Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 9

முகப்பு இல்லா பனுவல் – 9

தேவராஜனின் தந்தை இந்திரனை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு வர சென்ற விசுவின் நிலைமை தான் கவலைக்கிடமானது. 

“என்னடா முக்கியமான விஷயம், கோயில் வைத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது நீயே இங்கு வந்திருக்கிறாயே. அப்படி என்ன முக்கியமான விஷயம் சொல்!” என்றார். 

“சீக்கிரம் கிளம்புங்க. கோயிலுக்கு வாங்க. அங்கு வைத்து தான் சொல்ல முடியும்” என்று புதிதாக வாங்கி வந்த வேஷ்டி சட்டையையும் கொடுத்தான். 

“டேய், என்கிட்டையே ஏற்கனவே டிரஸ் இருக்கு. புதிதாக வேஷ்டி சட்டை எனக்கு எதற்கு?” என்றார். 

“இன்று ஒரு சின்ன கெட் டு கெதர் மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கிறேன்ப்பா. எல்லோருக்குமே புது ட்ரெஸ் தான் வாங்கி கொடுத்திருக்கிறேன். ப்ளீஸ்ப்பா கேள்வி மேல் கேள்வி கேட்காம சீக்கிரமா கிளம்புறீங்களா? ப்ளீஸ்” என்று பொறுமையுடன் ஆயிரெத்தெட்டு ப்ளீஸ் போட்டு அவரை கிளம்ப வைத்தான். 

‘ஏதோ சரி இல்லையே’ என்று நினைத்துக் கொண்டே அவன் கொடுத்த உடையையும் அணிந்து கொண்டு அவனுடனே கிளம்பி விட்டார் இந்திரன். 

ஒரு வழியாக தேவராஜனின் தந்தை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்த விசு, அங்கு வந்த பிறகுதான் ஆசுவாசமடைந்தான். 

கோவிலின் அவனது மனைவி மற்றும் தேவராஜன், விசுவின் நண்பர்கள் சிலர் கூடி இருக்க, அவர்களின் அருகில் வந்து “தேவா வந்து விட்டானா?” என்று என் மனைவிக்கு மட்டும் கேட்கும்படி கேட்டான். 

இல்லை என்று மறுப்பாக தலையாட்டி விட்டு, “வாங்க அங்கிள்” என்று தேவராஜனின் தந்தையை வரவேற்றாள் விசுவின் மனைவி.

அவளிடம் பேசிக் கொண்டிருந்த இந்திரன், “என்ன விசேஷம்மா. ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று என்னை வரச் சொன்னான் விசு. உனக்கு எதுவும் தெரியுமா?” என்று கேட்டார். 

இதற்கு மேலும் அவரிடம் மறைப்பது தவறு என்ற உணர்ந்தவள் “அங்கிள்” என்று தயங்கினாள்.

“என்ன என்று தயங்காமல் சொல்லுமா. சொன்னால்தானே எனக்குத் தெரியும்!” ஒருவேளை அவளின் தயக்கத்தை கண்டு ஒருவேளை விசுவுக்கும் அவர்கள் அவளுக்கும் எதுவும் சண்டையோ என்று பயந்துவிட்டார். பார்த்தால் அப்படி தெரியவில்லையே. எல்லோரும் மகிழ்ச்சியாக தானே இருக்கிறார்கள் என்று தனக்குள்ளேயே நினைத்து குழம்பினார்.

அவள் எப்படி சொல்லுவது என்று தயங்கிக் கொண்டிருக்கும் பொழுதே தேவராஜன் வருவதை பார்த்து விட்டாள். ஒன்றும் இல்லை அங்கிள். தேவா அண்ணன் தான் உங்களிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னார்” என்று வந்து கொண்டிருக்கும் தேவாவை காண்பித்தாள். 

தேவா பேச வேண்டும் என்று சொன்னதிலேயே மகிழ்ந்து விட்டார் இந்திரன். அதே மகிழ்ச்சியுடன் திரும்பி தேவாவை பார்க்க, அவன் வேஷ்டி சட்டையில் வருவதைக் கண்டு புருவம் சுருக்கினார். 

கையில் ஒரு பெண் குழந்தை இருப்பதை பார்த்ததும், ஒருவேளை அவனுக்கு திருமணம் முடிந்து விட்டதோ? என்று கூட யோசித்தார். அப்படியெல்லாம் இருக்காது. என்னிடம் சொல்லாமல் அவன் திருமணம் செய்ய மாட்டான் என்று, அடுத்த நொடியே தன் மகனின் மேல் நம்பிக்கை தோன்றியது. அதன் பிறகு தான் அவனின் பின்னால் நடந்து வரும் காமாட்சியை கண்டார். யார் இந்த பெண்மணி என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுது அவர்களை நெருங்கி விட்டான் தேவராஜன். 

அருகில் வந்ததும் “என்ன விசு? எல்லாம் ரெடியா? உள்ளே போகலாமா?” என்று நண்பனை பார்த்து கேட்டான். 

அவனும் இந்திரனை பார்த்து பயந்து கொண்டே “எல்லாம் தயாராக இருக்கிறது தேவா. உனக்காகத்தான் வெயிட்டிங்” என்றான். 

இருவரும் பேசுவதிலேயே எதற்காக இங்கு வந்துள்ளோம் என்பதை ஓரளவு புரிந்து கொண்டார் இந்திரன். விசுவை பார்த்து “என்ன யாருக்கும் தெரியாமல் ஏதாவது கல்யாணம் பண்ணி வைக்க போகிறீர்களா?” என்று கேட்டார். ஒருவேளை சாட்சி கையெழுத்துக்கு தன்னை அழைத்து வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு.  

விசுவிடம் கேள்வி கேட்டாலும் பார்வை தன் மகனை அடிக்கடி தொட்டு மீண்டது. 

அவர் கேள்வியை முடித்ததும் என்ன பதில் சொல்வது என்று விசு திணறிக் கொண்டிருக்க, தொண்டையை செருமிய தேவராஜன், “ஆமாம்.. கல்யாணம்தான் நடக்கப்போகிறது. ஆனால் யாருக்கும் தெரியாமல் அல்ல. இப்போதைக்கு உங்களுக்கு மட்டும் தெரியாது அவ்வளவுதான்” என்று கூறி தந்தையின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். 

அவன் தன்னிடம் பேசியதில்லையே மகிழ்ந்து, அதிர்ந்து நின்ற இந்திரனின் வாய் அசைந்து “தேவா” என்றது. வாய் தான் அசைந்ததே அன்றி, வார்த்தை வெளிவர மறுத்தது. 

அவரைப் பார்த்துக் கொண்டே, தன் அருகில் நின்ற காமாட்சியின் கைபிடித்து அவரின் அருகில் அழைத்து வந்து, “நான் ஒன்று உங்களிடம் கேட்பேன் தருவீர்களா?” என்றான்.

இதுவரை தன்னிடம் பேசாமல் இருந்த மகன் இப்போது அப்படி கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டார் இந்திரன். “என்ன வேண்டும்? உனக்காகத்தான் நான் வாழ்கிறேன்! நீ என்ன கேட்டாலும் தருவேன். என்ன வேண்டும் தேவா?” என்று உருக்கமாக கேட்டார். 

உணர்ச்சி வசப்பட்ட அவரின் குரலில் இருந்தே அவரது ஏக்கத்தை புரிந்த தேவராஜனுக்கு இவ்வளவு நாள் தன் தந்தையிடம் பேசாமல், அவரை ஒதுக்கி வைத்ததை நினைத்து வருத்தமாக இருந்தது. 

“நான் உங்களிடம் இவ்வளவு நாள் பேசாமல் இருந்ததற்கு, என்னை மன்னித்து விடுங்கள்” என்று கைகூப்பி தன் தந்தையிடம் மன்னிப்பு கேட்க, 

அவனின் கைகளை பிடித்து ‘வேண்டாம்’ என்று மறுத்து அணைத்துக் கொண்ட இந்திரன், “நீ என்னை மன்னித்தால் போதும் தேவா. நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்?” என்று கண்ணீர் வடிய கூறினார். 

அவர் பேசியது அவனுக்கு அவரே ஒரு வாய்ப்பு கொடுத்தது போல் இருக்க, “நான் உங்களை மன்னிக்க வேண்டும் என்றால், நான் இப்பொழுது சொல்லுவதை நீங்கள் மறுக்காமல் செய்ய வேண்டும்” என்றான் அழுத்தமாக. 

சற்று முன் உருக்கமாக பேசிய மகன் இப்பொழுது அழுத்தமாக இருப்பதில் “என்ன?” என்று புருவம் சுருக்கி கேட்டார். 

தன் அருகில் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த காமாட்சியை காண்பித்து, “இவர்களை மணந்து கொண்டு எனக்கு அம்மாவாக்கங்கள். அப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால் நான் உங்களை இப்பொழுதே மன்னித்து தொடர்ந்து பேசுவேன். இல்லையென்றால் நான் இப்படியே கிளம்பி செல்கிறேன்” என்றான் அழுத்தமாக. 

அவன் காமாட்சியை திருமணம் செய்து கொள்ள கூறியதும் அதிர்ச்சி அடைந்து விட்டார் இந்திரன். “நானா? கல்யாணமா?” என்று அதிர்ந்து “வேண்டாம் தேவா.

எனக்கு எதற்கு இப்போது திருமணம்? இப்பொழுது திருமண வயது உனக்குத்தான். நீ நான் கல்யாணம் பண்ணிக்கணும். எனக்கு ஏன் கல்யாணம்? என்று அதிர்ச்சியில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். 

அவரின் தோளை அழுத்தமாக பற்றிய தேவராஜன், “உங்களுக்கு வேண்டுமென்றால் திருமணம் இப்பொழுது அவசியம் இல்லாமல் இருக்கலாம், மனைவி அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அம்மா கண்டிப்பாக வேண்டும். 

இவர்களை நான் எனது அம்மாவாக முடிவெடுத்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையிலேயே எனக்காகத்தான் எல்லாம் செய்வேன் என்று நீங்கள் நினைத்திருந்தால், இப்பொழுது இவர்களை திருமணம் செய்து எனக்கு அம்மாவாக தாங்க. இல்லை என்றால் என்னை இத்துடன் விட்டு விடுங்கள். நான் பாட்டிற்கு என் வேலையை பார்த்து சென்று விடுகிறேன். இனிமேல் உங்களுடன் நான் இருக்க மாட்டேன். உங்களுடன் பேசவும் மாட்டேன்” என்றான் அழுத்தமாக.  

பேசமாட்டேன் என்று சொல்லும் மகனை கவலையாக பார்த்தார் இந்திரன். 

அவனும் தன் அழுத்தமானபார்வையில் மாற்றம் இல்லாமல் இருக்க, காமாட்சியை சங்கடமாக பார்த்தார். அவரின் பார்வையில் கவலையடைந்த காமாட்சி தேவராஜனிடம், “தம்பி அவரை கட்டாயப்படுத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக யோசிக்கலாம்” என்றார். 

“இனி பொறுமை எல்லாம் இல்லை அம்மா. உங்களை நான் எனது அம்மாவாக முடிவு செய்து விட்டேன். இப்பொழுது இவர் எனக்கு அப்பாவாக இருக்கிறாரா? இல்லையா? என்பதுதான். இவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் நான் உங்களுக்கு வேறொருவரை திருமணம் செய்து வைத்து அவரை அப்பாவாக ஏற்றுக் கொள்வேன்” என்று உறுதியாக கூறி நிமிர்ந்து நின்றவனை இப்பொழுது இருவருமே அதிர்ந்து பார்த்தார்கள்.  

அவர்கள் இருவருக்கும் மட்டுமல்ல அங்கு இருந்த அவனின் நண்பர்கள் அனைவருக்குமே அவனின் கூற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. விசு உணர்ச்சி வசப்பட்டு “டேய்.. என்னடா பேசிக்கிட்டு இருக்க?” என்றான். 

“நான் உண்மையைத்தான் பேசிகிட்டு இருக்கேன். அவருக்கு சம்மதமா என்று மட்டும் கேட்டு சொல், நேரம் ஆகிறது. சம்மதம் என்றால் எல்லோரும் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே வாங்க. இல்லையென்றால் அப்படியே போயிடுங்க” என்று சொல்லிவிட்டு வாசுகியை தூக்கிக் கொண்டு, காமாட்சியின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றான் விட்டான். 

அதிர்ந்து நின்ற இந்திரனின் அருகில் வந்த என்ற விசு “என்னப்பா? இவன் இப்படி பேசிக்கிட்டு போறான்” என்றான் கவலையாக. 

அவரும் வெற்று புன்னகை சிந்தி, “அவன், அவனது பிடிவாதத்திலிருந்து கொஞ்சமும் மாற மாட்டான்” என்று சொல்லிவிட்டு “சரி வா, உள்ளே போகலாம் என்றான்” வெறுமையாக. 

“அப்பா உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால்..?” என்று அவன் தயங்க,

“எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இருக்குதோ இல்லையோ! என் மகனுடன் நான் இருக்க வேண்டும், அவனுடன் மகிழ்ச்சியாக பேசி பழக வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப இருக்கு. அதுக்கு தடையாக இந்த திருமணம் தான் இருக்கிறது என்றால் அதையும் செய்து தடையை தகர்த்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அவனை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றார். 

தேவராஜன் தன் தந்தையிடம் அவ்வாறாக பேசியது காமாட்சிக்கு வருத்தமாக இருந்தாலும், அவர் எப்படியும் திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், வேறு யாரையாவது திருமணம் முடிப்பேன் என்று  தேவராஜன் சொன்னானே? 

அப்போ அந்த திருமணத்தை எப்படி தடை செய்ய முடியும்? இல்லை முதலில் இந்த திருமணம் நிற்கட்டும். வீட்டிற்கு சென்றதும் எப்படியாவது இவனது மனதை மாற்றி அவனது அப்பாவுடன் இருக்கச் செய்ய வேண்டும். அதன்பிறகு மற்றதை பற்றி யோசிப்போம். எது எப்படியோ இன்று திருமணம் நின்று விடும் என்று மகிழ்ச்சியாக இருந்தவரின் சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

தேவராஜனின் நண்பர்களுடன் அங்கு வந்து நின்ற இந்திரனை கண்டதும் குழப்பமாக அவரைப் பார்த்தார். 

நேராக தேவராஜனின் அருகில் வந்த இந்திரன், அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “இவ்வளவு நாள் நீ என்னுடன் பேசாமல் இருந்து விட்டாய்! இனிமேலாவது நான் உன்னுடன் பேசி மகிழ்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

அதற்கு நீ என்ன சொன்னாலும் செய்கிறேன். ஆனால் என்னை விட்டு நீ எங்கும் போக மாட்டேன் என்ற உத்தரவாதத்தை எனக்கு நீ கொடுக்க வேண்டும்” என்றார். 

தந்தை திருமணத்திற்கு சம்மதித்ததில் மகிழ்ந்த தேவராஜன் “கண்டிப்பாக நான் உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் அப்பா” என்றான்.

வெகு ஆண்டுகள் கழித்து தேவராஜனின் “அப்பா” என்ற அழைப்பில் மனம் நெகிழ்ந்து போய் நின்றார் இந்திரன்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

8 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *