Skip to content
Home » இரசவாதி வித்தகன்-1

இரசவாதி வித்தகன்-1

ரசவாதி வித்தகன்-1

      மேகவித்தகன் தனக்கு வந்த மெயிலை கண்ணெடுக்காமல் வந்திருந்த பெயரை மட்டும் வெறித்துப் பார்த்தான்.

இன்பாக்ஸை திறக்கலாமா வேண்டாமா என்ற யோசனைக்குள் இருந்தான்.

   இதுவரை வந்த போன் கால்களை இப்படித் தான் அலட்சியம் செய்து நிராகரித்தான்.

   என்றும் போன் பண்ணாத உறவினர் கூட்டம் இன்று மட்டும் படையெடுத்து அழைப்பது ஏன் என்று புரியவில்லை.

   தன்னை வேண்டாமென்று கை கழுவியவர்களுக்குத் தற்போது என்னானது? மாறி மாறி இந்திய எண்ணிலிருந்து வரிசைக் கட்டி போனில் அழைக்க?
  
   ஒரு வேளை தன்னைப் பெற்றெடுத்த பாக்கியவதி அமலா இறந்து விட்டாரோ? இப்படித் தான் மேகவித்தகனுக்கு எண்ணம் சென்றது.

    மற்றபடி வேறெந்த காரணம் இருக்குமென்று சிறிதளவு யோசிக்க அவன் மூளை தடையிட்டது. இரண்டு நாளாய் தன்னைத் தொடர்பு கொண்டு அலுத்து பிறகு அவர்களாகவே அழைப்பதை நிறுத்திடுவார்கள் என்பது வித்தகன் எண்ணம்

     மெயிலை விடுத்து லாக்அவுட் செய்து, பப்பிற்குச் சென்றான். லண்டனில் இந்தக் கேஸினோ மிகப் பிரபலம். ஆளாளுக்குச் சூது விளையாடும் மும்முரத்தில் இருந்தனர். வண்ண விளக்குகளோ, விளையாட்டு ஆர்வமோ, காதை கிழிக்கும் சத்தமோ, மதிமயக்கும் பெண்கள் கூட்டமோ அவன் கருத்தில்படவில்லை.

மேகவித்தகனுக்குக் குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. இதுவரை இங்கு வந்ததே கைவிட்டு எண்ணிடலாம்.

என்னதான் இந்தக் கேஸினோ நடத்துபவர் தன் சித்தப்பா சேதுபதி என்றாலும் இங்கே வருவதை அவரும் விரும்ப மாட்டார். தன் அண்ணன் மகனை தன் மகனாக எப்பொழுது வளர்க்க ஆரம்பித்தாரோ, அப்பொழுது இருந்தே பொறுப்பானவராக மாறிவிட்டார்.

மற்றவர்கள் இங்கே வந்து ஆடுவதும் பாடுவதும் அவர்கள் நாட்டுக் கலாச்சாரம். தன் மகனை இங்கே இந்த நிலையில் என்றும் காணகூடாதென்பதும் அவர் எண்ணமே.

ஆனால் நேற்றிலிருந்து மேகவித்தகனை இவரும் தேடினார். அலைப்பேசியில் அழைத்தாலும் எடுக்காமல் இருக்க, இதோ இங்கு வந்த சில நொடியிலேயே, சேதுபதியின் மேனேஜர் மேத்யூ சேதுபதிக்கு தகவல் தந்துவிட்டார். நிச்சயம் இந்தச் செய்தி வித்தகன் அறியாதது அல்ல. சித்தப்பா வந்தால் பார்த்துப்போமென்ற மிதப்பு.

     தன் தாய் அமலா இறந்துவிட்டால்… தான் ஊருக்கு போக வேண்டுமா என்ன? என்று உதிக்கவும் மதுவை தொண்டையில் நனைத்தான்.

     கொள்ளி போட கூட மேகவித்தகன் போகவேண்டிய அவசியமில்லை. அதான் அவனுக்கும் முன்னால் பிறந்தவன் மயூரன் இருக்கின்றானே.
  
   பிறகு எதற்கு அழைத்திருப்பார்கள்?  என்று மதுவை தன் உடலுக்குள் வழியனுப்பினான்.

“பேஷ்…. ரொம்ப நல்லாயிருக்குடா இந்தக் கோலம். உன்னைப் சவாலிட்டு இங்க அழைச்சிட்டு வந்தேன். அவங்களை விட நல்லவனா யோக்கியமானவனா வளர்த்து காட்டுவேன்னு. ஆனா நீ உங்கம்மா வீட்டாட்கள் சொன்னது மாதிரி இருக்க” என்று சேதுபதி வந்ததும் சினத்தோடு மொழிந்து வித்தகனின் கையிலிருந்த மது கோப்பையைப் பறித்தார்.

“என்ன சொன்னாங்க சித்தப்பா…? அவங்க என்ன சொன்னாங்க?” என்று எழுந்தான்.

இரண்டு மது பாட்டிலை காலி செய்தும் தடுமாறாமல் எழுந்தவனைக் கண்டு வியந்தார்.

“சாராயக்கடை நடத்தறவன் புள்ளையை எப்படி ஒழுங்கா வளர்ப்பானு சொன்னாங்க.” என்று சேதுபதி மைந்தனை அருகே அமர்த்திக் கூறினார்.

“அட உங்க வளர்ப்புல என்ன குறை சித்தப்பா. பாருங்க ஆறடில அழகா வளர்ந்திருக்கேனா.. லண்டன்ல படிச்சிருக்கேன். டாலர்ஸ்ல சம்பாதிக்கறேன். தனியா பீச் ஹவுஸ் வாங்கியிருக்கேன். எந்தக் கெட்டபழக்கமும் இல்லை.

முக்கியமா மனிதர்களுக்கு முக்கியத்துவம் தர்றேன். யார் மனசையும் காயப்படுத்த மாட்டேன். இந்த ஜோசியம், சம்பிரதாயம், பரிகாரம் என்ற பெயர்ல எந்த மனசையும் சிதைக்கலை.” என்று ஆவேசமாய்க் கூறினான்.

“இப்ப நீ பண்ணறது சரியா வித்தகன்? மது போதையில இருக்க” என்று குறிப்பிட்டு அவன் தவறை சுட்டிக்காட்டினார்.

“அவங்க எதுக்குப் போன் பண்ணாங்க நான் தான் எடுக்க மாட்டேன், மதிக்க மாட்டேனு தெரியுமே, எதுக்கு மெயில் பண்ணறாங்க. இந்தப் பதினாறு வருஷமா நான் நிம்மதியா இருந்தேன்.
இப்ப என்னவாம். எதுக்கு என்னைத் தொந்தரவு பண்ணறாங்க.
என்மனசுல புதைந்து இருந்ததெல்லாம் தோண்டி எடுப்பது போலப் போன் பண்ணவும், எனக்குக் கோபம் வந்துச்சு. அதான் இங்க வந்துட்டேன்” என்று வித்தகன் கூறவும் தோளைத்தட்டினார்.

“வித்தகா… நாம இந்தியா கண்டிப்பா போகணும்.” என்று கூறினார் சேதுபதி.

“ஏன் எதுக்குப் போகணும். அந்தப் பொம்பளை அமலா இறந்தா கூட அப்படியே மின்சாரத் தகனத்துல போட சொல்லுங்க. நான் வரமாட்டேன்” என்று தாய் இறந்ததாக முடிவே கட்டினான்.

“இங்க பாருடா… அமலா அண்ணி சாகலை. அவங்க உன்னைக் கூப்பிட்டது கருமாதிக்கு இல்லை. கல்யாணத்துக்கு… உங்கண்ணன் மயூரனுக்குக் கல்யாணம். அவன் கூட வேலை செய்யற சவீதாவை கல்யாணம் பண்ணறான்.” என்று கூறினார்.

“அவன் கல்யாணம் பண்ணினா எனக்கென்ன? நாம ஏன் இந்தியாவுக்குப் போகணும்?” என்று முகம் திரும்பினான்.

“அவன் யாரையோ கல்யாணம் பண்ணினா நானும் அப்படித் தான் நினைச்சிருப்பேன் வித்தகன். ஆனா அவன் கல்யாணம் பண்ணற பொண்ணு சவீதா என்னோட ஒன்னு விட்ட சித்தி பொண்ணு ராதாவோட மகளை. தங்கை ராதாவோ சவீதா படிக்கிறப்ப இறந்துட்டா. அவமகளுக்குக் கல்யாணம்னு அவர் மச்சான் இளஞ்செழியன் போன் செய்தார். அவ உயிரோட இல்லாததால தாய்மாமாவா அண்ணாவை எதிர்பார்த்திருப்பாங்க. பரமேஸ்வரன் அண்ணா தான்.” என்று கலங்கிவிட்டு, “உலகத்துல இல்லாம பண்ணிட்டாளே உங்கம்மா. அதான்… நானாவது வரணும்னு தங்கை கணவர் இளஞ்செழியன் விருப்பப்படறார். அவர் ஒரு எம்.எல்.ஏ. அவர் சவீதாவோட அம்மாவுக்குச் சொந்தமா யாரு இருக்காங்கனு தேடி தேடி அழைக்கிறார்.

நான் ஒன்னுவிட்ட தாய்மாமா என்றதும் கண்டிப்பா வரச்சொல்லறார். நாம மயூரனுக்குச் சித்தப்பாவா போக வேண்டாம். மயூரனை கட்டிக்கப்போற சவீதாவுக்கு மாமாவா போகலாம்.

எதுக்கோ இந்த வீட்ல போன் போட்டா வர்றோம்னு சொல்லு.” என்று கூறினார்.

வித்தகனுக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் ஏனோ சித்தப்பா கூறியதை மறுக்காமல் வளர்ந்துவிடத் தற்போது சரியென்றான்.

“சித்தப்பா… நான் உங்களுக்காக மட்டும் ஊருக்கு வர்றேன். வேற யாருக்காகவும் இல்லை. நீங்களே பேசி சொல்லிடுங்க.” என்று வீரவசனம் பேசினான்.

“தெரியும்டா. நீ சொல்லணுமா என்ன?” என்றவர் போனை எடுத்து இந்தியாவில், தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் நடுவே அமைந்திருக்கும் பாலக்காட்டில் வசிக்கும் மயூரனின் அலைப்பேசிக்கு சேதுபதி அழைத்தார்.

“வித்தகனும் நானும் இந்தியா வர்றோம். ஆனா உங்க வீட்ல தங்க மாட்டோம். எங்க அப்பா வாழ்ந்த வீட்ல தான் தங்குவோம். அந்த வீட்டை சீரமைச்சி வையுங்க” என்று சேதுபதி நலன் விசாரிப்பை எல்லாம் உதறி தள்ளி, தங்கள் வருவதை மட்டும் முன்னிருத்தி உத்தரவிட்டார்.

“ஓகே.. ஓகே சித்தப்பா ரொம்பச் சந்தோஷம். வீட்டை சீரமைச்சி வைக்கறேன்.” என்று மயூரன் கூறியதும் கத்தரித்துவிட்டார்.

வித்தகன் தன் பிறந்தயிடம் செல்லவேண்டுமா என்று மிகவும் சலித்துக் கொண்டான். பதினாறு வருடம் கழித்துப் போகின்றோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.
சேதுபதியும் இந்தியா சென்றால் தன் பிறந்தவூர் சென்று வரும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்திடுவார்.

வித்தகனை போலச் சுத்தமாய்ச் சலிப்போ வெறுப்போ இருந்தாலும் துளி ஆசை அவருக்குள் இருந்தது.

ஒன்று விட்ட தங்கை மகளின் திருமணத்திற்குச் சென்றாலும், தன் தங்கை பார்வதியையும் காணலாம்.

அமலா அண்ணியின் அண்ணன் ஐயப்பனை மணந்ததால், தங்கை பார்வதியின் உறவையும் இழக்க வேண்டியதாகப் போயிற்று.

“என்ன சித்தப்பா… தங்கை செண்டிமெண்டா. அத்தையைப் பார்க்கணும்னு ஆசையா?” என்று மனதை படித்தவன் போலக் கேட்டான் நாயகன் வித்தகன்.

“உண்மையைச் சொல்லணும்னா… ஆசையா இருக்குடா. நான் உன்னைக் கூட்டிட்டு வர்றப்ப என் தங்கை கையில மஞ்சரி குட்டியும், ராஜாராமனை ஐயப்பன் தூக்கிட்டு என் தங்கை பார்வதி கையை விடாம பிடிச்சி, என்னிடம் பேசவிடாம பண்ணிட்டான்.” என்று வருத்தமாய்ப் பேசவும், இதுவரை இந்த நிமிடம் விளையாட்டிற்கு வருவதாகப் போதையின் பிடியில் பொய் சொன்னவன், சித்தப்பாவிற்காகச் சித்தப்பாவின் தங்கை பாசத்திற்காகக் கண்டிப்பாகச் செல்ல முடிவெடுத்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “இரசவாதி வித்தகன்-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *