Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 1

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 1

சூரியன் வழக்கத்தை விட விரைவாகவே தன் பணிக்கு வந்துவிட, அதன் விளைவு காலை ஒன்பது மணிக்கே சூரியன் சுட்டெரிக்க  ஆரம்பித்து விட்டது.

“ஏய்… அந்த லைட்டை ஆப் பண்ணுடி.. பகல்ல கூட உனக்கு கண்ணு தெரியாதா?” என்று தூங்கி கொண்டிருக்கும் பூர்ணா சலித்தபடியே தன் முகம் வரை மூடி இருந்த போர்வையை சற்றே விலக்கியபடி அரை தூக்கத்தில் சொல்ல

“காஜல் போட்டுட்டு இருக்கேன்டி. வெளிச்சமா இல்லைன்னா எனக்கு போட வராது” என்று  கண்ணாடி முன் நெருக்கமாக நின்று தன்னுடைய இடது புற கண்ணை  இடது கையால் கீழ் நோக்கி இழுத்தப்படியே வலது கையில் இருக்கும் பென்சில் போன்ற காஜலால் மை பூசிய படியே  சொன்னாள் பூஜா.

இதை கேட்டு கடுப்பான பூர்ணாவோ “ஏண்டி… ஹால்ல இருக்க கண்ணாடியை பார்த்து போட்டா மை ஒட்ட மாட்டேன்னு சொல்லுதா?” என்று கோபமாக எழுந்து உட்கார்ந்தபடியே சொன்னாள்.

“ஏய் லூசு… இந்த கண்ணாடி மேல தான் லைட் இருக்கு. சோ இங்க நின்னு போட்டா தான் எனக்கு வசதியா இருக்கும்” என்று பூஜாவும் பதிலுக்கு பேச காலையிலேயே கலாட்டா ஆரம்பித்துவிட்டது.

இதை கேட்டு கோபடைந்த பூர்ணாவோ “அம்மா…..” என்று கத்த

“இதோ… ஆரம்பிச்சுடாளுகளா…. தினமும் காலையில் இதே ஒரு பெரிய பஞ்சாயத்தா இருக்கு. இருக்கிறது ஓரு பெட் ரூம். நானும் என்ன தான் செய்ய முடியும்? எவ்ளோ முறை அவங்க அப்பா கிட்ட சொல்லியாச்சு…. மாடியில இன்னொரு பெட் ரூம் கட்டுங்கன்னு. அந்த மனுஷன் காதுலையே வாங்குறமாதிரி தெரியலை. இந்த IT கம்பெனிகாரங்க அதுக்கும் மேல….  ரெண்டு பேருக்கும் ஒரே ஷிப்ட் குடுத்தாவாவது பாதி பிரச்சனை முடியும். பெரியவளுக்கு நைட் ஷிப்ட் சின்னவளுக்கு டே ஷிப்ட்ன்னு குடுத்தா இப்படி தான் இருக்கும். முதல்ல இவளுங்க ரெண்டு பேரையும் எவன் கையிலையாவது புடிச்சு குடுத்தா தான் எனக்கு நிம்மதி.” என்று கிச்சனில் இருந்து பெட்ரூமிற்குள் நுழைவதற்குள் எல்லாவற்றையும் புலம்பி தள்ளிவிட்டார் பார்வதி.

இது ஒன்றும் புதிதில்லை. தினமும் நடப்பது தான். பூர்ணா பூஜா இருவரும் உடன் பிறந்த சகோதரிகள்.

பூஜா, பூர்ணாவை விட இரண்டு வயது இளையவள்.  இருவரும் வெவ்வேறு IT கம்பெனியில் வேலை செய்கிறார்கள். அக்கா பூர்ணாவிற்கு நைட் ஷிப்ட். பூஜாவிற்கு டே ஷிப்ட். பூர்ணா இப்போது தான் நைட் ஷிப்ட் முடித்துவிட்டு வந்து தூங்க ஆரம்பித்தாள். அதற்குள் பூஜாவிற்கு நேரம் ஆகிவிடவே அவள் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்தாள்.

பார்வதி அறைக்குள் வந்ததும் “அம்மா… பாரும்மா….  இப்போதான்ம்மா எனக்கு தூக்கமே வந்துது. கரெக்ட்டா இவள் இப்போ தான்ம்மா லைட்ட போட்டு டிஸ்டர்ப் பண்றா.” என்று பூர்ணாவோ அழுகும் குரலில் சொல்லிட

“ஏண்டி இப்படி பண்ற? வெளியே ஹால்ல நின்னு  மேக்கப் பண்ணா தான்  என்ன?”  என்று தன்னுடைய இளைய மகள் பூஜாவை பார்த்து திட்டியவர்

“அவள் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பி ஆபீஸ் போயிருவாடி  அதுக்கப்புறம் உன்னை யார் டிஸ்டர்ப் பண்ண போறா? நீ நிம்மதியா தூங்கு” என்று தன்னுடைய மூத்த மகளை  சமாதானப்படுத்தினார்.

இது இன்று மட்டும் இல்லை. தினமும் இது வாடிக்கையான விஷயம் தான்.

அவசர அவசரமாக கிளம்பியவளோ தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.

வீட்டில் இருந்து 15 நிமிடத்தில் அவனுடைய அலுவலகத்திற்கு சென்று விடலாம். ஆனால் இது காலை நேரம் என்பதால் டிராபிக் அதிகமாக இருக்கும். அதனாலேயே அவள் அலுவலகம் போக எப்படி இருந்தாலும் 30 நிமிடமாவது ஆகிவிடும்.

தன் வீட்டில் இருந்து வேகமாக வண்டியை கிளப்பியவளோ ஒரு சிக்னலில் நிறுத்தினாள்.

அப்பொழுது அவளுடைய போன் ரிங் ஆகவே எடுத்து திரையை பார்த்தவள், புன்னகைத்துக் கொண்டே போனை அட்டென்ட் செய்து ப்ளூடூத் ஹெட்போனில் பேச ஆரம்பித்தாள்.

“என்ன சார் அதிசயமா இருக்கு? இன்னைக்கு காலையில நீங்களே போன் பண்ணி இருக்கீங்க? இன்னைக்கு என்ன லீவு போட்டுட்டீங்களா?” என்று கொஞ்சம் சந்தோஷமாக பேசினாள்.

இருக்காதா பின்பு? இருவருக்கும் ஒரே ஷிப்ட்.  ஆனால் வேறு வேறு கம்பெனி. அதனால் இருவரும் காலை நேரத்தில் அதீத பரபரப்பாகவே இருப்பார்கள். அதனால் இந்த நேரத்தில் இருவரும் போன் பேசிக் கொள்ளவே மாட்டார்கள்.

ஆம்… எதிர் முனையில் பேசியவன் யாழிசை கண்ணன். இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தான். அப்பொழுது இருவருக்கும் நட்பை தவிர எந்த வித உறவும் இல்லை. ஆனால் பள்ளி முடித்த பிறகு எதார்த்தமாக இருவரும் ஒரே கல்லூரியில் சேரவே, இவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறியது. ஆனால் விதியின் வசத்தால் கல்லூரி முடித்த பின்பு இருவருக்கும் வேறு வேறு ஐடி நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டது. அதனால் இருவரும் இப்பொழுது வேறு வேறு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவளோ சென்னையில் வேலை செய்ய, அவனோ பெங்களூரில் இருக்கும் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.

“ஆமாடி….  இன்னைக்கு கொஞ்சம் உடம்பு முடியல. அதனால தான் ஆபீஸ்க்கு லீவ் போட வேண்டியதாயிடுச்சு.” என்று சோகமான குரலில் பதில் அளித்தான் கண்ணன்.

“என்னடா சொல்ற? என்ன ஆச்சு உடம்புக்கு?” என்று அவளோ கொஞ்சம் பதற்றமாக கேட்க

“பெருசா ஒன்னும் இல்லை பூஜா…  ரொம்ப தலை வலிச்சுதா…. அதனாலதான்….” என்று அவனோ தன்னுடைய நெற்றியே கை வைத்து தேய்த்தபடியே சொல்ல

“என்னடா சொல்ற? இவ்வளவு காலையில் உனக்கு தலை வலிக்குதா?” என்று ஒரு நொடி யோசித்தவள் பின்பு எதையோ சுதாரித்தவளாக “நேத்து நைட்டு சார்  என்ன சாப்பிட்டீங்க?”  என்று சரியாக கண்டுபிடித்தாள்.

“ஈஈஈஈ……”  என்று பல்லை காட்டியவனோ “எப்படி டி கண்டுபிடிச்ச? ரூம்ல ஏதும் சிசிடிவி கேமரா மாட்டி வச்சிருக்கியா என்ன?”  என்று தன்னுடைய அறையை சுற்றி சுற்றி பார்த்தபடியே   கேட்டான் கண்ணன்.

“ம்ம்ம்ம்….  நைட்டு தண்ணியில மிதந்த மீன் குட்டியோட  குரலை கேட்டாவே தெரியாதா? இதுக்கு எதுக்கு ரூம்ல சிசிடிவி கேமராவை எல்லாம் மாட்டி  வைக்கணும்?”  என்று பூஜாவும் கோவமான குரலில் கேட்டாள்.

“இல்லடி…  எங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ற பிரண்ட் ஒருத்தன் வேற கம்பெனிக்கு போறான். அதனால ஒரு சின்ன ஃபேர்வல்  பார்ட்டி மாதிரி அரேஞ்ச் பண்ணி இருந்தான். அதுல கொஞ்சமா தான் குடிச்சேன். ஆனா எதுக்காக இவ்வளவு தலை வலிக்குதுன்னு தெரியல” என்று அவன் எதை  எதையோ சொல்லி சமாளிக்கவும்

“அது எப்படி கண்ணா… எல்லாத்தையும் பண்ணி முடிச்சுட்டு தான் என்கிட்ட சொல்லுவியா?” என்று கோபமாக கேட்டாள்.

“இல்லடி…  நேத்து உன்கிட்ட பர்மிஷன் கேட்கலாம்ன்னு தான் வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்னேன்.  ஆனால் நீ தான் ஆன்லைன்லயே இல்ல. நைட் நேரம் இல்லையா… சோ கால் பண்ணா உங்க வீட்ல தெரிஞ்சுரும்னு தான் போன் பண்ணல.” என்று அவனும் அவளின் கோபத்தை குறைக்க உண்மையை சொல்லி சமாளிக்க,

அதுக்குள் சிக்னல் போட்டு விட்டதால் அவளோ அவன் பேசுவதை சரியாக காதில் வாங்காமலும், அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமலும் போனை கட் பண்ணிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டாள்.

இருவரும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போதிலிருந்தே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஏழு வருடமாக அந்த காதல் இருவருள்ளும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இங்கே பூஜாவோ தன்னுடைய  அக்கா பூர்ணாவின் திருமணத்திற்காகவும், அங்கு யாழிசை கண்ணனும் தன்னுடைய அண்ணன்  நெடுஞ்செழியன் திருமணத்திற்காகவும் தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் திருமணம் முடிந்த பிறகு, அடுத்ததாக தங்களுடைய காதலை இருவர் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொள்ளவே முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இந்த ஏழு வருடத்தில் இருவருக்கும் நிறைய நிறைய சண்டைகள் வந்திருந்தாலும், எல்லா சண்டைகளும் ஆழ்ந்த சமாதானத்தில் தான் முடிந்திருக்கிறது.

எந்த சூழ்நிலையிலும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இவளின் எதிர்காலம் அவன் தான்… அவனின் எதிர்காலம் இவள் தான்…. என்று தான் இன்று  வரை தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு  வாழ்க்கையில் நம்முடைய கணக்கை விட விதியின் கணக்கு தானே முக்கியம்?

பூஜா தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்ததும் போனை எடுத்துப் பார்த்தாள். கிட்டத்தட்ட 27 தவறிய அழைப்புகள் வந்திருந்தது.

வேறு யாரும் இல்லை கண்ணன் தான். பூஜா  கோபமாக இருக்கிறாள் என்று நினைத்தவனோ, அவளை சமாதானப்படுத்த  நிறைய முறை அழைத்துக்கொண்டே இருந்தான்.

அவன் விடாமல் இவ்வளவு முறை அழைத்திருப்பதை பார்த்து அவளின் கோபம் கொஞ்சம் குறையத்தான் செய்தது. அந்த தவறிய அழைப்புகளில்   அவன் தன் மேல் வைத்து இருந்த ஆழமான அன்பை புரிந்து கொண்டாள் அவள்.

இத்தகைய அன்பின் புரிதல் தான் இத்தனை வருடமும் அவர்களை காதல் என்னும் வலையில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *