Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-22

மனதில் விழுந்த விதையே-22

அத்தியாயம்-22

Thank you for reading this post, don't forget to subscribe!

      சாக்ஷி பிடிவாதமாக வேதாந்த் பற்றி எதையும் உரைக்காமல் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டாள்.

  மென்பனி, சஹானா இருவரும் கடைசி வரை வேதாந்த் பெயரை உச்சரிக்காமல் கமுக்கமாய் இருந்த சாக்ஷியை கண்டு வியந்தனர்.

      “ஆன்ட்டி காபி போடுங்க குடிப்போம்.” என்று சஹானா கூறவும் பத்மா இடையில் கைவைக்க, “இவளிடம் பேசி டயர்ட் ஆகியிருப்பிங்க ஆன்ட்டி அதுக்காக சொல்லறேன். உங்க ஹெல்திற்காக” என்று ஐஸ் மழையை தலையில் வைக்க, அது பொய்யானது என அறிந்தும் பத்மா கிச்சனுக்கு நடையிட்டார்.

   மென்பனி, சஹானா இருவருமே “அவ லவ் சொன்னப்பிறகு நம்ம மேட்டரை சொல்வோம். அதுவரை நாமளும் கமுக்கமா இருப்போம்.” என்று கிசுகிசுத்து பேசிக்கொண்டு மிருதுளா பக்கம் வந்தார்கள்.

  “இவ ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கா?” என்று மென்பனி கேட்க, “அம்ரிஷ் வந்தார்ல அவளிடம் ஏதோ பேசிட்டு சட்டுனு கிளம்பிட்டார். ஐ திங் என்னவோ லவ் ரிலேட்டட்டா பேசியிருக்கார்.” என்று சாக்ஷி கூறிட, இதுவரை பஞ்சை காதில் வைத்திருந்தவளை “காது கேட்குதாடி?” என்று மென்பனி கேட்டாள்.

   “அம்மா போனதும் ஒரு பக்கம் பஞ்சை எடுத்துட்டேன்” என்றவள் முகம் சுணங்கினாள் சாகஷி.

   “பெயின் இருக்கா?” என்றதும் “ஹெவியா இல்லை காலை ஊனமுடியலை.” என்று சோகமாய் உரைத்தாள்.

   “அம்ரிஷ் என்ன சொன்னார் மிருதுளா?” என்று மென்பனி ஆழம் பார்த்தாள்.

   “என்ன சொல்வார்? என்ன சொல்லணும்னு நினைக்கிறிங்க? இனி தொந்தரவு தரமாட்டேன்னு சாரி சொல்லி கிளம்பிட்டார். அவர் என்ன அர்த்தத்துல பழகியிருக்கார்னு உங்களுக்கும் தெரிந்திருக்கு அப்படி தானே?” என கோபமானாள் மிருதுளா.

   “அதுக்கு அழுவறியா?” என்று சஹானா கேட்க, சாக்ஷி சிரிக்கவும், “இங்க பாருங்க என்னை கிண்டல் பண்ணறிங்க. என்னை கிளறி ஏதாவது பேசினா அதுல ஹிண்ட் எடுக்க பார்க்கறிங்க, நான் எந்த சிக்கலிலும் விழலை. அரசியல்வாதி, நடிகன், பணக்காரன் எனக்கு யாரும் வேண்டாம். நான் எப்பவும் தனியா இருந்துக்கறேன்” என்று குலுங்கி அழுதாள்.

   ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அவளை ஆராய்ந்தனர். “இவ எதுக்கு அழுவறா?” என்று பத்மா வரவும் திடுக்கிட்டு எழுந்தவள் கண்ணை துடைத்தாள்.

   “அவ வந்த நேரம் சாக்ஷிக்கு உடம்பு சரியில்லைனு நினைக்கிறா ஆன்ட்டி” என்று சஹானா வாயுக்கு வந்ததை உருட்டினாள்.

  “எதுக்குடி இப்படி அடிச்சி விடற பிறகு அதுக்கும் யோசித்து தேம்பி தேம்பி அழுவா.” என மென்பனி கூறவும் மிருதுளா இரு தோழிகளையும் முறைத்தாள்

   “அவ டான்ஸ் கிளாஸ்ல விழுந்தா. இந்த மாதிரி திங்க் பண்ணமாட்டேன்.” என்று கூறிவிட்டு, “என்னால தான் இந்த அம்ரிஷ் கேங் கூட உங்களுக்கு  தலைவலி” என்றதும் பத்மாவோ “ஆங் உண்மை. நூத்துல ஒரு வார்த்தை. எதுக்கு அவ்ளோ பெரிய நடிகன் வீட்டுக்கு வந்துட்டு வந்துட்டு போகணும்.

    அவன் பார்வையே சரியில்லை. சாக்ஷியை பார்க்க வந்துட்டு மிருதுளாவையும் பார்க்கறான். சேசே இங்கயே இப்படி என்றால் எப்படி தான் தனியா அங்கயிருந்திங்களோ?” என்று புலம்பவும் குருபிரசாத்தோ பத்மாவை இழுத்து கொண்டு அடக்கி வைத்தார்.

   “அம்ரிஷை உனக்கு ஜோடி போட்டு பார்த்துட்டு இருக்காங்க இந்த ஆன்ட்டி” என்று கிளுக்கி சிரித்தாள் சஹானா.

   மென்பனியோ “ஏ சாக்ஷி அதனால தான்டி உனக்கு சடனா மேரேஜ் பத்தி பேசி போர்ஸ் பண்ணறாங்க. உனக்கு புரியலையா? அங்கிள் ஆன்ட்டிக்கு நீ அம்ரிஷை விரும்பறதா நினைக்கறாங்க.” என்று கதையாசிரியர் என்பதை நிரூபித்தாள்.

    “உன் கற்பனையை நிறுத்தறியா?” என்று சஹானா கூற, “இல்லை அப்படி நினைச்சி தான் பேசறாங்கனு இப்ப புரியுது. பிகாஷ் அம்ரிஷ் கூட டான்ஸ் ஆடின வீடியோவை பார்த்து பார்த்து என்னை பஸ்பமாக்கினாங்க.” என்று சாக்ஷி தலையை தாங்கினாள்.

   “நான் வேண்டுமின்னா என்னாலனு க்ளியர் பண்ணிடவா?” என்று மூக்கூறிந்து மிருதுளா பேசவும், “வேண்டாம் அம்ரிஷ் பத்தி உன்னோட ஒப்பீனியன் மட்டும் எங்களுக்கு க்ளியர் பண்ணு” என்று சாக்ஷி கேள்வி எழுப்பவும் வாயை மூடினாள்.

   என்னவென்று கூறுவது? அப்படியிருந்தும் தன் மனதை தோழியிடம் திறந்திடும் முடிவில், “எங்கம்மா இறந்ததும் அடுத்த ஆறுமாசத்துல எங்கப்பா திலகா சித்தியை கல்யாணம் செய்துக்கிட்டார். எங்கம்மாவோட வாழ்ந்த வாழ்க்கையை அவர் நினைச்சி பார்த்து நேரமெடுத்துக்கலை.
   இதே தான் அம்ரிஷும் செய்ய துடிக்கறார். இஷாவை விவாகரத்து பெற்றதும் எப்படி என்னை ரூட் விடறார்.
   அவர் மனசுல உண்மையான காதல் பதியலை. இன்னொரு துணை தேவைப்படுது. உடல் இச்சை இது தான் முன்னிலை வகிக்குது.

   அப்படியிருக்க நான் எதிர்பார்த்து ஏங்கற அந்த அன்பு எனக்கு பிற்காலத்துல கிடைக்காது.

    நான் தவறவிட்ட அன்பை, என் துணையிடம் ரொம்ப ரொம்ப எதிர்பார்க்கிறேன். எனக்கு சாதாரண மனுஷனிடம் பொறுமையா கிடைச்சாலும் ஓகே. இப்படி மேடையில மிளிரும் நடிகனிடம் அவசரமான காதல்ல விழுந்து மோகம் முப்பது நாள்ல நான் கசந்து, பிற்காலத்துல உதாசினமென்ற ஒன்று மட்டும் மிச்சமாக வேண்டாம்.

   அதனால எனக்கு அம்ரிஷ் வேண்டாம். எனக்கு சராசரி ஆண்மகனே போதும். இந்த ஆறடி உயரம், ஆப்பிள் கன்னம், சிக்ஸ் பேக் உடல், குறுகுறுக்கற கண்ணு, படத்துல நடிக்கறேன்ற பெயர்ல கூட நடிக்கிற நடிகையை கிஸ் பண்ணிட்டு இருக்கறவர், தினம் தினம் காஸப், கிசுகிசு எதுவுமே வேண்டாம்” என்றவள் தாரை தாரையாக கண்ணீரை உகுத்தவும், அவள் மனது அவள் தந்தை கேசவனை வைத்து அம்ரிஷை முடிவெடுப்பது புரிந்தது.

  மூன்று தோழியும் எந்த மாற்று கருத்தும் தரவில்லை. ‘அம்ரிஷ் அப்படி கிடையாது.’ என்று எப்படி உறுதி தருவார்கள். தங்கள் துணைகளிடமே காதலை சொல்லாமல் ஒரு முடிவெடுக்க நேரம் எடுத்து கொள்வதால் அம்ரிஷை பற்றி உடனே எதையும் பேசி முடிவெடுக்கவில்லை.

      நான்கு தோழிகளும் பிரச்சனையை ஒத்தி வைத்தனர். விவாகரத்து பெற்ற அம்ரிஷிற்கும், மனதால் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் மிருதுளாவுக்கும் நேரம் வேண்டுமென்று முடிவெடுத்தனர்.

அதனால் பணியிலிருக்கும் பள்ளியில் நடந்தவையை அரட்டை அடித்து, இரவு உணவை முடித்து கிளம்பினார்கள்.

  மிருதுளாவுமே தனியாக அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்றிருக்க, தனியாக இருந்த சாக்ஷிக்கு வேதாந்திடமிருந்து ஏதேனும் மெஸேஜ் வந்துள்ளதா என்று ஆர்வமாய் தேடினாள்.

   இந்த இடைப்பட்ட நாளில் அவளோடு அவன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறுஞ்செய்தியில் வருகை பதிவு செய்திடுவான். இன்றோ குறுஞ்செய்தி கதவை தட்டவில்லையே.

    இங்கிருந்து சென்ற பொழுதும் ஏதோ இறுக்கமான முகத்தை அவன் வீசியது மனக்கண்ணில் வரவும், அம்ரிஷை தனக்கு ஜோடிப்போட்டு பேசிய பெற்றோரையும் கணக்கீட்டவளாக அவன் முகஇறுக்கத்திற்கு விடைக் கிடைத்தது.

  ஆயிரம் வாட்ஸ் பல்ப் முகத்தில் எரியவும் மனம் தெளிவாக, அவளாகவே வேதாந்த்திற்கு அழைத்தாள். ஆனால் அவனிருந்த கோபத்திற்கு அலைப்பேசியை எடுக்காமல் அலைக்கழித்தான்.

    குறுஞ்செய்தி அனுப்பி கேட்பாள் அப்பொழுது பார்க்கலாமென்று மிதப்பில் இருக்க, சாக்ஷி அறைக்கு பத்மா தலையணை தண்ணீர் பொத்தானோடு வந்து நின்றார்.

“இங்க வந்து ஏன் தூங்கறிங்க?” என்று கடுகடுக்க, “உனக்கு கால்ல அடிபட்டிருக்கு. பாத்ரூம் போக வர ஒரு சப்போர்டிற்கு வந்தேன். ஏன் வரக்கூடாதா? போன் பேச டிஸ்டபன்ஸா இருக்குமா?” என்று பேசவும், “நேத்து மாதிரி மிருதுளாவை வரச்சொல்லி பார்த்துக்கறேன்.” என்றதும் “நானே பார்த்துப்பேன்” என்று போனை பிடுங்கி கப்போர்டில் வைத்து மூடினார்.

   சாக்ஷிக்கு வெறி கூடியிருக்க வேண்டும். ஆனால் மிருதுளாவுக்கு தாய்தந்தை இருந்தால் அம்ரிஷை ஏற்பாரா? கட்டி கொடுப்பாரா? பெற்றோர் மனநிலை என்ன? என்று ஆராயவும் அம்ரிஷை ஏன் மறுக்கின்றனர் என்று அறிந்து அதற்கேற்றது போல தோழி வாழ்வில் முடிவெடுக்கவும் விட்டு பிடித்தாள்.

  என்ன தான் தோற்றம், நடை, உடை, பாவணை என்று குணத்தில் தங்கள் பார்க்கும் விதம் வேறு. பெற்றோர் பார்வை வேறு அல்லவா?!

மிருதுளாவுக்கு இங்கே பெற்றோர் என்பவர்கள் ஒப்புக்கு இருப்பவரே. தோழிகள் மூவரும் தானே பெற்றோரின் இடத்தையும் நிரப்ப வேண்டும்.

தன் பெற்றோர் எந்தெந்த காரணத்தை அடுக்குகின்றனரோ அதில் அம்ரிஷின் நிறை குறை அவர்கள் கண்ணோட்டத்திலும் அறிந்திட பொறுமைக்காத்தாள்.

    இரு நாட்களும் எவ்வித பிரச்சனையின்றி உருண்டோடியது.  வேதாந்த் மனம் கேளாது சாக்ஷியை காண மதியம் போல வந்தான்.

   அம்ரிஷை அழைத்து வராததால் பத்மா மனம் நிம்மதியடைந்தது.
   வீட்டில் மிருதுளா, குருபிரசாத்தும் வேலைக்கு சென்றிருக்க, பத்மா மட்டும் இருந்ததால் சாக்ஷியின் பொற்பாதங்களை பிடித்து ஆராய்ந்த கணம், பத்மா வேதாந்திற்கு சர்பத் எடுத்துவர சென்றிருந்தார்.

   அவளது காலை பிடித்து வலியை ஆராய்ந்தவனிடம், “இரண்டு நாளா எந்த மெஸேஜுக்கும் நீங்க ரிப்ளை தரலை? என்ன காரணம்?” என்று அன்னை வரும் முன் கேட்டுவிட்டாள்.

அவனோ சாவதானமாக “பொண்ணு பார்க்கற பங்ஷன் முடிஞ்சுதா? இல்லை இனி தான் ஆரம்பமா?” என்று நக்கலாய் கேட்டான் வேதாந்த்.

   அதன் பின் சாக்ஷி முறுவல் புரிந்து, “அம்ரிஷ் மிருதுளாவை பார்க்க இரண்டு முறையும் வந்தாரா. அப்பா அம்மா அதை தப்பா எடுத்துக்கிட்டாங்க. அம்ரிஷ் என்னை தான் தேடிவந்து விரும்பறதா?” என்று சிரித்தாள்.

  புருவம் இடுக்கி ‘என்ன?’ என்பதாய் பார்த்தவனுக்கு மேலும் உரைத்தாள்.

  தாய் தந்தையர் அம்ரிஷை தான் காதலிப்பதாக எண்ணி பொண்ணு பார்க்க முடிவெடுத்ததை அறிவித்தாள்.

  இன்னமும் தன் ஈன்றவர்களுக்கு அம்ரிஷை காதலிக்கவில்லை என்று உரைக்காமல் சுற்றுவதையும் மொழிந்தாள்.

   வேதாந்திற்கு இரு தினமும் நெருஞ்சிமுள்ளாக அழுத்தியா பாரம் குறைந்தது. வழக்கமாய் உதிர்க்கும் வசீகரமான புன்னகையை அளவோடு சிந்தியவன், அவளது கால்களை மென்மையாக அழுத்தம் கொடுத்து, பாதத்தில் முத்தமிட்டான்.

  அவன் வாய்திறந்து உரைக்காத காதலை, தன் செயலால் பரதமாடும் சாக்ஷி பாதத்தில் மென்முத்தமிட்டு காதலை பறைச்சாற்றினான். சாக்ஷி திடுக்கிட்டவளாய் பேச்சற்று விழித்தாள்.
  
   அங்கே கண்ணாடி டம்ளர் உடைப்பட, வேதாந்த்-சாக்ஷி திரும்ப, பத்மாவோ அதிர்ச்சியில் மூழ்கியிருந்தார்.

   “என்ன பண்ணிட்டுயிருக்கிங்க தம்பி. உங்க பிரெண்ட் அம்ரிஷ் என் மகளை விரும்பறார். நீங்க அவ காலை பிடிச்சி? சேசே ஏன் நண்பருக்கு துரோகம் செய்யறிங்க. முதல்ல நீங்க வெளியே போங்க.” என்று முகம் சுழித்தார்.

  என்ன தான் அம்ரிஷை பற்றி அறிந்து வைத்தாலும், ஏனோ மகளின் காலை பிடித்து வேதாந்த் முத்தமிடவும் அம்ரிஷிற்காக பாவப்பட்டதால் கத்திவிட்டார் பத்மா.

    வேதாந்த் மெதுவாக எழுந்தவன் தன் கால் சட்டை பையில் கையை விடுத்து தன் மனதை சமன் செய்து தயார்ப்படுத்தி, “ஆன்ட்டி அம்ரிஷ் சாக்ஷியை விரும்பலை. மிருதுளாவை விரும்பறான்.

   நான் தான் சாக்ஷியை விரும்பறேன். நான் வேதாந்த் நரம்பியல் டாக்டர்னு மட்டும் தான் உங்களுக்கு தெரியும்.

  என் மீதி பயோடேட்டா கூடிய சீக்கிரம் தர்றேன். இப்ப மினி அப்டேட் தர்றேன். எங்க அப்பா விக்னேஷ்வரன் அம்மா ராதிகா கே.கே.நகர்ல வசிக்கறோம். நான் கே.கே.நகர்லயே நரம்பியல் மருத்துவனா க்ளினிக் வச்சியிருக்கேன். எனக்கு ஒரு அண்ணன் அவர் பெயர் நிஷாந்த், வக்கீலா இருக்கார்.

    முறையா அப்பா அம்மாவோட வந்து சாக்ஷியை இன்னொரு நாள் பொண்ணு பார்க்கறேன். ஆனா உடனே கல்யாணம் எல்லாம் நடத்த முடியாது. ஏன்னா எனக்கு முன்ன எங்க அண்ணா இருக்கார். அவருக்கு மேரேஜ் ஆகலை. எப்படியும் கொஞ்ச நாளாகும்.

     உங்க பொண்ணு என்னை தான் விரும்பறா. விரும்பற தானே சாக்ஷி?” என்று கேட்டதும், சாக்ஷி திருதிருவென விழித்தாள்.

“என்னிடம் பதில் தெரியாம எங்க அம்மாவிடம் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கிங்க.” என்றுரைத்தாள்.

   “விரும்பறியா இல்லையா? Say Yes or No” என்று கேட்டவனை உதைக்க வேண்டும் போல இருந்தது.

  தன் அன்னை எதிரில் கேட்கின்றான், பதில் தரமுடியுமா? என்று விழிக்க, சாக்ஷியருகே பத்மா வந்து, “காதலிக்கறியா? யாரை காதலிக்கற?” என்று எரிச்சலாய் கேட்டார். இங்கு வந்ததிலிருந்து அம்ரிஷ் சாக்ஷி என்று தலையை பிய்த்து கொள்ளாத குறையாக திண்டாடுவது பத்மா தானே.

    “சொல்லுடி” என்று அதட்ட, ஆள்காட்டி விரலால் வேதாந்த்தை சுட்டிகாட்டினாள். வேதாந்த் உதடுவிரிந்து புன்னகைக்க, சாக்ஷியோ ‘இப்படி கட்டன்-ரைட்டா பதில் சொல்ல வச்சிட்டானே. அம்மா என்ன ரியாக்ஷன் தரப்போறாங்களோ’ என்று பயந்தாள். எதையும் அன்னை தந்தையிடம் மறைத்து கூறாதவள். காதலிப்பதை கூட தானாக அன்னையிடம் உரைத்திடும் முடிவில் இருந்தாள். இப்படி வேதாந்த் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதிலை கேட்டு நிற்பானென்று கனவிலும் நினைக்கவில்லை.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *