Skip to content
Home » மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5

மெய்யரசன் போன் பேசி முடிக்கவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரவும் சரியாக இருந்தது.

அவர்களைப் பார்த்தவருக்கோ ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“உள்ள வாங்க… உள்ள வாங்க….” என்று முகத்தில் மட்டும் புன்னகையை வைத்துக் கொண்டு வரவேற்றவர் “இருங்க…. தண்ணி கொண்டு வர சொல்றேன்” என்று சொன்னபடியே சமையலறைக்குள் போனார்.

“பார்வதி…. பூர்ணாவோட ஆபீசுக்கு போன் பண்ணி பேசுனேன்.  பூர்ணா எப்பவும் போலவே கிளம்பிட்டதா சொல்றாங்க. ஆனா இன்னும் ஏன் வீட்டுக்கு வரலைன்னு தெரியலை. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற வந்து ஹால்ல உட்கார்ந்துட்டு இருக்காங்க” என்று பதற்றமாக சொல்லி முடித்தார்.

“என்னங்க சொல்றீங்க? இப்ப என்ன பண்றது? அவங்க வேற பொண்ணு எங்கன்னு கேட்பாங்களே….”  என்று சொன்னவருக்கு அப்பொழுது ஏதோ தோன்ற “அச்சச்சோ…. பூர்ணா வேற இன்னும் வீட்டுக்கு வரல. இந்த பூஜா வேற கல்யாண பொண்ணு  மாதிரி மேக்கப் பண்ணிகிட்டு இருக்கா. இப்போ அவ வெளியே எதுவும் வந்துட்டான்னா அவ தான் கல்யாண பொண்ணுன்னு எல்லாரும் தப்பா நினைச்சுடுவாங்க. அது வேற ஏதாவது சங்கடம் ஆகிட போகுது”  என்று தன் மனதில் நினைத்தவரோ வேகமாக பூஜாவின் அறையை நோக்கி போக,  வழியில் ஹாலில் அமர்ந்திருப்பவர்களை பார்த்து சிரித்து முகத்தோடு வரவேற்றபடியே அறைக்குள் போனார்.

அங்கே பூஜாவோ  “அம்மா… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்களா? சத்தம் கேக்குது… நான் போய் எல்லாத்தையும் வெல்கம் பண்ணிட்டு வரட்டுமா?” என்று நிலைமை புரியாமல் கேட்க

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ உள்ளையே இருன்னு சொல்றதுக்கு தான் வந்தேன். உங்க அக்காவை வேற இன்னும் காணோம். இப்போ நீ வெளியே வந்தா தப்பா ஆகிடும்”  என்று பதற்றமாக பார்வதி சொன்ன பின்பு தான் தன் அக்காவை பற்றியே யோசித்தாள் பூஜா.

“பூர்ணா வேற இன்னும் வரலையே… நான் இவ்ளோ நேரம் அவளை பத்தி யோசிக்கவே இல்ல. என்னை பத்தி மட்டும் தான் யோசிச்சேனே தவிர, அக்காவை காணோம்னு ஏன் எனக்கு தோணவே இல்ல. இப்போ அக்கா இங்க வரலைன்னா கண்டிப்பா தப்பாகிடும். கண்ணனும் கூட எங்க குடும்பத்தை தப்பா நினைச்சுக்க வாய்ப்பு இருக்கு.”  என்று யோசித்தவள் “டென்ஷன் ஆகாதம்மா… நான் இப்பவே அக்காக்கு போன் பண்றேன்” என்று சொன்னவள் தன் போனை எடுத்து பூர்ணாவுக்கு போன் செய்தாள்.

“ஏய் நானும் அப்பாவும் 100 முறைக்கு மேல அவளுக்கு போன் பண்ணி பாத்துட்டோம்டி… அவள் போனையே எடுக்கல”  என்று சொன்ன பார்வதியோ மெய்யரசின் குரல் கேட்டு வெளியே ஓடிப் போனார்.

தன்னுடைய அப்பா அம்மாவின் அழைப்பை ஏற்காத பூர்ணா இப்பொழுது பூஜாவின் அழைப்பை ஏற்றாள்.

பூர்ணா போனை எடுத்ததும் “எங்கடி இருக்க? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நேத்து நைட்டே அப்பா உன்கிட்ட சொன்னாங்க தானே? அப்படி இருந்தும் நீ ஏன் இன்னும் வீட்டுக்கு வரல?”  என்று படப்படவென்று  தன்னுடைய கேள்விகளை கேட்டு முடித்தாள் பூஜா.

“நீயும் அவங்கள மாதிரியே பேசாத பூஜா.  அப்பா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க  வர்றாங்கன்னு தான சொன்னாங்க. என்னோட முடிவை கேட்டாங்களா?” என்று அவளும் கோபமாக பேச

“என்ன பூர்ணா  சொல்ற? அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல…..”  என்று பூஜா தயக்கமாக கேட்க

“ஆமாடி…. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல” என்று பட்டென்று சொன்னாள் பூர்ணா.

“ஏன் பூர்ணா? உனக்கு எதுக்கு விருப்பம் இல்ல? நீ வேற யாரையாவது…….”  என்று இழுத்தவளோ “ஐயோ கடவுளே….  பூர்ணா வேற யாராவது லவ் பண்றேன்னு மட்டும் சொல்லிடவே கூடாது” என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

“இப்போ பூஜா கிட்ட சொல்லிடலாமா….”  என்று யோசித்த பூர்ணாவோ  “இல்ல…. இப்போ சொன்னா கண்டிப்பா பூஜாவும் நம்ம மேல கோபப்பட வாய்ப்பு இருக்கு.” என்று தன் மனத்திற்குள்ளேயே அதற்கு பதிலும் சொல்லிக் கொண்டவள் “இல்லடி… எனக்கு இப்போ ஆபீஸ்ல ப்ரொமோஷன் தர போறாங்க. இப்போ நான் என்னோட கெரியரை நோக்கி ஓடிட்டு இருக்கேன். இந்த நேரத்துல கல்யாணம்  நடந்தா கண்டிப்பா  கெரியர்ல எனக்கு இருக்க கனவை அக்ச்சிவ் பண்ண முடியாது. சோ  இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்” என்று பொய்யான ஒரு காரணத்தை சொன்னாள்.

அதைக் கேட்டு நிம்மதி அடைந்த பூஜாவும் “அப்பாடா…. இதுதான் காரணமா…. நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். அக்கா முதல்ல வீட்டுக்கு கிளம்பி வா…. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்” என்று பூஜா சொல்ல

“என்னடி விளையாடுறியா? இப்ப நான் வீட்டுக்கு வந்தா எனக்கு கல்யாணம் பேசி முடிச்சிட மாட்டாங்களா?” என்று பூர்ணா  கோபமாக கேட்க

“இங்க பாரு பூர்ணா ஓடி ஒழியறது எல்லாத்துக்கும் ஒரு தீர்வா இருக்காது. நீ முதல்ல வீட்டுக்கு வா. அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் அப்பா கிட்ட பேசிட்டு அதுக்கப்புறம் அப்பாவையே மாப்பிள்ளை வீட்ல பேச சொல்லலாம். உன்னோட ட்ரீமுக்கு இந்த கல்யாணம் கண்டிப்பா ஒரு தடையா இருக்காது. அது மட்டும் இல்லாம இப்ப நீ வராம இருந்தா தான் அப்பா வந்திருக்கவங்க முன்னாடி அசிங்கப்பட வேண்டியதா இருக்கும்”  என்று பூஜா சொன்ன இந்த வார்த்தை பூர்ணாவை ஏதோ செய்தது.

“அசிங்கப்பட வேண்டி இருக்கும்” என்று பூஜா சொன்ன வார்த்தை திரும்ப திரும்ப பூர்ணாவின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“சரிடி நான் அப்பாவுக்காக வரேன். ஆனால் இந்த கல்யாணத்துல எனக்கு  சுத்தமா விருப்பம் இல்ல. நீ எனக்கு துணையாக இருப்பியா?”  என்று பூர்ணா கேட்க

தன் அக்காவின் மனதை அறியாதவளோ “நீ வாக்கா… அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்று சொல்லி முடித்தாள்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு பார்வதி காபி கொண்டு வந்து கொடுக்கவே, சிறிது நேரம் பொறுமையாக இருந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் “சார் பொண்ண பார்த்திடலாமா?”  என்று கண்ணனின் அப்பா அறிவழகன் கேட்டார்.

“சார்… அது வந்து….”  என்று மெய்யரசன் தயக்கமாக எதையோ சொல்ல வர அப்பொழுது சரியாக பூர்ணா உள்ளே நுழைந்தாள்.

பூர்ணாவை பார்த்த பிறகு தான் பார்வதிக்கும் மெய்யரசனுக்கும் உயிரே வந்தது போல் இருந்தது.

“பொண்ணு இப்பதான் வேலையை முடிச்சிட்டு வர்றாளா?  போட்டோல பார்த்த மாதிரியே பொண்ணு நேர்ல அழகா லட்சணமா தான் இருக்கா” என்று கண்ணனின் அம்மா செல்வி சொல்லிட

செழியனை திரும்பி பார்த்த கண்ணனோ  செழியனின் கைகளை பிடித்தபடியே கண்களால் “என்ன புடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

பூர்ணாவை பார்த்த முதல் பார்வையிலேயே செழியனுக்கு அவளை பிடித்து விட, கண்ணன் கேட்ட கேள்விக்கு வெட்கத்துடன் தலை குனிந்தான்.

தன் அண்ணன் வெட்கப்படுவதை பார்த்தவனோ “பாரேன்…. இந்த ரவுடி பயலுக்கு வெட்கம் எல்லாம் கூட வருது” என்று தன்  மனதிற்குள்ளேயே கிண்டல் செய்து கொண்டான்.

உள்ளே வந்த பூர்ணாவோ பார்மாலிட்டிக்காக புன்னகை செய்துவிட்டு தன் அறைக்குள் போக தயாராக

“ஒரு பத்து நிமிஷம் அவ புடவை மாத்தீட்டு வந்துருவா” என்று பார்வதி சொல்ல

“நாங்க தான்  பொண்ண பாத்துட்டோமேங்க. அப்புறம் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம்.? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”  என்று பார்வதியை பார்த்து சொன்ன செல்வியோ “இங்க வந்து உட்காருமா….” என்று பூர்ணாவை அழைத்தார்.

அவளும் செய்வதறியாமல் செல்வியின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

“என்னடா உனக்கு பொண்ணு புடிச்சிருக்கா?” என்று தன் மகனை பார்த்து கேட்டார் செல்வி.

“அம்மா…. இனிமேல் அண்ணன் வாயால எல்லாம் பேச மாட்டான். கண்ணால தான் பேசுவான்”  என்று தன் அண்ணனை கிண்டல் செய்த படியே மறைமுகமாக செழியனுக்கு பூர்ணாவை பிடித்திருக்கிறது என்பதை சொன்னான் கண்ணன்.

கண்ணன் சொன்ன வார்த்தையில் செழியனின் சம்மதத்தை புரிந்து கொண்ட செல்வியோ “எங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம். உங்களுக்கு பையனை பிடிச்சிருக்கா?” என்று  மெய்யரசனை பார்த்து கேட்டார்.

“புரோக்கர் உங்க குடும்பத்தை பத்தி சொன்னபோவே எங்களுக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. இப்போ பையனை நேர்ல பார்த்ததும் இன்னும் பிடிச்சு போயிடுச்சு. நீங்க கேட்க வேண்டிய மத்த விஷயங்களை கேட்டா நிச்சய தேதியை முடிவு பண்ணிக்கலாம்” என்று மெய்யரசன் சொன்னதும் தன்னுடைய தந்தையை கேள்வியய் பார்த்தாள் பூர்ணா.

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லப்பா….” என்று அவளுக்கு கத்தவே தோன்றியது. இருந்தாலும் சபை நாகரீகத்திற்காகவும், தன் தந்தையின் கெளரவத்திற்காகவும் அமைதியாக இருந்தாள்.

“எங்களுக்கு கேக்குறதுக்கு எதுவுமே இல்லைங்க. உங்க பொண்ணுக்கு உங்க சக்திக்கு முடிஞ்சதை செஞ்சாலே போதும். நாங்க மத்தவங்க மாதிரி இவ்வளவு பவுன் போடுங்க அவ்வளவு பவுன் போடுங்க. பையனுக்கு பைக் வாங்கி தாங்க கார் வாங்கி தாங்கன்னு எதுவுமே கேட்க மாட்டோம். உங்க பொண்ணு எங்க வீட்ல வந்து வாழ்றதுக்கு தேவையான எல்லா விஷயமும் எங்க வீட்ல இருக்கு. அதனால உங்க பொண்ணு மட்டும் வந்தா போதும்” என்று செல்வி சொன்னதை கேட்ட பார்வதிக்கு சந்தோஷமாக இருந்தது.

இங்கு நடக்கும் உரையாடலை எல்லாம் அறைக்குள் இருந்து கேட்டபடியே சந்தோஷப்பட்டு கொண்டு இருந்தாள் பூஜா.

“ஆஹா…. எங்க மாமியார் எவ்வளவு பெருந்தன்மையா பேசுறாங்க. இந்த வீட்டுக்கு மருமகளா போக எங்க அக்காவும் நானும் கொடுத்து வச்சிருக்கணும் போல…..”  என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

இந்த ஆசை  நிறைவேற போவதில்லை என்று அவளுக்கு அப்போது தெரியவில்லை……

1 thought on “மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *