Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா – 1

வஞ்சிப்பதோரும் பேரவா – 1

அத்தியாயம் 1

வசந்த கால துவக்கத்தை உணர்த்துவது போல, தன் இளஞ்சிவப்பு நிற பூக்களை தரையிலும், அருகே இருந்த சிறு குளத்திலும் உதிர்த்தபடி உயர்ந்து நின்ற செர்ரி மரங்களும், இளங்காலை நேரத்தை உணர்த்தும் வகையில் பட்டும் படாமலும் அடித்த வெயிலும், அக்காட்சியை இரண்டாம் தளத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே பார்ப்போருக்கு அலாதி இன்பத்தை கொடுத்தது என்று கூறினால், அது மிகையாகாது!

ஆனால், நம் நாயகனோ, இருக்கும் கண்கள் கணினியை காண்பதற்கே என்று எண்ணினானோ என்னவோ, அவன் விழிகள் கணினித்திரையை விட்டு நகரக்கூட இல்லை!

‘ஐடி ஹப்’ என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரத்தில், புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் திட்டப்பணி மேலாளராக (பிராஜெக்ட் மேனேஜர்) பணிபுரிபவன் தான் நம் நாயகன், ஹர்ஷவர்தன்.

மற்ற ஐடி இளைஞர்களை போல, க்ளீன் ஷேவ் அல்லது ட்ரிம்ட் பியர்ட் லுக்கில் இருப்பான் என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டால், அதற்கு நானோ அவனோ பொறுப்பாக மாட்டோம்!

முகத்தில் தாடி இருக்கிறதா, இல்லை தாடிக்குள் முகம் இருக்கிறதா என்று பிரித்தறிய சிரமப்படும் முகம் அவனது! முகமே மறைந்து விட்டது என்றால், முகத்தில் ஐம்பது சதவிகிதம் கூட இல்லாத விழிகள், நாசி, இதழ்களை எல்லாம் சாதாரண கண்களால் பார்த்துவிட முடியுமா என்ன? அதற்கென வடிவமைக்கப்பட்ட நுண்ணோக்கியை எங்கு சென்று தேடுவதோ?

ஏதோ, உடை நெறி (டிரெஸ் கோட்) என்று ஒன்று இருப்பதால், அதில் மட்டும் சிறு கவனம் செலுத்தி இருந்தான்!

ஒரு மனிதன், அவன் இளமை காலத்தில் இப்படி இருக்கிறான் என்றால், அதற்கான காரணம், அந்த ‘ஒன்றாக’ இல்லாமல், வேறு என்னவாக இருக்க முடியும்?

திங்கள் காலை… வார துவக்கம் என்ற எரிச்சல் பாதி சோம்பல் மீதி என சுமார் பத்து மணியளவில், அங்கு பணிபுரிபவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். அவற்றை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஹர்ஷவர்தன்.

அவர்களோ, செவிகளில் செவிப்பொறியும், விழிகளை கணினியிலும் வைத்தபடி, தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தவனை, வழக்கம் போல ‘ஏலியன்’ பார்வை பார்த்தபடி தங்கள் இடத்திற்கு சென்றனர்.  

ஆனால், அவன் நண்பனால் அப்படி விட்டுவிட முடியாதே!

“டேய், அப்படி உனக்கு மட்டும் என்ன ஸ்பெஷலா செய்றாங்கன்னு இப்படி மாங்கு மாங்குன்னு மாடா உழைச்சு கொட்டுற?” என்று ஹர்ஷவர்தனை நோக்கி கேள்வியெழுப்பிய வண்ணம் வந்த பிரஜனின் மனமோ, ‘இப்படி வேலை செஞ்சதால தான், இந்த சின்ன வயசுலேயே பிராஜெக்ட் மேனேஜரா ப்ரோமோட் ஆகியிருக்கான்.’ என்று கூறியதை மனதோடு விட்டு விட்டான்.

நண்பனின் கேள்விக்கு எதிர்வினையாக, அத்தனை நேரம் குனிந்து இருந்த ஹர்ஷவர்தனின் தலை நிமிர, பிரஜனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டான். அவ்வளவு தான் அவன் எதிர்வினை! அதுவும், நண்பனாகிப் போனதால் மட்டுமே!

அதில் சலித்துக் கொண்ட பிரஜனோ, “ம்ச், கொஞ்சமாச்சும் சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு ஹர்ஷா. என்னமோ வாழ்க்கையே கம்ப்யூட்டருக்குள்ள தான் இருக்க மாதிரி, நீ அதோட மல்லுகட்டிட்டு இருக்குறதை பார்த்தா பயமா இருக்கு மச்சான்.” என்று உண்மையான அக்கறையோடு கூற, ஒரு விரக்தி சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது ஹர்ஷவர்தனிடமிருந்து.

‘ஹ்ம்ம், ஒரு காலத்துல சிரிப்பே பார்த்து பொறாமை படுற அளவுக்கு இருந்தவன், இன்னைக்கு சிரிப்புன்னா என்னன்னு கேட்குற அளவுக்கு மாறி போயிருக்கான். இது என்ன வாழ்க்கையோ!’ என்று எண்ணி பெருமூச்சு விட்ட பிரஜன், அப்படியே விட்டால் சரிவராது என்று நினைத்தவனாக, ஹர்ஷவர்தனை இழுத்துக் கொண்டு சிற்றுண்டியகம் நோக்கி சென்றான்.

பிரஜனின் இழுப்பிற்கு சென்றாலும், வேலை தடைபட்ட எரிச்சலில், “ப்ச், இப்போ தான வந்த? அதுக்குள்ள கேஃபிடிரியா போகணுமா?” என்று அந்நாளில் முதல் முறையாக வாய் திறந்தான் ஹர்ஷவர்தன்.

“நான் எல்லாம் ஆஃபிஸ் வரதே, ஓசி ஏசிக்காகவும் காஃபிக்காகவும் தான் டா.” என்று பல்லிளித்த பிரஜனோ, கொட்டைவடிநீர் இயந்திரத்திலிருந்து சூடாக நுரை பொங்கும் கொட்டைவடிநீரை பிடித்துக் கொண்டு, தேவைக்கு அதிகமான சர்க்கரை பொட்டலங்களை அள்ளிக் கொண்டு, காலி இருக்கை நோக்கி நகர, அவன் செயல்களை கண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டே தனக்கான பானத்தை எடுத்துக் கொண்டு நண்பனை பின்தொடர்ந்தான் ஹர்ஷவர்தன்.

அந்த காலை வேளையில் அங்கு கூட்டம் அதிகமாக இல்லாததால், அமைதியாக இருந்த இடத்தில், ‘பிளாஷ் நியூஸ்’ என்ற பெயரில், பின்னணி இசையுடனும், அதன் நடுவே செய்திகளுடனும் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சி அதன் இருப்பை காட்டிக் கொண்டிருந்தது.

தலை, கை, கால் என உடல் பாகங்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு கொடூரமாக கிடந்த ஆணின் சடலம் – ஹைதராபாத்தை உலுக்கிய திடுக்கிடும் சம்பவம்!

என்று தலைப்பு செய்திக்கு தகுந்த ஏற்ற இறக்கத்துடன் ஒலித்த குரலில் ஹர்ஷவர்தனின் பார்வை தொலைக்காட்சி புறம் திரும்ப, அவனின் கவனத்தை திசை திருப்பியது பிரஜனின் அலைபேசி ஒலி.

அலைபேசியில் தெரிந்த பெயரைக் கண்ட பிரஜனோ, அத்தனை நேரமிருந்த இலகு பாவம் மாறி, ஹர்ஷவர்தனை முறைக்க, அவனோ ஒரு பெருமூச்சுடன் கீழே குனிந்து கொண்டான்.

நண்பனை முறைத்துக் கொண்டே அழைப்பை ஏற்ற பிரஜனோ, “ஹலோ பிரியா, எப்படிம்மா இருக்க?” என்று இயல்பாக பேச்சை ஆரம்பிக்க, மறுமுனையில் ‘பிரியா’ எனப்பட்டவள் பேசியவை ‘ஸ்பீக்கர்’ இல்லாமலேயே கேட்டது ஹர்ஷவர்தனிற்கு.

அவள் குரல்வளம் அப்படியானது அல்ல! பிரஜன் தான் ஹர்ஷவர்தனிற்கு கேட்க வேண்டும் என்று அவனருகே தள்ளி அமர்ந்தான்!

“நான் நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று வந்த அவளின் மறுமொழி வெறும் சம்பிரதாயமானது என்பதை தனியாக சொல்லி தெரிய வேண்டுமா என்ன?

அவள் குரலிலிருந்த விரக்தி எதனால் என்று பிரஜனால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லையே!

அதனை அறிந்தவனாக ஒரு பெருமூச்சுடன், “கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கும்மா?” என்று பிரஜன் வினவ, “ஹ்ம்ம், நல்லா போகுதுண்ணா.” என்று பெயருக்கு வந்தது பதில்!

முடிந்த அளவிற்கு இயல்பான கேள்விகளை கேட்டு முடித்த பின்னர், “என்கிட்ட ஏதாவது சொல்லணுமா பிரியா?” என்று பிரஜன் சிறிது சங்கடத்துடன் வினவ, அதே சங்கடத்துடன், “அவரு… அவருக்கு வேலை அதிகமா அண்ணா?” என்று பதில் கேள்வி கேட்டாள் பிரியா.

சுற்றி வளைத்து கேட்கப்பட்ட அந்த கேள்விக்கான காரணத்தை உணர்ந்த பிரஜனோ, தனக்கு முன்னே இருந்த ஹர்ஷவர்தனை முறைத்தபடி, “ஆமாம்மா,  ஒரு கிரிட்டிகல் பிராஜெக்ட்ல மாட்டிக்கிட்டான்.” என்று யாரின் மனதும் புண்படக்கூடாது என்ற எண்ணத்தில் பொய்யை கூறினான்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவளோ, “ஓஹ், சரிண்ணா.” என்றவள், சிறிது இடைவெளி விட்டு, “கல்யாணத்துக்கு டிரெஸ் எடுக்க போகணுமாம் அண்ணா. அவருக்கு எப்போ வர முடியும்னு  அத்தை கேட்க சொன்னாங்க.” என்று ஒருவழியாக அழைப்பிற்கான காரணத்தை கூறினாள் பிரியா.

தன் முன்னிருந்தவனை முறைத்து பார்த்த பிரஜனோ, தன் பதிலுக்காக காத்திருந்த பிரியாவை ஏமாற்ற விரும்பாதவனாக, “அவன் கிட்ட கேட்டு சொல்றேன்மா.” என்றான்.

அதற்கு, ஏதோ கூற வந்து தயங்கிய பிரியாவின் வாய்மொழி என்னவாக இருக்கும் என்பதை யூகித்த பிரஜனோ, கண்களை மூடி திறந்தவனாக, “நைட் அவனை பேச சொல்றேன்மா.” என்று கூற, அந்த ஒற்றை வரியில் மறுமுனையில் இருந்தவளிற்கு அப்படி என்ன மகிழ்ச்சி கிட்டியதோ, “தேங்க்ஸ் அண்ணா.” என்று உற்சாகமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

செவியிலிருந்து தன் அலைபேசியை விலக்கிய அதே நொடி, ஹர்ஷவர்தனின் அலைபேசியை கைப்பற்றி இருந்தான் பிரஜன்.

கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள், ஹர்ஷவர்தனின் அன்னை மற்றும் வருங்கால மனைவியிடமிருந்து வந்திருந்ததை கண்ட பிரஜனோ, சட்டென்று உண்டான கோபத்தை, இடம் கருதி கட்டுப்படுத்தியவனாக, “நீ செய்யுறது உனக்கே சரின்னு தோணுதான்னு யோசி ஹர்ஷா.” என்று வெகு அழுத்தத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து விருட்டென்று சென்றான்.

அத்தனை நேரம், அவன் தான் தவறு என்பதை மனதார உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, தலை குனிந்து அமர்ந்திருந்த ஹர்ஷவர்தனின் விழிகள் செந்நிறத்தை கடன் வாங்கிக் கொண்டன.

இயலாமையும், சுய கழிவிரக்கமும் சேர்ந்ததனால் உண்டான கோபம் அது!

அவனும் தானே முயல்கிறான்!

என்ன முக்கினாலும், அவன் முயற்சி தோல்வியை தழுவினால், அவனும் என்ன தான் செய்வான்?

ஒரு மாதமா இரண்டு மாதமா?

கிட்டத்தட்ட ஈராறு மாதங்கள்! மறக்க முயற்சிக்கிறான், முடியத்தான் இல்லை!

இதே அலுவலகத்தில், அவளுடன் ஜோடியாக சுற்றிய நினைவுகளை அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா?

மற்றவர்களுக்கு சாத்தியமானது, அவனிற்கு மட்டும் முடியாமல் போனது, யார் செய்த குற்றமோ?

அவனின் மௌனி… இறந்த காலத்தில் கூற வேண்டுமோ?!

பெயருக்கு எதிர்பதமாக, எந்நேரமும் சலசலத்துக் கொண்டே இருப்பவளின் குரல் இப்போதும் அவனிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறதே! அதற்காக தானே எந்நேரமும் காது கேட்காதவன் செவிட்டு இயந்திரத்தை அணிந்திருப்பதை போல, அவனும் செவிப்பொறியை அணிந்திருக்கிறான். ஆயினும், அவளின் குரலிடமிருந்து தப்பிக்க தான் முடியவில்லை!

அலுவலகமே பொறாமைப்படும் வகையில், கைகள் கோர்த்துக் கொண்டு, தோள்கள் உரசியபடி, இளஞ்சிவப்பு செர்ரி மலர்களின் ஆசீர்வாதத்தை பெற்றபடி, மணிக்கணக்காக அந்த குளத்தை சுற்றி வந்தது என்ன?

ஒருவரை ஒருவர் பார்ப்பதற்காகவே, நேரத்திற்கு முன்னரே வந்து அலுவலகத்தை காவல் காத்தது என்ன?

அனைத்தும் முக்தி பெற்றது அவளின் அந்த ஒரு வாக்கியத்தினால்!

“நீ எனக்கு செட்டாக மாட்ட ஹர்ஷவர்தன். லெட்ஸ் பிரேக்கப்!” – இன்றும் அவள் உதிர்த்த வார்த்தைகள் அவன் இதயத்தை கூரிய அம்பென ஊடுருவி, மேலும் மேலும் ரணப்படுத்துடுகிறதே!

இப்போது அதை எண்ணும்போதும், “ஹர்ஷவர்தனா? கடைசியா நீ எப்போ அப்படி கூப்பிட்டன்னு கூட எனக்கு ஞாபகம் இல்லையே மௌனி!” என்று பைத்தியக்காரத்தனமாக தானே எண்ணத் தோன்றுகிறது அவனிற்கு!

‘எதில் நான் தவறிப் போனேன்?’ – இக்கேள்விக்கு பதில் தெரிந்தாலும், ஏற்றுக்கொள்ள மனமின்றி, அதை யோசிக்க பயந்து, இப்போதும் அல்லவா தடுமாறுகிறான்.

அவன் யோசிக்காமல் போனால், மற்றவர்கள் சும்மா விடுவரா?

“அவ சரியான சுயநல பிசாசு ஹர்ஷா!”

“உன்கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தப்போவே, அவனோட பழகிட்டு இருந்துருக்கா.”

“பணத்துக்காக உன்னை விட்டு அடுத்தவனை பிடிச்சுக்கிட்டா!”

இப்படி பலவற்றை பலரும் சொல்ல, ‘காதல்’ என்ற பித்து நிலையில் இருந்தவனோ, அவர்களை தானே பழித்தான்!

அவர்கள் கூறுவது முற்றிலும் பொய்யில்லை என்று மூளைக்கு புரிந்தாலும், அவள் மீது அளப்பரிய பிரியம் கொண்ட இதயம் ஏற்றுக்கொள்ள மறுத்ததே!

தன் கரம் பற்றி சுற்றி வந்த இதே அலுவலகத்தில், உரிமையாக வேறொருவனின் கரம் பற்றி சுற்றி வந்ததை பார்த்தபோது கூட முழுமையாக விட்டுக் கொடுக்க முடியவில்லை, இந்த முட்டாள் காதலனிற்கு!

கணக்கிலடங்காத அழைப்புகள், குறுஞ்செய்திகள்… அத்தனையும் நிர்தாட்சண்யமாக தவிர்க்கப்பட்டன அவளால்.

இறுதியாக, அவனின் முயற்சிகள் முற்றுப்பெறும் நேரமும் வந்தது, அவள் திருமணம் என்று பத்திரிக்கையை நீட்டியதுடன் நிறுத்தாமல், “யஷுக்கு நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி தெரியாது. நீயும் சொல்லிடாத.” என்ற எச்சரிக்கையும் சேர்த்து விட, ஒரு விரக்தி சிரிப்பு மட்டுமே அவனிடம்!

அன்று தோன்ற ஆரம்பித்த விரக்தி சிரிப்பு, இன்று வரை அவ்வபோது, தாடிக்குள் மறைந்து போன அவன் இதழை அலங்கரித்து கொண்டிருந்தது!

கடந்த காலத்தை கால பயண இயந்திரத்தை கொண்டு நிமிடத்தில் கடந்ததை போல இருந்தாலும், அதில் அவன் அனுபவிக்கும் வலிகள் கூட முந்தையவற்றிற்கு சற்றும் வீரியம் குறையாமல் இருக்க, தன் விதியை நிந்தித்தபடி, இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க சென்றான் ஹர்ஷவர்தன்.

*****

பிறை நிலா வானில் உலவ ஆரம்பித்து இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க, சில்லென்று வீசும் காற்றை தேகத்தில் தாங்கியபடி, பால்கனி கம்பியில் கை வைத்து சாய்ந்திருந்தான் ஹர்ஷவர்தன்.

அவன் மனமோ, சமீபத்திய வழக்கமாக, இரு புறமென பிரிந்து வாதாடிக் கொண்டிருந்தது.

‘நீ செய்யுறது ரொம்ப தப்பு ஹர்ஷா! உன் வாழ்க்கை பாழாகுறதோட அந்த பொண்ணோட வாழ்க்கையும் பாழாகப் போகுது!’

‘நானா கல்யாணம் வேணும்னு ஒத்தைக் காலுல தவமிருந்தேன். வேண்டாம் வேண்டாம்னு எவ்ளோ சொல்லியும் ஒத்துக்காம, இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தாச்சு!’

‘அதுக்காக அப்படியே விடப்போறியா?’

‘வேற என்ன செய்ய? முடியாதுன்னு சொல்றவனை பிளாக்மெயில் செய்யாத குறையா கம்பெல் பண்ணா, அதுக்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியது தான்!’

இப்படி மாறி மாறி தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தியவனின் மனமோ, அவளின் பேச்சை அசைபோட்டுக் காட்டியது.

“எனக்கு உங்க மனசும், சூழ்நிலையும் புரியுது ஹர்ஷா. ஆனா, அத்தை மாமா சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன். அவங்களுக்காக இல்லன்னாலும், உங்களுக்காக! எத்தனை வருஷம் இப்படி தனியா இருக்க முடியும்? பேச்சுக்கு வேணும்னா, எல்லாமே ஈஸியா இருக்கும். ஆனா, பிராக்டிகலா அது ரொம்ப கஷ்டம் ஹர்ஷா. இளமைக்கு வேணும்னா தனிமை போதுமானதா இருக்கலாம். ஆனா, முதுமையை கடக்க ஒரு துணை கண்டிப்பா தேவை. அந்த துணையா ஏன் நான் இருக்கக்கூடாது, ஹர்ஷா?” என்றவளின் பேச்சு இப்போதும் அவனிற்கு வியப்பாக தான் இருந்தது.

“நீ சொல்றது பிராக்டிகலா ஒத்து வருமான்னு நீயே யோசி வது. முதுமைக்கு ஒரு துணை – அதுக்காக ஒரு கல்யாணம்! சரியா வருமா?” என்று ஹர்ஷவர்தன் கேட்டிருக்க, “ஒத்துக்குறேன் ஹர்ஷா. இது அபத்தமான முடிவு தான். ஆனா, இப்போ நீங்க இருக்க சூழலுக்கும், நான் இருக்க சூழலுக்கும், இது தான் சரியான முடிவா எனக்கு தோணுது. உங்க மனநிலை கொஞ்சம் மாறுறதுக்கு வேணும்னா, ஒரு வருஷம் இந்த கல்யாணத்தை தள்ளி போடலாம்.” என்றாள்.

அவளின் பேச்சைக் கேட்ட ஹர்ஷவர்தனிற்கு, அதற்கு மேல் என்ன சொல்லி தவிர்க்க என்று தெரியவில்லை. எதுவும் தோன்றவும் இல்லை. ஒரு வருடம் இருக்கிறதென்று எண்ணி விட்டு விட்டானோ என்னவோ!

அப்போதும் சரி, இப்போதும் சரி, அவன் யோசிக்காமல் விட்டது அவள் கூறிய ‘நான் இருக்க சூழல்’ என்பதை தான்!

எப்போதாவது அதை யோசித்திருந்தால், பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாமோ!

பழையவைகளில் மூழ்கி இருந்தவனை கலைத்தது அவனின் அலைபேசி ஒலி.

படுக்கையறையில் இருந்த அலைபேசியை எடுக்க ஹர்ஷவர்தன் விரைய, அதற்குள் பிரஜனே அதை எடுத்து வந்து ஹர்ஷவர்தனின் கைகளில் திணித்திருந்தான்.

காலையில் கோபமாக பேசி சென்றது தான்! அதன்பின்னர், வீட்டிற்கு வந்த பின்னரும் கூட கோபத்தை குத்தகைக்கு எடுத்ததை போல சுற்றிக் கொண்டிருந்த பிரஜனிடம், ஹர்ஷவர்தன் பேச முயன்றதெல்லாம் வீணாக போயிற்று.

இதோ, இப்போது கூட ஹர்ஷவர்தன் ஏதோ பேச முயல, அலைபேசியை கண்களால் காட்டிவிட்டு, உள்ளே சென்று விட்டான் பிரஜன்.

ஒரு பெருமூச்சுடன், ஹர்ஷவர்தன்  அலைபேசியை நோக்க, அதில் அவன் எதிர்பார்ப்பை ஏமாற்றாதபடி ஒளிர்ந்தது ‘பிரியம்வதா’ என்ற பெயர்!

*****

‘இன்றைய காலக்கட்டத்தில் கூட இப்படியா?’ என்று ஹர்ஷவர்தனை அதிசய பிறவியாக பார்க்க தோன்றலாம்!

என்ன செய்ய, மனிதர்களின் மனம் விந்தையானது தானே!

ஒரு வருடமாகியும் மறக்க முடியாதவை, நிமிடங்களில் மறந்து போகலாம். இதுவரை எண்ணத்தில் இல்லாதவை, மறக்க முடியாதவையாக மாறியும் போகலாம்!

அனைத்திற்கும் சரியான காலமும் சூழலும் அமைய வேண்டும் அல்லவா?

ஒருவருடமாக மந்தமாகி விட்ட அவன் வாழ்க்கை, இதோ ‘ரோலர் கோஸ்டர்’ பயணத்திற்கு தயாராகி விட்டது. காலமும் சூழலும் அதன் விளையாட்டை ஆரம்பித்து விட்டது! இனி..?!

தொடரும்…

16 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *