Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3

கிஷோர்

30 வயதானவன். 5.8 அடி உயரமும், மெல்லிய தேகமும், வெளிர் நிறமும் உடையவன். அவன் பூஜாவின் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரமே ஆகி இருந்தது.  அவன் உடையிலும் அவனின் தோரணையிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் அவனின் குடும்ப பின்னணி தெரியும். ஆம்… அவனோ பல நூறு கோடிகளுக்கு சொந்தக்காரன்.

பூஜாவின் வாழ்க்கையில் ஏற்படும் மிக பெரிய மாற்றத்திற்கு இவனும் ஒரு காரணமாக இருக்க போகிறான் என்பதை இப்பொழுது யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கிஷோர் பூஜாவிடம் பேச வந்ததும்  ஒரு நாகரிகத்திற்காக அவளுக்கு புன்னகைக்க தோன்றினாலும், சில நிமிடம் தன் காதலனுடன் நடந்த கோபமான உரையாடலுக்கு இவன் ஒரு காரணமாக இருப்பானோ என்ற அசௌகரியம் அவளை புன்னகை செய்ய தடுத்தது.

“ஹாய் பூஜா… எப்படி இருக்கீங்க?” என்று கிஷோர் கேட்க,

“ஏய்… நான் அப்போவே சொன்ன பாத்தியாடி.. நம்ம ஆபிஸ்ல எவ்ளோ பேரு ஒர்க் பன்றாங்க.. அப்படி இருக்கும் போது இவனுக்கு எப்படி உன்னோட பேரு தெரிஞ்சது?  சோ இப்போ 99 பர்சன்ட்  கான்பார்ம். இவன் தான் உனக்கு மெசேஜ் பன்னது.” என்று பூஜாவின் காதின் அருகே முணுமுணுத்தாள் ஜமுனா.

ஜமுனா சொன்ன விஷயங்கள் பூஜாவின் எரிகின்ற கோபத்தில் எண்ணையை ஊற்ற, அவன் பேச வந்த விஷத்தை கூட கேட்காமல் “இங்க பாருங்க…. உங்க கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லை. தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க….” என்று அவள் கோபமாய் பேசவே

அவனோ அமைதியாக அவளை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான்.

இதில் இன்னும் கடுப்பானவளோ அவளே தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து போனாள்.

“என்னாச்சு இந்த பூஜாக்கு…” என்று தன் மனதில் நினைத்தவனோ அங்கிருந்து நகர்ந்தான்.

பூஜாவோ தினமும்  காலை அவள் தூங்கி எழுந்தத்தில் இருந்து இரவு தூங்கும் வரை நடக்கும் எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் கண்ணனிடம் சொல்லிவிடுவாள்.

ஆனால் இன்றோ காலையில் நடந்த சண்டைக்கு பிறகு  வேலைபளுவில் இன்னும் ஒரு முறை கூட அவனிடம் பேச முடியவில்லை.

பூஜாவிற்கு இன்று இரவு வீட்டிற்கு போக தாமதமாகவே, எல்லாரும் இரவு உணவை சாப்பிடுவதற்காக ஒன்றாக தரையில் அமர்ந்திருந்தார்கள்.

பூர்ணாவும் அலுவலகத்திற்கு கிளம்பி சாப்பிட தயாராக உட்கார்ந்திருந்தாள்.

அப்போது பூஜா உள்ளே நுழையவும் அவளுக்காகவே காத்திருந்தவர் போல் அவளின் அப்பா  மெய்யரசன் “என்னம்மா இன்னைக்கு வேலை முடிய லேட் ஆகிருச்சா. சரி… சீக்கிரம் வா.. அக்காக்கும் வேலைக்கு நேரம் ஆச்சு. அவள் ஆபீஸ் கிளம்புறதுக்குள்ள நான் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லிடுறேன்” என்று பிரகாசமான முகத்துடன் சொல்ல

“சந்தோஷமான விஷயமா? உங்க முகத்தை பாத்ததுமே எனக்கு கேட்கணும்ன்னு தோணுச்சு. உங்க முகம் ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்தோஷமா இருக்கு. சரி என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க” என்று சமையல் அறையில் இருந்து வேகமாக வெளியே வந்த பார்வதி சொல்ல

“ஆமாப்பா… சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு ஆபீஸ் கேப் வந்துரும்” என்று பூர்ணாவும் அவசரபடுத்தினாள்.

பூஜாவும் ஆர்வமாக தன்னுடைய அப்பா என்ன சொல்ல போகிறார் என்று அவரின் முகத்தையே பார்க்க

“பூர்ணாவுக்கு மாப்பிள்ளை முடிவு பண்ணியிருக்கேன். நல்ல குடும்பம்… நல்ல பையன்… அதுமட்டுமில்லாம அவங்களுக்கு பூர்ணாவை ரொம்ப பிடிச்சு போயிருச்சு. நாளைக்கே பொண்ணு பார்க்க வர்றேன்னு சொல்லீட்டாங்க” என்று மெய்யரசன் சொல்லி முடிக்கவும் பூர்ணாவின் ஆபிஸ் கேப் வரவும் சரியாக இருந்தது.

அவளோ எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

இதை கேட்டதில் பூஜாவிற்கு தான் அளவு கடந்த சந்தோஷம்.

தொண்டைக்குள் செல்ல மாட்டேன் என்று  தொல்லை செய்த இரவு உணவை வேக வேகமாக விழுங்கியவள், தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினாள்.

மொட்டை மாடியின் இறுதி படிக்கட்டை அடையும் முன்பே கண்ணனுக்கு போன் செய்து விட்டாள். அவ்வளவு சந்தோசம் அவளுக்கு….

சில நொடிகளிலேயே அவன் பூஜாவின் அழைப்பை ஏற்க,

அவன் “ஹலோ….”  என்று சொல்லிய அடுத்த கணமே பூஜாவே பேச ஆரம்பித்தாள்.

“டேய்….  ஒரு செம்ம குட் நியூஸ் டா…  எங்க அக்காவுக்கு அலைன்ஸ் பாத்துட்டாங்க. நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க. அவளுக்கு மட்டும் சீக்கிரம் கல்யாணம் ஆயிடுச்சுன்னா அடுத்த நாளே நம்ம லவ் பத்தி வீட்ல ஓப்பன் பண்ணிட வேண்டியதுதான்.” என்று சந்தோஷமாக சொன்னாள் பூஜா.

பூஜா செல்வதை கேட்டவனோ சிறிதும் சந்தோஷம் இன்றி “அந்த நம்பரை பிளாக் பண்ணியா இல்லையா?” என்று முதல் வார்த்தை பேசினான்.

அவன் கேட்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளோ “அடேய்… அதெல்லாம் காலையிலேயே பண்ணிட்டேன்டா…  இவ்வளவு பெரிய குட் நியூஸ் சொல்லி இருக்கேன். அதுக்கு ரியாக்ட் பண்ணவே மாட்டேங்குற” என்று அவளோ சாதாரணமாக சொல்ல

அவள் “பிளாக் செய்து விட்டேன்”  என்று சொன்ன வார்த்தையில் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தவன், “உங்ககிட்ட மட்டும்தான் குட் நியூஸ் இருக்கா? எங்க கிட்டயும் குட் நியூஸ் இருக்கு” என்று சொன்னான்.

“பார்ரா…. உங்ககிட்ட என்ன குட் நியூஸ்?  உங்க அண்ணனுக்கும் கல்யாணமா?” என்று அவளோ நக்கலாக கேட்கவே

“ஏய்… இது எப்பிடிடி உனக்கு தெரியும்?  முன்னாடியாவது என்னோட ரூம்ல தான் சிசிடிவி கேமரா வச்சிருக்கேன்னு நினைச்சேன். இப்போ எங்க வீட்லயும் கேமரா வச்சிருக்கியா?”  என்று ஆச்சரியமாக கேட்டான் அவன்.

“அட… அப்போ நான் சொன்னது உண்மை தானா? ஒரே நாள்ல ரெண்டு விஷயமும்  நடந்திருக்கு…  இப்போ தான் நம்ம லவ் கொஞ்சம் ஸ்மூத்தா போற மாதிரி இருக்கு…”  என்று அவளும் அதீத சந்தோஷம் அடைந்தாள்.

“ஆமாடி…. எனக்கும் அப்படி தான் தோணுது. நாளைக்கு பொண்ணு பார்க்க போறதா வீட்டுல பேசிட்டு இருந்தாங்க. என்னையும் கூப்பிட்டாங்க. ஆனா எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு. சோ என்னால போக முடியாது. சோ அம்மா அப்பா அண்ணன் மூணு பேர் மட்டும் தான் போறாங்க. நாளைக்கு என்னென்னு கன்ஃபார்மா தெரிஞ்சிடும்” என்று கண்ணன் சொன்னதும்

“என்னடா சொல்ற? நாளைக்கே பொண்ணு பார்க்க போறீங்களா? எங்க வீட்லயும் நாளைக்கு தான் பொண்ணு பார்க்க வரதா சொன்னாங்க. எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கே…”  என்று சில நொடி யோசித்தவன் “சரி பொண்ணு பேரு என்ன?” என்று கேட்டாள்.

