Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4

“டேய் கண்ணா…. இது என்னோட அக்கா… நாளைக்கு நீங்க எங்க வீட்டுக்கு தான் பொண்ணு பார்க்க வர போறீங்க” என்று பூஜா சந்தோசமாக சொன்னாள்.

“உண்மையாவாடி… எனக்கு பொண்ணு போட்டோவை பார்த்ததுமே எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்துச்சு… ஆனா எங்கன்னு தான் நியாபகம் வரலை. உங்க அக்காவை நான் போட்டோல தான பார்த்து இருக்கேன். அதுவும் இல்லாம நீ அனுப்புன போட்டோல எல்லாமே உங்க அக்கா மார்டனா தான இருப்பாங்க. இந்த போட்டோல புடைவை எல்லாம் கட்டி பூ வச்சு கொஞ்சம் வித்தியாசமா இருந்ததுனால எனக்கு  உங்க அக்காவா இருக்குமோன்னு யோசிக்க தோணலை.” என்று அவனும் ஆச்சிரியமாய் சொல்லி முடித்தான்.

“என்னமோடா… இவ்ளோ நாள் நமக்கு கஷ்டமா தெரிஞ்ச விஷயம் இப்போ ஈசியா முடிய போகுது.” என்று அவளோ மனகணக்கு போட்ட படியே சொல்ல

“ஆமாடி… இந்த கல்யாணம் மட்டும் நல்லபடியா முடிஞ்சா நம்ம கல்யாணத்துக்கு நாம கஷ்டப்பட்டு சம்மதிக்க வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.”

“நானும் அப்படி தான்டா நினைக்கிறேன். எதுவா இருந்தாலும் நாளைக்கு தெரிஞ்சுடும். நான் உனக்கு நடக்கிற எல்லாத்தையும் லைவ்வா அப்டேட் பன்றேன். சார்க்கு தான் நாளைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான ப்ராஜக்ட் இருக்கே” என்று அவளோ கிண்டலாக சொல்ல

“அந்த ப்ராஜக்ட் இருக்கட்டும்டி…. நாளைக்கு நம்ம கல்யாண பிராஜக்டை முதல்ல முடிக்கலாம்” என்று அவன் காதல் கலந்த குரலில் சொன்னதும் அந்த குரல் அவளை ஏதோ செய்தது.

“சரி சரி… அடுத்து நீ என்ன பேசுவன்னு தெரியும். முதல்ல போனை வை” என்று பொய் கண்டிப்புடன் சொன்னாள் பூஜா.

“போனை வைக்கணுமா…. இப்போ தான் எல்லாம் நல்ல படியா நடக்குதே…. இப்போவாவது என்கூட நல்லா பேசுனா தான் என்னவாம்?” என்று அவனோ ஏக்கமாக கேட்க

“நீ என்ன பேச போறேன்னு எனக்கு தெரியாதா? முதல்ல நம்ம கல்யாணம் நல்ல படியா முடிஞ்சா தான் உன் கூட  நல்லா பேச முடியும். இப்போ போய் தூங்குற வழியை பாரு…” என்று பூஜா அவன் பேச ஆரம்பித்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இத்தனை நாள் இவர்களின் காதல் நல்லபடியாக நகர்வதற்கும், பூஜாவின் மீதான கண்ணனின் அன்பு நாளுக்கு நாள் அதிகமாவதற்கும் பூஜாவின் இத்தகைய குணமும் ஒரு காரணம்.

என்ன தான் காதலியாக இருந்தாலும் கண்ணியமான காதலனாக நடந்து கொள்வான் கண்ணன்.

என்னதான் காதலனாக இருந்தாலும் அவனுடைய எல்லைக்கு என்று கோடு வரைந்து வைத்திருக்கும் காதலியாக பூஜா.

அடுத்த நாள் விடியலுக்காக இருவருமே காத்திருந்தார்கள்.

பூஜாவை அவள் வீட்டில் யாரும் அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்கச் சொல்லி சொல்லவே இல்லை. இருந்தாலும் அவள் வேண்டுமென்றே அன்று அலுவலகம் செல்வதை புறக்கணித்தாள்.

நாளை பெண் பார்க்க வருவது என்னவோ பூர்ணாவை தான். ஆனால் பூஜாவோ நாளை அணிய போகும் உடையில் இருந்து பொட்டு வரை எல்லாவற்றையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து எடுத்து வைத்தாள்.

“நம்ம ஆளு நாளைக்கு ஃபர்ஸ்ட் டைம் நம்ம வீட்டுக்கு வர்றான். எவ்வளவோ நாள் சாரி கட்ட சொல்லி போர்ஸ் பண்ணி இருக்கான்.  அப்போ எல்லாம் நான் கட்டவே இல்லை. நாளைக்கு நாம சாரி கட்டுறோம்… அவனை இம்ப்ரஸ் பண்றோம்”  என்று தன் மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டாள் பூஜா.

இங்கே கண்ணனின் நிலைமையோ இன்னும் மோசமாக இருந்தது.

நாளை நடக்கவிருக்கும் முக்கியமான ப்ராஜெக்ட் மீட்டிங்கிற்காக இன்று இரவே அவன் பெங்களூர் கிளம்ப வேண்டும்.  அதனாலேயே நாளை பெண் பார்க்கப் போவதற்கு வரவில்லை என்று சொல்லி இருந்தான். அவனின் வீட்டினர் எவ்வளவோ முறை அழைத்தும், ஏன் அவன் அண்ணன் செழியனே தன்னுடன் வருமாறு ஆசையாக அழைத்தும் கூட, அவனோ அந்த ப்ராஜக்ட்டிற்காக மறுப்பு தெரிவித்து இருந்தான்.   அப்படி இருக்கும் பொழுது  எப்படி நாளை நானும் வருகிறேன் என்று சொல்வது? என்று தயக்கமாக யோசித்துக் கொண்டே இருந்தான்.

அவன் இவ்வாறு யோசித்து கொண்டு இருக்கவே அவனின் அறைக்குள் தக்காளி தொக்கு பாட்டிலுடன் வந்த அவனின் அம்மா தமிழ்செல்வி “டேய் கண்ணா… இந்தாடா நீ கேட்ட தக்காளி தொக்கு.   இதையும் உன்னோட பெட்டிக்குள்ள எடுத்து வச்சுக்கோ”  என்று சொன்னவர், அவன் அறையில் மாற்றப்பட்டிருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தபடி “என்னடா டைம் ஆயிடுச்சு… நீ இன்னும் கிளம்பவே இல்ல. நைட் பத்தரைக்கு தானே பஸ்ன்னு  சொன்ன? மணி பதினொன்னு ஆக போகுது”  என்று கேட்க

“ஐயோ…. அம்மா வேற டக்குனு கேட்டுட்டாங்களே… இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது…”  என்று  மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தவனோ “இல்லம்மா… நாளைக்கு எனக்கு ப்ராஜெக்ட் கேன்சல் ஆயிடுச்சு. அதனால நாளைக்கு கண்டிப்பா போகணும்னு அவசியம் இல்ல” என்று சொன்னதும் அவனின் இந்த முடிவுக்கான உண்மையான காரணத்தை அறிந்திடாத செல்வியோ,

“அப்படியாடா….  அப்போ எங்க கூட  நாளைக்கு வர்றியா?  நீயும் வந்தா நல்லா இருக்கும் டா…” என்று ஆசையாக கேட்டார்.

அவனும் இதற்காகவே காத்திருந்தவன் போல் “சரிம்மா… அப்போ நானும் நாளைக்கு வரேன்…”  என்று சம்மதித்தான்.

இருவரும் எதிர்பார்த்த விடியலோ வந்துவிட, நேற்று இரவு அலுவலகத்திற்கு போன பூர்ணா இன்னும் வேலையை முடித்து வரவில்லை.

பார்வதியும் மெய்யரசனும் பூர்ணாவின் வருகைக்காக வாசலையே பார்த்த காத்துக் கொண்டிருந்தார்கள்.

பெண் பார்க்க வரும் பெண்ணே இன்னும் வீட்டுக்கு வராமல் இருக்கும் பொழுது, இங்கே இளையவளோ கண்ணாடியை விட்டு நகராமல் ஒப்பனைகள் செய்து கொண்டிருந்தாள்.

“என்னடி இவ்வளவு நேரம் ஆச்சு… எப்பவும் பூர்ணா காலையில ஏழு மணிக்கே  வீட்டுக்கு வந்துருவாளே. ஆனா இன்னும் என்ன ஆளை காணோம். அவளுக்கு போன் பண்ணியா?” என்று தன் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் மெய்யரசன்.

“போன் பண்னேங்க.. ரிங் ஆகுது… எடுக்கவே இல்ல… ஒருவேளை வந்துட்டு இருப்பாளோ என்னவோ…”  என்று அவரும் ஒருவித பதற்றத்தோடே சொல்ல

“சரி இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம். அப்பவும் வரலைன்னா நான் அவளோட ஆபீஸ்க்கே போய் பார்த்துட்டு வந்துடறேன்.  இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துருவாங்க. அவங்க  வரும்போது வீட்டுல பொண்ணு இல்லனா அது நல்லா இருக்காது” என்று மெய்யரசன் சொன்னதும் “சரி” என்று சொன்ன பார்வதி பூஜாவின் அறைக்குள் போனார்.

அங்கே பூஜா தடபுடலாக ஒப்பனைகள் செய்து கொண்டிருப்பதை பார்த்தவரோ “என்னடி…  இன்னைக்கு ஆபீஸ்ல எதுவும் பங்க்ஷனா?”  என்று கேட்டார்.

“ஆபீஸ்ல என்னமா பங்க்ஷன்? வீட்ட தான இன்னைக்கு ஃபங்ஷன். அதனாலதான்”  என்று பூஜா கேஷுவலாக சொல்ல

“நம்ம வீட்ல என்னடி பங்க்ஷன்?” என்று பார்வதியோ புரியாமல் கேட்க

“என்னம்மா இது? நைட்டு அப்பா சொன்னதெல்லாம் மறந்துட்டியா? இன்னைக்கு அக்காவை பொண்ணு பார்க்க வராங்கல்ல” என்று பூஜா தன்னுடைய கண்ணுக்கு மை போட்டவாறே சொல்ல

“அக்காவை தானடி பொண்ணு பாக்க வர்றாங்க? அதுக்கு நீ எதுக்கு இவ்வளவு மேக்கப் பண்ணிட்டு இருக்க?”  என்று பார்வதியோ புரியாமல் கேட்டார்.

“அச்சச்சோ…. இவ்ளோ பிளான் பண்ணியும் மண்டையில இருந்த கொண்டையை மறந்துட்டியேடி…”  என்று தன் மனதுக்குள் நினைத்தவள்
“இல்லம்மா…  அடுத்து எப்படியும் எனக்கு தானே மாப்பிள்ளை பாப்பீங்க.  சோ அதுக்கு தான் இப்பவே நான் ட்ரையில் பாத்துக்கிறேன்” என்று குசும்போடு சொன்னாள்.

“பார்ப்படி…. பார்ப்ப…  வர வர உன்னோட போக்கே சரியில்ல. முதல்ல பூர்ணாவுக்கு கல்யாணம் முடியட்டும். அடுத்தது உனக்கு உடனே கல்யாணம் பண்ணிடனும்” என்று அவளை எச்சரிக்கை செய்துவிட்டு போனார் பார்வதி.

“அட போம்மா…  அதுதான் என்னோட பிளானும். எப்படியோ இன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடந்தா  நல்லா இருக்கும்” என்று தன் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டபடி சந்தோஷத்துடன் நினைத்து கொண்டாள் பூஜா.

சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும் பார்வதியிடம் வேகமாக வந்த மெய்யரசனும் “என்னடி இன்னும் பூர்ணாவை கானோம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற பக்கத்துல வந்துட்டதா போன் பண்ணாங்க” என்று பதற்றமாக சொல்ல

“அச்சச்சோ….  இப்போ என்னங்க பண்றது? சரி நீங்க பூர்ணாவோட ஆபிஸ்க்கு போய் பாத்துட்டு வந்துடுறீங்களா?”  என்று பார்வதி கேட்க

“அதுக்கு எல்லாம் இப்போ நேரம் இல்லடி… மாப்பிள்ளை வீட்டுல இருந்து பத்து மணிக்கு வர்றதா தான் சொன்னாங்க. இப்போ ஒன்பதரை தான் ஆச்சு. சீக்கிரமாவே வந்துட்டாங்க போல. எப்பவும் காலைல 7:00 மணிக்கே வந்துடுற பூர்ணா இன்னுமே வரலையேடி.  போன் பண்ணா கூட எடுக்கவே மாட்டிறா”  என்று வருத்தப்பட்டவர் “சரி இப்போ நான் அவளோட ஆபிஸ்க்கு போன் பண்ணி கேட்கிறேன்.” என்று சொல்லிவிட்டு  தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.

பூர்ணாவின் அலுவலக ரிசப்ஷன் எண்ணுக்கு போன் செய்தவர் முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ஹலோ மேடம்… நான் பூர்ணாவோட அப்பா பேசுறேன். பூர்ணா கிட்ட பேச முடியுமா?” என்று கேட்க..

“இல்ல சார்… பூர்ணா எப்பவும் போல ஷிப்ட் டைம் முடிஞ்சதும் சிக்ஸ் தேர்ட்டிக்கே கிளம்பிட்டாங்க” என்று ரிசப்ஷினிஸ்ட் பெண்ணும் சொன்னார்.

“என்னது ஆறு முப்பதுக்கே கிளம்பிட்டாளா? ஆனா மணி இப்போ ஒன்பதரை ஆச்சு.  இவங்க சொல்றத வச்சு பார்த்தா 7:00 மணிக்கே வீட்டுக்கு வந்திருக்கணும்”  என்று குழப்பத்துடன் தன்  மனதுக்குள்ளேயே யோசித்துக் கொண்டார் மெய்யரசன்.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *