Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

தன்னிடம் இருந்த உடைகளில் தேடிப்பிடித்து பச்சை வண்ண பட்டு பாவாடை சட்டையில், முனியன் சொன்ன வீட்டு வேலைக்காக மகிழ்ச்சியாக கிளம்பினாள் மாதவி. 

இன்று காலையில் இருந்து மழை காலையில் இருந்து மழை விட்டிருந்தால்  மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார்கள். 

தன் பாவாடை நனையாமல் இருக்க சற்று தூக்கிப் பிடித்துக் கொண்டு தரையை மட்டும் கவனமாக பார்த்து, தண்ணீரில் நனையாமல் தாண்டி தாண்டி,  முனியனின் பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தாள் மாதவி. 

ராணி எப்பொழுதும் மளிகை பொருட்கள் வாங்கும் கடை ஓனர், மாதவி முனியனின் பின்னால் போவதை பார்த்தார். மழை இல்லாததால் கடையில் கொஞ்சம் கூட்டம் இருந்தது. இருந்தாலும் பெண் பிள்ளை தனியே போகிறாளே!  என்று மாதவியை கூப்பிட்டு “மழை நேரத்துல எங்கே போகிறாய்?” என்று கேட்டார். 

“அப்பா தான் கூட்டிட்டு போறாங்க அண்ணா” என்று சொல்லி, முன்னால் சென்று கொண்டிருந்த முனியனை காண்பித்தாள். “சரி. பத்திரமா போயிட்டு வா” என்று சொல்லிவிட்டு தன் வேலையில் கவனமாகிவிட்டார்.

மாதவியின் அப்பா முனியன். குடிகாரன். அவன் பொம்பளை சோக்கு பிடித்தவன் என்று சிலர் சொல்ல கேட்ட வரைக்கும் தான் அவருக்குத் தெரியுமே தவிர, முனியனின் தொழில் பற்றி தெரியாதவர். 

இன்று ஆஸ்பத்திரியில் அதிக கூட்டமாக இருந்ததால், ரவியை டாக்டர் பார்ப்பதற்கே ஒரு மணி நேரம் கிட்ட ஆகிவிட்டது. அதன் பிறகு மருந்து எழுதி கொடுத்து அதையும் வாங்கிக் கொண்டு ரவியையும் கதிரையும் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு, வேலைக்கு சென்று விட்டார் ரவியின் தாத்தா.  அதிக போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் தாமதமாகவே வீட்டிற்கு வந்தார்கள் ரவியும் கதிரும். 

ரவியை அவனது குடிசையில் விட்டுவிட்டு பாட்டியிடம் மருந்து மாத்திரைகளை காண்பித்து கொடுத்துவிட்டு தங்கள் குடிசைக்கு வந்தான் கதிர். கதவு சும்மா சாத்திருப்பதை கண்டு ‘அக்கா எங்க போயிட்டாங்க?’ என்று நினைத்துக் கொண்டே கதவை திறந்தான். 

அவன் கதவைத் திறந்து உள்ளே வரும்பொழுதே அவனின் பின்னாடி வந்தார் ராணி. “நீ எங்கடா வெளியே போயிட்டு வர?” என்று கேட்டுக் கொண்டே, “மாதவி” என்று குரல் கொடுத்தார். 

“ரவிக்கு உடம்பு சரியில்லை அம்மா. அவனை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு இப்பதான் வந்தேன்” என்று குடையை அங்கு ஓரமாக வைத்தான். 

“அப்படியா? ரவிக்கு என்ன ஆச்சு? மாதவி எங்க போயிட்டா?” என்று கேட்டுவிட்டு “மாதவி.. மாதவி” என்று சத்தமாக குரல் கொடுத்தார். 

“அவனுக்கு காய்ச்சல் தான் மா. ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்து இருக்காங்க. நான் இப்போதான் உள்ளே வரேன். அக்கா இங்கு இல்லையே!” என்றான்.

கதிரும் இல்லாமல் மாதவி தனியாக எங்கு சென்று இருப்பாள் என்று சற்று பயந்த ராணி, வேகமாக எதிர் குடிசைக்கு ஓடினாள். அங்கு ரவிக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்த பாட்டியை பார்த்து, “அம்மா மாதவி இங்கே வந்தாரா?” என்றார் பதட்டமாக. 

அவரின் பதட்டத்தில் பயந்த பாட்டி, “என்ன புள்ள சொல்ற? அவ வீட்டில்தானே இருந்தா! நான் கூட இங்கே உட்கார்ந்து படின்னு தான் சொன்னேன். அவதான் நீங்க தூங்குங்க பாட்டி, நான் கதவை பூட்டிக்கிட்டு படிக்கிறேன்னு சொல்லிட்டாளே” என்றார் பதட்டமாகவே. 

இங்கும் இல்லை என்றதும் வேகமாக மகளைத் தேடி ஓடினாள் ராணி. மகள் காணவில்லை என்ற பதட்டத்தில் குண்டும் குழியும் அவள் கண்களுக்கு தெரிய வில்லை. வேகமாக ஓடினாள். எதிரில் தெரிந்தவர்களிடமெல்லாம் “மாதவியை பார்த்தீர்களா? மாதவியை பார்த்தீர்களா?” என்று கேட்டுக் கொண்டே சென்றாள். 

பதட்டமாக ஓடும் ராணியை பார்த்தார் மளிகை கடை அண்ணாச்சி. “என்ன ராணி? ஏன் இப்படி பதறி அடிச்சு ஓடுற? என்ன ஆச்சு?” என்று கேட்டார். 

“என் மகள் என் மகளை காணல அண்ணாச்சி. அதான் அவ சிநேகிதிங்க யார் வீட்டிலையாவது போயிருக்கலாம்னு பார்க்க போறேன்” என்று ஓட பார்த்தார். 

“சரி சரி அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டமா ஆகுற? உன் பொண்ண காலைல உன் புருஷன் தான் கூட்டிக்கிட்டு போனாரு” என்றார். 

ஓடிக்கொண்டிருந்த ராணியின் கால்கள் அப்படியே சிலையாக மாறி நின்று விட்டது. மளிகை கடை அண்ணாச்சியும், ராணியின் பின் ஓடி வந்து கொண்டிருந்த பாட்டியுமே அவள் அதிர்ந்து நின்றதை கண்டு, ஒரு நொடி ஹ்தம்பித்து பின்னர் “ராணி ராணி” என்று அழைத்தார் பாட்டி. 

பாட்டியின் தொடுதலில் சுயம் பெற்ற ராணி, வேகமாக அண்ணாச்சியின் அருகில் வந்து “என்ன சொல்றீங்க அண்ணாச்சி? உண்மையிலேயே என் புருஷன் தான் என் புள்ளையை கூட்டிட்டு போனானா? என்றார் பதட்டமாக. 

அதைக் கேட்கும் பொழுது அவர் கண்களில் கண்ணீர் வடிய, ‘இந்த பெண் என்ன  மகள் தந்தையுடன் போனதற்கு இப்படி அதிர்ச்சி அடைகிறார்’ என்று நினைத்துக் கொண்டே,

“ஆமாம்மா காலையில் போனாங்க” என்றார் யோசனையாக. 

அவ்வளவுதான் “ஐயோ, ஐயோ, ஐயோ..” என்று தன் மார்பில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார் ராணி. அவரது செய்கையில் பாட்டிக்குமே என்ன செய்வது என்று புரிபடாமல் ராணியின் கையை பிடித்து தடுத்து, “இப்பொழுது எதற்கு இப்படி அழுகிற?” என்றார். 

முட்டி வலியின் காரணமாக நிற்க முடியாமல், “சரி வா. முனியன் கூட தானே போயிருக்கா? வந்துருவா! எனக்கு வேற கால் வலிக்குது. செத்த நேரம் உட்காரலாம். அதுக்குள்ள மாதவி வந்துருவா” என்று சொல்லி ராணியை அழைத்துக் கொண்டு குடிசையை நோக்கி நடந்தார். 

ஆனால் ராணியோ ஒப்பாரி வைத்துக் கொண்டே தான் வந்தார். “ஐயோ.. இந்த பாவி மனுஷன் என் பிள்ளையை கூட்டிட்டு எங்க போனான்னு தெரியலையே? என் புள்ளையை என் கண்ணால பாக்குற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது அம்மா” என்று அவளின் தோளில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டே வந்தார்.

மளிகை கடை அண்ணாச்சியும் என்ன ஆச்சோ தெரியவில்லை என்று, அவர்கள் பின்னாடியே வர, ராணியின் அழுகை சத்தத்தில் அவர்கள் தெருவே வெளியே வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. முனியனை பற்றி தெரிந்தவர்களுக்கு மாதவியை நினைத்து உள்ளுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது. 

இருந்தாலும் பெற்ற பிள்ளை அல்லவா? நிச்சயம் அப்படி செய்ய மாட்டான் என்று ஒரு நம்பிக்கையும் இருந்தது. மனிதனுக்கு தானே பெற்ற பிள்ளை பொண்டாட்டி என்ற பாசமெல்லாம் இருக்கும். காம வெறி பிடித்த மிருகத்திற்கு மகள் என்ன மனைவி என்ன. 

குடிசையின் திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார் ராணி. அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தார் பாட்டி. அம்மா அழுவதை கண்டு காரணம் தெரியாமல் கலங்கி நின்றான் கதிர். 

கூடியிருந்த மக்களும் நேரம் கடக்க ஒவ்வொருவரும் ராணிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர். கதிரை அழைத்த மளிகை கடை அண்ணாச்சி “தம்பி, உன் அக்காவை காணும் என்று அம்மா அழுகிறார்கள். நீ எதற்கும் பயப்படாதே. அக்கா வந்ததும் என்னிடம் வந்து சொல்லு, சரியா?” என்று சொல்லிவிட்டு அவரும் வேலையை பார்க்க சென்றார். 

அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறுவதை கேட்டு அவருக்கும் மாதவியை நினைத்து கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அவர் குலதெய்வமான அய்யனாரை நினைத்து, “அய்யனார் அப்பா. அந்த பிள்ளையை பத்திரமா கொண்டு வந்து வீடு சேர்த்துரு” என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டே தன் கடைக்கு சென்று விட்டார். 

முனியனை எங்கே சென்று தேடுவது என்று ராணிக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்பொழுதுதான் அங்கு பயந்தபடி நின்று இருந்த கதிரை பார்த்தார். 

கால் வலியோடு தன் அருகில் உட்கார்ந்து ஆருதல் சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியையும் பார்த்து, “சரி மா நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. நானும் போயி படுக்கிறேன். எப்படியும் இந்த ஆளு மாதவியை கூட்டிட்டு வந்துருவாருன்னு தான் நினைக்கிறேன். எதுவும் தப்பா நடக்காது” என்று சொல்லிவிட்டு “எதுவும் தப்பா நடக்காது இல்லம்மா?” என்று கலங்கியபடி பாட்டியிடம் கேட்டார் ராணி. 

“சீ சீ என்ன புள்ள? நீயே இப்படி பயந்தா எப்படி? பெத்த பிள்ளைய அவன் என்ன செஞ்சுட போறான்? கவலைப்படாம இரு. என்னாலயும் காலை மடக்கி உட்கார முடியல. நான் போயி  செத்த நேரம் படுக்கிறேன்” என்று சொல்லி மெதுவாக எழுந்து அவர் குடிசைக்கு சென்றார். 

பாட்டி சென்றதும் குடிசைகுள் வந்த ராணி மகனை தன்னுடன் அணைத்துக் கொண்டு, “கவலைப்படாதே ராசா. அக்கா வந்துருவா. அக்கா வந்துருவா!” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். 

இப்படியே நேரம் கடக்க சாயங்காலம் ஐந்து மணி அளவில் சந்தோசமாக பாட்டு பாடிக்கொண்டே போதையில் தள்ளாடி கொண்டு குடிசைக்குள் நுழைந்தான் முனியன். 

அவனின் குரல் கேட்டு நிமிர்ந்த ராணி, அவனின் பின்னால் பார்க்க, மாதவியை காணவில்லை. ‘பக்’ என்று அவரது ஈரக்குலை வரை நடுங்கியது. வாரி சுருட்டி எழுந்து தன் முடியை தூக்கி கொண்டை போட்டுக் கொண்டே, “யோ..வ். என் பிள்ளை எங்கையா?” என்று சத்தமாக கேட்டார். 

ராணிக்கு இவ்வளவு சத்தமாக பேச தெரியுமா? என்று, இன்று தான் முனியனுக்குமே தெரிந்தது. ராணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கம்  குடிசையில் உள்ள அனைவருமே ராணியின் குடிசை முன் குவிந்தனர். 

ராணியின் சத்தத்தை கேட்டு ஒரு நொடி திகைத்த முனியன், “ஏய் என்னடி சத்தம் எல்லாம் பலமா இருக்கு?” என்று அவளை மிரட்டும்படி கத்தினான். 

இருவரும் கத்துவதில் பயந்து கதவுடன் ஒன்றி நின்று விட்டான் கதிர். 

“என்னை மிரட்டுவதெல்லாம் இருக்கட்டும். முதல்ல என் பொண்ணு மாதவி எங்கே?” என்றார் கோபமாக. 

“உன் பொண்ணா? அவ உன் பொண்ணு இல்ல! தேவதை! எனக்கு பணத்தை வாரி வழங்கின தேவதை!” என்று குளறி குளறி பேசினான். 

“யோவ்.. என்னய்யா சொல்ற? என் பொண்ணு எங்க? அதை மட்டும் சொல்லு” என்று மீண்டும் அவனைப் பார்த்து கத்தினார். 

“சும்மா பொண்ணு பொண்ணுன்னு கத்திக்கிட்டு இருக்காத” என்று அவன் சட்டைக்குள் இருந்த கட்டு பணத்தை தூக்கி அவளிடம் காண்பித்தான். 

“லட்ச ரூபா.. ஒரு லட்ச ரூபா. என் பொண்ணு மகாலட்சுமி எனக்கு சம்பாரிச்சு கொடுத்தா!” என்று அவள் முன் பணத்தை விசிறி காண்பித்தான். 

தன் மகளை என்ன செய்திருக்கின்றான் என்பதை புரிந்த நொடி, அவளை பத்து மாதம் சுமந்து பெற்ற வயிற்றில் சுல் என்று ஒரு வலி உண்டானது. 

அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு சக்தி வந்தது என்று தெரியவில்லை. 

“ஏய்..” என்று கத்தி  அவன் உயரத்திற்கு எக்கி, அவன் சட்டை காலரை இரு கைகளாலும் பிடித்து, “யோவ், என் புள்ளையை, என் பொண்ண எங்கய்யா கொண்டு போய் விட்ட? நான் பெத்த பொண்ணுய்யா, உனக்கும் பொண்ணு தானே? நம்ம பொண்ணுய்யா அது. எங்கய்யா கொண்டு போன?” என்று பத்திரகாளி போல் கத்தி அவன் காலரைப் பிடித்து அவனை உலுக்கு உலுக்கு என்று உலுக்கி கொண்டிருந்தார். 

‘இவ்வளவு நாள் பிள்ளை பூச்சி மாதிரி கிடந்துட்டு இன்னைக்கு இப்படி எகிறி கிட்டு வராள்’ என்று நினைத்த முனியன் அவளை தன் சட்டையில் இருந்து பிரித்து தள்ளி விட்டான். 

தன் குஞ்சை காப்பாற்ற கழுகிடமே எதிர்த்து போராடும் கோழியை போல, முனியன் தள்ளியதும் கீழே விழுந்த அதே வேகத்தில் எழுந்து, அவனை அடிக்க ஆரம்பித்தார் ராணி.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

12 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *