம் கொண்டு தம் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உலக வாழ்க்கையில் அத்தகைய உதாரணங்களைப் பார்த்துமிருக்கிறோம். அம்மாதிரி ஊரார் சிரிப்பதற்கு நம்மை நாமே இடமாக்கிக் கொள்வதா?
இருந்த போதிலும் சிற்சில விவரங்களை அவளுடைய வாய்ப் பொறுப்பில் கேட்டறிந்து கொள்வதும் அவசியந்தான். அடிக்கடி முத்திரை மோதிரம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொள்கிறாளே, எதற்காக? அடிக்கடி தன்னந்தனியாக லதா மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறாளே, அது எதற்கு? யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோமே, அவளே ஒப்புக்கொண்டாளே, அது எதற்காக? மந்திரவாதியிடம் இவள் என்னத்தைக் கேட்டறியப் போகிறாள்? மந்திரம் போட்டு இவள் யாரை வசப்படுத்த வேண்டும். இதெல்லாம் இருக்க, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற நிலையில் என்னை எத்தனை காலம் வைத்திருக்கப் போகிறாள்? ஏதோ விரதம், நோன்பு என்று சொல்லுகிறாளே தவிர, என்ன விரதம், என்ன நோன்பு என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை! கதைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள் தட்டிக் கழிக்கக் கையாளும் முறையைப் போலத்தானே இருக்கிறது? அதற்கு இனிமேல் இடம் கொடுக்கக் கூடாது! இன்றிரவு அதைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசித் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்!
பழுவேட்டரையர் அவருடைய மாளிகை வாசலுக்கு வந்த போது அரண்மனைப் பெண்டிரும் ஊழியர்களும் தாதியர்களும் காத்திருந்து வரவேற்றார்கள். ஆனால் அவருடைய கண்கள் சுற்றிச் சுழன்று பார்த்தும் அவர் பார்க்க விரும்பிய இளையராணியை மட்டும் காணவில்லை. விசாரித்ததில், இன்னும் லதா மண்டபத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது. அவர் மனத்தில், “நள்ளிரவு ஆன பிறகும் அங்கு இவளுக்கு என்ன வேலை!” என்ற கேள்வியுடன் தம்மை அலட்சியம் செய்கிறாளோ என்ற ஐயமும் கோபமும் எழுந்தன. சிறிது ஆத்திரத்துடனே கொடி மண்டபத்தை நோக்கிச் சென்றார்.
இவர் கொடி மண்டப வாசலை அடைந்த போது நந்தினியும் அவளுடைய தோழியும் எதிரே வருவதைக் கண்டார். அப்படி வந்தவள் இவரைக் கண்டதும் நின்று, அவரைப் பார்க்காமல், தோட்டத்தில் குடிகொண்டிருந்த இருளை நோக்கத் தொடங்கினாள். தாதிப் பெண் சற்று அப்பாலேயே நின்றுவிட்டாள்.
பழுவேட்டரையர் நந்தினியின் அருகில் வந்த பின்னரும் அவள் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. நந்தினியைக் கடிந்து கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு வந்ததற்கு மாறாக அவளுடைய கோபத்தை இவர் தணிக்க முயல வேண்டியதாயிற்று!
“நந்தினி! என் கண்மணி! என்ன கோபம்? ஏன் பாராமுகம்?” என்று கேட்டுக்கொண்டு தம் இரும்பையொத்த கையை அவளுடைய தோளின்மீது மிருதுவாக வைத்தார்.
நந்தினியோ மலரினும் மிருதுவான தன் கர மலரினால் அவருடைய வஜ்ராயுதத்தையொத்த கையை ஒரு தள்ளுத் தள்ளினாள். அம்மம்மா! மென்மைக்கும் மிருதுத் தன்மைக்கும் இத்தனை பலமும் உண்டா?
“என் உயிரே! உன் பட்டுக் கையினால் தொட்டு என்னைத் தள்ளினாயே, அதுவே என் பாக்கியம்! திரிகோண மலையிலிருந்து விந்திய மலை வரையில் உள்ள வீராதிவீரர் யாரும் செய்ய முடியாத செயலை நீ செய்தாய்! அது என் அதிர்ஷ்டம்! என்றாலும், எதற்குக் கோபம் என்று சொல்ல வேண்டாமா? உன் தேன் மதுரக் குரலைக் கேட்க என் காது தாபம் அடைந்து தவிக்கின்றதே?” என்று கெஞ்சினார் ஆயிரம் போர்க்களங்களில் வெற்றிக் கண்ட அந்த மகாவீரர்.
“தாங்கள் என்னைப் பிரிந்து போய் எத்தனை நாள் ஆயிற்று? முழுமையாக நாலு நாள் ஆகவில்லையா?” என்று சொன்ன நந்தினியின் குரலில் விம்மல் தொனித்தது. அது எத்தனையோ வாள்களையும் வேல்களையும் தாங்கி நின்றும் தளராத பழுவேட்டரையரின் நெஞ்சத்தை அனலில் இட்ட மெழுகைப் போல் உருக்கிவிட்டது.
“இதற்காகத்தானா இவ்வளவு கோபம்? நாலு நாள் பிரிவை உன்னால் சகிக்க முடியவில்லையா? போர்க்களத்துக்குப் போக நேர்ந்தால் என்ன செய்வாய்? மாதக் கணக்காகப் பிரிந்திருக்க நேரிடுமே?” என்றார்.
“தாங்கள் போர்க்களத்துக்குப் போனால் மாதக்கணக்கில் தங்களை நான் பிரிந்திருப்பேன் என்றா எண்ணினீர்கள்? அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தங்களுடைய நிழலைப் போல் தொடர்ந்து நானும் போர்க்களத்துக்கு வருவேன்…”
“அழகாயிருக்கிறது! உன்னைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போனால் நான் யுத்தம் பண்ணினாற் போலத்தான்! கண்மணி! இந்த மார்பும் தோள்களும் எத்தனையோ கூரிய அம்புகளையும் வேல் முனைகளையும் தாங்கியதுண்டு. அவ்வாறு ஏற்பட்ட காயங்கள் அறுபத்து நான்கு என்று உலகோர் என்னைப் புகழ்வதுமுண்டு. ஆனால் உன்னுடைய மிருதுவான மலர் மேனியில் ஒரு சிறு முள் தைத்து விட்டால், என்னுடைய நெஞ்சு பிளந்து போய்விடும். எத்தனையோ வாள்களும் வேல்களும் என்னைத் தாக்கிச் சாதிக்க முடியாத காரியத்தை உன் காலில் தைக்கும் சிறிய முள் சாதித்து விடும். உன்னை எப்படி யுத்த களத்துக்கு அழைத்துப் போவேன்? நீ இத்தனை நேரம் கருங்கல் தரையில் நின்றுகொண்டிருப்பதே எனக்கு வேதனையாயிருக்கிறது. இப்படி வா; வந்து உன் மலர்ப் படுக்கையில் வீற்றிரு! உன் திருமுகத்தைப் பார்க்கிறேன். நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே! உன்னைக் காணாத ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாயிருந்தது. இப்போதாவது என் தாபம் தீர, உன் பொன் முகத்தைப் பார்க்கிறேன்!” என்று கூறி, நந்தினியின் கரத்தைப் பற்றி அழைத்துக்கொண்டு போய் மஞ்சத்தில் உட்கார வைத்தார்.
நந்தினி தன் கண்களை துடைத்துக் கொண்டு பழுவேட்டரையரை நிமிர்ந்து பார்த்தாள். தங்க விளக்கின் பொன்னொளியில் அவளுடைய முகத்தில் மலர்ந்த முத்து முறுவலைப் பார்த்தார் தனாதிகாரி. ‘ஆகா! இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே? மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம்! ஆனால் இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை!’ – இவ்விதம் எண்ணினார் அந்த வீராதி வீரர்.
அவளைக் கேள்வி கேட்பது, கடிந்து கொள்வது என்கிற உத்தேசம் போயே போய்விட்டது! நந்தினி காலால் இட்ட பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கும் வந்து விட்டார்! எந்தவித அடிமைத்தனமும் பொல்லாததுதான்! ஆனால் பெண்ணடிமைத்தனத்தைப் போல் ஒருவனை மதி இழக்கச் செய்வது வேறொன்றுமில்லை!
“நாலு நாள் வெளியூரில் இருந்து விட்டுத்தான் வந்தீர்களே, திரும்பி வந்தவுடன் நேரே ஏன் இங்கு வரவில்லை? என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார்!” என்று கேட்டாள் நந்தினி. கேட்டுவிட்டுக் கள்ளக் கோபத்துடன் அவரைக் கடைக் கண்ணால் பார்த்தாள்.
“அப்படியில்லை, என் கண்மணி! வில்லிலிருந்து புறப்பட்ட பாணத்தைப் போல் உன்னிடம் வருவதற்குத்தான் என் மனம் ஆசைப்பட்டது. ஆனால் அந்த அசட்டுப் பிள்ளை – மதுராந்தகன் – சுரங்க வழியின் மூலமாகப் பத்திரமாகத் திரும்பி வந்து சேர்கிறானா என்று தெரிந்து கொள்வதற்காகவே தம்பியின் வீட்டில் தாமதிக்க வேண்டியதாயிற்று…”
“ஐயா! தாங்கள் எடுத்த காரியங்களிலெல்லாம் எனக்குச் சிரத்தை உண்டு. தங்கள் முயற்சி அனைத்தும் வெற்றிபெற வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் நான் ஏற வேண்டிய மூடு பல்லக்கில் ஓர் ஆண்பிள்ளையைத் தாங்கள் ஏற்றிக் கொண்டு போவதை நினைத்தால் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. நாடு நகரங்களில் உள்ள ஜனங்கள் எல்லோரும் தாங்கள் போகுமிடமெல்லாம் என்னையும் கூட அழைத்துப் போவதாக எண்ணுகிறார்கள்…”
“அது எனக்கு மட்டும் சந்தோஷமளிக்கிறது என்றா நினைக்கிறாய்? இல்லவே இல்லை! ஆனால் எடுத்த காரியம் பெரிய காரியம். அதை நிறைவேற்றுவதற்காகச் சகித்துக்கொண்டு செய்கிறேன். மேலும், இந்த யோசனை கூறியதே நீதான் என்பதை மறந்து விட்டாயா? உன்னுடைய மூடு பல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போகும்படி நீதானே சொன்னாய்? கோட்டையிலிருந்து போகும் போதும் வரும் போதும் அவனைத் தனியாகச் சுரங்க வழியில் அனுப்பும் யுக்தியையும் நீதானே கூறினாய்?…”
“என்னுடைய கடமையைத் தான் நான் செய்தேன். கணவர் எடுத்திருக்கும், காரியத்துக்கு உதவி செய்வது மனைவியின் கடமை அல்லவா? ஏதோ எனக்குத் தெரிந்த யுக்தியைச் சொன்னேன். தங்களுக்கு அதனால்..”
“அது மட்டுமா செய்தாய்? இந்த மதுராந்தகன் உடம்பெல்லாம் விபூதியைப் பூசிக்கொண்டு ருத்ராட்ச மாலையை அணிந்து நமசிவாய ஜபம் செய்துகொண்டிருந்தான்! கோவில், குளம் என்று சொல்லிக் கொண்டு ‘அம்மாவுக்குப் பிள்ளை நான் தான்’ என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான்! அரசாள்வதில் ஆசை உண்டாக்க நாங்கள் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. இரண்டு தடவை நீ அவனுடன் பேசினாய், உடனே மாறிப் போய் விட்டான். இப்போது அவனுக்கு உள்ள இராஜ்ய ஆசையைச் சொல்லி முடியாது. தற்போது அவனுடைய மனோராஜ்யம் இலங்கையிலிருந்து இமயமலை வரையில் பரவியிருக்கிறது! பூமியிலிருந்து ஆகாசம் வரையில் வியாபித்திருக்கிறது. நம்மைக் காட்டிலும் அவனுக்கு அவசரம் தாங்கவில்லை. சோழ சிம்மாசனத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருக்கிறான். நந்தினி! அந்தப் பிள்ளை விஷயத்தில் நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ, தெரியவில்லை!… ஆமாம், நீதான் இப்படிப்பட்ட மாயமந்திரக் காரியாயிருக்கிறாயே? வேறு மந்திரவாதியை நீ ஏன் அழைக்கிறாய்? அதைப்பற்றி அநாவசியமாக ஜனங்கள்…”
“அரசே! அதைப் பற்றி அநாவசியமாக யாரேனும் பேசினால், அப்படிப்பட்ட துஷ்டர்களின் நாக்கைத் துண்டித்துப் புத்தி கற்பிப்பது தங்கள் பொறுப்பு. மந்திரவாதியை நான் ஏன் அழைக்கிறேன் என்பதை முன்னமே சொல்லியிருக்கிறேன். தாங்கள் மறந்திருந்தால், இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். பழையாறையிலுள்ள அந்தப் பெண் பாம்பின் விஷத்தை இறக்கத்தான். நீங்கள் ஆண்மை உள்ள புருஷர்கள். யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள். ‘கேவலம் பெண் பிள்ளைகள்’ என்று அலட்சியம் செய்வீர்கள். பெண் பிள்ளைகளுடன் போர் செய்வது உங்களுக்கு அவமானம். ஆனால் நூறு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு பெண் பிள்ளை அதிகமான தீங்கு செய்து விடுவாள். பாம்பின் கால் பாம்பு அறியும். அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம் உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். தங்களையும் என்னையும் சேர்த்து அவள் அவமானப்படுத்தியதைத் தாங்கள் மறந்திருக்கலாம். நான் மறக்க முடியாது. நூறு பெண்களுக்கு மத்தியில் என்னைப் பார்த்து, ‘அந்தக் கிழவனுக்குத்தான் சாகப் போகிற சமயத்தில் பெண் மோகம் பிடித்துப் புத்தி கெட்டுப் போய்விட்டது; உன் அறிவு எங்கேயடி போயிற்று? அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்து கொண்டாய்?’ என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா? ‘தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே, எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே? போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய்க் கலியாணம் செய்துகொண்டாயே! என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா? இந்த உடம்பில் உயிருள்ள வரையில் மறக்க முடியாது!” என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் பொங்கிய கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களின் வழியாகப் பெருகி அவளது மார்பகத்தை நனைத்தது.
39. உலகம் சுழன்றது!
முதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைப் பழுவேட்டரையர் அறிந்திருக்கிறார். அப்படி நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்பது அவர் காதுக்கு எட்டியிருந்தது. ஆனால் குந்தவை என்ன சொன்னாள் என்பதை இதுவரை யாரும் அவரிடம் பச்சையாக எடுத்துச் சொல்லவில்லை. இப்போது நந்தினியின் வாயினால் அதைக் கேட்டதும் அவருடைய உள்ளம் கொல்லர் உலைக் களத்தை ஒத்தது. குப், குப் என்று அனல் கலந்த பெருமூச்சு வந்தது. நந்தினியின் கண்ணீர் அவருடைய உள்ளத்தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய நெய்யாக உதவிற்று.
“என் கண்ணே! அந்தச் சண்டாளப் பாதகி அப்படியா சொன்னாள்? என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள்? இருக்கட்டும்; அவளை…அவளை…என்ன செய்கிறேன், பார்? எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார்! இன்னும்,…அவளை…அவளை” என்று பழுவேட்டரையர், கோபாவேசத்தினால் பேசமுடியாது தத்தளித்தார். அவர் முகம் அடைந்த கோர சொரூபத்தை வர்ணிக்கமுடியாது.
நந்தினி அவரைச் சாந்தப் படுத்த முயன்றாள். அவருடைய இரும்புக் கையைத் தன் பூவையொத்த கரத்தினால் பற்றி விரல்களோடு விரல்கள் இணைத்துக் கோத்துக் கொண்டாள்.
“நாதா! எனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கள் பொறுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து இரத்தத்தைக் குடிக்கும் வலிமையுள்ள சிங்கம், கேவலம் ஒரு பூனையின் மீது பாய முடியாது குந்தவை ஒரு பெண் பூனை; ஆனால் பெரிய மந்திரக்காரி. மாயமும் மந்திரமும் செய்துதான் எல்லோரையும் அவள் இஷ்டம் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்! இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்! அவளுடைய மந்திரத்தை மாற்று மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். தங்களுக்கு விருப்பமில்லா விட்டால் சொல்லிவிடுங்கள். இன்றைக்கே நான் இந்த மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்…” என்று கூறி மீண்டும் விம்மினாள்.
பழுவேட்டரையரின் கோப வெறி தணிந்தது; மோக வெறி மிகுந்தது.
“வேண்டாம், வேண்டாம்! ஆயிரம் மந்திரவாதிகளை வேண்டுமானாலும் அழைத்து வைத்துக்கொள். நீ போக வேண்டாம்! என் உயிர் அனையவள் நீ! அனையவள் என்ன? என் உயிரே நீதான்! உயிர் போய்விட்டால் அப்புரம் இந்த உடம்பு என்ன செய்யும்?… இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக் கொல்கிறது! இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே? எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா?” என்றார்.
“நாதா! தங்கள் கையில் வாளும் வேலும் இருக்கும்போது மந்திரம் எதற்கு? பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டுவிடுங்கள் மாயமந்திரங்களை! தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும்?” என்றாள் நந்தினி.
“கண்ணே! நீ உன் பவள வாய் திறந்து ‘நாதா’ என்று அழைக்கும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது உன் பொன் முகத்தைப் பார்த்தால் என் மதி சுழல்கிறது! என் கையில் வாளும் வேலும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன். ஆனால் அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில் என்ன செய்வேன்? மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப்பாணம் என்னிடம் ஒன்றுமில்லையே? உன்னிடம் அல்லவா இருக்கிறது? எனக்கு மந்திரம் எதற்காக என்று கேட்கிறாய்! என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்காகத்தான்! அதற்கு ஏதாவது மந்திரம் உனக்குத் தெரிந்திருந்தால் சொல்லு! இல்லையென்றால், உன் பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு! எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று! கண்மணி! உலகம் அறியச் சாஸ்திர விதிப்படி நீயும் நானும் மணந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன! ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை. விரதம் என்றும், நோன்பு என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்துகொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய்! அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக் கொடுத்துக் கொன்றுவிடு!…”
நந்தினி தன் செவிகளைப் பொத்திக்கொண்டு “ஐயையோ! இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்! இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள் சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம் தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம்!” என்றாள்.
“இல்லை, இல்லை; இனி அப்படிச் சொல்லவில்லை, என்னை மன்னித்து விடு! நீ விஷங் குடித்து இறந்தால் எனக்கு மனநிம்மதி உண்டாகுமா? இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன். அப்போது முழுப் பைத்தியமாகிவிடுவேன்!…”
“நாதா! எதற்காகத் தாங்கள் பைத்தியமாக வேண்டும்? என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோ மோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோ ம். உயிரும் உயிரும் கலந்துவிட்டன; உள்ளமும் உள்ளமும் சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது. தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண்கலங்குகிறது. தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை? மண்ணினால் ஆன உடம்பு இது. ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகப் போகிற உடம்பு இது…”
“நிறுத்து! நிறுத்து! உன் கொடுமையான வார்த்தைகளைக் கேட்டு என் காது கொப்பளிக்கிறது!” என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச இடங்கொடாமல் பேசினார்; “மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய்? பொய்! பொய்! தேன் மணம் கமழும் உன் கனி வாயினால் அத்தகைய பெரும் பொய்யைச் சொல்லாதே! உன் உடம்பை மண்ணினால் செய்ததாகவா சொன்னாய்? ஒரு நாளும் இல்லை. உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும் செய்திருக்கலாம், சுண்ணாம்பினாலும் செய்திருக்கலாம். கரியையும் சாம்பலையும் கலந்தும் செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா? தேவலோகத்து மந்தார மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களைச் சேகரித்தான்; தமிழகத்துக்கு வந்து செந்தாமரை மலர்களைப் பறித்துச் சேகரித்தான்; சேகரித்த மலர்களைத் தேவலோகத்தில் தேவாமிர்தம் வைத்திருக்கும் தங்கக் கலசத்தில் போட்டான். அமுதமும் மலர்களும் ஊறிக் கலந்து ஒரே குழம்பான பிறகு எடுத்தான். அந்தக் குழம்பில் வெண்ணிலாக் கிரணங்களை ஊட்டினான். பண்டைத் தமிழகத்துப் பாணர்களை அழைத்து வந்து யாழ் வாசிக்கச் சொன்னான். அந்த யாழின் இசையையும் கலந்தான். அப்படி ஏற்பட்ட அற்புதமான கலவையினால் உன் திருமேனியைப் படைத்தான் பிரம்மதேவன்…”
“நாதா! ஏதோ பிரம்மாவுக்குப் பக்கத்தில் இருந்து பார்த்தவரைப் போல் பேசுகிறீர்களே! இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன்? தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள். இராஜ குலங்களில் பிறந்தவர்கள். எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடனும் இல்லறம் நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான் ஆகிறது!…” என்று நந்தினி சொல்வதற்குள், பழுவேட்டரையர் குறுக்கிட்டார். அவருடைய உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சி வெள்ளத்தை வார்த்தைகளின் மூலமாகவாவது வெளிப்படுத்திவிட விரும்பினார் போலும். அவரைப் பற்றி எரித்த தாபத்தீயைச் சொல் மாரியினால் நனைந்து அணைக்க முயன்றார் போலும்.
“நந்தினி என் அந்தப்புரத்து மாதர்களைப் பற்றிச் சொன்னாய். பழமையான பழுவூர் மன்னர் குலம் நீடித்து வளர வேண்டும் என்பதற்காகவே அவர்களை நான் மணந்தேன். அவர்களில் சிலர் மலடிகளாகித் தொலைந்தார்கள். வேறு சிலர் பெண்களையே பெற்றளித்தார்கள். ‘கடவுள் அருள் அவ்வளவுதான்’ என்று மன நிம்மதியடைந்தேன். பெண்களின் நினைவையே வெகுகாலம் விட்டொழித்திருந்தேன். இராஜாங்க காரியங்களே என் கவனம் முழுவதையும் கவர்ந்திருந்தன. சோழ ராஜ்யத்தின் மேன்மையைத் தவிர வேறு எந்த நினைவுக்கும் இந்த நெஞ்சில் இடமிருக்கவில்லை. இப்படி இருக்கும்போதுதான் பாண்டியர்களோடு இறுதிப் பெரும் யுத்தம் வந்தது. வாலிபப் பிராயத்துத் தளபதிகள் பலர் இருந்தபோதிலும் என்னால் பின் தங்கி இருக்க முடியவில்லை. நான் போர்க்களம் சென்றிராவிட்டால், அத்தகைய மாபெரும் வெற்றி கிடைத்தும் இராது. பாண்டியர் படையை அடியோடு நாசம் செய்து மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு கொங்கு நாடு சென்றேன். அங்கிருந்து அகண்ட காவேரிக் கரையோடு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் காடு அடர்ந்த ஓர் இடத்தில் உன்னைக் கண்டேன். முதலில் நீ அங்கு நிற்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணை மூடி மூடித் திறந்து பார்த்தேன். அப்போதும் நீ நின்றாய். ‘நீ வனதேவதையாக இருக்க வேண்டும்; அருகில் சென்றதும் மறைந்துவிடுவாய்!” என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன். அப்போதும் நீ மறைந்துவிடவில்லை. ‘புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவகன்னிகை அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித பாஷை உனக்குத் தெரிந்திராது!’ என்று எண்ணிக்கொண்டு, ‘பெண்ணே! நீ யார்?’ என்று கேட்டேன். நீ நல்ல தமிழில் மறுமொழி கூறினாய். ‘நான் அநாதைப் பெண்; உங்களிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைக் காப்பாற்றுங்கள்’ என்றாய். உன்னைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துக் கொண்டு வந்தபோது என் மனம் எண்ணாததெல்லாம் எண்ணியது. உன்னை எங்கேயோ, எப்போதோ, முன்னம் பார்த்திருப்பது போலத் தோன்றியது. ஆனால் நினைத்து நினைத்துப் பார்த்தும் எங்கே என்று தெரியவில்லை. சட்டென்று என் மனத்தை மூடியிருந்த மாயத்திரை விலகியது; உண்மை உதயமாயிற்று. உன்னை இந்த ஜன்மத்தில் நான் முன்னால் பார்த்ததில்லை. ஆனால் முந்தைய பல பிறவிகளில் பார்த்திருக்கிறேன் என்பது தெரிந்தது. அந்தப் பூர்வ ஜன்மத்து நினைவுகள் எல்லாம் மோதிக்கொண்டு வந்தன. நீ அகலிகையாக இந்த உலகில் பிறந்திருந்தாய்; அப்போது நான் தேவேந்திரனாக இருந்தேன். சொர்க்கலோக ஆட்சியைத் துறந்து ரிஷி சாபத்துக்கும் துணிந்து உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். பிறகு நான் சந்தனு மகாராஜனாகப் பிறந்திருந்தேன். கங்கைக் கரையோடு வேட்டையாடச் செல்லுகையில் உன்னைக் கண்டேன்; பூலோக பெண்ணப்போல் உருக்கொண்டிருந்த கங்கையாகிய உன்னைக் காதலித்தேன். பிறகு ஒரு காலத்தில் காவேரிப் பூம்பட்டணத்தில் நான் கோவலனாய்ப் பிறந்திருந்தேன். நீ கண்ணகியாக அவதரித்திருந்தாய். என் அறிவை மறைத்த மாயையினால் உன்னைச் சில காலம் மறந்திருந்தேன். பிறகு மாயைத் திரை விலகிற்று. உன் அருமையை அறிந்தேன். மதுரை நகருக்கு அழைத்துச் சென்றேன். வழியில் உன்னை ஆயர் குடியில் விட்டு விட்டுச் சிலம்பு விற்கச் சென்றேன். வஞ்சகத்தினால் உயிரை இழந்தேன். அதற்குப் பழிக்கு பழியாக இந்தப் பிறவியில் மதுரைப் பாண்டியன் குலத்தை நாசம் செய்து விட்டுத் திரும்பி வரும் போது உன்னைக் கண்டேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான் என்பதை உணர்ந்தேன்!…”
இப்படிப் பழுவேட்டரையர் முற்பிறவிக் கதைகளைச் சொல்லிக்கொண்டு வந்தபோது நந்தினி, அவர் முகத்தைப் பார்க்காமல் வேறு திசையை நோக்கிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் முகத்தில் அப்போது தோன்றிய பாவ வேறுபாடுகளைப் பழுவேட்டரையர் கவனிக்கவில்லை, கவனித்திருந்தால், அவர் தொடர்ந்து பேசியிருப்பாரா என்பது சந்தேகந்தான்.
மூச்சு விடுவதற்காக அவர் சற்று நிறுத்தியபோது, நந்தினி அவரைத் திரும்பிப் பார்த்து, “நாதா! தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமானால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுஙள்!” என்று முன்போல் முகமலர்ந்து புன்னகை செய்தாள்.
பழுவேட்டரையரின் முகமும் அப்போது மகிழ்ச்சியினாலும் பெருமையினாலும் மலர்ந்து விளங்கியது. எவ்வளவு அவலட்சணமான மனிதனாயினும், தான் காதலித்த பெண்ணினால் ‘மன்மதன்’ என்று அழைக்கப்பட்டால் குதூகலப்படாதவன் யார்? என்றாலும், தற்பெருமையை விரும்பாதவர் போல் பேசினார்.
“கண்மணி! உன்னை ரதி என்பது மிகவும் பொருத்தமானதுதான். ஆனால் என்னை ‘மன்மதன்’ என்று சொல்லுவது பொருந்துமா! உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய்!” என்றார்.
“நாதா! என் கண்களுக்குத் தாங்கள் தான் மன்மதன். ஆண் பிள்ளைகளுக்கு அழகு வீரம். தங்களைப் போன்ற வீராதி வீரர் இந்தத் தென்னாட்டில் யாரும் இல்லை என்பதை உலகமே சொல்லும். அடுத்தபடியாக, ஆண்மை படைத்தவர்களுக்கு அழகு தருவது அபலைகளிடம் இரக்கம். அந்த இரக்கம் தங்களிடம் இருப்பதற்கு நானே அத்தாட்சி. இன்ன ஊர், இன்ன குலம் என்று தெரியாத இந்த ஏழை அநாதைப் பெண்ணைத் தாங்கள் அழைத்து வந்து அடைக்கலம் அளித்தீர்கள். இணையில்லாத அன்பையும் ஆதரவையும் என்பேரில் சொரிந்தீர்கள். அப்படிப்பட்ட தங்களை நான் வெகுகாலம் காத்திருக்கும்படி செய்யமாட்டேன். என்னுடைய விரதமும் நோன்பும் முடியும் காலம் நெருங்கிவிட்டது…” என்றாள்.
“கண்மணி! என்ன விரதம், என்ன நோன்பு என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லிவிடு! எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன்!” என்றார் பழுவூர் அரசர்.
“தன்னைக் காட்டிலும் மன்மதன் வேறு இல்லை என்று எண்ணியிருக்கும் இந்தச் சுந்தர சோழருடைய சந்ததிகள் தஞ்சைச் சிம்மாசனத்தில் ஏறக்கூடாது. தற்பெருமை கொண்ட அந்தக் குந்தவையின் கர்வத்தை ஒடுக்க வேண்டும்…”
“நந்தினி! அந்த இரண்டு காரியங்களும் நிறைவேறிவிட்டதாகவே நீ வைத்துக் கொள்ளலாம். ஆதித்தனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் பட்டம் கிடையாது; மதுராந்தகனுக்கே பட்டம் கட்ட வேண்டும் என்று இந்த ராஜ்யத்தின் தலைவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள்…”
“எல்லாரும் சம்மதித்து விட்டார்களா? உண்மைதானா?” என்ற நந்தினி அழுத்தமாகக் கேட்டாள்.
“இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள். கொடும்பாளூரானும், மலையமானும், பார்த்திபேந்திரனும் நம்முடன் என்றும் இணங்க மாட்டார்கள். அவர்களைப் பற்றிக் கவலையில்லை…”
“ஆயினும் காரியம் முடியும் வரையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதானே?”
“அதற்குச் சந்தேகம் இல்லை. எல்லா ஜாக்கிரதையும் நான் செய்து கொண்டு தான் வருகிறேன். மற்றவர்களின் முட்டாள் தனத்தினால் பிசகு நேர்ந்தால்தான் நேர்ந்தது. இன்றைக்குக் கூட அத்தகைய பிசகு ஒன்று நேர்ந்திருக்கிறது. காஞ்சியிலிருந்து வந்த ஒரு வாலிபன் காலாந்தகனை ஏமாற்றிவிட்டுச் சக்கரவர்த்தியைச் சந்தித்து ஓலை கொடுத்திருக்கிறான்…”
“ஆகா! தங்கள் தம்பியைப் பற்றித் தாங்கள் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவருக்குச் சாமார்த்தியம் போதாது என்று நான் சொல்லவில்லையா?”
“இந்த விஷயத்தில் அசட்டுத்தனமாகத்தான் போய் விட்டான்! ஏதோ நம் அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான்!”
“ஏமாந்து போனவர்கள் இப்படித்தான் ஏதாவது காரணம் சொல்லுவார்கள்! ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா?”
“முயற்சி செய்யாமல் என்ன? கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வேட்டை ஆரம்பமாகிவிட்டது! எப்படியும் பிடித்து விடுவார்கள். இதனாலெல்லாம் நம்முடைய காரியத்துக்கு ஒன்றும் பங்கம் வந்துவிடாது. சக்கரவர்த்தி காலமானதும் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறுவது நிச்சயம்…”
“நாதா! என்னுடைய விரதம் என்னவென்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்தும் காலம் இப்போது நெருங்கி வந்துவிட்டது…”
“கண்ணே! அதைச் சொல்லும்படிதான் நானும் கேட்கிறேன்…”
“மதுராந்தகன் – அந்த அசட்டுப் பிள்ளை – பெண் என்றால் பல்லை இளிப்பவன் – அவன் பட்டத்துக்கு வருவதினால் என்னுடைய விரதம் நிறைவேறிவிடாது…”
“வேறு எதனால் நிறைவேறும்? உன் விருப்பத்தைச் சொல்லு! நிறைவேற்றி வைக்க நான் இருக்கிறேன்…”
“அரசே! என் சிறு பிராயத்தில் ஒரு பிரபல சோதிடன் என் ஜாதகத்தைப் பார்த்தான். பதினெட்டுப் பிராயம் வரையில் நான் பற்பல இன்னல்களுக்கு உள்ளாவேன் என்று சொன்னான்…”
“இன்னும் என்ன சொன்னான்?”
“பதினெட்டுப் பிராயத்துக்குப் பிறகு தசை மாறும் என்றான். இணையில்லாத உன்னத பதவியை அடைவேன் என்று சொன்னான்.”
“அவன் சொன்னது உண்மைதான்! அந்தச் சோதிடன் யார் என்று சொல்லு! அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்.”
“நாதா!”
“கண்ணே!”
“இன்னும் அந்தச் சோதிடன் கூறியது ஒன்று இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா?”
“கட்டாயம் சொல்லு! சொல்லியே தீரவேண்டும்!”
“என்னைக் கைப்பிடித்து மணந்து கொள்ளும் கணவர், மணிமகுடம் தரித்து ஒரு மகா சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து அடிபணிந்து ஏத்தும் சக்கரவர்த்தியாக வீற்றிருப்பார் என்று அந்தச் சோதிடன் சொன்னான். அதை நிறைவேற்றுவீர்களா?”
பழுவேட்டரையரின் செவிகளில் இவ்வார்த்தைகள் விழுந்ததும், அவருக்கு முன்னாலிருந்த நந்தினியும் அவள் வீற்றிருந்த மஞ்சமும் சுழன்றன. லதா மண்டபம் சுழன்றது. அந்த மண்டபத்தின் தூண்கள் சுழன்றன. எதிரே இருந்த இருளடர்ந்த தோப்புச் சுழன்றது. நிலாக் கதிரில் ஒளிர்ந்த மர உச்சிகள் சுழன்றன. வானத்து நட்சத்திரங்கள் சுழன்றன. இருபுறத்து மாளிகைகளும் சுழன்றன. உலகமே சுழன்றது!
40. இருள் மாளிகை
காணாமற்போன வந்தியத்தேவன் என்ன ஆனான் என்பதை இப்போது நாம் கவனிக்கலாம். இருளடர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா? மந்திரவாதியும் நந்தினியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவன் முதலில் காது கொடுத்துக் கேட்க முயன்றான். ஆனால் அவர்களுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவ்வளவாக அவனுக்குச் சிரத்தையும் இல்லை. நந்தினியுடன் பேசிக் கொண்டிருந்த போது தன் அறிவு தன்னை விட்டு அகன்று ஒருவித போதை உணர்ச்சி உண்டாகியிருந்தது என்பதை இப்போது உணர்ந்தான். மறுபடியும் அவளைச் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டு போய்விட்டால் நல்லது. பழுவேட்டரையர்களிடம் அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் இந்த இளையராணியிடம் அகப்பட்டு கொள்வதில் அபாயம் அதிகம் இருக்கிறது. அவர்கள் முன்னிலையில் தன் அறிவு நன்றாய் இயங்குகிறது; தோள் வலி ஓங்குகிறது; அரையில் உள்ள கத்தியில் எப்போதும் கை இருக்கிறது. யுக்தியினாலும் ஒரு கை பார்க்கலாம்; கத்தியினாலும் ஒரு கை பார்க்கலாம். ஆனால் இந்த மோகினியின் முன்னால் புத்தி மயங்கி விடுகிறது; கையும் கத்தி பிடிக்கும் சக்தியை இழந்து விடுகிறது. மீண்டும் இவள் முன்னால் சென்றால், என்ன நேருமோ என்னவோ? போதும் போதாதற்கு மந்திரவாதி ஒருவனுடைய கூட்டுறவும் இவள் வைத்துக் கொண்டிருக்கிறாள்! இரண்டு பேரும் சேர்ந்து என்ன மாயமந்திரம் செய்வார்களோ? குந்தவைப் பிராட்டியிடந்தான் இவளுக்கு எவ்வளவு துவேஷம்? அந்தத் துவேஷம் இவளுடைய கண்களில் தீப்பொறியாக வெளிப்படுகிறதே! ஒருவேளை மனத்தை மாற்றிக் கொண்டு பழுவேட்டரையரிடம் தன்னைப் பிடித்துக் கொடுத்தாலும் கொடுத்து விடலாம்! பெண்களின் சபல சித்தமும் சஞ்சல புத்தியும் பிரசித்தமானவை அல்லவா? ஆகையால் மீண்டும் இவளைச் சந்திக்காமல் தப்பித்துக் கொண்டு போய் விட்டால் நல்லது; ஆனால் எப்படி? தோட்டத்துக்குள் புகுந்து தான் வழி கண்டுபிடித்துப் போக வேண்டும்! மதில் ஏறிக் குதிக்க வேண்டும்! மதிலுக்கு வெளியில் தன்னைத் தேடி வந்தவர்கள் காத்திருந்தால்?… வேறு ஏதேனும் உபாயம் இல்லையா? வந்தியத்தேவா! இத்தனை நாளும் உனக்கு உதவி செய்து வந்த அதிர்ஷ்டம் எங்கே போயிற்று? யோசி! யோசி! மூளையைச் செலுத்தி யோசி! கண்களையும் கொஞ்சம் உபயோகப்படுத்து! நாலாபக்கமும் பார்! இதோ இந்த இருள் அடைந்த மாளிகை இருக்கிறதே! இது ஏன் இருளடைந்திருக்கிறது? இதற்குள்ளே என்ன இருக்கும்? இதன் உள்ளே புகுந்தால் இதன் இன்னொரு வாசல் எங்கே கொண்டு போய் விடும்? எல்லாவற்றுக்கும் இதற்குள் புகுந்து பார்த்து வைக்கலாமா? இப்போது உபயோகப்படாவிட்டாலும் வேறு ஒரு சமயத்துக்கு உபயோகப்படலாம் யார் கண்டது?
ஆனால், இதற்குள்ளே எப்படிப் பிரவேசிப்பது? எவ்வளவு பெரிய, பிரம்மாண்டமான கதவு, இதற்கு எவ்வளவு பெரிய பூட்டு! அப்பப்பா! என்ன அழுத்தம்! என்ன கெட்டி! ஆ! இது என்ன? கதவுக்குள் ஒரு சிறிய கதவு போலிருக்கிறதே! கையை வைத்ததும் இந்தச் சிறிய கதவு திறந்து கொள்கிறதே! அதிர்ஷ்டம் என்றால், இதுவல்லவா அதிர்ஷ்டம்! உள்ளே புகுந்து பார்க்க வேண்டியதுதான்!
பெரிய கதவுக்குள்ளே, பார்த்தால் தெரியாதபடி பொருத்தியிருந்த சிறிய கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் அந்த இருளடைந்த மாளிகைக்குள் புகுந்தான். உள்ளே காலடி வைத்ததும் அவனுக்குத் தோன்றிய முதல் எண்ணம், தான் அம்மாளிகைக்குள் புகுந்தது நந்தினிக்குக் கூடத் தெரிய கூடாது என்பதுதான் ஆகையால் சிறிய கதவைச் சாத்தினான். சாத்தியவுடன் உள்ளிருந்த இருள் இன்னும் பன்மடங்கு கனத்து விட்டதாகத் தோன்றியது. கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது. இப்போது அதுவும் தெரியவில்லை இருட்டு என்றால், இப்படிப்பட்ட இருட்டைக் கற்பனை செய்யவும் முடியாது!.. சீச்சீ! வெளிச்சத்திலிருந்து இருட்டில் வந்திருப்பதால் முதலில் இப்படித்தான் இருக்கும். சற்று போனால் இருட்டின் கனம் குறைந்து பொருள்கள் மங்கலாகக் கண்ணுக்குப் புலப்படும். இதை எத்தனையோ தடவை அனுபவத்தில் கண்டிருந்தும், இருளைக் கண்டு கலக்கம் ஏன்? சும்மா நிற்பதற்குப் பதில் கொஞ்சம் நடந்து பார்க்கலாம். கையினால் தடவிக் கொண்டே போகலாம். முதலில் தெரிந்த தூண் இப்போது இல்லாமல் எங்கே போய்விடும்…? சற்றுத் தூரம் குருடனைப் போல் கையை முன்னால் நீட்டிக் கொண்டு வந்தியத்தேவன் நடந்தான். அவன் நினைத்தபடியே ஒரு தூண் கைக்குத் தட்டுப்பட்டது! ஆ! எவ்வளவு பெரிய தூண்! கருங்கல் தூண்! இதைச் சுற்றி வளைத்துக் கொண்டு மேலே போய்ப் பார்க்கலாம். மேலும் கொஞ்ச தூரம் நடந்ததும் இன்னொரு தூண் கைக்கு அகப்பட்டது. ஆனால் இன்னமும் கண்ணுக்கு ஏதும் தெரிந்தபாடாயில்லை. திடீரென்று கண் குருடாகப் போய் விட்டதா, என்ன? இது என்ன பைத்தியக்கார எண்ணம்! கண் திடீர் என்று எப்படிக் குருடாகும்? இன்னும் கொஞ்சம் நடந்து பார்க்கலாம். மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை! ஏதோ பள்ளத்தில் இறங்குவது போன்ற உண்ர்ச்சி உண்டாகிறது! ஆ! இதோ ஒரு படி! நல்லவேளை, விழாமல் தப்பினோம்! இப்படியே இந்த இருட்டில் ஒன்றும் தெரியாமல் எத்தனை நேரம், எத்தனை தூரம் போவது?.. எதனாலோ வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பீதி உண்டாயிற்று. மேலே போகத் துணிவு ஏற்படவில்லை. வந்த வழியில் திரும்ப வேண்டியதுதான்! கதவைத் திறந்து கொண்டு லதா மண்டபத்துக்கே போக வேண்டியதுதான்! இந்தப் பயங்கர இருட்டில் உழலுவதைக் காட்டிலும் நந்தினியை மீண்டும் சந்தித்து அவளுடைய யோசனைப்படி நடப்பதே நல்லது. என்ன வாக்குறுதி கேட்டாலும் இப்போதைக்குக் கொடுத்து விட்டால், பிறகு சமயம் போல் பார்த்துக் கொள்கிறது! இவ்வாறு எண்ணி வந்தியத்தேவன் திரும்பினான். ஆனால் திரும்பிச் செல்லும் வழி வந்த வழியேதானா? எப்படிச் சொல்ல முடியும்!… நடக்க நடக்கக் கைக்கு ஒன்றும் தட்டுப்படவில்லையே! அந்தக் கருங்கல் தூண்கள் எங்கே போயின! கதவைக் கண்டுபிடிக்க முடியாமலே போய் விடுமோ? இரவெல்லாம் இந்த இருளில் இப்படியே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க நேரிடுமோ? கடவுளே! இது என்ன ஆபத்து!…
ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது? வௌவால்கள் சிறகை அடித்துக் கொள்ளும் ஓசையாக இருக்க வேண்டும். அவ்வளவு இருட்டில் வௌவால்கள் நிறையக் குடிகொண்டிருப்பது இயல்புதானே? இல்லை! இது வௌவால் இறகின் சத்தம் மட்டும் இல்லை! காலடிச் சத்தம்! யாரோ நடக்கும் சத்தம்!… நடப்பது யார்? மனிதர்கள்தானா? அல்லது… வந்தியத்தேவனுடைய தொண்டை உலர்ந்து போயிற்று! நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது! திடீரென்று யாரோ அவன் முகத்தில் இடித்தாற் போலிருந்தது. வந்தியத்தேவன் தன் சக்தியையெல்லாம் காட்டி ஒரு குத்து விட்டான்! குத்திய கை துண்டிக்கப்பட்டது போல வலித்தது. இன்னொரு கையினால் தொட்டுப் பார்த்தான். இருட்டில் கருங்கல் தூணின் மேல் மோதிக் கொண்டதுமல்லாமல் அதைக் குத்தியதாகவும் தெரிந்து கொண்டான்! கையை அவ்வளவு ‘விண், விண்’ என்று வலித்திராவிட்டால் வந்தியத்தேவன் சிரித்தேயிருப்பான். ஆயினும் அதனால் அவனுடைய பயம் சிறிது அகன்றது; முழுதும் அகலவில்லை. காது கொடுத்துக் கேட்டபோது அந்தக் காலடிச் சத்தம் மேலும் மேலும் கேட்டது. ஒரு சமயம் எட்டிப் போவது போல இருந்தது! இன்னொரு சமயம் நெருங்கி வருவது போல் இருந்தது! வந்தியத்தேவன் நின்ற இடத்திலேயே நின்று உற்றுக் கேட்டான். அதே சமயத்தில் ஓசை வந்த திசையை நோக்கி அவனுடைய கண்களும் உற்றுப் பார்த்தன.
ஆ! வெளிச்சம்! அதோ! வெளிச்சம்! கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது! நெருங்கியும் வருகிறது! வெளிச்சத்துடன் புகை! யாரோ தீவர்த்தியுடன் வருகிறார்கள். நந்தினிதான் தன்னைத் தேடிக் கொண்டு வருகிறாளோ, என்னமோ! அப்படியானால் நல்லது. வேறு யாராவதாயிருந்தால்? எல்லாவற்றுக்கும் சிறிது நேரம் ஒளிந்திருந்து பார்க்கலாம். ஒளிந்து நிற்பதற்கு இங்கே இடத்துக்குக் குறைவில்லை! தூரத்திலே வந்த தீவர்த்திக் கொழுந்து அது ஒரு விசாலமான மண்டபம் என்பதைக் காட்டியது. அதில் பெரிய பெரிய தூண்கள் இருந்தன. தூண்களில் பயங்கரமான பூதங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. கீழேயிருந்து ஒரு படிக்கட்டு மேலே வந்து அங்கே ஒரு வளைவு வளைந்து திரும்பி மேலேறிச் சென்றது. அந்தப் படிக்கட்டின் அடிப்பக்கத்திலிருந்துதான் தீவர்த்தி வெளிச்சம் வந்தது என்பதையும் அறிந்து கொண்டான். ஆகையால் வருவது நந்தினியாக இருக்க முடியாது. ‘பாதாளச் சிறை’ என்று தான் கேள்விப்பட்டது இந்த இருண்ட மாளிகையின் அடியிலேதான் இருக்கிறதோ? ஒருவேளை அங்கிருந்துதான் யாரேனும் வருகிறார்களோ? பாதாளச் சிறையின் பயங்கரங்களைப் பற்றி வந்தியத்தேவன் அதிகம் கேள்விப்பட்டிருந்தபடியால், அந்த எண்ணம் அவனுடைய ரோமக் கால்களில் எல்லாம் வியர்வை துளிக்கும்படி செய்தது. அடுத்த கணம் ஒரு பெரிய தூணின் மறைவில் போய் நின்று கொண்டான். மகா தைரியசாலியான வந்தியத்தேவனுடைய கைகால்கள் எல்லாம் அச்சமயம் வெலவெலத்துப் போய் நடுநடுங்கின!
படிக்கட்டின் வழியாக மேலேறி மூன்று உருவங்கள் வந்தன. மூவரும் மனிதர்கள்தான் ஒருவன் கையில் தீவர்த்தியிருந்தது; இன்னொருவன் கையில் வேல் இருந்தது. நடுவில் வந்தவன் கையில் ஒன்றும் பிடித்திருக்கவில்லை. தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்கள் முகங்கள் புலப்பட்டதும் வந்தியத்தேவனுடைய பீதி அடியோடு அகன்றது. பீதியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான வியப்பு உண்டாயிற்று. அவர்களில் முன்னால் வந்தவன் வேறு யாரும் இல்லை; வந்தியத்தேவனுடைய பிரிய நண்பனாகிய கந்தமாறன்தான்! நடுவில் வந்த உருவம், முதலில், ஓர் அதிசயமான பிரமையை வந்தியத்தேவனுக்கு உண்டாக்கிற்று. பழுவூர் இளையராணியாகிய நந்தினி தான் வருகிறாள் என்று தோன்றியது. மறு கணத்திலேயே, அந்தப் பிரமை நீங்கியது. வருகிறவன் ஆண் மகன் என்று தெரிந்தது. கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அரை குறையாகத் தான் பார்த்த இளவரசர் மதுராந்தகத் தேவர் என்பதை அறிந்து கொண்டான். மூன்றாவதாக, கையில் தீவர்த்தியுடன் வந்தவனை வல்லவரையன் முன்னால் பார்த்ததில்லை. அவன் வாசற் காவலனாகவோ, ஊழியக்காரனாகவோ இருக்க வேண்டும்.
வந்தியத்தேவனுடைய மூளை அதிவேகமாக வேலை செய்தது. அவர்கள் அந்தப் பாதாள வழியில் படிக்கட்டு ஏறி வருவதன் மர்மம் என்னவென்பது வெகு விரைவில் அவனுக்கு விளங்கி விட்டது. பழுவூர் இளையராணி பல்லக்கில் ஏறி முதல் நாளே வந்து விட்டாள். பெரிய பழுவேட்டரையர் அன்றிரவு தஞ்சைக் கோட்டைக்குத் திரும்பி விட்டார். இருவரும் கோட்டை வாசல் வழியாகப் பகிரங்கமாக வந்து விட்டார்கள். ஆனால், மதுராந்தகத்தேவர் வெளியில் போனதும் தெரியக் கூடாது; திரும்பி வருவதும் தெரியக் கூடாது. அதற்காக இந்த இரகசியச் சுரங்க வழியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இருளடைந்த மாளிகையின் மர்மமே இதுதான் போலும்! கந்தமாறன் தன்னைக் கொள்ளிடக் கரையில் விட்டுப் பிரிந்த பின்னர், வேறு எங்கேயோ ஓரிடத்தில் பெரிய பழுவேட்டரையருடன் சேர்ந்திருக்கிறான். இந்த அந்தரங்க வேலைக்கு அவனைப் பழுவேட்டரையர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மதுராந்தகத்தேவரைச் சுரங்க வழியில் அழைத்துச் செல்லத் துணையாக அனுப்பி வைத்திருக்கிறார். ஆகா! இப்போது நினைத்துப் பார்த்தால் ஞாபகம் வருகிறது. “எனக்குக் கூடத் தஞ்சாவூரில் ஒரு வேலை இருக்கிறது. நானும் அங்கே வந்தாலும் வருவேன்!” என்று கந்தமாறன் சொன்னான் அல்லவா?… இப்போது இங்கே திடீர் என்று, தான் கந்தமாறன் முன்னால் போய் நின்றால், அவன் என்ன செய்வான்?.. இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அதை வல்லவரையன் மாற்றிக் கொண்டான். இந்தச் சமயத்தில் கந்தமாறன் முன்னால் தான் எதிர்ப்பட்டால், அவன் செய்துள்ள சபதத்தை முன்னிட்டுத் தன்னைக் கொல்ல நேரிடும்; அல்லது தான் அவனைக் கொல்ல நேரும். அப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை எதற்காக வருவித்துக் கொள்ள வேண்டும்…?
இதற்குள் அந்த மூவரும் படிக்கட்டில் மேலேறிப் போய் விட்டார்கள். வெளிச்சமும் வர வர மங்கத் தொடங்கியது. அவர்களைப் பின்தொடர்ந்து போகலாமா என்று வந்தியத்தேவன் ஒருகணம் நினைத்து, அதையும் உடனே மாற்றிக் கொண்டான். அவர்கள் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்குப் போகிறார்கள் என்பது நிச்சயம். அங்கே தான் திரும்பிப் போவதில் என்ன பயன்? சிங்கத்தின் குகையிலிருந்து தப்பித்து வந்த பிறகு தலையைக் கொடுப்பது போலத்தான்! இனித் திரும்ப நந்தினி இருந்த லதா மண்டபத்துக்குப் போவதிலும் பயன் இல்லை. ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இதற்குள் அங்கு வந்திருக்கலாம். அதுவும் அபாயகரந்தான் வேறு என்ன செய்யலாம்?… ஏன்? இந்தப் படிக்கட்டு வழியாக இறங்கிப் போய்ப் பார்த்தால் என்ன? இவ்விதம் எண்ணி நம் வாலிப வீரன் அந்தச் சுரங்கப் படிக்கட்டில் இறங்கினான்.
கல்கி.