Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 12

முகப்பு இல்லா பனுவல் – 12

தனக்காக யோசிக்கும் தேவராஜனின் செயலில் மனம் நெகிழ்ந்து போனார் காமாட்சி. தேவராஜனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “எனக்காக நீ ஒவ்வொன்றையும் செய்கிறாய். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஒரு பெரிய குழந்தையாக நீயும், பெண்க குழந்தையாக வாசுகியும் இருக்கும் பொழுது வேறு ஒரு குழந்தை தேவையில்லை” என்றார். 

அவர் கூறியதை கேட்டதும் சிரித்துக் கொண்ட தேவராஜன் “நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தை என்பது அபத்தமாக இருக்கும்” என்று தன்னை காண்பித்தான். “வாசுகி உங்கள் குழந்தையாக இருப்பதில் மகிழ்ச்சிதான். ஆனால் நான் உங்களுடைய ஆசையையும் நிறைவேற்ற வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கு நீங்கள் தடை சொல்லாதீர்கள்” என்று சொல்லிவிட்டு வாசுகியை தூக்கிக்கொண்டு இருவரையும் வேகமாக கிளம்பும்படி கட்டளை இட்டான்.

இந்திரனுக்கு மகன் காமாட்சிக்காக பார்த்து செய்வது மகிழ்ச்சியாக இருந்தாலும், இப்படி அவளின் சம்மதம் கேட்காமல் எல்லாவற்றையும் முடிவெடுப்பதில் கண்டு சற்று வருத்தமாக இருந்தது. 

“ஏன் தேவா இப்படி அவசரப்படுத்துகிறாய்? அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு, அப்புறமா முடிவெடுக்கலாமே?” என்றார்.

“ஓ.. ஒரே நாளில் உங்கள் மனைவியை பேசினால் உங்களுக்கு கோபம் வருகிறதோ?” என்றான் சிரித்துக் கொண்டே. 

“அப்படி இல்லை தேவா. அவளின் விருப்பப்படி கேட்டு செய்யலாம் என்று தான்” என்றார் தயங்கி. 

“சரி சரி. பரவாயில்லை. அப்படி என்றால் ட்ரீட்மென்ட்க்கு இப்பொழுது போக வேண்டாம். ஆனால் அவர்களுக்கு ஒரு குழந்தை கண்டிப்பாக வேண்டும். 

ஒரு.. ஒரு வருடம் கழித்து மருத்துவமனைக்கு செல்வோமா?” என்று தந்தையை பார்த்தான். 

அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்து விட மகனை முறைத்த இந்திரன், “என்ன பேசுற தேவா?” என்று கோவமாக கேட்டார். 

“அப்பா.. வி ஆர் நாட் கிட். அதனால எனக்கு இது ஒன்றும் தவறாக தெரியவில்லை” என்று காமாட்சியை பார்த்து “அம்மா நீங்க என்ன சொல்றீங்க? இப்பொழுது மருத்துவமனைக்கு போகலாமா? வேண்டாமா?” என்று கேள்வியாக அவரைப் பார்த்து நின்றான். 

அவருக்கோ இவர்கள் பேசுவது புரியாமல் திருத்திருவென்று விழித்துக் கொண்டு நின்றார்.  அவன் உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்று சொன்னதிலேயே அவரது மனம் லயித்து நின்றுவிட்டது. ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? என்ற ஒரு சிறு ஆசையும் அவருக்கு தோன்றியது. அதை எப்படி இவர்களிடம் சொல்வது என்று யோசித்தபடி நின்று இருந்தார். 

அவரின் முகத்தைப் பார்த்தே தேவராஜனுக்கு அவரின் குழப்பம் புரிந்தது. தந்தையிடம் “சரி அப்பா. நாம் அம்மாவிடம் பேசுவதை விட ஒரு மருத்துவர் பேசினால் அவர்களுக்கு சுலபமாக புரியும். அதற்காகவாவது இன்று மருத்துவமனை செல்வோமா?” என்று தந்தையிடம் கேட்டான். 

இந்திரனும் காமாட்சியின் முகத்தை பார்த்ததில், அவருக்கு குழந்தையின் மீதுள்ள ஆசை புரிந்தது. ஆனால் மகனின் அவசரத்திற்கு அவரின் மனது இடம் கொடுக்கவில்லை. ஆகையால் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம் என்று குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றார்கள். 

அதன்படி வருடம் ஓட தேவராஜனுக்கு அழகிய தம்பியும் கிடைத்தான். தம்பி தங்கையருடன் அழகிய குடும்பமாக தேவராஜன் இருப்பதற்கு உறுதுணையாக இந்திரனும் காமாட்சியும் தாய் தந்தையராய் வழிநடத்தினர். 

காமாட்சி வந்ததிலிருந்து தேவராஜன் புகை பிடிப்பதை கூட விட்டு விட்டான். வேலையில் நேர்மையாக முன்னேறி இன்று சென்னையின் கமிஷனர் ஆக பதவி வகித்து வருகிறான். 

காலையில் எழுந்து தம்பி துருவுடன் விளையாடிவிட்டு யுகேஜி செல்லும் வாசுகி அழைத்து பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் வந்துவிட்டான். 

என்னதான் சொந்த வேலையாக இருந்தாலும் அவனது கழுகு கண்களுக்கு வழியில் நடக்கும் சிறு செயல் கூட தப்பாது. 

அப்படித்தான் இன்று தங்கையை பள்ளியில் விட்டுவிட்டு, கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது, அரசாங்க பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் அவதிப்பட்ட மக்களை கண்டு தன் வண்டியை நிறுத்தி என்னவென்று விசாரிக்க, பேரூந்து நிற்காமல் சென்றது தெரிந்தது. உடனே போக்குவரத்து அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, அவ்வழியே செல்லும் பேருந்தை வர வைத்துவிட்டு, நிறுத்தாமல் சென்ற ஓட்டுனருக்கு தண்டனை கிடைக்கும் படி சொல்லிவிட்டு, அலுவலகம் வந்து சேர்ந்தான். 

வந்ததும் அடுத்தடுத்த வேலையில் தன்னை புகுத்திக் கொள்ள, சென்னையின் அசிஸ்டன்ட் கமிஷனர் கதிர் தன்னை பார்ப்பதற்கு அனுமதி வேண்டி வெளியே நிற்பது தெரிய, உடனே உள்ளே வருவதற்கு அனுமதி கொடுத்தான். 

உள்ளே வந்த கதிர், சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி விட்டு தேவராஜனின் ஒரு கோப்புவை வைத்தான். அதை பிரித்து படித்த தேவராஜன், “இதனால் எதுவும் மாறிவிடாது. நீ ஏன் வீண் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே அதில் கையெழுத்து இட்டு கொடுத்தான். 

“என்னால் முழுவதும் மாற்ற முடியாவிட்டாலும், யாராவது ஒருவரை மாற்றினாலோ, காப்பாற்றினாலோ அதுவே எனக்கு வெற்றி தானே சார்?” என்றான். 

அவனின் வார்த்தைகளிலேயே அவனின் மனதின் வேதனையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 

“உன்னை பார்ப்பதற்கு சிறுவயதில் என்னை பார்ப்பது போல் உள்ளது. இந்த வயதிலேயே உயர்ந்த பதவிக்கு வந்த உன் திறமையை நான் பாராட்டுகிறேன். என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேள்?” என்று சொல்லி புன்னகைத்து விடை கொடுத்தான்.  

கையெழுத்து வாங்கிய கதிர் தன்னுடைய போலீஸ் வண்டியில் ஏறி, தன் பொறுப்பில் இருக்கும் காவல் நிலையம் நோக்கி பயணித்தான். 

தான் தனிமையாக இருக்கும் பொழுதெல்லாம் தனக்கு அடிக்கடி தோன்றும் தன் அக்காவின் முகம் அவனுள் வந்து சென்றது. ஒரே நாளில் அனாதையாகி நின்ற கதிர், மளிகை கடை அண்ணாச்சியின் உதவியாளும் சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியாளும், அனாதை ஆசிரமத்தில் சேர்ந்து சிரமம் இல்லாமல் படித்தான். அவனுடைய படிப்பின் அடிப்படையிலேயே கல்வி உதவித் தொகையும் கிடைக்க,  காவல்துறையில் சேர வேண்டும் என்ற அவனது கனவும் அவன் அம்மா ராணியின் கனவும்  இன்று நிறைவேறியுள்ளது. 

எதற்கும் வளைந்து கொடுக்காமலும் திமிராகவும் இருப்பதால் அடிக்கடி வேலை மாற்றம் ஏற்பட்டு, இன்று சென்னையின் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆக பதவியேற்று உள்ளான்.

அவன் பதவியேற்ற நாளிலிருந்து, எந்த ஊருக்கு அவன் பணி மாற்றம் செய்யப்பட்டாலும், அந்த ஊரில் உள்ள சிகப்பு விளக்கு பகுதியை சோதனையிட சென்று விடுவான். 

அதில் உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றுவான். காதலித்து ஏமாந்தோ, வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்று சொல்லியோ, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிலோ அல்லது சில நேரங்களில் பெற்ற தகப்பனே கூட இத்தொழிலில் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்.

எண்ணற்ற கனவுகளுடன் இருக்கும் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கவே கும்பல் கும்பலாக செயல்பட்டு வருகிறது. தெரியாமல் அக்கும்பலில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கும் , இத்தொழில் இருந்து விடுபட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் கதிர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தான். 

உண்மையில் அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பான். 

பெற்றோருடன் சேர்த்து வைக்க முடிந்தால் சேர்த்து வைப்பான். அல்லது அவர்களுக்கு தெரிந்த கைத்தொழில் மூலம் வருமானம் ஈட்டும்படி செய்வான். அல்லது அவர்கள் படித்த படிப்புக்குரிய வேலையை வாங்கிக் கொடுப்பான். அத்துடன் நிறுத்தி விடாமல் அவர்களுக்கு மேலும் பாலியல் தொழில் புரியும் கும்பலால் எந்தவிதமான தொந்தரவும் இருக்கா வண்ணம் பாதுகாப்பாகவும் இருப்பான். 

இதனாலேயே இவன் பல பெரிய புள்ளிகளை பகைத்து, அடிக்கடி இடம் மாற்றம் கிடைக்கும். அவன் தொழிலில் உள்ள நேர்மையால் அவனுக்கு பதவி உயர்வும் கிடைத்து, இன்று சென்னையில் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆக இருக்கிறான். 

என்னதான் அவனுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும், எத்தனையோ பெண்களை காப்பாற்றினாலும் தன் அக்காவை காப்பாற்ற முடியவில்லை என்ற கவலை அவனுக்குள் அரித்து கொண்டே இருந்தது. 

முதலில் அவனுக்கு தந்தையால் தான் தாய் இறந்தார் என்று அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, தன்னை மற்றொரு தாயாய் வளர்த்த தன் அக்கா காணாமல் போனது அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. சமூக ஆர்வலரின் தொடர்ந்த அக்கறையில் கொஞ்சம் கொஞ்சம் மனதை தேற்றிக் கொண்டான். வளர வளர அவனது அக்கா எங்கு மாட்டிக் கொண்டுள்ளார் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. 

அன்றிலிருந்து தன் தாய் சொன்னபடி அவன் ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து, தன் அக்காவை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பதை உறுதியாகக் கொண்டு, படித்து முன்னேறி என்று இந்த நிலைக்கு வந்து நிற்கின்றான். 

இதுவரை எத்தனையோ இடங்களில் சோதனை செய்தும் தன் அக்கா கிடைக்காததில் வருத்தத்துடனே தன் காவல் நிலையத்திற்குள் வந்தான். தனக்கு கீழ் வேலை செய்யும் இன்ஸ்பெக்டரிடம் இன்று நாம் ரைட் செய்ய வேண்டும் என்று தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு, தன்னுடன் நான்கு பெண் காவலர்களையும் அழைத்துக் கொண்டு சோதனைக்கு கிளம்பி விட்டான்.

இவன் சோதனை செய்யப்பட்ட இடத்தில் பதினைந்து பெண்கள் சிக்கினார்கள். அவர்களை கைது செய்து கொண்டு காவல் நிலையத்திற்கு வந்துவிட்டான். 

வழக்கமாக இவன் சோதனை செய்ய செல்லும் பொழுது சில இடங்களில் ஏமாற்றமாக தான் இருக்கும். அவன் செல்லும் முன்பே அவன் வரும் செய்தி தெரிந்து அனைவரையும் இடமாற்றம் செய்திருப்பார்கள். 

இம்முறை கையெழுத்து இட்டது தேவராஜன். ஆகையால் அங்கிருந்து செய்தி கசியவில்லை. அனுமதி கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சோதனையும் செய்ததால் பதினைந்து பெண்களை அங்கிருந்து மீட்க முடிந்தது. காவல் நிலையம் வந்து அவர்களிடம் விசாரித்ததில் பத்து பேர் அங்கு விருப்பமில்லாமல் கட்டாயத்தின் பெயரில் இருப்பது தெரிந்தது. 

அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்பவா? என்று கேட்க, எங்களை இனிமேல் வீட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்களே! என்று அவர்கள் வருந்தினார்கள். ஒவ்வொருவரின் படிப்பையும் தகுதியையும் கேட்டு தெரிந்து கொண்ட கதிர், உங்களுக்கு நான் வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் மீண்டும் அங்கு செல்லத் தேவையில்லை அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் சொல்லி, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வைத்துதான். 

மறுநாள் அவர்களை நீதிபதி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் அவர்களை பாதுகாப்பாக சிறையில் வைத்து பூட்டிவிட்டு, இன்ஸ்பெக்டரிடம் “நாளை நான் வந்தே, நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அதுவரை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, இரண்டு பெண் காவலாளிகளையும் வைத்துவிட்டு இரவு வீட்டிற்கு சென்று விட்டான் கதிர்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

10 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 12”

  1. Kalidevi

    Super kathir padichi unga amma kanava niraivethita superb ippadiye thedu unga akka kandipa kedaipanga ena aananganu kandupidi sikram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *