Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 19

முகப்பு இல்லா பனுவல் – 19

கதிரை பற்றியும் மாதவியைப் பற்றியும் முழுமையாக தன் தாய் தந்தையரிடம் தெரிவித்தான் தேவராஜன். 

“நான் மாதவியை திருமணம் செய்து, அவள் இங்கு வந்த பிறகு என் மனைவியாக மட்டும் தான் நீங்கள் அவளை பார்க்க வேண்டும். அவளது கடந்த காலங்கள் பற்றி எதையும் நீங்கள் அவளுக்கு ஞாபகப்படுத்தக் கூடாது” என்று கூறினான். 

“அதை நீ எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்ற காமாட்சி, “உங்கள் இருவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். என் கடந்த காலத்தை பற்றிய நீங்கள் எதுவும் கேட்கவில்லையே! அப்படி இருக்க நான் ஏன் அந்தப் பிள்ளையின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்க போகிறேன்? அவள் என் மகனின் கைப்பற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும்” என்று கண்ணீர் மல்க கூறினார் காமாட்சி. 

அவரை தோளுடன் அனைத்து கொண்ட தேவராஜன், “சரி அம்மா. நேரமாகிவிட்டது. அவள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டால், கல்யாண வேலையில் மிகவும் பிசியாகி விடுவோம். அப்பொழுது ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அதனால் அதுவரை நன்கு தூங்கி போய் விடுங்கள்” என்று சொல்லி தாய் தந்தையரை உறங்க அனுப்பிவிட்டு அவனும் வந்து படுத்தச் சென்றான்.

அவனை தடுத்த காமாட்சி “சாப்பிட்டுவிட்டு படு” என்றார். 

“இல்லையம்மா, பசிக்கவில்லை. குளித்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேன்” என்றான். 

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ இப்ப சாப்பிடுவியோ? இல்லை அப்புறம் சாப்பிடுவாயோ? நான் காலையில் பார்க்கும்பொழுது சாப்பாடு எல்லாம் காலியாகி இருக்க வேண்டும். இல்லை என்றால் அவ்வளவுதான்” சொல்லிவிட்டு தங்களது அறைக்குள் சென்று விட்டார். 

காமாட்சிக்கு தன் மேல் உள்ள பாசத்தை கண்டு மகிழ்ந்து “சரி அம்மா” என்று சொல்லிக்கொண்டு குளியல் அறைக்குள் சென்று விட்டான். மறுநாள் இனிமையாக விடியல் காலையில் எழுந்து உடற்பயிற்சிகளை முடித்து விட்டு, பால் கவரை எடுத்துக்கொண்டு, கதிரின் வீட்டு கதவை திறந்தான். இரு அறை கதவுகளும் மூடியிருக்க, இன்னும் இருவரும் எழவில்லை போல என்று நினைத்து பால் கவரை மேஜையின் மேல் வைத்துவிட்டு, கதிரை காண அவனது அறைக்குச் சென்றான். 

அப்பொழுதுதான் எழுந்த கதிர் தன் காலை கடன்களை முடித்துவிட்டு தத்தி தத்தி கட்டிலில் வந்து அமர்ந்தான். 

“குட் மார்னிங் கதிர். எழுந்ததும் எனக்கு ஃபோன் செய்து இருக்கலாமே? நான் வந்து உதவி இருப்பேன் அல்லவா?” என்ற வாரே அவனுக்கு முகம் துடைக்க டவல் எடுத்து கொடுத்தான். 

“பரவாயில்லை சார். வலி இப்பொழுது ரொம்ப குறைஞ்சிருக்கு. என்னால் என் வேலையை செய்து கொள்ள முடியும். உங்களுக்கு எதற்கு சிரமம்?” என்று கூறிக்கொண்டு தேவராஜனை பார்க்க ,அவன் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவனை முறைத்து கொண்டு இருந்தான்.

“என்ன சார்? ஏன் என்னை முறைக்கிறீங்க? ஏதாவது தப்பாக சொல்லி விட்டேனா?” என்று தவிப்பாக கேட்டான் கதிர். 

“ஆமாம் நான் நேற்று உன்னிடம் என்ன சொன்னேன்?” 

“நேற்று என்ன சார் சொன்னீங்க?”

அவன் தலையில் லேசாக கொட்டி, “உன்னை சார் என்று சொல்லக்கூடாது என்று சொன்னேன் அல்லவா?”

கதிர் தன் நாக்கை கடித்துக் கொண்டு, “ஐயோ, ஆமா சார்.. இல்லை மாமா” என்று தினறினான். 

“அது..” என்று சொல்லிவிட்டு “என்ன, இன்னும் உன் அக்கா எழுந்திருக்க வில்லையா?” என்று கேட்டுக் கொண்டேன் அவனை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். 

அவர்கள் வெளியே வரும்பொழுது இருவருக்கும் காஃபியை தயாரித்து தயாராக வைத்து காத்திருந்தாள். 

தம்பிக்கு ஒன்றை கொடுத்துவிட்டு, தேவராஜனின் முன் ஒன்றை நீட்டினாள். 

அவள் கையில் இருந்த காஃபியை வாங்கிக் கொண்டே, “என்ன முடிவு எடுத்திருக்கிறாய் மாதவி?” என்றான். 

அவள் தயக்கமாக இருவரையும் பார்த்தாள். 

“நீ என்ன முடிவு எடுத்தாலும், நாங்கள் இருவரும் உன்னை கட்டாயப்படுத்தாமல் அந்த முடிவை ஏற்றுக் கொள்வோம். அதனால் தைரியமாக சொல். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். ஒருவேளை நீ இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், நீ மட்டும் தனி மனுஷியாக இருக்கப் போவது இல்லை. கதிரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டான், நானும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். நம் மூவரும் தனித்தனியாக தான் இருக்க வேண்டும். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு உன் முடிவை சொல்லு” என்றான். 

கதிர் உன் முடிவை சொல்லு என்று சொல்லிவிட்டு, இதுதான் முடிவாக இருக்க வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டுவதை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். 

தேவராஜன் பேசி முடித்ததும் அவனை முறைத்த மாதவி, “உன் முடிவை சொல் என்று சொல்லிவிட்டு, நீங்கள் நினைக்கும் முடிவாக தான் இருக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்கிறீர்கள்” என்றாள். 

“அடடே, நான் மறைமுகமாக சொல்கிறேன் என்றா நீ நினைத்தாய்? நான் நேரடியாகத்தான் சொல்கிறேன்” என்ற படியே சோபாவில் சாய்ந்து அமர்ந்தான். 

அவன் கூறிய தோரணையில் கதிர் சிரித்து விட, இப்பொழுது தம்பியை பார்த்து முறைத்தாள்.

“ஐயோ அக்கா, நான் எதுவும் சொல்லவில்லை. என்னை ஏன் முறைக்கிறாய்?” என்றான். 

“பயந்தபடி நடிச்சது போதும்டா” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு, உங்களுக்கு “என்ன தோணுதோ அதை செய்யுங்க” என்று சமையலறைக்கு சென்று விட்டாள். 

அவள் அப்படிச் சொன்னதும் மாமனும் மச்சானும் கையைத் தட்டி ஹை ஃபை அடித்துக் கொண்டார்கள். 

அப்பொழுது காலை உணவு எடுத்துக்கொண்டு அங்கு வந்த காமாட்சி, “என்ன? ரெண்டு பேர் முகமும் பிரகாசமாக இருக்கு. என் மருமகள் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டாளா?” என்று கேட்டபடியே உணவை மேஜையில் வைத்து விட்டு, சமையல் அறைக்கு சென்றாள். 

அங்கு ஏதோ யோசனையாக நின்றிருந்த மாதவியின் தோளை தொட்டு, “என்னம்மா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு, இங்க வந்து யோசிச்சுகிட்டு இருக்க” என்றார். 

“இல்லை அம்மா இந்த கல்யாணம் அவசியமா? என்று தான் யோசிக்கிறேன். எங்கள் குழுவில் பொதுவாக ஒரு பேச்சு இருக்கும். யாராவது காதலித்து கல்யாணம் செய்து அங்கிருந்து வெளியே போகலாம் என்று நினைக்கும் போது,  விபச்சாரியை கல்யாணம் செய்கிறவன் சீக்கிரம் இறந்து விடுவான், பிறகு விதவையாகத்தான் நீ இருப்பாய். அதற்கு இங்கு நித்திய சுமங்கலியாக இருக்கலாமே? என்று தான் சொல்வார்கள். 

அதை நினைத்து தான் எனக்கு பயமாக இருக்கிறது. என் ராசியால் அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது?” என்றாள். 

அதைச் சொல்லும் பொழுது அவளையும் எறி அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவள் கண்ணீரை துடைத்து விட்ட காமாட்சி, “நீ நினைப்பது போல் எதுவும் நடக்காது. அங்குள்ள பெண்களை பயமுறுத்துவதற்காக அப்படி சொல்லி இருக்கலாம். தேவாவிற்கு இதைப் போல் எல்லாம் நம்பிக்கை எதுவும் கிடையாது. அதனால் நீ கவலைப்படாதே! அதையும் மீறி கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அல்லவா? அவர் பார்த்துக் கொள்வார். என் வாழ்க்கையே எப்படியோ போக வேண்டியது. இப்படி ஒரு நல்ல கணவனையும் நல்ல பிள்ளைகளையும் கொடுத்த கடவுள்,  என் பிள்ளைகளின் வாழ்க்கையை மட்டும் கெடுத்து விடுவாரா என்ன? தேவாவும் நீயும் பல வருஷம் சந்தோஷமாக வாழ்வீர்கள். எதையும் நினைத்து கவலைப்படாமல் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை கொண்டாட காத்திரு! சரியா?” என்று சொல்லிவிட்டு “எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அது போதும். நீ என்னை அம்மா என்று சொல்ல வேண்டாம். அத்தை என்று கூப்பிடு சரியா? சாப்பாடு வைத்திருக்கிறேன். நீயும் தம்பியும் சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார். 

அங்கு கதிருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தேவராஜனிடம், “தேவா இனிமேல் கல்யாணம் முடியும் வரை நீ இங்கு வரக்கூடாது. மாதவியை பார்க்கக்கூடாது சரியா? வா வீட்டிற்கு” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தார். 

ஐயோ அம்மா நான் அவளை பார்க்க எல்லாம் இங்கு வரமாட்டேன். வேலை விஷயமாக கதிரிடம் பேச தான் வருவேன். மற்றபடி ஒன்றும் எனக்கு அவளை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று சமையலறை வாசலை பார்த்துக் கொண்டேன் கூறினான். 

அவன் காதை பிடித்து திருகிய காமாட்சியும், “தெரியும், நீ எதற்கு இங்கு வருவாய், யாரைப் பார்க்க இங்கு வருவாய் என்று? கதிரிடம் பேச வேண்டும் என்றால், ஒழுங்காக ஃபோனிலேயே பேசிக் கொள். நான் சொல்வதை கேட்டால் இந்த வாரமே திருமணத்தை நடத்தி விடுவேன். ஏதாவது ஏடாகூடம் செய்தாய் என்றால்? இன்னும் ஒரு மாதத்திற்கு கல்யாணத்தை தள்ளி வைத்து விடுவேன். புரிகிறதா?” என்றார்.

“ஐயோ அம்மா, நாளைக்கே நீங்க கல்யாணத்தை பண்ணுங்க. நான் அவளை பார்க்க மாட்டேன்” என்று குடுகுடு என்று தனது வீட்டை நோக்கி ஓடி விட்டான். 

அவன் செய்கையைக் கண்டு கதிரும் காமாட்சியும் சிரித்துக்கொண்டார்கள். “சரி தம்பி சாப்பிடுங்க. நான் அவரிடம் கலந்து பேசி திருமணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டு சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். 

அதேபோல் வந்ததும் இந்திரனிடம் நல்ல நாள் பார்க்கச் சொல்ல, எதற்கு தள்ளி போட வேண்டும். வரும் புதன் கிழமையே திருமணத்தை முடித்து விடலாம். தேவா குளித்து வந்ததும் அவனிடம் கேட்கலாம்” என்று இருவரும் முடிவு செய்தனர். 

அதன்படியே வரும் புதன் கிழமை திருமணம் என்று முடிவு செய்து அதற்குரிய ஏற்பாட்டை செய்யும்படி தேவராஜனிடம் தெரிவித்தனர் இந்திரனும் காமாட்சியும். 

இருவரையும் பார்த்து புன்னகைத்து, “ரொம்ப நன்றி அப்பா அம்மா” என்று சொல்லிவிட்டு உடனே வடபழனி முருகன் கோயிலில் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். 

இந்திரன் விசுவிற்கு போன் செய்து தேவராஜன் திருமணத்தை பற்றி சொல்ல, மிகவும் மகிழ்ந்த விசு தன் மனைவியை அழைத்துக்கொண்டு இந்திரனின் வீட்டுக்கு வந்து விட்டான். 

தங்கள் வீட்டிற்கு வந்த விசுவை, “ஏண்டா பிள்ளைத்தாட்சியை போட்டு அழையவைக்கிற” என்று ஆறு மாத மேடிட்ட வயிற்றுடன் இருந்த விசுவின் மனைவியை அமர வைத்து குடிப்பதற்கு ஜூஸ் கொடுத்தார். 

“என் நண்பன் கல்யாணம். அதற்கு நான் குடும்பத்துடன் வந்து விட்டேன். இதில் என்ன இருக்கிறது?” என்று சொல்லி சிரித்த விசு, மாதவியை சென்று மனைவியுடன் பார்த்து வந்தான். 

தன் மனைவி ராதாவை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். சிறிது நேரம் பேசிவிட்டு கல்யாணத்திற்கு டிரஸ் எடுக்கணுமே நாம் போய் எடுக்கலாமா என்று மனைவியை பார்த்தான். 

அப்போது அங்கு வந்த காமாட்சி “இந்த சமயத்தில் ராதாவை அழைத்துக் கொண்டு அலைய வேண்டும்” என்றார். 

ஆனால் ராதாகவோ “பரவாயில்லை அம்மா. எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை” என்று சொல்ல, 

“அப்ப சரி. நான் கதிரை பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் சென்று வாருங்கள்” என்று சொல்ல, 

அவர்கள் மாதவியையும் அழைத்துக் கொண்டு சென்னையின் பிரபல துணிக்கடைக்கு வந்தார்கள். 

அவர்கள் வருவதற்கு  முன்பே அங்கு அவர்களுக்காக காத்திருந்தான் தேவராஜன்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

10 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 19”

  1. CRVS2797

    ஆஹா… பிரச்சினை இல்லாம கதை ஸ்மூத்தா போகுதே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *