ஆலியே- 13
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தருணேஷ் அம்மா இவனுக்கு எதுக்கு அம்மாவா நடிக்கணும்? அய்யோ… இப்படிச் சொல்லிட்டு தூங்கறியே சைதன்யன் இல்லைடா சைத்தான் என்று அகமேந்தி மொட்டு மொட்டு விழித்திருந்தாள்.
அவன் இடைப்பட்ட நேரத்தில் விழிப்பானோ என அடிக்கடி அவனைத் தான் கண்டாள். அவனோ நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான்.
அகமேந்தி மனம் ஒரு வேளை தருணேஷ் விரும்பறது பிடிக்காம அவங்க அம்மாவிடமே இவனுக்கு ஹெல்ப் கேட்டு இருப்பானா? இல்லை அளவுக்கு அதிகமா பணத்தைக் கொடுத்து நடிக்க வைச்சிருப்பானா? தலையனையை மடியில் வைத்து கால் நீட்டி யோசித்தவள் அப்படியே உறங்கினாள்.
அதிகாலை வெளிச்சம் வர எழுந்தவள், உறங்கும் சைதன்யனை கண்டு எழுப்ப மனமின்றிக் குளித்திட எண்ணினாள்.
எப்படியும் இந்தக் கிழவி எழுந்ததும் என்னை எழுந்துக்கலையா குளிக்கலையா வக்கனையா கேள்விக் கேட்கும் முனங்கி கொண்டே கதவை திறக்க சென்றவள் ஒரு கணம் திறக்காமல் யோசித்தாள்.
என்னவோ மிஸ்டேக் பண்ணறோமே… என்று தன்னைக் கண்டாள். நேற்று அலங்கரித்த அதே தோற்றம்.
தலையிலடித்தபடி ஒட்டியானம் கழட்டினாள். ‘இது ரொம்ப முக்கியம்.’ என்றவள் கழட்டி அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்தாள். கை வளையலில் ஒரு பக்கம் மூன்றை கழட்டி மறுபக்கம் ஒன்றை கழட்டி கையில் வைத்து, கழுத்தில் உள்ள ஆரத்தையும் அகற்றினாள்.
“மல்லிப்பூ வாடாம இருந்தா மாமியாருக்கு ஆயுசு கெட்டினு யார் சொன்னா. என் மல்லிப்பூ அப்படியே இருக்கு என் மாமியார் எப்போவோ உலகத்தை விட்டு டிக்கேட் வாங்கியிருக்காங்க. இந்தச் சைத்தான் என்னடானா அம்மானு தருணேஷ் அம்மாவை கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. சீக்கிரம் எழுந்துருக்கானா பாரு. எழுந்தா கேள்வி கேட்பேனு கூடத் தூங்குவான்.” என்று திட்டினாள்.
வெளியே பூவையும் வீசிவிட்டு தன் வீட்டின் பகுதிக்கு செல்ல அவளைத் தடுக்கும் விதமாகக் கல்பனா, “இம்புட்டு நேரமா தூங்குவாங்க. இந்தச் சீலை ரவிக்கை துணி, குளிச்சுட்டு சாமி போட்டோ முன்ன விளக்கெற்று.” என்று கொடுக்கவும் வாங்கிக் கொண்டு பேசாது சென்றாள்.
ஏதேனும் பேச போய்த் தாய்கிழவி கேள்வி கேட்டுவிட்டாள்.
குளித்து முடித்து விளக்கெற்றும் நேரம் தன் தாய் புகைப்படம் இருக்க, அகமேந்திக்கு சைதன்யனின் தாயென ப்ரியங்காவை எதற்கு அழைத்து வந்தானென அறியும் ஆவலே மேலோங்கியது.
கண் மூடி உதடுகள் முனுமுனுக்க என்னவோ வேண்டிக் கொண்டாள்.
அவன் எழுந்துவிட்டானா என்றறிய எட்டிப் பார்த்தாள். அவன் இயற்கையை இரசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவனை நோக்கி நடந்தாள், தங்கள் வீட்டுக்கும் ஓட்டு வீட்டுக்கும் இருக்கும் தூரம் சற்று தான் இன்றோ நீண்டதாகத் தோன்றியது.
அவன் இவளை கண்டு புன்னகைக்க, “தருணேஷ் அம்மா எதுக்கு உனக்கு அம்மாவா நடிக்க வந்தாங்க.” என்றாள்.
“காலையிலே ஆரம்பிச்சிட்டியா… ப்ரஷ் பண்ணணும்.” என்றான் வாயை வலது கையால் மறைத்தவாறு.
கையைக் கட்டிக்கொண்டு நின்றாள். அவனோ ப்ரஷ் செய்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.
அங்கே வைத்திருந்த நீரை எடுத்து அவன் மீது தெளித்து “கொப்பளிச்சிட்டுப் பதில் சொல்லு டா.” என்று கத்தினாள்.
‘என்ன வரவர மரியாதை தேய்ந்துகிட்டே போகுது. இது சரியில்லையே… தன்யன் இவள் வாயால ரெக்ஸ்பெக்ட் வர்ற வைடா.” என்று முகம் அலம்பி கொப்பளித்துத் துடைக்க ஓட்டு வீட்டுக்குள் சென்றான்.
‘இடியட் சொல்றானா பாரு…’ என இவளும் பின்னாடியே சென்றாள். கதவை தாழிட்டு முடிக்க, “ஆக்சுவலி நான் டோரை இப்படி லாக் பண்ணி சேட்டை செய்யணும். பட் நீ செய்யற…” என்றதும் தன்னையே திட்டிக் கொண்டு கதவை திறந்து வைத்தாள்.
“இங்க பாரு தருணேஷ் அம்மா எதுக்குக் கூட்டிட்டு வந்த. வேற என்னவெல்லாம் ப்ராடு தனம் பண்ண?” என்றதும் அவளருகே வந்தான்.
“இங்க பாரு ஏற்கனவே சொல்லிட்டேன். எனக்கு அவனைப் பற்றிப் பேசினா பிடிக்காது. காலையிலே அவன் பேரை சொல்லி கிட்ட வந்த அவ்ளோ தான்.” என்றான்.
“ப்ரியங்காவை எதுக்கு நடிக்கக் கூப்பிட்ட?” என்றாள். கேள்வியை மாற்றிக் கேட்ட மிதப்பில்.
அவனோ தெனாவட்டாக வெளியே கிணற்றுக்கு அருகே சென்று கைகட்டிக்கொண்டு நின்றான்.
அகமேந்திக்குக் கோபம் அதிகமாக அங்கிருந்த நீரை எடுத்து அவன் மேலேயே ஊற்ற செய்தாள். பாதி ஊற்றும் நேரம் தான் கை சுடுவதை உணர்ந்தாள்.
அதற்குள் பாதிக்கு மேல் நீர் சைதன்யன் மேலே ஊற்றியிருந்தாள்.
“ஆ… அகமேந்தி…” என்றவன் சுடுப்பட்டுக் கத்த, “அய்யோ… சாரி சாரி…எப்படிச் சுடுதண்ணீரா மாறிச்சு… தெரியலை…” என்று சாந்தப்படுத்த முயன்றாள்.
“உடம்பெல்லாம் எரியுது அகமேந்தி” என்றான். அகமேந்தி மனமோ கொப்பளம் ஆகிடுமா அய்யோ என்ன செய்ய என்று கிணறு இருக்க அந்த யோசனை உதித்தது.
சைதன்யனை கிணற்றிலே தள்ளி விட்டாள்.
“ஏய்….” என்றவன் கிணற்றில் முழ்கி எழுந்து, “எனக்குக் கிணற்றுல நிச்சலடிக்கத் தெரியாது” என்று மீண்டும் முழ்கினான்.
அய்யோ இதுவேற வம்பா என்று அவளும் கிணற்றில் குதித்து அவனை இழுக்க, அவனோ கைகாலை அசைக்கவும் அவன் தலைமுடியை பிடித்துப் படிக்கட்டு கல்லருகே இழுக்க அவனும் அதைப் பிடித்துக் கொண்டான்.
“அடிப்பாவி…. என்ன நீ… என்னைக் கொலைப்பண்ண பார்க்கற… இதுக்கு நான் பரவாயில்லை ஆள்மாறட்டம் மட்டும் தான்.” என்று படிக்கட்டில் ஏறி அமர்ந்தான்.
“அறிவில்லை…. நெடுமரமா வளர்ந்திருக்க, நீச்சலடிக்கத் தெரியாது” என்று அகமேந்தியும் படிக்கட்டு ஏறி மூச்சு வாங்க கேட்டாள்.
“நீச்சல் தெரியுமே… ஆனா இந்தக் கிணற்றுல எல்லாம் அடிச்சி பழக்கமில்லை. ஒன்லி ஸ்விம்மிங்பூல்ஸ்-ல தான்.” என்று கிணற்றில் இருந்து இருவரும் வெளியெறினர்.
“முதல்ல சுடத்தண்ணீர் பட்டு உடலில் தோல் என்னாச்சுனு பாரு.” என்றதும் அறைக்கு வந்து சட்டை பட்டனை அகற்றினான்.
நல்ல வேளை முழுக்கை சட்டை என்பதால் உடலில் அப்படியே படவில்லை. ஆனாலும் சில இடத்தில் எரிவது போன்ற உணர்வு இருப்பதாகக் கூறினான்.
அவன் சட்டை பட்டனை அகற்றவும் சட்டெனத் திரும்பியவள் தலைகுனிந்து கொண்டு தன் தவறை எண்ணி வருந்தினாள்.
“சாரி… நான் கேட்க கேட்க நீங்க மழுப்பறீங்க என்ற கோபம் அப்படித் தண்ணீரை ஊற்ற பார்த்தேன். ஆனா
எப்படிச் சுட தண்ணீரா மாறிச்சுனு சத்தியமா தெரியாது. நீங்க சூடு தாங்காம கத்தவும் உடனடியா பச்சை தண்ணீரில் தள்ள தான் கிணற்றுல தள்ளினேன்.” என்றாள்.
“நீ கதவை தாழிடும் போதே செல்வராசு சுடுதண்ணீரை வச்சிட்டு போனார். ப்ரியங்காவே கேட்கற… எங்க அம்மாவை கேட்க மாட்டியா?” என்றான்.
“சாரி… அவங்க எப்போ….?” என்று நிறுத்தினாள். இறந்தார்கள் என்று கேட்க இயலாது தடுமாறினாள்.
தன் வால்நெட் திறந்து போட்டோ எடுத்து, “என்னோட அம்மா” என்றான்.
இளம் வயதில் எடுத்த போட்டோ என்பது பார்த்ததும் தெரிந்தது. அந்தக் காலத்து நடிகை சீதா போன்ற தோற்றம் இருந்தது. முகத்தில் சாந்தம் அதிகமாகவே இருந்தது.
“எப்படி என்னை மாதிரி அமைதியா இருக்காங்களா.?” என்றான்.
“நீ… அமைதி… அடப்போடா…” என்று நாக்கை கடித்தாள். அவனோ போடா என்றதுமே இடுப்பில் கை வைத்து முறைக்க ஆரம்பித்து இருந்தான்.
பார்வைகள் எக்கு தப்பாக அவள் மேனியில் படர்ந்தது. இதுவரை அகமேந்தி கருத்தில் பதியவில்லை. சேலை கிணற்றில் குதித்த பின் தன் உடலோடு ஒட்டி இருப்பதை இப்பொழுது தான் அறிந்தாள்.
மறுபுறம் திரும்பி “என்ன பார்க்கற… நீ ஆள்மாறட்டம் பண்ணியதும் உன் மேல இருந்த மரியாதை போயிடுச்சு. அதான் வாயில தானா டா போட்டு வருது.” என்று கூறி, தருணேஷ் அம்மா..” என்று பேசவும் அவனின் கண்கள் அவன் பெயரை உச்சரிக்காதே என்று கட்டையிடுவது போலப் பார்த்தது.
“சரி… சொல்லித் தொலையேன்.” என்று சிடுசிடுத்தாள்.
அதே நேரம் கல்பனா பாட்டி, “சிறுக்கி மகளே… இந்தக் காபி தண்ணீயை கொண்டு போய்க் கொடு” என்று அகமேந்தியை அழைத்ததும் ” உன்னைய வந்து கவனிச்சுக்கறேன்” என்று கால்களைத் தரையில் உதைத்து சென்றாள்.
இன்றோடு முடிவதா இவனின் பந்தம் என்று எண்ணி திரும்பி பார்க்க, சைதன்யன் முகம் வலியில் சுணங்க கண்டாள்.
சே… காலையிலே சுடத்தண்ணீர் மேல ஊற்றி க்ரஷை காயப்படுத்திட்டேன்.
காபியை எடுத்துத் தட்டில் வைக்க, தேஜு வந்து நின்றாள். அவள் வருகையில் காபி சிந்த அதைத் துடைத்தபடி “என்ன?” என்று கேட்டாள் அகமேந்தி.
“மாற்றம்… மனதிலொரு மாற்றம் விழியில் தடுமாற்றம்…” என்று காதல் மன்னன் பாடலை பாடினாள். தன்னைக் கேலி செய்வதை அறிந்து அவளுக்கும் காபியை நீட்டினாள்.
“என்ன பாட்டிலே என்னை ஓட்டறியா? நான் ஒன்றும் மாறலை. தெளிவா தான் இருக்கேன். தருணேஷ் அவன் வாயால என்னைத் திருமணம் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டான். என்னை எனக்காகச் சைதன்யன் திருமணம் பண்ணியிருக்கார். தப்பே என்றாலும் அவர் லெவலுக்கு என்னை இப்படிப் போட்டி போட்டு அடையணும்னு அவசியமேயில்லை. அவர் ரேஞ்சு வேற… எதுக்கு இப்படிச் செய்து இங்க வந்து கஷ்டப்படணும். மேபீ இங்க இருக்கற வரை தான் என்றாலும் அவர் ஏன் கஷ்டப்படணும்.
இதுல தருணேஷ் அம்மா தான் ப்ரியங்கா. இந்தத் தருணேஷு சொந்த அம்மா இருப்பதை மறைத்து ரிச் அநாதைனு பொய் வேற.. அவன் பொய் சொன்னான்… ஓகே. இந்தச் சைதன்யன் ஏன் அவங்க அம்மாவை இங்க கொண்டு வந்தானு தெரியலை.” ஒவ்வொரு துளியாகக் காபியை பருகினாள்.
தேஜு துளியும் அருந்தாமல் அகமேந்தியை விழிவிரித்துக் கண்டாள்.
“என்னடி இது. நான் என்னவோ நீயும் சைதன்யன் சாரும் அங்க கிணற்றுல இருந்து வந்து தொப்பலா நனைந்து ரொமன்ஸ் மோட்ல இருக்கீங்கனு பார்த்தேன். அவர் உன்னைக் கன்வின்ஸ் பண்ணிட்டாருனு நினைத்தேன். இன்னமும் குழப்பம் ஏற்படுத்தற? என்னோடது சின்ன ஹார்ட் டி.” என்று பேசினாள்.
“இன்னமும் காபி கொடுக்காம தான் சுத்திட்டு இருக்கியா. மாப்பிள்ளைக்கு டிபன் எப்ப கொடுப்ப. சிநேகிதி வந்தா கதை பேச உட்கார்ந்துடுவியா?” என்று கல்பனா பாட்டி விரட்ட, தேஜுவோ “சாரி டி. சொல்ல வந்ததை மறந்துட்டேன். நான் மதியம் சாப்பிட்டுட்டு ஊருக்கு கிளம்பறேன். சொல்லிட்டு போக வந்தேன். எதுனாலும் போன் பண்ணு பை டி. நீ அவரைக் கவனி.” என்றதும் அகமேந்தி தலையாட்டி காபியை தட்டில் ஏந்தி ஓட்டு வீட்டைக்குப் போறதுக்குள்ள ஆறிடும் என்று வெளியே வர சைதன்யன் வந்து காபி எடுத்துப் பருகினான்.
நல்லவேளை அங்கவரை போக வேண்டியதில்லலயென எண்ணியவளுக்கு அவனிடம் கேட்க வேண்டிய கேள்வியை எப்படிக் கேட்க என்று யோசித்தாள்.
அவனோ வித்யாதரனோடு பேசி நேரம் கடத்தினான், டிபனையும் உண்டு ராஜ கவனிப்பில் லயித்தான்.
தந்தை வேர்கடலையில் களையெடுக்க ஆட்கள் வர ஒர் எட்டு பார்த்து வர சென்றார்.
கல்பனா பாட்டியும் வீட்டு முற்றத்தில் பாக்கு இடித்துக் கொண்டு கோழிக்குத் தானியம் வீசிக் கொண்டிருந்தார்.
“யாரையாவது அம்மானு சொல்லியிருக்கலாம் நீ ஏன் அவன் அம்மாவை நிறுத்தின?” என்றதும்
“அவங்க எங்க அப்பாவோடு செகண்ட் ஓய்ப். தருணேஷ் அவங்களுக்குப் பிறந்தவன்.” என்றான் வெகுசாதாரணமாக.
அகமேந்தி இப்படி இருக்குமோயெனச் சிந்திக்கச் செய்தாள். ஆனால் கேட்க தயக்கம் இருந்தது.
“அப்பா அம்மா நான் பெங்களுரில் வாழ்ந்தோம். இங்க ஒரு மீட்டிங்காக வந்தார். ப்ரியங்கா அப்பா தங்கிருந்த ஹோட்டல் ரிசப்ஷனில் வேலை பார்த்தவங்க. அடிக்கடி சென்னை வந்து பழக்கம். எனக்கு அடுத்து அம்மாவுக்குக் குழந்தை பிறக்காதுனு சொல்லிட்டாங்க, கருப்பப்பையும் எடுத்துட்டாங்க.
அப்பா எங்களுக்குத் தெரியாம அங்க ப்ரியங்காவை திருமணம் செய்து வாழ்ந்து இருக்கார்.
அப்பா இறக்கறதுக்கு இரண்டு வருடம் முன்ன தான் எனக்குத் தெரியும்.
அப்பாவிடம் கேட்டப்ப எனக்கு இன்னொரு வாரிசு வேண்டும்னு ஆசைப்பட்டதா சொன்னார். நான் தருணேஷே வாரிசா இருக்கட்டும்னு அவரை முழுதா விலகி வந்துட்டேன்.
அதுக்குப் பிறகு இரண்டு வருடம் ப்ரியங்கா கூடவே இருந்தப்ப தருணேஷை நோட் பண்ணியிருப்பார் போல. அவனுக்குத் தான் செகண்ட் ஓய்ப் சன் என்றதில ரொம்ப நொந்துட்டான். ஓவர் தண்ணி, வீட்ல இருக்க மாட்டேனு அவனும் தனியா தங்கிட்டான்.
அப்பா இறந்தப்ப வாரிசா நான் தான் கொள்ளி போட்டேன். அதுல அவனுக்கு ஏககடுப்பு.
வந்தவங்க யாரும் இரண்டாம் மனைவியா பார்க்கலை. அப்பாவும் சொத்து முழுக்க என் கண்காணிப்பில் அவங்களுக்குக் கொடுக்க எழுதி வைச்சிட்டார். அவனுக்கு அப்பா மேலயும் என் மேலயும் செம கோபம்.
எனக்குக் கீழே ஓர்க் பண்ணணும்னு வேற எழுதி இருக்கார் அதுல அவனுக்கு ரொம்வே கோபம்.
அப்பா மேல கோபம் இருக்கலாம். என் மேல தேவையேயில்லாம கோபம் வெறி வளர்த்துக்கிட்டான்.
நியூஇயர் அப்போ அவன் அங்க இருக்கான் கிளம்பறப்ப மனசுல, அவன் இருந்தா என்ன நீயுமிரு’ சண்டித்தனம். அதில் கொஞ்ச நேரத்தில் நான் உன்னை இரசித்துப் பார்க்க ஆரம்பிச்சேன். அதை அவன் ப்ரெண்ட் பார்த்துட்டு அவனிடம் சொல்ல, உன்னை வேண்டுமென்றே ஹக் பண்ணி சீண்டி பார்க்க வந்தான். ஏதாவது சீன் நடக்கும் நான் வருவேனு.
பட் நான் வரலை. அவனிடமிருந்து ஒதுங்க தான் முயன்றேன். நீயே அடிச்சதும் அதைப் பெருசா எடுத்துக்கலை.
ஆனா நீ லிப்ட்ல வந்து என்னோட அறைக்கு வந்துட்டு போகவும், அவன் உன்னை விரும்பப் பிளே பண்ண ஆரம்பிச்சுட்டான்.
தருணேஷ் உன்னை லவ் பண்ணறதா பிளே பண்ணறதா அவன் ப்ரெண்ட்ஸிடம் பேசியதை வசந்த் கேட்டுட்டுச் சொன்னான்.
ஏன்னு அவன் ப்ரெண்ட்ஸ் கேட்டப்ப, நான் உன்னை விரும்பறதாவும், நீ அவனை அடிச்சதுக்கும் சேர்த்து இரண்டு பேரையும் பழிவாங்க நினைத்திருக்கான்.
நான் விரும்பியது எப்படித் தெரிந்ததுனு தெரியலை. எனக்கே உன்னை விரும்பியது என் மனசுக்கு லேட்டா தான் தெரியும். இதுல அவன் எப்படி அதைப் பைண்ட் பண்ணி அவன் முந்திக்கிட்டுது எப்படினு தெரியலை. என்னால நீ அவனிடம் பாதிக்கப்படப் பிடிக்கலை. அதுவுமில்லாம் எனக்கு அவனிடம் உன்னை விட்டு கொடுத்து தோற்கவும் முடியலை.” என்றான்.
-சுவடு பதியும்.
- பிரவீணா தங்கராஜ்.

Aagamothm evla vachu game aadiring da