Skip to content
Home » மௌனமே வேதமா-7

மௌனமே வேதமா-7

அத்தியாயம்-7

   இதுவரை மிதுனா ஆத்ரேயனை விரும்புவது இந்தளவு ஆழமாய் இருப்பது அறியாத பெற்றவர்கள். அவளுக்கு புத்திமதி கூறாமல் ஆத்ரேயனை சந்தித்து பணம், கார், வீடு, பங்களா எல்லாம் எங்கள் ஒரே பொண்ணுக்கு தான். கல்யாணம் செய்து கொள்கின்றீரா?” என்று கேட்டு நின்றார்கள்.

    அவளுக்கு வந்தது அபெக்ஷன். ஜஸ்ட் ஈர்ப்பு. அவ என்னை உண்மையா காதலிக்கலை. அவளுக்கு புத்திமதி சொல்லுங்க.” என்று கத்திவிட்டான்.‌

  தாய் தந்தை ஆதரவு தனக்குண்டு என்றதும்‌ மிதுனா மனம் மகிழ்ந்தது.

  எப்படியாவது கல்லூரி முடிக்கவும் ஆத்ரேயனை மணப்பதாக முடிவெடுத்தாள்.

  தோழிகளிடம் கூட சபதம் போட்டு நின்றாள்.

கையில் கட்டு கட்டி கல்லூரிக்கு வந்தப்போது காண்போர் எல்லாம் நலம் விசாரிக்க ஆத்ரேயன் மருந்துக்கும் நலம் விசாரிக்காமல் கடந்தான்.

    அவள் பக்கம்  பாராமல் பாடம் நடத்துபவனிடம் வேண்டுமென்றே சந்தேகம் கேட்டு பார்வையை திசைதிருப்புவாள்.

   ஆத்ரேயனை பொறுத்தவரை அங்கு அனைவருமே மாணவிகள். கல்வி போதிக்கும் தான், காதலை போதிக்கவோ ஆதரித்து ஊக்கம் தருவது போலவோ பேசக் கூடாதென்று தெளிவாக இருந்தான்.

   மிதுனா விடாமல் ஒரு நாளில் துரத்தி வந்தவள் இனி கெஞ்சினாலும் கதறினாலும் ஆத்ரேயன் தன் காதலை ஏற்க மாட்டானென்று புரிய, அவனுக்கு அவப்பெயரை நிலைநாட்டியாவது தன்னை மணக்க வைக்க வேண்டும் இல்லையேல் தன்னால் இந்த வேலையை விட்டு அவனை ஓடவிட வேண்டுமென்ற முடிவுடன் லேப்பில் தனியாக சந்திக்கும் தருணத்திற்கு காத்திருந்தாள்.

    கொக்குக்கு மீன் மீதே கண் பதித்து பிடிப்பது போல அன்று வாய்ப்பு அமைந்தது.

     தனியாக இருந்தவனிடம் காதல் மிரட்டலை ஆரம்பித்தவள் மற்றொரு பேராசிரியர் வருவதை அறிந்தே நாடகத்தை நடத்தினாள்.

   “கடைசியா கேட்கறேன் என்னை லவ் பண்ணுவிங்களா மாட்டிங்களா?” என்றாள்.‌
  
  ஆத்ரேயன் அவன் பாட்டிற்கு புத்தகத்தை புரட்ட, ”என்னை லவ் பண்ண வேண்டாம் கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள்.

  ஆத்ரேயனோ புத்தகத்தை மூடி வைத்து வெளிநடப்பு செய்ய முயன்றவனை தடுத்து, “நீங்க இப்ப இரண்டுத்துக்கும் பதில் தரலை. இதான் உங்களுக்கு ஃபைனல். மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர் அப்படின்னு புகார் தந்து மேனேஜ்மெண்ட்ல வேலைவிட்டே தூக்க வைப்பேன்.
  அதோட கொட்டை எழுத்துல உங்க பெயரை நியூஸ் பேப்பர்ல போட வைப்பேன்.‌” என்றாள்.

   ஆத்ரேயன் எதற்கும் மசியாமல், நடக்க, அவனை கட்டிப்பிடித்து இறுகப்பற்றி “என்னை வேண்டும்னா எடுத்துக்கோங்க.” என்று கூறிய அடுத்த நொடி பளாரென அறைந்தான்.

   “சீப் போடி” என்று அருவருப்படைய, அவனை தன் தேகத்தோடு கட்டிப்பிடித்தாள். ஆத்ரேயன் அவளை தன்னிடமிருந்து தள்ள, பெண் பேராசிரியர் ஒருவர் வரவும், சரியாக இருந்தது.

   “மேம்.. மேம்… சார் என்னை அப்யூஸ் பண்ணறார். அவருக்கு கோஅப்ரேட் பண்ணலைன்னா மார்க்ல கைவைப்பேன்னு சொல்லறார்” என்று நாடக கண்ணீரை வடித்தாள்.
  
  அவள் நடிப்பில், ஊரில் பரவலாக கேள்விப்படும், ‘ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறல்’ என்ற செய்தி போல் இங்கே நடப்பதாக கருதி அந்த பெண் ஆசிரியர் மிதுனாவை காக்கும் தெய்வமாக நின்றார்.

  “மேம் அவ பொய்யா நடிக்கிற. அவ என்னை விரும்பறா. கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு டார்ச்சர் செய்யறா. இங்க நடந்தது அவளோட டிராமா” என்று கூறவும் மிதுனா அழுகைக்கு அது நிகராக இல்லை.

   பெண் பேராசிரியர் நேராக கல்லூரி முதல்வரிடம் சென்றார்கள்.

  மிதுனா கூறிய குற்றச்சாட்டு ஆத்ரேயனை நகரவிடவில்லை.‌

    கல்லூரி முதல்வரிடம் கூட ஆத்ரேயன் எவ்வளவோ கூறியும் அவர் என்ன செய்வதென்று விழித்தார். ஒரு பக்கம் ஆத்ரேயன் இரண்டு ஆண்டு காலமாக பணிப்புரியும் கண்ணியமான பேராசிரியர். இதுவரை சிறு குறையும் ஆத்ரேயன் மீது வந்ததில்லை. ஆனால் கல்லூரியில் பெண்கள் பார்வை அவர்‌ பக்கம் இருப்பதை அறிந்தவரே.

   முடிவெடுக்க முடியாது வேலை விட்டு தூக்கிவிட்டு, போலீஸில் புகார் தரும் அளவிற்கு சென்றது. மப்டியில் போலீஸ் வருவதாக தெரிவித்திட, ஆத்ரேயனோ “நான் அவளை எதுவும் பண்ணலை. எந்த குற்றம் சுமத்தினாலும் பரவாயில்லை.” என்று கோபமாக இருந்தான்.

   எதை வைத்து அவன் நல்லவன் என்று நியாயப்படுத்துவான்?

  அவன் மூளையும் வேறு எதையும் யோசிக்காமல் ஸ்தம்பித்தது. இந்தளவு மிதுனா இறங்குவாளென்று ஆத்ரேயன் நினைக்கவில்லை. காதல் காதல் என்று உலறி, கல்லூரி முடித்து சென்று, கொஞ்ச நாளில் மறந்துவிடுவாளென்று சாதாரணமாக நினைத்து விட்டான்

   இப்படி தன்னை சிக்கலில் பழி சுமத்தி தள்ளுவாளென்று நினைக்கவில்லை. அதுவும் பெண்பித்தனாக பேராசிரியரே மாணவியிடம் அத்துமீறும் குற்றச்சாட்டு.‌
 
  தான் சேர்த்து வைத்த நல்லபெயர் இன்றோடு அடிமட்டமாக தொலைவதை எண்ணி அங்கே முதல்வர் அறையில் ஓரமாய் நின்றிருந்தான்.‌

    கெமிஸ்ட்ரி லேப் பக்கம் மிதுனா அழுவதும் பெண் பேராசிரியர் அழைத்து செல்வதும், ஆத்ரேயன் கத்தியதும் என்று கல்லூரியில் கசிய துவங்கியது.

   பிரணவி கவலையாக வகுப்பறையில் சென்று அமர்ந்தாள்.‌

  அங்கே இரண்டு பேராசிரியர் “பாருங்க சார் ஆத்ரேயன் சார் இப்படி பண்ணுவார்னு நினைக்கலை. நல்லா பழகுவார்‌. இப்படி சீனியர் மாணவியிடம் சீப்பா நடந்துக்கிட்டார்” என்று பேச, “எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ? இப்ப எல்லாம் பேரண்ட்ஸ் பாடம் நடத்தறவங்க மேல பயம் வருவதற்கு இதான் மிஸ் காரணம்.” என்று பேசி கொண்டனர்.‌
 
   ”போலீஸ் வந்துட்டாங்களா மேம்?” என்று கேட்க, “இல்லை மேம் சொல்லியிருக்காங்க. பிடிச்சிட்டு போய் அடி நிமித்த போறாங்க. பெயர் கெடும். தேவையா இது?” என்றார்.

   பிரணவிக்கு பொருக்கமாட்டாமல் எழுந்து அவ்விரு மேமிடம் வந்தாள்.

  “மேம் சார் மிதுனாவை தப்பா எதுவும் செய்யலை‌. அவங்க தான் சார் மேல பொய்யா குற்றம் சுமத்தறாங்க. நான் கண்ணால் பார்த்தேன். நான் கிருஷ்ணவேனி மேமை பார்க்க போனப்ப அவங்க பேசியதை கேட்டேன்” என்று கூற, “அந்த பொண்ணுக்கு எவ்ளோ பெரிய அவமானம் வரும்னு தெரிந்தே பொய்யா புகார் தருவாளா? நீ சும்மாயிரு.” என்று கூறியதற்கு மறுத்து விட்டு அந்த காணொளியை காட்டினாள்.

   ஆத்ரேயன் ஒதுங்கி ஒதுங்கி போக மிதுனா வந்து தடுத்து நிறுத்தி பேசி கிருஷ்ணவேனி மேம் வரவும் ஆத்ரேயனை கட்டிபிடித்து நாடகமாடுவது அதில் இருந்தது. இதில் லேப் மிக அமைதியாக இருக்க, ஆத்ரேயன் மிதுனாவின் குரல் தெளிவாக கேட்டது.

   உடனடியாக “இந்த போன் யாருது? எப்படி வீடியோ எடுத்த?” என்ற கேள்வி முளைக்க, “மேம் எப்பவும் போனை சைலண்டில் போட்டு காலேஜ் பைக்குள் வச்சிருப்பேன்.
 
   அன்னைக்கு தெரியாதனமா பவுச்ல  போன் வஞ்சியிருப்பதை மறந்து லேபுக்கு எடுத்துட்டு போயிட்டேன்.

   அவங்க பேசிட்டு இருக்கறப்ப தான் போன் வைபிரேட் ஆச்சு. அப்ப தான் போன் இருக்குன்னு தெரிந்தது. அதான் அவங்க பேசறப்ப வீடியோ எடுத்தேன்‌” என்று கூறவும் பிரணவியை அழைத்துக் கொண்டு கல்லூரி முதல்வர் அறைக்கு அவ்விரு பேராசிரியர்கள் சென்றனர்.‌

       தன் அதீத நடிப்பு வெற்றி வாகை சூடும் என்ற மிதப்பில் மிச்ச மீதி நடிப்பை நடிக்க, கல்லூரி முதல்வரிடம் அந்த வீடியோ காட்டப்பட்டது. அவர் அதனை பார்த்து பிரணவியை ஏறிட்டார்.
  
   “சாரி சார் போன் எடுத்துட்டு வந்தது தப்பு தான். ஆனா இந்த நேரம் இப்படி உபயோகப்படுத்தி ஆத்ரேயன் சார் நல்லவர்னு தெரியவர உபயோகமா இருந்தது.” என்றாள்.‌

   அதே நேரம் போலீஸ் வரவும், மிதுனா பெற்றவர்களும் வந்தார்கள்‌.

   ஏதோ தாய் தந்தையை பாராதவள் போல கட்டிப்பிடித்து அழுதாள்.

    போலீஸ் ஆத்ரேயனின் சட்டையை பிடிக்க போகும் நேரம் முதல்வர் தடுத்து நிறுத்தி, காணொளியை காட்டினார்.

  “சாரி சார் இந்த வீடியோ முதல்லயே பார்த்திருந்தா உங்களை அலய வச்சிருக்க மாட்டோம்.” என்று கூற ஆத்ரேயனும் அந்த வீடியோவை பார்த்தான்.

  அவனுக்கு வாழ்வில் இந்த காணொலி காட்சி கிடைத்து தனது நல்ல பெயர் கெடாமல் தப்பித்ததில் கடவுள் நம்பிக்கை இல்லாதவனை “தேங்க்காட்” என்று சொல்ல வைத்தது.

  அதோடு பிரணவியை அவன் கடவுளாக கண்டான்.

   போலீஸ் வந்ததால் மிதுனாவை திட்டி தீர்த்து பெற்றவர்களிடம் கண்டிக்க கூறினார்கள். ஆத்ரேயன் புகார் தந்தால் மிதுனா மீது நடவெடிக்கை எடுப்பதாக கூற, அவனோ “வேண்டாம் சார். ஏதோ கொஞ்சம் படிக்கற பொண்ணு மனசு அலைப்பாய புத்தியில்லாம இப்படி பண்ணிட்டா.” என்று கூறினான்.

ஆத்ரேயனிடம் கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு வேண்ட, அவனோ பிரணவியிடம் வந்து, “ரொம்ப தேங்க்ஸ் பிரணவி. இந்த உதவியை காலத்துக்கும் மறக்க மாட்டேன்.

  பட் காலேஜ்ல போன் எடுத்துட்டு வரக்கூடாது.” என்று அறிவுறுத்தி நிற்காமல் கிளம்பினான்.‌

‌    அதன் பின் பிரணவி மூலமாக அந்த வீடியோ சில தோழிகள் வாங்கி பார்த்தனர்.‌

  மிதுனா இப்படி செய்து மாட்டியதையும், ஆத்ரேயனுக்கு‌ உண்டான நற்பெயரும் அப்படியே பேசப்பட்டது.

   “அந்த சாரா இருக்க போய் அவ தப்பிச்சா. இதே வேற யாராயிருந்தா இந்நேரம் அந்த பொண்ணை பெட்ரூமுக்கு கூட்டிட்டு போய் நாசம் பண்ணிருப்பாங்க” என்று மாணவர்களே பேசினார்கள்.

   மாணவிகளுமே “அந்த சார் ஜாலியா எல்லாருக்கும் புரியற மாதிரி பாடம் நடத்துவார்.‌ மத்தபடி அவர் தப்பா பார்க்க கூட மாட்டார்” என்று பாராட்டு குவிந்தது.

   மிதுனாவிற்கு உள்ளம் கனலாக கொதித்தது.
  அதுவும் ஆத்ரேயன் கிடைக்காத கோபம், பிரணவி மீது திரும்பியது‌.

   மிதுனா இரண்டு நாட்கள் வீட்டில் முடங்கினாள். கல்லூரிக்கு செல்லவில்லை.

   ஆத்ரேயனுமே கல்லூரிக்கு வரவில்லை. இப்படி தன் கடந்தது.

   காஞ்சனா மகனின் மீது விழ வேண்டிய பழியை நினைத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றதாக இறைவனுக்கு நன்றி சொன்னார்கள்.

    ‘அந்த பொண்ணுக்கு நன்றி சொல்லணும் ஆத்ரேயா” என்று பாலமுருகன் நினைவுப்படுத்தவும், சங்கவியோ “முதல்ல இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணுங்கப்பானு லாஸ்ட் டைம்மே சொன்னேன்.‌
    கல்யாணமாகாத புரப்பஸர் என்றதால் தானே காலேஜ் பொண்ணுங்களுக்கு இவன் மேல க்ரேஷ் உண்டாகுது. கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சா கொஞ்சம் பிரச்சனை தவிர்த்திருக்கலாம். இப்பவாது இவனுக்கு கல்யாணம் பண்ணுங்க.” என்று கூறினாள்.

  பாலமுருகனோ “முதல்ல அவன் இஷ்டம் என்னனு கேளு. இந்த சிட்சுவேஷன்ல கல்யாணம் அதுயிதுனு மேலும் இவன் மனசை நோகடிக்க கூடாது” என்றார்.‌

   “இல்லைப்பா… நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.‌ யாரை வேண்டுமென்றாலும் கல்யாணம் பண்ணிக்கறேன்.” என்று இத்தனை நாள் இப்ப கல்யாணமே வேண்டாம் என்று தவிர்த்தவனின் வாயிலாகவே கூறினான்.

   காஞ்சனாவோ மகளிடம் “மாப்பிள்ளை சொந்தத்துல ஏதோ ஒரு பொண்ணை சொன்னியே அவளையே முடிக்கலாம். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வைப்போம்.” என்று உரைத்தார்.

   “அவ புருஷன் அடிக்க வருவான்…. என்னம்மா நினைச்சிட்டு இருக்க? அந்த பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு. இவன் அப்பவே தலையாட்டியிருந்தா பரவாயில்லை.” என்று கூறினாள்.‌

   “இப்பவும் ஒன்னும் பிரச்சனையில்லை. நம்ம தரகரிடம்‌ போன் போட்டு சொன்னா வேற ஜாதகம், வேற பொண்ணு போட்டோ எல்லாம் வந்துடப்போகுது.
   காஞ்சனா அந்த தரகர் போன் நம்பர் எடு” என்று உடனுக்குடன் ஆத்ரேயன் திருமணத்திற்கு பெண் தேடும் விஷயமாங மும்முரம் காட்டினர்.

      ஆத்ரேயன் தன் பெற்றவர்களே தனக்கு பெண் பார்க்கட்டும் என்று விட்டுவிட்டு, அவன் வேறு கல்லூரிக்கு வேலை தேடுவதில் ஆர்வம் காட்டினான்.

   அப்படி தரகர் கொண்டு வந்தது தான் பிரணவி ஜாதகம்.

  போட்டோ முதலில் தரவில்லை. ஜாதகம் மட்டுமே வந்து சேர, பத்து பொருத்தம் பார்த்து ஒன்பது பொருத்தம் அமைவதாக தெரிய, அமோகமாக பெண் புகைப்படத்தை கேட்டார்கள்.

   மறுபக்கம் ஜெகநாதனும் ஜாதகம் எல்லாம் பார்த்து புகைப்படத்தை தந்தார்.

   வீட்டில் சங்கவியிடம் புகைப்படத்தை காட்டி “பொண்ணு சின்ன பொண்ணா அழகா குடும்ப பாங்கா முகலட்சணமா இருக்கா. ஆத்ரேயனுக்கு பொருத்தமா இருப்பா. தரகரிடம் சொல்லி பொண்ணோட அப்பாவிடம் பேசுங்க. பெருசா நகைநட்டு வேண்டாம். கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்தா போதும்” என்று அடுக்கினார்.

   பாலமுருகனும் “பையனிடம் காட்டு அவன் சம்மதிச்சா உடனே பேசுவோம்” என்றார்.‌ எதற்கும் தரகரிடம் சொல்லி வைப்போமென இந்த வீட்ல பொண்ணு எடுப்போம். எதுக்கோ சொல்லி வையுங்க” என்றார்.

   காஞ்சனா சங்கவி மற்றும் பாலமுருகன் மூவரும் ஆத்ரேயனுக்காகவும், மாப்பிள்ளை வினய்-காகவும் காத்திருந்தார்கள்.‌

   வினய் வந்ததும், சங்கவி நேராக தம்பியிடம் புகைப்படத்தை காட்ட, அதை பார்க்காமலே “யாரை வேண்டுமென்றாலும் கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லிட்டேன். நீ வேற ஏன்க்கா?” என்றவன்‌ அதிருப்தியோடு தந்தை பக்கம் அமர்ந்து, ”அப்பா சாரதா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல போன்‌ போட்டு வேலைக்கு கூப்பிடறாங்க. நான் முடிவா மறுத்துட்டேன். வேலைக்கு போகாததால அந்த காலேஜிலயிருந்து தொடர்ச்சியா கூப்பிடறாங்க.

   பேசாம திருச்செந்தூர் பக்கம் ‘பரசுராம் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல வேக்கன்ஸி இருக்குன்னு மாமா சொன்னார். அங்கேயே போகலாம்னு தோணுது.

  அப்படி போனா உங்களை மிஸ் பண்ணுவேன் அம்மா” என்று வருந்தினான்.‌

‌‌    “நீயேன் மாப்பிள்ளை தனியா போற? கல்யாணம் பண்ணி கையோட பொண்ணை கூட்டிட்டு போ. கொஞ்ச காலம் தனியாயிரு. சொந்த மண்ல வேலை கிடைக்குதே. தெரியாத இடம்னா யோசிக்கலாம்.” என்று கூறவும் பாலமுருகனுக்கு மகனை பிரிய வேண்டுமா? என்ற வருத்தம்.

   காஞ்சனாவுக்கோ, எப்படியோ கல்யாணம் ஆனால் போதுமென்று தோன்ற, “மாப்பிள்ளை பொண்ணு வீட்ல திருச்செந்தூர்ல வேலைனா கொடுப்பார்களா?” என்று சந்தேகத்தை கேட்டார்.

   முதல்ல விவரம் கொடுங்க அத்தை. மீதிய என்‌ மச்சானுக்காக நான் பார்க்கறேன்.” என்று வாங்கினார்.

  ”மச்சான் பொண்ணு போட்டோல அழகா இருக்குப்பா. இந்தா பாரு” என்று திணிக்க, ஆத்ரேயன் இருக்கும் மனஅழுத்தம் காரணமாக சிவனேயென்று வாங்கினான்.

   அதில் பிரணவி புகைப்படம் என்றதும் அதிர்ந்தவன், “இந்தப் பொண்ணா?” என்று அதிர்ந்தான்.‌

-தொடரும்.

15 thoughts on “மௌனமே வேதமா-7”

  1. Super sis nice epi 👌👍😍 endha mithuna mathiri characters um erukathan seyidhunga ellam veetla kudukura chellam evangalaley mathavanga life badhikka padudhu pa nallavela video kedachidhu ellana enna ayirukum🙄

  2. Edhuku da ivlo shock agura…. Pei ya paartha kuda ipadi shock agamaata pola… Idhukulan veena akka tan karanam avangalukku evlo nalla manasu irundha unna enga pranavi kuda korthu vitrukanga andha nandriya nenaikama suma edhavadhu class eduthutu irukan ivan…. Veena akka ivan edhukum sari pattu vara maatan namma vidhu kitta solli rendu thattu thatta sollunga 😂

  3. 😄😄😂 ..என்னமா இப்படி பண்றீங்களே மா…. காப்பத்தின பொண்ணே…கல்யாண பொண்ணா வந்தா.. ஷாக் தான் ஆவாங்க…😂

  4. அடப்பாவி ஆசிரியர் மேல தவறான பழி … காச இருக்கற திமிர் பெற்றவர்கள் கொடுக்கும் செல்லம் தவறான பாதையில் போயி விடுகிறார்கள். .. இவர்களால் இருவரின் வாழ்க்கை கேள்வி குறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *