Skip to content
Home » மௌனமே வேதமா-1

மௌனமே வேதமா-1

அத்தியாயம்-1

    இரண்டு பக்கம் வாழை மரத்தை கட்டி, இளம்பச்சை வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்ட வீட்டில், வண்ண விளக்குகளால் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு இருந்தது.
   வாசலில் காலணி விடும் இடத்தில் செருப்புகள் விரிந்து கிடந்தது.

      அவ்வீட்டிற்கு கையில் பரிசு பொருட்களோடு வந்தவர்கள் ஆத்ரேயன்-பிரணவியை வாழ்த்தினார்கள்.

    ‘புதுமனை புகுவிழா’ என்பதால் இருவரும் புத்தம் புது பட்டுயுடையில் மிளிர்ந்தார்கள்.

    தங்களுக்கு கல்யாணமாகி ஒரு வாரமே கடந்திருக்க, கையோடு இரு வீட்டு பெற்றவர்களும் தங்கள் பிள்ளைகள் நலனுக்காக திருமண செலவை குறைத்து, அதற்குண்டான பணத்தை வீடு வாங்கிக்கொள்ள சில லட்சங்களை கொடுத்தார்கள். மேலும் ஆத்ரேயனின் சேமிப்பில் வைத்திருந்த பணத்தாலும் வீட்டை வாங்கியிருந்தார்கள்.

   தனி வீடாக அமையவும் அதுவும் தங்கள் வசதிக்கு ஏற்ற விலையில் வரவும் ஆத்ரேயனை பெற்றவர்களுக்கு மிகவும் திருப்தியானது.
   வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள். இங்கு இரண்டும் மனதிற்கு நிறைவாய் நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி பன்மடங்கானது.

  கீழே ஹால், மாடிலர் கிச்சன், இரண்டு படுக்கையறைகளுக்குள் அட்டாச் பாத்ரூம் வசதி கொண்டது என்பதால் கண்ணை மூடி வாங்கி விட்டார்கள். என்ன ஒரே குறை ஆத்ரேயன் வேலை பார்க்கும் கல்லூரியிலிருந்து சற்று தூரம்.

  ஆத்ரேயன் ‘சாரதா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி’யில் பேராசிரியராக பணிப்புரிகின்றான்.
  
   எப்படியும் இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றிட வசதியென்பதால், ஒன்றரை மணி நேர பயணத்தை, அவன் தூரமாகவோ கருதவில்லை.

  பரிசு பொருட்களை ஒரு அறையின் அலமாரியில் வைத்தவன், பணமாக வந்ததை சட்டையில் வைத்திருந்தான்.

   அவனுக்கு இந்த மொய் கணக்கு எல்லாம் பிடிக்காது. அதற்காக தான் திருமண பத்திரிக்கையில் கூட ‘பணமும் பரிசும் தவிர்கக்கவும்’ என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தான்.

   ஓரளவு சொந்தம் பந்தம் என்று காலையிலிருந்து மதியம் வரை வந்து சென்றவர்களை தவிர்த்து, ஆத்ரேயனை பெற்றவர்கள் காஞ்சனா-பாலமுருகன், பிரணவியின் தாய் தந்தையர் அமலா-ஜெகநாதன் மற்றும் பிரணவியின் பாட்டி பவானி ஹாலில் சோபா இருந்தும் தரையில் பாயில் வீற்றிருந்தார்.

  நெருங்கிய உறவினர்களாக ஆத்ரேயனின் அக்கா சங்கவி மாமா வினய் இருந்தார்கள்.

தூரத்து சொந்தம் ஒருவர் மொய் கவரை நீட்ட, ஆத்ரேயன் மறுத்து பார்த்தும் வலுக்கட்டாயமாக மேற்சட்டை பையில் வைத்துவிட்டார்.

   மொய் கவரை கொடுத்த வரை “நீங்க போய் சாப்பிடுங்க” என்று மாடிக்கு அனுப்பி வைத்த கையோடு, அன்னையை தேடி வந்தான்.

“அம்மா அம்மா… ஏன்மா… வீடு பால்காய்ச்சியதுக்கு பணத்தை கொடுக்கறாங்க. கல்யாணத்துக்கு அடிச்ச பத்திரிக்கையில புதுமனை புகுவிழாவுக்கு வர்ற ‘உறவும் நட்பும் பணமும் பரிசும் தவிர்த்திடுங்க’ன்னு கொட்டை எழுத்துல போட்டது தானே. அப்பவும் பாருங்க” என்று கோபமாய் மொய்கவரை நீட்டினான்.‌
   ‌
   “நாம கல்யாண பத்திரிக்கை அடிச்சப்பவே புதுமனை புகுவிழா தேதியும் அதுல போட்டு சொன்னது தான். ஆனாலும் சில சொந்தக்காரங்க எங்க கேட்கறாங்க? நாம மறுத்தா கோவிச்சுக்கறாங்க ஆத்ரேயா” என்று கூறவும் ஆத்ரேயன் தலையை உலுக்கி ”பிடிங்க” என்று மொய் கவரை கொடுத்தான்.

  “இதுநாள் வரை என்னிடம் கொடுக்கறது சரி. இனி உனக்குன்னு வந்தவளிடம் தரணும் ஆத்ரேயா‌” என்று அன்னை வாங்க மறுத்து, ஆத்ரேயன் தாலிகட்டியவளை சுட்டி காட்டினார் காஞ்சனா.

ஆத்ரேயன் மெதுவாக இடது பக்கம் திரும்பினான்.

   பிரணவி அவள் அம்மா அமலாவிடம் தலையிலிருந்த பூவை சரியாக வைக்க கூறி நின்றிருந்தாள்.

   ஆத்ரேயன் தன் அன்னை காஞ்சனா கூறியதால், பிரணவியிடம் வந்து பணத்தை நீட்டினான்.‌

   அவளோ திகைத்து விழிக்க, “அம்மா உன்னிடம் கொடுக்க சொன்னாங்க” என்றான் மொட்டையாக.‌

  ‌பிரணவி மாமியாரை காண, “நீ தானேம்மா வரவு செலவு பார்க்க போற. நாங்க உங்க கூட இருந்தா நானே பார்த்துப்பேன். நீங்க தனியா இருப்பதால நீ தான் கவனிக்கணும்” என்று பொறுப்பு என்னும் பாரத்தை ஏற்றினார்.

   பிரணவி மௌவுனமாய் வாங்கி தன் கைப்பையில் வைத்தாள்.

  புது பீரோவின் பரிசு கவர் கூட பிரிக்கவில்லை. எப்படியும் நடைமுறை வாழ்வோடு கலந்திட இரண்டு நாள் ஆகலாம். ஏற்கனவே போதும் போதுமென்ற அளவிற்கு அறிவுரைகள் வழங்கியதால் பிரணவி மிகவும் அமைதியாக பையில் திணித்து கொண்டாள்.

   மாமா வினய் ஆத்ரேயன் அருகே வந்து, “என்ன மாப்பிள்ளை… புது பொண்டாட்டி, புது வீடு, புது காலேஜ் வேற, எல்லாமே ஸ்மூத்தா போகுது. இனியாவது உன் வாழ்க்கையை இனிமையாக ஆரம்பி” என்று கூற, ஆத்ரேயனுக்கு சலிப்பு தான் வந்தது.

    திருமணமாகி ஒரு வாரமே கடந்திருக்க இந்த சலிப்பு வந்திருக்க கூடாது. ஆனால் ஆத்ரேயனுக்கு சலிப்பு வராமல் இருந்தால் ஆச்சரியமே.

    இத்தனைக்கும் அவனாக தான் திருமணத்திற்கு பெண் பாருங்கள் என்றான்.‌

‌ அவன் வார்த்தை விடாமல் இருந்திருக்கலாம். இந்நேரம் வெறும் வேலை மட்டும் மாற்றிக்கொண்டு நிம்மதியாக இருந்திருப்பான்.

   தற்போது எல்லாம் மாறிவிட்டது.

    “என்ன உன் தம்பி எதுக்கும் மசிய மாட்டேங்குறான்.‌ பாவம் அந்த பிள்ளை. இதுக்கு அந்த பொண்ணை வேற யாருக்காவது கட்டி வச்சியிருக்கலாம்.” என்று வினய் மனைவி காதில் முனங்க, சங்கவியோ “சும்மாயிருங்க… இப்ப தான் ப்ரைன் வாஷ் பண்ணி நிம்மதியா கல்யாணத்தை முடிச்சிருக்கு.” என்று அமைதிக்காக்க கூறினாள்.

    “நீ தான் சொல்லிக்கணும். உன் தம்பிக்கு ப்ரைன் வாஷ் பண்ணியதா.

   அவன் அப்படியொன்னும் நீ சொல்லறதுல சரின்னு முடிவுக்கட்டுற ஆளில்லை. அவன் மனசுல வேறயேதாவது காரணத்தோடு இந்த பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டான்.” என்று கூறவும் சங்கவிக்கு அப்படி தான் என்று தோன்றியது.

   ஆத்ரோயன் எல்லாம் தலைகீழ் நின்றாலும் தன் எண்ணத்தை சிறிதும் மாற்றிக் கொள்ளும் ரகமில்லை‌. அப்படியிருக்க இந்த கல்யாண விஷயம் அதிசயத்திலும் அதிசயமே.

   சங்கவி தம்பியை கவனித்துக் கொண்டே தம்பி மனைவியை காண, அவளோ பாட்டி பவானியின் மடியில் படுத்து கிடத்தாள்.

    சங்கவி பார்ப்பதால் புது வீட்டில் படுத்திருப்பது பிடிக்கவில்லையோ என்று அமலா மெதுவாக மகளை எழுப்பினாள்.

   “என்னம்மா” என்று பிரணவி சினுங்க, “இப்படியா ஹால்ல படுப்பாங்க. எந்திரிச்சு உட்காரு” என்றதும், “அம்மா… காலையில சீக்கிரம் எழுந்துக்க சொல்லி, ஓமகுண்டலத்துல உட்கார வச்சிட்டிங்க. கண்ணெல்லாம் புகை, தூசி. இயர்லி மார்னிங் எழுந்ததால தூக்கம் தூக்கமா வருது.” என்றாள்.

   “மாப்பிள்ளை வீட்ல கொஞ்ச பேர் இருக்காங்க. அவங்க போற வரை கொஞ்சம் பொறுப்பா இரு.” என்று கடிந்தார்.

   பாவம் சில நாட்களாகவே பிரணவி நின்றால் குற்றம் நடந்தால் குற்றமென்று ஆகிவிட்டது.

   சரியான தூக்கமில்லை, உணவில்லை, நிம்மதியும் பறிப்போனது.
   எப்பொழுது இயல்பான வாழ்க்கை வாழ்வதென்ற தவிப்பு அவளுக்குள்.

  அவளுக்குமே இந்த திடீர் திருமணம் ஆனந்தத்தை தரவில்லையே.

   இப்படி அப்பாவும் பாட்டியும் பிடிவாதமாக நின்று திருமணத்தை நடத்துவார்களென்று, நான்கு மாதத்திற்கு முன் சொல்லியிருந்தால் நகைத்திருப்பாள்.

   அதுவும் ஆத்ரேயனை.

    உம்மென்ற முகத்தோடு பாட்டியிடம் வீற்றிருந்தவளை அமலா எழுப்பி சம்பந்தியோடு சென்று நில் என்றதும் தயக்கமாய் காஞ்சனா அருகே சென்றாள்.

   பாலமுருகன் மனைவியிடம் கண்காட்டி மருமகள் வருவதை உரைத்திட, முகமலர்ந்தார்.

   “என்னடா தூங்கலையா? காலையிலேயே எழுந்ததுக்கு கண்ணு சொக்கியிருக்குமே” என்று காபியை நீட்டினார்.

   தூக்கத்தை விரட்ட காபியை பெற்று கொண்ட பிரணவி, “அம்மா தான் எல்லாரும் போனப்பிறகு ரெஸ்ட் எடுத்துக்க சொன்னாங்க. ஏதாவது வேலையிருந்தா, கூடமாட உதவ சொன்னாங்க” என்றாள் கள்ளங்கபடமின்றி.

   “அதுவும் சரி தான். நாங்க போனதும் ரெஸ்ட் எடுங்க. இன்னிக்கே டிக்கெட் எடுத்திருக்கு. இல்லைனா பொறுமையா கூட பேசுவேன்” என்னும் பொழுதே பாலமுருகன் நைஸாக நழுவியிருந்தார்.

   “ஆத்ரேயனை பற்றி உனக்கு ஓரளவு தெரியும்” என்று ஆரம்பிக்க, பிரணவிக்கு ‘எனக்கு அவரை பற்றி ஒன்றும் தெரியாது’ என்று இடையில் உரைக்க தோன்றியது. ஆனால் மாமியார் மாமனார் பேசும் பொழுது உடனுக்குடன் உன் கருத்தை கூறுகின்றேன் என்று பேச்சை இடைவெட்டியிடாதே என்ற அன்னையின் அறிவுரையால் அமைதியானாள். விழாவுக்கு வந்த அனைவரும் வணக்கம் வைத்து புறப்பட நடுவில் அவர்களை வழியனுப்பினார். மருமகளை கூடவே நிறுத்தி பேச்சை தொடர்ந்தார் காஞ்சனா.

   “அவன் மனதார தான் கல்யாணத்துக்கு சம்மதித்தான். ஆனா பொண்ணு போட்டோல உன் போட்டோ எதிர்பாராத விதமாக அமைந்ததை அவன் எதிர்பார்க்கலை‌. ஒருவிதத்துல எங்களுக்கு இந்த திருமணம் தப்பாவே தோன்றலை.

   அவனுக்கு தான்….” என்று இழுத்தார்.

   ‘அவருக்கு மட்டுமா? எனக்கும் திருமணம் என்றதும் நிம்மதியாக தான் தலையாட்டினேன். இப்படி இவரிடம் என் போட்டோ போய் சிக்கிக்கும்னு நினைச்சேனா?! எங்கம்மா அப்பாவுக்கும் இந்த திருமணம் தவறாபடலை.

அவரை போலவே எனக்கு தான்… எப்படி எடுத்துக்கறதுன்னே தெரியலை.’ என்று மனதில் புலம்பினாள்.

   காஞ்சனா அன்பாய் ஆதுரமாய் தீண்டி “நீ ஒன்னும் கவலைப்படாத… நாளாக நாளாக எல்லாம் சரியாகிடும். 

நீயும் அவனும் கொஞ்சம் பேசி பழக நேரமெடுக்கலாம். அதனால் என்ன? கல்யாணமானவங்க எல்லாம் பேசி பழகியா மணந்துக்கறாங்க. கொஞ்சம் கொஞ்சமா ஒருத்தரை பற்றி ஒருத்தர் நெருக்கமா பழகவும் தான் புரிதலும் அன்பும் உருவாகும்.

     நீங்களா பழசை நினைச்சி உங்களுக்குள் முட்டிக்காதிங்க” என்று கூறினார்.‌

    ‘என்னயென்னவோ சொல்லறாங்க. இதுக்கு என்ன சொல்லறது. எப்பவும் அப்பா அம்மாவிடம் மண்டையை ஆட்டற மாதிரி ‘சரிங்கத்தை’ முடிச்சிடுவோம் என்று எண்ணி “சரிங்கத்தை” என்றாள் தலையாட்டியபடி.

    “சமத்து” என்று நெட்டி முறித்து, “நாங்க நைட்டு டிரையினுக்கு கிளம்பிடுவோம். உங்க அம்மா அப்பா பாட்டியும், என் பொண்ணு மாப்பிள்ளை கூட இங்க இருக்க போறதில்லை.

   மெதுவா இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துட்டு, பரிசு பொருட்களை பிரிச்சி, ஒவ்வொரு இடத்திலும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்களா வஞ்சிக்கோங்க. அவன் பேசினா எதிர்த்து பேசாத. நீ பேச மாட்ட… இருந்தாலும் சொல்லிடறேன். அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்தேன்னா கூடிய சீக்கிரம் மனசு மாறுவான்” என்று கூறினார்.

   பிரணவிக்கு இதுவரை வராத பயம் இப்பொழுது முளைத்தது. இவரோடு தனியாக வாழ வேண்டுமா? அதுவும் சென்னையை விடுத்து திருச்செந்தூரிலிருந்து சற்று தள்ளிய இந்த ஊரில்? என்று முட்டைக் கண்கள் விரிய திகைத்து நோக்கினாள்.

   அதே நேரம் பாலமுருகன் மைந்தனிடம் புத்திமதி உரைத்திருப்பாரோ என்னவோ, “அப்பா… நான் ஒரு புரப்பஸர். எனக்கு பாடம் நடத்தாதிங்க.” என்று கண்டித்து முறைத்து, அந்த நேரம் முகதிருப்பம் செய்யவும் பிரணவியை பார்க்க நேர்ந்தது.
  
    ‘இவயெதுக்கு முட்டைக் கண்ணை உருட்டறா? இங்க மாதிரி அங்கயும் அம்மா அவளிடம் மந்திரிக்கறாங்களா?” என்று  கைக்கடிகாரத்தை பார்த்து, “உங்களுக்கு டைம் ஆகப்போகுது முதல்ல பெட்டி படுக்கையை கட்டுங்க” என்று விரட்டினான்.

தங்கள் குடும்பத்தை தவிர யாருமில்லையென்ற காரணத்தால் ஆத்ரேயனின் குரலொலி அதிகரித்தது.

    ஆத்ரேயன் பேச்சு சப்தம் கேட்டு “டேய் மாமா கார்ல கொண்டு போய், அப்பா அம்மாவை அத்தை மாமா  அந்த பாட்டி எல்லாரையும் டிரெயின்ல ஏற்றி விட்டுட்டு தான் நாங்க போவோம்.” என்றதும், நிதானமாக வந்தவன், “நீங்க கார்ல கொண்டு போனாலும் பெட்டியை எடுத்து வைக்கணும் இல்லையா? நைட் டிரெயின்ல சாப்பிட உணவையும் பேக்கிங் பண்ணணும்.” என்றதும் அமலா எட்டி பார்த்து, “அதெல்லாம் பண்ணிட்டு இருக்கோம் மாப்பிள்ளை” என்றார்.

   “லக்கேஜ் கூட எடுத்து வச்சிட்டோம்” என்று ஜெகநாதன் வந்தார்.

   அவரை கண்டதும் ஆத்ரேயன் பேச்சு சப்தம் முற்றிலும் முடங்கியது.

    எத்தனை சொல்லியும் கேட்காமல், பிரணவிக்கு திருமணம் செய்தாக வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று தன்னையும் இக்கட்டில் தள்ளிவிட்டவரை கண்டு என்ன பேசுவது?!

   தன் ஒட்டு மொத்த மூளைசலவையும் இவரிடம் தோற்றுப்போனதே என்று ஆத்ரேயன் நெஞ்சு விம்மியது. வேறு வழியில்லை தாலி என்றதை கழுத்தில் கட்டி விட்டேன். இனி எதையும் சமாளிக்க வேண்டும்.

    காஞ்சனா பாலமுருகன் இருவரும் நேரத்திற்கு புறப்பட தயாராகினரோ இல்லையோ, பெண் வீட்டு பெற்றோர்கள் என்ற முறையில் தங்களால் எந்த தாமதமும் நிகழ கூடாதென்று ஜெகநாதன் கிளப்பிவிட்டு தாய் பவானி அருகே அமர்ந்துக் கொண்டார்.
 
  அமலா சில்வர் பாக்ஸில் சப்பாத்தி  பேக்கிங் செய்து கொண்டார். கூடுதலாக பன்னீர் எல்லாம் பேக்கிங் செய்தேயிருக்க எடுத்து வைத்துக் கொண்டார்.

   “நீங்களுமா மருமகளிடம் அறிவுரை சொல்லிட்டிங்களா” என்று காஞ்சனா இலைமறைவாக மகனோடு வாழ சொன்னீர்களா என்று நாகரீகமாய் கேட்டார்.

   “என்னை விட எங்கத்தை அதெல்லாம் பூசி மொழுகாம தெளிவா சொல்லியிருக்காங்க. அவங்க பேத்தியிடம் கல்யாணமான அன்னிக்கே விலாவரியா பேசிட்டாங்க சம்பந்தி.

   கொஞ்சம் பயப்படறா… தம்பி புரப்பஸர் இல்லையா. அந்த பயம் இன்னமும் இருக்கு.” என்றதும் காஞ்சனாவுக்கு புரியாமல் இல்லை.

   ஏதோ அறிவுரையெல்லாம் முடிந்ததே இனி ஆண்டவன் தலையெழுத்து படி அமையட்டும். இப்பொழுது மட்டும் இறைவனின் திருவிளையாடலின்றி இங்கே வந்திருக்க முடியுமா?

   முழுக்க முழுக்க சென்னையில் வாழ்ந்தவன் ஆத்ரேயன். சொந்த ஊருக்கு வரும் பொழுது திருச்செந்தூர் முருகனை தரிசிப்பார்கள்.
   இப்படி சொந்த ஊரிலேயே வீடு வாங்கி வாழ முடிவெடுப்பானென்று கனவிலும் கண்டதில்லை. எப்படியும் சென்னையில் அப்பாட்மெண்ட் குடிப்புகுந்து தனக்கு நிகரனா பெண்ணை மணந்து இல்வாழ்வில் காதல் பாடத்தை நிகழ்த்த ஆவலாய் இருந்தான்.‌

   இப்படி சொந்த மண்ணில் ஆடிக்கு அமாவாசைக்கு வந்தவன், பணியும் வாழ்வும் சொந்த வீடும், பிரணவியை கட்டிக்கொண்டு காதல் பாடம்(?) என்றதும் நினைத்து பார்த்து மிரண்டான்‌.

    “மாப்பிள்ளை நாங்க கிளம்பறோம். இப்ப கிளம்பினா தான் அத்தை மாமாவை ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு, நாங்க கார்ல் போக வசதியா இருக்கும்” என்று வினய் கூறினான்.

  விபரீத எண்ணங்களுக்கு தடையாகவும், சட்டென அக்கா புருஷன் வினயிடம் ”சரிங்க மாமா பத்திரமா போங்க. எதுனாலும் கால் பண்ணுங்க” என்று கூறினான்.

   ஆண்மகனை பெற்றவர்கள் திடமாக புறப்பட, அமலாவும் பிரணவியும் கட்டிப்பிடித்து அழுகையை அடக்கினார்கள்.‌

  பிரணவியால் கட்டுபடுத்த முடியாமல், உதடு தந்தியடிக்க, கண்ணீரை உகுத்தினாள்.

  பவானி பாட்டியோ, “சும்மா எதுக்கு அழுவற?” என்று கடிந்தார்.

   வினயின் பெரிய காரில் எல்லாரும் ஏறிக் கொள்ள கையசைத்து விடைப் பெற்றனர்.

    காரிலே கூட சென்னை போகலாம். ஆனால் உடல் அசதியாக இருக்குமென்று ஆத்ரேயன் தான் ஏசி கோச்சில் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்றான்.

   ஏனெனில் பெற்றவர்களுக்கு கல்யாண வேலை, புதுமனை புகுவிழா வேலை என்று அதீத அலைச்சலும் சோர்வும் இருக்குமென்று புரிந்து நடந்தான்.

   பெற்றவர்கள் தலைமறையவும், புதிதாக மணமான ஜோடிகள் கட்டிபிடித்து கட்டிலுக்கு மகிழ்ச்சியாக சென்றிருக்கலாம்‌.

   ஆனால் ஆத்ரேயனுக்கும், பிரணவிக்கும் சீன சுவராக பெரிய மதில்சுவர் இருந்தது.

    மெயின் கதவினை பூட்டிவிட்டு, இருவரும் யார் முதலில் அறைக்கு செல்வது என்பது போல, இரண்டு அறையில் ஆளுக்கொரு அறைக்கு வேகமாய் நடந்து கதவை அடைத்திட நின்றனர். எதிரெதிர் அறையென்றாலும் தாழிடும் நேரம் மற்றவரை பார்த்திட கூடாதென்று கவனமாய் தவிர்த்தனர்.

    இரவெல்லாம் புது வீடு என்பதால் ஆங்காங்கே தொங்கிய வண்ண விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

daily episode so.. கூடவே வாசித்துவிடுங்க. நாளை முதல் login செய்தால் மட்டுமே வாசிக்க முடியும். அப்படி மாற்றிடுவேன். அதனால் register login செய்து கொள்ளுங்கள்.

15 thoughts on “மௌனமே வேதமா-1”

  1. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 1)

    அடேயப்பா…! காலேஜ்ல பசங்களை கன்ட்ரோல்ல வைச்சுக்கிற மாதிரியே வீட்லேயும் செமையா கெத்தை காட்டுறானே…! ஆத்ரேயன், இஷ்டப்பட்டுத்தானே கல்யாணத்துக்கு பொண்ணை பாருங்கன்னு சொன்னான்.
    ஆனா, இப்ப ஏன் இஷ்டமில்லாத மாதிரி இருக்கிறான்…? ஒருவேளை, பொண்ணை பிடிக்கலையோ ?
    அப்படியும் தெரியலையே..?
    பிரணவியும் ஏன் இப்படி இருக்கிறா…?

    ஆத்ரேயா, புது கல்யாணம், புது பொண்டாட்டி, புது வீடு, புது வேலை… ம்..ம்..ம்… இப்பவே லட்டு தின்ன ஆசையத இருப்பேன்னு நினைச்சா…
    இப்படி இஞ்சித் தின்ன குரங்காட்டம் இருக்கியே
    ஏன்டா கண்ணா…????

    என்ன விஷயம்ன்னு தெரிஞ்சிக்காம நமக்கு மண்டை வெடிச்சிடும் போல… அட ராமா !

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *