Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 21

முகப்பு இல்லா பனுவல் – 21

தன் மார்பில் சாய்ந்து கொண்டு “பெண்களை கடத்தி, இப்படி இத்தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை தடுக்கவே முடியாதாங்க” என்று கவலையாக கேட்டாள் மாதவி,

“எந்த ஒரு குற்றத்தையும் முழுமையாக தடுக்க முடியாது மாதவி” என்றான். 

அவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க, அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து, “தனிமனித ஒழுக்கம் மட்டும் இருந்து விட்டால், உலகில் எந்த ஒரு தவறும் நடக்காது. ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாக ஒழுக்கமாக இருந்தாலே அனைவரும் நிம்மதியாக இருக்கலாம். 

மட்கும் குப்பை, மட்கா குப்பை என்று பிரித்து போட சொல்லி, பாட்டு பாடிக்கொண்டே தான் குப்பை வண்டி வருகிறது. எல்லோரும் ஒழுங்காக பிரித்து போடுகிறார்களா? இல்லையே! ஒரு குப்பை போடுவதில் கூட  ஒழுக்கம் நம் மக்களுக்கு இல்லை. அப்படி இருக்க இத்தொழிலில் மட்டும் நம்மால் எப்படி ஒழிக்க முடியும். ஓரளவு தடுக்க மட்டுமே முடியும்” என்றான். 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் வயிற்றில் இருந்த எட்டு மாத குழந்தை அவன் கையில் உதைக்க குழந்தையின் அசைவில் மெய்மறந்து இருந்தனர் தேவராஜனும் மாதவியும்.

“மாதவி, கண்டிப்பாக நீ போக வேண்டுமா?” என்று கண்ணாடியில் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த மாதவியின் பின்னால் நின்று அவளின் ஒன்பது மாத வயிற்றை தடவியபடியே, அவளின் தோளில் நாடியை வைத்து கேட்டான். 

“ஏங்க? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக இல்லையா? ஏழாம் மாதத்திலேயே கதிர் வளைகாப்பு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் நீங்கள் தான் பிடிவாதமாக அப்பொழுது என்னை அனுப்ப முடியாது என்று ஒன்பது மாதம் வைத்துக் கொள்ளலாம்னு சொன்னீகள்.  ஒன்பதாவது மாதமும் பிறந்து இவ்வளவு நாள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று மருத்துவரும் சொல்லிவிட்டார். இப்படி இருக்கும் போதும், நீங்கள் இப்படி சொன்னால் எப்படிங்க? எல்லோருக்கும் வளைகாப்பு செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறதல்லவா? என்றாள். 

அவனின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, “வளைகாப்பு எல்லாம் நல்லபடியாக பண்ணுவோம் மாது குட்டி. ஆனா நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே என்கூடயே இருக்கணும். சரியா?” என்றான். 

“என்னங்க இது? நான் என்ன பத்தாயிரம் கிலோமீட்டர் தூரமா போகிறேன்? பத்தடி தூரம் இருக்கும் எதிர் வீட்டுக்கு தானுங்க போறேன்? இதில் என்ன இருக்கு? சாஸ்திரம் என்று சொல்கிறார்கள் அல்லவா?” 

அவன் கோபமாக காலை ஓங்கி தரையில் உதைத்து கொண்டு, “பெரிய சாஸ்திரமாம் சாஸ்திரம்” என்று முனங்கி கொண்டு வெளியே வர, அவளின் வளைகாப்பிற்கு வீடு தயாராகி இருந்தது. 

மாதவி வந்ததும் வளைகாப்பு தொடங்கிவிட்டது. ராதா தன் கைக்குழந்தையுடன் வந்திருந்தாள். வளைகாப்பு சிறப்பாக முடிந்து அனைவரும் கிளம்பியதும் மீண்டும் சினுங்க ஆரம்பித்தான் தேவராஜன். 

அவனின் காதை திருகிய காமாட்சி, “அவள் என்ன வேற ஊருக்கா போறா? எதிர் வீட்டில் தானே இருக்க போறா? அப்படியே நீ அங்க போகாத மாதிரி இவ்வளவு ஃபீல் பண்ற” என்றார். 

“சரி, சரி. போதும் வலிக்குது விடுங்க” என்றான் தேவராஜன். 

இந்திரனுக்கு தனது மகனின் செயலைக் கண்டு சிரிப்பாகவும், அதே சமயம் மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. எப்படி இருந்தவன் இப்படி இருக்கிறான் என்று. 

ஒரு வழியாக தேவேராஜனை சமாதானப்படுத்தி கதிர் தன் அக்காவை அழைத்துக் கொண்டு தங்களது வீட்டிற்கு வந்து விட்டான். 

சோபாவில் உட்கார்ந்த மாதவியின் காலின் கீழ் உட்கார்ந்த கதிர், “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அக்கா” என்று அவளின் மடியில் தலை சாய்ந்து கொண்டான். 

அவனின் தலையை இதமாக தடவி விட்டாள் மாதவி. அனைவரின் மனமும் மகிழ்ச்சியில் நிறைவாக இருக்க, அக்காவிற்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு, அவளின் அருகிலேயே ஃபோனை வைத்துவிட்டு, எது என்றாலும் உடனே கூப்பிட அக்கா” என்று கூறி, உறங்கச் சென்றான். 

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று அசௌகரியமாக வயிற்றில் வலி உண்டாக, அவள் எழும்பொழுது அவளின் எதிரில் கதிர் நின்று கொண்டிருந்தான் “அக்கா என்ன செய்கிறது? என்றபடி. 

“நீ என்னடா தூங்கவே இல்லையா?” என்று கேட்க,

“இல்லை, இப்பதான் உன்னை வந்து பார்க்க வந்தேன். உன் முகம் வலியில் சுணங்குவது போல் இருந்தது” என்றான்.

“ஆமாம் லேசாக வலிக்கிறது” என்று எழுந்து உட்கார முயன்றாள். 

உடனே தேவராஜனுக்கு கதிர் ஃபோன் செய்ய, அடுத்த நொடி அங்கு வந்த தேவராஜன் தன் மனைவியை தூக்கிக் கொண்டு வெளியே வர, காமாட்சி அவனிடம் “அவள் நடந்தே வரட்டும். இறக்கி விடு” என்று கூற, தன் தாயை முறைத்தான். 

“இப்பதான் வலி வந்திருக்கு, நீ போய் காரை எடு” என்று சொல்லிவிட்டு கதிரும் காமாட்சியும் கை தாங்கலாக அவளை அழைத்துக்கொண்டு காருக்கு வந்தார்கள். 

இந்திரன் குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்து விட, மற்றவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். வரும்பொழுது ஃபோன் செய்து மருத்துவமனைக்கு சொல்லி இருக்க, இவர்கள் கார் வந்து நிற்கும் பொழுதே ஸ்ட்ரக்சர் எடுத்துக்கொண்டு தாதிகள் தயாராக இருக்க, மாதவியை பரிசோதித்த மருத்துவர் வந்து, மாதவியை பரிசோதித்து, “பிரசவ வலி தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பிறந்து விடும்” என்று கூறி பிரசவ அறைக்கு அவளை அழைத்துச் சென்று விட்டார்கள். 

வெளியில் தவித்துக் கொண்டிருந்த தேவராஜன் கதிரும் காமாட்சியும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

அவனை அதிகம் தவிக்க விடாமல் அவனது மகன் பிறந்து விட்டான். கொஞ்ச நேரத்திலேயே செவிலிய ஒருவர் வந்து, உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது இருக்கிறது என்று சொல்ல, “மாதவி எப்படி இருக்கிறாள்?” என்ற கேள்வி தான் அவன் வாயிலிருந்து முதலில் வந்தது. 

“அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அறைக்கு மாற்றி விடுவார்கள்” என்று சொல்லிவிட்டு சென்றார். 

அவர்கள் சொன்னது போலவே சிறிது நேரத்தில் மாதவியை தனி அறைக்கு மாற்றிவிட, வேகமாக ஓடிச் சென்று தன் மனைவியை லேசாக அணைத்து படி அமர்ந்து கொண்டான். 

அவனின் அணைப்பில் இருந்த நடுக்கத்தைக் கண்ட மாதவி, அவனின் மார்பில் லாவகமாக சாய்ந்து, “உண்மையில் நான் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என்றாள். 

அவன் அவள் என் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து, “ஏன்?” என்றான். 

“உள்ளே சொன்னாங்க. வெளியே நீங்கள் எவ்வளவு தவித்தீர்கள் என்று. குழந்தை பிறந்ததை கூறியதும், என்ன குழந்தை? என்று கூட நீங்கள் கேட்கவில்லையாம், நான் எப்படி இருக்கிறேன்? என்று தான் கேட்டீர்களாம்” என்றாள். 

பதிமூன்று வயது வரை அம்மா வைத்த பெயரான மாதவியுடன் அழகாய் வளம் வந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு ஒரு இடத்தில் கூட நான் அப்பயறை பயன்படுத்த விரும்பவில்லை. ஊர்வூருக்கு ஒரு பெயர் இப்படி முகப்பு இல்லா பனுவலாக இருந்த என்னை, உங்களின் மனைவி என்ற ஒரு அங்கீகாரத்தை கொடுத்து, இன்று தாய் என்ற ஸ்தானத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்கள்” என்று சொல்லி அவனது மார்பில்  இதழ் பதித்தாள்.

அப்பொழுது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த செவிலி இருவரையும் கண்டு வெட்கச் சிரிப்பு சிரிக்க, மெதுவாய் தன் மனைவியை விட்டு விலகிய தேவராஜன், தலையை சொரிந்த இந்த படி நெளிந்து சிரித்தான். அப்பொழுது அங்கு வந்த காமாட்சி மகனின் முகத்தில் தெரிந்த வெட்கச் சிரிப்பை ரசித்துப் பார்த்து திருஷ்டி கழித்தார் . 

அதற்குள் செவிலி பெண் குழந்தைக்கு எப்படி அமுது ஊட்டுவது என்று மாதவிக்கு சொல்லிக் கொடுக்க, தேவராஜனும் கவனமாக கற்றுக் கொண்டான். 

குழந்தையை அணைத்து  பார்த்தவாறு மாதவி இருக்க, அவள் தோளின் கை போட்டு அணைத்தபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் தேவராஜன். 

அழகான குடும்பமாய் அவர்கள் இருக்க, தன் கைபேசியில் இந்த காட்சியை புகைப்படமாக்கி கொண்டான் கதிர்.

சுபம்.

இதே அன்புடன் இவர்கள் எல்லோரும் இணைந்து இருக்க, கடவுள் வேண்டி, வாழ்த்தி விடை பெறுவோம்.

முற்றும்.

அன்புடன்

– அருள்மொழி மணவாளன்.

12 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 21”

  1. CRVS2797

    உண்மையிலேயே.. தேவராஜன் போல் ஒரு மகனை, கணவனை, தமையனை, காவலதிகாரியை, அனைத்தையும் விட ஒரு மிகச் சிறந்த உயர்ந்த மனிதனை காண்பது மிகவும் கடினம் தான்.

  2. Kalidevi

    Intha mari oru ponna ethuka thani manasu venum athu deva ku nirayave iruku intha mari purushan kedaika koduthu vachi iruka madhavi arhu mattum illama oru magan , annan, nalla police nanbana vum irukan.
    Superb ending. Congratulations

  3. Priyarajan

    Ella manithargalum ella neramum nallavangala irukka mudiyathu nu solrathukku deva….. Arumai sis👌👌👌👌😍😍😍😍

  4. Avatar

    Very nice story! After first 2 episodes I was scared to continue thinking it would be very upsetting and painful. But you have handled sensitive issues very nicely. And yes, after our hero’s entry it was all amazing. Kudos to characters like Madhavi and Kathir who inspite of all bad things in their earlier life, raise into amazing people and help others too.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *