Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 7

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 7

“என்னடி சொல்ற? எல்லா இடத்திலையும் அக்காவை தேடுனியா?” என்று பார்வதி அதிர்ச்சியாக கேட்க

“ஐயோ… ஆமாம்மா…. தேடாம இப்போ உன்கிட்ட வந்து சொல்லுவேனா? அக்கா எங்கேயுமே இல்லம்மா.  அக்கா ஆரம்பத்தில இருந்தே இந்த கல்யாணத்துல  விருப்பம் இல்லைன்னு தான் சொல்லிட்டு இருந்தா. ஆனா அதுக்குன்னு இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு  நான் நினைச்சு கூட பார்க்கலம்மா” என்று  அழுது கொண்டே சொன்னாள் பூஜா.

“என்னம்மா சொல்ற?  பூர்ணாவுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையா?” என்று அதிர்ச்சியாக கேட்டார் மெய்யரசன்.

“ஆமாப்பா….” என்று சொன்னவளோ பூர்ணா உடன் அவளுக்கு நடந்த எல்லா உரையாடல்களையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

அதையெல்லாம் கேட்ட மெய்யரசனும் செய்வதறியாமல் குழம்பி போய் நிற்க, இந்த விஷயம் காட்டுத்தீப் போல மண்டபம் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது. கண்ணனின் குடும்பத்தாருக்கும் இந்த விஷயம் தெரிந்து விட்டது.

விஷயத்தை கேள்விப்பட்ட கண்ணனும் சிறிதும் தாமதிக்காமல் நேராக பூஜாவை தேடி வந்தான்.

பூஜாவோ தன்னுடைய அக்காவின் போனுக்கு   முயற்சி செய்து கொண்டிருக்க, அப்பொழுது அவள் அருகில் வந்தவன் “பூஜா… உங்க அக்காவை காணமாமே…  எல்லோரும் பேசிக்கிறாங்க”  என்று கொஞ்சம் கோபமாக கேட்டான்.

அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கியவளோ, அவனிடம் சொன்னால் ஏதாவது ஒரு உதவி கிடைக்கும் என்று நம்பி நடந்த எல்லாவற்றையும் அவனிடம் சொன்னாள்.

பூஜா சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டவனோ “என்ன பூஜா? என்னோட காதுல பூ சுத்த பாக்குறியா? உங்க அக்கா அவங்களோட ட்ரீமுக்காக கல்யாணத்தை விட்டுட்டு கடைசி நேரத்துல இப்படி ஓடிப் போவாங்களா? உங்க அக்கா யாரையோ லவ் பண்ணிட்டு இருக்காங்க. அதனால தான் இப்படி ஓடி போய்ட்டாங்க.”  என்று கோபமாக பூஜாவை திட்டும் குரலில் சொன்னான்.

“என்ன பேசுற கண்ணா? எங்க அக்கா லவ் பண்ணி இருந்தா எனக்கு தெரியாமலா இருந்திருக்கும்? நான் தான் சொல்றேன்ல்ல. பூர்ணா யாரையும் லவ் பண்ணல. அவளுக்கு அவ ஆபீஸ்ல புரமோஷன் கொடுக்க இருந்தாங்க. இந்த கல்யாணம் நடந்தா அவளோட கனவு கலைஞ்சிடும்ன்னு நினைச்சு தான் இப்படி ஓடிப் போயிட்டான்னு நினைக்கிறேன். அது தெரியாம நீ பாட்டுக்கு உன்னோட இஷ்டத்துக்கு ஏதேதோ பேசாத” என்று பதிலுக்கு பூஜாவும் கோபமாக பேசினாள்.

அவளின் கோபத்தை பார்த்து இன்னும் கோபடைந்தவனோ “காரணம் எதுவா வேணா இருக்கட்டும். இப்ப கடைசி நிமிஷத்துல கல்யாண பொண்ணு ஓடிப்போயிட்டா, எங்க அண்ணனோட நிலைமை என்ன?  இங்க நாங்க தான் பாதிக்கப்பட்டவங்க” என்று அவனும் பூஜாவை புரிந்து கொள்ளாமல் பேச

“இப்போ என் மேல கோபப்பட்டு எதுவுமே ஆகப் போறது இல்ல கண்ணா.  உன் கிட்ட சொன்னா  எனக்கு நீ ஏதாவது ஹெல்ப் பண்ணுவேன்னு தான் உன்கிட்ட சொன்னேன். இப்ப நம்ம ரெண்டு பேரும் சண்டை போட்டு ஒரு யூசும் இல்ல. இப்போ எப்படியாவது அக்காவை தேடி கண்டுபிடிச்சு ஆகணும். இல்லன்னா இந்த கல்யாணம் நின்னு போயிடும்” என்று பூஜா எவ்வளவோ அவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்தாள்.

“எப்படி பூஜா… வேற எவனையோ லவ் பண்ணி ஓடிப்போன பொண்ண கண்டுபிடிச்சு கொண்டு வந்து, எங்க அண்ணன் தலையில கட்டணுமா?  அவனை பாத்தா இளிச்சவாய் மாதிரி இருக்கா? இல்ல வேற எப்படி இருக்கு?” என்று கண்ணன் கேட்க

“இப்படி எல்லாம் பேசாத கண்ணா. எங்க அக்கா அந்த மாதிரி பொண்ணு கிடையாது. கண்டிப்பா வேணும்ன்னே தப்பு பண்ணியிருக்க மாட்டாள். அப்படியே அவ யாரையாவது லவ் பண்ணி இருந்தாலுமே அதுல எந்த தப்பும் இல்லையே.  ஏன் நாம லவ் பண்ணலையா?” என்று தன் அக்காவின் தரப்பு நியாயத்தை அவனுக்கு புரியவைக்க முயற்சி செய்தாள் பூஜா.

அதைக் கேட்டு தன் இரு கைகளையும் சத்தமாக தட்டியவன் “வாவ் சூப்பர்… பூஜா இப்பதான் உண்மையை உன்னோட வாயால ஒத்துக்கிற போல…  இங்க லவ் பண்றது தப்பு கிடையாது. கல்யாணத்துல கடைசி நிமிஷத்துல ஒரு அப்பாவி பையனோட வாழ்க்கையை கெடுத்து, அவனை மணமேடையில தனியா நிக்க வச்சு, அசிங்கப்படுத்திட்டு ஓடி போறது தான் தப்பு. இந்த விஷயம் தெரிஞ்சா எங்க அண்ணனோட மனசு எப்படி இருக்கும்னு கொஞ்சமாவது யாராவது யோசிச்சு பாத்தீங்களா?  உங்க அக்காவை பார்த்த அந்த நிமிஷத்துல இருந்து மனசுல அவ்ளோ ஆசைகளை வளர்த்து வச்சிருக்கான்.  இது எல்லாத்துக்கும் மேல அவனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கல்யாண மண்டபத்துல இருந்து ஓடிப் போயிட்டான்னு  தெரிஞ்சா அவன் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாத்தியா?”  என்று தன் அண்ணனுக்காக பேசினாள் கண்ணன்.

“ஐயோ எனக்கு எல்லாமே புரியுது கண்ணா…  உங்க அண்ணனோட நிலைமையும் புரியுது.  உங்க பேமிலியோட நிலைமையும் புரியுது. ஆனா அதே சமயம் நீ எங்களையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ. இப்போ எங்க அப்பா அம்மாவோட மனசு எப்படி இருக்கும்னு நினைச்சு பாரு. எல்லார் முன்னாடியும் அவங்க தான் குற்றவாளியா நிப்பாங்க.” என்று பூஜாவோ கெஞ்சம் குரலில் அவனிடம் அழுது கொண்டே சொன்னாள்.

இவர்கள் இருவரும் இங்கே இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்க,   மணமேடைக்கு அருகே இருக்கும் ஒருவர் “கல்யாண பொண்ணு ஓடிப் போயிட்டா என்ன, அதான் அதோட தங்கச்சி இருக்கேப்பா…. அந்த பொண்ணை கட்டி வைங்க” என்று சொல்ல

அந்த வார்த்தை இருவர் காதிலும் விழுந்து கண்ணனும் பூஜாவும் அதிர்ச்சி அடைந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இந்த வார்த்தையை கேட்ட கண்ணனுக்கோ கோபம் இன்னும் அதிகமாகியது.  அவன் பூஜாவை ஒரு பொருட்டென கூட மதிக்காமல், வேக வேகமாக மனமேடையை நோக்கி தன் குடும்பத்தார்களை பார்க்க போனான்.

அங்கே செல்வியோ “ஆமாங்க… இரண்டாவது பொண்ணும் பார்க்க லட்சணமா தான் இருக்கு. பேசாம அந்த பொண்ணையை நம்ம செழியனுக்கு கட்டி வைக்கலாமா?”  என்று தன் கணவனிடம் கேட்க

அதை கேட்ட கண்ணனும் “அம்மா… என்ன பேசுற நீ… அக்காவே இந்த மாதிரி இருக்கா… அப்போ தங்கச்சி  எப்படி இருப்பான்னு கொஞ்சம் நினைச்சு பாரு… அந்த பொண்ணை கட்டி வெச்சு செழியனோட வாழ்க்கையை வீணாக்க பாக்குறீங்களா?  எப்படியோ கல்யாணத்துக்கு முன்னாடியே இவங்க குடும்பத்தோட லட்சணம் தெரிஞ்சு போயிடுச்சு.  இல்லன்னா நம்ம செழியனோட வாழ்க்கை வீணா போயிருக்கும்.  இந்த குடும்பத்துல இருக்க எந்த பொண்ணும் நமக்கு வேண்டாம்மா. வாங்க இப்பவே இங்கிருந்து கிளம்பலாம்” என்று கண்ணன் தன் அம்மாவை கையை பிடித்து அழைக்க

“இல்லப்பா கண்ணா.. கல்யாணம் மணமேடை வரைக்கும் வந்து நின்னு போனா, நம்ம செழியனுக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும். அதனால அந்த ரெண்டாவது பொண்ணை செழியனுக்கு கட்டி வச்சிடலாம்” என்று அறிவழகன் சொல்ல

“அப்பா நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியலையா? அந்த பொண்ணு தான் யாரையோ லவ் பண்ணி ஓடிப் போயிடுச்சு.  இப்போ இந்த பொண்ணு யாரை லவ் பண்ணுதுன்னு நாம பாத்துட்டா இருந்தோம்? இவ எவன் கூட எல்லாம் சுத்தினாளோ… நாம என்ன பார்த்துட்டா இருந்தோம்? இப்போ இந்த பொண்ணை அவனுக்கு கட்டி வச்சா தான் செழியனோட வாழ்க்கை வீணா போயிடும்.  அதனால தயவு செஞ்சு கேட்கிறேன்… வாங்க இங்கிருந்து போலாம்”  என்று சொன்ன கண்ணனோ யாருடைய பேச்சையும் கேட்காமல் தன் அண்ணனை கைபிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

கண்ணன் அங்கிருந்து கிளம்பி இருந்தாலும் கூட , அவன் பேசிய வார்த்தைகள் இன்னும் பூஜாவின் காதில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

“நான் எவன் கூட எல்லாம் சுத்துனேனா? டேய் நான் உன் கூட தானடா சுத்துன?  உன்னை தான்டா லவ் பண்ண? அப்படி இருக்கும்போது என்னையே இப்படி அசிங்கமா பேச உனக்கு எப்படி டா மனசு வந்தது? ஆனால் நீ சொன்ன விஷயம் எல்லாம் சரிதான். நானும் வேற ஒருத்தனும் லவ் பண்ணிட்டு தான் இருக்கோம்.  அப்படி இருக்கும் போது உங்க அண்ணனை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது தான்.  அப்படியே பண்ணி இருந்தாலும் அண்ணனோட வாழ்க்கை வீணா தான் போயிருக்கும். ஆனா அதுக்குன்னு நீயே இந்த மாதிரி பேசலாமா கண்ணா?. ஏன்டா இப்படி வார்த்தையால என்ன கஷ்டப்படுத்துற?” என்று கண்ணீர் விட்டு அழுது விட்டாள் பூஜா.

கண்ணன் பேசிய வார்த்தைகளுடன் அவளின் மனது போராடிக் கொண்டிருக்கும் பொழுது, இங்கே தன்னுடைய அம்மா அப்பா எல்லோரும்  முன்னிலையிலும் அசிங்கப்பட்டு நிற்பதை பார்த்து அவளின் மனது இன்னும் ரணமாகியது.

அவளுக்கே ஆறுதல் சொல்ல யாராவது வேண்டும் என்ற நிலை இருந்தாலும், என்னுடைய அப்பா அம்மாவிற்காக தங்களுடைய மனதை தேத்தி கொண்டு அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள்.

இங்கே பூஜாவை நிலைமையை  விட மோசமாக இருந்தது அங்கே செழியனின் நிலைமை.

இப்படி பூஜாவின் குடும்பம் எல்லோர் முன்னிலையிலும் கஷ்டப்பட்டு நிற்பதை பார்த்த ஜமுனாவிற்கும் அது கஷ்டமாகத்தான் இருந்தது. அதே சமயம் செழியன் மணமேடையில் கலங்கி நின்றதை பார்த்தவளின் மனது இன்னும் கனமாகியது. இப்போது  பூர்ணாவின் மேல் ஜமுனாவிற்கு அதீத கோபம் வந்தது. “ச்சச… இந்த பூஜாவோட அக்கா ஏன் இப்படி இருக்காங்க. இந்த கல்யாணம் பிடிக்கலைன்னா இந்த முடிவை முன்னாடியே எடுத்து இருக்கணும். இப்படி கடைசி நிமிஷத்துல இந்த மாதிரி முடிவு எடுத்து எல்லாரையும் எதுக்கு இப்படி கஷ்ட படுத்தனும்? எந்த ஒரு ஆணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது”  என்று  தன் மனதில் நினைத்து வருந்திக் கொண்டாள்.

இதுவரை தருண் எந்த ஒரு விசேஷத்திற்கும் போனதில்லை.

பூஜாவின் அழைப்பின் பேரில் திருமணத்திற்கு வந்திருந்தான். அங்கே பூஜாவின் குடும்பம் கஷ்டப்பட்டதை பார்த்து அவனுக்கும் மனது தாங்கவில்லை.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *