Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 6

மனம் உன்னாலே பூப்பூக்குதே 6

பூ 6

அன்றைய மதிய உணவு நேரம் அத்தனை இனிமையாக அமைந்தது ஆருத்ராவுக்கு.

இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவ்வப்போது தங்களோடு கண்கள் தழுவி கொண்டது அவன் அவளை ஆராய்ச்சியாக பார்ப்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது இந்த எட்டு நாளில் தன்னிடம் அதிகம் பேசாதவன் தன்னை அதிகம் கவனிக்காதவன் என்று தன்னை தேடி வந்து உணவை கொடுக்க நினைத்ததோடு அவள் மறுத்த காரணம் புரிந்து அவளுடன் இணைந்து உணவருந்தி சென்றது ஆருத்ராவின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அவன் உணவு உண்டு விட்டு கிளம்பியதும் மனம் முழுவதும் பட்டாம்பூச்சிக் கூட்டம் பறந்து கொண்டிருக்க, நடையில் ஒரு துள்ளலோடு அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தாள் லிப்டிலிருந்து அவளது கியூபிக்கில் நோக்கி நடந்த வழியில் கால்கள் சடன் பிரேக் போட்டு நின்றது.

அங்கே கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு கேத்தியும் அவள் மேல் சாய்ந்து கொண்டு மீரா இம் நின்றபடி அவளை முறைத்துக் கொண்டிருக்க அப்போதுதான் அவர்களிடம் சொல்லாமல் கூட தான் ஓடி சென்றது அவளின் நினைவுக்கு வந்தது.

பற்பசை விளம்பரம் தோற்கும் அளவிற்கு முத்துப்பற்கள் முப்பத்தி இரண்டையும் காட்டி தோழிகளின் பக்கம் திரும்பினாள்.

“அடிங்க பல்லையா காட்டுற? ஒடச்சிடுவேன் பார்த்துக்க. ஹஸ்பண்ட் வந்ததும் அப்ஸ்காண்ட் ஆனவ தானே நீ? என்னை இளிப்பு வேண்டி இருக்கு?” என்று கேத்தி தாவிக் கொண்டு சண்டைக்கு வந்தாள்.

“இல்ல கேத்தி நான் வேணும்னு இப்படி பண்ணல. அவரு வந்துருக்கேன்னு சொன்னாரா… நம்ப முடியாம ஓடினேனா, அதான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்.” என்று மீண்டும் பல்லை காட்டினாள்.

“அதான் அவர் வந்துட்டாருன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு இல்ல, அப்புறம் எங்களுக்கு சொன்னியா?” என்று மீரா புருவத்தை தூக்க,

“நான் சாப்பாடு கொண்டு வர மறந்துட்டேன் டி. அவர் கொண்டு வந்து கொடுத்தா.ர் இப்ப என்ன உங்க ரெண்டு பேருக்கும்?” என்று பொறுமை பறந்தவளாக காட்டிக்கொண்டு சத்தம் போட்டுவிட்டு குடுகுடுவென்று ஓடி தன்னிடத்தில் அமர்ந்து கொண்டாள்.

“சூப்பர் டி. பொண்டாட்டி சாப்பாடு மறந்துட்டாளாம் வீட்டுக்காரர் சாப்பாட்டு  பையை தூக்கிட்டு வந்தாராம். இந்த காதல் காட்சி எல்லாம் நாங்க பார்க்க கூடாதுன்னு கழட்டி விட்டுட்டு போயிட்டியா?” என்று கேட்டு அவர்கள் விழிகள் அவளின் மேலும் கீழுமாக ஏறி இறங்க, ஆருத்ராவின் முகம் குங்குமமாக சிவந்தது.

கோகுல கிருஷ்ணன் இப்படி நடந்து கொள்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. மனதிற்கு இதமாக இருந்தாலும் ஏன் இந்த திடீர் மாற்றம்? என்று கேள்வி அவளுள் எழாமல் இல்லை.

அதன் பின் அலுவலக வேலையில் அனைவரும் மூழ்கிப் போக அவ்வப்போது உதட்டில் எழுந்த குறுநகையுடன் அன்றைய நாளின் பணிகளை செய்து முடித்தாள் ஆருத்ரா.

மாலை வீட்டிற்கு செல்லும்போது முந்தைய நாள் போல மனசோர்வு எல்லாம் அவளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை ஒரு வித்தியாசமான மனநிலையில்தான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள் ஏனோ அன்றைக்கு அந்த தூரம் ஒரு விதத்தில் ரசிக்கும் விதமாக கனவுகளை சுமந்தபடி செல்வதற்கு ஏதுவாக இருந்தது போலவும் அதே வேளையில் தன் கணவனை சந்திக்க அந்த நீண்ட பயணம் நெடுநேரத்தை விழுங்கிக் கொள்வது போலவும் கிறுக்குத்தனமான எண்ணங்கள் மாற்றி மாற்றி வந்து போயின.

உதட்டில் உறைந்த புன்னகையுடன் வீட்டின் கேட்டை திறந்து தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினாள். முந்தைய நாள் கை கால் அலம்பிவிட்டு வீட்டினுள்ளே வர சொன்னது நினைவுக்கு வர, இன்றும் பின்பக்கமாக சென்று கை, கால் கிளம்பி விட்டு அவள் திரும்பிய போது புழக்கடையின் கதவை திறந்து அதில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார் சுபாஷிணி.

“என்னம்மா சத்தமே இல்லாம பின்னாடி வந்து நிக்கிற?” என்று அவர் அவளைப் பார்த்து வினவ, அவளோ

‘நான் மூஞ்சி கழுவும் போது இவங்க தானே சத்தம் இல்லாமல் பின்னாடி வந்து நிக்கிறாங்க? என்ன பார்த்து கேக்குறாங்க?’ என்று மனதில் நினைத்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது,

“நேத்திக்கு ஆத்துக்குள்ள வர்றச்சே காலலம்பிண்டு வர சொன்னேள் இல்லையா மாமி, அதான் இன்னைக்கும் வந்ததும் வண்டியை நிறுத்திட்டு காலலம்பிண்டு வரலாம்னு வந்தேன்” என்று இழுத்தாள்.

“சரி உள்ள வா.” என்று விட்டு அவர் சென்று விட்டார். திடீரென்று மாமியார் பேச்சினில் தெரியும் ஒட்டாத தன்மையை புரிந்து கொண்ட ஆருதிராவுக்கு அதற்காக தான் என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை.

அவள் வீட்டினுள் நுழைந்து சுவாமிக்கு விளக்கு ஏற்றிவிட்டு தன் உடையை மாற்றிக் கொள்ள உள்ளே செல்ல இருந்த நேரம் ஆதிநாதன் மருமகளை அழைத்தார்.

திருமணம் நிச்சயமானதிலிருந்து கோகுல கிருஷ்ணன் போலவே ஆதிநாதனும் மருமகளிடம் வார்த்தைகளை அளந்து அளந்து தான் பேசிக் கொண்டிருந்தார்.

முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருந்தாலும் தேவைக்கு மேல் ஒரு வார்த்தை பேசாத மனிதர் அவர். இன்று என்ன பேசப் போகிறார் என்று புரியாமல் அவர் அழைந்த இடத்திலேயே நின்று கொண்டு இருந்தாள்

சரியாக அந்த நேரம் கையில் சின்ன பையுடன் வெளியே வந்த மாமியார் “நான் பக்கத்துல சீதா வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்” என்று வெளியேறி விட்டார்.

மாமனார் பேச வேண்டும் என்றதும் மாமியார் வெளியே சென்றதும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் ஆருத்ராவுக்கு அட்சர சுத்தமாக விளங்கியது.

டைனிங் டேபிளின் சேரில் அமர்ந்து கொண்ட மாமனார், தன் எதிர் இருக்கையை நோக்கி கைகளை நீட்டி ஆருத்ராவை அமர்ந்து கொள்ளுமாறு அழைத்தார்.

“சொல்லுங்க மாமா” என்று அவள் அமர்ந்ததும்,

‘உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்காம்மா?” என்றார் முதல் கேள்வியாக

தலையை அசைத்து ஆமோதிப்பை தெரிவித்த ஆருத்ராவின் விழிகளில் குழப்பம் கூடிக் கொண்டே தான் இருந்தது.

“மாமி உன்கிட்ட பிரியமா நடந்துக்கிறாளா?” என்று அடுத்த கேள்வியை அவர் வைத்ததும் அவளுக்கு திக்கென்று இருந்தது.

“மாமி ரொம்ப அன்பா இருக்காங்க” என்று குறிப்பிட்டபோது அவள் முகத்தில் வந்து போன மென்மையை கவனித்துக் கொண்டார் ஆதிநாதன்.

“கோகுலும் நீயும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க ஆரம்பிச்சாச்சா?” என்று அடுத்த கேள்வி வைக்க ,

இதற்கு பதில் சொல்ல தெரியாமல் திணறினாலும் அதை காட்டிக் கொள்ளாமல் மீண்டும் தலையை உருட்டி வைத்தாள்.

“ஓகே அப்போ வீடு புடிச்சிருக்கு. மாமி ஓகே.கோகுலும் நீயும் ஃபைன் தான். அப்போ உனக்கு இந்த வீட்ல வேற என்னமா பிரச்சனை?” என்று நேரடியாக அவர் கேள்வி எழுப்ப இதை சற்றும் எதிர்பார்க்காத ஆருத்ரா திருதிருவென்று விழிக்கத் துவங்கினாள்.

“மனசுல எதுவும் வச்சுக்காதம்மா.எதா இருந்தாலும் ஓப்பனா சொல்லு. என்னால முடிஞ்சத நான் கண்டிப்பா சரி பண்ணி தருவேன்.என்னை நீ நம்பலாம். நான் உன் அப்பா மாதிரி அப்படின்னு சொல்ல மாட்டேன் உன் அப்பா தான்னு நினைச்சுக்கோ” என்றார்.

அவர் வார்த்தைகளின் தாக்கத்தால் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொள்ள தலையை நிமிர்த்தாமல் அப்படியே அமர்ந்திருந்த ஆருத்ரா,

“எனக்கு இங்க ஒரு பிரச்சனையும் இல்ல மாமா” என்று மிகவும் உள்ளே போன குரலில் கூறினாள்.

“அப்புறம் ஏன் மாமி கிட்ட நீயா எதுவும் பேசுறதே இல்லை? காப்பி கொடுத்தா குடிக்கிறது இல்ல? இது உன் வீடுதான்னு சொல்லியும் நீயா எதையும் பொறுப்பா எடுத்து செய்றதில்ல? இன்னிக்கு ஆபீஸ்க்கு சாப்பாடு கூட எடுத்துண்டு போகல? இத்தனை விஷயம் இருக்கும்போது உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னு சொன்னா நான் எப்படி நம்பட்டும்?” என்று அவர் அவளை ஆழ்ந்து நோக்க, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

“நீ ஏதாவது சொன்னால் தானேம்மா என்னால சரி பண்ண முடியும்? உன் பாட்டி உன்ன பத்தி ரொம்ப பெருமையா சொன்னாங்க. நீயும் அதுக்கு தகுந்த மாதிரி தான் நடந்துண்ட. இப்ப திடீர்னு இந்த மாற்றம் எதனாலன்னு எனக்கு தெரியணும் இல்லையா?” என்றவர் கேள்வி எழுப்பிய போது ஆருத்ராவின் மனதிற்கு தன்னை அமர வைத்து அலுவலகத்தில் விசாரணை நடத்துவதை போன்ற ஒரு தோற்றமே எழுந்தது.

ஆதிநாதன் மேலாளராக பணி புரிந்தவர் என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொண்டு அதில் இருக்கும் சிக்கல்களை தீர்ப்பதில் வல்லவர். அலுவலகத்தில் செய்த அதே பாணியில் இன்று வீட்டில் ஏற்படும் சிக்கல்களையும் தீர்க்க அவர் முற்படுகிறார். ஆனால் அதை எதிர்கொள்ளும் குடும்ப உறுப்பினர் எந்த மாதிரி உணர்வார் என்பதை அவர் யூகித்திருக்கவில்லை.

ஆருத்ராவிற்கு நுனி நாக்கில் பதில் வந்து நின்றது. ஆனால் வேகமாக பேசிவிட்டால் குடும்பத்தில் நாளை நிம்மதி இருக்காதே! என்று பல்லை கடித்துக் கொண்டு பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“என்னடா இவ்வளவு பொறுமையா கேட்கிறேன். பேசாம உட்காண்டுருந்தா நான் என்ன நினைக்கட்டும்?” என்று அவர் தான் பொறுமை இழந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்த,

“நான் தனியா ஹாஸ்டல்ல வளர்ந்தவ மாமா. பெருசா உறவுக்காரங்களோட பழக்கம் எனக்கு இல்ல. என்னதான் மாமி பிரியமா பேசினாலும் அதுக்கு பதில் சொல்ல தான் எனக்கு தெரியுதே தவிர அவங்ககிட்ட நான் என்ன பேசுறதுன்னு எனக்கு தெரியல. எனக்கு காபி பிடிக்காது. நான் காபி குடிக்கவே மாட்டேன். மாமி பிரியமா கொடுக்கும்போது வேண்டாம்னு அவங்க முகத்துல அடிச்ச மாதிரி சொல்ல சங்கடமா இருந்தது. அதனாலதான் காபிய அவர்கிட்ட கொடுத்துடுறேன். மத்தபடி வேற எந்த காரணமும் இல்லை. இன்னிக்கு காலைல ஆஃபீஸ்க்கு லேட் ஆனதால தான் அவசரமா கிளம்பினேன். மாமி கூட்டுக்கு அரைக்க சொல்லி இருந்தாங். ஆனா அவர் சொன்னதுனால நான் கிளம்ப போயிட்டேன். கூட்டு ரெடி ஆகலன்னு எனக்கு தெரியும். அப்படி இருக்கும்போது டிபன் குடுக்க சொல்லி எப்படி கேட்க முடியும்? அதனாலதான் கேண்டின்ல சாப்பிடுக்கிறேன்னு சொன்னேன். வேறு எதுவும் இல்லை” என்று ஊழியர் மேலாளருக்கு அறிக்கை கொடுப்பது போல பதிலளித்தாள்.

“அவ்வளவு தானா? ஓகே பிராப்ளம் சால்ட். நான் மாமி கிட்ட உனக்கு காபி பிடிக்காதுன்னு சொல்லிடுறேன்
நீயும் சும்மா மாமிக்கிட்ட ஏதாவது ஜோவியலா பேச முயற்சி பண்ணு. இது உன்னோட வீடு. நீயா உனக்கு விருப்பமான வேலைகளையோ, இல்ல விஷயங்களையோ முன்னெடுத்து செய். சரியா? போய்ட்டு வா.” என்று அவளுக்கு விடை கொடுத்தார்.

சிரமப்பட்டு உதட்டில் புன்னகை வரவழைத்து அங்கிருந்து மெல்ல நகர்ந்து தங்களது படுக்கையறைக்கு வந்து சேர்ந்தளுக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது.

பள்ளியில் அல்லது கல்லூரியில் அவளை ஒரு கேள்வி கேட்டாலே அடுத்த முறை கேள்வி கேட்காத அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும் என்று பார்த்து பார்த்து கவனமாக இருக்கும் குணம் கொண்ட ஆருத்ராவை இன்று விசாரணை நடத்துவது போல டேபிளில் அமர வைத்து பேசிய விதத்தில் மனதில் அடி வாங்கி விட்டாள்.

அதே யோசனையில் உடை கூட மாற்றாமல் கட்டிலில் அமர்ந்து எங்கோ வெறித்து கொண்டிருந்தவள், வெளியே பால்காரரின் டிவிஎஸ் 50 ஹாரன் சத்தத்தில் நடப்புக்கு வந்தாள்.

காலை அவசரத்தில் உடைகளை எடுத்து மாட்டிக்கொண்டு சென்றவள் அவை கப்போர்டில் இருந்ததை கவனித்திருக்கவில்லை. இப்பொழுது தன்னுடைய சூட்கேஸ்கள், பைகள் என்று எதுவும் தான் வைத்த மூலையில் இல்லாதது அவளது மூளையில் உறைத்தது.

வேகமாக எழுந்து கப்போர்டை திறக்க அவை அனைத்தும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கவனித்து ‘காலையில இங்க இருந்தா எடுத்து போட்டுட்டு போனேன்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

காலையில் எங்கே நேரம் கழித்து எழுந்து விடுவோமோ என்ற பதட்டமும் அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதே என்ற பதட்டமும் இருந்த காரணத்தால் இருமுறையும் உடைய எங்கிருந்து எடுத்தாள் என்பதே அவள் நினைவில் பதிந்திருக்கவில்லை. இப்பொழுது அதை தெளிவாக கவனித்த பின்,

இதையெல்லாம் மாமியார் எடுத்து வைத்திருப்பாரோ என்ற கேள்வி வர, இதை எப்படி அவரிடம் கேட்க முடியும்? அப்படியே கேட்டாலும், இத்தனை நாட்கள் ஏன் எடுத்து வைக்காமல் இருந்தாய்? என்ற கேள்வி வந்தால் என்ன பதில் சொல்வது? என்று தெரியாமல் சற்று நேரம் திறந்திருந்த காப்போர்டின் கதவின் மேல் சாய்ந்த படி நின்றிருந்தாள்.

அந்த நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இருந்த கோகுலகிருஷ்ணன் மனைவி நின்றிருக்கும் கோலத்தைக் கண்டு

“ஏம்மா உன் துணி ஏதாவது மிஸ் ஆகுதா? நான் எதுவும் மாத்தி வெச்சிட்டனா? என்ன வேணும்னு சொல்லு, அடுக்கும்போது வச்ச நினைவு இருந்தால் நான் எடுத்து தரேன்” என்று தன் அலுவலக பையுடன் நேராக அவளுக்கு அருகில் வந்து நின்றான்.

தன் உடைகளை திருத்தமாக அடுக்கியது தன் கணவன் தான் என்ற நிறைவு அவள் மனதில் எழுந்த நிமிடம் தன் மாமியாருக்கு எந்த ஒரு பதிலையும் தான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது கொடுத்த நிறைவு அதைவிட அதிகமாய் இருந்தது.

அவனையே ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவள் சட்டென்று அவன் மார்பில் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள்.

திடீரென்று தன் மேல் சாய்ந்து கொண்ட தன் மனைவியை புரியாமல் பார்த்த கோகுலகிருஷ்ணன், அவள் முகத்தில் தெரிந்த நிம்மதியை மட்டும் குறித்துக் கொண்டான்.

மெல்ல அவளது தோளில் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான். கண்களை மூடிக்கொண்டிருந்த ஆருத்ராவுக்கு அது எத்தனை பெரிய ஆறுதல் என்று அப்போது கோகுல கிருஷ்ணன் அறிந்திருக்கவில்லை.

சில நிமிடங்கள் நீண்ட அந்த நெருக்கம் பின் ஏதோ நினைவு வந்த காரணத்தால் அவனை விட்டு விலகி நின்றவள்,

“தேங்க்ஸ்” என்று மட்டும் கூறிவிட்டு தன்னுடைய மாற்றுடையை எடுத்துக் கொண்டு அறையில் இருக்கும் குளியலறை நோக்கி சென்றுவிட்டாள்.

போகும் அவளையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த கோகுலகிருஷ்ணன் பின் தலையை மெல்ல உலுக்கி விட்டு தன் அலுவலக பையை மேஜையில் வைத்து தன்னுடைய இரவாடையை எடுத்து கட்டிலின் மேல் வைத்தான்.

அவள் வெளியே வந்து அன்று அலுவலகம் போட்டுக் கொண்டு சென்ற உடையை துவைப்பதற்காக தனியே ஒரு கூடையில் போட்டு வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

அதே பையில் தன்னுடைய உடைகளை களைந்து போட்டவன் அதன்பின் கை கால் முகம் அலம்பி இரவுடைக்கு மாறினான்.

மாலை நேர காபிக்காக அவன் ஹாலுக்கு சென்றமர்ந்த போது ஆருத்ரா ஒரு டம்ளர் டவராவில் காபி கொண்டு வந்து அவன் கையில் கொடுத்து விட்டு மென்மையாக புன்னகைத்து அங்கிருந்து சென்றாள்.

அப்பொழுதுதான் சீதா வீட்டிலிருந்து திரும்பி தன் வீட்டினில் நுழைந்தார் சுபாஷினி. மகன் கையில் காப்பி இருப்பதை கவனித்து விட்டு,

“யாருடா குடுத்தா?” என்று கேள்வி எழுப்ப, அன்னை வீட்டில் இல்லாதது தெரியாத கோகுல கிருஷ்ணன் ஒரு நொடி விழித்து விட்டு,

“ஆருத்ரா கொண்டு வந்து கொடுத்தாம்மா.” என்றான்.

“ஆருத்ரா…” என்று வேகமாக அழைத்த சுபாஷினி,

“கோகுலுக்கு நீயா காபி கலந்த?” என்று கேள்வி எழுப்ப ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

“எந்த டிகாஷன்ல எடுத்து காப்பி போட்ட?” என்றவர் கேட்டபோது திருதிருவென்று  விழித்தவள்.

“அடுப்பு பக்கத்துல இருந்த சின்ன பில்டர்ல இருந்து கலந்தேன் மாமி” என்று பதிலளிக்க,

“ஐயோ… அது இரண்டாவது டிகாஷன். அதுல போயி காபி கலப்பாங்களா? அதுவும் கோகுலுக்கு… நான் வருவேன்ல்ல? அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று படபடவென்று பொரிந்தவர் மகனின் கையில் இருந்த காபியை படக்கென பறித்துக் கொண்டு சமையலறை நோக்கிச் சென்றார்.

தன்னை கடந்து செல்லும் மாமியாரை ஒருவித அதிர்வோடு பார்த்துவிட்டு அமைதியாக தங்களுடைய படுக்கையறை நோக்கி நடக்க துவங்கினாள் ஆருத்ரா.

சற்று நேரத்திற்கு முன் பொறுப்பாக வீட்டு விஷயங்களை கவனித்துக் கொள் என்று சொல்லச் சொன்ன அவர்களே தனக்காக காத்திருக்க வேண்டாமா என்று கேட்கும் முரணை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்புடன் சென்று கட்டிலின் ஓரத்தில் முடங்கி விட்டாள்.

மனைவி தனக்கு முதன்முதலாக கலந்த காப்பியை அன்னை அப்படி பறித்து சென்றது கோகுலுக்கு வருத்தமாக இருக்க, வேகமாக சமையலறை நோக்கி சென்றவன் அங்கே அன்னை மேடை மேல் வைத்திருந்த அந்த காப்பியை கையில் எடுத்துக் கொண்டு,

“இன்னைக்கு ஒரு நாள் செகண்ட் டிகாஷன்ல குடிச்சா நான் ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டேன் மா. இன்னொரு காபி எல்லாம் கலக்காத”   என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு தன் மனைவியைத் தேடி படுக்கையறைக்குச் சென்று விட்டான்.

மகனின் இந்த பதிலை எதிர்பார்த்திருக்காத சுபாஷினி போகும் அவனே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றார்.

11 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 6”

 1. Avatar

  மாமி நீங்க நல்வங்களா கெட்டவங்களா? இதே கேள்விதான் எனக்கு

 2. Avatar

  ஒரு கல்யாணம் …பலரை மாற்றுகிறது….ஆம் தானே….
  Nice moving sis….semma….🥰💕💕💕♥️❤️

 3. Avatar

  Enna indha mami indha kozhapu kozhapuraga nu thonum.aaru aana onnum pannamudiyathu sei nu solluvaanga aana nama seiyutha atha ipadi panna koodathu nu sollurathu ah vida next time ipadi pannu nu.solla mataga

 4. Kalidevi

  Parra namma gokul ah ithu tak nu purinjitano wife potu kofutha coffee ah ketu vangi kudikirane. Aana Yen mami normal mamiyar mari nadathukuringa illa etho reason iruka

 5. M. Sarathi Rio

  மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
  (அத்தியாயம் – 6)

  ஓ மை காட்..! ஆருத்ராக்குள்ள எத்தனை ஏக்கம் இருந்தா, இந்த ஒருநாள்ல அவ ஹஸ்பெண்ட் கொண்டு வந்த சாப்பாடும், அதை ஷேர் பண்ணிக்கிட்டு சாப்பிட்ட மகிழ்ச்சியையும்
  இந்தளவுக்கு கொண்டாடுவான்னு…. கொஞ்சம் கோகுல் யோசிச்சுப் பார்த்தாலே, அவ அன்புக்காகவும், மனுசாளுக்காகவும் எப்படி ஏங்கி போயிருக்காங்கறது
  புரிஞ்சிருக்கும். இதே அனுசரனையையே அவ கிட்ட காட்டினா போதும் அவளை முழுக்க புரிஞ்சிக்க முடியும்ன்னு தோணுது. ஆருத்ராவும் தன் வட்டத்துக்குள்ள இருந்து கொஞ்சம் வெளியே வந்து தன்னை சுத்தியும், தன்னைச் சார்ந்தவங்களையும் கொஞ்சம் கவனிக்கணும். அதுக்காக பெருசா மலையெல்லாம் புரட்ட வேண்டாம். சின்ன சின்ன வேலைகள், கொஞ்சமா அக்கறை, தன் துணையின் மேல் அன்பான பார்வை வீச்சு, அனுசரிப்பு, கரிசனம், ஒரு சின்ன ஹக்.. அதே சின்ன முத்தம்… இப்படி சின்ன, சின்ன விஷயங்களை பண்ணாலே போதும், வாழ்க்கை சுலபமா போகுறதோட, தாம்பத்தியமும் இனிக்க ஆரம்பிச்சிடும். அதுக்கு முதல்ல ரெண்டு பேருமே ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்க ட்ரை பண்ணனும். ரெண்டு பேருமே தன் கூட்டை விட்டு வருவாங்களா…?

  மாமனார் அக்கறையா விசாரிச்சு, தான் வீட்டின் தலைவர்ன்னு நிருபிச்சாச்சு.
  ஆனா, அவரோட அணுகுமுறை
  அவர் ஏதோ சுப்பிரியர் ஆஃபிஸர் மாதிரியும், ஆருத்ரா
  ஏதோ ஜூனியர் ஆஃபிஸர் மாதிரியும் சீன் க்ரியேட் பண்ணிடுச்சோ…? எனக்கென்னவோ, அப்படித் தான் தோணுச்சு.

  இதோ வந்துட்டாங்களே பில்டர் காபி மாமி. வந்தவுடனே உச்சஸ்தாயில தன் மகன் மேல தனக்கு மட்டும் உரிமை இருக்கிற மாதிரியும், அக்கறைக்கு மறுஉருவமே சுபா மாமி தான்ங்கற மாதிரியும்
  ஸீனை க்ரியேட் பண்ணிட்டாங்களா…?

  ச்…சோ..! ஏன் மாமி… நீங்களே காபி போட்டு கொடுத்து, நீங்களே சமைச்சு கொடுத்து
  நீங்களே அதை பேக் பண்ணியும் கொடுத்து, நீங்களே எல்லாம் செய்யுறதுக்கு,
  கல்யாணம் தான் எதுக்கு..?
  பொண்டாட்டி தான் எதுக்கு..?
  வெறும் குத்தம் குறை சொல்றதுக்கா…???

  (கதைகள்ல மட்டுமில்லை, நிறைய வீட்டு நிலவரமும் இதே தான்)
  😄😄😄
  CRVS (or) CRVS 2797

 6. Priyarajan

  Spr going sis….. Kaalaila than un pondati vanthuta unakke ava than tharanumnu sonanga… Ipo oru coffee ku ipdi oru pachi….. Waiting for nxt epi😍😍😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *