Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே – 2

மனம் உன்னாலே பூப்பூக்குதே – 2

பூ 2

மாலை மணி ஐந்தை நெருங்கியது, தன் வேலையிடத்தை விட்டு நகராமல் அமர்ந்து பணி செய்து கொண்டிருந்த ஆருத்ராவை பின்னால் வந்து கட்டி அணைத்தாள் கேத்தி.

இது அவளது வாடிக்கையான செயல் என்பதால் ஆருத்ரா மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு,

“என்ன கேத்தி, வர்க் முடிஞ்சதா?” என்று விரல்களில் சொடுக்கெடுத்தபடி விசாரித்தாள்.

“எங்க டீம்ல எல்லாமே முடிஞ்சது. இனி டெஸ்டிங் டீம் தான் பார்க்கணும்.” என்று நிம்மதியுடன் கூறி ஆருவின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் கேத்தி.

அவளது செயலில் ஆருத்ரா சிரிக்க, அடுத்த கியூபிக்கிளில் இருந்த மீராவோ,

“ஏய் அவளுக்கு கல்யாணமாகிடுச்சு கேத்தி. நீ இப்படி முத்தம் கொடுக்கறது தெரிஞ்சா மிஸ்டர் கோகுல கிருஷ்ணனுக்கு கோவம் வந்திடும் டி.” என்று ஆருத்ராவை கேலி செய்தாள்.

திருமணம் முடிந்த புதிய பெண் என்றால் இது போன்ற கிண்டல்களும் கேலிகளும் இயல்பான ஒன்று தான் ஆனால் ஏனோ அதை ஆருத்ராவால் ரசிக்க முடியவில்லை.

மீரா முத்தம், கோபம் என்று ஏதேதோ உணர்வுகளைப் பற்றி கேலி செய்கிறாள். ஆனால் ஆருத்ராவின் இந்த ஒரு வார திருமண வாழ்வில் கோகுல கிருஷ்ணன் காட்டியது அலட்சியமும் அந்நியத்தனமும் தான் என்பதை எண்ணியதுமே அவளின் மனம் எங்கெங்கோ பயணப்படத் துவங்கியது.

ஆறு வயதில் தாய் தந்தையை சாலை விபத்தில் பலி கொடுத்த ஆருத்ராவை வளர்த்தது அவளது தந்தை வழிப் பாட்டியான சந்தானலக்ஷ்மி தான்.

அப்பொழுதே அவர் ஐம்பதுகளின் விளிம்பில் இருந்ததால் பேத்தியை போர்டிங் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைத்து விடுமுறை நாட்களில் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார். அவரது வயதும் உடல்நிலையும் அவ்வளவு தான் அவருக்கு ஒத்துழைப்பு தந்தது.

பாட்டியின் ஆதரவில் நல்ல கல்வியும் நல்ல குணங்களும் பயின்ற ஆருத்ரா என்றுமே அவரிடம் பாசத்துடனும் நன்றியுடனும் இருந்தாலும் அவரை கிண்டலும் கேலியும் செய்து அவரது பொறுமையை சோதித்துப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள். தனிமை அவளைச் சுட்டிப் பெண்ணாக மாற்றி இருந்தது.

அவரது விருப்பத்திற்காக இந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த ஆருத்ரா, அவளது வாழ்வை ‘திருமணம்’ என்ற ஐந்து எழுத்து மொத்தமாக மாற்றி எழுதும் என்று எண்ணியதே இல்லை.

ஒரு வாரம்.. முழுமையான ஒரு வாரம் தான் கழிந்திருக்கிறது அவளது புகுந்த வீட்டில். ஆனால் ஏதோ ஜென்ம ஜென்மமாய் அங்கே அடைபட்டு மூச்சுக்கு தவிக்கும் உணர்வுக்கு ஆளாகிப் போனாள் ஆருத்ரா.

அதிலும் மாமியாருடன் கழிக்கும் சமையலறை பொழுதுகள் எல்லாம் நெருப்புத் துண்டங்களின் மேல் நர்த்தனம் ஆடாத குறை தான்.

மாமனார் அதிகம் ஒட்டுதல் இல்லாதவராக இருப்பது அவளுக்கு அத்தனை நிம்மதியைக் கொடுத்து என்று சொன்னால் மிகையல்ல.

ஆனால் அவளுக்கு மிகவும் பாரமான கணங்கள் என்றால் அது கோகுல கிருஷ்ணனுடன் கழிக்கும் தனிமைப் பொழுதுகள் தான்.

தனியே அறையில் தங்கிப் படித்த போதும் சரி, பணிக்காக தனியே வீடெடுத்து தங்கியபோதும் சரி ஒருநாளும் தனிமையை உணர்ந்திடாத ஆருத்ராவுக்கு கூடை கூடையாக தனிமையை மெளனத்துடன் பரிசாக அளித்து வருகிறான் கோகுல கிருஷ்ணன்.

ஏதேதோ நினைவுச் சங்கிலிக்குள் மாட்டித் தவித்த அவள் இதயத்தை கேத்தியின் அழைப்பொலி நிகழ்வுக்கு இழுத்து வந்தது.

“பதில் சொல்லு டி. இப்படி அமைதியா இருந்தா எப்படி?” என்று அவள் சண்டைக்கு நிற்க,

அவள் என்ன கேட்டாள் என்றே தெரியாத ஆருத்ரா என்னவென்று பதில் தருவாள்? திருதிருவென்று அவள் விழிக்க,

“நேத்து வந்த உன் புருஷன் உனக்கு முக்கியமா ரெண்டு வருஷமா உன் ஃப்ரெண்டா இருக்குற நான் முக்கியமா? சொல்லு டி. ஒரு முத்தம் கொடுக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று கொடி பிடிக்காத குறையாக அவள் கோஷம் போட,

“நீ தான் டி முக்கியம். அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு. சொன்னாலும் நான் கண்டுக்க மாட்டேன். போதுமா?: டைம் ஆகுது நான் வீட்டுக்கு கிளம்புறேன் டி.” என்று சிஸ்டத்தை லாக் அவுட் செய்து விட்டு கைப்பையுடன் வேகமாக எழுந்தாள்.

மீரா அவளைத் தடுத்து, “இங்க பாரு ஆரு, புது வீடு, புது மனுஷங்க கொஞ்சம் தடுமாற்றமும் பயமும் இருக்க தான் செய்யும். அதுக்காக நீ உன்னை இழந்துடாதே. காலைல இருந்து நீ நீயாவே இல்ல. இப்ப கூட இதை நான் சொல்லி இருக்க மாட்டேன். உன் கண்ணுல தெரியுற கலக்கம் தான் என்னை பேச வைக்குது. ரெண்டு அக்காவுக்கு பிறகு பிறந்தவ நான். கல்யாணம் ஆன பொண்ணுங்க எப்படி இருப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். சம்திங் ராங். பட் யு கேன் மேனேஜ் தட். உனக்கு அந்த திறமை இருக்கு.” என்று மென்மையாக அணைத்து விடுவித்தாள்.

“ஏன் டி என்னை அவளுக்கு அட்வைஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டு மூட்டை மூட்டையா நீ மட்டும் பார்சல் பண்ற? ஃபிராடு” என்று மீராவின் தோளில் இடித்தாள் கேத்தி.

மீரா வழிசலாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு, “அவ முகத்தை பாரு கேத்தி. என்னால சொல்லாம இருக்க முடியல” என்று சங்கடத்துடன் கூற,

“நோ பிராப்ளம் டியர்ஸ். தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்.” என்று நட்பாக அணைத்துக் கொண்ட ஆருவுக்கு மனதில் பேரும் ஆறுதல் வந்ததோடு தான் கண்டிப்பாக தன் சுயத்தை இழக்கக் கூடாது என்ற எண்ணமும் முளைத்தது.

ஆனால் அது சிறிது நேரத்தில் பஞ்சாகப் பறக்கப் போவதை அவள் அறியவில்லை.


அலுவலகம் முடிந்து வெளியே வந்த கோகுல கிருஷ்ணனை வாடிக்கையான பூக்காரப் பாட்டி தடுத்து நிறுத்தினார்.

அவனும் புன்னகையுடன் சட்டையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

அவர் வேகமாக, “கதம்பத்துக்கு மட்டும் தான் காசு குடுத்திருக்க தம்பி, எடு இன்னொரு ஐம்பது ரூபாயை.” என்று உரிமையுடன் கேட்டார்.

“ஏன் பாட்டி? கதம்பம் மட்டும் தானே எப்பவும் வாங்குவேன்? இப்ப எதுக்கு கூட காசு?” என்றதும்,

“நல்ல புள்ள தான் போ. கல்யாணமான ஆம்பள வீட்டுக்கு வெறும் கையோட போகலாமா? மல்லி ரெண்டு முழம் வச்சிருக்கேன். ஆசையா பொண்டாட்டிக்கு வச்சு அழகு பாரு தம்பி” என்று கேலி செய்தார்.

பணத்தை எடுத்துக் கொடுத்தவன் மனதில், ‘அவளுக்கு பூவா? அதெல்லாம் வைப்பாளா? இந்த ஒரு வாரத்துல எல்லாமே என் அம்மா அவ தலையில வச்சு விட்டது தான். ஆசையா ஒரு ரோஜாப்பூ கூட அவ தலையில் வச்சுக்கல. இன்னிக்கு காலைல தலையை கூட வாராம தான் போனா.’ என்று எண்ணிக்கொண்டு பூவை வாங்கி வண்டியின் பெட்ரோல் டேங்க்கின் மேல் இருக்கும் சிறு பையில் வைத்தான்.

அவனால் இயல்பாக வீட்டில் நடமாட இயலவில்லை. திருமணத்திற்கு முன் அதிக நேரம் வெளியே வாடிக்கையாளர் விஷயமாக அலைந்து விட்டு தான் வீட்டிற்கு செல்வான். அன்னையின் பூஜைக்காக பூவை இவரிடம் வாங்கி கொண்டு போவான்.

அப்பொழுது மணி ஆறு தான் ஆகி இருந்தது. வீடு செல்லவும் மனமில்லை. வேலையைப் பார்க்கவும் சுரத்தில்லை. நேராக அருகில் இருந்த சிறுவர் பூங்காவுக்கு சென்று கலையாக இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.

திருமணம் நிச்சயம் செய்த பின் தான் அன்னை அவனுக்கு தகவல் சொன்னார். அவன் விரும்பி ஏற்காத திருமணமாக இருந்தாலும் அதை வேண்டாம் என்று மறுக்கவும் அவனிடம் காரணம் இருக்கவில்லை. அதை விட அவனுக்கு உறுத்தலாக இருந்தது ஆருத்ராவின் விழிகளில் தென்பட்ட ஆர்வமும் குறுகுறுப்பும் தான்.

அனைத்தையும் உடைத்துப் பேசும் ரகமில்லாத அவனுக்கு கோபம் வந்தால் தேவைக்கு வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு மௌனத்தில் தண்டனை வழங்குவதே வாடிக்கை.

மனதில் ஆயிரம் கேள்விகளும், வலிகளும் இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் இது எத்தனை நாள் சாத்தியம் என்று தெரியவில்லை.

அதே நேரம் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆருத்ராவின் மனக்கண்ணில் திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் நடந்த நிகழ்வு உலா வரத் துவங்கியது.

‘லொட் லொட் லொட் ‘ கதவு மூன்றாவது முறையாக தட்டப்பட தூக்கம் வழியும் விழிகளை சிரமப்பட்டு திறந்து பார்த்தாள் ஆருத்ரா.

ஜன்னல் வழியே இருள் விலகாமல் இருப்பது தெரிந்ததும், நள்ளிரவில் யார் அறைக்கதவைத் தட்டுவது என்று நகர நினைத்தபோது தான் அது தன்னுடைய வீட்டின் தனியறை அல்ல என்பது புத்திக்கு உறைத்தது.

திருமணம் முடித்து நான்கு நாட்கள் ஆனதால் கணவனின் அறையில் இருக்கிறோம் இது அவனுடைய வீடு என்று உணர்ந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது.

அதற்குள் மறுமுறை கதவு தட்டப்பட கோகுல கிருஷ்ணனிடம் லேசான அசைவு தெரிந்தது.

உடனே அவசரமாக எழுந்து கதவை நோக்கிச் சென்றாள் ஆருத்ரா.

கதவின் தாழ் விலகியது தான் தாமதம்,

“ஏன்டிம்மா எத்தந்நேரமா கதவைத் தட்றது? எனக்கு நாழியாறது. ஆச்சுன்னு வெளி பாத்ரூம்ல குளிச்சிட்டு சமையல்கட்டுக்கு வந்து சேரு. மசமசன்னு நிக்காதடி கண்ணு.” என்று தாடையைத் தடவி கூறிவிட்டுச் செல்பவர் வேறு யாருமில்லை ஆருத்ராவின் மாமியார் சுபாஷிணி தான்.

திரும்பி கடிகாரத்தில் மணி பார்க்க அது இரண்டே முக்கால் என்றதும் அவளுக்கு ஐயோ என்று இருந்தது.

முதல் நாள் இரவே அன்று பிரம்மமுகூர்த்த நேரத்தில் வீட்டில் மாமனார் பூஜை செய்வார் என்று மாமி குறிப்பிட்டு இருந்தாலும் அவளுக்கு பிரம்மமுகூர்த்த நேரம் எதுவென்று தெரியாததாலும் அவளை அதற்கு எழுந்து வரச் சொல்வார்கள் என்று எண்ணியிராததாலும் திருதிருவென்று விழித்து நின்றாள்.

‘அடேய் இது எனக்கு மிட் நைட் டா. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடில இருந்து ஒரு நாள் ராத்திரி கூட நான் ஒழுங்கா தூங்கல டா.’ என்று மனம் புலம்பும் போதே கோகுல கிருஷ்ணனின் கைபேசியில் அவன் வைத்திருந்த அலாரம்

“ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர ।
ஜய கபீஶ திஹு லோக உஜாகர ॥

ராமதூத அதுலித பலதாமா ।
அஞ்ஜனி புத்ர பவனஸுத நாமா ॥

மஹாவீர விக்ரம பஜரங்கீ ।
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ ॥”

என்று சங்கர் மகாதேவன் மற்றும் குழுவினரின் கோரஸ் குரலில் அவ்வறை முழுவதும் ஒரு அதிர்வலையைக் கிளப்பியது.

அந்த இசையும் துள்ளலும் நிறைந்திருந்த ஹனுமன் சலிசா கேட்டு அவனது உடல் மெல்ல வளைந்து பின் எழுந்து சம்மணமிட்டு அமர்வதைக் கண்டாள் ஆருத்ரா.

‘அம்மாடியோ பப்பாளிப்பழம் கண்ணு முழிச்சிடுச்சு. இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னா கூட நம்ம காதுக்கு உத்தரவாதமில்ல. விடு ஜூட்.’ என்று அங்கிருந்து வெளியேறி வீட்டின் பின்புறம் இருந்த பாத்ரூம் அருகில் செல்ல, அவளுக்கு தேவையான உடைகளை முதல் நாள் இரவே வாங்கி வைத்திருந்த மாமியார் அதை நனைத்து அங்கிருந்த கொடியில் காயவும் போட்டு வைத்திருந்தார்.

அதை எடுக்க அவள் எத்தனித்த வேளையில், “கண்ணு குளிச்சிட்டு வந்து எடுத்துக்கோ டா. விழுப்போட மடித் துணியை எடுப்பாளோ!” என்று சமையலறை சன்னல் வழியாகக் கேட்க,

விடியாத அந்த இருளில் கூட மாமியாருக்கு கண்ணும் காதும் இத்தனை கூர்மையா? என்று எண்ணியபடி குளியலறை செல்ல, சுடுதண்ணீர் வாளியில் நிறைந்து தயாராக இருந்தது.

‘எனக்கு இப்படி அர்த்த ராத்திரில எழுந்துக்கறது சுத்தமா பிடிக்கல. இதுவே பாட்டி எழுப்பி இருந்தா சாமியாடி இருப்பேன். புது மாமியார் இவ்வளவு அன்பா சொல்லும்போது நான் என்ன டா செய்யறது? டேய் வெற்றிவேல் முருகா. கொஞ்சம் என் மாமியார் மனசுக்குள்ள போய் என்னை இப்படி மிட் நைட்ல எழுப்பக் கூடாதுன்னு சொல்லு டா.’ என்று கடவுளை தோழனாக எண்ணி கோரிக்கை வைத்துவிட்டு விரைவாக குளித்துவிட்டு வந்தாள்.
சமயலறையில் அவள் நுழைந்ததும்,

“வாடிக்கண்ணு. நான் கார்த்தால சமையலை முடிச்சாச்சு. ஆத்துக்கு வந்திருக்கிற மாட்டுப் பொண்ணு தான் சுவாமிக்கு நைவேத்திய பிரசாதம் பண்ணனும்னுட்டு உன் மாமனார் ஆசைப்பட்றார். அதை மட்டும் பண்ணிட்டு டா கோந்த(குழந்தை).” என்று அன்பு வழிய கூறிய மாமியிடம் முடியாதென்று காலை உதைத்துக் கொண்டு அழவா முடியும்?

ஆனாலும் சமையலில் அனா ஆவன்னா கூட தெரியாத அவளிடம் இந்த பொறுப்பை விட்டுச் சென்றது எத்தனை பெரிய தவறென்று அன்றே சுபாஷிணிக்கு நிரூபிக்கும் அளவுக்கு சண்டித்தனம் ஆருத்ராவிடம் இருந்தாலும் அவரின் கனிவான பேச்சு அதுக்கு முட்டுக்கட்டை போட்டது.

தன்னிடம் வேலையை ஒப்படைத்து விட்டு மாமியார் மாமனாருடன் பூஜை அறையில் சென்று அமர்ந்து கொள்ள, என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தாள்.

காலையில் எழுந்து யோகாசனம் முடித்ததும் தண்ணீர் குடிக்க சமையலறைக்குள் நுழைந்த கோகுல கிருஷ்ணன் மனைவி விழித்துக் கொண்டு நிற்பதைக் கண்டு அவளருகில் ஒரு நொடி நின்றான். அவள் ஏதும் பேசாமல் இருப்பதைக் கண்டு தோளைக் குலுக்கிவிட்டு நகர இருந்த நேரம்,

“மாமி என்னை நைவேத்தியம் பண்ண சொன்னாங்க. என்ன செய்யணும்?” என்று அவசரமாக கேள்வி எழுப்பினாள்.

“பாய்சம் பண்ணு” என்று கூறிவிட்டு சமையலறை கடைக் கோடியில் இருந்த தாமிர அண்டாவிலிருந்து நீரை அள்ளிப் பருகினான்.

‘பாய்சமா? குடுத்தா சப்பு கொட்டி குடிப்பேன். ஆனா அதை செய்யுறது எப்படி? முருகா ஹெல்ப் மீ’ என்று விட்டதை நோக்கி அவள் முனக,

“என்ன செய்ய தெரியாதா?” என்றான் பிசிறில்லாத குரலில்.

அமைதியான அந்த நேரத்தில் தள்ளி நின்று அவன் கேட்ட விதம் அவளுக்குள் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தன்னிச்சையாக தலை மேலும் கீழும் ஆட,

“நகர்ந்து நில்லு” என்று சொன்னவன், பம்பரம் போல அங்கும் இங்கும் சுழன்றான். விசாலமான அந்த சமையலறையில் அவன் வேலை செய்யும் லாவகத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

அரை மணி நேரத்தில், அரிசி பருப்பு இருந்த குக்கர் விசில் அடித்ததோ, பால் தளும்பி வந்த சத்தமோ, மிக்ஸியில் அவன் தேங்காய் அரைத்ததோ அவள் கவனத்தில் பதியவே இல்லை.

வெண்ணிற வேட்டியும் வெற்று மார்பில் பளிச்சிட்ட வெள்ளைப் பூணலும், சமையலறை கசகசப்பில் வெளிவந்த முத்து முத்தான வியர்வைத் துளிகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, அவள் மனமோ, ச்ச ‘இந்த பப்பாளிப்பழம் எவ்வளவு அம்சமா இருக்கான்ல’ என்று வெட்கம் மறந்து கணவனை சைட் அடித்துக் கொண்டிருக்க, அவள் முகத்தின் முன்னே சொடுக்கிட்டு அழைத்தான் கோகுல கிருஷ்ணன்.

“ஹான்” என்று சுயநினைவுக்கு வந்தவளிடம்,

“பாண்ட்லில இருந்து பாய்சத்தை அந்த வட்டப் பாத்திரத்துக்கு கொஞ்ச நேரம் கழிச்சு மாத்தி பூஜை ரூமுக்கு எடுத்துண்டு போ. “என்றவன் அவள் தலையசைத்ததும் அவள் நுனி முடியிலிருந்து நீர் சொட்டுவதை கவனித்து,

“தலையை துவட்டிக்கோ. அதாவது தெரியுமா? இல்ல அதுக்கும் யாரையும் ஹெல்புக்கு அனுப்ப சொல்லி முருகனுக்கு அப்ளிக்கேஷன் போடுவியா?” என்று நக்கல் வழியக் கேட்டான்.

“தெரியும் தெரியும்” என்று சுரத்தில்லாமல் பதில் தந்தாலும் அதில் நாணம் ஒட்டிக் கொண்டிருப்பதை விரட்டியடிக்க முடியாமல் திணறலோடு கூறினாள் ஆருத்ரா.

வாகனத்தை கண்ணும் கையும் அதன் போக்கில் இயக்க மனமோ அவனிடம் அன்று நாணி நின்றதை சங்கடத்துடன் எண்ணியது.

இங்கே கோகுல கிருஷ்ணனும் அதையே தான் எண்ணிக் கொண்டிருந்தான்.

அவளிடம் அவன் அதிகம் பேசவில்லை. அவள் காரணமும் இன்று வரை அவனிடம் கேட்கவில்லை. அவளைக் கண்டால் மஞ்சள் கயிறு மேஜிக்கில் மயங்கி அவனை நாணத்துடன் பார்க்கும் ரகமாகவும் தெரியவில்லை.

ஏன் அவள் இப்படி இருக்கிறாள்? ஏன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை? எப்படி என்னை ஒருவிதமான பார்வை பார்க்கிறாள்? அவள் படிப்பு, வேலைக்கும் அவளது செயலுக்கும் சம்மந்தம் இல்லாதது போல இருக்கிறதே என்று குழம்பித் தவித்தான்.

19 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே – 2”

  1. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 2)

    அய்யய்யோ..! இவன் என்ன விட்டா…..
    “என் கேள்விக்கென்ன பதில்..
    என் கேள்விக்கென்ன பதில்..
    உன் பார்வைக்கென்ன பொருள்”ன்னு பாட்டாவே பாடிடுவான் போலவே…!
    இவன் என்ன அமுல் பேபியா…?
    இல்லை, அவளை அதிகப்பிரசங்கியா நினைக்கிறானா….? ஏதாவது
    சொன்னாத்தானே தெரியும்.
    இப்படி அம்மாஞ்சி மாதிரி கமுக்கமா இருந்தா என்ன தான் புரியும்….? இவன் வாயைத் திறந்து சொல்றானோ இல்லையோ, எங்க மண்டை உடைஞ்சிடும் போலவே..?
    எப்பா… கோகுல கிருஷ்ணா..!
    என்னதான்டப்பா உன் பிரச்சினை…???

    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    பேருக்கு எத்தாப்புல கோகுல கிருஷ்ணன் தான் இருக்கேள் அம்பி….ஆனா…ஏதோ இடிக்குதே…. கிருஷ்ணன் லீலைகளை காட்ட வேண்டாமா….

  3. Avatar

    சமயத்துல அவளுக்கு உதவறான், ஆனா என்ன பிரச்சனை இருவருக்கும்

  4. Avatar

    நடு ஜாமத்துல எந்திரிச்சு நைவேத்தியம் பண்ணனுமா முதல்ல மருமகளாக வர்றவங்கிட்ட சமையல் ரூம் பாத்திருக்கியான்னு கேட்கனும் 😜கிருஷ்ணா இருக்குங்கறையா இல்லைங்கறையா🙄

  5. Avatar

    கல்யாணம் முடிஞ்சிருச்சு ரெண்டு பேரும் பேசி பார்த்தா தானே ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும்.

  6. Avatar
    Anupama Ravichandran

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *