Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே – டீஸர்

மனம் உன்னாலே பூப்பூக்குதே – டீஸர்

‘லொட் லொட் லொட் ‘ கதவு மூன்றாவது முறையாக தட்டப்பட தூக்கம் வழியும் விழிகளை சிரமப்பட்டு திறந்து பார்த்தாள் ஆருத்ரா.

ஜன்னல் வழியே இருள் விலகாமல் இருப்பது தெரிந்ததும், நள்ளிரவில் யார் அறைக்கதவைத் தட்டுவது என்று நகர நினைத்தபோது தான் அது தன்னுடைய வீட்டின் தனியறை அல்ல என்பது புத்திக்கு உறைத்தது.

திருமணம் முடித்து நான்கு நாட்கள் ஆனதால் கணவனின் அறையில் இருக்கிறோம் இது அவனுடைய வீடு என்று உணர்ந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது.

அதற்குள் மறுமுறை கதவு தட்டப்பட கோகுல கிருஷ்ணனிடம் லேசான அசைவு தெரிந்தது.

உடனே அவசரமாக எழுந்து கதவை நோக்கிச் சென்றாள் ஆருத்ரா.

கதவின் தாழ் விலகியது தான் தாமதம்,

“ஏன்டிம்மா எத்தந்நேரமா கதவைத் தட்றது? எனக்கு நாழியாறது. ஆச்சுன்னு வெளி பாத்ரூம்ல குளிச்சிட்டு சமையல்கட்டுக்கு வந்து சேரு. மசமசன்னு நிக்காதடி கண்ணு.” என்று தாடையைத் தடவி கூறிவிட்டுச் செல்பவர் வேறு யாருமில்லை ஆருத்ராவின் மாமியார் சுபாஷிணி தான்.

திரும்பி கடிகாரத்தில் மணி பார்க்க அது இரண்டே முக்கால் என்றதும் அவளுக்கு ஐயோ என்று இருந்தது.

முதல் நாள் இரவே அன்று பிரம்மமுகூர்த்த நேரத்தில் வீட்டில் மாமனார் பூஜை செய்வார் என்று மாமி குறிப்பிட்டு இருந்தாலும் அவளுக்கு பிரம்மமுகூர்த்த நேரம் எதுவென்று தெரியாததாலும் அவளை அதற்கு எழுந்து வரச் சொல்வார்கள் என்று எண்ணியிராததாலும் திருதிருவென்று விழித்தது நின்றாள்.

‘அடேய் இது எனக்கு மிட் நைட் டா. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடில இருந்து ஒரு நாள் ராத்திரி கூட நான் ஒழுங்கா தூங்கல டா.’ என்று மனம் புலம்பும் போதே கோகுல கிருஷ்ணனின் கைபேசியில் அவன் வைத்திருந்த அலாரம்

“ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர ।
ஜய கபீஶ திஹு லோக உஜாகர ॥

ராமதூத அதுலித பலதாமா ।
அஞ்ஜனி புத்ர பவனஸுத நாமா ॥

மஹாவீர விக்ரம பஜரங்கீ ।
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ ॥”

என்று சங்கர் மகாதேவன் மற்றும் குழுவினரின் கோரஸ் குரலில் அவ்வறை முழுவதும் ஒரு அதிர்வலையைக் கிளப்பியது.

அந்த இசையும் துள்ளலும் நிறைந்திருந்த ஹனுமன் சலிசா கேட்டு அவனது உடல் மெல்ல வளைந்து பின் எழுந்து சம்மணமிட்டு அமர்வதைக் கண்டாள் ஆருத்ரா.

‘அம்மாடியோ பப்பாளிப்பழம் கண்ணு முழிச்சிடுச்சு. இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னா கூட நம்ம காதுக்கு உத்தரவாதமில்ல. விடு ஜூட்.’ என்று அங்கிருந்து வெளியேறி வீட்டின் பின்புறம் இருந்த பாத்ரூம் அருகில் செல்ல, அவளுக்கு தேவையான உடைகளை முதல் நாள் இரவே வாங்கி வைத்திருந்த மாமியார் அதை நனைத்து அங்கிருந்த கொடியில் காயவும் போட்டு வைத்திருந்தார்.

அதை எடுக்க அவள் எத்தனித்த வேளையில், “கண்ணு குளிச்சிட்டு வந்து எடுத்துக்கோ டா. விழுப்போட மடித் துணியை எடுப்பாளோ!” என்று சமையலறை சன்னல் வழியாகக் கேட்க,

விடியாத அந்த இருளில் கூட மாமியாருக்கு கண்ணும் காதும் இத்தனை கூர்மையா? என்று எண்ணியபடி குளியலறை செல்ல, சுடுதண்ணீர் வாளியில் நிறைந்து தயாராக இருந்தது.

‘எனக்கு இப்படி அர்த்த ராத்திரில எழுந்துக்கறது சுத்தமா பிடிக்கல. இதுவே பாட்டி எழுப்பி இருந்தா சாமியாடி இருப்பேன். புது மாமியார் இவ்வளவு அன்பா சொல்லும்போது நான் என்ன டா செய்யறது? டேய் வெற்றிவேல் முருகா. கொஞ்சம் என் மாமியார் மனசுக்குள்ள போய் என்னை இப்படி மிட் நைட்ல எழுப்பக் கூடாதுன்னு சொல்லு டா.’ என்று கடவுளை தோழனாக எண்ணி கோரிக்கை வைத்துவிட்டு விரைவாக குளித்துவிட்டு வந்தாள்.
சமயலறையில் அவள் நுழைந்ததும்,

“வாடிக்கண்ணு. நான் கார்த்தால சமையலை முடிச்சாச்சு. ஆத்துக்கு வந்திருக்கிற மாட்டுப் பொண்ணு தான் சுவாமிக்கு நைவேத்திய பிரசாதம் பண்ணனும்னுட்டு உன் மாமனார் ஆசைப்பட்றார். அதை மட்டும் பண்ணிட்டு டா கோந்த(குழந்தை).” என்று அன்பு வழிய கூறிய மாமியிடம் முடியாதென்று காலை உதைத்துக் கொண்டு அழவா முடியும்?

ஆனாலும் சமையலில் அனா ஆவன்னா கூட தெரியாத அவளிடம் இந்த பொறுப்பை விட்டுச் சென்றது எத்தனை பெரிய தவறென்று அன்றே சுபாஷிணிக்கு நிரூபிக்கும் அளவுக்கு சண்டித்தனம் ஆருத்ராவிடம் இருந்தாலும் அவரின் கனிவான பேச்சு அதுக்கு முட்டுக்கட்டை போட்டது.

தன்னிடம் வேலையை ஒப்படைத்து விட்டு மாமியார் மாமனாருடன் பூஜை அறையில் சென்று அமர்ந்து கொள்ள, என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தாள்.

காலையில் எழுந்து யோகாசனம் முடித்ததும் தண்ணீர் குடிக்க சமையலறைக்குள் நுழைந்த கோகுல கிருஷ்ணன் மனைவி விழித்துக் கொண்டு நிற்பதைக் கண்டு அவளருகில் ஒரு நொடி நின்றான். அவள் ஏதும் பேசாமல் இருப்பதைக் கண்டு தோளைக் குலுக்கிவிட்டு நகர இருந்த நேரம்,

“மாமி என்னை நைவேத்தியம் பண்ண சொன்னாங்க. என்ன செய்யணும்?” என்று அவசரமாக கேள்வி எழுப்பினாள்.

“பாய்சம் பண்ணு” என்று கூறிவிட்டு சமையலறை கடைக் கோடியில் இருந்த தாமிர அண்டாவிலிருந்து நீரை அள்ளிப் பருகினான்.

‘பாய்சமா? குடுத்தா சப்பு கொட்டி குடிப்பேன். ஆனா அதை செய்யுறது எப்படி? முருகா ஹெல்ப் மீ’ என்று விட்டதை நோக்கி அவள் முனக,

“என்ன செய்ய தெரியாதா?” என்றான் பிசிறில்லாத குரலில்.

அமைதியான அந்த நேரத்தில் தள்ளி நின்று அவன் கேட்ட விதம் அவளுக்குள் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தன்னிச்சையாக தலை மேலும் கீழும் ஆட,

“நகர்ந்து நில்லு” என்று சொன்னவன், பம்பரம் போல அங்கும் இங்கும் சுழன்றான். விசாலமான அந்த சமையலறையில் அவன் வேலை செய்யும் லாவகத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

அரை மணி நேரத்தில், அரிசி பருப்பு இருந்த குக்கர் விசில் அடித்ததோ, பால் தளும்பி வந்த சத்தமோ, மிக்ஸியில் அவன் தேங்காய் அரைத்ததோ அவள் கவனத்தில் பதியவே இல்லை.

வெண்ணிற வேட்டியும் வெற்று மார்பில் பளிச்சிட்ட வெள்ளைப் பூணலும், சமையலறை கசகசப்பில் வெளிவந்த முத்து முத்தான வியர்வைத் துளிகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, அவள் மனமோ, ச்ச ‘இந்த பப்பாளிப்பழம் எவ்வளவு அம்சமா இருக்கான்ல’ என்று வெட்கம் மறந்து கணவனை சைட் அடித்துக் கொண்டிருக்க, அவள் முகத்தின் முன்னே சொடுக்கிட்டு அழைத்தான் கோகுல கிருஷ்ணன்.

“ஹான்” என்று சுயநினைவுக்கு வந்தவளிடம்,

“பாண்ட்லில இருந்து பாய்சத்தை அந்த வட்டப் பாத்திரத்துக்கு கொஞ்ச நேரம் கழிச்சு மாத்தி பூஜை ரூமுக்கு எடுத்துண்டு போ. “என்றவன் அவள் தலையசைத்ததும் அவள் நுனி முடியிலிருந்து நீர் சொட்டுவதை கவனித்து,

“தலையை துவட்டிக்கோ. அதாவது தெரியுமா? இல்ல அதுக்கும் யாரையும் ஹெல்புக்கு அனுப்ப சொல்லி முருகனுக்கு அப்ளிக்கேஷன் போடுவியா?” என்று நக்கல் வழியக் கேட்டான்.

“தெரியும் தெரியும்” என்று சுரத்தில்லாமல் பதில் தந்தாலும் அதில் நாணம் ஒட்டிக் கொண்டிருப்பதை விரட்டியடிக்க முடியாமல் திணறலோடு கூறினாள் ஆருத்ரா.

14 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே – டீஸர்”

  1. Avatar

    Oooo idhu avaaloda love storyo…yen akka nokku indha bhashaiyellam nanna varadhe….OMG sis starting semma indha aaru epdi indha poosari family ah samalika poralo

  2. Avatar

    ஆம்படையான சைட் அடிக்காம பாசத்தை நைவேத்யத்துக்கு எடுத்துண்டு போம்மா

  3. Avatar

    ஆம்படையான சைட் அடிக்காம பாயசத்தை நைவேத்யத்துக்கு எடுத்துண்டு போம்மா

  4. Avatar

    Hahaha starting Semma kalakkal ponga super super sago
    Intha iyyar mami enna padu padaporalo Ava aathula shemama irunthaa nekkum santhosam thaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *