கண்ணனின் இந்த நடவடிக்கையை பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை. அவன் சொல்வது எதுவுமே அவளுக்கு சரியாக புரியாத பொழுது அவளால் எப்படி அவனை சமாதானம் செய்ய முடியும்?
“என்ன பண்றீங்க யாஷ்? எதுக்கு எல்லாத்தையும் உடைச்சிட்டு இருக்கீங்க?” என்று அவன் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவளோ அவனை அமைதியாய் ஒரு இடத்தில் உட்காரச் செய்தாள்.
“உங்களுக்கு ஏதோ கஷ்டம்னு தெரியுது. ஆனா நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு எதுவுமே புரியல. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க. அப்பதானே எனக்கு எல்லாமே தெரியும்? இதுவே உங்க பர்சனல் விஷயமா இருந்தா, நான் இந்த அளவுக்கு கேட்க மாட்டேன். ஆனா எல்லாரோட வாழ்க்கையும் என்னால வீணா போயிருச்சுன்னு சொல்றீங்க. பூஜாக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க. அதனால நான் இதை தெரிஞ்சுகிட்டு தான் ஆகணும். ப்ளீஸ்… தயவு செஞ்சு என்கிட்ட என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. பூஜாக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? சொல்லுங்க ப்ளீஸ்….” என்று கையெடுத்து கும்பிட்டு அவனிடம் கெஞ்சினாள் பூர்ணா.
அதன் பின்பு சில நொடிகளில் அவனும் இயல்பு நிலைக்கு வர, பூஜாவை பற்றியும், இவர்கள் இருவரின் கடந்த கால காதல் பற்றியும், நேற்று கோவிலில் பூஜாவிற்கும் தருணிற்கும் நடந்த திருமணம் பற்றியும், ஒன்று விடாமல் சொன்னான்.
அதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியில் பூர்ணாவும் எதுவும் பேச முடியாமல் அதே இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
அதுக்கு மேல் பூர்ணாவிடம் என்ன பேசுவது என்று தெரியாதவன், தன் அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டான்.
அடுத்த நாள் காலை தருண், தன்னுடைய வீட்டுக்கு பூஜாவை அழைத்து போக வந்திருந்தான்.
பார்வதியோ ஏற்கனவே பூஜாவின் உடைகளையும், அவளுக்கு தேவையான பொருள்களையும் தயார் செய்து எடுத்து வைத்திருந்ததார். காலை உணவை முடித்துவிட்டு தருண் பூஜா இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
தருணோ காரை ஸ்டார்ட் செய்ய, பூஜா காரின் பின்பக்க இருக்கையில் ஏற போனாள்.
அதை பார்த்த பார்வதியோ பூஜாவின் கையை பிடித்து இழுத்து, என்னடி பின்னாடி உட்கார போற? முன்னாடி போய் உட்காரு” என்று தன் மகளை அதட்டினார்.
அவளும் தன்னுடைய அம்மாவை கேள்வியாய் பார்க்க, அதன் அர்த்தம் புரிந்தவர் “இங்க பாரு பூஜா, இனிமேல் இதுதான் உன்னுடைய வாழ்க்கை. ஒருவேளை மாப்பிள்ளை கெட்டவரா இருந்திருந்தா இதே வார்த்தையை நான் உன்கிட்ட சொல்லி இருக்கவே மாட்டேன். ஆனால் மாப்பிள்ளை நல்லவருன்னு தோணுதுடி… அதனால தான் நான் இப்படி சொல்றேன். அம்மாவை கோச்சுக்காத… ” என்று சொல்லிவிட்டு பூஜாவை முன் பக்க இருக்கையில் தருணின் பக்கத்தில் உட்கார வைத்தார்…
தருண்- பூஜாவின் வாழ்க்கை பயணம் மட்டுமில்ல, காதல் பயணமும் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இவர்களின் காதல் பயணம் மட்டுமில்ல…. மூன்று ஜோடிகளின் காதல் பயணமும் இன்று தான் காதல் எனும் அத்தியாயத்தில் வைத்து காலடியை எடுத்து வைக்கிறது.
தருண் காரை ஸ்டார்ட் சிறிது தூரம் செல்லும் வரையிலும் அமைதியாகவே தான் இருந்தான்.
சிறிது நேரம் கழித்து அவனே பேச ஆரம்பித்தான்.
“நேத்து நைட்டு நல்லா தூங்குனீங்களா பூஜா?….” என்று கேட்டான் தருண்.
அதுக்கு அவளோ “ம்ம்ம்….” என்பதோடு மட்டும் நிறுத்தி கொண்டாள்.
அந்த ஒற்றை வார்த்தை பதில் அவனை ஏதோ செய்ய “சாரி பூஜா….” என்றான்.
அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்று புரியாதவளும் “நீங்க எதுக்காக சாரி கேக்கணும்?” என்று கேட்டாள்.
“இல்ல உங்க மனசுல வேற ஏதோ இருக்கு… உங்களுக்கு வேற எதுவும் பிரச்சனையோ இல்ல கஷ்டமோ இருக்கு. ஆனா இது எதுவுமே தெரியாம இந்த கல்யாணம் அவசர அவசரமா நாடந்திருச்சு. திடீர்னு எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு. இந்த கல்யாணம் உங்களோட மனசுல எந்த அளவுக்கு தாக்கத்தையும், எந்த அளவுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்னு நேத்து நீங்க பாத்ரூம்ல கதறி அழுததை வச்சு நான் புரிஞ்சுகிட்டேன். தெரிஞ்சோ தெரியாமலே உங்களோட இந்த கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் தானே… அதனால தான் மன்னிப்பு கேட்டேன்” என்று சொன்னான் தருண்.
“எனக்கு ஒரே ஒரு சந்தேகம்… அதை மட்டும் கிளியர் பண்ணுவீங்களா? என்று கேட்டாள் அவள்.
“நீங்க என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் பூஜா…. உங்களுக்கு நான் தான் கல்யாண பொண்ணுன்னு முன்னாடியே தெரியுமா? இல்ல தெரியாதா? அப்படின்னு தானே கேட்க போறீங்க? ஒருவேளை அப்படி முன்னாடியே தெரிஞ்சிருந்தா என்கிட்ட ஏன் அதை பத்தி சொல்லல? அதைத்தானே கேட்கப் போறீங்க?” என்று அவனும் அவள் கேட்க வருவதை சரியாக கணித்தான்.
அவளும் அதுக்கு ஆமா என்பது போல தலையசைக்க,
“எனக்கு நீங்கதான் கல்யாணம் பொண்ணனும்னு ஏற்கனவே தெரியும்” என்று அவன் சொன்னதும் அவளோ புரியாமல் “தெரியுமா…” என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.
அந்த பார்வையில் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் “அப்படி இருந்தும் எதுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க? எதுக்காக என்கிட்ட இதை பத்தி முன்னாடியே சொல்லல?” அப்படின்னு தானே கேக்குறீங்க?” என்று தருண் கேட்க
அவளோ “ஆமாம்….” என்பது போலவே மௌனமாய் இருந்தாள்.
உங்க அக்கா கல்யாணம் நின்னு போனப்போ, உங்க அப்பா அம்மா நீங்க எல்லாரும் எவ்வளவு வருத்தப்பட்டீங்கன்னு நானும் என்னோட கண்ணாலேயே பார்த்தேன். சோ அதுக்கு அப்புறம் உங்க அப்பா உங்களுக்கு திடீர் கல்யாணம் பண்ண முடிவெடுத்து இருக்காங்கன்னு தெரிஞ்சுது. சில சந்தர்ப்பங்களால எனக்கும் திடீர் கல்யாணம் பண்ண வேண்டிய நிலமை வந்திருச்சு. வீட்ல உங்க போட்டோவ காட்டி நீங்க தான் பொண்ணுன்னு சொன்னாங்க. உங்க அக்கா ஓடி போனதுனால தான் உங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்றாங்க அப்படின்னும் சொன்னாங்க. ஒருவேளை நான் உங்களை வேண்டாம்ன்னு சொன்னாலும் உங்க அப்பா வேற ஏதாவது ஒரு பையனுக்கு கண்டிப்பா உங்களை கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு. அதனால தான் சரின்னு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா இந்த விஷயம் உங்க மனசுல இந்த அளவுக்கு வலியை ஏற்படுத்தி இருக்கும்ன்னு எனக்கு தெரியல. ஒருவேளை அப்படி தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கவே மாட்டேன்.” என்று தருண் சொன்னதும் அவனுடைய நோக்கம் அவளுக்கு தெளிவாக புரிந்தது.
அவனும் ஏதோ ஒரு சூழ்நிலையால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறான் என்பதையும், அவள் மனதில் உள்ள அவளின் கடந்த கால காதலே அவன் அறிந்திருக்கவில்லை என்றும், ஒருவேளை அவன் அவளுடைய கடந்த கால காதலைப் பற்றி அறிந்திருந்தால் கண்டிப்பாக அவள் கழுத்தில் தாலி கட்டியிருக்க மாட்டான் என்பதையும் புரிந்து கொண்டாள்.
நேற்று இரவு தாமதமாக தூங்கியதால் காலையும் தாமதமாகவே எழுந்து வெளியே வந்தான் கண்ணன்.
அப்பொழுது தான் அவனுக்கு நேற்று இரவு பூர்ணாவிடம் கோபமாக பேசியதும், எல்லா பிரச்சனைக்கும் அவளையே குற்றம் சாட்டியதும் நினைவு வந்தது. அந்த வீடு முழுக்க பூர்ணாவை தேடினான் அவளோ எங்கும் இல்லை.
ஒரு நொடி அவனுக்கு எதுவும் புரியவில்லை. “ஐயோ என்ன ஆச்சு பூர்ணா உங்களுக்கு? எங்க போனீங்க?” என்று யோசித்தவன் அவளுக்கு போன் செய்வதற்காக தன்னுடைய போனை தேடிப்பிடித்து எடுத்தான்.
அப்பொழுது தான் அவளின் எண்ணில் இருந்து அவனுக்கு ஏற்கனவே ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்து இருந்ததை கவனித்தான்.
அது என்ன என்று அவசர அவசரமாக கேட்க ஆரம்பித்தான்.
“சாரி யாஷ்… நீங்க சொன்னது சரிதான். உங்க எல்லாரோட வாழ்க்கையும் இப்படியானதுக்கு நான் தான் காரணம். என்னோட வாழ்க்கையும் இப்படி ஆனதுக்கும் கூட நான் தான் காரணம். நம்ம நாலு பேரோட வாழ்க்கையும் கெட்டுப் போயிடுச்சு. அது என்னோட தப்பு தான். அதே சமயம் அந்த கல்யாணத்தை என்கிட்ட ஒரு வார்த்தை சம்மந்தம் கேட்டுட்டு முடிவு பண்ணி இருந்திருந்தா இன்னைக்கு இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் வந்து இருக்காது. அதே சமயம் நான் என்னை நியாயப்படுத்திக்கவும் விரும்பல. எங்க அப்பா அம்மா கிட்ட என்னோட முடிவை நான் தெளிவா சொல்லி இருக்கணும். ஆனா அதையும் நான் செய்யல. எனக்கு புரியுது… நான் பண்ண தப்புக்கு நீங்க எல்லாருமே தண்டனை அனுபவிக்கிறீங்க. நீங்க எனக்கு பண்ண உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ். என்னால உன்னோட காதல் சேராமல் போயிடுச்சு. அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. ஒருவேளை பியூச்சர்ல உங்களுக்கு பூஜாவை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சா, நான் அவகிட்ட மன்னிப்பு கேட்டதா சொல்லுங்க. எங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்க சொல்லுங்க. உங்கள மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை துணை என்னோட தங்கச்சிக்கு கிடைக்காம போயிடுச்சு. அதுக்கு நான் காரணமா இருந்திருக்கேன். நான் பண்ண தப்புக்கு நானும் ஏற்கனவே தண்டனை அனுபவிச்சுட்டேன். ஆனா இந்த தண்டனை எனக்கு போதாதுன்னு தோணுது. என்னோட வாழ்க்கையோட முடிவை தேடி நான் போறேன். சாரி அண்ட் தேங்க்ஸ் யாஷ்” என்பதோடு அந்த வாய்ஸ் மெசேஜ் முடிந்தது.
Interesting
Nice epi👍