Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே – 1

மனம் உன்னாலே பூப்பூக்குதே – 1

கதிரவன் கண்விழித்து சில மணி நேரங்கள் கடந்திருந்த அந்த காலை எட்டு மணிப் பொழுதில் சிங்காரச் சென்னையில் இருசக்கர வாகனங்களும் கார்களும் தன்னுடைய வேகத்தைக் குறைத்து எறும்பு ஊர்வது போல ஓ.எம்.ஆரை (பழைய மகாபலிபுரம் சாலை) இணைக்கும் அந்த சாலையின் சிக்னலுக்கு முன்னே ஊர்ந்து கொண்டிருந்தது.

மத்திய கைலாஷ் திருப்பம் முதல், பெருங்குடி, வேளச்சேரி வழியாக வருவோருடன் இனி ரேடியல் ரோட்டிலிருந்து இணையப்போகும் இவர்களும் போட்டி போட்டு அந்த சாலையில் சென்றாக வேண்டும் என்ற பரபரப்பை அங்கிருந்து ஒவ்வொரு வாகன ஓட்டியின் முகமும் பிரதிபலித்தது.

பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள், உணவு டெலிவரி செய்வோர், வேலைக்குச் செல்வோர் என்று பலதரப்பட்ட மக்கள் எப்பொழுது அந்த சிவப்பு விளக்கு பச்சைக்கு மாறும் என்று ஒரு வித தவிப்புடன் பார்த்திருக்க,

அவர்களை மேலும் வாட்டி வதைக்காமல் போக்குவரத்துத் துறையின் விளக்கு பச்சைக்கு மாறி அடுத்த கட்ட ஓட்டத்துக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.

வலதுபுறம் திரும்பி ஓ. எம். ஆர் சாலையில் வேகமாக தன் ஒரு சக்கர வாகனத்தை செலுத்தினாள் அவள்.

எப்பொழுதாவது உடுத்திக்கொண்டு வரும் சேலைக்கு பழகிய உடல், இன்று வழுவழுப்பாக அவளது உடலைத் தழுவி இருந்த சேலை இருசக்கர வாகனத்தில் உனக்கு அவ்வளவு எளிதில் ஒத்துழைப்பு தர மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தது.

முகத்தை மூடி கண்களுக்கு கண்ணாடி அணிந்து ஓப்பன் ஹெல்மெட் மாட்டியிருந்த அவளுக்கு வியர்வை வேறு கசகசப்பாக எரிச்சலை விளைவித்தது.

ஆறு மாதங்களாக இதே பாதையில் சிட்டுக் குருவியாகப் பறந்த அவளுக்கு இன்று மட்டும் இந்த பயணம் அத்தனை எரிச்சலையும் சலிப்பையும் ஏற்படுத்தியது.

மெட்ரோவுக்காக பாதி சாலை அடைக்கப்பட்டு விட்டதால் மீதமிருந்த நாற்பதடி சாலையில் கார்கள் லாரிகளுடன் போட்டி போட்டு பல சிக்னல்கள் கடந்து சிறுசேரி ஐ.டி பார்க்கின் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் இடைவெளியை தேடி நிறுத்திவிட்டு மணி பார்க்க ஒன்றரை மணி நேரத்தை விழுங்கிய அந்த பயணத்தை எண்ணி எழுந்து நின்றவளுக்கு அத்தனை அயர்ச்சியாக இருந்தது.

ஆனால் இதை விட அயர்வைத் தரும் நிகழ்வுகள் தன் நிறுவனத்திற்குள் நுழைந்த பின் தான் இருக்கும் என்று எண்ணியிராத அவள் தன் தோள்ப்பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் நோக்கி நடைபோட்டாள்.

லிஃப்டின் அருகில் நின்றிருந்த அவளுக்கு இதுவரை அதை காலை நேரங்களில் உபயோகப்படுத்திய நினைவே இல்லை. இன்று ஐந்து மாடி படிக்கட்டில் ஏறிச் செல்லும் அளவுக்கு அவளுக்கு பொறுமையுமில்லை. உடலில் வலுவுமில்லை.

லிஃப்டில் ஏறி அதிலிருந்த சிலர் சிந்திய புன்னகைக்கு அயர்வாய் பதில் புன்னகை பூத்து தன் அலுவலக தளத்தை அடைந்தாள்.

அவள் உள்ளே நுழையும் போது மணி சரியாக ஒன்பது இருபத்து ஐந்து. கவனமில்லாமல் மெல்ல நடந்து வந்த போது திடீரென அந்த பகுதியே அதிரும்படி கூச்சல் கேட்டு சுயவுணர்வு பெற்றவளாக சுற்றும் முற்றும் நோக்க,

“ஏய் புது பொண்ணு என்ன டி ஒரே வாரத்துல வேலைக்கு வந்துட்ட?” என்று அவளது தோழி கேத்தரின் என்னும் கேத்தி போட்ட கூச்சலில் அவளுக்கு ‘ஐயோ’ என்று இருந்தது.

சங்கடமாக அவள் புன்னகைக்க, “ஏய் எல்லாரும் வாங்க.. வாங்க.. ஆபிசுக்கு யார் வந்திருக்கா பாருங்க. ஆருத்ரா வந்திருக்கா.” என்று தம்பட்டம் அடித்த நித்தினின் செயலில் எரிச்சல் வந்தாலும் அவர்கள் தன் மேல் கொண்டுள்ள அன்பே முதன்மையாகத் தோன்றியது.

“இப்ப தான் அவளே வர்றா. ஏன் டா கோஷம் போட்டு கொடுமை பண்றீங்க? எவனுக்கும் கோடிங் எழுதுற வேலை இல்லையா? எங்க டா அந்த டீம் மேனேஜர்?” என்று மீரா ஆருத்ராவுக்கு ஆதரவாக அருகே வந்ததோடு மற்றவர்களை அடக்க அவர்களது மேலாளரைத் தேடினாள்.

அந்தோ பரிதாபம் அவன் இவர்கள் அனைவருக்கும் மத்தியில் மாட்டி நசுங்கிக் கொண்டிருக்க,

“கல்யாணம் ஆனது அவளுக்கு என்னை ஏன் டா எல்லாரும் இந்த தள்ளு தள்ளுறீங்க?” என்றபடி ஆருத்ரா அருகில் வந்த டீம் மேனேஜர் ராம்ஜி, அவளிடம்,

“உனக்கு பதினஞ்சு நாள் லீவ் சேங்க்ஷன் பண்ணி இருந்தேனே!” என்று கூர்மையான பார்வை பார்க்க,

“இன்னும் பத்து நாள் கழிச்சு மறுபடி லீவு போட வேண்டி வரும். அதான் இப்ப லீவை கேன்சல் பண்ணிட்டு ஜாயின் பண்ண வந்தேன். காலைல மெயில் அனுப்பி இருந்தேனே ராம்.” என்று வேகமாக பதில் கூறினாள்.

“ஓகே ஓகே. சீட்டுக்கு போய் வேலையை பாரு” என்று சொல்லிட்டு,

“டெட்லைன் முடிய இன்னும் நாலு நாள் தான் இருக்கு. எல்லாரும் அவங்கவங்க வர்க்கை கண்டினியூ பண்ணுங்க” என்று அங்கிருந்த கூட்டத்தை விரட்டி அடித்தான்.

அவன் சொல்லுக்கு அடங்கி விலகி நடந்தாலும் பலரது பார்வை பசும் மஞ்சள் திருமாங்கல்யம் அணிந்து கிளிப்பச்சை நிறத்தில் கரை வைத்த மெஜந்தா வண்ணப் புடவையில் மஞ்சளும் முந்திரியும் கலந்த நிறத்தில் ஜொலித்த ஆருத்ராவை குறுகுறுப்பாய் பார்த்தபடியே சென்றது.

அவர்களது குழுவின் தலைவனான நித்தின், அவளுக்கு அடுத்த கியூபிகிலில் தான் அமர்வான். அவள் தன் பையை செல்ஃபில் வைத்துவிட்டு சிஸ்டமை ஆன் செய்தபோது,

“என்னாச்சு ஆரு உன் முகமே சரியில்ல. எப்பவும் பளிச்சுன்னு சிரிப்ப, இப்ப என்ன முகத்தில ஒரு அசதியும் அவஸ்தையும் தெரியுது?” என்று சரியாகக் கணித்துக் கேள்வி எழுப்பினான்.

அவளுக்கு இந்தப்பக்கம் அமர்ந்திருந்த மீரா வேகமாக, “புதுசா கல்யாணமான பொண்ணு கிட்ட என்ன டா கேள்வி கேட்டுட்டு இருக்க? நீ தான் நைன்டீஸ் கிட், கல்யாணம் ஆகாம சுத்துற!” என்று மீரா அவன் வாயை அடைத்தாள்.

எப்படி நித்தினை சமாளிப்பது என்று ஆருத்ரா நினைத்த நேரத்தில் அவளை கனகச்சிதமாகக் காத்தாள் மீரா.

அவளது வலது கையில் லேசாக அழுத்தம் கொடுத்து நன்றி நவிலந்து விட்டு திரையில் தெரிந்த அவளது லாகின் ஸ்க்ரீனில் தன் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைந்தாள்.

பலரது பார்வை அவளைத் துளைப்பது முதுகில் ஈட்டி இறங்குவது போல நன்றாகவே உணர முடிந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தன் பணியைத் துவங்கினாள் ஆருத்ரா.


“என்ன புது மாப்பிள்ளை, புதுசா கல்யாணம் ஆனவன் சும்மா பளபளன்னு ஜொலிக்க வேண்டாமா? என்ன முகம் இப்படி இருக்கு?” என்று சக ஊழியர் ஒருவர் கேலி செய்ய,

“உங்களுக்கு கல்யாணமாகி பத்து நாள் கழிச்சு நீங்க வந்தப்ப ஒரு பக்க கன்னம் வீங்கி இருந்தது. நான் ஏதாவது கேட்டேனா? போய் வேலையை பாருங்க குமார் சார்.” என்று எரிச்சலை வெளிக்காட்டாமல் கூறிவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.

அவனுக்கென்று அந்த அலுவலகத்தில் தனி கேபின் இல்லை. ஆனால் ஆடிட்டர் கேபினுக்கு வெளியே இருந்த நீளமான அறையில் முதல் மேஜை அவனுடையது தான். அங்கிருந்த பெரிய மேஜையும் அது தான்.

ஆடிட்டர் வெங்கடராகவன் என்று சொன்னால் தெரியாதவர்கள் இல்லை. ஏனெனில் சென்னை ஆடிட்டர் அசோசியேஷனின் பிரசிடென்ட் அவர். அவரது ஜூனியர் என்றால் எத்தனை பெருமைக்குரிய வேலை!

இப்படித்தான் நினைத்து இந்த அலுவலகத்தில் கால் பதித்தான் அவன். நாள் செல்லச் செல்லத் தான் அனைத்து கோப்புகளையும் துல்லியமாக சரிபார்த்து அனுப்புவது அவனது வேலை என்றும் கையொப்பம் இடுவது மட்டுமே அவரது வேலை என்றும் புரிந்து கொண்டான்.

யார் வேலையில் சருக்கினாலும், ‘என்னப்பா நீ நல்லா பார்த்திருக்க வேண்டாமா?’ என்று கேள்வி கேட்பவர் சரியாக செய்த ஒருநாளும் பாரட்டியதில்லை.

பின்னாளில் அவன் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. அவனது மனதில் இருந்த பெரிய ஆசையையும் மிகப்பெரிய கனவையும் இழந்து நிற்கும் நிலையில் அலுவலக வேலையெல்லாம் இப்பொழுது அவனுக்கு பாரமாகத் தோன்றவில்லை.

ஏதேதோ சிந்தனையில் கோப்புகளை சரிபார்த்து கொண்டிருந்தவன் ஒரு கோப்பில் கணக்கு டேலியாகாமல் போக, அது யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று கவனித்தான்.

அவனது நண்பன் சாரங்கபாணியின் பெயரைக் கண்டதும் அவனுக்கு எழுந்த கோபத்துக்கு அளவே இல்லை.

விறுவிறுவென்று எழுந்து ஆறாவதாக இருந்த சாரங்கனின் மேஜைக்கு சென்று நின்றான்.

அவனைக் கண்டதும் முகம் முழுவதும் புன்னகையை தவழ விட்ட நண்பனை முறைத்து,

“ஒரு வாரம் நான் ஆபிஸ் வரல, இது போல எத்தனை கிளைன்ட் பைலை சொதப்பி வச்சிருக்க நீ? கவனமா வேலை செய்ய மாட்டியா சாரங்கா?” என்று கடிந்து கொள்ள,

“நீ ஏன் டா உத்து உத்துப் பார்த்து தப்பு கண்டுபிடிக்கிற? ஒரு வாரமா என் பைல் எதுவுமே திரும்பி வரல. எல்லாத்தையும் ஆடிட்டர் சைன் பண்ணிட்டார் தெரியுமா?” என்று பெருமை பேச

சட்டென்று நகர்ந்து, “ஒரு வாரமா யாரு பைனல் கரெக்ஷன் செக்கிங் எல்லாம் செய்தது?” என்று கணீர் குரலில் கேள்வி எழுப்ப, குமார் பல்லைக் காட்டிக் கொண்டு,

“நான் தான் பா” என்று சொல்ல,

“எல்லாத்தையும் மறுபடி செக் பண்ணுறீங்க. நான் ஏதாவது தப்பு கண்டுபிடிச்சேன்னு வைங்க. அவ்வளவு தான்.” அழுத்தம் திருத்தமாக அவன் குரல் அங்கே எதிரொலிக்க,

“தட்ஸ் மை பாய். ஒரு வாரமா நீ இல்லாம ஒரே திண்டாட்டந்தான் போ கோகுல்.” என்று அவனது தோளில் கைவைத்து முன்னே நகர்த்தியபடி நடந்து அலுவலகத்தின் அவரது அறைக்குள் வந்தார் ஆடிட்டர் வெங்கடராகவன்.

காலையிலிருந்து காய்ந்து போய் வாடிக் கிடந்த மனதுக்கு அவரது சிறு பாராட்டு மெல்லிய நிம்மதியை பரிசளித்தது.

அவன் தான் கோகுல கிருஷ்ணன் பி.காம்., சி.ஏ. படிப்பை முடித்து தனியே ஒரு நிறுவனத்தைத் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவன் நினைப்பில் லாரி லாரியாக மண்ணைக் கொட்டிய புண்ணியத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் தான் அவன் பயிற்சி காலத்தில் பணிபுரிந்த ஆடிட்டர் வெங்கடராகவன். அவரது அலுவலகத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் அவனை வேலைக்கு அமர்த்திக்கொள்ள அவர் பேசியபோது, :நிறுவன அறிவை வளர்த்துக் கொள்ள இது பெரிய உதவியாக இருக்கும்’ என்று அவனை தலையசைக்க வைத்த பெருமைக்குரியவர் அவனது தந்தை.

இன்று அவன் அனைத்தையும் வெறுத்துப் போய் நிற்க முழு முதல் காரணிகள் இவர்கள் இருவரும் தான்.

தோளில் கை வைத்தபடியே, “என்னப்பா ஆத்துக்காரி என்ன சொல்றா? ஆபிஸ் போக இத்தனை ஆர்வத்தை நீ காட்டினா, அவ உன்னண்ட கோச்சின்டிட மாட்டாளோ?” என்று தனியே வந்ததும் கேள்வி எழுப்பினார்.

“அதெல்லாம் எதுவும் இல்ல சார்” என்று அவன் சமாளிக்க,

“அதான் என் ரூமுக்கு வந்தாச்சே, நீ சாதாரணமா பேசுப்பா. நாம இப்படி பேசிக்கறது தானே நன்னா இருக்கு.” என்று தன் இருக்கையில் சென்று அமர்ந்தவர், அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையைக் கை காட்டினார்.

“அவளும் ஆபிஸ் போயாச்சு சார். நான் மட்டும் ஆத்துல உக்காண்டு என்ன பண்ணப் போறேன். அதான் லீவை கேன்சல் பண்ணிட்டு ஆபிஸ் கிளம்பிட்டேன்.” என்று எரிச்சலை மறைத்து பதிலளித்தான்.

“ஆபிஸ் போயிட்டாளா? ஆத்துல மாமி ஒன்னும் சொல்லலியோ! மாமிக்கு தங்கமான மனசுன்னு நேக்கு தெரியும். ஆனாலும் இத்தனை வெள்ளந்தியான மனுஷாளா இருக்கப்பிடாது கிருஷ்ணா” என்று ஆச்சரியமான குரலில் பேசிக்கொண்டே அன்றைய நாள்காட்டியில் அவரது வேலைகளின் பட்டியலைப் பார்வையிட்டார்.

“அவளுக்கு ஆபிஸ்ல பிராஜெக்ட் டெட்லைனாம், முன்ன லீவ் கொடுத்தவா இப்ப வரச் சொல்லி கார்த்தாலயே மெயில் பண்ணியிருப்பாளாட்டம் இருக்கு. அவ அம்மாவை எப்படியோ சமாளிச்சு ஆபிஸ் கிளம்பிட்டா. நான் வரத்தான் பெரும்பாடா போச்சு.” என்று சலித்தான்.

“அம்மாக்கு புள்ளையாண்டான் பக்கத்துல இருக்கறதே பெரிய சந்தோஷம் பா கிருஷ்ணா. எங்காத்து மாமி அவினாஷ் எப்ப வருவான்னு காத்துண்டு இருப்பா. அவன் வந்துட்டு ஃப்ரெண்ட்ஸ்களை பார்க்க போறேன்னு கிளம்பிட்டா அவளுக்கு முகமே சிறுத்து போயிடும். அவா உலகமே புள்ளைகள்னு ஆனாட்டு ஆம்படையான் எல்லாம் கண்ணுக்கே தெரியறதில்ல. உனக்குன்னு உன் ஆத்துக்காரி செய்யப்போறது நோக்கு குழந்தை வர்ற வரைக்கும் தானாக்கும். அதை இப்போவே நன்னா அனுபவிச்சுக்கோ டா அம்பி” என்று பழுத்த பழமாக திருமண வாழ்க்கை பற்றி தன்னுடய கருத்தைக் கூறிவிட்டு இடியிடியென அவர் சிரிக்க,

அவரது பேச்சை ரசிக்காத கோகுல கிருஷ்ணனோ முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டான்.

பிடிக்காத மனைவியே அவனுக்கு எரிச்சல், இதில் பிள்ளை என்றால் அவனுக்கு இனிக்கவா செய்யும்?

  • பூக்கும்

16 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே – 1”

  1. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 1)

    ஓ மை காட்…! கோகுல கிருஷ்ணன் & ஆருத்ராவுக்கு என்னாச்சுன்னு தெரியலையே.?
    ஏன் ரெண்டு பேரு முகமும், இப்படி சிடுசிடுன்னும், சலிப்புத்தட்டி போயும் இருக்குதுன்னு தெரியலையே…? இது என்ன விருப்பம் இல்லாத கல்யாணமா ? இல்லை, பொருந்தாத கல்யாணமா…
    புரியலையே…? பொறுத்திருந்து தான் பார்க்கணும் போல.

    CRVS (or) CRVS 2797

    1. Avatar

      என்னாச்சு இரண்டு பேரும் பிடிக்காம கல்யாணம் செய்துட்டாங்களா

  2. Avatar

    அப்படி என்னதான் பிரச்சனை இன்னும் இரண்டு பேருக்குள்ளே

  3. Avatar

    இந்த ரெண்டு ஐய்யர்வாலும் எப்பொதான் சண்டை தீர்ந்து சேர்ந்து வாழ்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *