Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 6

முகப்பு இல்லா பனுவல் – 6

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த பெண்மணி தன் அருகில் ஆஜானபாகு போல் நிற்கும் தேவராஜனை கண்டு பயந்து, தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றார். 

அவரின் பயந்த முகத்தை பார்த்த வாறு “யார் நீ? இங்கு ஏன் உட்கார்ந்திருக்கிறாய்? எந்த ஊர்? என்று கேள்விக் கணைகளை தொடுத்தான். 

சாதாரண உடையில் அவன் இருந்தாலும், அவன் கையில் உள்ள லத்தியும், அவன் உடல் அமைப்பும், அங்கு நிற்கும் விதமும், சைரண் வைத்த காரும் அவன் ஒரு போலீஸ் அதிகாரி என்பது அப்பட்டமாக தெரிந்ததில் அப்பெண்மணி கொஞ்சம் பயந்து “சார்” என்று தயங்கினார். 

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்ன சார்? யார் நீ? என்றான் அதிகாரமாக. 

அந்த பெண்மணியோ பயந்து “நான் தான் காமாட்சி” என்றார் நடுங்கியபடி. 

அவரின் பயமும், அவர் தன் பெயரை சொன்ன விதமும், அவனுக்கு சிரிப்பு வந்தது. புன்னகையை தன் உதட்டிற்குள் மறைத்துக் கொண்டே, “காமாட்சி யா! காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாட்சியா?” என்றான். 

அவரோ இல்லை என்று மறுப்பாக தலையை ஆட்டிவிட்டு, “மயிலாப்பூரில் இருந்த காமாட்சி” என்று சொல்லி விட்டு, தன் பெயர் காமாட்சி என்றும் மைலாப்பூரில் ஒரு விலாசம் சொல்லி, அங்கு தான் எவ்வளவு காலம் வசித்து வந்தேன். 

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் செங்கல்பட்டு. என்னை இங்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். 21 வயதிலிருந்து இங்குதான் இருக்கிறேன். என் கணவனுக்கு இரு தங்கைகள். மாமியார் மாமனார் தங்கைகளின் குடும்பம் என்று கிட்டத்தட்ட வீட்டில் எப்பொழுதும் பத்து பதினைந்து பேர் இருப்பார்கள். 

அவ்வளவு பேருக்கும் வீட்டு வேலை எல்லாம் செய்து கொண்டுதான் இருந்தேன். ஒரு வேலைக்காரியாக மட்டும். எனக்கு குழந்தை இல்லை என்று என்னை இன்று வீட்டில் இருந்து விரட்டி விட்டார்கள்” என்றார். அதை சொல்லும் பொழுதே அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது. 

அவர் பேசுவதையும் அவரின் முக பாவத்தையும் வைத்தே அவர் பொய் சொல்லவில்லை என்பதை உணர்ந்து கொண்டான் தேவராஜன். 

“குழந்தை இல்லை என்கின்றீர்கள்!” என்று அவள் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தான். 

என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கி நின்று இருந்தார் காமாட்சி. 

“பிள்ளையை கடத்தும் கும்பலா? உன்னுடைய கும்பலில் மற்றவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்?” என்று மிரட்டினான். 

“ஐயோ சார். இல்லை” என்று பதறியபடி “நான் உண்மையை சொல்லி விடுகிறேன்” என்று தன் கதையை கூற ஆரம்பித்தார்.

“இன்று காலையில், குழந்தையுடன் ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார் என் கணவர். இது என் தன் குழந்தை என்றும், பக்கத்தில் இருந்த பெண்மணியை தன் மனைவி என்றும் அறிமுகப்படுத்திவிட்டு, குழந்தை இல்லாத நீ இனிமேல் இங்கு இருக்க தேவை இல்லை என்று விரட்டி விட்டார். 

நான் எவ்வளவோ அழுது மன்றாடி பார்த்தேன். என் குடும்பத்தைப் பற்றி எனக்கு தெரியும். ஆதலால் எப்படியாவது அவருடன் வாழ்ந்து விடலாம் என்று எவ்வளவோ மன்றாடினேன். ஆனால் அவர் நான் தேவையில்லை என்று பேசினார்.

அதற்கு மேல் அவருடன் வாழ என் தன்மானம் இடம் கொடுக்காததால், என் உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். 

என் வீட்டார் என்னை அங்கிருந்து விரட்டியதும் கோயிலில் சென்று தான் அமர்ந்திருந்தேன். 

அங்கிருந்து எனது தாய் வீட்டிற்கு ஃபோன் செய்ய, அவர்கள் அங்கு வரக்கூடாது எங்கேயாவது ஆற்றிலோ குளத்திலோ விழுந்து செத்துப் போ என்று சொல்லிவிட்டார்கள் என்று விரக்தியாக கூறினார். 

சாகலாம் என்று தான் நினைத்தேன். அங்கிருந்து கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன். கூவம் ஆற்றில் விழுந்து இறந்து விடலாம்  மக்கள் நடமாட்டம் குறையட்டும் என்று பாலத்தின் அருகில் மறைவாக உட்கார்ந்திருந்தேன். 

அழுது அழுது அப்படியே உட்கார்ந்து படியே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது இந்தக் குழந்தை வந்து என் தலையில் கை வைத்து தட்டியது. 

விழித்துப் பார்த்தேன். இந்த பச்சிளம் குழந்தையை தவிர வேறு யாரும் அங்கு இல்லை. குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டால் இவள் பதிலும் சொல்லவில்லை. குழந்தையை தூக்கிக்கொண்டு இரண்டு புறமும் தேடி தேடி பார்த்தேன். 

குழந்தையின் பெற்றோர்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. இவளை அங்கேயே விட்டு விட்டு என்னால் என் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடியவில்லை. பெண் குழந்தை அல்லவா? ஏதாவது தவறான இடத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று யோசனையில், குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்து இவ்வளவு தூரம் வந்து விட்டேன்.

கால்கள் வலித்ததால் உட்கார்ந்தேன். அசதியில் குழந்தை தூங்கியது. இப்பொழுது காவல் நிலையத்திற்கு செல்லவும் பயமாக இருந்தது. அதான் பகலில் போகலாம் என்று இங்கேயே உட்கார்ந்து விட்டேன்” என்றார். 

சிறிது நேரம் யோசித்த தேவராஜன் குழந்தையை தூக்கிக்கொண்டு காரில் ஏறுங்க” என்றான். 

அவரும் மறுப்போதும் சொல்லாமல் காரில் ஏற, நேராகச் சென்று பெண்கள் காப்பகத்தில் வண்டியை நிறுத்தினான். அங்கு நிர்வாகியிடம் இவர்களைப் பற்றி சொல்லி நான் வரும்வரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும், அவர்களை வெளியே எதற்கும் அனுப்ப கூடாது என்று சொல்லிவிட்டு, 

காமாட்சியிடம் நான் வரும்வரை இங்கேயே இருங்கள் என்று கூறிச் சென்றான்.  

மறுநாள் நண்பர்களுடன் சேர்ந்து நண்பனின் கல்யாணத்தை விமர்சனையாக கொண்டாடிக்கொண்டு இருந்தாலும், தன் வேலையில் கவனமாகவே இருந்தான். ஒரு வாரம் கழித்து சொன்னது போலவே காமாட்சியை காண்பதற்காக அங்கு சென்றான். 

குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த காமாட்சிக்கு தேவராஜன் வந்திருப்பது தெரிவிக்கப்பட, குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக அவனை காண வந்தார். வந்ததும் அவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு நின்று கொண்டிருந்தார். 

தனக்கு எதிரில் இருந்த நாற்காலியை காண்பித்து அதில் உட்காரும்படி சைகை செய்தான் தேவராஜன். 

“பரவாயில்லை சார். இருக்கட்டும்” 

“பரவாயில்லை, உட்காருங்க. இப்பொழுது நான் போலீசாக வரவில்லை” என்றான். ஆனால் குரலில் அதே மிடுக்கும் கம்பீரமும் குறையாமல் இருந்தது. 

தயங்கியபடியே அவனின் எதிரில் அமர்ந்தார். குழந்தை பயந்தபடி அவரது கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டு இருந்தது. 

“குழந்தையின் பெயர் என்னவென்று தெரிந்ததா?” என்றான். 

இல்லை என்று மறுப்பாக தலையாட்டிய காமாட்சி “குழந்தை எதுவும் பேச மாட்டேங்கிறாள். ஏதேனும் பிரச்சினையா? என்று மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்” என்று தயங்கியபடி கூறினார். 

“பரிசோதித்து நீங்க என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் எப்படியும் குழந்தையை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு எங்காவது செல்லத்தான போகிறீர்கள். இந்த குழந்தை ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுவோம், கவலைப்படாதீர்கள். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்” என்று குழந்தையை அவரிடம் இருந்து வாங்கினான். 

வாங்கினான் என்று சொல்வதை விட, அவரது கைகளில் இருந்து பிடிங்கினான் என்று தான் சொல்ல வேண்டும். வேகமாக இழுத்ததில் காமாட்சியம்மாவுமே கலங்கிவிட்டார்.

குழந்தையோ வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டது. குழந்தையை சமாதானப்படுத்த வேண்டி குழந்தையை தூக்க முயன்றார் காமாட்சி. 

ஆனால் அவரை தடுத்து “நீங்கள் குழந்தைக்கு ரொம்ப செல்லம் கொடுத்தீர்கள் என்றால், குழந்தை உங்களை ரொம்ப தேட ஆரம்பிக்கும். பின்னர் அனாதை ஆசிரமத்தில் மிகவும் கஷ்டப்படும்” என்றான் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல். 

காமாட்சி அம்மாவிற்கு மனது கடந்து அடித்துக் கொண்டது. “சும்மா சும்மா அனாதை ஆசிரமம் என்று சொல்லாதீர்கள் சார். நான் இருக்கும் வரை இவள் அனாதை இல்லை” என்று அவனது கைகளில் இருந்து குழந்தையை வாங்கி, தன் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து, “சரிடாமா.. சரிடா அழாதீங்க.. அம்மாகிட்ட தான் இருக்கீங்க. அம்மா பாருங்க அம்மா பாருங்க” என்று கொஞ்ச ஆரம்பித்து விட்டார். 

அவரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த தேவராஜன், “சரி நீங்கள் அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்” என்றான். 

“பிறந்ததிலிருந்து என் பெற்றோருக்காக வாழ்ந்தேன். அவர்கள் காண்பித்தவனை கல்யாணம் செய்து, இதுவரை அவனுக்காகவும் அவனது குடும்பத்திற்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருந்தேன். இந்த ஒரு வாரம் இந்த குழந்தையுடன் மட்டுமே என் நேரம் ஓடியது. 

இப்பொழுதுதான் இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு போலியானது என்று உணர்ந்து கொண்டேன். கொஞ்சம் கூட என் மேல் பாசம் இல்லாத ஒரு மனிதனின் மேல் உயிரை கொடுக்கும் அளவுக்கு பாசம் வைத்திருந்ததை எண்ணி வருத்தமாக இருக்கிறது. ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தீர்கள் என்றால், இந்த குழந்தையையும் நன்றாக பார்த்துக் கொண்டு தனியாக வாழ்ந்து விடுவேன்” என்றார்.

“சரி. இந்த குழந்தையுடன் நீங்கள் தனியாக வேலை பார்த்து வாழ்கிறீர்கள். கொஞ்ச நாள் கழித்து உங்கள் கணவர் வந்து அழைத்தால், இந்த குழந்தையை என்ன செய்வீர்கள்?” என்றான். 

“இனிமேல் என் வாழ்க்கை இந்த குழந்தைக்காக மட்டும் தான். என் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும், நான் அவர்களுடன் செல்ல மாட்டேன். நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால் நன்றாக சமையல் செய்வேன். வீட்டு வேலைகளும் செய்வேன். அது தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. 

அதனால் தயவுசெய்து யார் வீட்டிலாவது வேலைக்கு சேர்த்து விடுங்கள். அங்கேயே தங்க வசதி இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் பிரச்சினை இல்லை. வேறு வீடு பார்க்கும் வரை அங்கு தங்க அனுமதித்தால் போதும். எனக்கும் குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பான இடமிருந்தால் போதும் சார். உங்களால் ஏற்பாடு பண்ணி தர முடியுமா?” என்று கவலையாக கேட்டார். 

சிறிது நேரம் யோசித்த தேவராஜன், “ஒரு இடம் இருக்கிறது. ஆனால் அங்கு வேலைக்காரி தேவை இல்லை. வீட்டுக்காரி தான் தேவை. அந்த வேலை பார்க்க முடியுமா?” என்றான் அமைதியாக.

அவன் சொல்லுவது புரியாமல் “சார் என்ன சொல்றீங்க? எனக்கு புரியலை?” என்றார். 

“சரி. புரியும் படியாகவே சொல்றேன்” என்று நாற்காலியில் இருந்து தன் முழு உயரத்திற்கு எழுந்து நின்றான். 

அவன் எழுந்ததும் பதட்டமாக காமாட்சியும் குழந்தையை தூக்கிக் கொண்டு எழ, “நீங்கள் உட்காருங்கள்” என்று அவரின் தோளை பிடித்து உட்கார வைத்தான். 

அவர் குழப்பமாக அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, மெதுவாக “என் அப்பாவை கல்யாணம் செய்து, எனக்கு அம்மாவாக வர முடியுமா?” என்று ஏக்கமாக கேட்டான் தேவராஜன்.

தொடரும்… 

– அருள்மொழி மணவாளன்…

8 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *