Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11

பூர்ணா கதவை திறந்ததும்,  வேக வேகமாக உள்ளே நுழைந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான்.

கண்ணனின் இந்த மனநிலைமைக்கு காரணம் புரியாத பூர்ணாவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விட்டாள்.

“என்ன ஆச்சு இவருக்கு?  நல்லா தானே சென்னைக்கு கிளம்பி போனாரு? இப்ப எதுக்காக இவ்ளோ அப்செட்டா வந்திருக்காரு?” என்று தன் மனதில் நினைத்து கொண்டவளுக்கு, அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்கவே தோன்றியது.  இருந்தாலும் அவனிடம் எப்படி அவனுடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி கேட்க முடியும்? என்று அமைதியாகவே இருந்து விட்டாள்.

இரவு பத்து மணி ஆகியும்  யாழிசை கண்ணன் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை.

“இவரு இன்னும் ஏன் வெளியே வரலைன்னு என்று தெரியலையே… எதுவும் சாப்பிட்ட மாதிரியும் தெரியல. என்னை பத்தியும் எதுவும் கேட்டுக்கல. சென்னை போன விஷயம் என்னாச்சுன்னும் எதுவும் சொல்லல. யாஷ் (யாழிசை கண்ணன்) பூஜா கிட்ட பேசியிருப்பாரா? இதை எப்படி நான் தெரிஞ்சுக்கிறது?”  என்று தன் மனதில் யோசித்துக் கொண்டே கண்ணனின் அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நேராக சென்று அவனின் அறையின் கதவை தட்டினாள்.

பூர்ணா கதவை தட்டிய சில நிமிடங்களில் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் கண்ணன்.

வெளியே வந்ததவனோ பூர்ணாவின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல், வேகமாக வீட்டை விட்டு வெளியே போய் விட்டான்.

அங்கே கண்ணனோ தவித்துக் கொண்டிருக்க, இங்கே பூஜாவுக்கோ முதலிரவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்த தருணுக்கு இது கொஞ்சம் சங்கடமாக இருக்க, நேராக சென்று பூஜாவின் பெற்றோர்களிடம் பேசினான்.

அங்கே சமையலறையில் பார்வதியோ பால் காய்ச்சிக் கொண்டிருக்க, அவருடன் நின்று சந்தோஷமான முகத்துடன் பேசிக் கொண்டிருந்தார் மெய்யரசன்.

“எப்படியோ பார்வதி… பூஜாவோட கல்யாணமாவது நல்லபடியா நடந்தது. கடைசி நிமிஷம் வரைக்கும் எனக்கு திக் திக்ன்னு தான் இருந்தது. நல்லவேளை பூஜாவாவது அப்பாவோட ஆசை நிறைவேற்றினாளே…” என்று மெய் அரசன் புன்னகையோடு சொல்லிட

அதை பார்த்து வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்த பார்வதியோ “உங்க முகத்துல இந்த சிரிப்பை பார்க்க தான் அவளோட சந்தோஷத்தை தொலைச்சிட்டா போல” என்று தன் மனதில் நினைத்துக் கொண்டார்.

அப்பொழுது அங்கே வந்த தருணோ “அங்கிள் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொன்னான்.

“என்ன மாப்ள… சொல்லுங்க” என்று மெய்யரசன் கேட்டதும்

“இந்த கல்யாணமே அவசர அவசரமா தான் நடந்தது. கல்யாண விஷயத்துல தான் நாம பூஜாவோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கல.  ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது இப்போ இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் தேவை இல்லையே. கொஞ்ச நாள் போகட்டுமே. ஏற்கனவே ரணமா இருக்க அவளோட மனசை இன்னும் ரணமாக்க வேண்டாமே” என்று தருண் சொன்னதும் பார்வதிக்கோ அது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

பூஜாவின் மனதில் என்ன உள்ளது என்று பார்வதிக்கு சரியாக தெரியாவிடினும், தன்னுடைய மகளின் முகத்தை வைத்து அவளுக்கு ஏதோ ஒரு கஷ்டம் உள்ளது என்பதை புரிந்து கொண்டிருந்தார்.  அப்படி இருக்கின்ற சமயத்தில் தருணின் இந்த வார்த்தைகள் அவருக்கு கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.

மெய்யரசனும் இதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் அமைதியாக இருந்திட, பார்வதியும் “ஆமாங்க… மாப்பிள்ளை சொல்றது சரிதான். நாம ஏற்கனவே பூஜாவை அளவுக்கு அதிகமா கஷ்டப்படுத்திட்டோமோன்னு தோணுது. அப்படி இருக்கும்போது இந்த மாதிரி சமயத்துல அவ பாவம்ங்க. இதெல்லாம் வேண்டாம். அது தான் மாப்பிள்ளையே புரிஞ்சுகிட்டு வந்து பேசுறாரே” என்று சொல்ல

“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி… நீங்காவது புரிஞ்சிக்கிட்டிங்களே… சரி நான் பக்கத்துல எதாவது  ஹோட்டல் இருந்தா அங்க தங்கிக்கிறேன்.  நீங்க பூஜா கிட்ட கொஞ்சம் ஆறுதலா பேசுங்க.” என்று அவன் சொன்னதும்

“நீங்க எதுக்கு மாப்பிள்ளை வெளியே தங்கனும்? இங்கேயே  தங்கலாமே” என்று மெய்யரசன் செல்ல

“என்னோட முகத்தை பார்க்க பார்க்க பூஜாக்கு  கஷ்டமா தான் இருக்கும். இன்னும் கொஞ்ச நாள் போனா பூஜா சரியாயிடுவாங்க. அது வரைக்கும் நம்ம அவங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுக்க வேண்டாம். வெளிய ஹோட்டல்ல தங்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க பூஜாவை நிம்மதியா தூங்க சொல்லுங்க. நான் மார்னிங் வந்து அவங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிக்கிறேன்” என்று அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பி விட்டான்.

“ஏங்க… நீங்க அவசர கல்யாணம், அவசர மாப்பிள்ளைன்னு சொன்னதும் நான் கூட ரொம்ப பயந்துட்டேன். ஆனா மாப்பிள்ளைய பார்த்தா ரொம்ப நல்லவரா தான் தெரியுறாரு. கல்யாணம் ஆகி முழுசா ஒரு நாள் கூட முடியல. அதுக்குள்ள நம்மளை விட, பூஜாவை பத்தி எவ்வளவு யோசிக்கிறாரு. எந்த பையனாவது கல்யாணம் ஆனா அன்னைக்கு, பொண்ணு கஷ்டப்படறாளேன்னு, அவ மனசு புரிஞ்சுகிட்டு வெளியே போய் தங்குவாங்களா? நல்ல மாப்பிள்ளை தான் பார்த்திருக்கீங்க.” என்று பார்வதி தன் கணவரிடம் புன்னகைத்தபடியே சொல்லிக் கொண்டார்.

காலையிலிருந்து இப்பொழுதுதான் அவர் முகத்தில் புன்னகை எட்டியே பார்க்கிறது.

“ஆமாடி… நானும் கூட மாப்பிள்ளை அவரோட அப்பாவுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு. பூஜாவை எப்படி பார்த்துப்பாரோன்னு மனசுல ஒரு ஓரமா கொஞ்சம் பயம் இருக்கத்தான் செஞ்சது. இப்போ எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு” என்று அவரும் கொஞ்சம் சந்தோஷப்பட்டார்.

“சரிங்க… பூஜா என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரியல. நான் போய் அவகிட்ட டிரஸ் மாத்த சொல்லிட்டு தூங்க சொல்றேன்” என்று சொன்னவரோ பூஜாவின் அறையை நோக்கி போனார்.

அங்கே பூஜாவோ  இன்னும் அதே கலைந்த அலங்காரத்தோடு தரையில் சுவரில் ஓரத்தில்  ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.

அதை பார்த்து கொஞ்சம் பதறிய பார்வதியும் வேகமாக ஓடிவந்து “நீ ஏன்டி இங்க உட்கார்ந்து இருக்க? முதல்ல எந்திரி” என்று அவளின் கையை பிடித்து மேலே இழுத்தார்.

அவளும் பொம்மை போல் அவளின் அம்மா இழுத்த இழுப்பிற்கெல்லாம் அசைவு கொடுத்து எழுந்தாள்.

எழுந்தவள் அமைதியாகவே நிற்க, “முதல்ல போய் குளிச்சிட்டு வேற டிரஸ்ச மாத்துடி. உன்னோட முகத்தை நீயே கொஞ்சம் கண்ணாடியில பாரு. பார்க்க சகிக்கல” என்று தன் மகளிடம் சொன்னவரோ அவரே அவளை படுக்கையில் உட்கார வைத்து, அவளுடைய நகை அலங்காரங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கழட்டி விட்டுக் கொண்டிருந்தார்.

எல்லா நகைகளையும் அவளிடம் இருந்து வாங்கி, பத்திரமாக வைத்துக் கொண்டவர் “சரி டி… போய் குளிச்சிட்டு வா….” என்று சொன்னதும் அவளுக்கு அது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

“நான் தான் நீங்க சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிட்டேன்ல்லம்மா… இப்போ இதெல்லாம் வேண்டாம்மா… இந்த ஒரு விஷயத்துலயாவது என்னோட பேச்சை கேளுங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லியவள் அம்மாவின் கையை பிடித்து  கெஞ்சியபடியே கதறி அழுக ஆரம்பித்தாள்.

திருமணத்திற்கு முன்பு கூட பூஜா தன் அம்மாவிடம் இப்படி அழுகவில்லை. இதை பார்த்த பார்வதிக்கோ மனது வெடிப்பது போல இருந்தது.

பின்பு….  பெற்ற மகள் இப்படி கதறி அழுதால் அம்மாவிற்கு எப்படி இருக்கும்.

“உனக்கு அப்படி என்னடி கஷ்டம்? இப்படி அழுகிற அளவுக்கு…”  என்று பார்வதியோ புரியாமல் கேட்டிட

யாரிடமும் அவளால் இந்த கஷ்டத்தை சொல்லி அழுக முடியவில்லை. ஆனால் இப்பொழுது ஏனோ தன் அம்மாவிடம் இதை சொல்லி அழுகவே தோன்றியது.

இருந்தாலும் அவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இன்னும் அதிகமாக அழுதாள்.  அதைப் பார்த்தவருக்கு நெஞ்சு படபடத்தது.

“ஏண்டி இப்படி அழுகுற? என்னதான் நடந்தது சொல்லு? சொன்னா தானே அம்மாவுக்கு தெரியும். தயவு செஞ்சு இப்படி அழுகாதடி பூஜா. அம்மாவால பார்க்க முடியல டி. அம்மாக்கு என்னமோ ஏதோன்னு நினைச்சு நெஞ்செல்லாம் பதறுது” என்று பார்வதியும் இப்பொழுது அழுக ஆரம்பித்தார்.

“அம்மா…. ப்ளீஸ்மா…. நீ அழுகாதம்மா… நீயும் அப்பாவும் அழுக கூடாதுன்னு தான் நான் இவ்வளவு அழுதுட்டு இருக்கேன். அதனாலதான்ம்மா எல்லா கஷ்டத்தையும் தாங்கிட்டு இருக்கேன். இந்த நிமிஷம் நான் உயிரோட இருக்கிறது உனக்காகவும் அப்பாவுக்காகவும் தான்ம்மா…  அப்படி இருக்கும் போது நீ அழுகுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா.” என்று சொல்லியவள் தன் அம்மாவை கட்டி அணைத்து அழக ஆரம்பித்ததும், பார்வதிக்கு இன்னும் பதற்றம் அதிகமாகியது.  தன் மகளுக்கு என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று எதுவும் புரியாமல் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தார்.

“பூஜா…. நீ அழுகிறத பார்த்தா அம்மாவுக்கு வயித்துல புளியை கரைக்குதுடி… தயவு செஞ்சு என்னன்னு சொல்லுடி” என்று பார்வதி கெஞ்ச

“அம்மா….. நான் ஒரு பையனை லவ் பண்ணேன்ம்மா.”  என்று உடைந்த குரலில் சொன்னாள் பூஜா.

“என்னடி சொல்ற? இதை ஏண்டி என்கிட்ட முன்னாடியே சொல்லல? நீ முன்னாடியே சொல்லிருந்தா  அம்மா  கண்டிப்பா ஏதாவது பண்ணி உனக்கு புடிச்ச பையன் கூட வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருப்பேன் டி” என்று பார்வதியோ கோபப்பட்டார்.

“எப்படிம்மா சொல்ல சொல்ற? என்னன்னு சொல்ல சொல்ற? அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையோட தம்பியை லவ் பண்றேன்னு சொல்ல சொல்றியா? அக்கா எந்த மாப்பிள்ளையை வேண்டாம்ன்னு சொல்லிட்டு ஓடி போனாளோ அந்தப் பையனோட தம்பியை லவ் பண்றேன்னு சொல்ல சொல்றியா? அக்கா எந்த குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு ஓடி போனாளோ அந்த குடும்பத்தில இருக்க பையனை லவ் பண்றேன்னு சொல்ல சொல்றியா? ஒருவேளை நான் அப்போ சொல்லிருந்தா நீயும் அப்பாவும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருப்பீங்களா? ஏற்கனவே பூர்ணாவோட முடிவுனால நம்ம குடும்பம் எந்த அளவுக்கு கஷ்டத்தையும் அவமானத்தையும் சந்திச்சுதுன்னு எனக்கு தெரியாதாம்மா…  இதுல நானும் லவ் பண்றேன்னு தெரிஞ்சா அப்பாவோட நிலைமை என்ன ஆயிருக்கும்மா?” என்று கேள்வியாய் தன் அம்மாவிடம் கேட்டாள் பூஜா.

பூஜாவின் கேள்விகளுக்கு பார்வதியிடம் பதில் இல்லை. அவரோ அமைதியாகவே நிற்க, மறுபடியும் பூஜாவே பேச ஆரம்பித்தாள்.

“ஒருவேளை எனக்காக நீயும் அப்பாவும் சம்மதிச்சாலுமே கூட, கண்ணன் வீட்டுல சம்மதிப்பங்களாம்மா? அவங்களை கூட விடு…. கண்ணனே சம்மதிக்க மாட்டான்ம்மா… கல்யாணம் நின்னு போன விஷயத்துல கண்ணன் என்னை முழுசா வெறுத்துட்டான்ம்மா” என்று பூஜா கண்ணீரோடு சொல்வதை பார்த்த பர்வதிக்கோ மனது தாங்கவில்லை.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *