Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 3

வஞ்சிப்பதோரும் பேரவா! – 3

அத்தியாயம் 3

இரண்டு மாதங்கள் இரு நொடிகளென கடந்திருக்க, இதோ ஹர்ஷவர்தன் மற்றும் பிரியம்வதாவின் திருமணம் அன்று காலையில் இனிதே நிறைவுற்றிருக்க, மதியமே இருவரும் வரவேற்பிற்கான உடையில் மேடையில் நின்று கொண்டிருந்தனர்.

திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், திருமணம் செய்து கொண்டவர்களின் முகத்திலோ, மகிழ்ச்சியின் சாயல் துளி கூட இல்லை என்பதே உண்மை.

ஹர்ஷவர்தனின் பட்டும் படாத போக்கு, பிரியம்வதாவிற்கு பதற்றத்தை கொடுத்திருக்க, அத்தனை எந்நேரம் எது நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்தாள் என்றால், அதற்கு காரணகர்த்தாவோ, கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருந்தான்.

இந்த போராட்டம் இப்போதல்ல, திருமனத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்ததிலிருந்தே, அவன் மனதிற்குள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!

திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலிருந்து, திருமண உடைகள் வாங்கியது வரை, அவன் மனம், ஒரு காலத்தில் அவனவளாக எண்ணியிருந்தவளுடனான உரையாடல்களை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்து வேதனையுற்றது.

*****

ஒன்றரை வருடத்திற்கு முன், இளஞ்சிவப்பு பூக்களை உதிர்த்து, அந்த குளத்தையும் அதை சுற்றியுள்ள இடத்தையும் ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்த அதே செர்ரி மரத்தில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தது, அந்த அலுவலகம் போற்றும் காதல் ஜோடி.

தன் மேல் சாய்ந்திருந்தவவளின் தலையை மெல்ல கோதியபடி, வானத்தில் பறந்து கொண்டிருந்த புள்ளினங்களை ரசித்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். அவன் மீது சாய்ந்திருந்த மௌனிகாவோ, அவன் விரல் கொடுத்த சுகத்தில் சொக்கி கண்களை மூடியபடி இருந்தாள்.

இரண்டொரு நொடிகள் மௌனமாக இருந்தவள், அதற்கு மேல் முடியாதவளாக, “ஹர்ஷு, உனக்கு நம்ம கல்யாணம் எப்படி நடக்கணும்னு எதுவும் ஆசை இருக்கா?” என்று வினவ, அவனோ கண்களை மூடி அவள் கூறிய தருணத்தை கற்பனை செய்தவனாக, “ஹ்ம்ம், கல்யாணம் உன்னோட நடந்தா போதும் மௌனி. வேற எந்த ஆசையும் எனக்கு இல்ல.” என்று அதனை ரசித்து உணர்ந்து கூறியவன், “ஆனா, நீ ஒரு பக்கெட்லிஸ்ட்டே வச்சுருப்பன்னு தெரியும். எங்க உன் ஆசையெல்லாம் ஒவ்வொன்னா சொல்லு, நடக்குமா நடக்காதான்னு நான் சொல்றேன்.” என்று அவளை கேலியும் செய்தான்.

அவளோ பொய் கோபம் கொண்டு முறைத்தவளாக, “ஹ்ம்ம், ஆமா, பெரிய பக்கெட்லிஸ்ட் தான். நம்ம வாழ்க்கைல ஒரே ஒரு முறை நடக்கப் போற, நமக்கே நமக்கான நிகழ்வு நம்ம கல்யாணம். அதுக்கு இந்த லிஸ்ட் கூட இல்லன்னா எப்படி? நல்லா கேட்டுக்கோங்க, நான் சொல்றதுல ஒன்னு குறைஞ்சா கூட, நம்ம கல்யாணத்தை பத்தி யோசிக்க வேண்டியது இருக்கும்.” என்று இதழை தாண்டி வெளிப்படும் சிறு சிரிப்புடன் கூறினாள் மௌனிகா.

*****

‘உன் ஆசைகளை நிறைவேத்த மாட்டேன்னு நீயே நினைச்சு தான் நம்ம காதலை தூக்கி எரிஞ்சுட்டு போனியா மௌனி!’ என்று மூளை முட்டாள் என்று திட்டியும் மனதோடு நினைத்துக் கொண்டான் ஹர்ஷவர்தன்.

அதன்பிறகான திருமண வேலைகளில், இந்நினைவுகள் சொல்லாமல் கொள்ளாமல் அவன் மனதில் ஓடியபடி இருந்தன.

மணமகனும் மணமகளும் பல்லக்கில் போவது போல அலங்கரிக்கப்பட்ட அழைப்பிதழை வேண்டாம் என்று மறுத்து, விநாயகர் படத்துடன் இருந்த அழைப்பிதழை தேர்ந்தெடுத்தது முதல், பிரியம்வதா தனக்கு பிடித்திருப்பதாக கூறிய இரண்டு சேலைகளில், கவனமாக இளஞ்சிவப்பு நிறத்தை தவிர்த்து அடர்சிவப்பு நிறத்திலான சேலையை தேர்ந்தெடுத்தது வரை, அனைத்திலும் அவனை ஆட்கொண்டிருந்தாள் அவனின் முன்னாள் காதலி.

அது தவறென்று தெரிந்தும், தவிர்க்க முடியாத துர்பாக்கியசாலியானான் ஹர்ஷவர்தன்.

ஒரு கட்டத்தில், அவனின் செயல்கள் பிரியம்வதாவிற்கும் புரிய ஆரம்பிக்க, அவளால் மட்டும் என்ன செய்துவிட முடியும். ஒரு பெருமூச்சுடன் கடக்க பழகியிருந்தாள்.

அவளின் வாழ்நாள் முழுவதும் இந்த பழக்கம் தொடருமா? விடை ஹர்ஷவர்தனின் கைகளில்!

இதோ வரவேற்பு மேடையில், சம்பிரதாய சிரிப்புடன், வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறியபடி இருந்தவன் மறந்தும் மனைவியாக அருகில் நின்றவளை திரும்பி பார்க்கவில்லை.

இது ஒருபுறம் பிரியம்வதாவிற்கு எரிச்சலை தந்தாலும், அவளின் நியாயமான மனசாட்சியோ, ‘இஷ்டம் இல்லைன்னு ஒதுங்கி இருந்தவரை, நீயும் அவரோட குடும்பமும் தான் இழுத்து பிடிச்சு கல்யாணம் நடத்தி இருக்கீங்க. இதுல, கல்யாணமான உடனே உன்கிட்ட சகஜமா பேசணும்னு எதிர்பார்க்குறது எந்தவிதத்துல நியாயம்? அதுவும், ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்து ஏமாந்து வந்தவரோட மனநிலை எப்படி இருக்கும்? நீ எடுத்த முடிவு இது! சோ, அதுக்கான விளைவுகளை எல்லாம் நீ சந்திச்சு தான் ஆகணும்.’ என்று எடுத்துக்கூற, பிரியவதாவிற்கும் அது சரியென்று பட்டதால், சிறிது காலத்திற்கு அவனின் இந்த ஒதுக்கத்தை சகித்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

மணமக்கள் இருவரின் மனநிலை இவ்வாறாக இருக்க, அவர்களுக்கென்று காத்திராத நேரமோ வேகமாக கடந்து செல்ல, ஒருவழியாக மாலை வேளையில் ஜோடியாக ஹர்ஷவர்தனின் இல்லத்திற்கு திரும்பி இருந்தனர்.

பிரியம்வதாவிற்கு தாய் தந்தை எல்லாம் அவளின் கணேஷப்பா தான். அறியாத வயதில் தாய் விட்டுச் செல்ல, புரிந்தும் புரியாத வயதில் தமக்கை விட்டுச் செல்ல, தனித்து விடப்பட்டனர் தந்தையும் மகளும்.

என்னதான் வாழ்க்கை பல இழப்புகளை தந்தாலும், ஹர்ஷவர்தனின் குடும்பத்தினரை போல் சில நல்ல உள்ளங்களையும் துணைக்கு தந்திருந்தது.

பிரியம்வதாவின் தந்தை கணேஷும், ஹர்ஷவர்தனின் தந்தை இளங்கோவும் ஒரு வங்கியில் தான் வேலை பார்த்து வந்தனர். மேலும், இருவரின் வீடும் அருகே இருக்க, இரு குடும்பத்தினருக்கும் நல்ல பழக்கவழக்கம் இருந்து வந்தது.

தாய் இல்லாத பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே பாவித்தார் ஹர்ஷவர்தனின் தாய் வள்ளி. அதுவும், பிரியம்வதாவின் தமக்கை பிரார்த்தனா இறந்த சமயம், தன்னிலையிலேயே இல்லாமல் தவித்து கதறிய பிரியம்வதாவை தன் இல்லத்தில், தனக்கருகே வைத்து பார்த்துக் கொண்டார் வள்ளி.

அதற்கான நன்றி இப்போதும் கணேஷிற்கு வள்ளி மீது உண்டு!

அதன் காரணமாகவோ என்னவோ, இளங்கோ, ஹர்ஷவர்தன் – பிரியம்வதா திருமணத்தை பற்றிய பேச்சை ஆரம்பித்த போது, சிறு யோசனையும் இன்றி சம்மதித்திருந்தார் கணேஷ். இத்தனைக்கும், ஹர்ஷவர்தனின் காதல் கதை அவருக்கு தெரிந்தே இருந்தது!

அது பற்றிய தயக்கத்தில் பிரியம்வதா தடுமாறி நின்ற போது, “பிரியாம்மா, எல்லாரோட வாழ்க்கையிலேயும் சில மறக்க வேண்டிய நிகழ்வுகள் நடந்திருக்கும். அதை கடந்து வாழ முற்படனும். ஒன்னு, நம்மளா கடக்க முற்படனும், இல்ல, நமக்கான துணையின் உதவியோட கடக்க முயலனும்.” என்று கூறிய கணேஷ், ஒரு பெருமூச்சை விடுவித்து, “ஹர்ஷா தம்பியை கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தேன்மா. முகமே களையிழந்து, உயிர்ப்பே இல்லாம, கடனுக்கேன்னு வாழ்ந்துட்டு இருக்காரு. அந்த பொண்ணு மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருப்பாரு போல. பாவம், ரொம்ப உடைஞ்சு போய் தெரியுறாரு. அவரை பழைய ஹர்ஷா உன்னால மாத்த முடியும்னு வள்ளியும் இளங்கோவும் நம்புறாங்க. நமக்கு நல்லா தெரிஞ்ச குடும்பம், குறைன்னு சொல்ல பெருசா எதுவும் இல்லை. அதான், இளங்கோ கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன். அதுக்காக, உன் விருப்பத்தை மதிக்காம இருக்க மாட்டேன் மா. உனக்கு இதுல விருப்பம் இல்லன்னா தாராளமா சொல்லு.” என்று கணேஷ் பெரியதொரு விளக்கம் கொடுக்க, பிரியம்வதாவும் யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.

அவள் மனமோ ஏதேதோ கணக்குகளை போட, தந்தைக்கு கூட தெரியாத ரகசியத்தை எண்ணி பேதையின் இதயம் படபடக்க, அது எப்போதும் தெரியக் கூடாது என்றால், ஹர்ஷவர்தனை திருமணம் செய்வது தான் ஒரே வழி என்று எண்ணி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள் பிரியம்வதா.

அது மட்டுமா, ஹர்ஷவர்தனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க, வருங்கால மருமகளையே தூது அனுப்பியிருந்தார் மாமியார் வள்ளி.

அதன்படி, இருவருக்கும் சாதகமாக இருக்கும் முடிவான, ஒரு வருடத்திற்கு பின் திருமணம் என்ற முடிவை பிரியம்வதா எடுத்திருக்க, அதற்கு மௌனத்தை பதிலாக்கி இருந்தான் ஹர்ஷவர்தன். சூழ்நிலைகளால் சரியாக யோசிக்க கூட முடியாத மனநிலையில் இருந்த ஹர்ஷவர்தனோ, பிரியம்வதாவிற்கு இந்த முடிவினால் என்ன பயன் என்பதை யோசிக்க மறந்து தான் போயிருந்தான்!

இதோ, தன் நினைவுகளை மீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பிரியம்வதாவை கலைத்தது வள்ளியின் குரல்.

“பிரியா, வந்து விளக்கேத்து டா.” என்று வள்ளி கூற, பழக்கப்பட்ட இடம் என்பதால் எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் மாமியார் சொன்னதை செய்து முடித்தாள் பிரியம்வதா.

அவள் தன் வீட்டில் பொருந்தி வளைய வருவதை பார்த்த ஹர்ஷவர்தனிற்கோ தேவையில்லாமல் சில காட்சிகள் மனதில் விரிந்தன.

*****

“ஹர்ஷு, என்னை உங்க வீட்டுல ஏத்துப்பாங்க தான?” என்று கழுத்தை சுற்றியிருந்த ஸ்டோலை திருகியபடி மௌனிகா வினவ, அவளின் முகத்திலிருந்த கவலையை அப்போதே நீக்கி விடவேண்டி, இழுத்து தன் கைவளைவிற்குள் கொண்டு வந்த ஹர்ஷவர்தனோ, “இதுல என்ன சந்தேகம் மௌனி உனக்கு? அம்மாக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடிச்ச உன்னையும் பிடிக்கும். அப்பாக்கு அம்மா சொல்றது தான் எல்லாமே! சோ, நம்ம லவ் ஸ்டோரிக்கு அவங்க எதிரி இல்ல.” என்று ஆவலுடன் கூறியிருந்தார்.

அவர்களின் காதலுக்கு அவளே எதிரி என்று பாவம் அவனிற்கு அப்போது தெரியவில்லை!

“ஹ்ம்ம், ஆனா, எனக்கு என்னமோ பயமா இருக்கு ஹர்ஷு. வீட்டு வேலையெல்லாம் எனக்கு தெரியாதே. அதுக்கு உங்க அம்மா ஏதாவது சொல்வாங்களா?” என்று மௌனிகா கேட்க, இதழ் பிரித்து சிரித்தவனோ, “அட எதுக்கு இவ்ளோ பயம் மௌனி. உனக்கு ஒன்னு தெரியுமா, அம்மாக்கு கேர்ள் பேபின்னா அவ்ளோ இஷ்டமாம். எனக்கு அப்பறம் பேபி கேர்ளுக்கு டிரை பண்ணாங்களாம். ஆனா, சில காம்பிகேஷன்ஸால முடியாம போயிடுச்சுன்னு சொல்லி எவ்ளோ வருத்தப்படுவாங்க தெரியுமா. இப்போ கூட, வீட்டுல பொண்ணுங்க வளைய வந்தா மங்களகரமா இருக்கும்னு சொல்லுவாங்க. சோ, நீ ரொம்ப வொரி பண்ணிக்க வேண்டியதில்ல. உனக்கு தெரியாததை அவங்களே சொல்லி கொடுத்து, உன்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க.” என்று மௌனிகாவிற்கு சமாதானம் கூறியவனின் மனக்கண்ணில், அவன் விடுமுறைக்கு சென்றிருந்த சமயங்களில் எல்லாம், வீட்டிற்கு வந்து செல்லும் அக்கா தங்கையின் முகங்கள் வந்து போனது.

பள்ளி படிக்கும்போது தான் இருவரிடமும் அவன் பேசியிருந்தான். அதிலும், பிரியம்வதாவிடம் பேசியவை தான் அதிகம். மற்றவர்களுக்கு ‘பிரியா’ என்றால் அவனிற்கு மட்டும் ‘வது’வாகி இருந்தாள்.

அதன்பிறகு கல்லூரி விடுதியில் தங்கி படித்ததால், அவர்களின் தொடர்பு தற்காலிகமாக நின்று போனது. அதிலும், பிரார்த்தனா இறந்த சமயம், அவன் தேர்வுகளில் மாட்டிக் கொண்டதால், வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

“ம்ம்ம், ஏதோ சொல்றீங்கன்னு நம்புறேன். மத்தபடி, வீட்டு வேலையெல்லாம் நானே செய்யணும்னு எதிர்பார்க்க கூடாது. நீங்களும் ஹெல்ப் பண்ணனும்.” என்று மௌனிகா கூற, தன் நினைவுகளிலிருந்து வெளிவந்தவனோ, “பார்றா, அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது! இன்னும் என்னென்ன பண்ணனும்னு லிஸ்ட் வச்சுருக்கீங்களா மேடம்.” என்று சிரிப்புடன் அவன் கேட்க, அதன்பிறகான நொடிகள் எல்லாம் அவர்களுக்கே உரியதாக மாறி இருந்தது.

*****

மீண்டும் கடந்த காலத்திற்கு பயணப்பட்டிருந்தவனை கலைத்தது வள்ளியின் குரல்.

“ஹர்ஷா, அப்படி என்ன யோசனை உனக்கு? பிரியா எவ்ளோ நேரம் தான் பால் டம்ப்ளரை நீட்டிட்டு இருப்பா?” என்று வள்ளி கூற, நிகழ்விற்கு வந்தவனோ, அதை பார்த்து, ‘இது வேறயா?’ என்று எண்ணியபடி தயக்கத்துடன் வாங்கி அருந்தினான்.

அதற்கும் பழைய நினைவுகளுக்குள் ஓடிச்சென்று தஞ்சம் புக நினைக்கும் மனதை அடக்கியவன், அந்த சம்பிரதாயங்களை எல்லாம் முடித்தான்.

திருமணத்தினால் உண்டான உடல்வலியை மிஞ்சும் அளவிற்கு அவன்  மனதும் யோசித்து யோசித்து சோர்வாகி, ஓய்விற்கு கெஞ்ச, தன்னறைக்கு. விரைந்தவனை தடுத்த அவன் அத்தை முறையில் இருக்கும் பெண்மணியோ, “நீ வேற ரூமுக்கு போ ஹர்ஷா. உன் ரூம்ல, முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு.” என்று நடுவீட்டில் நின்று கத்தி சொல்ல, ஹர்ஷவர்தனிற்கு தான் எங்காவது தலையை முட்டிக் கொள்ளலாமா என்று அளவிற்கு ஆத்திரம் வந்தது.

மனம் விரும்பிய திருமணத்தில் இது போன்ற பேச்சுக்கள் வந்தாலே, வெட்கம் ஒருபுறம் என்றாலும் சிறு எரிச்சலும் அதனுடனே வரும் தானே! அப்படியிருக்க, திருமணம் முடிந்த கையோடு அந்த முடிவு சரியா தவறா என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், இவை போன்ற கேலிப் பேச்சுகளை ரசிக்க முடியுமா என்ன?

ஹர்ஷவர்தனோ, வந்திருந்தவர்களை எதுவும் கூற முடியாமல், வள்ளியை முறைத்தபடி வேறொரு அறைக்குள் சென்று பட்டென்று கதவை அடித்து சாற்றியிருந்தான்.

அவன் கோபத்தை கண்ட பிரியம்வதாவோ ஒரு பெருமூச்சுடன், ‘இதெல்லாம் எங்க போய் முடியுமோ?’ என்ற நிலையில் நின்று கொண்டிருக்க, வழக்கமாக மாமியார் கூறுவது போல, “அவனுக்கு ஏதோ டென்ஷன். அதான் கோபத்துல இருக்கான்.” என்று சமாளிக்க முயன்றார் வள்ளி.

‘உண்மை என்னன்னு தெரிஞ்ச என்கிட்டேயே இப்படி உருட்டுறீங்களே அத்தை.” என்று வள்ளியின் காதில் பிரியம்வதா முணுமுணுக்க, மாமியாரும் மருமகளும் சிரித்துக் கொண்டனர்.

அறைக்குள் சென்ற ஹர்ஷவர்தனோ தளம்பலான மனநிலையில் தான் இருந்தான்.

அவனால் முடியவே இல்லை!

எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும், மனம் சொல்பேச்சு கேட்காமல், பழைய நினைவுகளை கிளறியபடி இருந்தது. அது, அவனின் பதற்றத்தை மேலும் அதிகரிக்க, அதன் வெளிப்பாடு தான் தேவையே இல்லாத கோபங்கள்!

திருமணத்திற்கு தயாராக சொல்லி காலையில் எழுப்பிய தாயிலிருந்து, ஜோடியாக நின்று போஸ் கொடுக்க சொன்ன புகைப்பட கலைஞர், திருமண பரிசை மட்டும் வழங்காமல் இலவசமாக அறிவுரை என்ற பெயரில் கண்டதையும் பேசிய நண்பர்கள், இறுதியாக முதலிரவை பற்றி பேசிய அத்தை என்று அனைவரிடமும் தன் கோப முகத்தை வெளிப்படுத்தினான்.

அதை எண்ணி, தன்னைத்தானே திட்டியும் கொண்டான்.

‘விட்டுட்டு போனவளையே எந்நேரமும் நினைச்சுட்டு இருக்க அளவுக்கு கண்ட்ரோல் இல்லாம இருக்கியா? ஏற்கனவே கல்யாணமான ஒருத்தியை இன்னும் நினைச்சுட்டு இருக்கியே, உனக்கு அசிங்கமா இல்ல?’ என்று அவன் மனசாட்சி காறித் துப்பியும் கூட, அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் உண்மை.

‘ப்ச், இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்கவே கூடாது!’ என்று எண்ணியபோது தான் சரியாக பிரஜன் அழைத்திருந்தான்.

நண்பனின் திருமணத்திற்கு கிளம்பும் வேளையில், அவன் அன்னைக்கு விபத்து நடந்திருப்பதாக தகவல் வந்திருக்க, அவனால் திருமணத்திற்கு வர இயலாமல் போனது.

அதற்காக தான் இப்போது வாழ்த்து சொல்ல அழைத்திருந்தான். ஆனால், அவனின் கெட்ட நேரமோ என்னவோ, ஹர்ஷவர்தனின் கோபம் முழுமையாக அவனிடம் சென்று சேர்ந்தது.

அழைப்பை ஏற்றதிலிருந்து, விடாமல் திட்டிக் கொண்டே இருக்க, ஒருகட்டத்தில் நண்பனை சமாளிக்க முடியாமல் அழைப்பை துண்டித்திருந்தான் பிரஜன்.

“உஃப், உண்மைலேயே பிரியா பொண்ணு ரொம்ப பாவம்.” என்று பெருமூச்சு விட்டான் பிரஜன்.

*****

இதே சமயம், யஷு பேலஸில்…

அந்தகார இருளில் மூழ்கியிருந்த அந்த பெரிய அறையில், மேஜை இருந்த சிறு இடத்தை மட்டும் தன் வெளிச்சத்தை கொடுத்து இருளை விரட்டியிருந்தது அந்த மஞ்சள் நிற விடிவிளக்கு.

மேஜைக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த மௌனிகா, அவளின் குறிப்பேட்டில் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

இப்போ எல்லாம் நான் தப்பான முடிவு எடுத்துட்டேனோன்னு ரொம்ப தோணுது. சாப்பிட அறுசுவை உணவு, உடுத்திக்க பிராண்டாட் டிரெஸ், போயிட்டு வர கார், இருக்க பேலஸ்னு எல்லாமே இருந்தாலும், ஏதோ இல்லாத ஃபீல்! யஷு இப்போ எல்லாம் ரொம்ப பிஸியா இருக்கார். வாரத்துல ரெண்டு நாள் தான் வீட்டுக்கே வரார். கேட்டா, பிசினஸ் ரொம்ப டைட் ஸ்கெட்யூலா இருக்குன்னு சொல்றார். எனக்கு அதை நம்புறதா வேணாமான்னு தெரியல. அதை விட, இப்போலாம் அவர் என்னை விட்டு விலகி போற மாதிரி தோணுது. இது எல்லாம் என்னோட கற்பனையா இல்ல உண்மையான்னே எனக்கு புரியல. ஒருவேளை, தனிமை என்னை பைத்தியமாக்கிடுச்சோ என்னவோ. இதை விட கொடுமை என்னன்னா, இதை அம்மா கிட்ட சொன்னா, அவங்க மாப்பிள்ளை புராணம் பாடுறாங்களே தவிர, என்னை புரிஞ்சுக்க மாட்டிங்குறாங்க. என்னமோ தப்பா நடக்கப் போகுதுன்னு என் நெஞ்சு படபடக்குது. இதை எல்லாம் யாருக்கிட்ட சொல்றதுன்னும் தெரியல!

இப்படி எழுதிக் கொண்டே வந்தவளின் மனதில் கேளாமல் அவன் பிம்பம் வந்து போக, ‘ஹர்ஷு’ என்று முணுமுணுத்தவள், அவள் அறியாமலேயே அவன் பெயரை அந்த குறிப்பேட்டில் எழுதியிருந்தாள்!

தொடரும்…

7 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *