Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம்-12

வாழ நினைத்தால் வாழலாம்-12


அத்தியாயம்—12

காரண காரியங்கள் இல்லாமல் சம்பவங்கள் நடக்கும் போது தான் மனிதனுக்கு விதியின் ஞாபகம் வரும். போராடிக் கொண்டே இருக்கும் போது ஸ்டாப்….நீ போராடி பயனில்லை….என்னிடம் விட்டுவிடு என்று ஒரு கண்ணுக்குத் தெரியாத கை இயங்கும் அதிசயம் தான் சென்ற ஜன்மத்தில் செய்த பாபமோ.?

சந்தியா பார்த்துக் கொண்டிருக்கும் போதே ராஜகோபாலை ஸ்டிரெச்சரில் வைத்து கொண்டு போனார்கள். ஆம்புலன்ஸ் விரைந்து சென்று விட்டது. ஊமை போல் நின்று கொண்டிருந்தாள்.

என்ன சந்தியா.? எதுக்கு மலச்சு நிக்கிறே.? உனக்கு இந்த சிறை வாழ்க்கையிலிருந்து விடுதலை. பறவை போல் சிறகை விரித்துப் பற. வானம் முழுக்க பற…..பற….பற.

என் மனம் என்னும் சிறகு கருகிவிட்டது. நான் வீழ்த்தப்பட்ட ஜடாயு பறவை. குற்றுயிரும் கொலையுயிருமாய் ராமனுக்காக காத்திருக்கும் ஜடாயு பறவை. அவளுக்கு எந்த ராமன் வரப் போறான்.? அக்கம் பக்கத்து சாதாரண மனிதர்கள் தான் வந்து எட்டிப் பார்த்தார்கள். என்னாச்சு ராஜகோபாலுக்கு.? எங்கே போகிறார்.? இது தெரியாவிட்டால் அவர்கள் தலை வெடித்து விடுமே.!

“சந்தியா….என்னாச்சு.? சாரை எதுக்கு ஆம்பூலன்சில் கொண்டு போறாங்க.? எனி திங் சீரியஸ்.?” என்று கஜேந்தரன் கேட்டார். மற்றவர்கள் அவள் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்தனர்.

“அவரை….அவரை ஹோமில் சேர்க்க வந்த ஆம்புலன்ஸ் தான். நத்திங் சீரியஸ்.” என்றாள் கஷ்டப்பட்டு வாய் திறந்து.

“ஓ….கடைசியில் பாவம் அந்த மனுஷனை ஹோமில் சேர்த்திட்டியா.? நீ இனிமே ப்ரீ தான்….”

அவளை குற்றம் சாட்டுவது போல் பேசினாள் அலமேலு.

“அவர் தான் இந்த ஏற்பாடு பண்ணியிருக்கார். எனக்கு தெரியவே தெரியாது மாமி.” என்று சொன்னாள் சந்தியா பலகீனமான குரலில். யாரும் அவளை நம்பப் போவதில்லை….

‘என்னமோ மா….என் நாத்தனார் புருஷன் பதினைஞ்சு வருஷமா கிடயா கிடக்கிறார். என் நாத்தனார் தான் பார்த்திட்டு இருக்கா. உனக்கு அதுக்குள்ளே அலுத்து போச்சு. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே சந்தியா….இந்த பாவம் உன்னை சும்மா விடாது.”

ஆளாளுக்கு கூட்டம் இப்படி சொல்லிக் கொண்டு நிற்க….பிரபா காரில் வந்து இறங்கினாள்.

“அக்கா….” என்று ஓடிப் போய் அவளை கட்டிக் கொண்டாள் சந்தியா. இதுவரை அடம் பிடித்து நின்ற கண்ணீர் அக்காவை கண்டதும் பீறிட்டு வந்தது. கதறியபடி தோளில் சாஞ்சா. பிரபா அவளை தோளிலிருந்து அகற்றி..

“என்ன காரியம் டீ செஞ்சு வச்சிருக்கே.? ஹோமில் சேர்க்க அப்படியென்ன அவசியம்.? அவர் ஆம்புலன்சில் இருந்து அழுதுக்கிட்டே சொல்றார்….என்னை உங்க தங்கச்சி கடைசியில் ஹோமில் தள்ளிட்டா மதனி. அப்படியே என் ஈரக் குலை நடுங்கிடுச்சு. சந்தியா நீயா இப்படி.?”

“இல்லக்கா….சத்தியமா நான் சேர்க்கலை. எனக்கு தெரியாமல் அவரே இந்த ஏற்பாட்டை செய்துகிட்டார். அக்கா நீயாவது என்னை நம்பு.”

“எனக்கு ஒண்ணும் புரியலை சந்தியா. நீ கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்…..”

வீட்டுக்குள் வந்த பிரபா…. தங்கைக்கு நீளமாக அட்வைஸ் பண்ண ஆரம்பித்தாள். பண்ணிவிட்டு..

“எப்படியாவது….அவர் கையில் காலில் விழுந்து வீட்டுக்கு கூட்டி வா. எனக்கு உயிர் கொடுத்தவரே அவர் தான். நல்ல மனுஷன். பாவம். இப்படி ஆனதில் மனதால் பாதிக்கப் பட்டிருக்கார். பொறுமையா இரு சந்தியா. வீட்டுக்கு மகளும் மாப்பிள்ளையும் வந்திருக்காங்க. நான் வரேன். டென்ஷன் ஆகாதே. வரட்டா….”

அவள் ஒரே நம்பிக்கையும் தூள் தூள் ஆனது.

அக்கா போய் விட்டாள். சந்தியா திக்கற்று நின்று கொண்டிருந்தாள். அவள் உள்ளம் சரிந்து இருள் அடைந்தது. அவள் அதிகம் நேசித்தது அக்காவையும் கணவனையும் தான். அவர்களே தன்னை நம்பவில்லை என்றால் எங்கு போவாள் சந்தியா.? குற்ற உணர்வுடன் வாழ்வது சாத்தியமா.?  இவ்வளவு தானா அக்காவின்  பாசமும். கணவனின் காதலும்.!

காதல் கணவன் அவள் மேல் பழி போட்டு ஓடுகிறான் ஒரு பக்கம், பாசமிக்க சகோதரி இவளை நம்பாமல் குற்றம் சுமத்தி ஓடுகிறாள் மறுபக்கம்….நான் எங்கு ஓட கடவுளே.?

மனசுக்கு வந்த வெறுமை அவளை சிந்திக்க விடாமல் செய்தது. சுவற்றில் சாயிந்து கைகளை முட்டில் வைத்து கையறு நிலையில் மரம் போல் மரத்து உட்காரந்திருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படி உட்காரந்திருந்தாள் என்று அவளுக்கே நினைவில்லை. நேரம் என்ற ஒன்றே அவள் புத்தியிலிருந்து நழுவி விட்டிருந்தது. கசப்பு நெஞ்செல்லாம் பரவி இருந்தது.

தெரு விளக்கின் வெளிச்சம் ஜன்னல் வழியே புகுந்து அவளை இவ்வுலகுக்கு கொண்டு வந்தது. மெல்ல எழுந்து லைட்டை போட்டாள். எழ முயன்றாள் கால்கள் துணி போல் துவண்டு அவளை  தள்ளாட வைத்தது.

உயிரே என்னிடமிருந்து சீக்கிரம் ஓடிவிடு…..

துயரமே என் நெஞ்சிலிருந்து வடிந்து விடு……

தனிமையே என் கண்களுக்கு ஒரு முடிவை கொடு….

இரவு பதினொரு மணிக்கு மேல் சந்தியா ஒரு முடிவுக்கு வந்தாள். எவருக்கும் பிரயோஜனமில்லாமல் இந்த உயிர் எதுக்கு.? ஷெல்பிலிருந்து மாத்திரை டப்பாவை எடுத்தாள்….

மொத்தமாக அதை மேஜையில் கொட்டினாள்….

பதினைந்து தேறியது. ராஜகோபாலுக்காக வாங்கிய தூக்க மாத்திரைகள். சில சமயம் தூக்கம் வருவதில்லை என்று டாக்டர் மூலம் ப்ரிஸ்கிரைப் பண்ணி வாங்கிய வெள்ளை புள்ளிகள்…. மீதம் இருந்தது….

அவள் மிச்சம் மீதி வாழ்க்கையை முடித்து கொடுக்க வந்த வெள்ளை அறிக்கை….

கஷ்டப்பட்டு எழுந்து அவள் ஒரு கப்பில் நீர் கொண்டு வந்து வைத்துக் கொண்டாள்.

அலமாரியில் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டாள்.

என் கடைசி மூச்சுக்கு காரணம் கடவுள் தான். அவரை கைதி செய்யவும்… என்று ஆரம்பித்திருந்தாள்…..

பெருமை மிகு காதல் வாழ்க்கையை கொடுத்திட்டு, இப்பொழுது போராட வைத்து. என் வலுவையும் பிடிங்கிக்கிட்டு, என்னை கோழையாக்கிட்டே. காக்கும் கடவுளே……..நீ நல்லாயிருப்பியா.?

ஸாரி கடவுளே….எனக்கு உன்னைப் பிடிக்கலை. எத்தனையோ அவதாரம் எடுத்தியாமே, இப்ப சந்தியாவா அவதாரம் எடுத்துப் பார்.. இந்த முடிவுக்குத் தான் நீயும் வருவே….

என் கணவர் என் மேல் வெறுப்பை உமிழ்றார்…… வீண் பழி போடறார். மனம் செத்துப் போச்சு. மனம் செத்த பின் அங்கே உயிர்பிக்க என்ன இருக்கு.? அன்னை போல் பார்த்துக்கிட்ட என்னை விட்டு, அவர் அன்னை தெரசா இல்லத்தில் போய் தானாவே ஃபோன் பண்ணி வரவழைத்து சேர்ந்து கிட்டார். புருஷனை பார்த்துக்க துப்பில்லை….இவள் ஒரு டீச்சர்.! என்று கேலி செய்யறாங்க. என்னோட அக்கா கூட மூஞ்சியை திருப்பிட்டு போயிட்டா. எனக்கு வேற வழி தெரியலை……

வாழணும் என்ற ஆசைப் புஷ்பங்கள் உதிர்ந்து போச்சு.

உன் கிட்டே ஒரே ஒரு வேண்டுகோள். என் கணவருக்கு மன நிம்மதியை கொடு. என்னை விட்டு அவரை பிரிச்சே இல்லே.? இப்ப அவருக்கு நீ தான் நானா சென்று பார்த்துக்க வேணும்….

குடும்பத்தை கண் போல் பார்த்துக்கிட்டவர்….

அவரை கை விட்டிடாதே.

நான் செத்த பிறகு, அவள் ஆத்மா சாந்தியடையட்டும்ன்னு சொல்வாங்க….

அப்படி அடையணும்னு நீ நினைச்சா….என் வேண்டுகோளை நிறைவேத்து. அவரை பார்த்துக்க. நீ தான் நர்ஸ் ரூபத்தில் வந்து அவரை கவனிக்கணும்….

உன்னிடமும் வர பிடிக்கலை. பூமியிலும் இருக்கவும் பிடிக்லை. திரிசங்கு சொரக்கம் தான்….

என் அன்பு சொந்தங்களே…. மன்னிச்சுக்கங்க..

சந்தியா ராஜகோபால்.

எழுதி வைத்துவிட்டு நிமிர்ந்தாள். சரியாக மணி ஒன்று அடித்தது.

முதல் மாத்திரையை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தாள். மிச்ச மாத்திரையையும் போட்டுக் கொள்ள முனைந்தாள்.

இந்த அகால நேரத்தில் அவள் வீட்டு கதவை யாரோ தட்டினார்கள். நிம்மதியா சாக கூட விட மாட்டாங்க போலிருக்கு..

“யாரு.?”

“டீச்சர்….நான் தான் அம்மு டீச்சர். ப்ளீஸ் கதவு திறங்க.”

படக்கென்று கதவு திறந்தாள்.

“அம்மு என்னாச்சு மா.?”

அவள் அருகில் ஒரு பெரியவர் இருந்தார்.

“என்னாச்சுங்க.?”

“அம்முவோட அப்பா செத்திட்டார். அவரை தூக்கிப் போட கூட காசு இல்லம்மா. நான் தூரத்து சொந்தம். அழுதுகிட்டு இருந்துச்சு. உங்களை பத்தி சொல்லிச்சு….இதுக்கு வேறு யாருமில்லை மா ….நீங்க வர முடியுமா.?”

வீட்டை பூட்டிக் கொண்டு சந்தியா அம்மு பின்னால் சென்றாள். அடுத்த தெரு தான். ஓட்டு வீடு. வாடகை வீடு. அந்தத் தெருவாசிகள் நாலைந்து பேர் நின்றனர். விடிந்து பின் அம்முவின் தந்தையின் ஈமக் கடன்களை முடித்துவிட்டு அவள் அம்முவிடம் சொன்னாள்.

“என் கூட வரியா.?”

அவள் தலை ஆட்டினாள். அவளுக்கு வேறு போக்கிடம் ஏது.? எட்டு வயது பெண் எங்கு போவாள்.? அம்முவுக்கு ஏற்கனவே அம்மா இல்லை. சோகத்துடன் அழ கூட திராணி இல்லாமல் நின்ற அம்முவைப் பார்த்தாள் சந்தியா.

உனக்கும் யாருமில்லை எனக்கும் யாருமில்லை….கடவுள் என் சாவை தடுத்தது இதுக்குத் தானோ.? சிறுமியை அழத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் புதிய பொறுப்புடன்……  

வாசல் படியில் விவேக்  உட்கார்ந்து இருந்தார்.

“அண்ணா….எப்ப வந்தீங்க.?’

“வந்து ஒரு மணி நேரம் ஆகுது.. எங்கே போனே.? யாரும்மா இந்த சிறுமி.?”

சுருக்கமாக சொல்லிவிட்டு.. கேத வீட்டிலிருந்து வரேன். குளிக்கணும் அண்ணா. அம்மு நீயும் வா….வந்திடறேன். உக்காருங்க.”

அவர் சோபாவில் உட்கார்ந்தார். இருவரும் உள்ளே சென்று குளித்து விட்டு வந்தனர்.

“இப்ப லண்டனில் தான் இருக்கீங்களா அண்ணா.?”

“ஆமாம்மா…”

“அம்மு தாத்தா கிட்டே உக்கார். நான் ரெண்டு பேருக்கும் காப்பி போட்டு எடுத்து வரேன்.” காப்பியுடன் வந்தாள்.

“நல்லவேளை பிரீட்ஜில் பால் இருந்துச்சு.” இருவருக்கும் காப்பியை நீட்டினாள். அவர் உருஞ்ச ஆரம்பித்தார்.

சிறுமி கோழி குஞ்சு போல் முடங்கி உட்காரந்திருந்தாள். காப்பியை ஆவலுடன் குடிக்க ஆரம்பித்தாள். எத்தனை நாட்கள் அவள் பட்டினியாக இருக்காளோ.? தந்தை மாரிசாமி கூலி தொழிலாளி.

“அம்மு….நீ என் அறையில் போய் ரெஸ்ட் எடு. டீச்சர் சமையல் பண்ணிட்டு கூப்பிடறேன்.”

“சரீங்க டீச்சர்.” சிறுமி போனதும்….

“சொல்லுங்க அண்ணா….எப்படி இருக்கீங்க.? மகன் முரளி சவுக்கியமா.?”

“எங்க சவுகரியத்துக்கு என்ன குறைச்சல்.? ராஜகோபால் எங்கே.?”

அவள் மௌனமாக தலை குணிந்தாள்.

“எனக்கு தெரியும் மா. நீ கடவுளுக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்திட்டேன். என்னம்மா இதெல்லாம்.? அவன் உன்னை எவ்வளவு டார்ச்சர் பண்ணியிருந்தா, நீ இந்த முடிவுக்கு வந்திருப்பே.! சொல்லும்மா….என்னாச்சு அவனுக்கு.? லவ் ப்ர்ட்ஸ் மாதிரி அன்யோன்யமா இருந்த நீங்க இப்படி திசைக்கு ஒருவரா பிரிய காரணம் என்னம்மா.?”

சட்டென்று எட்டிப் பார்த்த கண்ணீரை அடக்கியபடி சந்தியா பேச ஆசைப்பட்டும்….குரல் வராமல் தவித்து நின்றாள்.

“அண்ணான்னு வாய் நிறைய கூப்பிடற….என்  கிட்டே சொல்ல என்ன தயக்கம்.? நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி. சொல்லு மா.”

இந்த சொற்களால் முட்டி நின்ற அவள் மன பாரம் பனி போல் மெல்ல மெல்ல இளகியது. மயிலிறகு போல் வருடிய அவர் அன்பான பார்வை, காயம் பட்ட அவள் எண்ணங்களில் சிறு சிறு பூக்களை பூக்க வைத்தது. கன்னத்தில் வழி வகுத்துக் கொண்டு இறங்கிய கண்ணீர் முன்பு போல் கரித்த கண்ணீர் இல்லை. விடுதலை பெற்ற புதிய சுதந்திர நீர். இவரிடம் சொல்லலாம் என்ற தெம்பு தந்த நீர். சந்தியா முகம் மலர்ந்தாள். ஏதோ ஒரு வழி கிடைக்கிறது. விடியுமா அவர்கள் உறவு.?

1 thought on “வாழ நினைத்தால் வாழலாம்-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *