Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 7

முகப்பு இல்லா பனுவல் – 7

இவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டது தான் அவரது காதுகளில் ஒலித்துக் கொண்டதே தவிர, “தன் தந்தையை திருமணம் செய்து” என்ற வார்த்தை அவருக்கு காதில் விழவில்லை. 

தேவராஜனது முகத்தையே குழப்பமாக பார்த்துக் கொண்டு இருந்தார் காமாட்சி. 

அவரின் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவரது கைகளை பிடித்துக் கொண்டு, “என் அப்பாவை திருமணம் செய்து கொண்டு, எனக்கு அம்மாவாக வருகிறீர்களா? என் தங்கையாக இவள் வளரட்டும்” என்றான். 

இப்பொழுதுதான் அவருக்கு அவன் சொன்னது முழுவதும் புரிய, “கல்யாணமா?” என்று அதிர்ந்தார். 

“ஆமாம். கல்யாணம்தான்” என்று அவனும் கேலியாக சொல்லிவிட்டு, “என் அப்பாவை கல்யாணம் செய்தீர்கள் என்றால், அதுதான் உங்களுக்கு உண்மையான கல்யாணம். உங்களைப் பற்றி விசாரித்தேன். உங்கள் கணவர் உங்களை திருமணம் செய்யும் முன்னறே, அந்த பெண்ணுடன் தான் வாழ்ந்து இருக்கிறார். 

அவரைப் பற்றி உங்கள் அண்ணன் மனைவிக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது. இருந்தும் உங்களை அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று உங்கள் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து, திருமணம் நடக்க ஏற்பாடு செய்திருக்கிறார்” என்றான் அமைதியாக. 

அதைக் கேட்கும் பொழுது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருக்க, அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கி கண்ணீரை வடித்தது. 

“அது மட்டும் அல்ல, திருமணத்திற்குப் பிறகு கூட அவர் அந்த பெண்ணுடன் தான் வாழ்ந்திருக்கிறார்” என்று அவரை அழுத்தமாக பார்த்தான். “அதாவது உங்களுக்கு தெரியுமா?” என்றான்.

அவரோ கலங்கிய கண்களோடு இல்லை என்று மறுப்பாக தலையாட்டினார். 

தான் திருமணம் செய்து, கணவன் என்று பூஜித்த ஒருவன், தன்னை ஏமாற்றியதை நினைத்து அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். அவரின் அழுகையில் அவர் கையில் இருந்த குழந்தையும் அழுதுவாறே அவரது கண்ணீரை துடைத்து விட்டது.

தான் உயிருக்கு உயிராய் கணவன் என்று காதலித்து பூஜித்தவன் தன்னை மனைவி.. மனைவியாக இல்லை ஒரு மனுசியாக கூட மதிக்காமல், வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதை கேட்டதும் கதறி அழுதார் காமாட்சி. 

அவரின் அழுகையை கண்ட தேவராஜன் அவர்  சிறிது நேரம் அழட்டும் என்று அமைதியாக அவரையே பார்த்திருந்தான். தேம்பித் தேம்பி அழுது ஒரு கட்டத்தில் விசும்பலாக மாறியது அவரது அழுகை. அவர் கையில் இருந்த குழந்தையோ அழுதவாறு தன் தாயின் கண்ணீரை துடைத்து விட்டது. 

தன் கன்னத்தில் வடிந்த கண்ணீரை பிஞ்சு விரல் கொண்டு துடைத்த குழந்தையை இறுக்கமாக அணைத்துக் கொண்டு “என்னை ஏமாற்றியவனுக்காக இனிமேல் என் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வடியாது என் செல்லமே” என்று மகளைப் பார்த்து அழுதவாறே புன்னகைத்தார். குழந்தைக்கு என்ன புரிந்ததோ அதுவும் சிரித்துக்கொண்டு அவரின் தோளில் சாய்ந்து கொண்டது. 

“இப்ப சொல்லுங்க” என்றான் தேவராஜன் . 

“என்ன சொல்லணும் சார்” என்று அவனைப் பார்த்தார் காமாட்சி.

“நான் சிறுவயதாக இருக்கும் பொழுது, என் தாய் என் அப்பாவை விட்டுவிட்டு வேறொருவருடன் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட உங்கள் கணவர் உங்களுக்கு செய்தது போல் அதே துரோகம். அன்றிலிருந்து இன்று வரை என் அப்பா எனக்காக தனியாக வாழ்கிறார். எனக்கும் அவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், என்னால் அவரை தனியாக விட முடியாது.

நான் என் உத்தியோகத்தில் மிகவும் நேர்மையாக இருப்பேன் அதனால் அடிக்கடி எனக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்துக் கொண்டே இருக்கும். நான் போகும் இடமெல்லாம் அவரும் வேலையை மாற்றிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். 

இன்னும் எத்தனை காலம் அவர் இப்படி என்னுடனே பெட்டியை தூக்கிக்கொண்டு இருக்க முடியும் சொல்லுங்க” என்று அவரைப் பார்த்தான். அவர் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, “அதனால் தான் சொல்கிறேன். நீங்கள் கல்யாணம் செய்து கொண்டு என் அம்மாவாக எங்கள் வீட்டிற்கு வந்தீர்கள் என்றால்? என் அப்பாவை நீங்கள் கவனித்துக் கொள்வீர்கள்! நான் பாட்டிற்கு வேலை செய்வேன்” என்றான். 

உடனே மறுத்த காமாட்சி “என்னால் கல்யாணம் எல்லாம் செய்ய முடியாது சார். வேண்டுமென்றால் வீட்டு வேலைக்கு வருகிறேன். ஒரு வேலைக்காரியாக இருந்து உங்கள் இருவருக்கும் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். 

“எங்கள் இருவருக்கும் வேலைக்காரி அவசியம் இல்லை. நான் உங்களை கட்டாயபடுத்தவும் இல்லை. இதுதான் உங்கள் முடிவென்றால், குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு உங்கள் வேலையை பார்க்கச் சொல்லுங்கள்” என்றான் கோபமாக. 

“என்ன சார் சொல்றீங்க? குழந்தையை நான் ஏன் உங்களிடம் கொடுக்க வேண்டும்?” என்றால் அவர் பதட்டமாக. 

“பின்ன.. குழந்தையை வச்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க?” என்றான் அவன் கோபமாக. 

“நான் ஏதாவது வீட்டு வேலை செய்து, குழந்தையை காப்பாற்றுவேன்” என்றார் அவரும் விடாப்பிடியாக. 

“ஆமாம் காப்பாற்றுவீர்கள். உங்களைப் பற்றி இவ்வளவு விசாரித்த நான் இந்த குழந்தையைப் பற்றி விசாரிக்காமல் இருந்திருப்பேனா?” என்றான்.  

“இந்தக் குழந்தை ஒரு விபச்சாரியின் குழந்தை. இந்தக் குழந்தை அவளிடத்தில் இருந்தால் இன்னும் சில வருடத்தில் குழந்தையையும் தன்னைப்போல் ஆக்கி விடுவார்கள் என்று பயந்து, யாருக்கும் தெரியாமல் அன்று குழந்தையை வெளியே அழைத்து வந்து, அங்கு விட்டுவிட்டு சென்று விட்டாள் அந்தப் பெண். யாராவது நல்லவர்கள் கையில் கிடைத்தால், குழந்தை நலமாக வாழும் என்ற நம்பிக்கையில் அவள் அப்படி செய்திருக்கிறாள். நல்லவேளை உங்கள் கையில் கிடைத்தது. கிடைக்காமல் வேறு யார் கையிலாவது கிடைத்திருந்தால்” என்று நிறுத்தினான்.

அதை நினைக்கவே காமாட்சியின் உடல் நடுங்கியது. எத்தனை செய்திகளை அவரும் தான் படிக்கிறார். மூன்று வயது. நான்கு வயது, ஐந்து வயது என்று பச்சிளம் குழந்தைகளை பாவிகள் படுத்தும் பாட்டை. அதேபோல் கொடுமையில் இருந்து தானே அந்த தாயும் இக்குழந்தையை பெற்றிருப்பாள். அதனால் தானே குழந்தையை அங்கிருந்து காப்பாற்ற இப்படி செய்திருப்பாள் என்று நினைக்க அவருக்கு கண்ணீர் வந்தது. 

“நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்கு இனிமேல் பாடுபட வேண்டும். உங்களை ஏமாற்றி குழந்தையை கூட யாராவது திருடி கொண்டு செல்லலாம். வாழ்க்கையை வெறுத்து ஒரு நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரை துறக்கவும் முடிவெடுக்கலாம். அப்படி இருக்கும் பொழுது உங்களிடம் இக்குழந்தை பாதுகாப்பாக இருக்கும் என்று எப்படி நினைக்கின்றீர்கள்? 

அதே சமயம் என் அம்மாவாக நீங்கள் வந்தால் இக்குழந்தைக்கு ஒரு அண்ணன் கிடைப்பான். யோசித்துக் கொள்ளுங்கள்” என்று அவரின் எதிரில் அமைதியாக உட்கார்ந்து விட்டான். 

எவ்வளவு யோசித்தாலும் மறுமணம் என்று என்பது அவளுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது. 

நீண்ட நேரம் அவனும், அந்த பெண்கள் காப்பக நிர்வாகியும் அவரிடம் பேசிப் பேசியே ஒரு வழியாக அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டனர். 

அவர் சம்மதம் சொன்னதும் உடனே தன் நண்பன் விசுவை ஃபோன் செய்து அழைத்தான். அவன் வந்ததும் காமாட்சியை காண்பித்து, நான் என் அப்பாவிற்கு பார்த்திருக்கும் பெண். என் அம்மா” என்று அறிமுகப்படுத்தினான். அவன் அதிர்ச்சியாக அவரையும் அவனையும் மாறி மாறி பார்த்தான். 

“இவன் என் உயிர் தோழன். விசு” என்று அவனை தோளுடன் அணைத்து காமாட்சிக்கு அறிமுகப்படுத்தினான். 

“நாளைக்கு வடபழனி முருகன் கோயிலில் வைத்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். நீ அப்பாவிடம் சொல்லி அவரை  அழைத்துக் கொண்டு அங்கு வந்துவிடு. நான் காமாட்சி அம்மாவுடன் வருகிறேன்” என்றான். 

“டேய் என்னால எல்லாம் அப்பாகிட்ட பேச முடியாது. நீயே பேசிக்கோ” என்றான் அவனின் அப்பாவின் குணத்தை தெரிந்த விசு. 

“சரிடா நீ சும்மா அழைச்சிட்டு வா. நான் அங்கு வைத்து அவரிடம் பேசிக் கொள்கிறேன்” என்றான் 

அதற்குள் காமாட்சி வேண்டாம் சார். அவருக்கும் இதில் உடன்பாடு இருக்காது. இன்னொரு முறை யோசிங்க. கண்டிப்பாக கல்யாணம் செய்து தான் ஆக வேண்டுமா?” என்றார். 

“நீங்கள் சும்மா இருங்கள் அம்மா. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஒன்று என் அப்பாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இங்கிருந்து இப்பொழுதே கிளம்பிவிட வேண்டும். நீங்கள் மட்டும்” என்றான் அழுத்தமாக. 

அவருக்கு அக்குழந்தையை விட்டு செல்ல மனம் இல்லாததால் அமைதியாக இருந்து விட்டார். 

“ஆமாம்.. சும்மா குழந்தை குழந்தை என்று பேசிக் கொண்டிருக்கிறேனே! குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று காமாட்சியை பார்த்தான்

அவர் தயக்கமாக “எனக்கு பெண் குழந்தை பிறந்தால் வாசுகி என்று பெயர் வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது” என்றார்.

“இதற்கு எதற்காக தயங்குகிறீர்கள். இவள் உங்கள் மகள் தான். என் தங்கை உங்கள் விருப்பப்படியே வாசுகி என்று பெயர் வைப்போம்” என்று குழந்தையை தூக்கி உச்சி முகர்ந்து “வாசுகி” என்று அழைத்தான்.

அதில் காமாட்சியும் மகிழ்ந்து, “வாசுகி.. வாசுகி.. வாசகி..” என்று அவளை தூக்கி ஒவ்வொரு முறை பெயர் சொல்லும் பொழுதும், குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார். 

அவரின் செய்கைகளை மகிழ்ச்சியாக பார்த்திருந்த நண்பர்கள் இருவரும். சிறிது நேரம் கழித்து “சரி அம்மா எனக்கு கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு. நான் போய் அந்த வேலையை பார்க்கிறேன். அதுவரை நீங்கள் ஓய்வெடுங்கள்” என்று அவரின் கைகளில் இருந்து வாசுதியை வாங்கினான். 

“குழந்தை..” என்று அவர் தயங்க, “இன்று முழுவதும் என் தங்கை என்னுடனே இருக்கட்டும். அண்ணனும் தங்கையும் சேர்ந்து, அப்பா அம்மா திருமணத்திற்கு வேலை செய்கிறோம்” என்று கூறி குழந்தையை தூக்கிக்கொண்டு நடந்தான். தாயை விட்டு பிரிந்ததும் குழந்தை அழுது கொண்டே காமாட்சியிடம் தாவ பார்த்தது.

குழந்தையின் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்கச் செய்தான் தேவராஜன். “நான் உன் அண்ணன். நம் இருவரும் போய், அப்பா அம்மாக்கு டிரஸ் வாங்கி வருவோமா?” என்று குழந்தையிடம் பேசினான்.

அதுவோ புரியாமல் முழிக்க, காமாட்சியிடம் வந்து “இங்கே பாருங்கள் அம்மா, இன்று முழுவதும் அவள் என்னுடனே இருக்கட்டும். அப்பொழுதுதான் அவள் என்னுடன் பழகுவாள் அல்லவா? இனிமேல் நாம் எல்லோரும் ஒரே வீட்டில் தான் இருக்க வேண்டும். அதற்கு நீங்களும் கொஞ்சம் தயாராகுங்கள்” என்று சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு காப்பகத்தை விட்டு வெளியேறினான் தேவராஜன்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

9 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 7”

  1. Kalidevi

    Super epi oru life pathi therinji avaluku oru nalla life kedaikum avan appa ku oru life partner and amma kedapanga deva kun elar nanmai yosichi panran appa othupangala mrg ku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *