Skip to content
Home » மௌனமே வேதமா-2

மௌனமே வேதமா-2

அத்தியாயம்-2

   பிரணவிக்கு இரவு மெத்தையில் வந்து விழுந்தது தான் நினைவு வந்தது. எப்படி உறங்கினாளென்று அவளே அறியவில்லை. புது வீடு, புது இடம், புது அறை என்றெல்லாம் பயந்தவளுக்கு ஆத்ரேயன் தனியறை சென்றதும், தானும் தனியறையென்று படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்திருக்கலாம்.

   மெதுவாக எழுந்து காலை கடனை முடிக்க, பசி வயிற்றை கிள்ளியது. அப்பொழுது தான் இரவு உண்ணாமல் உறங்க வந்தது புத்திக்கு உரைத்தது.

      மெதுவாக அறைக்கதவை திறக்க ஆத்ரேயனோ குளித்து முடித்து, நேர்த்தியாக உடையணிந்து கல்லூரிக்கு செல்ல தயாராக இருந்தான்.

  ஆத்ரேயனின் இந்த நேர்த்தி பிரணவிக்கு புதிதல்ல, அவன் தோற்றத்தை அவள் அதிகம் கண்டது இந்த மாதிரி நேர்த்தியான உடைகளில் தான்.‌

   ஜெல்லின் உதவியின்றி கேசம் அலைபாயும் விதமாக இருக்கும். இதில் ஐயர்ன் செய்த ஷர்ட்-பேண்ட், லெதர் வாட்ச், திருமணத்திற்கென்று போட்ட வாட்ச், மோதிரம் செயின் என்று அனைத்தும் கழட்டிவிட்டாலும் அவன் முறுக்கேறிய, புஜங்களும் திண்ம தோளும் பேரழகனாய் காட்டும். அதிலும் முகத்தில் அணியும் கண்ணாடி பெரும்பாலும் முக அழகை கெடுக்கும். ஆனால் ஆத்ரேயனுக்கு மட்டும் கூடுதலாய் கவர்ச்சியாக காட்சியளித்து மனதை கொள்ளையடிக்கும் எனலாம்.

  இந்த அழகு… இதனால் தான் எல்லாம்.

   பிரணவி அவன் கல்லூரிக்கு தயாராகியிருப்பதை யூகித்தாள்‌.
 
    அவனிடம் தனியாக வார்த்தையால் கேட்டு நிற்கவில்லை.

  அவன் சாப்பிடுவதை தான் கவனித்தாள்.

  நேற்று இவர்கள் சாப்பிடாத சப்பாத்தி கெடவில்லை, தொட்டுக்க பன்னீர் மசாலாவும் கெடுவதில்லை போல, அதனை ஓவனில் சூடுபடுத்தி சுவைத்து கொண்டிருந்தான். தட்டில் இரண்டு சப்பாத்தி இருக்க, பாதி ஏற்கனவே பிய்த்து சுவைத்திருப்பது தெரிந்தது. இதில் கண்ணாடி கிளாஸில் திராட்சை பழச்சாறு வேறுயிருந்தது.

   தாம்பள தட்டிலிருந்ததை திராட்சையை எடுத்துஜூஸ் போட்டு பழச்சாறாக மாற்றிவிட்டான்.

   தலைவாறாமல் மேற்படி தலையை சொரிந்து அவனை காணும் நேரம், “முதல் நாளே என்னால வேலைக்கு லீவுயெடுக்க முடியாது. என் விஷயத்துல நான் பெர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பேன். அதனால் காலேஜிக்கு கிளம்பறேன்.” என்று தட்டில் கையலம்பி சிங்கில் எடுத்து சென்று கழுவி வைத்தான்.

   பிரணவிக்கு தன் கடமை எதுயென்றே குழம்பினாள். ஆனால் ஒன்று..‌. ஆத்ரேயன் போல தான் ஒன்றும் பெர்ஃபெக்ட் இல்லை என்பது மட்டும் உறுதி.

    அவன் மாற்று சாவி எடுத்து கொண்டு, “கதவை லாக் பண்ணிக்கோ” என்று கூறி பதிலை எதிர்பாராமல் பைக்கையும் எடுத்து புறப்பட்டான்.

   பிரணவி தன்னை சுற்றி ஒரு முறை பார்த்தவள், மயக்கம் வராத குறையாக முதலில் சாப்பிட உட்கார்ந்தாள்.

   சப்பாத்தி சாப்பிட்டு முடித்ததும், அவசரமாய் குளித்து முடித்து புறப்பட்டாள்.

   ஆட்டோவில் செல்லும் இடம் கூறி ஏறிக் கொண்டாள்.

   வழிநெடுக கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்த்தாள்.

     சென்னை போல தெரிந்த இடமில்லையே. அதனால் ஆங்காங்கே லேண்ட் மார்க்கை கவனிக்க ஆரம்பித்தாள்.

     அவள் வந்து இறக்குமிடம் வரவும், பணத்தை கொடுத்தாள்.
  
   ஆட்டோக்காரன் வாங்கி விட்டு சென்றதும், கல்லூரி பெயர் பலகையை ஏறிட்டாள்.

  ‘சாரதா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி’ என்ற நுழைவில் மெதுவாக அடியெடுத்தாள்.

     விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் இருக்கும்.

   மூன்றாம் ஆண்டு படிக்க வந்திருக்க, வகுப்பறையை தேடி வந்தாள். பிரணவி பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி மூன்றாம் ஆண்டு படிப்பவள்.

   ஏற்கனவே பிரணவி படித்த கல்லூரியில் தான் ஆத்ரேயனும் பேராசிரியராக இருந்தார்.‌

தவறு… தவறு.

  அப்படி சொல்ல முடியாது. பிரணவி முதல் வருடம் அடியெடுத்து வைக்கும் முன்னே ஒருவருட காலமாய் ஆத்ரேயன் சென்னை கல்லூரியில் கெமிஸ்ட்ரி பாடம் நடத்தியிருந்தான்.

   அதனால் அவன் பாடம் நடத்திய கல்லூரியில் பிரணவி மாணவி.

   இங்குமே ஆத்ரேயன் வேலை மாற்றல் வாங்கிக் கொண்டான். பிரணவியும் இங்கு தான் படிக்க வந்துள்ளாள்.
  முதல் நாள் வேலைக்கு ஆத்ரேயன் கடமை தவறாத பேராசிரியராக வந்து விட்டான்.

    பிரணவி புண்ணியம் முதல் பாட வேளையில் ஒரு பெண் பேராசிரியர் கிரிஜா இருந்தார். பிரிவினரின் பெயர் விபரம் எல்லாம் கேட்டார்.

    சென்னையிலிருந்து படிக்க மாற்றலாகி வந்த காரணத்தை கேட்டதும், தயக்கமாய் நின்றாள்.

  புதிதாக திருமணமான பெண்ணிற்குண்டான மெஹந்தி அவளை ஏறயிறங்க பார்க்க வைத்தது. பொன்தாலியும் நெற்றியில் குங்குமமும் பளிச்சிட்டது.

   ‘ஏன் இங்க வந்து படிப்பை தொடருற?” என்று மட்டும் கேட்டார்.

  “ஹஸ்பெண்டுக்கு இந்தவூர்ல வேலை மேம். அதான்‌” என்று பதில் தந்தார்.

ஏனோ பிரணவியின் சாந்தமான முகம், அதற்கு பின் எந்த கேள்வியுமா கேட்கவில்லை.

  “சீட் எங்க காலியா இருக்கோ அங்க போய் உட்காரு.” என்று கூறினார்.

  “தேங்க்ஸ் மேம்” என்று அறையை பார்வையிட, நான்காவது பெஞ்சில் இடம் காலியாக இருந்தது. அங்கு சென்று அமர்ந்தாள்.‌

  “கல்யாணமாகிடுச்சு பொண்ணு மச்சி” என்று சில ஆண்கள் குரல் அதீத சலசலப்பாய் கேட்டது.
 
   “கல்யாணமாகியிருக்கு” என்ற பெண் குரலும் கிசுகிசுக்க “சைலன்ஸ்” என்று பாடம் நடத்த துவங்கினார்.

  பக்கத்தில் இருந்த பெண்ணிடம் சிறு முறுவலை உதிர்த்தாள்.

    இரண்டாம் பாட வேளையிலும், ஆசிரியர் வர அறிமுகமாகி பெயர் ஊர் மட்டும் கூறிவிட்டு அமர்ந்தாள்.

  அதன் பின் சிற்றுண்டி நேரத்திற்கென இடைவேளை கிடைக்கவும், வகுப்பில் சிலர் நட்பாக முன் வந்தனர்.

    பிரணவியை பற்றி அறிந்திட முனைந்தனர்.

   “ஏன்‌ பயந்து பயந்து பேசற? இங்க நானும் மேரீட்” என்று மற்றொரு பெண் மோனிகா கூறவும், தன்னை போல  திருமணமான மற்றொரு பெண்ணும் இருக்க ஆறுதலாக இருந்தது.

   அதன் பின் கொஞ்சம் போல அரட்டை பேச்சு ஆரம்பமானது.

   மூன்றாம் பாட வேளையில் தான் பிரணவியின் நிம்மதிக்கு உலைவைக்கப்பட்டது.

   காலையில் கண் நிறைய நேர்த்தியாக கிளம்பிய புரப்பஸர் ஆத்ரேயன், மாணவி பிரணவியின் வகுப்புக்கு வந்தான்.

    புது பேராசிரியர் என்ற ரீதியில் மாணவ மாணவிகள் பக்கம் சலசலப்பு.
அதிலும் மாணவிகள் கூடுதலாகவே சலசலத்தனர்.

    ஆத்ரேயன் அழகு தான் ஏற்கனவே வர்ணிக்கப்பட்டதே.

   பேரழகனாக வந்து நின்று ‘ஹலோ ஸ்டூடண்ட், நான் உங்க நியூ கெமிஸ்ட்ரி புரப்பஸர். இங்க ரொம்ப நாளா வேகன்ஸி என்று என்னை பிடிச்சி இங்க போட்டுட்டாங்க.
   என் பெயர் ஆத்ரேயன். இன்னிக்கு முதல் நாள் என்பதால உங்களிடம் பேசி பழகலாம். ஒவ்வொருத்தரா பெயர் சொல்லுங்க. நினைவில் வச்சிக்கறேன்” என்று டெஸ்கில் சாய்ந்து நின்று இடது கையை பேண்ட் பேக் கெட்டித் விடுத்து, வலது கையால் மாணவர்களை வரிசையாக பெயரை கூறிட, செய்கையால் ஆரம்பிக்க கூறினான்.

   “சார் லேடிஸ் பஸ்ட்” என்று மாணவிகள் பக்கம் உரைக்க, “ஓகே.. சொல்லுங்க” என்று கூறவும், மாணவிகள் ஒவ்வொருத்தர் பெயரை எழுந்து நின்று உரைத்தனர். 

   ‘ம்கூம். எப்பவும் இப்படி பழக்கப்படுத்திக்கறது. அப்பறம் குத்துதே குடையுதேனு புலம்பறது.’ என்று மனதில் பிரணவி புலம்பினாள்.

   மூன்றாவது இருக்கை முடிந்து நான்காவது இருக்கையில் ஒளிந்து குனிந்திருந்த பெண்ணவளை மோனிகா உலுக்கி உன் தரப்பு’ என்று கூற, மெதுவாக எழுந்தாள் பிரணவி 

ஆத்ரேயன் கண்கள் இதுவரை இயல்பாய் இருந்தது நொடியில் முள்ளை முழுங்கியவனாக மாறினான்.

   இவயென்ன இன்னிக்கே வந்துட்டா? காலையில எழுந்ததும் லேட்டு, எப்ப குளிச்சிட்டு, சாப்பிட்டு, கிளம்பியிருப்பா? திங்க்ஸ் எல்லாம் ஒதுக்கி வைக்கவே நேரம் சரியா இருந்திருக்குமே’ என்று எண்ணினாலும், அவன் சிந்தனையை தாண்டி, ‘நான் பிரணவி  சென்னையிலிருந்து இன்னிக்கு தான் மூன்றாம் வருடம் படிக்க இங்க சேர்ந்திருக்கேன். எனக்கு இந்த காலேஜ் புதுசு சார்” என்ற கூறி வீற்றுக் கொண்டாள்.

   அடுத்தடுத்து இரண்டு மூன்று பேர் பேசி மாணவிகள் பகுதி முடிந்து, மாணவர் பக்கம் வரும் வரை இறுக்கமாய் மாறினான்.

   அதன் பின் மாணவரின் ரகளையும் பேச்சும் இயல்பாக்க, நேரமும் இருந்ததால் மூன்றாம் வருடத்தின் முதல் பாடத்தை நடத்துவதாக புத்தகத்தை எடுத்தான்.

    ஆத்ரேயன் பாடம் நடத்தவும் உலகத்தை மறப்பவனே. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ அதிலும் ‘ஆசிரியர் பணி அறப்பணி’

   கடவுளுக்கு சமமான இடத்தில் நின்று பாடம் புகட்ட, தன் விருப்பு வெறுப்பு தனிப்பட்ட வாழ்வை ஒதுக்கி மாணவர் பக்கம் மட்டும் பார்த்து பாடம் நடத்தி முடித்தான்.

   அடுத்த வகுப்பிற்கான நேரம் வந்து மணியடிக்கவும், “ஸ்டூடண்ஸ் புரியலைனா திரும்ப கேளுங்க. பை” என்று சாக்பீஸை டேபிளில் வைத்துவிட்டு மாணவ மாணவிகள் இருக்கும் பக்கம் குத்து மதிப்பாக கூறி வெளியேறினான்.

  அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் முன் ஆசிரியர் வர தாமதமாக, ஆத்ரேயனை பற்றி பேச்சு மாணவிகளிடம் கிசுகிசுப்பாய் தொடர்ந்தது‌.

   “ஆத்ரேயன் பெயர் நல்லாயிருக்குல”

   “ஆளும் அழகா இருக்காருப்பா”

   “அய்யோ அந்த கண்ணாடி அவருக்கு அழகாயிருக்கு”

   “மேன்லியா இருக்கார்.”

  “கல்யாணமானவரா?”

   “அய்யோ தெரியலையே.” என்ற கூக்குரல்கள் இருந்தது.

  ஆண்கள் கூட்டத்தில் இனி கெமிஸ்ட்ரி பீரீயட் அப்ப நம்ம பக்கம் எந்த பிகரும் திரும்பாது.’ என்றும், “செமையா இருக்கார்” என்று மாணவர்களும் பேசினார்கள்.‌

   பிரணவிக்கு யாரையோ சொல்லறாங்க’ என்பது போல மோனிகாவிடம் அளாவினாள்.

    மதியம் போல சாப்பாட்டு நேரமென்மபதால் கேன்டீன் சென்றாள்.
 
   மோனிகா தான் “நீ ஏன் சாப்பாடு எடுத்துட்டு வரலை.? தனி குடுத்தனமா? கூட்டு குடும்பமாக?” என்று தனிப்பட்ட வாழ்க்கையையும் கேட்டாள்.

   “தனிக் குடும்பம்… நானும் அவரும் மட்டும் தான்” என்று கூறி தக்காளி சாதம் வாங்கினாள்.

    “முதல் நாள் என்பதால சாப்பாடு செய்யலையா? உன் ஹஸ்பெண்ட் வெளியே வாங்கிப்பாரா?” என்று கேட்க, “ம்ம்ம் சாம்பார் சாதம் வாங்கிப்பார்” என்றவளை கடந்து ஆத்ரேயன் உணவை வாங்கி மற்றொரு பேராசிரியரோடு இணைந்து சாப்பிட்டான்.

   உணவை விழுங்கும் நேரம் மதியமென்பதால் காஞ்சனா அழைத்து விட்டார்.

   “ஆத்ரேயா சாப்பிட்டியா?” என்று கேட்க, “அம்மா… சாப்பிட்டுட்டு இருக்கேன்‌. நீங்க சென்னை ரீச் ஆகிட்டிங்களா? மெஸேஜ் இல்லைனா  கால் பண்ண சொன்னேன். ஏன் பண்ணலை” என்றான்.

   “இரண்டு பேரும் லீவு போட்டிருப்பிங்கன்னு நினைச்சேன். காலேஜிக்கு வந்துட்டதா பிரணவி சொன்னா.” என்றதும், தனி தனியா வந்ததை தெரிவித்தாளா? இல்லை ஜோடியா வந்ததா சொல்லி வச்சியிருக்காளான்னு தெரியலையே‌’ என்று எண்ண, “அம்மா… வீட்டுக்கு வந்து பேசறேன்” என்று துண்டித்து விட்டான்.

   எப்படியும் பிரணவி கல்லூரியில் போனை உபயோகப்படுத்த மாட்டாள். வாங்கிய திட்டும், கண்டித்ததும் நினைவுயிருக்கும் இல்லையா!?

   பிரணவியோ அவன் போன் பேசவும் கவனிக்காதது போலவே “நீங்க எப்படி? ஜாயின் பேமிலியா?” என்றதும், “இல்லைப்பா… நானும் தனிக்குடுத்தனம் தான். ஆனாலும் காலையில சமைச்சிடுவேன்.” என்றாள்.

   பிரணவி அப்பொழுதே முடிவெடுத்தாள் இனி காலையில் அலாரம் வைத்தாவது சமைத்திடலாமென. இன்று போல் ஆட்டோவில் வரமுடியுமா? கையில் அம்மா கொடுத்த பணம் தீர்ந்து விட்டால் அப்பாவிடம் கேட்க முடியாதே.

   திருமணம் ஆனப்பின் கேட்டால் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திடுமே.

   வீடு வேறு ஒதுக்கி வைக்க வேண்டும்.’ என்றதும் சாப்பிட்டு நீரை அருந்தினாள்.

   ஆத்ரேயன் இருந்த இடத்தை காண, வெற்றிடமாக இருந்தது.

   இவரென்ன மின்னல் வேகத்துல மாயமா போறார். இந்நேரம் பழைய காலேஜா இருந்தா சாப்பிட்டு அரட்டை அடிப்பேன். இங்க மோனிகா தவிர யாரிடமும் பேச முடியாலை. இந்த தாலி குங்குமம் மற்றவர்களிடமிருந்து என்னை தனியா காட்டுது.

  ஏன் தான் இந்த திருமணமோ? யாருக்காகவோ எதற்காகவோ? கடைசில என் வாழ்க்கை நிம்மதியில்லாம போச்சு. அப்பாவாது  திருமணத்தை தவிர்த்து வேற காலேஜ்ல சேர்த்து விட்டிருக்கலாம்.
   இவரிடமே மாட்டி விட்டு அப்பா-அம்மா பாட்டுக்கு வீட்டுக்கு போயிட்டாங்க’ என்று நடந்தவள் வகுப்பறை வரவும் நினைவுகளை கவலையை புறம் தள்ள நிர்பந்திக்கப்பட்டாள்.

-தொடரும்.

  வாசிப்பவர் உங்கள் கருத்தை முன்மொழியுங்கள் நன்றி.



‌‌
 
  

12 thoughts on “மௌனமே வேதமா-2”

  1. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 2)

    அச்சோ…! இது என்னடா வேண்டா வெறுப்பா பிள்ளையைப் பெத்து காண்டா மிருகம்ன்னு பேர் வைச்ச மாதிரி… ஆத்ரேயன் & பிரணவிக்கு வேண்டா வெறுப்பா கல்யாணம் பண்ணி
    காலேஜ்ல கொண்டு போய் குந்த வைச்சுட்டாங்களோ…?

    அது சரி, அவன் தான் ஆசிரியன், கடமை தவறாதவன், செய்யும் தொழிலே தெய்வம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிறவன்… ஸோ, முத நாளே காலேஜ்க்கு ஓடி போயிட்டான்.
    ஆனா, இவ ஏன் வீட்டைக் கூட ஒதுக்கி வைக்காம, கால்ல சுடுத் தண்ணியை கொட்டிக்கிட்ட மாதிரி அவன் பின்னாடியே துரத்திட்டு ஓடி வந்திட்டா….?
    இதான் விட்ட குறை, தொட்ட குறைங்கிறதோ…? இந்த லஷ்ணத்துல நாளையில் இருந்து சமைச்சு வைச்சிட்டுத் தான் வருவாளாம்… முதல்ல விடிகாலையில எழுந்து வர முடியுதா பாருங்கள் மேடம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Hey pranivi um aadhu um maadhri naanum kuda chemistry dept.tan..super ❤️ka…. Padikumbodhu enakum enga clg nyabagam varudhu…. Waiting for next ud ka….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *