Skip to content
Home » மஞ்ச சீலை

மஞ்ச சீலை

சூரியனின் கதிர்கள் பூமிக்கு படாத வண்ணம் மழை மேகங்கள் பூமியைச் சூழ்ந்து கொண்டிருந்தது. 

வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்து தன் வேலைகளை தொடங்குபவர், இன்றும் சற்று அசதியினால் ஆறு மணிக்கு தான் எழுந்தார். 

பஞ்சனையில் தன் பக்கத்தில் ஆழ்ந்து தூங்கும் கணவனை பார்த்தார். நன்றாக உறங்குவது போல் மேலோட்டமாக பார்ப்பதற்கு தெரிந்தாலும், மூடிய கண்ணிமைக்குள் அசையும் விழிகள் அவர் உறங்கவில்லை என்பதை அவருக்கு உணர்த்தியது. 

பஞ்சு போல் இருக்கும் அவர் தலை முடியை, சுருக்கம் நிறைந்த தன் நடுங்கும் தன் கைகளால் கோதினார். 

“என் ராசா! என்னய்யா உன் தொண்டை குழியில போட்டு அழுத்திகிட்டு இருக்கு? இந்த பாவிமகளுக்கு ஒன்னும் புரியலையே? எனக்கு புரியும்படி தான் ஏதாவது ஒரு செய்கை காட்டுங்களேன்” என்று விழி மூடி படுத்திருந்த தன் கணவனிடம் கேட்டார். 

அதற்கும் பதில் இல்லாமல் போக சிறிது நேரம் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் மங்கை என்று அவரது கணவனால் அழைக்கப்படும் மங்கையர்க்கரசி. 

கடந்த ஒரு வாரமாக பேச்சு மூச்சு இல்லாமல் படுக்கையில் கிடக்கிறார், என்பது வயதான தர்மராஜ். அவரின் கைகளை தடவி விட்டுக் கொண்டிருந்த மங்கைக்கோ எழுபது  வயது. 

பதினேழு வயதில் அவரை கைப்பிடித்து மணவாழ்க்கைக்குள் நுழைந்தார் மங்கையர்கரசி. ஐம்பத்தி மூன்று வருட தாம்பத்தியத்தில் அவரின் கண் அசைவை வைத்து அவர் என்ன நினைக்கின்றார் என்பதை கண்டு கொண்டு அதன்படி நடந்து கொண்டிருக்கும் மங்கையர்கரசிக்கு, இந்த ஒரு வாரமாக கணவன் என்ன நினைக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. 

கணவனை தடவி விட்டுக் கொண்டிருந்த மங்கையின் கைகளோ ஒரு நொடி அப்படியே அசையாமல் நிற்க அவரின் முகம் பிரகாசமாகியது. 

எழுந்து ஜன்னல் சீலைகளை திறந்து விட்டார். அவர்களது மகன் மணிகண்டன் தன் தாய் தந்தையர்களுக்காக பார்த்து பார்த்து கட்டிய அறை. ஒரு பக்க சுவரில் தரவரை கண்ணாடி ஜன்னல்கள் வைத்து, வீட்டினுள் இருந்தபடியே தோட்டத்தை பார்க்கும்படி அமைத்திருந்தார். திரை சீலைகளைத் திறந்ததும் மழை இல்லாமல் மேகம் மட்டும் சூழ்ந்திருக்கும் இதமான வானிலை அறைக்குள் பரவியது.

இருக்கும் செடிகள் அனைத்திலுமே  மலர்கள் பூத்துக் குலுங்கின. மல்லி, ஜாதி மல்லி ரோஜா என்று வாசனை மிகுந்த பூக்களே தோட்டத்தில் மிகுந்து இருந்தது. 

மங்கையர்க்கரசிக்கு சிறுவயதிலிருந்தே பூக்களின் மேல் நாட்டம். எந்த வீட்டிற்குச் சென்றாலும் பூச்செடிகளை தான் முதலில் நட்டு வைப்பார். 

தமிழகத்தின் தெற்கே ஒரு கோடியில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் இருவரும். கிராமம் என்றாலே ஜாதிப் பிரிவும் இருக்கத்தானே செய்யும்? உயர் ஜாதியில் பிறந்த தர்மராஜுக்கு அவர்கள் பண்ணையில் வேலை பார்க்கும் மங்கையர்க்கரசியின் மீது மங்கா காதல் உண்டாக, அவளிடம் பேசிப் பேசியே அவளையும் தன் மேல் காதல் பட வைத்து விட்டான் தர்மராஜ். 

மங்கையர்க்கரசிகோ பெரிய வீட்டிற்கு தெரிந்தால் நிச்சயம் தன்னை உயிரோடு விட மாட்டார்கள் என்ற பயம் இருந்தாலும், தர்மராஜின் அன்பில் மயங்கி விட்டாள். 

பதினேழு வயதான மங்கையர்க்கரசிக்கு பயமாக இருக்க, இருபத்தியேழு வயதான தர்மராஜுக்கு அவளின் மேல் உள்ள காதலினால் பயத்தையும் மீறி அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். 

வரும் வழியிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வைத்து மங்கையர்கரசியை தனது இல்லத்தரசியாக்கிக் கொண்டார். 

சென்னை வந்ததும் நண்பனின் உதவியால் எருக்கஞ்சேரியில் ஒரு குடிசையை வாடகைக்கு பிடித்துக் கொண்டார்கள். 

பெண் பிள்ளைக்கு படிப்பதற்கு என்ற கூற்றின்படி மங்கை பள்ளிக்கூடம் பக்கம் கூட ஒதுங்காதவர்.  பத்து வயதில் தாய் இறந்துவிட,  அனறிலிருந்து சமைக்க ஆரம்பித்து விட்டாள். சும்மா இருக்கும் பொழுது பண்ணைக்கு வேலைக்குச் செல்லவும் ஆரம்பித்தாள். 

இயற்கையாகவே மங்கைக்கு சேமிக்கும் பழக்கம் இருப்பதால், தன் சம்பளத்தையும் அப்பா கொடுக்கும் பணத்தில் உள்ள மிச்சத்தையும் சேர்த்து வைக்க ஆரம்பித்தாள்.

தர்மராஜுடன்  வீட்டை விட்டு வரும்பொழுது தன்னிடம் உள்ள புடைவகலில் நல்ல புடவை இரண்டை மட்டும்தான் எடுத்து வந்தாள். கூடவே ஒரு மஞ்சள் பை நிறைய சில்லறைகள். 

தங்கள் குடிசைக்கு வந்த பிறகு தான் அந்தப் பையை எடுத்து கணவனிடம் கொடுத்தாள். அதைத் திறந்து பார்த்த தர்மராஜன் கண்கள் விரிந்தது “இவ்வளவு காசு எப்படி உனக்கு!” என்றார் ஆச்சரியமாக.  

“என் சிறுவாட்டு காசு” என்று புன்னகைத்த மங்கையை அணைத்துக் கொண்டார். தர்மராஜன் படிப்பிற்கு அரசினர் பள்ளியில் கணக்கு வாத்தியார் வேலை கிடைத்துவிட மாத வருமானம் வந்தது. மங்கையின் சேமிப்பினால் சென்னைக்கு வந்து இரண்டு வருடத்திலேயே ஒரு இடத்தை வாங்கி, ஓட்டு விடும் கட்டிக் கொண்டார்கள். 

புது வீட்டிற்கு வந்த அன்று இரவு மனைவியின் கையில் ஒரு பையை கொடுத்தார் தர்மராஜ். என்ன என்று பிரித்துப் பார்க்க, மாம்பழ  வண்ணத்தில் அடர் சிகப்பு முந்தானை உள்ள அழகிய பட்டு புடவை. 

“நேற்று கடைக்குச் செல்லும் பொழுது இந்த புடவையை பார்த்தேன் மங்கை. உனக்கு கட்டினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது, அதனால் ஆசையாய் வாங்கி வந்தேன். உனக்கு பிடித்திருக்கிறதா?” என்றார். 

அவரின் முகத்தில் இருந்த சந்தோசமே மங்கைக்கு மகிழ்வாக இருக்க, “மஞ்ச சீலை ரொம்ப அழகா இருக்கு மாமா” புடவையை தடவினார். 

மனைவியின் கன்னத்தில் முத்தம் கொடுத்து “ப்ளீஸ் இதை கட்டேன்” என்றார். 

கணவனின் ஆசைக்காக உடனே புடவையையும் கட்டி விட மனைவியை ரசித்து ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார் தர்மராஜ்.

வெளியே சென்று வரும் தர்மராஜ் என்றெல்லாம் சோர்வாக உணர்கிறானோ? அவன் முகத்தில் ஒரு சிறு கவலையைக் கண்டால் கூட, அன்றைக்கு அந்த மஞ்சள் சேலையை தான் மங்கை அணிவாள்.

“ஏன் உங்களுக்கு இந்த மஞ்சள் சீலையில்  மோகம்” என்று அவனிடம் அடிக்கடி கேட்பாள். புன்னகை அவன் முகத்தில் தோன்ற முத்தங்கள் மட்டுமே பதிலாக இருக்கும்.

அன்பாகவும் அனுசரணையாகவும் குடும்பம் நடத்திய இருவருக்கும் ஏனோ குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கவே இல்லை. அப்படி என்றால் குழந்தை பிறக்கவில்லை என்ற அர்த்தமில்லை. குழந்தைகள் இறந்தே பிறந்தன. 

இருவருக்குமே மனவேதனை.  வேலையின் பழுவால் தர்மராஜுக்கு இன்னும் அதிக உளைச்சல். 

கணவன் சோர்ந்து வரும் பொழுதெல்லாம் அவனுக்கு பிடித்த இந்த மஞ்சள் சீலையை எடுத்து கட்டிக் கொள்வாள். முந்தானியை பிடித்து, இடமும் வலமும் ஆட்டி, “ஏங்க இந்த சீலை எனக்கு நல்லா இருக்கா?” என்று கேட்கும் மங்கையின் செயலிலேயே அனைத்து கவலைகளையும் மறந்து புத்துணர்வாகி விடுவார் தர்மராஜ். அதன் பிறகு அவர்களது கொஞ்சம் மொழிகள் தான் அந்த வீடு முழுவதும் நிறைந்திருக்கும்.

நாட்கள் வருடங்களாக கடக்க பத்து வருடத்திற்குள் நாலு குழந்தைகளை பெற்று பறி கொடுத்த மங்கை கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு குழந்தை பாக்கியம் இருக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியாத தர்மராஜ் சோர்ந்து இருக்கும் பொழுது, அவரது நண்பன் சபரிமலை சென்று வா என்று ஆலோசனை சொல்ல, 

எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று இருந்த தர்மராஜ் இனிமேல் கடவுள் விட்ட வழி என்று, நாட்பத்தியெட்டு நாட்கள் விரதம் இருந்து மகர ஜோதியை கண்டுவிட்டு, ஹரிஹரசுதனை மனமார வேண்டி வந்தார். 

அவர் வேண்டுதல் வீண் போகாமல், அடுத்த குழந்தை உயிருடன் பிறக்க மகிழ்ந்து மணிகண்டன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இரண்டு வருடங்களிலேயே பெண் குழந்தையும் பிறக்க, இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சென்றது அவர்களது குடும்ப வாழ்க்கை. 

தர்மராஜ் மனதில் நினைப்பதை செயலாகி விடுவார் மங்கை. வருடங்கள் எத்தனை ஆனாலும் கணவன் சோர்வாக இருக்கும் பொழுதெல்லாம் அந்த மஞ்ச சீலையை எடுத்து கட்டிக்கொண்டு, அவர் முன் நிற்பார். பிள்ளைகள் வளர்ந்து அவரவர் திருமணம் முடியவும் இந்தப் பழக்கம் மாறாமல் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. 

தான் படிக்காமல் இருந்தாலும் கணவனின் மூலம் படிப்பின் அவசியத்தை  உணர்ந்த மங்கை, தன் இரு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தார். கல்வி பொதுவானது, அதில் ஆண் பெண் பாகு பார்க்கக் கூடாது என்று, மகளையும் நன்கு படிக்க வைக்க, மகள் தந்தையின் பின்பற்றி ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டார். அதே ஆசிரியர் துறையில் உள்ள கணவன் அமைய, இரு பிள்ளைகளைப் பெற்று நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

மகனும் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை காதலிப்பதாக பெற்றோரிடம் கூற, காதல் மனம் முடித்த இருவரும் மறுப்பார்களா என்ன? மகன் மணிகண்டனின் விருப்பப்படியே அப்பெண் மாலாவை மகனுக்கு திருமணம் முடித்து வைத்தனர். 

அவர்களும் மகிழ்வாய் வாழ்ந்த மகனுக்கு பிள்ளைகள் பிறக்க மங்கைக்கு அடுத்து பேரன் பேத்திகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வந்தது. கணவனும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட பேரன் பேத்திகளின் குறும்பில் கணவனும் சேர்ந்து கொண்டு மங்கையை ஒரு வழி ஆக்கினார். 

மகள் வழி பேத்திக்கு திருமணம் செய்ய அவர்கள் வீட்டில் முடிவு செய்து திருமண வேலையை தொடங்க, பேத்தியோ இன்றைய கலாச்சாரத்தின்படி வரவேற்புக்கு லெகங்கா தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க, மங்கையர்கரசி தான் அவளுக்கு அறிவுரை கூறினார். 

“திருமணம் என்பது இரு குடும்பங்களும் இணைய கூடிய ஒரு சுகமான நிகழ்ச்சி. அதில் அன்பும் பண்பும் இருக்க வேண்டுமே தவிர, பணமும், பகட்டும் இருக்க கூடாது. 

நீ எப்பொழுது வாங்கும் உடையை மீண்டும் ஒருமுறை எப்பொழுதாவது போட முடியுமா? என்று யோசித்துக் கொள். இந்த உடையின் விலைக்கு புடவைகள் நான்கு வாங்கி விடலாம் அல்லவா? ஒரே ஒருமுறை படுத்துவதற்கு அவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? 

நம் தமிழ்நாட்டில் தான் பெண் பிள்ளைகளின் வயதிற்கு தகுந்தவாறு அழகாக பாவாடை, தாவனி, புடவை என்று இருக்கிறது. மற்ற நேரங்களில் உன் விருப்பப்படியும் உன் கணவர் விருப்பப்படியும் ஆடை அணிந்து கொள்ளலாம். ஆனால் திருமணம், கோயில் போன்ற விசேஷங்களுக்கு புடவை தான் கட்ட வேண்டும்” என்றார். 

யார் சொன்னாலும் கேட்காத பேத்தி இன்று மங்கை கூறியதும் சரி பாட்டி என்று உடனே ஒத்துக் கொண்டார். 

அதுதான் தர்மராஜ் மங்கையர்க்கரசியின் குடும்பம். அன்பான மக்களையும் பேரன் பேத்திகளையும் கொண்டு கொண்ட குடும்பம் தான் இவர்களது. 

இன்று பேரன்பேத்திகள் நால்வருக்கும் திருமணம் முடிந்து அவர்களின் மக்களான கொள்ளு பேரன் பேத்திகளையும் பார்த்து விட்டார்கள் இருவரும். 

இதுவரை நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்த கணவன் மனைவியார்.  வயது மூப்பினால் ஒரு நாள் படுத்த படுக்கையானார் தர்மராஜ். மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இறந்து விடுவார் என்று சொல்லிச் சென்றார். 

அதை கேட்ட நாளிலிருந்து அவர்களது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மணிகண்டன் வீட்டில் கூடிவிட, ஐந்து நாட்களுக்கு மேலாகியும் அவரின் விழிகள் அசைவும் தொண்டக்குழி அசைவம் மட்டுமே அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும். 

கணவனை வெந்நீர் வைத்து குளிப்பாட்டி அழகாய் வேஷ்டி சட்டை போட்டு பேரன் வாங்கிக் கொடுத்த சோபாவில் தோட்டத்தை பார்த்தபடி உட்கரவைத்து விட்டு குளிக்கச் சென்றார். 

மஞ்சள் பூசி குளித்து தன் கணவன் வாங்கி கொடுத்த மஞ்சள் சீலையை உடுத்தி, தலை பின்னி, அவர்கள் வீட்டில் பூத்த மல்லிகைச் சரத்தைச் சூடி, அவரின் அருகில் வந்து, அவரின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்து, “இங்கே பாருங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி மஞ்சள் பூசி குளிச்சு, நீங்க வாங்கி கொடுத்த மஞ்சள் சீலையை கட்டி இருக்கேன்” என்று சொல்லி அவரின் நெற்றியில் இதழ் பதித்தார்.

அவரின் சோபாவின் அருகில் சின்னதாய் மோடாவை எடுத்து போட்டு, அதில் உட்காந்து, அவரின் மடியில் தலை சாய்த்து, அவர் கையை எடுத்து தன் முகத்தில் வைத்து “பாத்தீங்களா! உங்களுக்கு புடிச்ச மாதிரி வந்து இருக்கேன். உங்க மனசுல உள்ள எல்லா கவலையையும் கஷ்டத்தையும் போட்டுட்டு என்னை பாருங்களேன்!” என்று அவரின் கைகளில் முத்தம் கொடுத்தார். 

மங்கையின் செய்கைகளிலும், பேச்சிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் கைவிரல் நடுங்க, ஏதோ சத்தம் கேட்டது. வேகமாய் நிமிர்ந்து கணவனின் அருகில் செல்ல, அவர் கண்களைத் திறந்து தன் மனைவியை ரசித்து “மங்கா” என்று சொல்லி சிரித்தார். 

“என்னங்க என்ன பாத்துட்டீங்களா?” என்று கேட்க, சத்தம் தான் வரவில்லை. இருந்தும் அவரின் கண்களில் தெரிந்த கேள்விக்கு, அவரும் “ஆமாம்” என்று கண் சிமிட்டி சொல்லி மஞ்சள் சீலை கட்டி, மல்லிகை பூச்சூடி நிற்கும் தன் மனைவியை முழுமையாக தன் கண்களுள் புதைத்துக் கொண்டு புன்னகையுடன் மெதுவாய் கண்களை மூடினார். 

கணவன் மூடிய கண்கள் விழிகள் அசையாமல் இருப்பதைக் கண்டு, அவர் நிம்மதி அடைந்து விட்டார் என்ற திருப்தியில், அவரை மெதுவாக அணைத்து அவரின் மடியில் தலை சாய்ந்தார் மங்கை என்னும் மங்கையர்க்கரசி.

– அருள்மொழி மணவாளன்.

12 thoughts on “மஞ்ச சீலை”

    1. CRVS2797

      ஓ மை காட்..! இதுவல்லவா தாம்பத்தியம். இதை புரிந்துக் கொள்ள மொழிகள் கூட தேவையில்லை.
      ஆனால், எத்தனை வயதானாலும் துணையை இழப்பது வலியைத் தானே தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *