அத்தியாயம்-1
பூமிப்பெண்ணை காதலித்து பகலெல்லாம் பிரிந்த காரணத்தால், வானம் அந்த நள்ளிரவில் முத்த மழையாக கொட்டித்தீர்த்ததில் சாலையெங்கும் மழை நீர் தேங்கியிருந்தது.
மழையில் தங்கள் பாதம் படாமல், பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமியர்கள் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
இதை அறியாத நாயகி ஹரிணியோ சோம்பல் முறித்து எழுந்து நிதானமாக பல்லை விளக்கினாள்.
“க்ளைமேட் சில்லுன்னு இருக்குல்ல” என்று தன் அன்னை மாலதியிடம் அபிப்ராயம் கேட்க, “ஆபிஸுக்கு நேரமாச்சு எழுந்திரினு காட்டு கத்தலா கத்தறேன். ஆடி அசைந்து எழுந்துட்டு க்ளைமேட் சில்லுன்னு இருக்காம். நைட்டெல்லாம் மழை பொழிந்தது காதுல விழலை” என்று கடுகடுத்தார்.
“ஓ அதான் ரூமே ஏசி போட்டது போல இருந்ததா?” என்று நுரையை துப்பி பல் விலக்கி முடித்தாள்.
“ஓ மை காட் நேரமாச்சு… நான் குளிக்க போறேன்” என்று ஓடியவளை கண்ட மாலதி தலையிலடித்து கொண்டார்.
தண்ணீர் பைப்பை திறக்க தண்ணீர் சில்லென்று வரவும், “அய்யோ அம்மா… இதென்ன ஐஸ்கட்டி மாதிரி தண்ணீ வருது” என்று குரல் கொடுக்க, “தண்ணீ சில்லுனு இருந்தா சுட வச்சி குளிக்கணும். எழுந்ததே லேட்டு. இதுல தண்ணீ ஐஸ்கட்டி மாதிரி இருக்கா? உன் தங்கச்சி எல்லாம் இந்த தண்ணில தான் குளிச்சு ஸ்கூலுக்கு கிளம்பி போயிட்டா. நீ இன்னமும் குளிக்கலை.” என்று திட்டு வாங்கினாள்.
“தண்ணீ சில்லுனு இருக்குனு சொன்னது குத்தமா?” என்று புலம்பிக்கொண்டே ஜெய் ஆஞ்சநேயா’ என்று பச்சை தண்ணீரில் குளித்து பற்கள் தந்தியடிக்க, வெளிவந்தாள்.
நேற்றே அலுவலகம் செல்ல வெள்ளை நிற சுடிதாரை ஐயர்ன் செய்து வைத்திருக்க வேகமாய் அணிந்தாள்.
தலை வழியே போடுவதற்கு சிரமப்பட்டு, “அம்மா… கொஞ்சம் வாயேன். சுடிதார் டாப் தலைக்குள்ள போகலை. ஒரு இழு இழுங்களேன்” என்று கூப்பிட, மாலதி டிபன் பாக்ஸை கட்டி முடித்தவராக, ஒரு கிண்ணத்தில் உப்புமா சர்க்கரையை தூவி ஹரிணி அறைக்கு வந்தார்.
“ஏன்டி.. நேத்து நைட் முழுக்க மழை. வெளியே தண்ணி காடா இருக்கு. இதுல வெள்ளை சுடிதார் இவ்ளோ இறுக்கமா தைச்சி போடணுமா.?” என்று இழுத்து கேட்க, “ஆ.. அம்மா. தேங்க்ஸ் மா.” என்றவள், ”நேத்து ஐயர்ன் பண்ணின சுடிதார் இது. மறுபடியும் ஏதாவது சுடிதார் ஐயர்ன் பண்ணி போடணும்னா நேரமாகிடும். நான் தண்ணி படாம பார்த்துக்கறேன் மா” என்று உப்புமாவை அள்ளி வாயில் திணித்தாள்.
“மதியத்துக்கு தேங்காய் சாதம் செய்தாச்சு.” என்று கொடுக்க, “ம்ம்ம் முந்திரி போட்டிங்களா?” என்று கேட்க மாலதி முறைத்த முறைப்பில் ஹரிணி சிரித்தபடி தலைவாறினாள்.
“அம்மா.. அப்பா எங்க?” என்று கேட்க, “அவர் ஆபிஸுக்கு போயிட்டார். ஏதோ மில்லுல இன்னிக்கு இன்ஸ்பெக்ஷனாம். உங்கப்பாவை சீக்கிரம் வரச்சொன்னாங்கன்னு ஓடிட்டார்.” என்று கூறவும், ஹரிணியோ, “ம்ம்.” என்று டிபன் பாக்ஸை பையில் திணித்தாள்.
ஹரிணி திருப்பூரில் ஒரு ஏற்றுமதி கம்பெனியில் கணக்கெழுதுபவளாக பணிப்புரிகின்றாள். தந்தை கமலகண்ணன், ஒரு மில்லில் சூப்பர்வைசராக பணிப்புரிகின்றார். அதுவும் ஒரு வருடம் தான் வேலை. பிறகு வீட்டுக்கு அனுப்பிடுவதாக கூறிவிட்டார்கள்.
அன்னை மாலதி இல்லத்தரசி. ஹரிணிக்கு தங்கை வினோதினி உண்டு. அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றாள். காலையிலேயே ஸ்பெஷல் கிளாஸ் என்று சென்றிட, ஹரிணி தந்தை வாங்கி தந்த ஸ்கூட்டியில் பணிக்கு தாமதமாக கிளம்பினாள்.
“அம்மா… போயிட்டு வர்றேன்” என்று ஹெல்மெட் அணிந்து வெளிவர, குட்டி குட்டி பினோபார்ம் உடையில், ஷூ நீரில் படாமல் நடந்து சென்ற தேவதை குழந்தைகள் அவளை கடந்து சென்றனர். அவர்களை பார்த்தவாறு ஹரிணி தன் ஸ்கூட்டியை புன்னகை முகமாக செலுத்தினாள்.
வழிநெடுக மேடும் பள்ளமுமாய், நேற்று பொழிந்த மழைத்தண்ணீர் தேங்கியிருந்தது.
தான் அணிந்திருந்த வெள்ளையும் சிவப்பும் கலந்த சுடிதாரை கவனித்தாள்.
மழை நீர் மண்ணோடு சேர்ந்து சேர் தண்ணீராக மாறியிருக்க, எங்கே அது தன் உடையில் பட்டு தெறித்து கரையாக மாறிவிடுமோயென்ற பயத்தில் மெதுவாகவே பூமிக்கு வலிக்குமோயென ஓட்டினாள்.
மழை பெய்தால் கூடுமானளவு வெள்ளை நிறத்தை தவிர்ப்பவளே. ஆனால் ஏதோ இன்று சட்டென வேறு உடையை ஐயர்ன் செய்யவும் நேரம் இல்லாமல், அதையே அணிந்து விட்டாள். எப்பவும் போல மழை சாதாரணமாய் தூறல் போட்டு சென்றிருக்குமென்று நினைத்ததற்கு மாறாக, இப்படி தேங்கி நிற்கும் அளவிற்கு மழை நீரை எதிர்பார்க்கவில்லை.
ஹரிணியோ ‘வீட்லயிருந்து கிளம்பும் பொழுதே அம்மா வேற டிரஸ் போட சொன்னாங்க. நான் தான் சொல் பேச்சை கேட்கலை.’ என்று முனங்கியபடி ஓட்டினாள்.
அவள் நேரமோ என்னவோ எதிரே புயல் வேகத்தில் ஒரு இரு சக்கர வாகனம் வந்தது.
“அய்யய்யோ மேல தண்ணி படப்போகுது” என்று எதர்ச்சையமாக கண்ணை மூடிக்கொண்டு பிரேக்கையும் பிடிக்க தடுமாறினாள்.
எதிரே லாவகமாக வண்டியை ஓட்டி வந்தவனோ, வண்டியை திருப்ப, ஹரிணியும் அதே சந்தில் ஸ்கூட்டியை திருப்ப, இருவரது இருசக்கர வாகனமும் மோதி, ஹரிணி கீழே சரிந்தாள்.
எதிரே வந்தவனோ, ஹரிணி கண்ணை மூடும் பொழுதே சுதாரித்து கொண்டிருக்க வேண்டும்.
அதனால் லாவகமாக கீழே விழாமல் காலூன்றி பைக்கை பிடித்தான். அப்படி பிடித்தும், வண்டி லேசாய் சாய்ந்தது.
ஹரிணியோ “அச்சோ.. என் டிரஸ்.” என்று உதடு பிதுக்கி கவலைக்கொள்ள, “அறிவிருக்காடி… எதிர்க்க பைக் வருதுன்னு தெரியலை. பிரேக் போட வேண்டியது தானே. இல்லை வண்டியை ஸ்லோ பண்ணி பேலன்ஸ் பண்ணி திருப்பியிருக்கலாம். அதை விட்டு லூசு மாதிரி கண்ணை மூடிட்டு நான் திரும்பற அதே பக்கம் திரும்பி ஸ்கூட்டியோட, என் வண்டில வந்து மோதிட்ட” என்று கர்ஜித்தான்.
ஹரிணி தன்னை சுற்றி பார்வையிட்டாள். அவளை தான் திட்டுகின்றான். யாராவது வருகின்றார்களா? தனக்கு கை கொடுத்து எழுப்பி விடுவாரா என்று பார்த்தவளுக்கு, எதிரே வந்தவன் மோதிவிட்டு, ‘அறிவிருக்காடி’ என்கின்றான், ‘லூசு மாதிரி’ என்று பேசுகின்றானே என்ற கோபம் பெருகியது.
“ஏய்… வேகமா வந்தது நீ. என்னை குறை சொல்லற. இந்த திருப்பூர்ல, இது மாதிரி திருப்பத்துல பைக் ஓட்டறப்ப, உன்னை யாரு வேகமா வரச்சொன்னது. உன்னால தான் நான் கீழே விழுந்துட்டேன். இங்க பாரு டிரஸ் எல்லாம் சேரு. நான் தான் திருப்பறேன்னு தெரியுதுல்ல.. அப்ப நீயாவது பிரேக் போட்டு நிறுத்திருக்கணும்” என்று முகம் வருந்தினாள்.
எதிரே இருந்தவனுக்கு சினம் அடங்கவில்லை போல, “மழையில வெள்ளை கலர் டிரஸா போடுவாங்க? மனசுல பெரிய குயின்னு நினைப்பு.
உன்னை மாதிரி அரை லூசுங்க, கண்ட படத்தை பார்த்துட்டு மழையில வெள்ளை டிரஸ் போட்டுக்கிட்டா ஹீரோயின்னு நினைச்சிட்டு சுத்துவாங்கனு எனக்கென்ன ஜோசியமா தெரியும்.
சாதாரணமா வேகமா போனாலே தண்ணி மேல படும். இதுல அவ்ளோ பாஸ்டா வர்றதை பார்த்தல்ல, எப்படி நிறுத்தறதாம்.
நீ வண்டியை திருப்பியிருந்தா மோதியிருக்க மாட்டேன்ல” என்று அதை கூறியே எகிறினான்.
“ஹலோ மிஸ்டர்… என்ன விட்டா பேசிட்டே போறிங்க. வந்ததும் வராததும் அறிவில்லையாடினு டி போட்டு பேசறிங்க. லூசுனு சொல்லறிங்க. தெரியாத பொண்ணிடம் டிசன்டா பேச தெரியாதா? இதுல நான் சொன்னேனா? நான் வெள்ளை டிரஸ் போட்ட ஹீரோயினா நினைச்சி ஸ்கூட்டி ஓட்டினேனு” என்று கோபமானாள்.
“வண்டியோட்டும் போது கண்ணை மூடிக்கற உன்னை மாதிரி முட்டாள் பீஸை அப்படி தான் சொல்வாங்க.” என்று பல்லைக் கடித்து கூறினான்.
ஹரிணியோ அங்கும் இங்கும் தலையை திருப்பினாள். இந்நேரம் பார்த்து யாருமில்லை. இவன் வேறு ஏகத்திற்கு பேசுவது எரிச்சலை தர, “வேகமா வந்ததும் இல்லாம இன்டீசண்டா பேசற. உன்கிட்ட பேசறது சுத்த வேஸ்ட். போடா… நீ தான் முட்டா பீஸ்” என்றாள்.
அவளது ‘போடா… முட்டாள் பீஸ்’ என்று அவன் கூறியதை மனதார திருப்பி தந்துவிட்டு நகர பார்த்தவளிடம், “இன்டீசண்டா பேசறேன்னா. நான் இதுவரை சரியா தான் பேசறேன்.” என்றான் மாறாத கோபத்துடன்.
அதற்குள் ஹரிணி எழுந்து ஸ்கூட்டியை நிறுத்தியிருந்தாள்.
“ஒ… இதான் உங்க ஊர்ல டீசண்டா. சரிதான் குற்றாலத்துல இருந்து மரக்கழண்ட கேஸ் எல்லாம் இங்க வந்துடுச்சு” என்று அவனை குரங்கென்று மறைமுகமாக கூறி புறப்பட தயாராக, “வாட்… சீ பே” என்று அவனும் பைக்கில் சாவியை போட்டு திருகினான். அவனுக்கு உடனடியாக செல்ல வேண்டும். இவளிடம் வம்பு வளர்க்க பிடிக்கவில்லை, போதாதற்கு அவன் வரும் போதே அளவற்ற கோபத்தில் தான் வண்டியை முறுக்கியிருந்தான்.
“சீ… பேவா? போடா பொறுக்கி” என்று ஹரிணியும் திட்டிவிட்டு ஸ்டார்ட் செய்ய, ‘பொறுக்கி’ என்ற ஹரிணி வார்த்தையில், புறப்பட தயாராக முறுக்கியவன் சினமதிகமாக ஆண்களுக்கே உரிய அசிங்கமான வார்த்தையால் “ஃபக் யூ” என்று பல்லை கடித்து கூறி முறைத்தபடி சென்றான்.
சில நொடி ஹரிணிக்கு அவன் கூறியதை கேட்டு வெளி வரமுடியாமல் சிலையானாள்.
ஹரிணிக்கு அவன் பேசியதன் அர்த்தம் புரிந்ததால் கூடுதலாக கோபமானது. ‘ஃபக் யூ’ என்று சொல்லிவிட்டு வேகமாய் சென்றுவிட்டான். ஹரிணியை இந்தளவு அசிங்கமாக யாரும் திட்டியதில்லை. அதுவும் இதுபோன்றதொரு வார்த்தையால்….
இதுவரை ‘எருமை, பன்னி, நாயே லுசு’ என்ற வார்த்தைகளை தங்கை வினோதினி சின்ன சின்ன சண்டையில் திட்டியிருக்க, இன்று கேட்ட அசிங்கமான வார்த்தை போல யாரும் பேசியதில்லை.
யாரும் அவ்விடத்தில் இல்லையென்றாலும், ஏனோ அவமானமாக உணர, கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. உடை வேறு சேறாகி காட்சியளிக்க, அலுவலகம் செல்லவே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
வீட்டிற்கு செல்லவும் பிடிக்கவில்லை. அலுவலகம் வந்து சேர்ந்தவள் நேராக குழாயில் சென்று தன் சுடிதாரை அலசினாள்.
ஓரளவு கறை போனாலும் வெள்ளை சுடிதாரில் சேற்றுகரையின் அச்சு பதிவாகியிருந்தது.
நன்றாக கசக்கி பிழிந்தும் லேசாக கறை தெரிந்திட, மனதிலோ தன்னை பேசியவனின் பேச்சு வேறு அப்படியே பதிந்தது.
‘என்ன திமிரு அவனுக்கு. எப்படி பேசிட்டு போயிருக்கான். ஒரு பொண்ணிடம் அசிங்கமா பேசிட்டு போறோமேனு கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாம போறான். அவனை எல்லாம் சும்மா விட்டுயிருக்கக்கூடாது.
ஆனா வேகமா போயிட்டான். அடுத்த முறை பார்த்தா நாக்கை பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்கணும். எப்படி ஒருத்தனால், முகம் தெரியாத, இதுக்கு முன்ன சந்திக்காத பொண்ணிடம் இப்படி பேசிட்டு போக முடியுது.’ என்று ஆற்றாமையுடன் அன்றைய நாளில் அவ்வார்த்தை செவியில் ஒலித்துக் கொண்டேயிருக்க முழு நாளுமே சோகத்தை தாங்கி கோபமாய் நகர போவதை அவளால் உணர முடிந்தது.
இவளை சாதாரணமாக திட்டியவனோ, தான் வந்துவிட்ட இடத்தில் பைக்கை நிறுத்தினான். அதுவொரு பேருந்து நிலையம். அங்கே டீக்கடையில் சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து ரயில் வண்டியை போல புகையிட்டு, கோபத்துடன் தன்மனநிலையை சாந்தமாக்க முயன்றான்.
தான் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்து பார்த்து, “இவர் லேட்டா வர்றது. பிறகு என்னை ஏதாவது சொல்லறது. நேரத்துக்கு வரணும்னு இல்..இல்..இல்” என்று திணறியவன் முன்னே, அவனது தந்தை ரவிபிரகாஷ் நின்றியிருந்தார்.
”என்னடா இது?” என்று தந்தை கேட்க, பைக்காரன் என்று அடைமொழியுடன் அறிமுகமான நல்வார்த்தை பேசிய நாயகன் விக்ரம் தன் தந்தையை கண்டு கையிலிருந்த சிகரெட்டை கீழே தூரயெறிந்து காலால் அணைத்தான்.
அதோடு வாயிலிருந்த புகையை கையால் அவசரமாய் உப்உப்’ என்று ஊதி அப்புறப்படுத்தினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
கதை தளத்திலும் பதிவிடறேன். அங்க விருப்பப்படறவங்க வாசியுங்கள். அங்க இன்னமும் பிராப்ளம் சால்வ் ஆகலை.

Super start sis. Harini you pavam. Intresting sis.
Super sis amazing start 👏 eagerly waiting to read this story 😘 arambamey sandaiya 😂