Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 13

முகப்பு இல்லா பனுவல் – 13

மறுநாள் காலையிலேயே கதிரின் காவல் நிலையத்திற்கு, நீதிமன்றம் அழைத்துச் செல்லும் முன்பு லஞ்சம் கொடுத்து பெண்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு அழகிய பெண் வந்தாள்.

“என்ன இன்ஸ்ஸு… பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கீங்க… எப்போதும் போல ஃபைன் வாங்கிட்டு அனுப்பவேண்டியது தானே…” என்றவாறு குளிர் கண்ணாடியை உச்சந்தலையில் தூக்கி வைத்து, பச்சை நிற ஸிஃபான் புடவையில் ஒய்யாரமாக உள்ளே வந்த ஓவியா, நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்த்தலாக அமர்ந்தாள்.

“இல்லை மேடம்…. நேரடியா  ஏசிபி தலையிட்டு இருக்காரு, எஃப் ஐ ஆர் எல்லாம் போட்டாச்சு, ஒன்னும் பண்ண முடியாது….” என்று தலை சொரிந்து கொண்டு நின்றார் இன்ஸ்பெக்டர்.

அதே நேரம் சரியாக வாசலில் ரேபான் கண்ணாடி அணிந்து கம்பீரமாக வந்து நின்றான் கதிர். ஆறடி உயரத்தில் ராணுவ வீரன் போல் விரைப்பாக நின்ற கதிரை பார்த்துக் கொண்டே 

“ஓ….இவரு தான் புது போலீஸா…?” என்று தன் இடக்கையால் தலையில் உள்ள பூவை சுழற்றிக்கொண்டு, வலக்கையால்  புடவை முந்தானையை சுழற்றிக்கொண்டே வந்து அவன் முகத்தில் படுமாறு பூவை தூக்கி பின்னால் போட்டு, அவளின் ஆள்காட்டி விரலின் பின்புறமாக அவன் கன்னத்தை வருடியவாறு… “என்ன மாம்ஸு…” என்று அடுத்த வார்த்தை பேசும் முன் கன்னத்தில் கை வைத்தவாறு தரையில் கிடந்தாள்.  

கன்னம் எரிந்தது, காது சொய்ய்ங்… என சப்தமிட்டது, தலை கின் என வலித்தது. எத்தனையோ அடி உடல் முழுவதும் வாங்கி இருக்கிறாள். ஆனால் இந்த ஒரு அடி அவளின் உடல் தான்டி உள்ளம் வரை அதிர்ந்தது. சிலையாக சைமைந்து அப்படியே அமர்ந்திருந்தாள். 

இன்ஸ்பெக்டரை முறைத்த கதிர், “இதுதான் நீங்க வேலை பார்க்கும் லட்சணமா…? போங்க கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகும் வேலையை பாருங்க… எல்லோரையும்”… 

அந்த எல்லோரையும் என்பது கொஞ்சம் அழுத்தம் கூடியிருந்தது. 

கோர்ட் வந்தது, விசாரனை, தீர்ப்பு எதுவும் அவளின் உணர்வில் இல்லை. ஒரு பொம்மை போல் இழுத்த இழுப்புக்கு சென்று கொண்டிருந்தாள். 

நீதிமன்ற உத்தரவின்படி அவரவர் எங்கு செல்ல வேண்டுமோ அங்கே அனுப்பிவிட்டு அனைத்து வேலையையும் முடித்து வீடு வர சாயங்காலம் ஆகிவிட்டது.  

ஓவியாவையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தான். 

“சரி அண்ணா… நான் நான்கு நாட்கள் லீவு. அதனால் வண்டியை ஸ்டேஷனுக்கு கொண்டு போயிடுங்க…” என்று விட்டு, தன் அருகில் நின்ற பெண்ணை கை பிடித்து அழைத்துக் கொண்டு இரண்டு மாடி குடியிருப்புக்குள் நுழைந்தான். 

இரண்டாம் மாடியில் இரண்டு வீடுகள். இவன் வீட்டின் எதிரே கமிஷனர் வீடு. 

வீட்டிற்குள் நுழையும் பொழுது தேவராஜன் இருவரையும் பார்த்து விட்டான்.

தேவராஜன் தான் கதிருக்கு இந்த வீட்டை  வாங்க உதவி செய்திருந்தான், தனக்கும் ஒரு நேர்மையான அதிகாரி வேண்டும் என்று. இனிமேல் இவனை இட மாற்றம் செய்ய விடக்கூடாது என்று நினைத்து. போலீஸ் கோட்ரஸில் இருந்தால் அவனும் பணி மாற்றத்தை பற்றி கவலைப்பட மாட்டான் என்று நினைத்த தேவராஜன் சொந்தமாக வீடு வாங்க வைத்து விட்டான். 

கைப்பிடித்து இழுத்து வந்தவளை, வீட்டின் உள் தள்ளி, “இனி இதுதான் உன் வீடு” என்று ஒரு அறையை காட்டி “அதனை யூஸ் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பார்க்காமல் மற்றொரு அறைக்குள் நுழைந்தான்.

இவன் ஏன் இங்கு அழைத்து வந்தான்?, எதற்காக என்னை அடித்தான்?, ஏன் நான் எதுவும் எதிர்த்து கேட்காமல், அவன் இழுத்த இழுப்புக்குகெள்ளாம்  செல்கிறேன்?, என்று ஆயிரம் கேள்விகள் அவளின் மண்டைக்குள் ஓட, யோசித்தவாறு எப்படி, எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கினாள் ஓவியா.

மறுநாள் சூரியனின் வெளிச்சம் தன் முகத்தில் படும்பொழுது உறக்கம் தெளிந்து எழுந்தாள். கண் முழித்ததும் புது இடமாக இருக்க பதறி எழுந்து தன்னையே நோக்கினாள்.

இவ்வளவு நாளில் இன்றுதான் முதல் முறையாக ஆடையுடன் கண் முழித்துள்ளாள். நிம்மதியான தூக்கம். அவளையும் அறியாமல் அவள் இதழோரம் புன்னகை தோன்றியது.

சுற்றும் முற்றும் பார்க்க, கதவில் சாய்ந்து கைகளை கட்டியவாறு அவரின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

“என்னை எதற்கு சார் இங்கு கூட்டிட்டு வந்தீங்க?” என்று கேட்க, 

கையில் அவளுக்கு தேவையான உடைகளை கொடுத்து, “குளிச்சிட்டு வந்து சமையல் செய்” என்று அதிகாரமாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான். 

அவளும் தன் வேலைகளை முடித்து வந்து சமைத்து, “சாப்பிட வாங்க சார்” என்று அழைத்து மீண்டும் அதே கேள்வியை கேட்டாள். 

அவன் அமைதியாக சாப்பிட்டுவிட்டு சென்றான். அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவளும் பலவிதமாக கேள்வி கேட்டாள். அதற்கு பதில் அவனிடம் மௌனம் மட்டுமே.

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது. அவளுக்கு பொறுமை பறந்தது. அவனின் எதிரில் வந்து நின்று “தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்க, எனக்கு இங்க இருக்கவே மூச்சு முட்டுது” என்று நின்றாள்.

“சரி கிளம்பு” என்று வீட்டு சாவியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். இவளும் வேறு வழி இல்லாமல் அவன் பின்னே சென்றாள்.

இருவரும் கடற்கரை வந்தனர். கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. அவன் வந்ததில் இருந்து அமைதியாக கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அருகில் வந்து “சார்…” என்று அழைத்தாள்.

அவன், அவள் புறம் திரும்பாமலேயே “உன் பெயர் என்ன?”

“ஓவியா”

“உண்மையில் உன் பெயர் என்ன?”

அவளிடம் வெகு நேரம் அமைதி மட்டுமே.

“உன் பெயர் என்ன?” என்று அழுத்தமாக வந்தது கேள்வி.

“மாதவி”

“உன் அம்மா பெயர்?..”

“ராணி”

“வேறு யாரும் உனக்கு தெரிஞ்சவங்க…?”

“தம்பி கதிர்”

“அவர்களை பார்த்து இருக்கியா…? எங்க இருக்காங்கன்னு தெரியுமா…?”

“தெரியாது சார்”

“பார்க்கணும்னு ஆசைப் படுறியா…?”

வேண்டாம் என்று தலையசைத்தாள். 

அவளிடம் இருந்து பதில் வராததால், அவள் புறம் திரும்பி “என் கேள்விக்கு பதில்…” என்றான்.

வேண்டாம் என்று மீண்டும் தலையை ஆட்டி கூறினாள்.

“ஏன்..?”

“அவங்களை என்னால் பார்க்க முடியாது” என்று அப்படியே அமர்ந்து கடலை வெறித்துப் பார்த்தாள்.

அவள் அருகில் அவனும் அமர்ந்து, 

“ஏன்…?” என்றான் மீண்டும்.

நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது என் அப்பா ஒரு வீட்டில் வேலை செய்ய வேண்டும் என்று கூட்டிட்டு போய் ஒரு வீட்டில் விட்டார். அங்கு எந்த விசேஷமும் நடக்கவில்லை. எனக்கு வேலையும் இல்லை.

ஒரு மணி நேரம் கழித்து, என் அப்பாவை போல ஒருத்தன் வந்து, “இங்கு வேலை இல்லை. வேறு வீட்டில்” என்று சொல்லி அழைத்துச் சென்றான். அப்பாவை கேட்டதற்கு அவர் அங்கே வந்து உன்னை கூட்டிட்டு போவார் என்று சொல்லி விட்டான். 

அது வீடு அல்ல, ஏதோ ஹோட்டல் போல இருந்தது. அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து என்னை நாசம் பண்ணினான். அடுத்த நாள் இளம் வயதில் இரண்டு ஆண்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஒரு வாரம் கழித்து அதே ஆள் வந்து என்னை பார்த்துவிட்டு, “ஏன்டா இப்படி பண்ணி வைத்திருக்கீங்க. செத்து போயிட்டானா எவ்வளவு நஷ்டம்” என்று சொல்லி அவர்கள் வெளியே அனுப்பி விட்டு, மருத்துவரை அழைத்து வந்து என் உடல் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டி, ஊசி போட்டார்.

அதன் பின் ஒரு வேனில் வேறொரு இடம் அழைத்துச் சென்றனர். அங்கு தமிழ் மொழி பேசவில்லை. மொழியும் எனக்கு புரியவில்லை. ஆனால் அது ஒரு மருத்துவமணை. எனக்கு சிகிச்சைக்காக அங்கு சேர்த்து இருந்தார்கள். 

பகலில் மருத்துவம் செய்யும் டாக்டர்கள், இரவில் என்னை கதற கதற கற்பழித்தனர். டாக்டர்கள் மட்டும் அல்ல, அங்கு வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் வரை. நான் கதறி அழுவதை கண்டு அடுத்த அடுத்த நாள் இரவு எனக்கு மயக்க மருந்து கொடுத்து அரை மயக்கத்திலேயே வைத்திருந்தனர்.

அதன் பின்னர் ஒருவன் வந்தான். காவி பல் காட்டி சிரித்துக் கொண்டே என் உடல் முழுவதும் தடவினான். தடுத்த என்னை அடித்து விட்டு, அங்கிருந்த மருத்துவரை அழைத்து, என்ன எல்லோருக்கும் திருப்தியா. நான் இவளை கூட்டிட்டு போறேன் என்றான்.

அவர்களுக்கு ஈ என்று இளித்துக் கொண்டு தலையாட்ட, அங்கிருந்து ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கு மீண்டும் அதே நிலைமை‌. மறுத்தால் அடி.

இப்படியே பல ஊர்கள். பல அடிகள். இங்கிருந்து மீள முடியாது என்று கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு புரிந்தது. 

அதற்குள் நான்கு அபார்ஷன். அதன் பிறகு இது தான் என் வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்டேன். போகப் போக எனக்கு மவுஸ் கூடியது. தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் அவர்களின் இருண்ட பக்கத்தில், என்னை கட்டிலில் சொந்தம் கொண்டாடிட போட்டி போட்டனர். 

இப்படி கேவலமானது தான் என் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் என்னை தள்ளியது என் தந்தை. அவனைப் பார்க்க நான் விரும்பவில்லை.

என் தாயும்  இந்நிலையில் என்னை பார்த்தாள் உயிரையே விட்டு விடுவார்.

என் தம்பி அவன் என்ன நினைப்பான் என்றே தெரியவில்லை…. என்று சோகமானாள்.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. மெதுவாய் திரும்பி அவனை பார்த்தாள்.

அவன் கண்களிலும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

“உன்னை பார்த்தால் உன் தாய் இறந்து விடுவார் என்று கூறினாய். ஆனால் உன்னை காணாமல் ஒரே நாளில் இறந்து விட்டாள், உன் தாய்…” என்றதும்,

“என்ன….?” என்று அதிர்ச்சியடைந்து அவனைப் பார்த்தாள். 

“நான்தான் கதிர். உன் தம்பி” என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கண்களில் நீருடன் பல வித உணர்வுடன் உண்மையா…? என்று தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

அவனும் உண்மை தான் என்பது போல் தலையசைத்து தோளுடன் அவளை அணைத்தான்.

அவளும் லாகுவாக அவன் தோளில் சாய்ந்து அமைதியாய் கண்களை மூடி இருந்தாள். அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் அவன் கைகளில் சட்டையை நனைத்தது.

பாதுகாப்பாய் இருப்பது போல் உணர்ந்தாள். அங்கு கடல் அலை தவிர வேறெந்த ஓசையும் இல்லை.

அந்த அமைதியை கலைத்து, அவனே அன்று நடந்ததை கூறத் தொடங்கினான்.

“அம்மா கடைசியாக என் பொண்ண காப்பாத்துங்க என்று போலீஸ் கைபிடித்து படியே இறந்தார்கள். அது என் நெஞ்சில்  நன்றாக பதிந்தது. 

அன்றிலிருந்து உன்னை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வளர வளரத்தான் அந்த ஆள் உன்னை பணத்திற்காக விற்றதன் அர்த்தம் புரிந்தது. போலீஸ் ஆகினால் மட்டுமே உன்னை காப்பாற்ற முடியும் என்று ஒரே மூச்சாக இத்துறையை தேர்ந்தெடுத்தேன்” என்றான் கதிர்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

8 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 13”

  1. Avatar

    அட கொய்யாலே…! அநியாயமா சொந்த அப்பன்காரனே பணத்துக்காக, தன் மகளோட வாழ்க்கையையே சின்னாபின்னப்படுத்திட்டாரே…!!
    😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *