Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9

பூஜாவுக்கு தருணை பார்த்ததும் “இங்க என்ன நடக்குது? எதுவுமே புரியலையே. அப்பா வந்து திடீர் கல்யாணம்னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா தருண் மாப்பிள்ளையா இருக்காரு. தருண் கூட ஏன் இதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல? அவருக்கு முன்னாடியே நான் தான் கல்யாண பொண்ணுன்னு தெரிஞ்சிருக்குமா?” என்பதை எல்லாம் தன் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தவள் தருண் மேல் இருந்த அவளுடைய கண்களை  கொஞ்சம்  நகர்த்தவே, அப்போது சரியாக அவளுக்கு எதிரே நின்று கொண்டிருந்தான் கண்ணன்.

இன்னொருவனின் விரலைப் பிடித்து அக்னியை வலம் வந்து கொண்டிருப்பவளின் எதிரே, அவள் உயிருக்கு உயிராய் நேசித்த காதலன் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவள் சுற்றி வருகின்ற அக்னி அவளுடைய நெஞ்சில் எரிவது போல் இருந்தது.

கண்ணனை பார்த்தவளுக்கு இதயதுடிப்பு அதிகமாக,  ஒரு நொடி எதுவும் புரியவில்லை. அவள் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. இவ்வுலகமே இருண்டது போல் இருந்தது. அந்த நொடி அவன் பார்க்கும் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. “என்னை விட்டுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டியேடி” என்று நினைத்து அவன் பார்ப்பதை போல உணர்ந்தாள். அவளின் அந்த உணர்வும் உண்மை தான். அவனோ  ஏமாற்றமாய் பார்க்க, அந்த பார்வை அவளை மரணத்தில் விளிம்பிற்கே கொண்டு சென்றது.

தருணின் விரல் பிடித்து அக்னியை வலம் வந்து கொண்டிருந்தவள், அதே இடத்தில் சுயநினைவு இன்றி சரிந்து விழுந்தாள்.

அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாத கண்ணன் அவன் சொல்ல வந்த விஷயத்தை கூட மறந்து அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

பூஜாவிற்கு இப்பொழுது நடந்த திருமணத்திற்கு அவனும் ஒரு காரணம் தானே…

பூஜாவோ கண்விழித்து பார்க்கும் பொழுது அவளுடைய வீட்டில் தன்னுடைய அறையில் இருந்தாள்.

அங்கு எந்த விஷயமும் மாறவில்லை. அவளுடைய அதே அறை… அவளுடைய அதே வீடு…  ஒரு நொடி அவளுக்கு எதுவும் புரியவில்லை. சுற்றி சுற்றி எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டிருந்தவளோ “ஒருவேளை இதுக்கு முன்னாடி வரைக்கும் நடந்தது எல்லாம் கனவா   இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?’ என்று தன் மனதில் நினைத்தவள்,  தலை குனிந்து பார்க்க, அப்போது அவள் கழுத்தில் தருண் கட்டிய தாலி தொங்கி கொண்டிருப்பதை பார்த்து  மூச்சு விடவே சிரமமாக இருந்தது.

அப்போது  அந்த அறையை யாரோ திருந்து கொண்டு உள்ளே  வர, அது யார் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் பூஜா.

வேறு யாரும் இல்லை தருண் தான் உள்ளே வந்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் அவளுக்கு மறுபடியும் தலை சுற்றுவது போல் இருந்தது.

இவ்வளவு நாள் கனவு உலகில் ஒரு கோட்டையைக் கட்டி வைத்து, தனக்கென்று ஒரு தனி உலகத்தை அமைத்து, அந்த உலகத்தில் அவள் ராணியாகவும், அவள் உயிராய் நேசித்த ஒருவன் ராஜாவாகவும் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த ராஜா பதவியில் எப்படி அவளால் வேறு ஒருவனை வைத்து பார்க்க முடியும்?

இப்பெண்ணின் மனநிலமையை யாரால் விவரிக்க முடியும்? எப்படி விவரிக்க முடியும்?

அந்த படுக்கையில் ஒரு ஓரத்தில் பூஜா குறுகி போய் அமர்ந்து கொண்டிருக்க, இன்னொரு ஓரத்தில் வந்து அமர்ந்தான் தருண்.

அந்த நொடி அவளுக்கு அவளை சுற்றி, அந்த அறை முழுவதும் அருவருப்பான பூச்சி ஊர்ந்து கொண்டிருப்பது போலவே இருந்தது.

தருணுக்கும் என்ன பேசுவது? எப்படி பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று எதுவுமே தெரியவில்லை. அவனும் சில நொடி அமைதியாகவே இருக்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அப்பொழுது அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது தருணுக்கு புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒருவேளை பூஜாவின் கடந்த கால காதல் அவனுக்கு தெரிந்திருந்தால் இந்த திருமணமே நடந்திருக்காதோ என்னவோ.

சில நிமிடங்கள் அந்த அறையில் மெளனமே ஆட்கொண்டிருக்க, அப்பொழுது தருணின் உறவுக்கார பெண்மணி ஒருவர் அந்த அறைக்குள் வந்தார்.

பூஜாவை பார்த்தவரோ  “ஏம்மா… கோவில்ல மயக்கம் போட்டு விழுந்துட்ட? காலையில  எதுவும் சாப்பிடலைல்ல… அதனால உனக்கு ரொம்ப டயர்டா இருந்திருக்கும்.  இப்ப பாரு நீ மயக்கம் போட்டு விழுந்ததினால எந்த சடங்கு சம்பிரதாயமும்  சரியா செய்யவே முடியல.  இனி டைரக்டா சாந்தி முகூர்த்தம் தான்… என்ன தருண்… அப்படித்தானே?”  என்று தருணை கிண்டலாக பார்த்தபடி சிரித்துக்கொண்டே சொன்னார் அந்த பெண்மணி.

“ஐயோ… இவங்க வேற நிலைமை புரியாம…”  என்று தன் மனதில் நினைத்த தருண் “சித்தி… இப்போ தான் அவங்களே எழுந்து உட்கார்ந்து இருக்காங்க.  வந்ததும் இப்படி பேசுறீங்க. போய் அம்மாவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க” என்று சொன்னதும்

“நடிக்காதடா மகனே…. நீயும் மனசுக்குள்ள  இதை தான எதிர் பாத்துட்டு இருக்க?  இப்ப எதோ கோபப்படுற மாதிரியே பேசுற” என்று சொன்ன  சித்தியோ நக்கலாக சிரித்து கொண்டே அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இதைக்கேட்டவளுக்கு பயம் இன்னும் அதிகமாகியது. இன்னும் என்ன எல்லாம் நடக்கப்போகிறதோ… என்று தன் மனதில் நினைத்த பயந்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது அந்த அறையின் கதவை தட்டியபடியே உள்ளே நுழைந்தார் தருணின் அம்மா மஞ்சுளா.

தன்னுடைய அம்மாவை பார்த்ததும் படுக்கையில் இருந்து எழுந்து நின்றவனோ “என்னமா….?” என்று கேட்டான்.

“டேய் கண்ணா… சம்பிரதாயபடி இன்னைக்கு நைட்டு நீ பொண்ணு வீட்ல தான் தங்கணும். அதனால நாங்க எல்லாரும் கிளம்பறோம். நீயும் பூஜாவும் நாளைக்கு மார்னிங் கிளம்பி வீட்டுக்கு வந்துருங்க. சரியா?” என்று அவரோ தன் மகனை செல்ல பெயரோடு அழைக்க, அந்தப் பெயர் பூஜாவுக்கு நெஞ்சில் ஊசியால் குத்துவது போல இருந்தது.

அழுகையை அடக்க முடியாதவள், வேகமாக எழுந்த பாத்ரூமை நோக்கி போனாள்.

அதைப் பார்த்த மஞ்சுளாவும் “சரிடா… என்னோட மருமக இப்ப நார்மலா இல்லன்னு நினைக்கிறேன். அவளை நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வா. அதுக்கப்புறம் நான் அவகிட்ட பேசுக்கிறேன். இப்போ நான் என்ன பேசினாலும் அவளுக்கு அது  கேட்காது. ஏன்னு  தெரியல ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா”  என்று சொன்னவரோ தருணிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பி விட்டார்.

பாத்ரூமுக்குள் நுழைந்தவள் வாயில் கை வைத்து  அழுது கொண்டிருந்தாள்.

“ஐயோ கடவுளே… எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? எங்க அக்கா பண்ண தப்புக்கு எனக்கு தண்டனை கொடுத்தீங்க… அதையும் சரின்னு ஏத்துக்கிட்டேன்.  அது போதாதுன்னு தருண் என் கழுத்துல தாலி கட்டுறத கண்ணனை பார்க்க வச்சுட்டீங்களே… கண்ணன் எதுக்காக அந்த இடத்துக்கு வரணும்? நான் எதுக்காக அவனைப் பார்க்கனும்? இப்படி வரிசையா எனக்கு தண்டனையா கொடுத்துட்டு இருக்கீங்களே… இதெல்லாம் போதாதுன்னு  என் காதுக்கு கேட்கிற மாதிரியே தருணோட அம்மா அவரை கண்ணான்னு கூப்படறாங்க.  அவங்க தன்னோட பையனை செல்லமா கூப்பிடுறாங்க. ஆனா கடந்த காலத்துல அந்த பெயர் என்னோட வாழ்க்கையில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குன்னு யாருக்குமே தெரியலையே… நான் யாரை இதுக்கு அப்புறம் பார்க்கவே கூடாது நினைச்சேனோ அவனை என் கண்ணு முன்னாடி காட்டிட்டிங்க. எந்த பேரை இதுக்கு அப்புறம் என்ன காதால கேட்கவே கூடாது நினைச்சேனோ அதே பேரை மறுபடியும் எதுக்காக கேட்க வைக்கிறீங்க? இன்னும் என்னோட வாழ்க்கையில என்ன எல்லாம் நடக்க போகுதோ? ஒண்ணுமே புரியலையே…”  என்று தன் மனதில் நினைத்தவளோ கத்தி அழுக ஆரம்பித்தாள்.

ஒரு கட்டத்தில் அவளோ தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுகவே, அந்த சத்தம் வெளியே இருக்கும் தருண் காதுகளில் விழுந்தது.

பூஜாவின் கதறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தவனோ “பூஜா எதுக்கு இவ்வளவு சத்தமா அழுகிறா?” என்று தன் மனதில் நினைத்த படியே பாத்ரூம் கதவை தட்டினான்.

“பூஜா… என்ன பண்றீங்க? கதவை திறங்க” என்று  அவனோ பதற்றமாக சொல்ல,

தருணின் குரல் கேட்டவளோ தன்னுடைய இரு கண்களையும் துடைத்து விட்டு கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தாள்.

மெதுவாக வந்து  கதவை திறந்து, அறைக்குள் வந்தவளோ மௌனமாகவே நின்று கொண்டிருந்தாள்.

மணப்பெண் அலங்காரங்கள் எல்லாம் அவளின் கண்ணீரில் அழிந்து, அவள் தலையில் அடித்து அழுததில் அவளின் தலை முடி எல்லாம் கலைந்து, அவளின் நகைகள் எல்லாம் கலைந்து, அழுது அழுது சோர்ந்து போய் இருந்தவளை பார்த்தவனுக்கு அவளின் இந்த நிலைமைக்கு தானும் ஒரு காரணமோ என்று தோன்றியது.

“இது அவசர கல்யாணம் தான்… பூஜாவுக்கு விருப்பம் இல்லைன்னு தெரியும். ஆனா போக போக மாறிருவான்னு நினைச்சேன். ஆனா… பூஜா எதுக்கு இந்த அளவுக்கு நடந்துக்கிறா? அப்படின்னா கண்டிப்பா இதுல ஏதோ இருக்கு…. ” என்று தன் மனதில் நினைத்தவனோ பூஜாவின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள நினைத்தான்.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *