Skip to content

லாவா மன்னவா-3

53 / 100 SEO Score

அத்தியாயம்-3

என்ன அவசரத்தை ரவிபிரகாஷ் உணர்ந்தாரோ, விக்ரமின் ஜாதகத்தை கொண்டு சென்று ஜோசியரிடம் காட்டப்பட்டது.

ஜோசியரோ அனைத்து கட்டங்களையும் பார்த்துவிட்டு,
“பையன் ஓரே வாரிசா இருக்கணுமே. இவனுக்கு பிறகு இன்னொரு ஜீவனை உலகத்துக்கு கொண்டு வர யோசிக்கறாப்ல உங்களை கதிகலங்க வைச்சிருப்பானே?” என்றதும், ரவிபிரகாஷிற்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை‌.

விக்ரம் பிறந்து இரண்டு வருடம் ராதிகாவின் உடல்நிலை தேற தள்ளியிருந்தார். அதன்பின் விக்ரமிற்கு இரண்டு வருடம் முடிய, அம்மாவின் மடியை விட்டு இறங்காத பிள்ளையாக இருந்தான்.

இரவில் கூட, அம்மா சேலையை இறுக்கமாக பிடித்துக் கொள்வான்.  ராதிகாவை விட்டு ஒரடி எடுத்து வைக்காமல் தந்தையை விரட்டியவன்.  விக்ரமை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு தான் இரண்டாவது குழந்தைக்கே முயன்றனர். ஆனாலும் விக்ரமிருக்கு பிறகு இன்னொரு குழந்தை தங்கவில்லை.

“ஒத்த பையன் தான்ங்க” என்று மென்னகையுடன் கூற, “ஆளு நான் பிடிச்ச முயலுக்கு மூனு கால் என்று சாதிப்பானே.” என்று கூற, ‘ம்கூம்.. நாலு கால் முயலா இருந்தாலும், ஒரு காலை உடைச்சிட்டு வந்து சாதிக்கற கேட்டகிரி’ என்று பொறுமியவரோ தலையை மட்டும் ஆட்டினார்.

“ம்ம்ம்… கல்வி எல்லாம் அந்த சரஸ்வதி தாயார் கூடயிருந்துயிருக்கணும். பையன் நல்ல படிப்பாளியா?” என்று கேட்க, “வீடு தேடி வேலைனு, நல்ல உத்தியேகத்துல இருக்கார்” என்று பெருமையாக கூறினார்.

“அதானே… நம்ம சொல்லு சோடை போகாது.” என்றவரிடம், “பையன் கல்யாண யோகத்துக்காக ஜாதகம் கொண்டாந்திருக்கேன்.” என்று கூற, கண்ணாடியை கூர்ந்து மூக்கில் நிறுத்தி பார்வையிட்டவரோ “இந்நேரம் பையன் எங்கயாவது சிக்கியிருக்கனுமே?’ காதல் கீதல் ஏதாவது இருக்கானு கேட்டிங்களா?” என்று கேட்டதற்கு, “அதெல்லாம் அமையலை சார். இவன் வாயுக்கு அமையாது‌” என்றார் அதிருப்தியுடன் ரவிபிரகாஷ்.

ஜோசியர் ரவிபிரகாஷின் பேச்சில் மீண்டும் ஆர்வத்துடன் விக்ரம் ஜாதகத்தை பார்வையிட்டவர், “பையன் தொட்டதெல்லாம் அமோகமா இருக்கும். கல்யாண யோகம் இருக்கு. அதுவும் விரைவில் முடியும்னு தெரியுது. வர்ற வரனை எல்லாம் தட்டி கழிக்கலாம்.
மனசு உடைந்திடாதிங்க. நேரம் கூடும் போது என்ன தான் பிள்ளையாண்டான் தலைகீழ நின்னாலும் கல்யாணம் நடக்கும். இவளுக்கு வர்ற பொண்ணு பையனை ஆட்டி படைப்பான்னா பார்த்துக்கோங்கோ” என்று கூறினார்.

அதோடு இந்த ராசி இந்த நட்சத்திர பெண்ணை பாருங்க என்று கூறி அனுப்பினார்.

அடுத்து தரகரிடம் நட்சத்திரம் ராசி கூறி பெண்ணின் ஜாதகத்தை கேட்டு கொடுத்தார்.

எல்லாம் விக்ரம் புகைப்படத்தை பார்த்து முடிவடையும் விதமாக வர, விக்ரமோ பொண்ணு பார்க்க போகலாமென்று அழைக்கும் போது, ஏதாவது தடங்கல் செய்து தப்பித்துவிடுவான்.

அவனாக தடங்கல் செய்ய மாட்டான். அவனை பற்றி விசாரித்த பொழுது பெட்டிக்கடையிலும் ஊரிலும் அவனை பற்றி தகவல் கசிய தானாக தான் நிற்கும்.

ரவிபிரகாஷோ “இதுக்கு தான் படிச்சி படிச்சி சொன்னேன்.
ஊர்ல ஒரு இடத்துல இல்லாம சிகரேட் வாங்கியிருக்கான். மைதானத்துல சண்டை போட்டிருக்கான். போதாதுக்கு எவனையோ மேட்ச்ல சண்டை பெருசாகி போலீஸ் வரை போனது இன்னிக்கு தான் தெரியும். பொண்ணு ஜாதகம் கொடுத்தவரிடம் கேட்டதுக்கு தரகர், ‘என்ன சார் உங்க பையன் போலீஸ் ஸ்டேஷனில் அபராதம் விதிச்சு, கேஸ் பைல் ஆகி காம்பர்மைஸ் செய்து வெளிவந்தானாமே’னு விசாரிக்கறார்.

ஏன்டா… கூடவே இருப்பியே… என்னிடம் சொல்லவேயில்லை” என்று விக்ரமின் நண்பன் அஜய்யை அழைத்து விசாரித்தார்.

“அப்பா..‌ அவன் சாதாரணமா ஏதாவது செய்தாலே நீங்க கஷ்டப்படறிங்க. பைன் எல்லாம் கட்டி வந்தான்னா ரொம்ப ஃபீல் பண்ணுவிங்கன்னு தான் சொல்லலை.” என்றான் அஜய். விக்ரமின் அப்பா அம்மாவை அவனும் அப்பா அம்மா என்று தான் விளிப்பது.‌

ராதிகாவோ “இப்ப என்ன வர்ற வரன் தள்ளி போனா என்ன. சென்னையில ஏதாவது பொண்ணு பாருங்க. அங்கயே வேலை பார்க்கறான். கட்டி கொடுத்து அங்கயே இருக்கட்டும். ஊருக்குன்னு வந்தா தானே உங்களுக்கு பிடிக்கலை” என்றார்.

“அடிப்போடி… எதுக்கு சொல்லறோம்னு தெரியாம உசுரை வாங்கறா” என்று அதட்டினார்.

“அப்பா.. பொண்ணு பார்க்க ஆரம்பிச்சு இரண்டு மாசம் தானே ஆகுது. அதுல மூன்று வரன் இவன் சிகரேட் வாங்கற கடையில் விசாரிச்சிட்டாங்க. அவன் ராசி இப்படி வந்த மூன்றும் வேகமா போயிடுச்சு.
நாளைக்கு ஒரு வீட்ல பொண்ணு பார்க்க வர்றதா சொன்னான் தானே. என்னனு பார்ப்போம்.” என்று சமாதானம் செய்தான் அஜய்.

“என்னவோ போடா.. உன் பிரெண்ட் ஜாதகத்தையும் போட்டோவையும் எடுத்து யாரிடமாவது கொடுத்தா, பையன் நல்லாயிருக்கான்னு நல்ல உத்தியோகத்துல இருக்கான்னு வர்றாங்க. ஆனா அடுத்து கொஞ்சம் விசாரிச்சாலே அவனவன் அலறிட்டு பொண்ணு பார்க்கறதை கேன்சல் பண்ணிட்டு ஓடுறான். இப்படியே  நடந்தது வை. என் வம்சம் இதோட முடிஞ்சிடும்.” என்றார்.‌

ஜெய்யும் “அதெல்லாம் இல்லைப்பா… இந்த முறை சரியா வரும்.” என்று ஆறுதல்படுத்தினான்.

விக்ரமிற்கு கல்யாணம் செய்ய ஆரம்பித்து ஜாதகமும் புகைப்படமும் கொடுத்திட, அவன் முக அமைப்பிற்கு வரன்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றது.
முடிவடையும் என்று நினைக்கும் தருணம், முகத்திலடித்தாற் போல, உங்க பையனுக்கு சிகரெட் பழக்கம் இருக்காமே, தண்ணி அடிப்பானாம், எனக்கு தெரிந்த சொந்தக்கார எஸ்.ஐயிடம் பையன் போட்டோ காட்டினா யாரையே அடிச்சி மண்டையை உடைச்சி கேஸ் வந்து, அபராதம் எல்லாம் கட்டி வெளியே வந்தானாம்.
நாளைப்பின்ன என் பொண்ணுக்கு ஏதாவது ஆகிடும்னு பயமாயிருக்கு சார். நீங்க வேற வரனை பாருங்க.’ என்று தவிர்த்திட, கல்யாணம் செய்து வைக்க நினைத்த ஆசை, வேகமாக சோர்வை தருவதாக நினைத்தார்.

வெளியூரே இந்த லட்சணத்தில் திளைக்க, ரவிபிரகாஷிற்கோ இதே பக்கத்து ஊரில் உள்ள பெண்ணின் ஜாதகம் விலாசம் வந்து சேர, ஜெய்யை அழைத்து தனியாக பார்த்து வர முடிவெடுத்தார்.

ஜெய்யும் பைக்கில் அழைத்து செல்ல வந்திருக்கின்றான். எப்படியும் நண்பனுக்கு கால்கட்டு போடுவதில் அவன் உதவுவதில் ராமருக்கு அணில் உதவியது போல தான்.

ராதிகாவிடம் “உன் பையன் நைட்டு வருவான் தானே. நான் ஜெய்யோட போய் ஒரெட்டு தூரத்துல பார்த்துட்டு வந்துடறேன்.” என்று சென்றார்.

ராதிகாவுக்கு மகனது அடாவடித்தனம் ஓரளவு தெரியும். அதற்காக கல்யாணமே ஆகாது என்ற பயமில்லை. ‘என் பையனுக்கு என்ன குறை. ஆளு ராஜாக்கணக்கா ஆறடி உசரத்துல சினிமா ஹீரோ மாதிரி இருக்கான். எவ வேண்டாம்னு சொன்னாளோ அவளுக்கு
கொடுப்பினை இல்லை’ என்று தான் ஒரு சாதாரண தாயாக உரைப்பார்.

ஜெய்யுடன் ரவிபிரகாஷ் விலாசத்தை பார்த்து செல்ல, அங்கே இவரோடு படித்த நண்பன் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

“டேய் கமலகண்ணா.” என்று கூப்பிட, “அட நீ ரவிபிரகாஷ்ல” என்று ஆரம்பித்து கட்டிக்கொண்டு பாசமழை பொழிந்தனர்.

“எத்தனை வருஷம்டா ஆச்சு. இதே ஊர்ல தான் இருக்கியா?” என்று விசாரிக்க, “அட நடுவுல நடுவுல வெளியூர் மாற்றல் ஆகும். பையன் படிப்புக்காகவும் சொந்த வீட்டை அப்படியே போடவும் மனசில்லாம குழந்தையையும் வீட்டு அம்மாவையும் இங்க இருந்து பார்த்துக்க சொன்னேன். இப்ப தான் கொஞ்ச நாளா இதே ஊர்ல வேலை பார்க்க வந்துட்டேன். ஆமா… இந்த வீட்ல நீ என்ன பண்ணற?” என்று கேட்க, “இதான்டா என் வீடு. அப்பாவோட சொந்த வீடு. காலேஜ் படிக்கிறப்ப இந்த வீடு சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் பாகபிரிவினையில இழுத்துட்டு இருந்தது.

சித்தப்பா நடுவுல மாரடைப்பு வந்து இறந்திடவும், சொத்து அப்பாவோட வந்துடுச்சு. அதுக்கு பிறகு நான் வேலைக்கு போய் குருவி சேர்க்கறாப்ள சேர்த்து வீட்டை கட்டிட்டேன்.” என்று கூறினார்.‌

“உனக்கு எத்தனை பசங்க?” என்று ரவிபிரகாஷ் கேட்க, “அட பசங்க இல்லைடா. இரண்டும் பொண்ணுங்க‌. ஒருத்தி ஹரிணி வேலைக்கு போறா. இரண்டாவது வினோதினி பன்னிரெண்டாவது படிக்கிறா. உனக்கு?” என்று கேட்டார் கமலகண்ணன்.

“எனக்கு… ஒரே ஒரு பையன். பேரு விக்ரம். அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு வரன் தேடினேன். இந்த வீட்டுல பொண்ணு இருப்பதா தரகர் சொன்னார்.

நம்மூர்ல தான் பொண்ணு என்றதும் என் பையனோட பிரெண்டை  கூட்டிட்டு வந்துட்டேன்.” என்று கூறவும் கமலகண்ணன் நண்பனை கண்டு பேச்சற்று பார்வையிட்டார்.

“டேய்… நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றதா இருந்த பையனோட அப்பா நீ தானா? விக்ரம்னு மாப்பிள்ளை ஜாதகம் இருந்தது. போட்டோ கேட்டா தரகர் தரமாட்டேன்னு சொல்லிட்டான்.
உன் பையனை தானா?” என்று சிரிக்க, புகைப்படத்தை தர வேண்டாம் என்றது ரவிபிரகாஷ் தானே.
அதனால் ஆமோதிப்பாய் தலையாட்டினார்.

“உள்ள வாடா” என்று அழைத்து செல்ல, ரவிபிரகாஷோ சந்தோஷமாய் வீட்டை பார்வையிட்டவாறு வந்தார்.

“அப்பா நான் வேண்டுமின்னா இங்க இருக்கவா?” என்று ஜெய் கேட்க, “அட மாப்பிள்ளையோட பிரெண்ட் தானே தம்பி உள்ள வாங்க” என்று கூப்பிட ஜெய்யும் உள்ளே வந்தான்.

“மாலதி இங்க வா.. என் பிரெண்ட் வந்திருக்கான்” என்று அழைக்க, “என்னங்க… நாளைக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க. சீவல் முறுக்கு சுடலாம்னு பார்த்தா கூப்பிட்டுட்டே இருக்கிங்க” என்று  வந்தவர் கணவரின் நண்பன் என்றதும், தண்ணீரை தந்து உபசரித்தார்.

“நீ சுடறியே முறுக்கு… அது இவனுக்கு தான். நாளைக்கு மாப்பிள்ளை வீட்டு ஆளா வரப்போவது இவன் தான். என் பிரெண்ட் ரவிபிரகாஷ்.” என்று அறிமுகப்படுத்த, அவசரமாய் வணக்கம் வைத்து, “மன்னிச்சிடுங்க அண்ணா… வேலையா இருந்தேன். வினோதினி அடுப்பை அணைச்சிட்டு தட்டுல முறுக்கை வச்சி எடுத்துட்டு வா.” என்று கூப்பிட்டவர், ‘இவர்’ என்று மாப்பிள்ளையா என்பது போல அஜயை கண்டு கணவரை ஏறிட, “இவர் மாப்பிள்ளையோட பிரெண்ட்.” என்று தெளிவுப்படுத்த, “என் பையன் நைட்டு தான் ஊருக்கே வர்றான். அதுக்கு முன்ன பக்கத்துல இங்க வந்தேன்மா. அப்படியே எட்டி பார்த்தேன். நம்ம கமலகண்ணன் என்றதும் வந்துட்டேன்.” என்று பேசவும் டீ முறுக்கு என்று கொடுக்க, பருகினார்.‌

“இது சின்ன பொண்ணு. அப்ப… பெரிய பொண்ணு எங்க? இப்ப பார்க்கலாமா?” என்று ஆர்வமாய் கேட்டார்.

“எப்பவும் இந்நேரம் வந்துடுவாடா. அடுத்து தீபாவளி வருதுல்ல.. இன்னிக்கு கொஞ்சம் லேட்டா வர்றா‌. உனக்கு பொண்ணை பார்க்கணுமா” என்று அங்கே மாட்டியிருந்த குடும்ப புகைப்படத்தை எடுத்து ஹரிணியை காட்டினார்.

ஹரிணி வினோதினி பக்கத்தில் மாலதி கமலகண்ணன் என்று நிறைவாக நின்ற புகைப்படத்தை பார்த்தார் ரவிபிரகாஷ்.

“பொண்ணு… ரொம்ப லட்சணமா இருக்கா. மகாலட்சுமி அம்சம்.” என்று கூறியவர் ஜெய்யிடம் காட்டி, “ஜெய்… உன் பிரெண்ட் விக்ரமுக்கு பிடிக்கும்ல” என்று அபிப்ராயம் கேட்டார்.

“தங்கச்சி அழகாயிருக்காங்க அப்பா. அவனுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று நல்விதமாக கூறினான் ஜெய்.

“டேய் உன் பையன் போட்டோ இல்லையா?” என்று கேட்க, “அச்சோ.. வர்றப்ப மழை பொழியிதுன்னு வீட்லயே போனை வச்சிட்டு வந்துட்டேன்.” என்று பொய் கூறினார்.

“அப்பா என்கிட்ட” என்று ஜெய் ஏதோ பேச வர, அவனை தடுத்த படி “இன்னிக்கு பார்த்து ஜெய் போன் வேற போட்டரி சுத்தமா போயிடுச்சுன்னு சொன்னான். கமலகண்ணா… நாளைக்கு நேர்லயே என் பையன் விக்ரம் வருவான் பாரு.” என்று கூறவும், கமலகண்ணணனோ, “அட நீ இளமையில் எப்படியிருப்பனு எனக்கு தெரியாதா. உன் பையன் அப்படி தானே இருப்பான்… அச்சோ இருப்பாரு” என்று மரியாதை கொடுத்து சிரித்து பேசினார்.

“அட நீ வேற‌… சின்ன பையன்டா. வா போன்னே பேசு. நாளைக்கு பொண்ணு பார்க்க கூட்டிட்டு வர்றேன்.” என்று எழுந்தார் ரவிபிரகாஷ்.

“அண்ணா.. இருந்து சாப்பிட்டு போகலாமே” என்று மாலதி கூற, “நாளைக்கு பையன் பொண்டாட்டி கூட வந்து சாப்பிடறேன் மா‌. இப்ப டீ முறுக்கு சாப்பிட்டதே போதும்‌.” என்று கூறினார்.

இருவரின் பேச்சும் கல்யாணம் முடிவடையும் என்ற ரீதியில் இருக்க, மணமக்கள் சந்திப்பு எப்படி மாற்றத்தை தருமோ?

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

 

 

 

4 thoughts on “லாவா மன்னவா-3”

  1. Super sis nice epi 👌😍❤️ kadaisila evanga renduperum dhan seranum nu eruku🤣 nerla meeting nadakumbodhu enna nadakumo parpom 🧐🤔 eagerly waiting sis 🥰

  2. லாவா மன்னவா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    அட ராமா ! விக்ரம் என்கிற பேரை கேட்டாலே, சும்மா அதிருதில்லை என்கிற மாதிரியே சிச்சுவேஷன் போகுதோ…? அதுசரி, ஊர்ல இருக்கிற எல்லா பொண்ணுங்களும் இவன் வாய்க்கும், சிகரெட் வாசத்துக்கும் பயந்து ஒருவழியா எஸ்கேப் ஆகிட்டாங்க, அப்படின்னா ஏமாந்த இளிச்சவாயா மாட்டப் போறது நம்ம ஹரிணியா..? இல்லை விக்ரமா ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. ninachen ippadi tha vara poranganu aana ippadi rendu per appavum friends ah pathu pesi mudivu agumnu ninaikala . ithuvarai ok nalaiku rendu perum patha than therium ena nadakumnu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!