“பொண்ணு பேர் எல்லாம் தெரியலடி… ஏதோ சொன்னாங்க… ஆனா எனக்கு ஞாபகம் இல்ல”  என்று அவனோ பதில் அளித்திட

“என்னடா… இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பதில் சொல்ற? உனக்கு வருங்கால அண்ணியா வரப் போறாங்க. அவங்க பேரே தெரியலன்னு சொல்ற. பொண்ணு பேரு பூர்ணான்னு எதுவும் சொன்னாங்களா?”  என்று அவள் கேட்க

“ஏய் லூசு… அதுதான் நியாபகம் இல்லைன்னு சொல்றேன்ல.   மறுபடியும் மறுபடியும் கேட்டா எனக்கு எப்படி தெரியும்?”  என்று அவனோ கொஞ்சம் குரலை உயர்த்தி பேசிட

“டேய் எனக்கு என்னம்மோ எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கு.  நீ இப்படி எந்த க்ளுவும் சொல்லாம இருந்தா எனக்கு எப்படி தெரியும் சொல்லு?”  என்று பூஜா சொல்லிட,

அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்தவனோ “சரி என்னை இவ்ளோ கேள்வி கேக்குறியே… மாப்பிள்ளை பேர் என்னன்னு சொல்லு? உனக்கு மாப்பிள்ளை பேர் தெரிஞ்சா கூட இந்த கன்பியூஷன் சால்வ் ஆகிடும் இல்லையா?”  என்று அவனோ அறிவாளி தனமாய் கேட்டதும் அவளோ “ஈஈ…”  என்று அசடு வழிந்தாள்.

“சாரிடா… எனக்கும் மாப்பிள்ளை பேரு தெரியல. கல்யாணம்னு சொன்னதும் கொஞ்சம் ஹேப்பியா இருந்துச்சா….. சோ அதுக்கு அப்புறம் எனக்கு எதுவுமே கேட்க தோணல” என்று பூஜா சொன்னதும் “எனக்கும் இங்க அதே நிலைமை தான் டி. பொண்ணு போட்டோ வேணும்னா எங்க ஃபேமிலி குரூப்ல இருக்கு. அதை வேணும்ன்னா உனக்கு அனுப்பட்டுமா?”  என்று அவன் கேட்க

“அட லூசு பயலே….  எவ்ளோ முக்கியமான விஷயத்தை இவ்வளவு கடைசியா சொல்ற. முதல்ல நீ அதை தாண்டா அனுப்பியிருக்கணும்.”  என்று பூஜா சொன்னதும்

“இருடி இப்பவே அனுப்புறேன்”  என்று சொன்னவனோ போன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் ஃபேமிலி குரூப்பில் ஷேர் செய்யப்பட்ட மணப்பெண் புகைப்படத்தை பூஜாவுக்கு அனுப்பி வைத்தான்.

“போட்டோ அனுப்பிட்டேன்டி… பாரு” என்று அவன் சொல்ல,

“என்னடா….  இன்னும் போட்டோ வரலையே…”  என்று போனை தட்டி தட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய்…. வரும்டி… வெயிட் பண்ணு….”  என்று அவன் சொன்னதும் தான், அவள் தன் போனில் நெட் ஆன் செய்யப்படாமல் இருப்பதை கவனிக்கவே “அய்யோ சாரி டா…
நெட் ஆஃப்ல இருக்கு.  இரு இப்பவே ஆன் பண்றேன்”  என்று சொல்லியவள் அவளுடைய போனின் நெட்டை ஆன் செய்தாள்.

அடுத்த சில நொடிகளில் அந்த புகைப்படம் பூஜாவின் வாட்ஸப்பிற்கு வரவே அதை தரவிறக்கம் செய்து பார்த்தவர்களுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. அதே சமயம் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.

அந்த புகைப்படத்தில் இருந்தது வேறு யாரும் இல்லை பூர்ணா தான்.

பூர்ணாவிற்கு  முடிவு செய்து இருக்கும் மாப்பிள்ளை கண்ணனின் அண்ணன் நெடுஞ்செழியன் தான்.

பூர்ணாவின் புகைப்படத்தை பார்த்தவளோ சந்தோஷத்தில் வாயடைத்து தான் போனாள். அதனால் அவளுக்கு நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல்….

1 thought on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *