Skip to content
Home » மனமெனும் ஊஞ்சல்-8

மனமெனும் ஊஞ்சல்-8

அத்தியாயம்-8

Thank you for reading this post, don't forget to subscribe!

  ஷோபனாவையே விழியகலாது பார்த்தவள், “எல்லாரும் அப்படி தான் சொன்னாங்க. ஆனா எங்க இலக்கியா அத்தை அப்படி சொல்லலை. அவங்க எப்பவும் யாரையும் குறை சொல்ல மாட்டாங்க.

  என் தலைவிதி நானா தான் மாத்திக்கிட்டேன் புலம்புவாங்க.” என்றவள், லக்கேஜ் வைத்திருந்த கையில் வலி ஏற்பட, கீழே பிடிமானம் விழவும், “முதல்ல வா… உட்காரு” என்று அழைத்துவிட்டு, “இலக்கியா இந்த உலகத்துல இல்லைன்னு யாரு சொன்னா? நான் வாழுற வாழ்க்கையே அவ தந்தது. அவ என்னோட தான் இருக்கா. உயிரோட இருக்கா. ஊர்ல இருக்கா.

  இப்ப இந்த வீட்டுக்கு என் அண்ணன் கருணாகரன் மக வந்திருக்கா‌.” என்று கண்ணை துடைத்தார்.

என்ன‌தான் பேச்சில் திடம் இருந்தாலும், உடன் பிறந்தவள் உயிரோடு இல்லையென்ற வலியோடு வரவேற்று கட்டியணைத்தார்.

    “அம்மா போதும் பிறந்த வீட்டு சொந்தம் என்றதும் அப்படியே பேசிட்டு இருக்கிங்க. பையன் பதினாறு நாள் கழிச்சு வந்திருக்கேன். என்னை கவனிங்க” என்று சூழ்நிலையை சமநிலை ஆக்கினான் நிரஞ்சன்.

  இரவை தாண்டிய நேரமென்பதால் ஏதாவது சாப்பிடறிங்களா?’ என்று ஷோபனா கேட்க, அம்மாவுக்காக படையலிட்டது சாப்பிட நைனிகா கொண்டு வந்துட்டா. வடை பணியாரம் கொஞ்சம் கறிக்குழம்பு இருக்கு இட்லி மட்டும் அவிச்சிடுங்க. குளிச்சிட்டு வந்துடறேன்” என்று நிரஞ்சன் அவனது அறைக்கு செல்ல இரண்டடி எடுத்து வைத்தவன், “அம்மா அப்பா நைனிகா தங்க?” என்று கேட்டதும், “நாங்க பார்த்துக்கறோம்” என்று கூறி நிரஞ்சன் அறை தங்கள் அறைக்கு நடுவே நைனிகாவிற்கு தங்க ஏற்பாடு செய்தார் ஷோபனா.

   வீரராகவன் அமைதியாக மாறி, “ஏதாவது தேவைன்னா தயங்காம கேளும்மா. இலக்கியா மாதிரி தான் ஷோபனா உனக்கு அத்தை.” என்றவரிடம் முகம் திருப்பி சென்றாள் நைனிகா.

    அவருக்கு அது புரிந்தாலும் மனைவி இறந்ததுக்கு கூட வராதவரை நைனிகா மரியாதையான பார்வை பார்ப்பது அபூர்வமே.

    “இன்னிக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு தேவையில்லாததை அகற்றிடுவேன்” என்று கூறினார் ஷோபனா.

  “பரவாயில்லை. இங்க இருக்க போறது ஒருவாரமோ இரண்டு வாரமோ, அதனால நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். நீங்க எதுவும் அகற்ற வேண்டியதில்லை” என்று கூறி கொண்டு வந்த பையில் உடையை எடுத்தாள். குளிக்க சென்று கதவை மூடிவிட, வீரராகவனோ, இலக்கியா வளர்த்த பிள்ளை. நம்மளை எப்படி நினைச்சியிருப்பாளோ?” என்று ஷோபனாவை வெளியே அழைத்து சென்றார்.

ஷோபனா இட்லியை ஊற்றி முடித்து தன் உடன்பிறப்பு மண்ணில் இல்லாததை சிந்தித்தவர், இட்லி குக்கர் சத்தம் எழுப்பி நிகழ்காலத்திற்கு இழுத்தது.

   ஷோபனா இட்லியை ஹாட்பாக்ஸில் வைத்து உணவுமேஜைக்கு கொண்டு வரும் நேரம் நிரஞ்சன் தலை துவட்டி வர, மற்றொரு அறையில் நைனிகா வரவும், சரியாக இருந்தது.

   இருவரும் அருகருகே நடந்து வரவும் ஷோபனா மனம்  கல்யாணக்கோலத்தில் வைத்து பார்த்தார்.

பாவம்…. மகன் நைனிகாவிற்கு தாலி கட்டி கூட்டிக் கொண்டு வந்ததை அவர் அறியாது போனார்.‌

   சாப்பிட எடுத்து வைக்க, நைனிகா கைகள் தட்டில் ஸ்தம்பித்து, கண்ணீர் துளிர்த்தது.

  ஷோபனாவோ நைனிகாவிடம் “ஏன்  அழுவற?” என்று கேட்டிட, “அத்தைக்கு உடல் முடியாம படுத்த படுக்கையா இருந்தப்ப தான் நான் சமைத்தேன். அதுக்கு முன்ன என்னை உட்கார வச்சி அத்தை பரிமாறுவாங்க.

இந்த பதினாறு நாள் நான் பம்பரமா சின்ன அத்தை வீட்டு ஆட்களுக்கும், சித்தப்பா வீட்ல எல்லாருக்கும் சமைச்சி தந்தேன். இப்ப தான் ஆறு மாசம் கழிச்சு எனக்கு பரிமாறற விதமா உட்கார்ந்துட்டேன்.” என்றுரைத்தாள்.

  “இலக்கியாவுக்கு ஆறு மாசமா படுத்த படுக்கையா இருந்தாளா?” என்று வீரராகவன் கேட்க, “ஆமா.” என்று ஒரு வரி விடை உதிர்த்தாள்.

‌ ஷோபனாவுக்குமே ஆறுமாதத்தில் அக்கா தன்னை தேடியிருப்பாளா? மகனையாவது பார்க்க ஆசைப்பட்டு இருப்பாளா?’ என்று கேட்டிட, “எதிர்பார்க்கலைன்னு சொல்ல மாட்டேன். ஆனா நீயா கூப்பிடாத அவங்களா வந்தா பார்க்குற பாக்கியம் கிடைக்கட்டும்னு சென்னாங்க” என்றதும் இரண்டு இட்லிக்கு மேல் தொண்டையில் இறங்காமல் எழுந்து விட்டாள்.
 
    நிரஞ்சன் மூன்றுடன் எழுந்து விட்டான்.‌

  வீரராகவன் இட்லியை பிசைந்தபடி இருந்தார். ஒரு வாய் இறங்கவில்லை. ஷோபனாவுமே உறங்க சென்ற நிரஞ்சனையும் நைனிகாவையும் நிறுத்தி பேச்சை நீட்டிக்கவில்லை.
    ஷோபனா சாப்பிடாமலே தட்டை மூடிவிட்டு அறைக்கு வந்தார்.
  
   ஷோபனா வீரராகவன் இருவரது அறைக்குள், “நாம ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இலக்கியாவை பத்தி தெரிந்து வச்சிருக்கணும். தப்பு பண்ணிட்டோம். கடைசியா கூட அவ முகத்துல முழிக்க முடியலை. இறந்ததுக்கு கூட போகலை. அங்கிருக்கறவங்க இதுக்கு கூட தங்கச்சி வரலைன்னு பேசியிருப்பாங்க” என்று  அழுதார் ஷோபனா.

  “நமக்கு தெரிந்தா போகாம இருந்திருப்போமா ஷோபனா? ராஜப்பன் என்னிடம் கூட சொல்லலை.” என்று வருந்தினார்.

  “ஏதோ நிரஞ்சனாவது கொள்ளி போட்டானே. அந்த அளவுக்கு நல்லதுன்னு கடவுளை வேண்டிக்கலாம். அவனும் போகாம இருந்திருந்தா, என் மனைவி ஆத்மா சாந்தியடைந்திருக்காது” என்று சிறுப்பிள்ளையாக அழுதார்.

    ஷோபனாவோ தேற்ற தெரியாமல் நின்றார்.‌

  இங்கே புதுயிடத்தில் நைனிகா, அறையில் வந்து நன்றாக உறங்கினாள். ஊரில் மாதவன் கிணற்றுப்பக்கமிருந்து வாயை பொத்தி கட்டியணைக்க, அதிலிருந்து பொட்டு உறக்கமின்றி நடமாடியவள். இன்று தான் ஏதோ பாதுகாப்பாய் உறங்குவதாக படுத்தாள்.

    நிரஞ்சனும் தன் கடமை முடிந்தது என்றதற்கிணங்க அறையில் மல்லாந்து பார்த்தான்.

  நாளை முதல் அலுவலகம் செல்ல வேண்டும்.

   நிரஞ்சன் உறங்கி காலையில் விழித்த போது, தன் வீடு என்றதும் சோம்பல் முறித்தவன், பதினைந்து நாள் நைனிகா போட்ட காபியை எதிர்பார்த்தான்.   

    ‘நைனிகா? இங்க என்ன பண்ணறாளோ? அந்த வீட்ல என் எல்லா தேவையும் கவனித்தவள் அட்லீஸ்ட் இங்க இருக்கற வரை நான் கவனித்துக்கணும்’ என்று பல் விலக்கி பாய்ந்து வந்தான்.

   அவன் எண்ணியது போல அவளுக்கான அறையில் கைகளை பிசைந்து வீற்றிருந்தாள்.

  “அம்மா.. அம்மா… நைனிகாவுக்கு காபி கொடுங்க” என்று கூறினான்.‌

  “கொடுத்தாச்சுப்பா” என்று அவனுக்கானதை நீட்டவும் ‘ஓகேம்மா அம்மா… அவளை நீங்க தான் பார்த்துக்கணும்’ என்று மெதுவான குரலில் உரைத்தான்.‌
 
  “அவயெனக்கும் அண்ணன் மகள் டா.” என்று கன்னம் பிடித்தார்.

   அதன் பின் அவன் காபி பருகி முடித்து வைத்துவிட்டு, அலுவலகம் செல்ல ஓடினான்.

  அலுவலகம் கிளம்ப தயாராகி வந்தான்‌. கழுத்தில் டேக் மாட்டி, முழுக்கை சட்டை பேண்ட் இதில் முதுகுப்பை வேறு.

  “லஞ்ச் ரெடியாம்மா?” என்று வந்தான்.

   “காலையில தோசை குருமா ரெடிப்பா. மதியத்துக்கு பொரியல் தான் இன்னும் ஐந்து நிமிஷமாகும். நீ அதுக்குள்ள டிபன் சாப்பிடு” என்றார்‌.

   “அம்மா… ஊர்ல நைனிகா நான் வர்றதுக்குள்ள எல்லாம் ரெடி பண்ணிடுவா. நீங்க என்ன இவ்ளோ லேட் பண்ணறிங்க” என்றான்.

   தன் பெயர் அதுவும் நிரஞ்சன் வாயிலிருந்து என்றதும் எட்டிப்பார்க்க, ஷோபனாவோ வீரராகவனை கண்டு அர்த்தமாய் பார்த்து வைத்தார்.

    வீரராகவனிடம் இரவெல்லாம் இலக்கியாவிற்காக அழுது கண்ணீரை உகுத்தி, அதன் பின்‌ நைனிகாவை பற்றி கணவரிடம் பேசினார்.

  ”நம்ம நிரஞ்சனுக்கு நைனிகாவை  கட்டி வச்சி நம்ம கூடவே வச்சிக்கலாமா?” என்று கேட்டார்.

  வீரராகவனோ ”பையன் யாரையாவது விரும்பியிருந்தா? ஆபிஸ்ல அந்த நிஷா பொண்ணு அவனிடம் பிரப்போஸ் பண்ணற மாதிரி போகுதுனு நிறைய கிசுகிசுக்கறதா சொன்னானே.

அநேகமா கோவா ட்ரிப்ல காதலிப்பதா சொல்லுவான்னு பையன் சொன்னான் நினைவில்லையா ஷோபனா.
  நைனிகாவை ஹாஸ்டல்ல தங்க ஏற்பாடு பார்க்கறான்.‌ நீயா எதுவும் முடிவெடுக்காத” என்று அழுத்தமாய் உரைத்தார்.

  அவர் வாழ்க்கையை தான் இலக்கியா முடிவெடுத்து ஷோபனாவை கரம் பற்ற வைத்தாளே‌. அது போல மைந்தன் வாழ்வில் நேரிடக்கூடாது என்ற எண்ணம்‌.

   ஷோபனாவுக்கு நிரஞ்சன் தான் யார் காதலையும் இன்னமும் ஏற்கவில்லையே என்ற நப்பாசை. அண்ணன் மகளை மணக்க வைத்து கேட்டால் மாட்டேனென்ற கூறுவான்?

   ஆனால் மறுத்து கூறிவிட்டால்…? நிரஞ்சனை மகனாக பார்த்து வளர்த்தாலும், என்னயிருந்தாலும் இலக்கியாவின் மகன் அவனுக்கு அலுவலகத்தில் நிஷாவை பிடித்திருந்து‌ தன் அண்ணன் மகள் என்று பார்ப்பதாக முதல் முறை பயமும் கவ்வியது. தனிப்பட்ட விஷயத்தில் தலையிட்டு இத்தனை நாள் அன்பை தூற்றிவிட்டால்?

  ஆனாலும் நிரஞ்சன் நைனிகாவை பற்றி கூறியதில் உள்ளம் பூரித்தது. இதே போல நைனிகாவுக்கும் மனதில், குளிர் மழை உருவாகியிருக்கும் போல. நிரஞ்சனின் பேச்சில் அறைக்குள் நீர்க்கோழியாக பதுங்கியவள் உதடு விரிந்து முறுவல் பூத்தாள்‌.

     அவன் செல்லும் பொழுது, லேசாக நைனிகா அறையை எட்டி பார்த்தான்.

   அவளை ஏன் தேடுகின்றாய்? என்று மனசாட்சி இடித்து வைக்க, ‘தானாக அழைத்து வந்து அன்னை தந்தையோடு விட்டுவிட்டு செல்வதால் சொல்லிக்கொண்டு செல்ல முடிவெடுத்ததாக’ கூறி ஒப்பேற்றினான்.

   நிரஞ்சன் சென்றதும் வீரராகவனும் டிபார்ட்மெண்ட் கடைக்கு செல்வதாக புறப்பட்டார். நைனிகாவிற்கு ஷோபனாவும் அத்தை தானே. ஏதாவது ஷோபனா இலக்கியாவை பற்றி பேச விரும்பலாம். அதுவுமில்லாமல் தன் மனைவி இலக்கியா இறந்து விட்டதை அவராலும் ஏற்க இயலாது தனியாக சற்று நேரம் உலாத்த சென்றார்.

    அவர் சென்றப்பின் ஷோபானா நைனிகாவிடம் பேசுவதற்காக, அவளிருந்த அறைக்கு வரவும், குளித்து துவைத்த துணியை மடித்தாள் நைனிகா.

   அதுக்குள்ள துவைச்சி காய்ச்சி மடிக்கிற? ரொம்ப பாஸ்ட் நீ. 

கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணினா மெஷின்ல துணி துவைக்கும் போது சேர்த்து போட்டுயிருப்பேன்” என்று வந்தார்.

  “என் வேலையை நானே பார்த்து பழகிட்டேன்” என்று நைனிகா பதில் தந்தாள்.

  “என்னை அத்தைன்னு சொல்ல மாட்டியா?” என்று நைனிகா அருகே அமர்ந்து தலை சாய்த்து கேட்டார்.

   “அப்படி கூப்பிடக்கூடாதுன்னு இல்லைங்க அத்தை. கூப்பிட்டு பழக்கம் இல்லையா? அதனால் தயக்கம்” என்று பதில் தரவும், ஷோபனா நைனிகா கையை பிடித்து, “என் மேல தங்கச்சி ஜோதிக்கும், தம்பி இளவரசனுக்கும் கோபம். என் கூட ஒரே வயிற்றுல பிறந்த இலக்கியாவோட கணவரை நான்‌ மயக்கி கல்யாணம் செய்து அழைத்துக்கொண்டதா பேசியிருப்பாங்க. ஏன் கருணாகரன் அண்ணா கூட என்னை நம்பலை.” என்று ஆரம்பித்தாள்.

   அப்படி தான் நினைக்கவில்லையென்று தலையாட்ட, உன்னிடம் கூட அதை தான் சொல்லியிருப்பாங்க. ஆனா என் மேல எந்த தப்பும் இல்லைன்னு யாரும் நம்பலை. உன் இலக்கியா அத்தை வாழ்க்கையை நான் பறிக்கலை.” என்று மொழிந்தார்.

  நைனிகாவோ மௌனத்தை உடைத்து, “தெரியும்… அத்தை டைரியை வாசித்திருக்கேன். அத்தை உயிரோட இருந்தப்ப வாசித்ததில்லை. இப்ப தான் பதினாறு நாள் முன்ன, எல்லா வேலையும் செய்து முடிச்சி தனியா அத்தை ரூம்ல இருந்தப்ப அவங்க டைரி வாசித்தேன். என் ரூம்ல தான் நிரஞ்சன் அவரு தங்கினார்.‌

   அத்தை ரூம்ல இருக்கவும் அவங்க நினைவுகள் தூங்க விடலை. அதனால் அவங்க டைரி இருக்கவும் அதை வாசித்தேன்.
  அதுக்கு முன்ன வரை நீங்க தான் இலக்கியா அத்தையோட கணவரை விரும்பி நீங்க சொன்ன மாதிரி தனியா அழைச்சிட்டு போறதா நினைச்சேன்.

  ஆனா படிக்க படிக்க உங்க தப்பில்லை என்று தெரிந்துடுச்சு” என்று முகம் பார்க்காமல் சலனமேயின்றி உரைத்தார்

   “என்ன தெரியும்?” என்று இதய கூட்டில் கை வைத்து கேட்டார்.

  “அத்தை வேண்டுமின்னே உங்களையும் மாமா மேலயும் பழிப்போட்டு சேர்த்து வச்சிட்டு, அவங்க பையனை உங்களுக்கு தாரை வார்த்துட்டாங்க” என்றாள்.

  ஷோபனா விழியிலிருந்து அருவிகள் பொழிய, “நானும் இலக்கியாவும் ஒரே நாளில் முன்ன பின்ன பிறந்தவங்க.

  அவளுக்கு கல்யாணம் ஆனப்பின்ன, எனக்கு கல்யாணம் செய்ய நினைச்சது. ஆனா கருணாகரன் அண்ணாவுக்கு வயசு ஏறவும், இலக்கியா கன்சீவா இருந்ததால் உங்கப்பாவுக்கு கல்யாணம் செய்தாங்க. நான் நிரஞ்சனை பார்த்துக்க  கூடவேயிருந்தேன்.

   ஓரளவு ஜாடை மாடையில் ஒரே உருவம். கொஞ்சம் கொஞ்சம் எங்களுக்குள் வித்தியாசம் இருக்கும்.
   நிரஞ்சனோட அப்பா வீரராகவன் என்னை இலக்கியானு நினைச்சு இரண்டு மூன்று முறை தொட்டு பேசியிருக்கார்‌. அதை தவிர அப்ப அவர் எந்த தவறும் செய்யலை.

குழந்தையை பார்த்துக்க வந்த நான் பரணைக்கு கீழே படுத்தேன். அன்னிக்கு தான் நிரஞ்சன் அப்பா வீரராகவன் நிரஞ்சனுக்கு தொட்டில் கட்டறேன்னு ஸ்டூல் போட்டு ஏறினார்.
 
   கை தடுக்கி பரணையிலிருந்து ஏர்கலைப்பையை தட்டிவிட, அது என் அடிவயிற்றில் குத்திடுச்சு‌.
 
   உடனடியா ஹாஸ்பிடல் போய் பார்த்தாங்க. உயிருக்கு ஆபத்தில்லை கல்யாணமான தாம்பத்தியத்துல ஒரு குறையும் இருக்காது. ஆனா இனி குழந்தை பெத்துக்க முடியாதுன்னு  டாக்டர் சொல்லிட்டாங்க.

   என்னிடம் அதை தெரிவிக்க இலக்கியா கஷ்டப்பட்டு அவமனசுல போட்டு குழப்பி, நிரஞ்சன் அப்பாவையும் என்னையும் சந்தேகிக்கும் படி கருணா அண்ணா எதிரேவும், இளவரசன் ஜோதி முன்னயும் பேசினா. சும்மாவே ஆனந்தஜோதிக்கு எதுடா ஊர்வம்பு கிடைக்கும்னு அலைவா. இதுல கதை கதையா அளக்க விஷயம் கிடைச்சா விடுவாளா? நிரஞ்சன் அப்பா வீரராகவனுக்கும் எனக்கும் காதல்னு கசிய விட்டுட்டா. குழந்தை பெத்தப் பிறகு இலக்கியாவுக்கு உதவ வந்து அவர் என்னிடம் அத்துமீறி பழகறதாகவும், நான் என்‌‌கூட பிறந்தவளுக்கு துரோகம் பண்ணியதாகவும் பேசிட்டா.

    அதுக்கு பிறகு இலக்கியாவுமே நிரஞ்சன் அப்பா மேல அந்த பழியை சுமத்தி தான் விவாகரத்து கொடுத்தா, ஒரு கட்டத்துல நிரஞ்சன் அப்பா வீரராகவனுக்கு என்னோட வாழ்ந்து என்னையே சந்தேகப்பட்டுட்டியேனு விவாகரத்து பத்திரத்தை இலக்கியா முகத்துல விசிறி எறிந்து என்னை தாலி கட்டிட்டார்.
அவரையும் தவறா சித்தரிச்சு கல்யாணம் செய்ய வைச்சிட்டா என்பது தான் சரியா இருக்கும்.

  எனக்கு குழந்தை பிறக்காதுன்னு நிரஞ்சனை அவரோடவே ஒப்படைச்சிட்டா. நிரஞ்சன் என் கூட வர மறுத்ததுக்கு அவனை இரண்டு அறை அறைந்து இனி அவ தான்டா உன்‌ அம்மா நான் இல்லைன்னு சொல்லி, என்னை அம்மானு கூப்பிடணும்னு சத்தியம் வாங்கியிருக்கா” என்று கூறியவர் கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் மழை பொழிந்தது.
 
   ராஜப்பன் அண்ணா தான் நிரஞ்சன் அப்பாவுக்கு பிரெண்ட். அவர் ஒரு முறை இலக்கியாவிடம் ஏன்மா சந்தேகப்பட்டேன்னு திட்டவும், ஷோபனாவுக்கு குழந்தை பிறக்காது‌, இனி யார் அவளை கல்யாணம் செய்வா அண்ணா? அதுக்கு யாரால் அவளுக்கு இந்த நிலைமையோ அவரையே கல்யாணம் செய்து வைச்சேன்னு பேசியிருக்கா. கொஞ்ச வருஷம் கழிச்சு ராஜப்பன் அண்ணன் நிரஞ்சன் அப்பா வீராவிடம் சொல்லியிருக்கார்.

  வீராவுக்கு என்னிடம் காதல் மலர்ந்த காலம். அவரால் என்னையும் விளக்க முடியலை. இலக்கியாவோடவும் சேர முடியலை.

  போன்ல பேச மாட்டேன்னு சொல்லிட்டா. என் அண்ணன் அண்ணி, அதாவது உங்க அப்பா அம்மா இறப்புக்கு வந்தப்பவும் எங்களிடம் பேசலை. அண்ணன் மகளை வளர்க்க போறேன். எனக்கு என்‌ பையனும் வேண்டாம் கணவரும் வேண்டாம்னு ஒதுங்கினா‌.

  அப்படியே ஒதுங்கியாச்சு. அவ இறப்பும் எனக்கு தெரியாத வகையில் ஒரு வாழ்க்கை” என்று‌ குலுங்கி அழுதார்.

  “அத்தை… ப்ளீஸ்… அழாதிங்க. இலக்கியா அத்தை நீங்களும் நல்லா வாழணும்னு தான்‌ மாமாவை விட்டு கொடுத்தாங்க. உங்க மேலையோ மாமா மேலையோ கோபமேயில்லை. சொல்லப்போனா அவங்களையும் அவங்க குழந்தையும் பார்த்துக்க வந்து, உங்களுக்கு தாய்மை போனதை அவங்க ரொம்ப வருத்தமா எழுதியிருந்தாங்க. தயவு செய்து அழாதிங்க. அவங்க உங்களோட தான் வாழறாங்க. அவங்க மனமுவந்து தான் அவங்க பையனை உங்களிடம் கொடுத்திருக்காங்க.” என்றதும் தன்னை வந்ததிலிருந்து மொட்டையாக விளித்த நைனிகா அத்தை என்றதும் தெம்பு வந்தவராகவும், தன் உடன் பிறந்தவள் தன் நலனிற்காக மட்டும் அவள் வாழ்வை தொலைத்து நின்றதும் புரிய வருத்தமாய் ஏறிட்டார்.

அத்தையும் மருமகளும் ஆதரவாய் ஒருவர் மாற்றி ஒருவர் பேசி களைத்தனர்.

  வீரராகவனுக்கு இந்த உண்மை காலம் கடந்து தெரிந்தது. ஆனால் தன்னையே தங்கைக்காக தானம் செய்தவள் மீது கோபம் முளைத்தது. அதோடு இலக்கியா ஷோபனா உருவத்தில் என்பது சதம் ஒன்றுப் போல இருக்க இலக்கியாவை இழந்ததாக அவர் மனம் நினைக்காமல் ஷோபனாவோடு வாழ ஆரம்பித்து விட்டார்.

  நிரஞ்சனும் அம்மா என்று அழைத்து குடும்பமாக மாறிவிட்டார்கள்.

இலக்கியா மட்டும் அங்கே தனியாக இருந்தப் போது, ஒரே ஆறுதல் நைனிகா தான்.

  அந்த நைனிகாவையும் தற்போது தன் குடும்பத்தோடு இணையட்டுமென ஆன்மா தேவலோகம் அடைந்துவிட்டார் இலக்கியா.

-தொடரும்.

12 thoughts on “மனமெனும் ஊஞ்சல்-8”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 thangai kaga thannoda vaazkhaiya vittu kuduthutangala🥺 husband um ellama paiyanum ellama evlo feel panniyirupanga😢 romba great but unmai therinja apparam evar paiyana amma kooda apappo pesa vechirukalam🥺

  2. M. Sarathi Rio

    மனமெனும் ஊஞ்சல்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 8)

    அச்சோ..! பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கா முடிஞ்சதுங்கிறது மாதிரி..
    பிள்ளைக்கு தொட்டில் கட்டப்போய், ஒரு பெண்ணோட தாய்மை உணர்வையே பறிச்ச(வரு)துக்கு இலக்கியா சிலுவையை சுமந்தாளோ…?
    தன்னோட கணவரையும், தன்னோட வாழ்க்கையையும், தன்னோட குழந்தையை கூட தங்கச்சிக்கு கொடுத்து,. .
    நடமாடும் தேவதையா இருந்து இப்ப தெய்வமாவே மாறிட்டாளோ. உண்மையிலேயே இலக்கியா ரொம் கிரேட் தான்.

    அது சரி, இப்ப நைனிகா விஷயத்துல நிரஞ்சன் என்ன முடிவெடுப்பான்னே தெரியலையே…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. இலக்கியா கதாபாத்திரம் நினைத்தால் கஷ்டமா இருக்கு 🥺
    சூப்பர் சிஸ் கதை அழகாக நகர்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *