31. “ஏலேல சிங்கன்” கூத்து
வனத்தின் மத்தியில் உலர்ந்த குளத்தைச் சுற்றி மரங்கள் வளைவு வரிசையாக வளர்ந்து அதனால் இடைவெளி ஏற்பட்டிருந்த இடத்தில் சுமார் ஆயிரம் சோழ வீரர்கள் தாவடி போட்டிருந்தார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காகப் பெரிய பெரிய கல்லடுப்புகளில் ஜுவாலை வீசிய நெருப்பின் பேரில் பிரம்மாண்டமான தவலைகளில் கூட்டாஞ்சோறு பொங்கிக் கொண்டிருந்தது. சட்டிகளிலும், அண்டாக்களிலும் வெஞ்சனங்கள் வெந்துகொண்டிருந்தன. இவற்றிலிருந்து எழுந்த நறுமணம் அந்த வீரர்கள் நாவில் ஜலம் சுரக்கச் செய்தது. சோறு பொங்கி முடியும் வரையில் பொழுது போவதற்காக அவர்கள் ஆடல் பாடல் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். இச்சமயத்தில் அவர்களுடைய உள்ளங்கவர்ந்த அரசிளங்குமாரரும் வந்து விடவே, அவ்வீரர்களின் குதூகலம் அளவு கடந்ததாயிற்று. அந்த எல்லைக் காவல் படையின் தளபதி மிகவும் சிரமப்பட்டு அவர்களுக்குள்ளே ஒழுங்கை நிலை நாட்டினார். எல்லோரையும் அமைதியுடன் பாதிமதியின் வடிவமான வட்டத்தில் வரிசையாக உட்காரும்படி செய்தார்.
பெரியதொரு ராட்சத மரத்தை வெட்டித் தள்ளி அதன் அடிப்பகுதியை மட்டும் பூமிக்கு மேலே சிறிது நீட்டிக்கொண்டிருக்கும்படி விட்டிருந்தார்கள். இளவரசர் வந்து அந்த அடிமரத்துச் சிம்மாசனத்தின்மீது அமர்ந்தார். இப்போது அவர் யானைப் பாகன்போல் உடை தரித்திருக்கவில்லை. தலையில் பொற்கிரீடமும், புஜங்களில் வாகு வலயங்களும், மார்பில் முத்து மாலைகளும் அணிந்து, அரையில் பட்டுப்பீதாம்பரம் தரித்து அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி எல்லைக்காவல் தளபதியும், வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் உட்கார்ந்திருந்தார்கள்.
இளவரசரை மகிழ்விப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த ஏலேல சிங்கன் சரித்திரக்கூத்து ஆரம்பமாயிற்று. இந்தச் சமயம் சோழ வீரர்கள் இலங்கையில் பெரும் பகுதியைப் பிடித்திருந்ததுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தடவை தமிழ் வீரர்கள் ஈழநாட்டைக் கைப்பற்றியிருந்தார்கள். அப்போது அத்தமிழ் வீரர்களின் தலைவனாக விளங்கியவன் ஏலேல சிங்கன். அவனால் துரத்தப்பட்டு இலங்கை அரசன் சில காலம் மலைநாட்டில் போய் ஒளிந்திருந்தான். அவனுடைய புதல்வனின் பெயர் துஷ்டகமனு. இவன் பொல்லாத வீரன். இலங்கையைத் திரும்பவும் ஏலேல சிங்கனிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்று நெடுங்காலம் கனவு கண்டான். அவ்வீரன் சிறு பிள்ளையாயிருந்தபோது ஒருநாள் படுக்கையில் கையையும் காலையும் மடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டு படுத்திருந்தான். அவனுடைய அன்னை, “குழந்தாய்! ஏன் இப்படி உன்னை நீயே குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறாய்? தாராளமாய்க் காலையும் கையையும் நீட்டி விட்டுப் படுத்துக்கொள்வதுதானே!” என்றாள். அப்போது துஷ்டகமனு, “தாயே! என்னை ஒரு பக்கத்தில் தமிழ் வீரர்கள் நெருக்குகிறார்கள். மற்றொரு பக்கத்தில் கடல் நெருக்குகிறது நான் என்ன செய்வேன்? அதனாலேயே உடம்பைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறேன்!” என்றான். இத்தகைய வீரன் காளைப் பருவம் அடைந்தபோது படை திரட்டிக் கொண்டு போன படைகள் சின்னாபின்னமாகிச் சிதறி ஓடிவிட்டன. அப்போது துஷ்டகமனு ஒரு யுக்தி செய்தான். ஏலேல சிங்கன் இருக்குமிடம் சென்று நேருக்கு நேர் நின்று, “அரசே! தங்களுடைய பெரிய சைன்யத்துக்கு முன்னால் என்னுடைய சிறிய படை சிதறி ஓடிவிட்டது. நான் ஒருவனே மிஞ்சியிருக்கிறேன். தாங்கள் சுத்த வீரர் குலத்தில் பிறந்தவர். ஆதலின் என்னுடன் தனித்து நின்று துவந்த யுத்தம் செய்யும்படி அழைக்கிறேன் நம்மில் வெற்றி அடைபவருக்கு இந்த இலங்கா ராஜ்யம் உரியதாகட்டும்; மற்றவருக்கு வீரசொர்க்கம் கிடைக்கட்டும்!” என்று சொன்னான்.
துஷ்டகமனுவின் அத்தகைய துணிச்சலையும் வீரத்தையும் ஏலேல சிங்கன் மிக வியந்தான். ஆகையால் அவனுடன் தனித்து நின்று போர் செய்ய ஒப்புக்கொண்டான். இடையில் வந்து குறுக்கிட வேண்டாம் என்று தன் வீரர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டான். துவந்த யுத்தம் ஆரம்பமாயிற்று. இந்தச் செய்தியை அறிந்து சிதறி ஓடிய துஷ்டகமனுவின் வீரர்களும் திரும்பி வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நெடுநேரம் போர் நடந்தது. துஷ்டகமனுவோ தன் பிறப்புரிமையைப் பெறும் பொருட்டு ஆத்திரத்துடன் சண்டையிட்டான். ஏலேல சிங்கன் அந்த இளைஞனிடம் அனுதாபம் கொண்டிருந்தபடியால் பூரண வலியையும் உபயோகித்துப் போர் செய்யவில்லை. ஆகையால் ஏலேல சிங்கன் இறந்தான். துஷ்டகமனு முடிசூடியதும், ஏலேல சிங்கன் இறந்த இடத்தில் அவனுக்குப் பள்ளிப்படைக் கோயில் எழுப்பி அவனது வீரத்தையும் தயாளத்தையும் போற்றினான்.
இந்த அரிய சரித்திர நிகழ்ச்சியைச் சோழ வீரர்கள் இளங்கோ அருள்மொழிவர்மரின் முன்னிலையில் நடனக் கூத்தாக நடித்துக் காட்டினார்கள். ஆடலும் பாடலும் அமர்க்களப்பட்டன. ஏலேல சிங்கன் உயிர் துறந்து விழுந்த இடத்தில் நடித்த வீரன் உண்மையிலேயே செத்து விழுந்து விட்டானா என்று தோன்றும்படி அவ்வளவு தத்ரூபமாக நடித்தான். பார்த்துக் கொண்டிருந்த இளவரசரும் மற்ற வீரர்களும் அடிக்கடி ‘ஆஹா’ காரம் செய்து குதூகலித்தார்கள்.
நாடகம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு முறை இளவரசர் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “திருமலை! தம்பளைக் குகைக் கோயிலில் துஷ்டகமனுவுக்கும், ஏலேல சிங்கனுக்கும் நடந்த போர்க் காட்சியை அழியாத வர்ணச் சித்திரமாக வரைந்திருக்கிறதே, அந்தச் சித்திரத்தை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.
“இல்லை, ஐயா! தம்பளை வீதிகளில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோதே தங்களைப் பார்த்துவிட்டேன். குகைக் கோயிலுக்குள் போக நேரமில்லை” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“ஆகா! அந்தக் குகைக் கோயில்களிலே உள்ள சிற்பங்களையும் அவசியம் பார்க்க வேண்டும்! திருமலை நம் செந்தமிழ் நாட்டில் எவ்வளவோ சிற்ப சித்திரங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டிலும் மகத்தான அற்புதங்கள் இந்த இலங்கைத் தீவில் இருக்கின்றன” என்றார் இளவரசர்.
“இளவரசே! இந்த நாட்டிலுள்ள சிற்ப சித்திரங்கள் எங்கும் போய் விடமாட்டா! எப்போது வேணுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் தங்களைப் பார்ப்பது அப்படியல்லவே? நல்ல சமயத்தில் நாங்கள் வந்ததினால் அல்லவோ பார்க்க முடிந்தது? எங்களுக்கு முன்னாலேயே இங்கு வந்த பார்த்திபேந்திர பல்லவன், தங்களைத் தேடிவிட்டு ‘இங்கே இல்லை’ என்று திரும்பிப் போய்க் கொண்டிருந்தான். வழியில் அவனை நாங்கள் பார்த்தோம்” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“ஆம்; என் தமையனாரின் அருமை நண்பர் வந்து தேடிவிட்டுப் போனதாகத் தளபதிகூடச் சொன்னார். அவர் எதற்காக வந்திருப்பார் என்று உன்னால் ஊகித்துச் சொல்ல முடியுமா?”
“நிச்சயமாகவே சொல்ல முடியும். தங்களைக் காஞ்சிக்கு அழைத்து வரும்படியாக ஆதித்த கரிகாலர் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்.”
“அடடே! உனக்குத் தெரிந்திருக்கிறதே! இதோ உன் சிநேகிதன் இவ்வளவு பத்திரமாக கொண்டுவந்து ஒப்புவித்தானே, இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்றும் உனக்குத் தெரியும் போலிருக்கிறது?”
“தங்களை உடனே பழையாறைக்கு வந்து சேரும்படி தங்கள் தமக்கையார் எழுதியிருக்கிறார்கள். இளவரசே! குந்தவை தேவி அந்தரங்கமாக இந்த ஓலையை எழுதி நம் வாணர்குல வீரரிடம் கொடுத்தபோது பக்கத்திலிருந்த கொடி வீட்டில் மறைந்திருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்…”
திருமலைக்குப் பின்னாலிருந்த வந்தியத்தேவன் அவனுடைய முதுகில் அழுத்தமாகக் கிள்ளினான்.
ஆழ்வார்க்கடியான் தன் முதுகில் ஓங்கி அறைந்து, “இது பொல்லாத காடு; இரவு நேரத்திலே கூட வண்டு கடிக்கிறது!” என்றான்.
இளவரசர் சற்றுக் கோபத்துடன், “சேச்சே! இது என்ன வேலை? என் அருமைத் தமக்கையார் பேரிலேயே நீ உன் திறமையைக் காட்டத் தொடங்கிவிட்டாயா?” என்றார்.
“அதை நான் பார்த்திருந்தபடியினால்தான் இவனை இவ்வளவு பத்திரமாக இங்கே கொண்டுவந்து சேர்த்தேன். இளவரசே! இவனை வழியிலெங்கும் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாதபடி காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு நான் பட்ட பாட்டைப் புத்தபகவானே அறிவார். அநுராதபுரத்தின் வழியாக வந்திருந்தால் இவன் நிச்சயமாக இங்கு வந்து சேர்ந்திருக்க மாட்டான். வழியில் யாருடனாவது சண்டை பிடித்துச் செத்திருப்பான். அதனாலே காட்டு வழியாக அழைத்து வந்தேன். அங்கேயும் இவன் ஒரு மதயானையுடன் சண்டை பிடிக்கப் பார்த்தான். என்னுடைய கைத்தடியால் அந்த மதயானையைச் சம்ஹரித்து இவனைத் தங்களிடம் பத்திரமாய்க் கொண்டு வந்தேன்!” என்றான்.
“ஓஹோ! அப்படியானால் இவனைப் பத்திரமாகக் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பதற்காகவே நீ இலங்கைக்கு வந்தாயா, என்ன?”
“இல்லை, ஐயா! என் பங்குக்கு நானும் தங்களுக்கு ஒரு செய்திகொண்டு வந்திருக்கிறேன்.”
“அது என்ன? சீக்கிரம் சொல்!” என்றார் இளவரசர்.
“முதன் மந்திரி அநிருத்தர் தாங்கள் இலங்கையிலேயே இன்னும் சிறிது காலம் இருப்பது உசிதம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.”
“இப்படி மூன்று மூத்தவர்கள் மூன்று விதமாகச் செய்தி அனுப்பினால் நான் எதையென்று கேட்பது?” என்றார் அருள்மொழிவர்மர்.
இச்சமயத்தில் வந்தியத்தேவன் குறுக்கிட்டு, “இளவரசே! மன்னிக்கவேண்டும்! தாங்கள் கேட்க வேண்டியது தங்கள் தமக்கையாரின் வார்த்தையைத்தான்!” என்றான்.
“ஏன் அவ்விதம் சொல்லுகிறீர்?”
“ஏனெனில், தங்கள் தமக்கையின் வார்த்தைக்கே மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று தங்கள் இருதயம் தங்களுக்குச் சொல்கிறது. அப்படித் தாங்கள் அவர் வார்த்தையைக் கேட்காவிட்டாலும், நான் கேட்டே தீர வேண்டும். தங்களை எப்படியும் அழைத்துக் கொண்டு வரும்படியாக இளைய பிராட்டி எனக்குப் பணித்திருக்கிறார்!” என்றான் வந்தியத்தேவன்.
இளவரசர் வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “இத்தகைய ஒரு வீரத்தோழன் கிடைக்க வேண்டுமேயென்று எத்தனையோ நாளாக நான் தவம் செய்துகொண்டிருந்தேன்!” என்றார்.
32. கிள்ளி வளவன் யானை
கூத்து முடிவதற்கும் சமையல் ஆவதற்கும் சரியாயிருந்தது. கட்டுக் கட்டாகத் தாமரை இலைகளைக் கொண்டு வந்து அவ்வீரர்களின் முன்னால் போட்டார்கள். பிறகு பொங்கலும் கறியமுதும் கொண்டு வந்து பரிமாறினார்கள்.
வீரர்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு இளவரசர் அவர்களிடையே பந்தி விசாரணை செய்துகொண்டு வலம் வந்தார். அங்கங்கே நின்று அவ்வீரர்களின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தார். அப்படி விசாரிக்கப்பட்டவர்கள் ஆனந்தக் கடலில் ஆழ்ந்தார்கள். பக்கத்திலிருந்தவர்கள் அவர்களுடைய அதிர்ஷ்டத்தைப் பாராட்டினார்கள்.
ஏற்கெனவே சோழ நாட்டு வீரர்களுக்கெல்லாம் இளங்கோவின் பேரில் மிக்க அபிமானம் இருந்தது. சமீபத்தில் அந்த அபிமானம் பன்மடங்கு பெருகியிருந்தது. தாய் நாட்டிலிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தருவிப்பதற்கு இளவரசர் பெரும் பிரயத்தனம் செய்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். அத்துடன் சாதாரணப் போர்வீரர்களுடனே இளவரசர் சம நிலையில் கலந்து பழகி க்ஷேமம் விசாரித்து, அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வந்தார். இந்தக் குணாதிசயம் இளவரசரை அவ்வீரர்கள் தங்கள் கண்ணுக்குக் கண்ணாகக் கருதுமாறு செய்திருந்தது.
ஆகையால், வீரர்கள் அங்கங்கே இளவரசரை நிறுத்த முயன்றார்கள். துணிச்சலை வருவித்துக்கொண்டு அவரை ஏதேனும் கேள்வி கேட்பார்கள். முக்கியமாக, அவர்களில் பலரும் கேட்ட கேள்வி, “புலத்திய நகரத்தின் மீது படையெடுப்பு எப்போது?” என்பதுதான். இந்தக் கேள்விக்கு விடையாக இளவரசர், “புலத்திய நகரத்தின் மீது படையெடுத்து என்ன பயன்? மகிந்தன் ரோஹணத்துக்கல்லவா போயிருக்கிறான்?” என்று சிலருக்குச் சொன்னார். “கொஞ்சம் பொறுத்திருங்கள் மழைகாலம் போகட்டும்” என்று வேறு சிலரிடம் சொன்னார். யுத்தமின்றிச் சோம்பி இருப்பதில் சில வீரர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுக் கொண்டார்கள். வேறு சிலர், “தாங்கள் மாதமொரு முறையாவது இவ்விதம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனால் பொறுமையாயிருக்கிறோம்” என்றார்கள்.
பந்தி விசாரணை முடிந்ததும், இளவரசர் சற்று ஒதுக்குப்புறமாக அவருக்கென அமைந்திருந்த படைவீட்டுக்குச் சென்றார். வந்தியத்தேவனையும், ஆழ்வார்க்கடியானையும் அவர் தம்முடன் அழைத்துக்கொண்டு போனார்.
“இந்த வீரர்களின் உற்சாகத்தைப் பார்த்தீர்கள் அல்லவா? தஞ்சையிலிருந்து மட்டும் தகுந்த ஒத்துழைப்புக் கிடைத்திருந்தால், இதற்குள் இந்த இலங்கைத் தீவு முழுவதும் நம் வசமாயிருக்கும். அருமையான சந்தர்ப்பம் வீணாகிப் போய்விட்டது. இங்கே மழை காலத்தில் யுத்தம் நடத்த முடியாது. இன்னும் மூன்று நாலு மாதம் நம் வீரர்கள் சும்மா இருக்கவேண்டியதுதான்!” என்று சொன்னார்.
இதைக் கேட்ட திருமலை, “இளவரசே! தாங்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவது வியப்பாயிருக்கிறது. அங்கேயோ சோழ சாம்ராஜ்யத்துக்கே பேரபாயம் நேர்ந்திருக்கிறது! விஜயாலய சோழர் ஸ்தாபித்த ராஜ்யம், பராந்தகராலும், சுந்தர சோழராலும் பல்கிப் பெருகிய மகாராஜ்யம், உள் அபாயங்களினால் சின்னா பின்னமாகிவிடும் போலிருக்கிறது!” என்றான்.
“ஆம், ஆம்! நீங்கள் இருவரும் முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள். நான் என்னுடைய அற்பக் கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்லது; இப்போது நீங்கள் சொல்ல வேண்டியதையெல்லாம் விவரமாகச் சொல்லுங்கள். முதலில் இவர் ஆரம்பிக்கட்டும்!” என்று இளவரசர் வந்தியத்தேவனைச் சுட்டிக் காட்டினார்.
வந்தியத்தேவன் உடனே தன் கதையைத் தொடங்கினான். காஞ்சியிலிருந்து தான் புறப்பட்டது முதல் கண்டவை, கேட்டவை எல்லாவற்றையும் கூறினான். பற்பல அபாயங்களிலிருந்து தப்புவதற்குத் தான் புரிந்த சாகஸச் செயல்களைக் குறித்து அதிகமாக விஸ்தரிக்க விரும்பாதவன்போல் காட்டிக் கொண்டு, அதே சமயத்தில் தன் பிரதாபங்களை வெளியிட்டான். கடைசியில், “ஐயா! தங்கள் அருமைத் தந்தையாரைச் சிறையில் வைத்திருப்பதுபோல் வைத்திருக்கிறார்கள். நெருங்கிய பந்துக்களும் பெருந்தர அதிகாரிகளும், சிற்றரசர்களும் சேர்ந்து பயங்கரமான சதி செய்கிறார்கள். இதனாலெல்லாம் தங்கள் சகோதரி இளைய பிராட்டி பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கிறார். ஆகையால் தாங்கள் உடனே புறப்பட்டு, என்னுடன் பழையாறைக்கு வரவேண்டும். ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது!” என்று முடித்தான்.
பிறகு ஆழ்வார்க்கடியான் தனது வரலாற்றைக் கூறினாள். வந்தியத்தேவன் கூறியவற்றையெல்லாம் அவனும் ஆமோதித்தான். அத்துடன் திருப்புறம்பியம் பள்ளிப்படையருகில், நள்ளிரவில் நடந்த கொலைகாரர்களின் சதியைப் பற்றியும் கூறினான். சோழநாட்டு நிலைமை இவ்வளவு அபாயகரமாயிருப்பதால் தற்சமயம் இளவரசர் அங்கு வராமலிருப்பதே நல்லது என்று முதன் மந்திரி சொல்லி அனுப்பிய செய்தியை மறுபடியும் வற்புறுத்திக் கூறினான்.
“தாங்கள் சோழ நாட்டுக்குத் தற்சமயம் வராமலிருப்பது மட்டுமல்ல; இங்கேயும் படையெடுப்பை மேலும் விஸ்தரித்துக் கொண்டு போக வேண்டாம் என்று முதன் மந்திரி கேட்டுக் கொள்கிறார். படைகளையெல்லாம் திரட்டி வட இலங்கையில் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார். சதிகாரர்கள் சீக்கிரத்தில் வெளிப்பட்டு வந்து தங்கள் உண்மைச் சொரூபத்தைக் காட்டுவார்கள். அச்சமயம் இப்போது இலங்கையிலுள்ள படைமிக்க உபயோகமாயிருக்கும் என்று முதன் மந்திரி அபிப்பிராயப்படுகிறார். பாண்டிய நாட்டில் தற்சமயம் உள்ள கைக்கோளர் படை, வன்னியர் படை, வேளாளர் படை மூன்றும் இளவரசருக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யக் காத்திருக்கின்றன. இதையும் தங்களுக்குத் தெரிவிக்கும்படி முதன் மந்திரி எனக்குக் கட்டளையிட்டார்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“திருமலை! உன் குருநாதர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? பாடலிபுரத்துச் சாணக்கியரைப் போல் இவர் அன்பில் சாணக்கியர் என்று தன்னை எண்ணிக் கொண்டிருக்கிறாரா? என் உற்றார் உறவினரோடு நான் சண்டை போடவேண்டும் என்கிறாரா?” என்று இளவரசர் ஆத்திரமாய்க் கேட்டார்.
“இல்லை! ஐயா! அநிருத்தர் அவ்விதம் சொல்லவில்லை. ஆனால் சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்கிறவர்களை, சாம்ராஜ்யத்துக்குத் துரோகம் செய்ய முயற்சி தொடங்கியிருப்பவர்களை – சமயம் பார்த்துத் தண்டிக்க வேண்டும் என்கிறார். அதற்கு உதவி புரிவது தங்கள் கடமையல்லவா?” என்றான் திருமலை.
“அதற்கு நான் எப்படி அதிகாரியாவேன்? சதி நடப்பது உண்மையானால், அதற்குத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது சக்கரவர்த்தியல்லவா? என் தந்தையின் கட்டளையின்றி நான் எப்படி இந்தக் காரியத்தில் பிரவேசிக்க முடியும்!” என்றார் இளவரசர்.
வந்தியத்தேவன் இப்போது குறுக்கிட்டு “இளவரசே! தங்கள் தந்தை இப்போது சுவாதீனமாயில்லை! பழுவேட்டரையர்கள் அவரைச் சிறை வைத்திருப்பதுபோல் வைத்திருக்கிறார்கள். யாரும் நெருங்க முடியாதபடி அரண்மனைக்குள்ளே வைத்திருக்கிறார்கள். தங்கள் தமையனாரோ தஞ்சைக்கு வருவதில்லையென்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலைமையில் சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பது தங்கள் பொறுப்பல்லவா? உடனே பழையாறைக்கு வரவேண்டியது தங்கள் கடமை அல்லவா?” என்றான்.
“இளவரசர் பழையாறைக்கு வரவேண்டிய அவசியம் என்ன? அதுதான் எனக்குத் தெரியவில்லை!’ என்றான் ஆழ்வார்க்கடியான்.
இளவரசர் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, “மண்ணாசை மிகப் பொல்லாதது. இராஜ்யத்தின் பேரில் உள்ள ஆசையினால் இவ்வுலகில் என்னென்ன பயங்கரமான பாவங்கள் நடந்திருக்கின்றன? இன்று சிம்மகிரிக் கோட்டைக்குப் போயிருந்தேன் அல்லவா? அந்தக் கோட்டையின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.
“நான் கேட்டதில்லை” என்றான் வந்தியத்தேவன்.
“சொல்கிறேன், கேளுங்கள்! சுமார் ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு இந்த இலங்கைத் தீவைத் தாதுசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் காசியபன்; இன்னொருவன் மகல்லன். தாதுசேனனின் சேனாபதியும், காசியபனும் சேர்ந்து சதியாலோசனை செய்தார்கள். காசியபன் தன் சொந்தத் தந்தையைச் சிறையில் அடைத்துவிட்டுச் சிங்காதனம் ஏறினான். மகல்லன் கடல் கடந்து தமிழ்நாட்டுக்கு ஓடிப்போனான். சில நாளைக்குப் பிறகு தாதுசேனனின் சிறையைச் சுற்றிச் சுவர் எழுப்பி அடைத்து அவனைக் கொன்றுவிட்டார்கள். இந்தக் கொடூர பாவத்தைச் செய்த காசியபனுக்குத் தன் சகோதரன் மகல்லன் திரும்பி வந்து பழிக்குப் பழி வாங்குவான் என்ற பீதி உண்டாகி விட்டது. அதற்காக இந்த சிம்மகிரிக் குன்றுக்கு வந்தான். செங்குத்தான குன்றாகையால் பகைவர்கள் அதன் பேரில் ஏறிக் கோட்டையைப் பிடிப்பது இயலாத காரியம் என்று நினைத்தான். இம்மாதிரி பதினெட்டு வருஷம் ஒளிந்து வாழ்ந்திருந்தான். கடைசியில் ஒரு நாள் மகல்லன் தன் உதவிக்குப் பாண்டிய ராஜாவின் சைன்யத்தையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். சிம்மகிரிக் கோட்டையை அணுகினான். அச்சமயத்தில் காசியபனின் புத்தி பேதலித்து விட்டது. அத்தனை வருஷம் கோட்டையில் ஒளிந்திருந்தவன் அசட்டுத் தைரியத்துடன் வெளிவந்து போராடி இறந்தான்! அப்பேர்ப்பட்ட பாதகன், – தந்தையைக் கொன்ற பாவி, – கட்டிய, கோட்டையில் சில அற்புதமான வர்ணச் சித்திரங்கள் இருக்கின்றன. இன்று சீன யாத்திரீகளுடன் போயிருந்த போது பார்த்தேன். அடடா! அந்தச் சித்திரங்களின் அழகை என்னவென்று சொல்வது? பல நூறு வருஷங்களுக்கு முன்பு எழுதியவை. ஆனால் இன்றைக்கும் சிறிதும் வர்ணம் மங்காமல் புத்தம் புதிய சித்திரங்கள் போல் இருக்கின்றன…”
“ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“தயக்கம் ஏன்? தாராளமாய்க் கேட்கலாம்.”
“சிம்மகிரிக் கோட்டை இன்னும் பகைவர் படைகளின் வசத்திலே தானே இருக்கிறது?”
“ஆமாம்; அதைக் கைப்பற்றும் முயற்சியை இப்போது தொடங்கும் உத்தேசம் எனக்கு இல்லை. அதனால் வீணான உயிர்ச்சேதம் ஏற்படும்.”
“அதைப்பற்றி நான் கேட்கவில்லை. ஐயா! பகைவர் கோட்டைக்குள் தாங்கள் பிரவேசித்தது உசிதமா என்று கேட்டேன். சீன யாத்திரீகர்களுக்கு யானைப் பாகனாகத் தாங்கள் போக வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? யானையின் கழுத்தில் தங்களைப் பார்த்ததும் என் கண்களை நம்புவதா இல்லையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. தங்களுடைய புருவத்தின் நெரிப்பைப் பார்த்துத்தான் சந்தேகம் தெளிந்து நிச்சயப்படுத்திக் கொண்டேன். இப்படித் தங்கள் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா?”
“என் உயிர் மட்டும் அவ்வளவு உயர்ந்ததா, திருமலை! எத்தனை சோழ நாட்டு வீரர்கள் இந்த இலங்கையில் வந்து உயிரை விட்டிருக்கிறார்கள்?…”
“அவர்கள் போர்க்களத்தில் உயிர் துறந்தார்கள். தாங்கள் அநாவசியமாகத் தங்களை அபாயத்துக்கு உள்ளாக்கிக் கொண்டீர்கள்!”
“அநாவசியமில்லை; இரண்டு காரணங்கள் உண்டு. சிம்மகிரிச் சித்திரங்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை எனக்கு வெகு நாளாக இருந்தது. அந்த ஆசையை இன்று பூர்த்தி செய்து கொண்டேன்…”
“இளவரசே! இன்னொரு காரணம்?”
“பார்த்திபப் பல்லவர் திரிகோண மலையில் வந்து இறங்கினவுடனே, எனக்குச் செய்தி கிடைத்தது. அவரை இன்று பார்க்க விரும்பவில்லை. ஏனெனில்…”
“ஏனெனில்…?”
“மாதோட்டத்துக்கு முதன் மந்திரி வந்திருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அவரிடமிருந்து செய்திவரும் என்று எதிர்பார்த்தேன். இரண்டு மூத்தவர்களிடமிருந்து செய்தி வந்தால், முதலில் கிடைக்கிற செய்தியின்படிதானே நான் நடந்தாக வேண்டும்?”
வந்தியத்தேவன்,”ஆகா! அப்படிச் சொல்லுங்கள், என் கட்சி தானே ஜயித்தது?” என்று குதூகலித்தான்.
“அரசே! இவன் தங்களைத் தந்திரத்தினால் ஏமாற்றி விட்டான்…”
“அவன் ஏமாற்றவில்லை; நானாகவே ஏமாந்தேன். உன்னை அழைத்து வருவதற்கு வைத்திருந்த வீரனை இவன் குதிரை மேலிருந்து தள்ளிவிட்டு அக்குதிரை மீது தான் ஏறிக்கொண்டு வந்ததை நான் கவனித்துவிட்டேன். இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினேன்…”
“நல்ல பாடம் கற்பித்தீர்கள்! ஒவ்வொரு பாடமும் ஒரு மணங்கு நிறையிருக்கும். இப்போது நினைத்தாலும் என் முதுகும் மார்பும் வலிக்கின்றன! ஓலை கொண்டுவந்த தூதனை இப்படித்தானா நடத்துவது? போனால் போகட்டும்; தாங்கள் மட்டும் என்னுடன் பழையாறைக்கு வருவதாயிருந்தால்…”
“எனக்கு ஒரு பழைய பாடல் ஞாபகம் வருகிறது! திருமலை! என் முன்னோர்களில் பெருங்கிள்ளி வளவன் என்று ஒரு மன்னர் இருந்தார். அவரிடம் ஓர் அதிசயமான யானை இருந்தது. அதன் ஒரு கால் காஞ்சியில் இருக்கும்; இன்னொரு காலினால் தஞ்சையை மிதிக்கும்; மற்றொரு கால் இந்த ஈழ நாட்டை மிதிக்கும் நாலாவது கால் உறையூரில் ஊன்றி நிலைத்திருக்கும்.
“கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்துநீர்த் தண்தஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம்
கோழியர் கோக் கிள்ளி களிறு!”
என்று அற்புதமான கற்பனையுடன் ஒரு புலவர் பாடியிருக்கிறார். இந்த இலங்கையில் மந்தை மந்தையாக ஆயிரம் ஆயிரம் யானைகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? புலவருடைய கற்பனை யானையைப்போல் ஒரு யானை இருந்தால் நானும் ஒரே சமயத்தில் காஞ்சியிலும், பழையாறையிலும், மதுரையிலும், இலங்கையிலும் இருக்கலாம் அல்லவா?”
புலவரின் யானையைப் பற்றிக் கேட்டதும் வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “அப்படிப்பட்ட யானைதான் இல்லையே? தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று திருமலை கேட்டான்.
“சந்தேகம் என்ன? பழையாறைக்கு வருவதென்றுதான் முடிவாகி விட்டதே?” என்றான் வந்தியத்தேவன்.
“உங்கள் சண்டையைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாளை அநுராதபுரம் போவோம். அங்கே பார்த்திப பல்லவரை நான் எப்படியும் சந்தித்தாக வேண்டும். அவர் சொல்வதையும் கேட்டுவிட்டுத்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்றார் இளவரசர்.
33. சிலை சொன்ன செய்தி
மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்குள் அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் ஆகிய மூவரும் அநுராதபுரத்துக்குப் புறப்பட்டார்கள். சிறிது தூரம் காட்டுப் பாதையில் வந்த பிறகு இராஜபாட்டையை அடைந்தார்கள். வேறு வீரர்கள் யாரையும் இளவரசர் தம்முடன் மெய்க்காவலுக்கு அழைத்து வராதது வந்தியத்தேவனுக்கு வியப்பை அளித்தது. ஆனால் அன்றைய பிரயாணத்தில் அவனுக்கிருந்த உற்சாகத்தைப் போல் அதற்குமுன் என்றுமிருந்ததில்லை. காலை நேரத்தில் இரு புறமும் மரங்களடர்ந்த அந்த இராஜபாட்டையில் பிரயாணம் செய்வதே ஓர் ஆனந்த அனுபவம். பழையாறை அரசிளங்குமரி தன்னிடம் ஒப்புவித்திருந்த வேலையைச் செய்து முடித்துவிட்டோ ம் என்ற பெருமித உணர்ச்சி அவன் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. அது மட்டுமா? பல வருஷங்களாக அவன் இதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. சோழவள நாட்டின் செல்லப்பிள்ளையைப் பார்த்தாகிவிட்டது. நாடு நகரமெல்லாம் மக்கள் எந்த வீர இளைஞரின் வீரப் பிரதாபங்களையும், குணாதிசயங்களையும் பாடிப் புகழ்ந்து கொண்டிருந்தார்களோ; அந்த அரசிளங்குமாரரைச் சந்தித்தாகி விட்டது. அந்தச் சந்திப்புதான் எவ்வளவு அதிசயமான சந்திப்பு? அருள்மொழிவர்மர் ஒரு விசித்திரமான மனிதர் என்று, தான் கேள்விப்பட்டிருந்தது உண்மைதான்! திடீரென்று குதிரையைத் திருப்பித் தன்னைத் தாக்கி திக்குமுக்காடச் செய்துவிட்டாரே? அவர் சேனைக்குத் தலைமை வகித்துச் செல்லுமிடங்களிலெல்லாம் வெற்றிமேல் வெற்றியாக இருந்து வருவதின் இரகசியமும் இதுதான் போலும்! பகைவர்கள் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் தாக்குவதே இவருடைய போர்முறை போலும்? ஆனால் இவரது இடைவிடா வெற்றியின் இரகசியம் இது மட்டுந்தானா? சேனா வீரர்களுடன் எவ்வளவு பவ்யமாக இவர் பழகுகிறார்? எப்படி அவர்களைத் தம் அன்புக்கு வசப்படுத்தி வைத்திருக்கிறார்!
போர் வீரர்களை மட்டுந்தானா? தாம் வெற்றிகொண்ட நாட்டின் மக்களையும் எப்படி வசீகரப்படுத்தி வைத்திருக்கிறார்? சமீபத்தில் மாபெரும் போர் நடந்த நாடு என்று இதைச் சொல்ல முடியுமா? சாலைகளில் மக்கள் எவ்வளவு உல்லாசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்! இரு பக்கங்களிலுமுள்ள கிராமங்களில் ஜனங்கள் எப்படி நிர்ப்பயமாகவும் கவலையின்றியும் தத்தம் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்? மக்களின் முகங்களில் பீதியின் அறிகுறியோ துயரத்தின் சின்னமோ சிறிதும் காணப்படவில்லையே? கலகலவென்று பெண்களும் குழந்தைகளும் சிரிக்கும் சப்தம்கூட அடிக்கடி காதில் விழுகிறதே! இது என்ன விந்தை! இவர் எத்தகைய விந்தையான மனிதர்! வெற்றி கொண்ட நாட்டு மக்களிடமிருந்து உணவுப் பொருளைக் கைப்பற்றக்கூடாது என்று இளவரசர் பிடிவாதம் பிடித்துச் சோழ நாட்டிலிருந்து சைன்யத்துக்கு உணவுப் பொருள் வரவேண்டுமென்று வற்புறுத்தியதும், அதன் காரணமாகப் பழுவேட்டரையர்களுக்கு ஏற்பட்ட கோபமும், அவர்கள் சுந்தர சோழரிடம் புகார் கூறியதும், இவையெல்லாம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தன. அன்றியும் ஆதித்த கரிகாலர் கையாளும் கொடூரமான போர் முறையையும், அருள்மொழிவர்மரின் தயாளம் பொருந்திய தர்ம யுத்த முறையையும் அவன் தன் மனத்திற்குள்ளே ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான். சில நாளைக்கு முன்பு வரையில் தன்னுடைய எஜமானராயிருந்த ஆதித்த கரிகாலரைப்பற்றி எவ்விதத்திலும் குறைவாக எண்ணுவது அவனுக்கே பிடிக்கவில்லை. ஆயினும் அந்த அநுராதபுரத்து இராஜபாட்டையில் இருபுறமும் வசித்த கிராம ஜனங்களின் மலர்ந்த முகங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவன் மேற்கண்டவாறு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அம்மம்மா! ஆதித்த கரிகாலர் யுத்தம் செய்து திரும்பிய நாடுகளில் இத்தகைய காட்சிகளைக் காணமுடியுமா? எங்கெங்கும் ஒரே ஓலக்குரல் அல்லவா கேட்டுக் கொண்டிருக்கும்?
இத்தகைய அபூர்வ குணாதிசயம் படைத்த இளவரசருடன் எத்தனையோ விஷயங்களைப் பற்றி பேச வேண்டும், எவ்வளவோ காரியங்களைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று வந்தியத்தேவனுடைய உள்ளம் துடிதுடித்தது. ஆனால் புரவிகளின் பேரில் ஆரோகணித்து விரைவாகச் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் பேசுவதற்கும் இடம் எங்கே? ஆம் பேசுவதற்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் மட்டும் கிடைத்தது.
அநுராதபுரத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிக் கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் பெரியதொரு புத்த பகவானின் சிலை நிற்பதை வந்தியத்தேவன் கண்டான். இம்மாதிரி சிலைகள் இலங்கையில் பற்பல இடங்களிலும் இருந்தபடியால் அதைப்பற்றி வந்தியத்தேவன் அதிகக் கவனம் செலுத்தவில்லை. ஆனால் பொன்னியின் செல்வர் அச்சிலையின் அருகில் குதிரையைச் சடாரென்று இழுத்துப் பிடித்து நிறுத்தியதும் இவனும் நிற்கவேண்டியதாயிற்று. சற்று முன்னாலேயே போய்க் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானும் குதிரையை நிறுத்தி இவர்கள் பக்கம் திரும்பினான்! பொன்னியின் செல்வர் சற்றுநேரம் அந்தப் புத்த பகவானுடைய கம்பீரமான சிலையைக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அடடா! என்ன அற்புதக்கலை!” என்றார்.
“எனக்கு ஒரு அற்புதமும் தெரியவில்லை. இந்த நாட்டில் எங்கே பார்த்தாலும் இத்தகைய பிரம்மாண்டமான புத்தர் சிலைகளை வைத்திருக்கிறார்கள். எதற்காகவோ தெரியவில்லை?” என்றான் வந்தியத்தேவன்.
இளவரசர் வந்தியத்தேவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். “மனத்தில் உள்ளபடி பேசுகிறீர்; அதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
“இளவரசே! வல்லவரையர் இன்றைக்குத்தான் உண்மை பேசுவதென்கிற வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்!” என்றான் திருமலை.
“வைஷ்ணவரே! எல்லாம் சகவாச தோஷந்தான். வீர நாராயணபுரத்தில் உம்மைப் பார்த்தது முதல் என் நாவில் கற்பனா சக்தி தாண்டவமாடி வந்தது. இளவரசரைப் பார்த்ததிலிருந்து உண்மை பேசும் வழக்கம் வந்துவிட்டது!” என்றான் வந்தியத்தேவன்.
அவர்களுடைய சொற்போரை இளவரசர் கவனிக்கவில்லை. சிலையின் தோற்றத்தில் ஆழ்ந்திருந்தார்.
“உலகத்திலேயே சிற்பக்கலையின் அற்புதம் பூரணமாக விளங்கும் வடிவங்கள் இரண்டுதான். ஒன்று நடராஜர்; இன்னொன்று புத்தர்” என்றார்.
“ஆனால் நடராஜ வடிவங்களை இம்மாதிரி பிரம்மாண்ட வடிவங்களாக நம் நாட்டில் செய்வதில்லையே?”
“இலங்கையில் முற்காலத்தில் இருந்த மன்னர்களில் சிலர் மகா புருஷர்கள். அவர்கள் ஆண்ட ராஜ்யம் சிறியது ஆனால் அவர்களுடைய இருதயம் பெரியது; அவர்களுடைய பக்தி மிகப்பெரியது. புத்த பகவானிடம் அவர்களுடைய பக்தியை இப்படிப் பெரிய வடிவங்களை அமைத்துக் காட்டினார்கள். புத்த சமயத்தில் அவர்களுடைய பக்தியைப் பெரிய பெரிய ஸ்தூபங்களை அமைத்துக் காட்டினார்கள். இந்த நாட்டில் உள்ள புத்தர் சிலைகளையும் விஹாரங்களையும் ஸ்தூபங்களையும் பார்த்துவிட்டு நம் சோழ நாட்டிலுள்ள சின்னஞ்சிறு சிவன் கோவில்களை நினைத்தால் எனக்கு அவமானமாயிருக்கிறது!” என்றார் பொன்னியின் செல்வர்.
இவ்விதம் சொல்லிவிட்டுக் குதிரையிலிருந்து இறங்கி இளவரசர் புத்தர் சிலையண்டைச் சென்றார். சிலையின் பத்ம பாதங்களையும், அந்தப் பாதங்களை அலங்கரித்த தாமரை மொட்டுக்களையும் சிறிது நேரம் கவனமாகப் பார்த்தார். பின்னர் புத்தர் சிலையின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத் திரும்பி வந்து பழையபடி குதிரையின் மீது ஏறினார்.
குதிரைகள் சற்று மெதுவாகவே சென்றன. “ஏதேது? இளவரசர் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவார் போலிருக்கிறதே?” என்று வந்தியத்தேவன் திருமலையிடம் சொன்னது இளவரசர் காதில் விழுந்தது.
அவர்கள் இருவரையும் பொன்னியின் செல்வர் பார்த்து, “புத்த பகவானிடம் என்னுடைய பக்தி காரணார்த்தமானது. அந்தப் புத்தர் சிலையின் பத்ம பாதங்கள் எனக்கு ஒரு முக்கியமான செய்தியை அறிவித்தன!” என்றார்.
“ஆகா! எங்கள் காதில் ஒன்றும் விழவில்லையே?”
“மௌன பாஷையில் அச்செய்தி எனக்குக் கிடைத்தது.”
“அது என்ன செய்தி? எங்களுக்குத் தெரியலாமா?”
“இன்றிரவு பன்னிரண்டு நாழிகைக்கு அநுராதபுரத்தில் சிம்மதாரைத் தடாகத்துக்கு அருகில் நான் வரவேண்டுமென்று பகவானுடைய பாதமலர்கள் எனக்கு அறிவித்தன!” என்றார் பொன்னியின் செல்வர்.
34. அநுராதபுரம்
சூரியன் அஸ்தமனமாகும் சமயத்தில் அவர்கள் அநுராதபுரத்தை அணுகினார்கள். இலங்கைத் தீவின் தொன்மை மிக்க அத்தலைநகரத்தைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தபோதே வந்தியத்தேவன் அதிசயக் கடலில் மூழ்கிப் பேசும் சக்தியை இழந்தான். அநுராதபுரத்தைப் பற்றி அவன் பலர் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு. அந்நகரைப் பற்றி அவர்கள் செய்த வர்ணனைகளிலிருந்து அதன் தோற்றம் இப்படி இருக்குமென்று அவன் கற்பனை செய்து பார்த்ததும் உண்டு. ஆனால் அவனுடைய கற்பனைகளையெல்லாம் அந்த மாநகரம் விஞ்சியதாயிருந்தது. அம்மம்மா! இதன் மதில்சுவர் தான் எத்தனை பெரியது? எப்படி இருபுறமும் நீண்டு கொண்டே செல்கிறது? எந்த இடத்திலே அச்சுவர் வளைந்து திரும்புகிறது என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லையே? மதில் சுவருக்கு உள்ளே எத்தனை எத்தனை கோபுரங்களும் ஸ்தூபங்களும் மண்டபச் சிகரங்களும் தலை தூக்கிக் கம்பீரமாக நிற்கின்றன! ஒன்றுக்கொன்று அவை எவ்வளவு தூரத்தில் நிற்கின்றன! இவ்வளவும் ஒரே நகரத்துக்குள்ளே, ஒரே மதில் சுவருக்குள்ளே அடங்கியிருக்க முடியுமா? காஞ்சி, பழையாறை, தஞ்சை முதலிய நகரங்களெல்லாம் இந்த மாநகரத்தின் முன்னே எம்மாத்திரம்? அசோக சக்கரவர்த்தியின் காலத்தில் பாடலிபுத்திரமும், விக்ரமாதித்தனின் ஆட்சியில் உஜ்ஜயினி நகரமும், கரிகால்வளவன் காலத்தில் காவேரிப்பட்டினமும் ஒருகால் இந்த நகரத்தைப் போல் இருந்திருக்கலாம்! தற்காலத்தில் உள்ள வேறு எந்தப் பட்டணத்தையும் இதற்கு இணை சொல்ல முடியாது!…
மதில் சுவரும் அதன் பிரதான வாசலும் நெருங்க நெருங்க, நகரை நோக்கிச் செல்வோரின் கூட்டம் அதிகமாகி வந்தது. தமிழர்களும், சிங்களவர்களும், பிக்ஷுக்களும் இல்லறத்தாரும், ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமிகளும் பெருங்கூட்டமாகச் சென்றார்கள். எல்லாரும் தேர் திருவிழாவுக்குச் செல்கிறவர்களைப் போல் குதூகலமாகச் சென்றார்கள். அவர்களில் ஒரு சிலர் நமது பிரயாணிகள் மூவரையும் கவனிக்கவும், சுட்டிக் காட்டவும் தொடங்கினார்கள். இதைக் கண்டதும் பொன்னியின் செல்வர் மற்ற இருவருக்கும் சமிக்ஞை செய்துவிட்டு, இராஜபாட்டையிலிருந்து விலகிக் குறுக்கு வழியில் சென்றார். மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய செய் குன்றத்தின் அடிவாரத்தில் வந்து குதிரையை நிறுத்தினார். பின்தொடர்ந்து வந்த இருவரையும் பார்த்து, “குதிரைகள் வெகு தூரம் வந்திருக்கின்றன. சற்று நேரம் இளைப்பாறட்டும். நன்றாக இருட்டிய பிறகு நகருக்குள் போவோம்!” என்றார்.
குதிரைகள் மீதிருந்து மூவரும் இறங்கி ஒரு கற்பாறை மீது உட்கார்ந்தார்கள். “இவ்வளவு கூட்டமாக ஜனங்கள் போகிறார்களே? இன்றைக்கு இந்த நகரத்திலும் ஏதாவது உற்சவமோ?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“இந்த நாட்டில் நடக்கும் திருவிழாக்களுக்குள்ளே பெரிய திருவிழா இன்றைக்குத்தான்!” என்றார் இளவரசர்.
“ஈழ நாட்டில் ஏதோ யுத்தம் நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். இங்கே வந்து பார்த்தால் ஒரே உற்சவமாயிருக்கிறதே” என்றான் வந்தியத்தேவன்.
“பழையாறையில் ஸ்ரீ ஜயந்தி உற்சவம் நடந்தது என்று நீர் சொல்லவில்லையா?”
“ஆமாம், ஆனால் பழையாறை சோழ நாட்டில் இருக்கிறது…”
“அநுராதபுரம் ஈழ நாட்டில் இருக்கிறது. அதனால் என்ன? சோழ நாட்டிலும் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் ஆட்சிதான்; ஈழநாட்டிலும் அவருடைய செங்கோல் ஆட்சிதான்…!”
“ஆனால் இந்த நாட்டில் இன்னும் பகைவர்கள் இருக்கிறார்களாமே?…”
“பகைவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். அதற்கு இங்குள்ள ஜனங்கள் என்ன செய்வார்கள்? போர்க்களத்தில போர் நடக்க வேண்டியதுதான்; ஊர்ப்புறத்தில் உற்சவமும் நடக்க வேண்டியதுதான்!.. திருமலை! நீ என்ன சொல்கிறாய்?” என்றார் இளவரசர்.
“இங்கே வெளிப் பகைவர்கள் இருந்தால் அங்கே உட்பகைவர்கள் இருக்கிறார்கள். வெளிப்பகைவர்களைக் காட்டிலும் உட்பகைவர்களே அபாயமானவர்கள். ஆகையால் இளவரசர் இந்த நாட்டிலேயே உற்சவமும், யுத்தமும் நடத்திக் கொண்டிருப்பது நல்லது என்று அடியேன் சொல்லுகிறேன்” என்றான் ஆழ்வார்க்கடியான்.
“அழகாய்த்தானிருக்கிறது. வெளிப்பகைவர்களை விட உட்பகைவர்களே அபாயகரமானவர்கள் என்றால், அங்கே தானே நம் இளவரசர் இருக்கவேண்டும்? அபாயம் அதிக உள்ள இடமே வீர புருஷர்கள் இருக்கவேண்டிய இடம் அல்லவா?” என்றான் வந்தியத்தேவன்.
“வீரம் என்றால், அசட்டுத்தனமாகச் சதிகாரர்களிடமும், கொலைகாரர்களிடமும் போய் அகப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? வீராதி வீரனாகிய நீ அங்கே போய் அகப்பட்டுக் கொள்வதுதானே? எதற்காகத் தப்பி ஓடி வந்தாய்?” என்றான் திருமலை.
“போதும்! போதும்! நீங்கள் ஒரு யுத்தம் இங்கே ஆரம்பித்து விடவேண்டாம்!” என்று அருள்மொழிவர்மர் சமாதானம் செய்வித்தார்.
இருட்டிய பிறகு மூன்று பேரும் அந்நகருக்குள் பிரவேசித்தார்கள். அன்று யாத்திரீகள் யாரையுமே கோட்டை வாசலில் தடுத்து நிறுத்தவில்லை. எல்லாரையும் தங்குதடையின்றி விட்டுக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் சும்மா நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நம் கதாபுருஷர்கள் மூவரும் நகருக்குள் பிரவேசித்துச் சென்றார்கள்.
அநுராதபுரத்தின் வீதிகளிலும் ஜனக்கூட்டம் அளவில்லாமலிருந்தது. ‘சாது! சாது!’ என்ற கோஷம் வானை அளாவியது. ஆங்காங்குப் பல மாடமாளிகைகளும், விஹாரங்களும் இடிந்து கிடப்பதை வந்தியத்தேவன் கண்டான். இடிந்துபோன பல கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். புதுப்பிக்கும் திருப்பணி இளவரசர் கட்டளையின் பேரிலேதான் நடந்திருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். இப்படியெல்லாம் இவர் செய்து வருவதின் நோக்கம்தான் என்ன? ஜயிக்கப்பட்ட நாட்டின் மக்களுக்கு இவர் ஏன் இவ்வளவு சலுகை காட்டுகிறார்? ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்துடன் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள் இந்தச் சிங்கள அரசர்கள். இத்தகைய நெடுங்காலப் பகைவர்களின் தலைநகரத்தை அழித்துக் கொளுத்தித் தரைமட்டமாக்குவதற்கு மாறாக, இடிந்து போன கட்டிடங்களைப் புதுப்பித்துத் திருவிழாக்கள் நடத்த இவர் அனுமதித்து வருகிறாரே? இது என்ன அதிசயம்! இதில் ஏதோ மர்மம் இருக்கத்தான் வேண்டும்; அது என்னவாயிருக்கும்? வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஒரு விந்தையான எண்ணம் உதித்தது. ஆம், ஆம்! அப்படித்தான் இருக்கவேண்டும். சோழ நாட்டில் இவருக்கு உரிமை எதுவும் இல்லை. பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் இருக்கிறார். அவருடன் போட்டியிட மதுராந்தகத்தேவர் இருக்கிறார். ஆகையால் இந்த மாஇலங்கைத் தீவில் இவர் ஒரு தனி ராஜ்யத்தை ஸ்தாபித்துச் சுதந்திர மன்னராக விரும்புகிறார் போலும்! யார் கண்டது? இவருடைய விருப்பம் நிறைவேறினாலும் நிறைவேறலாம்! குடந்தை சோதிடர் சொன்னார் அல்லவா? “அருள்மொழிவர்மர் துருவ நட்சத்திரம் போன்றவர்! அவரை நம்பினவர்களுக்கு ஒரு குறையும் இல்லை!” என்று அத்தகைய வீர புருஷரிடம் தான் வந்து சேர்ந்து விட்டதை நினைத்து அவனுடைய உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது.
வெளிப்புறங்கள் இடிந்து இருளடைந்திருந்த ஒரு பழைய மாளிகையின் வாசலில் வந்து அவர்கள் நின்றார்கள். குதிரைகளின் மீதிருந்து இறங்கினார்கள். அந்த இடம் முக்கியமான வீதிகளிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்தது. ஆகையால் அங்கே ஜனக்கூட்டம் இல்லை. இளவரசர் மூன்று தடவை கையைத் தட்டினார். உடனே இந்திர ஜாலத்தினால் நடந்தது போல் அந்த மாளிகையின் ஒரு பக்கத்தில் கதவு திறந்து வழி உண்டாயிற்று. ஆட்கள் யாருமே இருந்ததாகத் தெரியவில்லை. இளவரசர் இருட்டிலேயே நுழைந்து மேலே சென்றார். வந்தியத்தேவன் பின்னால் திரும்பிக் குதிரைகளின் கதி என்னவென்று ஆவலுடன் பார்த்தான். இளவரசர், “குதிரைகளுக்கு வழி தெரியும்!” என்று கூறி வந்தியத்தேவனைக் கையைப்பிடித்து இழுத்துச் சென்றார். சற்றுத் தூரம் இருளிலேயே நடந்தார்கள். பிறகு ‘மினுக் மினுக்’கென்று வெளிச்சம் தெரிந்தது. பின்னர் பிரகாசமான ஒளி தென்பட்டது. அது ஒரு பழையகாலத்து அரண்மனையின் உட்புறம் என்று வந்தியத்தேவன் கண்டான்.
“இங்கே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். மகாசேன சக்கரவர்த்தியின் அந்தப்புரம் இது. திடீரென்று சக்கரவர்த்தி விஜயம் செய்து நம்மைத் துரத்தப் பார்த்தாலும் பார்ப்பார்!” என்றார் இளவரசர்.
“மகாசேனர் என்பவர் யார்?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“மகாசேனர் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இலங்கா ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி. அவர் பொது ஜனங்களுக்குப் பல நன்மைகளைச் செய்தார். ஆகையால் அவருடைய ஆவி இந்த நகரத்தில் இன்னமும் உலாவிக் கொண்டிருப்பதாக ஜனங்கள் நினைக்கிறார்கள். அவருடைய ஆவியானது துணியில்லாமல் குளிரில் கஷ்டப்படப் போகிறதே என்று மரக் கிளைகளில் துணிகளைக் கட்டித் தொங்க விடுகிறார்கள்! இந்த அரண்மனையிலும் அவருக்குப் பிறகு யாரும் வசிப்பதில்லை. வெறுமனேதான் விட்டு வைத்திருக்கிறார்கள்!” என்றார் இளவரசர்.
இளவரசருக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் பணிவிடை செய்ய அங்கு ஏவலாளர் இருந்தார்கள். குளித்து உணவருந்திய பிறகு மூவரும் அந்த அரண்மனையின் உச்சி மாடத்துக்குச் சென்றார்கள். அவர்கள் இருந்த இடத்திலிருந்து சுற்றுப்புறமெங்கும் பார்க்கலாம். ஆனால் அவர்களைக் கீழேயுள்ளவர்கள் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் போய் அமர்ந்தார்கள்.
“ஐயா! பன்னிரண்டு நாழிகைக்கு எங்கேயோ வரும்படி புத்தர் சிலை, செய்தி சொன்னதாகக் கூறினீர்களே?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“இன்னும் நேரமிருக்கிறது. சந்திரன் இப்போதுதானே உதயமாயிருக்கிறான்? அதோ அந்தத் ‘தாகபா’வின் உச்சிக்கு நேரே சந்திரன் வந்ததும் புறப்பட்டுவிடுவோம்!” என்றார் இளவரசர்.
அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை ‘தாது கர்ப்பம்’ என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் ‘தாகபா’ ஆயிற்று.
“எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“முதன் முதலில், புத்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஜனங்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வளவு பெரிய சின்னங்களை நிர்மாணித்தார்கள். பின்னால் வந்த அரசர்களோ தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதைக் காட்டுவதற்காக முன்னால் கட்டியிருந்த ஸ்தூபங்களைக் காட்டிலும் பெரிதாகக் கட்டினார்கள்!” என்றார் இளவரசர்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சமுத்திரத்தின் கொந்தளிப்பைப் போன்ற பேரிரைச்சல் ஒன்று கேட்டது. வந்தியத்தேவன் இரைச்சல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு பெரிய சேனா சமுத்திரத்தைப் போன்ற பெருங்கூட்டம், – வீதிகளில் முடிவில்லாது நீண்டு போய்க் கொண்டிருந்த ஜனக் கூட்டம் வருவது தெரிந்தது. அந்த ஜன சமுத்திரத்தின் நடுவே கரிய பெரிய திமிங்கலங்கள் போல் நூற்றுக்கணக்கில் யானைகள் காணப்பட்டன. கடல் நீரில் பிரதிபலிக்கும் விண்மீன்களைப் போல் ஆயிரம் ஆயிரம் தீவர்த்திகள் ஒளி வீசின. ஜனங்களோ லட்சக்கணக்கில் இருந்தார்கள்.
வந்தியத்தேவன், “இது என்ன? பகைவர்களின் படை எடுப்பைப்போல் அல்லவா இருக்கிறது?” என்றான்.
“இல்லை, இல்லை! இதுதான் இந்த இலங்கை நாட்டிலேயே மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழா!” என்றார் இளவரசர்.
ஊர்வலம் நெருங்கி வரவர வந்தியத்தேவனுடைய வியப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த மாதிரி காட்சியை அவன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை.
முதலில் சுமார் முப்பது யானைகள் அணிவகுத்து வந்தன. அவ்வளவும் தங்க முகபடாங்களினால் அலங்கரிக்கப்பட்ட யானைகள். அவற்றில் நடுநாயகமாக வந்த யானை எல்லாவற்றிலும் கம்பீரமாக இருந்ததுடன், அலங்காரத்திலும் சிறந்து விளங்கியது. அதன் முதுகில் நவரத்தினங்கள் இழைத்த தங்கப் பெட்டி ஒன்று இருந்தது. அதன்மேல் ஒரு தங்கக் குடை கவிந்திருந்தது. நடுநாயகமான இந்த யானையைச் சுற்றியிருந்த யானைகளின் மீது புத்த பிக்ஷுக்கள் பலர் அமர்ந்து வெள்ளிப் பிடிபோட்ட வெண் சாமரங்களை வீசிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு இடையிடையே குத்து விளக்குகளையும், தீவர்த்திகளையும், இன்னும் பலவித வேலைப்பாடமைந்த தீவர்த்திகளையும், தீபங்களையும் ஏந்திக்கொண்டு பலர் வந்தார்கள். கரிய குன்றுகளை யொத்த யானைகளின் தங்க முகபடாங்களும் மற்ற ஆபரணங்களும் பிக்ஷுக்களின் கைகளில் இருந்த அந்த வெண் சாமரங்களும் பல தீபங்களின் ஒளியில் தகதகவென்று பிரகாசித்துக் கண்களைப் பறித்தன.
யானைகளுக்குப் பின்னால் ஒரு பெரும் ஜனக் கூட்டம். அந்தக் கூட்டத்தின் மத்தியில் சுமார் நூறு பேர் விசித்திரமான உடைகளையும், ஆபரணங்களையும் தரித்து நடனமாடிக் கொண்டு வந்தார்கள். அவர்களில் பலர் உடுக்கையைப் போன்ற வாத்தியங்களை தட்டிக்கொண்டு ஆடினார்கள். இன்னும் பலவகை வாத்தியங்களும் முழங்கின. அப்பப்பா! ஆட்டமாவது ஆட்டம்! கடம்பூர் அரண்மனையில் தேவராளனும், தேவராட்டியும் ஆடிய வெறியாட்டமெல்லாம் இதற்கு முன்னால் எங்கே நிற்கும்! சிற்சில சமயம் அந்த ஆட்டக்காரர்கள் விர்ரென்று வானில் எழும்பிச் சக்கராகாரமாக இரண்டு மூன்று தடவை சுழன்று விட்டுத் தரைக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் சுழன்றபோது அவர்கள் இடையில் குஞ்சம் குஞ்சமாகத் தொங்கிக் கொண்டிருந்த துணி மடிப்புகள் பூச்சக்கரக் குடைகளைப் போலச் சுழன்றன. இவ்விதம் நூறு பேர் சேர்ந்தாற்போல் எழும்பிச் சுழன்றுவிட்டுக் கீழே குதித்த காட்சியைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை தான்! இரண்டாயிரம் கண்களாவது குறைந்த பட்சம் வேண்டும். ஆனால் அத்தகைய சமயங்களில் எழுந்த வாத்திய முழக்கங்களைக் கேட்பதற்கோ இரண்டாயிரம் செவிகள் போதமாட்டா! நிச்சயமாக இரண்டு லட்சம் காதுகளேனும் வேண்டும். அப்படியாக உடுக்கைகள், துந்துபிகள், மத்தளங்கள், செப்புத் தாளங்கள், பறைகள், கொம்புகள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் கேட்போர் காதுகள் செவிடுபடச் செய்தன!
இந்த ஆட்டக்காரர்களும், அவர்களைச் சுற்றி நின்ற கூட்டமும் நகர்ந்ததும், மற்றும் முப்பது யானைகள் முன்போலவே ஜாஜ்வல்யமான ஆபரணங்களுடன் வந்தன. அவற்றில் நடுநாயகமான யானையின் மேலும் ஓர் அழகிய வேலைப்பாடு அமைந்த பெட்டி இருந்தது. அதன் மேல் தங்கக்குடை கவிந்திருந்தது. சுற்றி நின்ற யானை மீதிருந்தவர்கள் வெண் சாமரங்களை வீசினார்கள். இந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னாலும் ஆட்டக்காரர்கள் வந்தார்கள். இந்த ஆட்டக்காரர்களுக்கு நடுவில் ரதி, மன்மதன், முக்கண்ணையுடைய சிவபெருமான் வேடம் தரித்தவர்கள் நின்றார்கள். சுற்றி நின்றவர்கள் ஆடிக் குதித்தார்கள்.
“இது என்ன? சிவபெருமான் இங்கு எப்படி வந்தார்?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“கஜபாகு என்னும் இலங்கை அரசன் சிவபெருமானை அழைத்து வந்தான். அதற்குப் பிறகு இங்கேயே அவர் பிடிவாதமாக இருக்கிறார்!” என்றார் இளவரசர்.
“ஓ வீர வைஷ்ணவரே! பார்த்தீரா? யார் பெரிய தெய்வம் என்று இப்போது தெரிந்ததா?” என்று வந்தியத்தேவன் கேட்டு முடிவதற்குள் மற்றும் சில யானைகள் அதேமாதிரி அலங்காரங்களுடன் வந்துவிட்டன. அந்த யானைகளுக்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் கருடாழ்வாரைப் போல் மூக்கும் இறக்கைகளும் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த நடனக்காரர்கள் சுழன்றும், பறந்தும், குதித்தும் மூக்கை ஆட்டியும் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள்.
“அப்பனே! பார்த்தாயா? இங்கே கருட வாகனத்தில் எங்கள் திருமாலும் எழுந்தருளியிருக்கிறார்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.
மீண்டும் ஒரு யானைக் கூட்டம் வந்தது. அதற்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களோ கைகளில் வாள்களும், வேல்களும் ஏந்திப் பயங்கரமான யுத்த நடனம் செய்து கொண்டு வந்தார்கள். தாளத்துக்கும், ஆட்டத்துக்கும் இசைய அவர்கள் கையில் பிடித்த வாள்களும், வேல்களும் ஒன்றோடொன்று ‘டணார் டணார்’ என்று மோதிச் சப்தித்தன.
இவ்வளவுக்கும் கடைசியாக வந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னால் ஆட்டக்காரர்கள் அவ்வளவு பேரும் இரண்டு கையிலும் இரண்டு சிலம்புகளை வைத்துக் கொண்டு ஆடினார்கள். அவர்கள் ஆடும்போது அத்தனை சிலம்புகளும் சேர்ந்து ‘கலீர் கலீர்’ என்று சப்தித்தன. ஒரு சமயம் அவர்கள் நடனம் வெகு உக்கிரமாயிருந்தது. இன்னொரு சமயம் அமைதி பொருந்திய லளித நடனக் கலையாக மாறியது. இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டும், பலவித சப்த விசித்திரங்களைக் கேட்டும் பிரமித்து நின்ற வந்தியத்தேவனுக்கு இளவரசர் இந்த ஊர்வலத் திருவிழாவின் வரலாற்றையும் கருத்தையும் கூறினார்.
தமிழகத்து அரசர்களும் இலங்கை அரசர்களும் நட்புரிமை பாராட்டிய காலங்களும் உண்டு. கடல் சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் அவ்விதம் சிநேகமாயிருந்தார்கள். சேரன் செங்குட்டுவன் கண்ணகி என்னும் பத்தினித் தெய்வத்துக்கு விழா நடத்தியபோது கஜபாகு அங்கே சென்றிருந்தான். அந்நாட்டில் நடந்த மற்றத் திருவிழாக்களையும் கண்டு களித்தான். பின்னர் ஒருசமயம் சேரன் செங்குட்டுவன் இலங்கைக்கு வந்திருந்தபோது கஜபாகு மன்னன் விழா நடத்தினான். தமிழகத்தின் தெய்வமாகிய சிவபெருமான், திருமால், கார்த்திகேயர், பத்தினித் தெய்வம் ஆகிய நாலு தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் திருவிழா நடத்தினான். இந்த விழாக்களில் மக்கள் அடைந்த குதூகலத்தைக் கண்டு, பின்னர் ஆண்டுதோறும் அந்த விழாக்களை நடத்தத் தீர்மானித்தான். புத்தர் பெருமானுக்கு அவ்விழாவில் முதல் இடம் கொடுத்து மற்ற நாலு தெய்வங்களையும் பின்னால் வரச்செய்து விழா நடத்தினான். அன்று முதல் அந்த விழா இலங்கையில் நிலைத்து நின்று மிகப்பெரிய திருவிழாவாக ஆண்டு தோறும் விடாமல் நடந்து வருகிறது.
“ஆனால் தெய்வங்களை எங்கும் காணவில்லையே?” என்றான் வல்லவரையன்.
“ஒவ்வொரு யானைக் கூட்டத்திலும் நடுநாயகமாக வந்த யானை மீது வைத்திருந்த பெட்டியைப் பார்த்தீரா?”
“பார்த்தேன்! அந்தப் பெட்டிக்குள் தெய்வங்களைப் பூட்டி வைத்திருக்கிறார்களா, தப்பித்துக்கொண்டு தமிழகத்துக்குப் போய்விடக் கூடாது என்று?”
இதைக் கேட்ட பொன்னியின் செல்வர் நகைத்து விட்டு, “அப்படியில்லை; முதலில் வந்த யானை மீதிருந்த பெட்டிக்குள்ளே புத்த பெருமானுடைய பல் ஒன்றைப் பத்திரமாய்ப் பூட்டி வைத்திருக்கிறார்கள். புத்த சமயத்தார் இந்நாட்டில் போற்றிக் காப்பாற்றும் செல்வங்களுக்குள்ளே விலை மதிப்பற்ற செல்வம் அது. ஆகையால் அந்த மனிதப் பொருளை அழகிய பெட்டியில் வைத்து யானை மீது ஏற்றி ஊர்வலமாய் எடுத்துச் சென்றார்கள்!” என்றார்.
“பின்னால் வரும் பெட்டிகளுக்குள்ளே என்ன இருக்கிறது?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“சிவன், விஷ்ணு, முருகன், கண்ணகி ஆகியவர்களின் பற்கள் கிடைக்கவில்லை! ஆகையால் அவற்றுக்குப் பதிலாக அந்தந்தத் தேவாலயத்தின் தெய்வங்கள் அணியும் திரு ஆபரணங்களை அந்தப் பெட்டிகளில் பத்திரமாய் வைத்துக் கொண்டு போகிறார்கள்” என்று இளவரசர் கூறினார்.
வந்தியத்தேவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு,”ஆகா! தங்களுக்குப் பதிலாகப் பெரிய பழுவேட்டரையர் மட்டும் இங்கே படையெடுத்து வந்திருந்தால்?…” என்றான்.
அச்சமயத்தில் திருவிழா ஊர்வலத்தின் கடைசிப் பகுதி அந்த வீதி முடுக்கில் திரும்பிச் சென்றது. வாத்திய முழக்கம், ஜனங்களின் ஆரவாரம்… இவற்றின் ஓசை குறையத் தொடங்கியது.
“குறிப்பிட்ட நேரத்துக்கு இன்னும் ஒரு நாழிகைதான் மிச்சமிருக்கிறது. வாருங்கள், போகலாம்!” என்று இளவரசர் மேடையிலிருந்து இறங்கினார். மூவரும் கீழே வீதிக்கு வந்தார்கள். ஊர்வலம் சென்றதற்கு நேர் எதிர்ப்பக்கம் நோக்கி நடந்தார்கள். நகர மக்கள் அனைவரும் பெரஹராத் திருவிழாவில் ஈடுபட்டிருந்தபடியால் இவர்கள் போன வீதிகளில் ஜன நடமாட்டமே இல்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு விஸ்தாரமான ஏரியின் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த ஏரியில் தண்ணீர் ததும்பிக் கரையில் அலைமோதிக் கொண்டிருந்தது. சந்திர கிரணங்கள் அந்த அலைகளில் தவழ்ந்து விளையாடி வெள்ளி அலைகளாகச் செய்து கொண்டிருந்தன.
ஏரிக்கரையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்கள். அவ்விடத்தில் செண்பக மலர்களின் நறுமணம் பரவியிருந்தது. இன்னும் பலவகைப் புஷ்பச் செடிகளில் வெள்ளை மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துத் திகழ்ந்தன. ஆங்காங்கே சிறிய சிறிய செய்குன்றுகளும், படித்துறைத் தடாகங்களும் காணப்பட்டன. தடாகம் ஒன்றின் மேலே அமைந்திருந்த அத்தகைய சிங்க முகத்துவாரத்திலிருந்து நீர் அருவி பொழிந்து கொண்டிருந்தது. அந்தத் தடாகக் கரை அருகில் நெருங்கிச் சென்று மூவரும் நின்றார்கள்.
அநுராதபுரத்துக்கு வெளியே சாலை ஓரத்தில் நின்ற புத்தர் சிலையின் தோற்றம் வந்தியத்தேவனுடைய மனக் கண் முன்னால் வந்தது. ‘சிலையின் அடிப்பீடத்தில் வரிசையாக வைத்திருந்த தாமரை மொட்டுக்களை இளவரசர் எண்ணிப் பார்த்துப் பன்னிரண்டு என்று சொன்னார். அவை பன்னிரண்டு நாழிகையைக் குறித்தன போலும். தாமரை மலர்களாயிராமல் மொட்டுக்களாயிருந்த படியால் இரவைக் குறித்தன போலும்! அந்த மொட்டுக்களுக்கு அருகில் இருந்த சிங்க முகத்துக் கிண்டியும் வந்தியத்தேவனுடைய நினைவில் இருந்தது. அந்தப் பாத்திரம் இந்தச் சிங்க முக அருவி விழும் தடாகத்தை குறிப்பிட்டது போலும்!’
‘இதெல்லாம் சரிதான்! ஆனால் இங்கு எதற்காக, யார் இளவரசரை வரச் செய்திருக்கிறார்கள்? இதில் என்னென்ன அபாயங்கள் நேரிடுமோ, என்னமோ தெரியவில்லையே? ஆயுதம் ஒன்றும் கொண்டுவரக் கூடாது என்று இளவரசர் தடுத்ததின் கருத்து என்ன? ஒரு வேளை இங்கு ஏதேனும் காதல் நிகழ்ச்சி நடைபெறப் போகிறதோ?’
இந்த நினைவு வந்ததும் வந்தியத்தேவனுடைய உள்ளம் கொந்தளித்தது. அவனுடைய மனம் கடல் கடந்து பழையாறைக்குப் பாய்ந்து சென்றது. இளைய பிராட்டியும், வானதி தேவியும் அவன் மனக்கண் முன் வந்தார்கள்.
இளவரசரின் வாயைப் பிடுங்கிப் பார்க்கலாம் என்று வந்தியத்தேவன் எண்ணினான். “ஐயா! இந்த இடத்தைப் பார்த்தால் பழைய காலத்து அரண்மனை நந்தவனம் மாதிரி அல்லவா தோன்றுகிறது!” என்றான்.
“ஆம்; இது அரண்மனை நந்தவனம் இருந்த இடந்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நந்தவனத்தை யொட்டி துஷ்டகமனுவின் அரண்மனை இருந்தது. அதோ பார்! இன்னமும் இந்த அரண்மனையில் சில பகுதிகள் அழியாமல் இருக்கின்றன!” என்றார்.
வந்தியத்தேவன் அங்கே சற்றுத் தூரத்தில் தெரிந்த பழைய அரண்மனை மாடங்களைப் பார்த்துவிட்டு, “அந்தக் கட்டிடங்கள் அரண்மனை அந்தப்புரமாயிருந்திருக்கலாம். இந்தத் தடாகத்தில் அரசிளங் குமரிகள் இறங்கி ஜலக்கிரீடை செய்து மகிழ்ந்திருப்பார்கள்!” என்றான்.
“இந்த நந்தவனத்திலே நடந்த அதிசயமான சம்பவம் வேறு ஒன்று உண்டு. ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் நடந்தது. துஷ்டகமனு மன்னனின் புதல்வன் ஸாலி என்பவன் இங்கே ஒருநாள் உலாவிக் கொண்டிருந்தான். ஒரு பெண் இந்தத் தடாகத்தில் தண்ணீர் மொண்டு புஷ்பச் செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்தப் பெண்ணிடம் காதல் கொண்டான். அவள் ஒரு சண்டாளப் பெண் என்றும், அவள் பெயர் அசோகமாலா என்றும் அறிந்தான். சண்டாளப் பெண்ணாயிருந்தாலும் அவளையே மணந்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தான். ‘அப்படியானால் நீ சிம்மாசனம் ஏற முடியாது!’ என்று தந்தை கூறினார். ‘சிம்மாசனம் வேண்டாம்; எனக்கு அசோகமாலா தான் வேண்டும்’ என்று ஸாலிவாஹனன் பிடிவாதமாகக் கூறி விட்டான். இந்த உலகத்தில் இன்னொரு ராஜகுமாரனால் இப்படிக் கூற முடியும் என்று தோன்றுகிறதா?”
இவ்வாறு பொன்னியின் செல்வர் கூறியபோது, கோடிக்கரைக் கடலில் படகு செலுத்திய சமுத்திர குமாரியின் நினைவு வந்தியத்தேவனுக்கு வந்தது. ஆகா! ஒரு வேளை இவரும் அந்தப் பெண்ணை நினைத்துக் கொண்டுதான் இந்தக் கதையைச் சொல்லுகிறாரா, என்ன?
பூங்குழலியின் பேச்சை எப்படி எடுக்கலாம் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த போது, அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிங்க தாரைத் தடாகத்தின் பின்புறச் சுவரில், உட்பக்கம் குழிவாக அமைந்து, அதற்குள்ளே இருவர் அமரும் படியான ஒரு கல் ஆசனம் இருந்தது. அப்படி அமைந்திருந்த அறையின் ஓர் ஓரத்தில் திடீரென்று விளக்கு வெளிச்சம் காணப்பட்டது. விளக்கைப் பிடித்துக் கொண்டிருந்தவரின் கரம் முதலில் வெளிவந்தது. பிறகு புத்த பிக்ஷு ஒருவரின் திருமுகமும் காணப்பட்டது.
வந்தியதேவன் அந்த இந்திரஜாலக் காட்சியை அடங்கா வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான். மேலே என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினால் அவன் மூச்சும் சிறிது நேரம் நின்றிருந்தது.
35. இலங்கைச் சிங்காதனம்
பிக்ஷு கையில் பிடித்த தீபத்தின் வெளிச்சத்தில் சுற்று முற்றும் பார்த்தார். இளவரசரும் அவருடைய தோழர்களும் நிற்பதைக் கண்டு கொண்டார் போலும். மறுகணம் விளக்கும் வெளிச்சமும் மறைந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் பிக்ஷு தடாகத்தின் படிக்கட்டுகளின் வழியாக நடந்து வருவது தெரிந்தது. இளவரசர் நிற்குமிடத்துக்கு வந்தார். நிலா வெளிச்சத்தில் அவருடைய திருமுகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
“தேவப்ரியா! வருக! வருக! தங்களை எதிர்நோக்கி வைதுல்ய பிக்ஷு சங்கம் காத்திருக்கிறது. மகா தேரோ குருவும் விஜயம் செய்திருக்கிறார். குறிப்பிட்ட நேரம் தவறாது தாங்கள் வந்து சேர்ந்தது பற்றி என் உள்ளம் உவகை கொண்டு நன்றி செலுத்துகிறது!” என்றார்.
“அடிகளே! இந்தச் சிறுவனிடம் பல குறைகள் குடிகொண்டிருப்பதை அறிந்துள்ளேன். எனினும், வாக்குத் தவறுவதில்லை என்ற ஒரு நல்விரதத்தை அனுசரித்து வருகிறேன். அந்த விரதத்தில் என்றும் தவறியதில்லை!” என்றார் பொன்னியின் செல்வர்.
“இன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வரையில் தாங்கள் வந்து சேரவில்லை என்று அறிந்தேன். அதனால் சிறிது கவலை ஏற்பட்டது.”
“முன்னதாக வந்திருந்தால், ஒருவேளை வாக்கை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கலாம். அதனாலேயே சமயத்திற்கு வந்து சேர்ந்தேன்.”
“ஆம், ஆம்! வானில் ஜோதி மயமாக ஒளிரும் கதிரவனை மறைத்து விடுவதற்குப் பல மேகத்திரள்கள் சுற்றி வருகின்றன; நாங்களும் அறிந்துள்ளோம். ஆனால் அந்த மேகத்திரள்கள் எல்லாம் புத்த பகவானுடைய கருணையென்னும் பெருங்காற்றினால் சின்னா பின்னமாகிக் கலைந்துவிடும். போகட்டும்! இதோ நிற்பவர்கள் யார்? தாங்கள் நன்கு அறிந்தவர்கள்தானா? தங்களின் பூரண நம்பிக்கைக்கு உரியவர்களா? கொடுத்த வாக்கைத் தவறாது நிறைவேற்றக் கூடியவர்களா?” என்று பிக்ஷு கேட்டார்.
“அடிகளே! என்னுடைய கரங்கள் இரண்டையும் எப்படி நான் நம்புகிறேனோ, அப்படியே இந்த நண்பர்களையும் நம்புகிறேன். எனினும் தங்களுக்கு விருப்பமில்லையென்றால் இவர்களை இங்கேயே விட்டுவிட்டுத் தங்களுடன் தனித்து வரச் சித்தமாயிருக்கிறேன்!” என்றார் இளவரசர்.
“இல்லை, இல்லை! அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் சித்தமாயில்லை. தங்களை நான் அழைத்துப் போகும் இடம் மிகப் பத்திரமானதுதான். ஆயினும், நீண்ட வழியில் போக வேண்டும். எந்தத் தூணுக்குப் பின்னால் என்ன அபாயம் மறைந்திருக்கும் என்று யார் சொல்ல முடியும்? இவர்கள் இருவரும் அவசியம் வரட்டும்!” என்றார் பிக்ஷு.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவனுடைய உள்ளம் கொந்தளித்தது. முன்பின் அறியாத தன்னிடம் இளவரசர் இவ்வளவு பரிபூரண நம்பிக்கை காட்டி மிக அந்தரங்கமான காரியத்துக்கு அழைத்து வந்ததை நினைத்து பூரிப்பு உண்டாயிற்று.
‘இன்றிரவு ஏதோ முக்கியமான நிகழ்ச்சி நடைபெறப்போகிறது, எது என்னவாயிருக்கும்?’ என்ற நினைவு மிக்க பரபரப்பை அளித்தது.
பிக்ஷு முன்னால் சென்று வழிகாட்ட, மற்றவர்கள் பின் தொடர்ந்து சென்றார்கள். தடாகத்தின் படிக்கட்டுகளின் வழியாகச் சென்று பின்புறத்துக் கல் சுவரில் குடைந்து அமைந்திருந்த அறையில் புகுந்தார்கள். அதன் ஒரு பக்கம் சென்று இருட்டில் பிக்ஷு ஏதோ செய்தார். உடனே ஒரு வழி ஏற்பட்டது. உள்ளே வெளிச்சம் காணப்பட்டது. பிக்ஷு அங்கு வைத்திருந்த தீபத்தைக் கையில் ஏந்திக் கொண்டார். மற்ற மூவரும் உள்ளே வந்ததும் வழியும் அடைப்பட்டது. வெளியே தடாகத்தில் சிங்க முகத்திலிருந்து விழுந்த அருவியின் ஓசை மிக இலேசாகக் கேட்டது. இல்லாவிட்டால் ஒரு கணத்துக்கு முன்னால் அப்படித் தடாகக் கரையில் நின்று கொண்டிருந்தோம் என்பதையே அவர்களால் நம்பமுடியாமல் போயிருக்கும்.
குறுகலான சுரங்கப் பாதை வழியாக அவர்கள் சென்றார்கள். பாதை வளைந்து வளைந்து சென்றது. முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவர்கள் காலடிச் சத்தமும், அதன் எதிரொலியும் பயங்கரத்தை உண்டாக்கின. வந்தியத்தேவனுக்கு நடு நடுவே இளவரசர் ஏமாந்து போய் ஏதோ ஒரு சூழ்ச்சியில் சிக்கிக் கொண்டாரோ என்ற ஐயம் உண்டாயிற்று.
பாதை அகன்று அகன்று வந்து கடைசியில் ஒரு மண்டபம் தெரிந்தது. எப்பேர்ப்பட்ட மண்டபம்? பிக்ஷு கையில் பிடித்து வந்த தீபத்தில் சிறிய பகுதிதான் மங்கலாகக் கண்ணுக்குப் புலனாயிற்று. ஆயினும் அதன் தூண்கள் பளிங்குக் கல்லினால் ஆன தூண்கள் என்பது தெரிந்தது. நாற்புறமும் புத்தர் சிலைகள் தரிசனம் தந்தன. நிற்கும் புத்தர்கள் படுத்திருக்கும் புத்தர்கள், போத நிலையில் அமர்ந்திருக்கும் புத்தர்கள், ஆசீர்வதிக்கும் புத்தர்கள், பிரார்த்தனை செய்யும் புத்தர்கள் இப்படிப் பல புத்தர் சிலைகள் தோன்றின.
பளிங்கு மண்டபத்தை தாண்டி அப்பால் சென்றார்கள். மறுபடி ஒரு குறுகிய பாதை, பின்னர் இன்னொரு மண்டபம் இதன் தூண்கள் தாமிரத் தகடுகளினால் ஆனவை. இரத்தினச் சிவப்பு நிறம் பெற்றுத் திகழ்ந்தன. இந்த மண்டபத்தின் மேற்கூரையிலும் செப்புத் தகடுகள். அவற்றில் பலவகைச் சித்திர வேலைப்பாடுகள். நாலாபுறமும் வித விதமான புத்தர் சிலைகள். இம்மாதிரியே அபூர்வமான மஞ்சள் நிற மரத்தூண்களை உடைய மண்டபம். யானைத் தந்தங்களால் இழைத்த தூண்களைக் கொண்ட மண்டபம் – இவற்றையெல்லாம் கடந்து சென்றார்கள். அதிவேகமாக நடந்து சென்ற போதிலும் வந்தியத்தேவன் அங்கங்கே தூண்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே போனான். இளவரசர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாது முன்னோக்கிய பார்வையுடன் சென்றது அவனுக்கு அளவிலா வியப்பை அளித்தது.
உலோக மண்டபங்களையெல்லாம் தாண்டிக் கடைசியில் சாதாரண கருங்கல் மண்டபம் ஒன்றுக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் விசாலமான அம்மண்டபத்தில் அபூர்வமான காட்சி தென்பட்டது. முந்தைய மண்டபங்களில் புத்தர் பெருமானின் சிலைகளைத் தவிர மனிதர் யாருமில்லை. இந்தக் கருங்கல் மண்டபத்தில் புத்த பிக்ஷுக்கள் பலர் கூடியிருந்தார்கள். அவர்களுடைய முக மண்டலங்கள் தேஜஸ் நிறைந்து திகழ்ந்தன. அவர்களுக்கு மத்தியில் மகா தேரோ குரு நடுநாயகமாக ஒரு பீடத்தில் வீற்றிருந்தார். அவருக்கு எதிரே நவரத்தின கசிதமான ஒரு தங்கச் சிங்காதனம் காணப்பட்டது. அதன் அருகில் ஒரு பீடத்தின் மேல் மணிமகுடம் ஒன்றும் உடைவாளும், செங்கோலும் இருந்தன. மண்டபத்தில் நாலாபுறமும் தீபங்கள் எரிந்தன. தீபச்சுடரின் ஒளியில் தங்கச் சிங்காதனமும், மணிமகுடமும், உடைவாளும் ஜொலித்துத் திகழ்ந்தன.
இளவரசர் முதலியோர் அந்த மண்டபத்துக்குள் நுழைந்ததும் பிக்ஷுக்கள் அனைவரும் எழுந்து நின்று “புத்தர் வாழ்க” “தர்மம் வாழ்க”, “சங்கம் வாழ்க” என்று கோஷித்தார்கள்.
இளவரசர் மகா தேரோ குருவின் சமீபம் வந்து வணங்கி நின்றார்.
பிக்ஷுக்களின் அத்தியட்சகர் சிங்காதனத்துக்கு அருகில் கிடந்த ஒரு சாதாரண பீடத்தைச் சுட்டிக்காட்டி, அதில் அமரும்படி இளவரசரை வேண்டினார்.
“மகா குருவே! இச்சிறுவனுக்கு முன்னால் பிராயத்திலும், தர்மத்திலும் மூத்தவர்களாகிய தாங்கள் அமர வேண்டும்” என்று வேண்டினார் இளவரசர்.
அத்தியட்சக மகா குரு தமது பீடத்தில் அமர்ந்ததும் இளவரசரும் தமக்கென்று குறிப்பிட்ட ஆசனத்தில் பணிவுடன் உட்கார்ந்தார்.
“தேவர்களின் அன்புக்குரிய இளவரசரே! தங்கள் வருகையினால் இந்த மகாபோதி சங்கம் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கின்றது. நாங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளையெல்லாம் ஒப்புக்கொண்டு பல சிரமங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறீர்கள். புத்த பகவானுடைய கருணை தங்களிடம் பூரணமாக இருப்பதற்கு வேறு அத்தாட்சி தேவையில்லை!” இவ்விதம் பாலி பாஷையில் பெரிய குரு கூற, இளவரசரை அழைத்து வந்த பிக்ஷு தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார். மற்ற பிக்ஷுக்கள், “சாது! சாது!” என்று கோஷித்துத் தங்கள் சந்தோஷத்தை வெளியிட்டார்கள்.
மகா தேரோ மேலும் கூறலுற்றார்!-” இலங்கைத் தீவுக்குப் புத்த தர்மத்தை அனுப்பிய பாரத வர்ஷத்துக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆதி நாளிலிருந்து உங்கள் நாட்டிலிருந்து படையெடுத்து வந்த சோழர்கள், பாண்டியர்கள், மலையாளத்தார், கலிங்கத்தார் எல்லாரும் இங்கே பல அட்டூழியங்களைச் செய்ததுண்டு. புத்தவிஹாரங்களையும் பிக்ஷுக்களின் மடாலயங்களையும், குருகுலங்களையும் அவர்கள் இடித்துத் தள்ளித் தேவர்களின் சாபத்துக்கு ஆளானார்கள். உங்கள் நாட்டவரைச் சொல்வானேன்? இந்த நாட்டின் மன்னர்களே அத்தகைய கோர கிருத்யங்களைச் செய்திருக்கிறார்கள். புத்த சங்கத்தில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். தங்களுடைய தீய செயல்களை எதிர்த்த பிக்ஷுக்களின் விஹாரங்களை இடித்தார்கள்; அக்கினிக்கு இரையாக்கினார்கள். இரண்டு காத நீளமும் ஒரு காதம் அகலமும் உள்ள இந்த விசாலமான புண்ணிய நகரத்தில் ஒரு சமயம் பாதி விஸ்தீரணத்தில் புத்த விஹாரங்கள் இருந்தன. அவற்றில் பெரும் பகுதி இன்று இடிந்து பாழாய்க் கிடக்கின்றது. இடிந்த விஹாரங்களைப் பழுது பார்த்துச் செப்பனிட்டுக் கொடுக்க வேண்டும் என்று இதுவரை எந்த அரச குலத்தினரும் கட்டளையிட்டதில்லை. அத்தகைய ஆக்ஞை பிறப்பிக்கும் பாக்கியம் இளவரசர் அருள்மொழிவர்மருக்கே கிடைத்தது. தேவர்களுக்கு உகந்தவரே! தங்களுடைய இந்தச் செய்கையைப் புத்த மகா சங்கம் பெரிதும் பாராட்டுகிறது…”
இளவரசர் தலை வணங்கி மகா தேரோவின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டார். “இன்னும் இந்தப் புராதன புண்ணிய நகரத்தில் வெகுகாலமாகப் பெரஹரா உற்சவம் நடைபெறாமல் தடைப்பட்டிருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர்கள் ஒரு சமயம் இந்த மாநகரத்தைப் பிடித்தார்கள். அப்போது இலங்கை அரச குலத்தார் புலஸ்திய நகரம் சென்றார்கள். அதுமுதல் இங்கே பெரஹாரத் திருவிழா நடைபெற்றதில்லை. இந்தப் புண்ணிய வருஷத்தில் தாங்கள் அவ்வுற்சவம் மீண்டும் நடைபெறலாம் என்று கட்டளையிட்டீர்கள். அதற்கு வேண்டிய வசதியும் அளித்தீர்கள். இது பற்றியும் புத்த சங்கத்தார் சந்தோஷமடைந்திருக்கிறார்கள்…”
இளவரசர் மீண்டும் சிரம் வணங்கி, “மகாகுருவே! அடியேன் புத்த சங்கத்தாருக்கு இன்னும் ஏதேனும் சேவை செய்யக்கூடியதாக இருந்தால் கருணைகூர்ந்து பணித்தருள்க!” என்றார்.
அத்தியட்சகர் புன்னகை புரிந்து, “ஆம், இளவரசே! புத்த சங்கம் மேலும் தங்களுடைய சேவையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. அதற்கு முன்னதாக இன்னும் சில வார்த்தைகள் கூறவேண்டும். புத்த பகவான் கடைசித் திரு அவதாரத்துக்கு முன்னால் வேறு பல அவதாரங்களில் தோன்றியதாக அறிந்திருப்பீர்கள். ஒரு சமயம் சிபிச் சக்கரவர்த்தியாக அவதரித்துக் கொடுமை நிறைந்த இந்த உலகத்தில் ஜீவகாருண்யத்தின் பெருமையை உணர்த்தினார். ஒரு சிறிய புறாவின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டுத் தமது திருமேனியில் சதையைத் துண்டு துண்டாக அவர் அரிந்து துலாக்கோலில் இட்டார். அந்தச் சிபிச் சக்கரவர்த்தியின் வம்சத்திலே வந்தவர்கள் என்று சோழ குலத்தவராகிய நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள். சிபியின் வம்சத்திலே வந்த காரணம் பற்றிச் ‘செம்பியன்’ என்ற பட்டப்பெயரும் சூடிக் கொள்கிறீர்கள். ஆனால் இதுவரையில் புத்த சங்கத்தார் அதை நம்பவில்லை. சோழ குலத்துப் புரோகிதர்கள் கட்டிய கதை என்று தான் எண்ணியிருந்தார்கள். இன்று – தங்களுடைய அரும் பெரும் செயல்களைப் பார்த்த பிறகு, – சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டி வருகிறது. புத்த பகவானுடைய பெருங் கருணையை மாயை காரணமாக இதுகாறும் சோழ குலம் மறந்திருந்தது. அந்தக் கருணை இன்றைய தினம் தங்கள் மீது ஆவிர்ப்பவித்திருக்கிறது. அதற்கான தேவ சூசகமும் கிடைத்திருக்கிறது. இதோ!…” என்று கூறி அத்தியட்சக தேரோ பின்னால் திரும்பிப்பார்த்ததும், பிக்ஷுக்கள் சிலர் பீடம் ஒன்றில் சாய்ந்து படுத்திருந்த மற்றொரு பிக்ஷுவைப் பீடத்துடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பிக்ஷுவின் உடம்பெல்லாம் இடைவிடாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. கைகள் வெடவெடவென்று நடுங்கின; கால்கள் நடுங்கின; உடம்பு நடுங்கிற்று; தலை ஆடிற்று; பற்கள் கிட்டின; உதடுகள் துடித்தன; சிவந்த கண்களுக்கு மேலே புருவங்களும் அசைத்தன.
“இந்தப் பிக்ஷுவின் பேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆவிர்ப்பவித்திருக்கிறார்கள். தேவர்கள் கருணை கூர்ந்து சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள்!” என்றார் மகாதேரோ.
ஆவேசங் கொண்டிருந்த புத்த பிக்ஷுவின் வாயிலிருந்து நடு நடுங்கிக் குளறிய குரலில் ஏதேதோ மொழிகள் அதிவிரைவில் வந்தன. அவர் பேசி நிறுத்தியதும் அத்தியட்சக குரு கூறினார். “முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்களை ஆசீர்வதிக்கிறார்கள். முற்காலத்தில் தேவானாம்பிரிய அசோகவர்த்தனர் பாரத பூமியை ஒரு குடையில் ஆண்டு, புத்த தர்மத்தை உலகமெல்லாம் பரப்பினார். அத்தகைய மகா சாம்ராஜ்யத்துக்குத் தாங்கள் அதிபதியாவீர்கள் என்று தேவர்கள் ஆசீர்வதிக்கிறார்கள். அசோகரைப் போல் தாங்களும் புத்த தர்மத்தை உலகில் பரப்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். அசோகர் பாடலிபுத்திரச் சிம்மாசனத்தில் வீற்றிருந்து செய்த தர்மப் பெரும் பணிகளைத் தாங்கள் இந்தத் தொன்மை மிக்க அநுராதபுரத்தில் ஆரம்பித்து நடத்த வேண்டுமென்று கட்டளையிடுகிறார்கள். இளவரசே! தேவர்களுடைய கட்டளைக்குத் தங்கள் மறுமொழி என்ன?”
இதைக் கேட்டதும் இளவரசர், “மகா குரு! தேவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் சித்தபடி நடத்திக் கொள்ளுவார்கள். ஆனால் அடியேனுக்கு இப்போது அவர்கள் இடும்பணி யாது என்று விளங்கவில்லையே?” என்றார்.
“அதை நானே தெரிவிக்கிறேன்” என்று அத்தியட்சக தேரோ கூறிச் சமிக்ஞை செய்ததும், ஆவேசம் வந்திருந்த பிக்ஷுவை அப்பால் எடுத்துச் சென்றார்கள். பின்னர் பிக்ஷுத்தலைவர் கூறினார்:- “இளவரசே, இதோ உங்கள் முன்னால் உள்ள சிங்காதனத்தைப் பாருங்கள், மணி மகுடத்தைப் பாருங்கள், செங்கோலையும் பாருங்கள். இலங்கை இராஜ வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும் இந்தச் சிங்கானத்தில் அமர்ந்து, இந்த மணி மகுடத்தை அணிந்து, இந்தச் செங்கோலைக் கையில் தரித்த பிறகே, புத்த சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசர்களானார்கள். துஷ்டகமனு சக்கரவர்த்தியும், தேவானாம்பிய திஸ்ஸரும், மகாசேனரும் அமர்ந்து முடிசூடிய சிங்காதனம் இது! அவர்கள் சிரசில் தரித்த கிரீடம் இது. அவர்கள் கரத்தில் ஏந்திய செங்கோல் இது. இப்படிப்பட்ட புராதன சிங்காதனம் – ஆயிரம் ஆண்டுகளாக அரசர்களைச் சிருஷ்டித்த சிங்காதனம் – இதோ தங்களுக்காகக் காத்திருக்கிறது. இதில் அமரவும், இந்த மணி மகுடம் செங்கோலும் தரிக்கவும் தங்களுக்குச் சம்மதமா?”
இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவன் மிக்க பரபரப்பை அடைந்தான். இளவரசரைத் தூக்கி அந்தக் கணமே உட்கார வைத்து விட்டால் என்ன என்று எண்ணினான். ஆனால் இளவரசருடைய முக பாவத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை.
முன்போலவே அமைதியான குரலில், “அத்தியட்சகா! அது எப்படிச் சாத்தியம்? இந்தச் சிங்காதனத்தில் ஏறி முடிசூடிய மகிந்த மன்னர் இன்றும் ஜீவிய வந்தவராக இருக்கிறாரே? அவர் இருக்குமிடம் தெரியாவிட்டாலும்…” என்று கூறி நிறுத்தினார்.
“இளவரசே! இலங்கை இராஜ வம்சம் மாறவேண்டும் என்பது தேவர்களின் கட்டளை; அது நடந்தே தீரும். கங்கை பாயும் வங்க நாட்டிலிருந்து வந்த விஜயராஜன் ஸ்தாபித்த இந்த வம்சத்தில் எத்தனையோ மகா ராஜர்கள் தோன்றினார்கள்; தர்மத்தையும் பரிபாலித்தார்கள். ஆனால் பிற்காலத்தில் இந்த வம்சம் பல கொடிய கிருத்யங்களைச் செய்து தேவ சாபத்துக்கு ஆளாகி விட்டது. இந்த வம்சத்தில் பிறந்தவர்களிலே தகப்பன் மகனைக் கொன்றான்; மகனைத் தகப்பன் கொன்றான்; அண்ணனைத் தம்பி கொன்றான்; தம்பியை அண்ணன் கொன்றான்; தாய் மகளைக் கொன்றாள்; மருமகள் மாமியாரைக் கொன்றாள். இத்தகைய மகா பாதகங்களைச் செய்த வம்சத்தவர்கள் புத்த தர்மத்தைப் பரிபாலிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல என்று தேவர்கள் கட்டளையிடுகிறார்கள். கடைசியாக முடிசூடிய மகிந்தன் இலங்கைச் சிம்மாசனத்துக்கு உரிமையை இழந்து விட்டான். அப்படி இராஜ வம்சம் மாறும்போது புதிய வம்சத்தின் முதல்வனைத் தெரிந்தெடுக்கும் உரிமை இந்தச் சங்கத்துக்கு உண்டு. இந்தச் சங்கத்தாரும் தங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். தாங்கள் சம்மதம் கொடுத்தால் இன்று இரவே முடிசூட்டு விழா நடத்திவிடலாம்…”
அந்த மண்டபத்தில் சிறிது நேரம் பூகர்ப்பத்திலும், கடலின் ஆழத்திலும் குடிகொண்டிருப்பது போன்ற நிசப்தம் குடிகொண்டிருந்தது. வந்தியத்தேவனுடைய பரபரப்பு உச்சநிலையை அடைந்துவிட்டது. அச்சமயத்தில் பொன்னியின் செல்வர் தமது பீடத்திலிருந்து எழுந்து புத்த பிக்ஷுக்களின் சங்கத்துக்கு வணக்கம் செலுத்தினார். வந்தியத்தேவன் குதூகலத்தின் எல்லையை அடைந்தான். இளவரசர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் மணி மகுடத்தை எடுத்துத் தானே சூட்டி விடலாம் என்று ஆத்திரப்பட்டான்.
இளவரசர் கூறினார்:- “மகான்களே! உங்களை நமஸ்கரிக்கிறேன். இந்தச் சிறுவனிடம் எல்லையில்லா அன்பும், நம்பிக்கையும் வைத்து இந்தப் புராதன சிங்காதனத்தை அளிக்க முன்வந்த உங்கள் பெருந்தன்மையைப் போற்றி வணங்குகிறேன். ஆனால் தாங்கள் இப்போது இடும் பணி என் சக்திக்கு அப்பாற்பட்டது. நான் சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவன். அந்த நாட்டு நிலங்கள் தந்த உணவு, நதிகள் அளித்த நீரும் இந்த உடலை ஆக்கின. என தந்தை சுந்தரசோழ சக்கரவர்த்தியின் கட்டளைக்கு உட்பட்டு இங்கே வந்தேன். அவருடைய விருப்பத்தை அறியாமல் எதுவும் என்னால் செய்ய இயலாது…”
பிக்ஷு குறுக்கிட்டுக் கூறினார்:- “இளவரசே! தங்கள் தந்தை சுந்தர சோழர் இன்று சுதந்திரமின்றிச் சிறையில் இருப்பதுபோல் இருப்பதை நீ அறியீரா?”
“ஆம்; என் தந்தை நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருக்கிறார். கால்களின் சுவாதீனத்தை இழந்திருக்கிறார். ஆயினும் அவருடைய பெயரால், – அவரிடம் அதிகாரம் பெற்று, – சோழ நாட்டை ஆளுவோரின் கட்டளைக்கு நான் உட்பட்டவன். அவர்களுடைய கட்டளையின்றி நான் இந்தச் சிங்காதனத்தை ஏற்றுக்கொண்டால் தேசத்துரோகியும், ராஜத்துரோகியும் ஆவேன்…”
“அவ்வாறு தாங்கள் கருதுவதாயிருந்தால் தஞ்சாவூருக்குத் தூது கோஷ்டி ஒன்று அனுப்பச் சித்தமாயிருக்கிறோம். தங்கள் தந்தையார் புத்த தர்மத்தில் மிகப் பற்றுக்கொண்டவர். எங்கள் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டார்.”
“இந்த நாட்டின் பிரஜைகள் – இருக்கிறார்கள். அவர்களுடைய சம்மதமின்றி இராஜ்யத்தை விநியோகிக்க யாருக்கு உரிமை உண்டு?”
“தங்களை அரசராகப் பெறுவதைப் பெறற்கரிய பேறாக இந்நாட்டுப் பிரஜைகள் கருதுவார்கள்…”
“எல்லாரும் சம்மதிக்கலாம்; மகிழ்ச்சியும் அடையலாம். இந்த உலகில் வேறு யாருடைய விருப்பத்தையும் காட்டிலும் நான் அதிகமாக மதிப்பது என் தமக்கையாரின் விருப்பத்தையே. என் அன்னை என்னைப் பெற்றாள்; பொன்னி நதி என் உயிரைக் காப்பாற்றி அளித்தாள். ஆனால் என் தமக்கை என் அறிவை வளர்த்து, அகக் கண்களைத் திறந்தார். அப்படிப்பட்டவருடைய விருப்பதைக் காட்டிலும் என் உள்ளத்திலே உள்ள ஒரு குரலின் கட்டளையே எனக்கு மேலானது. மகா புருஷர்களே! தாங்கள் இச்சிறுவனுக்கு மனமுவந்து அளிக்கும் மகா பாக்கியத்தை ஏற்றுக் கொள்ளும்படி என் உள்ளக் குரல் எனக்குச் சொல்லவில்லை! தயவு செய்து இச்சிறுவனை மன்னித்து அருளுங்கள்!…” மறுபடியும் அந்த மகாசபையில் சிறிது நேரம் மௌனம் குடி கொண்டிருந்தது. வந்தியத்தேவனுடைய நாடி நரம்புகள் படபடவென்று துடித்த சத்தம் அவன் காதில் மட்டும் விழுந்தது.
சற்றுப்பொறுத்து, பிக்ஷு சங்கத்தின் அத்தியட்சகர் கூறினார்: “இளவரசே! தாங்கள் கூறிய மறுமொழி எனக்கு அதிக வியப்பை அளிக்கவில்லை ஒருவாறு எதிர்பார்த்தேன். இதனாலேயே இந்த இலங்கைச் சிங்காதனத்தில் ஏற எவரிலும் அதிகத் தகுதிவாய்த்தவர் தாங்கள் என்று ஏற்படுகின்றது. தர்ம சூக்ஷுமத்தை உணர்ந்த எங்களுக்கு இதைப் பற்றிச் சிறிதும் சந்தேகம் கிடையாது. ஆனால் தங்களை வற்புறுத்தவும் விரும்பவில்லை. யோசிப்பதற்கு அவகாசம் கொடுக்கிறோம். ஓராண்டுக்குப் பிறகு இதேமாதிரி ஒரு நாள் தங்களுக்குச் சொல்லி அனுப்புகிறோம். அப்போது வந்து தங்கள் முடிவான கருத்தைத் தெரிவிப்பீராக!… ஒரு விஷயம் மட்டும் நினைவிருக்கட்டும். இந்தப் புராதன அநுராதபுரத்தில் பல புத்த விஹாரங்கள் மூர்க்கமான யுத்தக் கொடுமையினால் பாழாய்ப் போயிருக்கின்றன. ஆனால் இந்த மகா போதி விஹாரத்துக்கு மட்டும் எவ்விதச் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. ஏனெனில் இது பூமிக்குக் கீழே குடைந்து அமைத்த விஹாரம். இங்கே வரும் வழி இவ்விடத்தில் தற்சமயம் கூடியிருக்கும் புத்த சங்கத் தலைவர்களுக்கு மட்டுமே தெரியும். எங்களில் ஒருவர் வழி காட்டாமல் இங்கே யாரும் வரமுடியாது. இலங்கை மன்னர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவை, புத்த சங்கத்தாரால் முடிசூடிக் கொள்வதற்கு மட்டுமே, இங்கு அழைக்கப்படுவார்கள். அத்தகைய புனிதமான இரகசியப் பாதையுள்ள விஹாரம் இது. இங்கே தாங்கள் வந்தது, போனது, இங்கே நடந்தது எதையும் பற்றி வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது. தங்களுடைய நண்பர்களும் சொல்லக்கூடாது. சொன்னால் மிகக் கடுமையான தேவ சாபத்துக்கு உள்ளாகும்படி நேரிடும்!”
“அத்தியட்சக! சாபத்துக்குத் தேவையில்லை; வெளியில் யாருக்கும் சொல்வதில்லையென்று வாக்குக் கொடுத்து விட்டுத்தான் இங்கே என் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வந்தேன். கொடுத்த வாக்கை ஒரு நாளும் மீறமாட்டேன்.” என்றார் பொன்னியின் செல்வர்.
அரைநாழிகை நேரத்துக்குப் பிறகு இளவரசர் அருள்மொழிவர்மரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் அநுராதபுரத்தின் வீதியில் நிலா வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். விஹாரத்துக்குள் இருந்தவரையில் வாயைக் கெட்டியாக மூடி வைத்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது அடக்கி வைத்திருந்த எண்ணங்களையெல்லாம் அவிழ்த்து விட்டான்.
“சோழ நாடு! நீர்வளம் நிலவளம் பொருந்தியதுதான். ஆனால் இந்த இலங்கைக்கு இணையாகாது. இப்படிப்பட்ட இரகசியத் தீவின் சிம்மாசனம் வலிய வந்ததை உதைத்துத் தள்ளிவிட்டீர்களே! இது என்ன பேதைமை? தங்களை அழைத்து மணிமகுடத்தை வழங்க வந்த பிக்ஷுக்களின் மதியை என்னவென்று சொல்ல? அடுத்தாற்போல், நானும் தூணோடு தூணாக நின்றுகொண்டிருந்தேனே? எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று இப்படியெல்லாம் பொருமிக் கொட்டிக் கொண்டிருந்தான்.
இளவரசர் அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். “துஷ்டகமனுவின் மகன் ஸாலி அசோகமாலா என்னும் பெண்ணின் காதலுக்காக இந்த இலங்கை ராஜ்யத்தைத் துறந்தானென்று சொன்னேனே? அது உமது காதில் ஏறவில்லையா?” என்றார்.
“எல்லாம் ஏறிற்று. அப்படித் தாங்கள் எந்தப் பெண்ணைக் காதலிக்கிறீர்கள்? அவ்விதம் தாங்கள் சிம்மாசனம் ஏறுவதற்குக் குறுக்கே நிற்கும் பெண் யார்?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.
“ஒரு பெண் அல்ல; இரண்டு பெண்கள். சத்தியம், தர்மம் என்னும் இரு பெண்களை நான் காதலிக்கிறேன். அவர்களுக்காகவே இலங்கை மணி மகுடத்தை வேண்டாம் என்றேன்.”
“இளவரசே; தங்களைப் பார்த்தால் இளம் பிராயத்தினராக காணப்படுகிறது. பேச்சோ, வயதான கிழவரைப் போல் பேசுகிறீர்கள்.”
“நம்மில் யார் வயதானவர், யாருடைய பிராயம் முடியப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?”
இப்படி அவர்கள் பேசியபோது வீதியின் ஓரமாக ஒரு பழைய மாளிகையின் சமீபம் போய்க் கொண்டிருந்தார்கள்.
வீதிக்கு எதிர்ப் புறத்தில் யாரோ கையைத் தட்டும் சப்தம் கேட்டது. சப்தம் கேட்ட இடத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது.
“இப்படி வாருங்கள்!” என்று கூறி, இளவரசர் அந்த உருவத்தை நோக்கி வீதியைக் கடந்து போனார்.
மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள். அவர்கள் பாதி வீதியைக் கடந்து கொண்டிருந்தபோது பின்னால் பெரிய தடபுடல் சத்தம் கேட்டது; திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் எந்த வீட்டின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்தார்களோ அதன் மேல் மாடத்தின் முகப்பு இடிந்து விழுந்து கொண்டிருந்தது!
அவர்கள் அங்கே வீதியைக் கடக்கத் திரும்பியிராவிட்டால் அவர்கள் தலைமேலே விழுந்து கொன்றிருக்கும்!
ஒரு கண நேர வித்தியாசத்தில் மூன்று உயிர்கள் பிழைத்தன. அதுவும் எப்பேர்ப்பட்ட உயிர்கள்!
‘நம்மில் யாருக்குப் பிராயம் முடியப் போகிறது என்று யாருக்குத் தெரியும்?’ என்று பொன்னியின் செல்வர் கூறியது எவ்வளவு உண்மையான வார்த்தை?’ இப்படி எண்ணி வந்தியத்தேவன் நடு வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்க, இருவரும் அப்பால் சென்றார்கள்.
வந்தியத்தேவன் அவர்களை மறுபடி அணுகியபோது அங்கே நின்ற உருவம் நிலா வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. கண் முன்னே காண்பதை நம்புவதா இல்லையா என்ற சந்தேகம் அச்சமயம் அவனுக்கு உண்டாயிற்று.
‘இது என்ன பைத்தியக்காரத்தனம்? இது எப்படிச் சாத்தியமாகும்?’
‘தஞ்சையில் பழுவேட்டரையர் அரண்மனையில் பார்த்த நந்தினி இங்கே இந்த அநுராதபுரத்து வீதிக்கு எப்படி வந்திருக்க முடியும்? நள்ளிரவில் இங்கே வந்து எதற்காக நிற்கவேண்டும்!’ மறுகணம் அந்த உருவம் மாயமாய் மறைந்தது. மற்ற இருவர் மட்டும் நின்றார்கள்.
கல்கி