Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 4

முகப்பு இல்லா பனுவல் – 4

இவ்வளவு நாள் தான் அடித்த அடியையும், திட்டிய பேச்சுகளையும் வாங்கிக் கொண்டு அடிமை போல் இருந்த மனைவி, தன்னை அடிப்பதில் கோபம் வந்தது முனியனுக்கு.

“ஏய் என்னையே அடிக்கிறியா?” என்று அவளை தள்ளிவிட்டு அடிக்க ஆரம்பித்தான் முனியன். 

அவன் அடிக்க ஆரம்பித்ததும் தடுமாறி கீழே விழுந்து விட்டார் ராணி. கீழே விழுந்த ராணியை மிதி மிதி என்று மிதித்தான். “என்னையையே எதிர்த்து கேள்வி கேட்பியா? பொட்ட நாயி! என் மேலயே கை வைப்பியா?” என்று சொல்லிச் சொல்லி ஒவ்வொரு மிதியாக மிதித்தான். 

“இந்த வாய் தானே என்கிட்ட கேள்வி கேக்குது” என்று சொல்லி வாயிலேயே ஒரு மிதி மிதித்து, அவள் தொண்டையில் அடுத்த நிதியை மிதித்தான். இது எல்லாம் ஒரு நிமிடத்தில் வேகமாக நடந்துவிட, இவர்கள் சண்டை ஆரம்பித்ததுமே கதிர் “அம்மா  அம்மா” என்று அழ ஆரம்பித்தான். 

அவனின் அழுகையை அடக்க வேகமாக வீட்டிற்குள் வந்த பாட்டி, அவனை தன்னுடன் அணைத்துக் கொண்டு, “ஒன்றும் இல்லை கதிர். அழுதே” என்று சொல்லி விட்டு “யாராவது வந்து அந்த பாவி மனுசன புடிச்சிட்டு போங்க” என்று கத்தினார். பாட்டி கத்தியதும் வேகமாக இரண்டு மூன்று ஆண்கள் உள்ளே வந்து அவனை தடுத்து நிறுத்தினர். 

மூன்று ஆண்கள் பிடித்தாலும் துள்ளிக் கொண்டு இருந்த  முனியனை கூரைக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கம்பில் சேர்த்து வைத்து கட்டினார்கள். அவன் மிதித்த மிதியில் குத்துயிரும்  குலை உயிருமாக கிடந்த ராணியை தூக்கி, என்ன? ஏது? என்று பார்க்க அவரோ மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டு “என் பொண்ணு.. என் பொண்ணு” என்று புலம்பி கொண்டு இருந்தார். 

அவர்கள் சண்டையின் சத்தத்தை வைத்தே என்ன நடந்தது என்று புரிந்து கொண்ட குடிசைவாசிகள், விரைவாக ராணியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். மீதி இருந்தவர்கள் எல்லாம் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முனியனை அடித்தார்கள். 

“பெத்த பொண்ணையே கொண்டு போயி வித்துட்டு வருவியா? நீயெல்லாம் மனுசனா? நீ எல்லாம் ஏன் உயிரோட இருக்க?” என்று சொல்லி சொல்லியே ஒவ்வொருவரும் அடிக்க, ரத்த வெள்ளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் முனியன். 

அதற்குள் ஒரு சிலர் “அடிச்சே கொன்னுடாதீங்க. அவனை போலீஸ்ல புடிச்சு கொடுப்போம். அப்ப தான் பொண்ணு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்” என்று தடுத்தனர். 

ராணியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றவர்களுடனே கதிரும் சென்றான். “அம்மா அம்மா” என்று அவன் அலறல் இருந்து கொண்டே இருந்தது. 

மருத்துவரும் சோதித்து விட்டு சிகிச்சை அளிக்க, குரல்வளை நன்றாக நசுங்கி நொறுங்கி இரத்தம் கசிந்து நுரையீரலில் சேருகிறது. சிகிச்சை எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று தெரியவில்லை என்று கையை விரித்தனர். 

அதற்குள் முனியனை பற்றி போலீசில் ஊர்காரர்கள் புகார் அளித்ததால், ராணியையும் விசாரிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அவரிடம் ராணி “என் பொண்ணை காப்பாத்திருங்க. என் பொண்ணை காப்பாத்திருங்க” என்று மட்டுமே சொல்லிக்கொண்டு அப்படியே உயிரையும் விட்டுவிட்டார். 

ராணி இறந்து விட்டார் என்று மருத்துவரும் சொல்லிவிட குடியிருந்த மக்கள் எல்லோரும் கதறி அழுதனர். பாட்டியும் கதிரை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். எதுவும் புரியாத கதிர் அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். 

எல்லோரும் அழுவதை வைத்து அவனுக்கு அம்மா இறந்து விட்டார்கள் என்று புரிந்தது. அப்பா கழுத்தில் மிதித்ததால் தான் அம்மா இறந்து விட்டார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏன் சண்டை வந்தது. அக்கா எங்கே காணும்? அக்காவை தானே அம்மா அப்பாவிடம் கேட்டார்கள்? என்று ஏதேதோ யோசித்துக் கொண்டு அப்படியே பிரம்மை பிடித்தது போல் இருந்தான். 

பத்து வயது சிறுவனால் அதற்கு மேல் யோசிக்க முடியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்தது. 

முனியனை கட்டி வைத்திருந்த இடத்திற்கு வந்த காவலாளிகள் அவனை இழுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார்கள். ஏற்கனவே ஊர் மக்கள் அடித்ததில் உணர்விழந்து இருந்தான் முனியன். எவ்வளவு கேள்வி கேட்டாலும் பதில்  சொல்லும் நிலையில் அவன் இல்லை. 

மறுநாள் பிரேத பரிசோதனை எல்லாம் முடிந்து ராணியின் உடல் சேரி மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாட்டியின் தாத்தாவுமே அனைத்தையும் பொறுப்பெடுத்து ராணியின் இறுதி காரியங்களை செய்ய முன்வந்தனர். 

ராணியை நல்ல குணங்களை பற்றி தெரிந்த அனைவருமே தாத்தா பாட்டிக்கு மட்டும் செலவில்லாமல், அனைவரும் சேர்ந்து ராணியின் இறுதி காரியங்கள் அனைத்தையும் சிறப்பாக முடித்தார்கள். 

ஈம கிரியை முடிந்ததும், கதிரை தங்கள் குடிசையிலேயே வைத்துக் கொண்டார்கள் பாட்டியும் தாத்தாவும். அவர்களுக்குமே இரு பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்ற எண்ணம் ஓடினாலும், ராணியின் நல்ல குணத்திற்கு அவரின் மகனே நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள். 

மளிகை கடை அண்ணாச்சி அவருக்குத் தெரிந்த சமூக ஆர்வலர் மூலம் கதிரை படிக்க வைக்க முயற்சி செய்வதாக தாத்தாவிடம் கூறினார். மேலும் தன்னால் முடிந்த உதவியும் செய்கிறேன் என்று அவருக்கு ஆறுதல் கூறினார். 

முனியனின் கையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணமும் போலீசாரிடம் இருந்தது. அதை வைத்தும், அப்பப்போ முனியன் உளறும் பொழுது சொல்லும் பெயரை வைத்தும், சாராயக்கடை முதலாளியை கண்டுபிடித்து விசாரித்தார்கள் காவல்துறையினர். 

ஆனால் தன்னிடமிருந்த பணத்தை வைத்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார் அந்த சாராயக்கடைக்காரர். 

சென்னையை கரையைக் கடக்க வேண்டிய புயல் ஒரிசாவின் கடந்து விட்டதாக செய்தி வந்தது. ஆனால் கதிரன் வாழ்க்கையில் புயல் அடித்து ஓய்ந்தது போல் அவன் மேல் உயிராய் இருந்த அம்மாவையும் உயிருக்கு உயிராய் இருந்த அக்காவையும் வாரிசுருட்டிக்கொண்டு போய்விட்டது. 

ஒரிசாவில் புயல் கரை கடந்தது என்ற செய்தி டீக்கடையில் உள்ள வானொலியில் ஒலித்துக் கொண்டு இருந்தது. 

நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு டீ குடித்துக் கொண்டிருந்தான் தேவராஜன். 

அரட்டை அடித்துக் கொண்டே எதிர்ப்புறம் பார்க்க ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்த விடுதியில் இருந்து ஒரு பெண்ணும் ஒரு ஆணும் வெளியே வந்தனர் அவர்களை கண்டு அதிர்ந்து நின்றான் தேவராஜன். 

அந்தப் பெண்ணின் உடல் மொழியை வைத்து அவள் எப்படிப்பட்டவள் என்பது இருபத்தியோர் வயது இளைஞனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. 

அந்தப் பெண்ணும் தன்னுடன் வந்த நபருடன் குழந்து பேசிவிட்டு சாலை என்றும் பாராமல் அவரை அணைத்து விட்டு, பறக்கும் முத்தத்தையும் கொடுத்துவிட்டு சென்றாள். 

அவள் சென்றதும் தன் வண்டியை எடுக்க திரும்பியவரின் கண்களில் தன்னை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் தேவராஜன் தெரிந்தான். 

அவருக்குமே அதிர்ச்சி தான். ஆனால் என்ன செய்ய ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. அவனுக்கு புரிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவனைப் பார்த்து வர ஆரம்பித்தார்.

தன்னிடம் பேச வருபவரிடம் பேச விரும்பாத தேவராஜன், வேகமாக தன் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். நண்பர்கள் ஏன் இவன் திடீரென்று இவ்வளவு வேகமாக செல்கிறான் என்று “தேவா.. தேவா” என்று கத்தினார்கள். 

எதையும் கவனிக்காத தேவராஜன் தன் தந்தையின் செயலை நினைத்து உடல் அருவருத்து வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றான். 

மகனின் செயலில் ஒரு நிமிடம் கலங்கி நின்றார் இந்திரன். இந்திரன் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் சராசரி மனிதன். அவர் படித்து முடித்ததும் அரசாங்க உத்தியோகம் கிடைத்ததால் உடனே திருமணமும் செய்து வைத்து விட்டார்கள் திருமணம் முடிந்ததும் தேவராஜனும் பிறந்து விட்டான். 

ஆனால் அவரின் மனைவிக்கு இந்திரனை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று சொல்வதை விட அவர்களது நடுத்தர வர்க்க வாழ்க்கை பிடிக்கவில்லை. பணக்கார வாழ்க்கை வேண்டும் என்று கனவில், அவரது நண்பன் பிசினஸ் மேன் ஒருவனை விரும்பி அவருடன் செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டாள். 

அப்பொழுது தேவராஜனுக்கு பத்து வயது.  அவனால் தன் தாய் தந்தையை விட்டுவிட்டு வேறொருவனுடன் சென்றதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அது அவனுக்கு மட்டுமல்ல இந்திரனுக்கும் பெரிய இடி தான். 

அவரது பெற்றோர்களும் தங்கள் மகன் வாழ்க்கை இப்படி ஆனதில் மனம் உடைந்து நோய் வாய் பட்டு விரைவில் இறந்து விட்டார்கள். தன் பெற்றோர் இறந்த பிறகு தனக்கு தன் மகன் மட்டுமே போதும் என்று  சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து தனது அலுவலகத்தில் கொடுத்த குவாட்ரசில் வந்து தங்கி விட்டார். 

அவருக்கு படிக்கும் பொழுது காவல்துறையில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் முடியவில்லை அதை மகனுடன் பேசும்பொழுது அப்பப்ப கூறுவார். அதை தன் மனதில் நிறுத்திய தேவராஜன் சிறுவயதிலிருந்தே ஐபிஎஸ் ஆபீஸர் ஆக வேண்டும் என்று தன் குறிக்கோளாக கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை சிறுவயதிலிருந்தே எடுத்து வந்தான். 

தன் மகனுக்காகவே தன் வாழ்நாளை செலவு செய்ய ஆரம்பித்தார் இந்திரன். அவன் என்ன கேட்டாலும் அவனுக்காக அதை எப்படியாவது செய்து விடுவார். 

எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் தன் உடல் தேவைக்கு இப்படி ஏதாவது ஒரு பெண்ணிடம் சென்று வந்து விடுவார். அது தவறு என்று அவருக்கு தெரிந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் இப்படி நடந்து விடும்.

இன்று அப்படிதான் நடந்து விட்டது. ஆனால் அதை தன் மகன் பார்த்து விட்டதில் அவருக்கு மேலும் குற்ற உணர்வாக இருந்தது. எப்படியாவது பேசி அவனிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தார். 

தாய் இல்லாவிட்டாலும் தந்தை தனக்காக பார்த்து பார்த்து செய்வதில், கஷ்டம் என்றால் என்ன என்பதையே அறியாமல் வளர்ந்தான் தேவராஜன். 

அவனது ஒரே குறிக்கோள் எப்படியாவது போலீஸ் ஆக வேண்டும். ஐபிஎஸ் எக்ஸாம் எழுத வேண்டும். இது ஒன்றுதான் அவனது எண்ணத்தில் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும். அதற்காக தனது பதின்ம வயதிலிருந்து உடற்பயிற்சி செய்து தன் உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தான். 

கல்லூரிக்கு வந்த பிறகு பிள்ளைகள் சிகரெட் தண்ணி என்று தங்கள் வாழ்க்கையில் கொஞ்சம் முன்னேற்றம் என்று நினைத்து சில தீய பழக்கங்களை பழகிக் கொள்வார்கள். 

அதைப்போலவே அவனது நண்பர்களும் பழகி விட்டார்கள். அவனையும் வற்புறுத்தும் பொழுது, “உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். எனக்கு இது எதுவும் அவசியம் இல்லை” என்று கண்டிப்பாக சொல்லி விடுவான். 

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

8 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 4”

  1. CRVS 2797

    ம்… ரொம்ப நல்லவனா தான் வளர்ந்திருக்கான் தேவா.
    ஆனா, அப்பனால எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியலை போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *